ஒபாமாவின் பயணத்தால் கியூபாவில் மாற்றம் ஏற்படுமா?

குடியரசுத்தலைவர் பாரக் ஒபாமா, ஏறத்தாழ கடந்த 90 ஆண்டுகளில், பதவியிலிருக்கும்பொழுதே கியூபாவிற்கு வருகை தந்த முதல் அமெரிக்க ஐக்கிய நாட்டு குடியரசுத் தலைவர்ஆவார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (20 மார்ச் 2016) மூன்றுநாள் பயணமாக கியூபா தீவிற்கு அவர் கிளம்பியிருந்தாலும், 2014 திசம்பரிலேயே உறவாடலுக்கான முன்முயற்சிகள் தொடங்கிவிட்டன.

கியூபாவுடன் வங்கி, நிதி, பயணம், வணிகம், பொருளாதாரம் ஆகிய தொடர்புகளை மேற்கொள்ளத் தன்னால் விதிக்கப்பட்டிருந்த தடைகளைத் தளர்த்தும் ஒழுங்காற்று விதிகளை, ஒபாமாவின் கியூபா பயணத்திற்கு முன்னதாக, அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டது.

கியூபாவுடன் இதமான உறவுகளைத் தொடர வேண்டும் என்னும் ஒபாமாவின் முடிவு குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றிருந்தபோதிலும், உண்மையில் அமெரிக்க அரசு கியூபாவுடன் கணிசமான அளவிற்கு வணிக நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்டிருக்கிறது. இதனை மிகப் பெரும்பான்மையான அமெரிக்கர்கள் உணர்ந்திருப்பதாகவே தெரிகிறது. எடுத்துக்காட்டாக, 2000ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட, ’வணிகத் தடைகள் சீரமைப்பு மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புச் சட்டம்’, கியூபாவிற்கு உணவுப் பொருள்களையும் மருந்துகளையும் விற்க அமெரிக்க வணிக நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது. 2000 ஆம் ஆண்டு தொடங்கி 2015 ஆம் ஆண்டு வரை, 5.3.பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருள்கள் அமெரிக்காவிலிருந்து கியூபாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என அமெரிக்க அரசின் புள்ளிவிவரக் கணக்கெடுப்புச் செயலகம் தெரிவிக்கிறது.

அந்த அடித்தளத்தின் மீது அண்மைக்கால முயற்சிகள், குறிப்பாகப் போக்குவரத்தில், கட்டடங்களை எழுப்புகின்றன. கடந்த ஆண்டில், ’மக்களுடன் மக்கள்’ என்னும் பெயரில் வழக்கமான சுற்றுலாவைவிட மேம்பட்ட கல்வியுலாவில் கலந்துகொண்டு கியூபாவிற்குச் சென்ற அமெரிக்கர்களின் எண்ணிக்கை இவ்வாண்டின் தொடக்கத்தில் இரண்டு மடங்காக உயர்ந்து, அரை நூற்றாண்டிற்குப் பின்னர் கியூபாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் விமானங்களைப் பட்டியலிட்டு விரைவில் இயக்க விமான நிறுவனங்கள் ஆயத்தமாகும் அளவிற்குத் தொடந்து கொண்டிருக்கிறது.

எனவே, குடியரசுத் தலைவரின் பயண வெளிச்சத்தில், புற்றீசலாய் வரும் அமெரிக்க விருந்தினர்களுக்கு அப்பால், கியூபாவிற்கு எதிர்காலம் எதனைக் கொண்டு வரும் என்றும் வினவுவது இயற்கையே. – இந்தத் திடீர் வருகைகளை ஏற்க கியூபா ஆயத்தமாய் இருக்கிறதா? அந்நிய முதலீடுகளை அமெரிக்க நாட்டின் ஒழுங்காற்று மாற்றம் அனுமதித்தாலும் அமெரிக்க வணிகங்கள் எந்த அளவிற்கு மிகக் கடுமையான தூண்டுதல் தேவைப்படும் பொருளாதாரத்தில் முதலீடு ஆர்வம் காட்ட உள்ளன?

மேலும், தற்போதைய அமெரிக்கக் குடியரசுத்தலைவர் ஒபாமாவின் இடத்திற்கு, அடுத்து வருபவர் ஒபாமாவின் பாதையிலிருந்து விலகிச் செல்ல வாய்ப்பு இருக்கிறதா?

இலத்தீன் – அமெரிக்க வணிகங்களையும் நிதியையும் கியூப வேளாண்மையையும் பகுப்பாய்பவர்கள் என்னும் வகையில் விரைந்து உருவாகும் இச்சிக்கல்களை மிக உன்னிப்பாக நாங்கள் கவனிக்கிறோம். இது வரையுள்ள நிலைமையைப் பற்றிய எங்களது கருத்துகள் பின்வருமாறு:

ஒபாமாவும் அவர் குடும்பத்தினரும் முதல்நாள் பழைய அவானாவில் உலா வந்தனர்

நடைபெறும் சீர்திருத்தங்கள்

கியூபப் பொருளாதாரத்தில் சந்தைச் சக்திகளை முக்கியப் பங்காற்ற அனுமதிக்கும் நோக்கில், கியூபா அரசாங்கம் தொடர் சீர்திருத்தங்களை அமலாக்கிய வேளையில் கியூபாவிற்குப் பயணிக்கவும் வணிகம் செய்ய தான் விதித்திருந்த தடைகள் சிலவற்றை அமெரிக்க அரசாங்கம் தளர்த்தியது.

2008 ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தச் சீர்திருத்தங்கள் பயன்படுத்தப்படாத நிலங்களில் வேளாண்மை செய்ய தனியாட்களையும் கூட்டுறவு அமைப்புகளையும் அனுமதித்தன; பரந்த அளவில் சுய தொழில்களை மேற்கொள்ள இடமளித்தன; தனியார் உணவகங்களையும் தங்கு மனைகளையும் தனியார்கள் இயக்குவதற்கு ஏதுவாகத் தடைகளைத் தளர்த்தின; கியூப குடிமக்கள் வீடுகளை வாங்கவும் விற்கவும் அனுமