பணம் + சாதி + வன்முறை + போதை + மூடநம்பிக்கை = தேர்தல்

(வினைத்திட்பம் என்னும் நெடுங்கதையை தேனி விசாகன் எழுதியிருக்கிறார். 2014 ஆம் ஆண்டு மார்ச்சு திங்களில் இக்கதையின் ஈற்றயல் வடிவிற்கு எழுதப்பட்ட மதிப்புரை இது. இதில் கூறப்பட்டுள்ளவற்றுள் கொள்வன கொண்டு, தள்ளுவன தள்ளி கதையின் இறுதிவரைவு  விரைவில் நூலாக வெளிவர இருக்கிறது.)
 
தேனி விசாகன்
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பதினொரு உட்கிடை கிராமங்களைக்கொண்ட ஊராட்சி மாருகால்பட்டி.  சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்த கட்சிக்கான மருகால்பட்டிக் கிளையின் செயலாளரும் அரசு ஒப்பந்தக்காரருமான புரட்சியார் என்பவர் உள்ளாட்சித் தேர்தலில் தன் தந்தை அன்னஞ்சித் தேவரை ஊராட்சி மன்றத் தலைவராக ஆக்க மேற்கொள்ளும் முயற்சியைப் பற்றி தேனி மாவட்ட பிரமலைக் கள்ளரின் பேச்சு வழக்கில் எடுத்துரைக்கும் புனைவே வினைத்திட்பம் என்னும் நெடுங்கதையாக விரிந்திருக்கிறது.  இந்திய ஒன்றிய அரசின் நாற்காலியில் குவித்திருக்கும் அதிகாரத்தை,  இந்திய அரசமைப்பின் பிற உறுப்புகளான மாநில அரசு, மாவட்ட அரசு, ஊராட்சி ஒன்றிய அரசு, ஊராட்சி அரசு ஆகியவற்றிற்கு கீழிருந்து மேல்நோக்கிய வடிவில் முக்கோண வடிவில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது காந்தியின் கனவு; அதனை நிறைவேற்றுவதற்கான வடிவமே கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஊராட்சிமன்றத் தேர்தல் எனக் கூறப்படுகிறது. ஆனால் அத்தேர்தல் எப்படி கட்சி அரசியலுக்கு உட்பட்டதாகவும் அறுவடையை எதிர்பார்த்து பணத்தை விதைக்கும் வயலாகவும் இருக்கிறது என்னும் உண்மை மருகால்பட்டி ஊராட்சி மன்றத் தேர்தலின் ஊடாகப் பேசுகிறது இப்புனைவு. 

இந்திய ஒன்றியத் தேர்தல் ஆணையமும் மாநிலத் தேர்தல் ஆணையமும் வேட்பாளர் ஒருவருக்காகச் செய்யப்படும் தேர்தல் செலவிற்கு உச்ச அளவை நிர்ணயித்து இருந்தாலும் நடைமுறையில் அந்தக் கட்டுப்பாட்டை யாரும் மதிப்பதில்லை.  சிற்றூராட்சித் தலைவர் பதவியைப் பிடிப்பதற்கு முப்பத்து நான்கு இலட்ச ரூபாய் செலவிடப்படும் வழியையும் அப்பணம் திரட்டப்படும் முறையையும் விவரிப்பதன் வழியாக, இவ்வளவு தொகையைச் செலவிடுவதற்கான நோக்கம் என்ன என்னும் விடை தெரிந்த வினாவை யாரும் வெளிப்படையாகக் கேட்கவோ உள்மனதில் ஆராயவோ விரும்புவதில்லை என்பதை இக்கதை குத்திக்காட்டுகிறது.  சாதியும் மதமும் தேர்தலில் வகிக்கும் பங்கினை எல்லோரும் அறிந்திருந்தாலும் அவற்றைப் பற்றிப் பேசுவதில்லை. அதிலும் சாதியக் கட்டமைப்பை உடைத்து அதன் கடைக்காலையே பிடுங்கி எறிய வேண்டும் தொடர்ந்து போராடிய பெரியார் ஈ.வெ.இராவை தம் முன்னோடி எனக் கூறிக்கொள்ளும் அரசியல் கட்சியினர் ஒவ்வொரு தொகுதிக்கும் தம் கட்சிக்கான வேட்பாளரை அந்தந்தத் தொகுதியில் பெரும்பான்மை சாதியிலிருந்தே தேர்ந்தெடுக்கும் சீரழிவு நடக்கிறது. அதன்பின்னர் அந்த வேட்பாளரை வெற்றிபெற வைக்க எந்தெந்தச் சாதியிலிருந்து எவ்வளவு வாக்குகள் வரும்; வரவேண்டும்; வரவைப்பது எப்படி என ஆராய்ந்து அவ்வாக்குகளைப் பெற ஒருவரது தனிப்பட்ட பலவீனத்தை அறிந்துகொண்டு அதனைச் சுட்டிக்காட்டி மிரட்டுதல் தொடங்கி தன் நண்பரை தானே தாக்கிவிட்டு, அப்பலியை மற்றவர்கள் மீது சுமத்து வரை; உள்ளூர் திருவிழாவின்பொழுது தன் அடிப்பொடிகளை மது அருந்தக்கூடாது எனக் கட்டுப்படுத்துவது முதல் பரிவட்டம் பெறுவதை விட்டுக்கொடுப்பது வரை எதைச் செய்தேனும் பதவியை எட்டிப் பிடிக்க எத்தனித்தல் இன்றைய தேர்தல் முறையின் அவலமாக இருக்கிறது. அந்த அவலத்தைத்தான் புரட்சியார், அவர் நண்பர்கள் ரத்னவேல், நண்பர்கள் ராபர்ட்ரவி, மணிமாறன், புரட்சியாரின் தந்தை அன்னஞ்சித்தேவர், அவர் நண்பர்கள் தரகர் முத்துசாமி, குட்டக்காளை ஆகிய மனிதர்களை மருகால்பட்டியில் உலவவிடுவதன் வழியாக விசாகன் இவ்‘வினைத்திட்பத்’தில் புனைந்திருக்கிறார். இந்தக் கதை மருகால்பட்டியில் நடந்தாலும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சிற்றூரும் ஒவ்வொரு மருகால்பட்டியாகவே இருக்கின்றன என்னும் உண்மையை இப்புனைவைப் படிக்கும்பொழுது உணர முடிகிறது.    அந்த உணர்வு, “சாதாரண கிராமத்தில் வசிக்கும் இவர்கள் என்ன மாதிரியான திட்டங்களை எல்லாம் தீட்டுகிறார்கள்? தாங்கள் விரும்புவதை அடைவதற்கு எதையும் செய்யும் மனதைரியம் இவர்களுக்கு எந்த அனுபவத்தின் அடிப்படையில் வருகிறது?  கிடைக்கும் சந்தர்ப்பத்தை எப்படியாவது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்னும் முனைப்பு, வெறி எங்கிருந்து இவர்களுக்கு வருகிறது?  இவர்களுக்கே இப்படியெல்லாம் சிந்திக்கத் தோன்றுகிறது என்றால் மாநில அளவில், மத்தியில் ஆள்பவர்கள் என்ன மாதிரியான திறமையுடன் செயலாற்றுவார்கள்?” என இக்கதையின் மாந்தரில் ஒருவரான ராபர்ட்ரவியின் மனதில் எழும் வினாகளை நம்முடைய மனதிலும் எழுப்புகிறது.   அனைவருடைய குரலுக்கும் இடமும் மதிப்பும் அளிக்க வேண்டிய மக்கள்நாயகமானது பணம்படைத்தவர்களின், ஆள்பலம் மிக்கவர்களின், சூதில் வல்லவர்களின் ஆடுகளமாக மாறிப்போன சூழல் கையறுநிலை காட்சியா இக்கதையில் வரையப்படுகிறது.

2
ராபர்ட்ரவி தங்கியிருக்கும் விடுதியின் அறையை, “வீடில்லாதவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயில் அரசு கட்டித்தரும் இந்திரா நினைவு குடியிருப்பைவிட இரண்டு மடங்கு பெரியதாக இருந்தது” என்றும் ஒவ்வொரு சிற்றூரிலும் சேரி என்னும் ஒதுக்குப் புரத்தில் வாழ நிர்பந்திக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதாரநிலையை, “ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் சிமிண்ட் தளம் இருக்கின்றதோ இல்லையோ தெரியாது.  ஆனால் தொண்ணூற்று ஆறில் கலைஞர் ஆட்சிக்கு வந்தபோது உலக வங்கியிடம் கடன்பெற்று தொடங்கப்பட்ட அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ஒவ்வாரு வீதியையும் சிமிண்ட் தளம் ஆக்கிரமித்தது. மக்கள் இரவு நேரத்தில் வீட்டிற்குள் படுக்காமல் வீதியில் போடப்பட்டு இருக்கும் சிமிண்ட் தளத்தையே படுக்கையாகப் பயன்படுத்திக்கொண்டு இருப்பதற்கான அடையாளமாக ஒவ்வொரு வீட்டின் முன்புறத்தில் நைந்துபோன பாய்கள் மற்றும் சாக்குகள் சுருட்டி வைக்கப்பட்டு இருந்தன” என ஊராட்சியால் போடப்பட்டு இருக்கும் சிமிண்டு சாலையை வர்ணிப்பதன் வழியாக இந்நாட்டில் நிலவும் சமூகப் பொருளாதார முரண்களை எள்ளிநகையாடுகிறார் விசாகன்.

பொருளாதார ஏற்றத்தாழ்வும் சுகாதார சீர்கேடும் சாதிய ஆதிக்கமும் சூழ்ந்திருக்கும் சிற்றூரின் நிலையை மாற்றுவதற்காகத் தாம் பிறப்பெடுத்து இருப்பதாகத் தேர்தலுக்குத் தேர்தல் கூச்சலிடும் அரசியல்வாதிகள், அதன் பின்னர் அவற்றை மறந்துவிடுவதும் அந்த நிலை அப்படியே தொடர்வதில்தான் தம்முடைய நலன்கள் புதைந்திருக்கிறது என்பதனை அவர்கள் உணர்ந்திருப்பதையும் “சுகாதாரக்கேடுகள் குறித்து இரண்டு பெரிய கட்சியினரும் அடிக்கடி பேசுவார்கள், ஆனால் செயலில்காட்ட மறந்துவிடுவார்கள்” என்பது உள்ளிட்ட கூற்றுகளில் விசாகன் பல்வேறு அரசியல்கட்சிகள் பற்றிய தன்னுடைய கருத்துகளைப் பதிகிறார். 

“திராவிட இனவெறி, கிருஸ்துவ மதமாற்றத்திற்கு உதவிசெய்யும் விசயம்” என்றும் “எப்பேற்பட்ட சூழ்நிலை வந்தாலும் இறுதியில் நம்மை காபந்துசெய்ய இடதுசாரிகள் வருவார்கள் என்பதில் ஐயம் வேண்டாம்” என மதமாற்றி ஒருவரின் கூற்றாக விசாகன் முன்வைக்கும் கருத்துகள் விவாதத்திற்கு உரியவை.  மதமாற்றங்களால் இந்துகளின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் கணிசமாகக் குறைகிறது எனவே மதமாற்றத்தை அனுமதிக்கக் கூடாது; அவ்வாறு அனுமதிப்பது போலி மதச்சார்பின்மை என்பது வலதுசாரிகளின் வாதம். அடிப்படை மாற்றத்தாலன்றி மதமாற்றங்களால் சமத்துவம் வந்துவிடாது; ஆனால் மதம் மாறுவதற்கு ஒருவருக்கு உள்ள உரிமையை மறுக்கக் கூடாது என்பது இடதுசாரிகளின் வாதம். இவ்வாதத்தில் உள்ள நேர்மையை மறுத்து அவர்களையும் போலி மதச்சார்பின்மையினராகக் காட்டுவது இந்துத்துவ அறிவாளிகளின் அண்மைக்கால அணுகுமுறை. அந்த அணுகுமுறையை அப்படியே தான் ஏற்றுக்கொண்டதைப் போன்ற தொனியில் “கம்யூனிஸ்ட்கள் நம்மைக் காப்பாற்றுவார்கள்” என மதமாற்றி ஒருவரின் கூற்றை எந்த விமர்சனமும் இல்லாமல், இச்செய்திகளை எல்லாம் நன்கு அறிந்த இடதுசாரியான, விசாகன் பதிவு செய்வது சற்று நெருடலாக இருக்கிறது.  அதேவேளையில் மதமாற்றங்களை ஆதரித்தும் எதிர்த்தும் அரசியல் கட்சிகள் எவ்வாறு தம்முடைய இடத்தை அரசியல் அரங்கில் தக்கவைத்துக்கொள்ள முனைகின்றன என்பதனைத் தெளிவாக அவர் பதிவுசெய்திருக்கிறார். 

3
தலித்துகள் அரசியல் தெளிவற்றவர்கள்; பணம் கொடுத்தவர்களுக்கோ தம் முதலாளியால் கைகாட்டுபவர்களுக்கோதான் அவர்கள் வாக்களிப்பார்கள்.  தமது நலனைக் கோரிப்பெறுவதற்கான வாய்ப்பாகக்கூட தேர்தலில் தம் வாக்கு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டார்கள் என்னும் நம்பிக்கை சமுதாயத்தின் எல்லோருடைய பொதுபுத்தியிலும் விதைக்கப்பட்டு இருக்கிறது.   அந்தப் பொதுபுத்தி உண்மைதானா என்னும் வினாவை இக்கதை எழுப்புகிறது; ஆனால் விடையைக் கூற மறுக்கிறது. 

மருகால்பட்டியில் உள்ள குடியானவர்கள் சமமாகப் பிரிந்ததால்,  தலித்துகள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்களே வெற்றிபெற முடியும் என்றநிலை உருவாகி இருக்கிறது. இது தெளிவாக இருதரப்பினருக்கும் தெரிகிறது. தலித்துகள் வழமையாக ஆளும்கட்சிகுத்தான் வாக்களிப்பார்கள் என இரு கட்சியினரும் அறிவர். எனவேதான் எதிர்க்கட்சியைச் சேர்ந்த புரட்சியார், தலித் மக்களுக்கு நெருக்கமாக இருக்கும் ராபர்ட்ரவியைத் தாக்கிவிட்டு அப்பலியை ஆளும்கட்சியினர் மீது போட்டு, அம்மக்களை அக்கட்சிக்கு எதிராகத் திருப்ப முனைகிறார். இந்நிகழ்வுகள் அனைத்தும் தலித்துகள் அரசியல் தெளிவற்றவர்கள் என்னும் பொதுப்புத்தியை அடிப்படையாகக்கொண்ட செயல்கள். தேர்தல் நாளன்று தலித்துகள் தேர்தல் சாவடிக்கு வந்து அமைதியாக வாக்களிக்கிறார்கள். அவர்கள் எக்கட்சிக்கு வாக்களித்திருந்தாலும் அரசியல் தெளிவற்றவர்கள் ஆவார்கள். மாறாக அவர்கள் தம் வாக்கை செல்லாத வாக்குகளாக பதிந்திருந்தால் இருதரப்பினருக்கும் தம்முடைய எதிர்ப்பைத் தெரிவித்தவர்கள் ஆவார்கள். ஆனால் அவர்கள் எவ்வாறு வாக்களித்தார்கள் என்பதனைப் பற்றிய எந்தத் துப்பும் இக்கதையில் கோடிட்டுக்கூட காட்டப்படவில்லை என்பது குறையாகவே படுகிறது. ஒருவேளை ஒரு புனைவை உண்மை என நம்ப வைப்பதற்காக தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., ம.தி.மு.க என இன்று தமிழகத்தில் இயங்கிக்கொண்டு இருக்கும் கட்சிகளின் பெயர்களை அப்படியே பயன்படுத்தி இருப்பதும் மோதல் தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் எனக் காட்டியிருப்பதும் கதையின் ஓட்டத்தை மருங்காபட்டியில் வென்றவர்கள் தி.மு.க.வா? அ.தி.மு.க.வா? அல்லது இவர்கள் இருவரும் தத்தம் பகடைக்காய் என நினைத்த தலித்துகளா? என்பதனை விசாகன் எழுதிக்காட்ட இயலாமற் போய்விட்டதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

4
கதை நெடுக பழைய, புதிய திரைப்பாடல்கள் சூழலுக்குப் பொருத்தமாகவும் பெரிய விவரணையைத் தவிர்த்து சில வரிகளில் தன்னுடைய கருத்தை கதைமாந்தர்கள் வெளிப்படுத்த ஏதுவாகவும் பயன்படுத்தப்பட்டு இருப்பது சிறப்பாக இருக்கிறது.  அதேவேளையில், இக்கதையின் போக்கிற்கும் நோக்கிற்கும் எவ்வகையிலும் தேவையற்ற வகையில் மந்தையம்மன் கோவில் திருவிழாவில் நடைபெறும் கரகாட்டப் பேச்சுகளையும் மணிமாறனுக்கு உள்ள பட்டப்பெயரும் அதற்கான பெயர்க்காரண விளக்கமும் துரியோதனன் ஏன் தன்னால் கேணயனாகப் பார்க்கப்படுகிறான் என்பதற்கு அன்னஞ்சித்தேவர் கூறும் காரணமும் வட்டார வழக்கில் எழுதப்படும் நடப்பியல் கதைகளில் கொச்சையான சொல்களும் கதைகளும் இருக்க வேண்டும் என்னும் பொருளற்ற வழக்கத்தைப் பின்பற்றி கூறப்பட்டு இருக்கின்றன.  அவற்றைத் தவிர்த்திருக்கலாம். 

5
இந்நாட்டில் நடைபெறும் தேர்தல் திருவிழாவில் மக்கள்நாயகம் என்னும் தலைமைக் கதைமாந்தர் அரசியல்வாணர்களால் எவ்வாறு காவு வாங்கப்படுகிறார் என்பதனை தனது முதற்கதையிலேயே விசாகன் சிறப்பாகச் செதுக்கியிருக்கிறார்.  வரும் நாள்களில் இன்னும் சிறப்பான அரசியல் கதைகளை அவர் வழங்க வாழ்த்துகள்!

இராமலிங்க விலாசம்

இராமலிங்க விலாசம்
கலைநயம்மிக்க நுழைவாயில்.  உள்ளே நுழைந்தால் திறந்த வெளி முற்றம். அதில் கிழக்கு நோக்கி அமைந்த, உயர்ந்த மேடை. அதன்மீது இரண்டு முகப்புத் தூண்களை உடைய பெரிய கட்டிடம். இதுதான் இராமநாதபுரத்தில் இருக்கும் இராமலிங்க விலாசம்; சேது நாட்டின் மன்னர்களான சேதுபதிகள் கொலுவீற்றிருந்து அரசு செலுத்திய அத்தானி மண்டபம்.  இதன் தரையில் கண்விழித்துப் படுக்கும் ஒருவர் தாம் ஓவியம் நிறைந்த வண்ணப்பெட்டி ஒன்றிற்குள் படுத்திருக்கிறோமே என எண்ணத் தோன்றும் அளவிற்கு சுவர்களிலும் கூரைகளிலும் 18 ஆம் நூற்றாண்டு ஓவியங்களைக் கொண்ட கலைப்பெட்டகம். 

வரலாறு:
சேதுநாட்டை 1678 ஆம் ஆண்டு முதல் 1710 ஆம் ஆண்டு வரை ஆண்ட ஏழாவது சேதுபதியான கிழவன் சேதுபதி என்னும் இரகுநாத சேதுபதி, தன்னுடைய தலைநகரை புகழூரிலிருந்து இராமநாதபுரத்திற்கு மாற்றினார். சிதைந்துகொண்டிருந்த பாண்டியர் கட்டிய மண்கோட்டையை அகற்றிவிட்டு செவ்வக வடிவிலான கற்கோட்டையைக் கட்டினார்.  அதனுள் அரண்மணை, விருந்தினர் மாளிகை, அரசவை உள்ளிட்ட பல கட்டிடங்களைக் கட்டினார். அவற்றுள் ஒன்றுதான் இராமேசுவரம் சிவனின் பெயரால் அமைந்த இந்த இராமலிங்க விலாசம் ஆகும்.  இதில் கிழவன் சேதுபதிக்கு பின்னர் ஒன்பது சேதுபதிகள் தன்னுரிமைபெற்ற அரசர்களாக 1772ஆம் ஆண்டு வரை கொலுவீற்றிருந்தனர். அதன்பின்னர், இம்மாளிகை ஆங்கிலேயரின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்தது.  1803ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டு வரை ஒன்பது சேதுபதிகள் ஆங்கிலேயருக்கு அடங்கிய பெருநிலக்கிழார்களாக  (ஜமீந்தார்கள்) இம்மாளிகையிலிருந்து ஆட்சி செலுத்தினர்.  1947ஆம் ஆண்டு முதல் 1978ஆம் ஆண்டு வரை சேதுபதிகள் குடும்பத்தினரின் சொத்தாக இருந்த இம்மாளிகை, 1978ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை தமிழ்நாட்டரசின் தொல்லியற்றுறையின் பாதுகாப்பில் இருக்கிறது.  அத்துறையின் சார்பில் அருங்காட்சியகம் ஒன்றும் இதனுள் இடம் பெற்றிருக்கிறது.

நுழைவாயில்
அமைப்பு:
இம்மாளிகை கிழக்கு மேற்காக 153 அடி நீளமும் வடக்கு தெற்காக 65 அடி அகலமும் கொண்ட 14 அடி உயரமுள்ள செவ்வக மேடையின் மீது கருங்கல், செங்கல், சுண்ணாம்பு ஆகியவற்றைக் கொண்டு கட்டபட்டு இருக்கிறது. இது மகாமண்டபம், அர்த்த மண்டபம் என்னும் முன்மண்டபம், கருவறை என்னும் அகமண்டபம், அதன் மீது ஓர் அறை, அவ்வறைக்கு முன்னே திறந்தவெளி முற்றம், அறைக்கு மேலே ஓய்வெடுக்கும் இருக்கை என ஒரு கோவிலின் அமைப்பில்  உருவாக்கப்பட்டு இருக்கிறது. 
 
கல்யாழி
தரையில் இருந்து மண்டபத்திற்குள் செல்ல 16 நீண்ட படிகள். காலவோட்டத்தில் சாலையும் முற்றமும் மேடாகிவிட்டதால் 7 படிகள் மண்ணில் மூழ்கிவிட, தற்பொழுது 9 படிகளே கண்ணிற்படுகின்றன. அவற்றின் இரண்டு புறமும் அழகிய கல்யாளிகள் இருக்கின்றன.  அவை மண்டபத்தைத் தொடும் இடத்தில் இரண்டு உயரமான வட்டத் தூண்கள் நிற்கின்றன.  இவற்றிற்கு நடுவில் மண்டபவாயில். தூண்களின் வடக்கிலும் தெற்கிலும் ஒரு பாக இடைவெளியில் மண்டபத்தின் கிழக்குப்புறச் சுவர்கள்.  வாயிலைக் கடந்ததும் மகாமண்டபம் அமைந்திருக்கிறது.  

மகாமண்டபம்
அதில் வரிசை ஒன்றிற்கு எட்டுத்தூண்கள் வீதம் நான்கு வரிசையில் நாற்பத்தெட்டு வட்டத் தூண்கள். அவற்றின் மேற்புறத்தை அரைவட்ட வளைவுகள் இணைக்கின்றன.  மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையை நினைவூட்டும் இம்மண்டபத்தின் தெற்கு, வடக்கு சுவர்களில் பக்கவாட்டு வாயில்கள் இருக்கின்றன. தென்மேற்கு மூலையில் சேதுபதிகளின் திருமுழுக்கு மேடை அமைந்திருக்கிறது.  இம்மண்டபத்தில்தான் நாடகவியல் என்னும் நூலை இயற்றிய பரிதிமாற்கலைஞர் தனது கலாவதி, மானவிசயம் உள்ளிட்ட நாடகங்களை அரங்கேற்றினார்.  பெரும்புலவர்களான மு. இராகவர், இரா. இராகவர் போன்றோர் தம் தமிழ்த் தொண்டை ஆற்றினர்.  

சேதுபதியர் சிலைகள்
மகாமண்டபத்தின் மேற்கே ஐந்து படிகள் ஏறினால் முன் மண்டபம் அமைந்திருக்கிறது. அதன் கூரையை இருபது கருங்கற் தூண்கள் தங்கி நிற்கின்றன. இம்மண்டபத்தின் தெற்குச் சுவரில் ஒரு காலதர் இருக்கிறது.  அதன் மேலே தெற்கு, மேற்கு சுவர்களின் உச்சியில் சேதுபதிகள் ஒன்பதின்மரின் சிலைகள் இருக்கின்றன.  இவை உடையான் சேதுபதி என்னும் சடைக்கன் சேதுபதி (1601-1623) தொடங்கி முத்துவிசய ரகுநாத சேதுபதி (1713-1725) வரையிலான ஒன்பதின்மரின் சிலைகளாக இருக்கலாம் எனக் கருத்தப்படுகிறது.
 
அகமண்டபம்
முன் மண்டபத்திற்கு மேற்கே 12 கற்தூண்களாலான அக மண்டபம் அமைந்திருக்கிறது. இதனை தற்பொழுது இராமர் பீடம் என அழைக்கின்றனர்.  அவ்வறையின் வடகிழக்கில் உள்ள படிகளின் வழியே மேலே ஏறினால் 12 கற்தூண்களை உடைய மாடி அறை இருக்கிறது.  இவ்வறையில்தான் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அன்றைய கிழக்கிந்திய கும்பணியின் நெல்லை மாவட்டத் தண்டல்காரரான சாக்சன் என்பவரை 1798 செப்டம்பர் 10 ஆம் நாள் பேட்டி கண்டார்.  “வானம் பொழியுது; பூமி விளையுது; உனக்கு ஏன் கட்ட வேண்டும் கப்பம்” என கட்டபொம்மன் கூத்தில் முழக்கப்படும் உரிமைக்குரல் இவ்வறையில்தான் எழுப்பப்பட்டு இருக்கிறது!

மாடியறைக்கு முன்னர் திறந்த வெளி முற்றம்.  அறைக்கு மேலே உள்ள மாடியில் இருக்கை ஒன்று இருக்கிறது. இதில் சேதுபதியும் அவர் சுற்றத்தினரும் மாலை வேளைகளில் அமர்ந்து ஓய்வெடுப்பராம்.

ஓவியங்கள்:
இராமலிங்க விலாசத்தின் உட்புறச் சுவர்களிலும் கூரைகளிலும் உள்ள ஓவியங்களை, சேது நாட்டை 1713ஆம் ஆண்டு முதல் 1725 ஆம் ஆண்டு வரை ஆண்ட முத்துவிஜய ரகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலத்தில் வரைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.  ஓவியங்களில் சேதுபதியாக இவருடைய உருவமே பதியப்பட்டு இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  இங்குள்ள ஓவியங்களை சேதுபதியின் அக வாழ்வு ஓவியங்கள், புற வாழ்வு ஓவியங்கள், இறையுணர்வு ஓவியங்கள் எனப் பகுப்பர்.

சேதுபதிக்கும் தஞ்சை மராட்டியருக்கும் நடைபெற்ற போர்
மகாமண்டபத்தின் கிழக்குச் சுவரில் சேதுபதிக்கும் தஞ்சை மராட்டிய மன்னருக்கும் இடையே நடந்த போர்க்காட்சிகள் ஓவியமாக்கப்பட்டு இருக்கின்றன.  தென்சுவரில் சேதுபதி தன் மனைவியரேடு கொலுவீற்றிருத்தல், அவரின் நகருலா, அவர் வெளிநாட்டினரைச் சந்தித்த நிகழ்வு ஆகியன காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. வடக்குச் சுவரில் திருமாலின் பத்துப் பிறப்புகளும் தனித்தனி ஓவியங்களாக வரையப்பட்டு உள்ளன. 

முன் மண்டபத்தின் சுவர்களில் கிருட்டிணனின் பிறப்பு, ஆயர்பாடியில் அவர் நிகழ்த்திய வீரச் செயல்கள், அவருக்கு மகுடம் சூட்டல் ஆகிய காட்சிகள் வரையப்பட்டு உள்ளன.  மேலும் தமிழ்நாட்டிலுள்ள சைவ, வைணவ இடங்களின் தோற்றங்களும் ஓவியமாக இடம்பெற்றுள்ளன.
 
சிதைந்த நிலையில் இராமயாணக் காட்சிகள்
அக மண்டபத்தில் இராமயாணத்தை வால்மீகி எழுதக் காரணமான கிரெளஞ்சவதம் தொடங்கி, இராமன் சீதையை மணமுடித்தல் வரையுள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன.  அவ்வோவியங்களின் அடியில் தமிழிலும் சில இடங்களில் தெலுங்கிலும் காட்சிவிளக்கம் எழுதப்பட்டு இருக்கிறது.  மேற்கூரையின் வில்வளைவுகளில் சேதுபதியும் அவர் மனைவியும் மன்மதனும் ரதியுமாகக் காட்சியளித்தல் என்பன உள்ளிட்ட அந்தப்புரக் காட்சிகள், தன் குலதெய்வமான இராசராசேசுவரியிடம் இருந்து சேதுபதி செங்கோல் பெறுதல், திருமாலின் அருளைப் பெறுதல், முதியவர் ஒருவர் இராமாயணம் படிக்க சேதுபதி அதனைக் கேட்டல், முத்து விசய ரெகுநாத சேதுபதிக்கு மதுரை மன்னர் முத்துவிசயரங்க சொக்கநாத நாயக்கர் பட்டாடை அணிவித்தல், ஐரோப்பியர் ஒருவரிடம் சேதுபதி பரிசு பெறுதல், சேதுபதியின் நகருலா, பல்வேறு செல்வங்கள், அயிராவதம், சிந்தாமணி, பத்ரபீடம், கற்பகமரம், காமதேனு,  எண்திசைக் காவலர்களின் உருவங்கள் ஆகியன பதியப்பட்டு உள்ளன. 

யானை, குதிரை ஆகிய போல பெண்கள் சிலர் ஒன்றிணைந்து நிற்க, அவர்கள் மீது சேதுபதியும் அவர் மனைவியும் மன்மதனும் ரதியும் போல மலர்கணைகளோடு நிற்கும் காட்சி
மாடி அறைச் சுவர்களில் சேதுபதி மன்னர் இசையைக் கேட்டும் நடனத்தைக் கண்டும் இன்புறுதல், மனைவியரோடு கூடி மகிழ்தல், நீராடுதல், நடனம் ஆடுதல் ஆகிய காட்சிகள் வரையப்பட்டு உள்ளன.   மேலும் கிளி, அன்னம், யானை, குதிரை ஆகிய போல பெண்கள் சிலர் ஒன்றிணைந்து நிற்க, அவர்கள் மீது சேதுபதியும் அவர் மனைவியும் மன்மதனும் ரதியும் போல மலர்கணைகளோடு நிற்கும் காட்சிகளும் பல்வேறு வடிவங்கள் கொண்ட மதுக்குடுவைகளின் நடுவே சேதுபதியும் அவர் மனைவியும் அமர்ந்திருக்கும் காட்சியும் வேட்டைக் காட்சியும் இடம் பெற்றுள்ளன.

மொகலாய ஓவியங்களிலும் நாயக்க ஓவியங்களிலும்  காணப்படுவது போன்ற ஆடை, அணிகலன்களும் ஒப்பனைகளும் இவ்வோவியங்களில் முதன்மை பெற்றுள்ளன. எனவே, இவ்வோவியங்கள் தமிழர்கள் மீது நடந்தப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளின் தாக்கத்தை பேசாமல் பேசுகின்ற சாட்சிகளாக இருக்கின்றன.


கூரையில் பூசிய சுண்ணாம்பு வண்ணங்கள் ஓவியங்களிற் பட்டு அவற்றைச் சிதைத்திருக்கின்றன

இச்சாட்சிகளை சிறுகீறல் கூட விழாமல் பாதுகாக்க வேண்டிய தொல்லியற்றுறையோ, பராமரிப்பு என்கிற பெயரால் இவ்வோவியங்கள் சிலவற்றில் துளையிட்டு விட்டங்களைச் செருகியிருக்கிறது; கூரையில் பூசிய சுண்ணாம்பு வண்ணங்கள் ஓவியங்களிற் பட்டு அவற்றைச் சிதைத்திருக்கின்றன.  இவை முழுமையாக சிதைவதற்கு முன்னர் அவற்றைப் படியெடுத்து நூலாகவும் காணொளியாகவும் ஆவணப்படுத்த வேண்டும்.  பின்னர் அவற்றை மீட்டுருவாக்கம் செய்தல் வேண்டும்.   கலையையும் தமிழையும் வளர்த்த இம்மண்டபத்தில், போதிய ஊழியர்கள் இல்லாததால், தூசும் குப்பையும் மண்டிக் கிடக்கின்றன. வரலாற்றையும் கலையையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடு இங்கு வருவோருக்கு அவற்றை விளக்கமாக அன்று, சுருக்கமாக எடுத்துரைப்பதற்குக்கூட ஆள்கள் இல்லை.  ‘வரலாறு, கடந்த காலத்தின் பதிவு மற்றுமன்று; வருங்காலத்திற்கான வழிகாட்டியும் கூட’ என்பதனை உணர்ந்து உரிய நடவடிக்கைகளை தொல்லியற்றுறை மேற்கொள்ள வேண்டும். இவையே கலை, பண்பாட்டு, வரலாற்று ஆய்வாளர்களின் ஆர்வலர்களின் விருப்பமாகவும் வேண்டுகோளாகவும் இருக்கின்றன.

எப்பக்கம் வந்து புகுந்திடும் இந்தி?


2002ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் நாள் முதல் அக்டோபர் 2ஆம் நாள் வரை பீகார் மாநிலத்தின் தென்பகுதியில் ஒரு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டதுஒற்றுமைப் பேரவை என தமிழில் பொருள்படும் ஏக்தா பரிசத்து என்னும் காந்திய அமைப்பு நிலவுரிமைக்கான பரப்புரை இயக்கமாக அப்பயணத்தை நடத்தியது.  இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெவ்வேறு மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அப்பரப்புரைப் பயணத்தில் கலந்துகொண்டோம்.  பயணப் பாதையில் இருந்த ஒவ்வொரு ஊரிலும் கூட்டங்கள் நடைபெற்றன.  அவற்றில் வெவ்வேறு மாநிலத்தைச் சார்ந்தவர்கள் அந்தந்த மாநிலத்தின் சார்பில் நிலவுரிமையை வலியுறுத்தி உரையாற்றினோம்இந்தியில் ஒரு சொல் கூட தெரியாத நான், அக்கூட்டங்களில் ஆங்கிலத்தில் உரையாற்றினேன். பீகார் மாநிலத்தின் வடக்குப் பகுதியைச் சார்ந்த ஒருவர் என்னுடைய உரைகளை இந்தியில் மொழிபெயர்ப்பார்ஒவ்வொரு கூட்டம் முடிந்ததும், “ஹரே பய்யா! ஹிந்தி சிக்ஷா பய்யா ஹிந்தி சிக்ஷா. ஹிந்தி ஹமரா மாத்ரு பாஷாஎன என்னிடம் கூறத் தொடங்கிவிடுவார். “இந்தி உனக்கும் எனக்கும் தாய்மொழி இல்லைஎன நான் கூற, இருவருக்கும் சண்டை அடுத்த ஊர்வரை தொடரும்இதேபோல ஓர் ஊரில் நான் பேசி, அவர் மொழிபெயர்த்து முடிந்ததும் மேடையில் இருந்து இறங்கி ஒரு தேனீர் கடைக்குச் சென்று தேனீர் குடித்துக்கொண்டிருந்தோம். கூட்டத்தில் இருந்து ஒருவர் எங்களை நோக்கி வந்தார். தான் அந்தக் கிராமத்துக்காரர் என அறிமுகம் செய்துகொண்டு, என்னை பற்றி கேட்டார். நண்பரின் உதவியோடு அவருக்கு விடையளித்தான். அப்புறம் அவர் மூச்சுவிடாமல் மூன்று நிமிடங்கள் ஏதோ பேசினார். இடையிடையே அவர் பயன்படுத்திய, “மேரா”, “ஜமீன்”, “ஹைபோன்ற சொல்களைக்கொண்டு அவர் இந்தியில் ஏதோ ஒரு முக்கியமான செய்தியைக் கூறுகிறார் எனத் தெரிந்ததுநண்பரைப் பார்த்தேன். அவர் கண்களைச் சுருக்கி, அக்கிராமக்காரரின் வாயையே கூர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தார்.  அக்கிராமத்துக்காரர் மூன்று நிமிடங்கள் கழித்து, தனது பேச்சை சிறிது நிறுத்தி இடுப்புப்பட்டையில் இருந்து கைப்பை ஒன்றை எடுக்க முனைந்தார்அந்த இடைவேளையில் என் நண்பரிடம், “இவர் என்ன கூறுகிறார்?” என வினவினேன். அவரோ, “எனக்கு அவரின் மொழியே புரியவில்லைஎன்றார். “அவர் இந்தியில்தானே பேசினார். ஏன் உங்களுக்கு புரியவில்லை?” என்றதும், “அவர் இவ்வட்டாரத்தின் மொழியான மகதியில் பேசுகிறார் என நினைக்கிறேன். அது இந்தி இல்லைஎன்றார்.  “ஒரே மாநிலத்திற்குள் அதே மாநிலத்தைச் சேர்ந்த இருவருக்கு ஒரே மொழி தாய்மொழியாக இல்லாத பொழுது, தென்னாட்டில் பிறந்த எனக்கு இந்தி எப்படி தாய்மொழியாகும்? அதனை நான் ஏன் படிக்க வேண்டும்?” என வினவினேன். அப்புறம்தான் அவர் வேறொரு உண்மையைச் சொன்னார். இந்தி அவருக்கும் தாய்மொழி இல்லையாம்; பள்ளிச் சான்றிதழில் இந்தி தாய்மொழி என எழுதப்பட்டுவிட்டதாம். அதனால்தான் அவர் இந்தியை தனது தாய்மொழி எனக் கூறிக்கொண்டு இருக்கிறாராம். அதற்கு அடுத்த சிலநாள்கள் இருவருக்கும் நடந்த விவாதத்தின் முடிவில் போசுபூரிதான் தன் தாய்மொழி; இந்தி அன்று எனக் கூறத் தொடங்கிவிட்டார் அந்த நண்பர்.

இந்த நிகழ்வு சில உண்மைகளை நமக்கு தெளிவுபடுத்துகிறது. அவை:
  •      இந்தியாவின் பொதுமொழி இந்தி அன்று
  •   இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளத பல வடநாட்டவர்கள், இந்தியே தம்   தாய்மொழி   என நம்பவைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
  •    ஒரே மாநிலத்தில் வெவ்வேறு பரவுகளில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. எனவே இந்தி பேசும் மாநிலங்களை மொழி அடிப்படையில் இன்னும் பல மாநிலங்களாகப் பிரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
  •  இந்தியை பேசும் மாநிலங்களில் வாழ்கிறவர்கள் கூட அம்மாநிலங்களிலேயே மொழிச்சிக்கலுக்கு ஆளாகிறார்கள்.
அப்படியானால் இந்தியாவின் பொதுமொழி இந்தி என்னும் நம்பிக்கை எப்படி ஏற்பட்டது?

இந்திய விடுதலைப் போரில் மோ..காந்தி தலைமையேற்ற பின்னர், இந்திய தேசிய காங்கிரசை கனவான்களின் கையிலிருந்து பிடுங்கி பொதுமக்களின் கையில் கொடுத்தார். இந்தியர்கள் பின்பற்றி வந்த ஆங்கிலேய அடையாளங்களை எல்லாம் களைய முனைந்தார். இந்தியா விடுதலை பெற்ற பின்னர் அது தனக்கான அடையாளங்களோடு இருக்க வேண்டும் எனவும் அது ஆங்கிலேயர்களின் அடையாளங்களைச் சுமந்துகொண்டு இருப்பது அடிமைத்தனம் எனவும் கருதினார். எனவே, ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியாவிற்கென்று இந்திய மொழியொன்றை பொதுமொழியாக்க விழைந்தார்; அதேவேளையில் அம்மொழி இந்துமுசுலீம் ஒன்றுமையை வலியுறுத்துவதாக இருக்க வேண்டும் எனக் கருதினார். எனவே இந்தியும் உருதும் கலந்து இந்துசுதானி மொழியை 1925ஆம் ஆண்டில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் அக்கட்சியின் அலுவல்மொழி ஆக்கினார். ஆனால் காங்கிரசுக் கட்சியில் இருந்த இராசேந்திர பிரசாத்து போன்ற சமசுகிருத ஆதரவாளர்கள் தேவநாகரி வரிவடிவத்தைக் கொண்ட சமசுகிருத ஆதிக்கம் நிறைந்த இந்தியை பொதுமொழியாக்க முனைந்தனர்; அதுவே இந்திய நாட்டின்  தேசியமொழி என பேசியும் எழுதியும் வந்தனர்.
 
இந்திய விடுதலைக்குப் பின்னர் அம்மொழி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழி என ஆக்க முனைந்தனர். அது பற்றிய விவாதம் 1949 ஆகத்து 22, 23, 24 ஆகிய நாள்களில் இந்திய அரசமைப்பு அவையில் நடைபெற்றது. நெடிய விவாதத்திற்கு பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில்இந்தியை ஆட்சிமொழி ஆக்க வேண்டும்என 74 உறுப்பினர்களும்இந்தி கூடாது; ஆங்கிலமே ஆட்சிமொழியாகத் தொடர வேண்டும்’  என 74 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இரு பிரிவினரும் சமமான வாக்குகள் பெற்றதால் மீண்டும் அப்பொருள் பற்றி 1949 செப்டம்பர் 12, 13, 14 ஆம் நாள்களில் விவாதம் நடைந்தது. இம்முறை 300 உறுப்பினர்கள் அவையில் கூடி விவாதித்தனர்.  14ஆம் நாள் மாலை வாக்கெடுப்பிற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டு இருந்த பொழுது, இந்தியை ஆதரிப்பவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி, அவை அரை மணி நேரம் தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய பொழுது, இருபிரிவினருக்கும் ஏற்பட்ட சமரத்தின் அடிப்படையில் இந்திஇந்தியாவின் ஆட்சிமொழி என்றும்ஆங்கிலம்அடுத்த 15 ஆண்டுகளுக்கு இணை ஆட்சிமொழியாகத் தொடரும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இவ்வாறு இந்தியக் குடிகளில் பெரும்பான்மையினரின் மொழியாக இல்லாத ஒரு மொழி, பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு மாறாக ஆட்சி மொழி ஆக்கப்பட்டது; தேசிய மொழி ஆக்கப்படவில்லை. ஆனால் இந்தி வெறியர்களால் அம்மொழி இந்தியாவின் தேசிய மொழி என திரும்பத் திரும்ப கூறப்படுகிறது. இப்பரப்புரையை தமிழர்கள் உள்ளிட்ட பலரும் நம்பத் தொடங்கிவிட்டனர்அதன் விளைவாகவே, குசராத்து மாநிலத்தைச் சேர்ந்த சுரேசுபாய் என்பவர், இந்தியாவில் விற்கப்படும் பொருள்களின் உறையின் மீதுள்ள தகவல்களை இந்தியாவின் தேசிய மொழியான இந்தியிலேயே அச்சிட வேண்டும் என்னும் பொதுநல வழக்கொன்றை குசராத்து உயர்நீதிமன்றத்தில் 2009 ஆம் ஆண்டில் தொடுத்தார். அவ்வழக்கை விசாரித்த குசராத்து உயர்நிதீமன்ற தலைமை நீதிபதி எசு. சே. முகோபாத்தியாயவும் நீதியரசர் ஆனந்த் தேவும் இணைந்து 2010 சனவரி 13ஆம் நாள் வழங்கிய தீர்ப்பில், “இந்தியாவின் தேசிய மொழி இந்தி என இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் நம்பவைக்கப்பட்டு இருக்கின்றனர். ஆனால் இந்திதான் இந்தியாவின் தேசியமொழி என அறிவித்து எந்த ஆணையும் வெளியிடப்படவில்லை; எந்த ஆவணமும் உருவாக்கப்படவில்லைஎனக் குறிப்பிட்டு அவ்வழக்கைத் தள்ளுபடி செய்தனர்இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள எட்டாவது அட்டவணை  22 மொழிகளை வெறுமையாக பட்டியலிட்டு இருக்கிறதே தவிர, தேசிய மொழிகள் எனக் கூறவில்லை

ஆனாலும் சில வெறியர்கள் இந்தியா முழுவதற்கும் ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே மதம் என இலக்கமைத்துக்கொண்டு பல்லாண்டுகளாக இயங்கி வருகின்றனர். அவர்கள் காந்தியின் முகமூடியையும் கோட்சேயின் முகமூடியையும் நேரத்திற்கு ஏற்ப மாற்றி மாற்றி அணிந்துகொண்டு இயங்குகின்றனர்அம்முயற்சியின் உச்சமாக, 1965 ஆம் ஆண்டு சனவரி 25ஆம் நாளோடு ஆங்கிலத்தின் இணை ஆட்சிமொழி என்னும் தகுதியை இழக்கச் செய்ய அவர்கள் முயன்றனர். அதனை உணர்ந்த "தமிழரிமா" என அழைப்படும் பேராசிரியர் சி. இலக்குவனார் இந்தி வல்லாதிக்கத்திற்கு எதிராக முதற்குரலை மதுரையில் ஒலித்தார்அவர் மாணவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஆட்சிமொழிப் பிரிவுகளை தீயிட்டுக் கொளுத்தினர். இந்தித் திணிப்பிற்கு எதிரான போர் எங்கெங்கும் எதிரொலித்ததுஅன்றைய பிரதமர் லால்பகதூர் சாசுதிரி, இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சிமொழியாகத் தொடரும் என அவருக்கு முந்தைய பிரதமரான சவகர்லால் நேரு கொடுத்த உறுதிமொழியைப் புதுப்பித்துக் கொடுத்தார். அதன் பின்னர் ஆட்சியாளர்கள் மாறும் ஒவ்வொரு முறையும் அவர்கள் இந்தியைத் திணிக்கு முயல்வதும் தமிழகத்தில் அதற்கு எதிர்ப்புக் கிளம்பியதும் இந்த உறுதிமொழியைப் புதுப்பித்துக் கொடுப்பதும் நேரு, சாசுதிரி, இந்திரா, இராசீவ் என தொடர்ந்து நிகழ்ந்து வந்திருக்கிறதுஇப்பொழுது மோடி தலைமையிலான அரசு தமக்கு முந்தையவர்களின் மரபைப் புதுப்பித்து, ‘மத்திய அரசின் அனைத்து அமைச்சங்கள், துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றின் சார்பில் அலுவல் சார்ந்த சமூக ஊடகங்களை கையாளும் அதிகாரிகள் இந்தி அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தை பயன்படுத்தலாம். எனினும் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்என மே 27ஆம் நாள் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறதுஇதனை எதிர்த்து கண்டனங்கள் எழுந்ததும் சற்று பின்வாங்கி இருக்கிறதுஇது மீண்டும் பாய்வதற்கான பின்வாங்கல்தானே ஒழிய, மனமாற்றம் அன்றுஎனவே, நீறுபூத்திருக்கும் இந்தித்திணிப்புத் தீயை எப்பொழுதும் கனன்றுகொண்டு  இருக்குமாறு பார்த்துக்கொள்வது தமிழர்தம் கடமை ஆகும்.   

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...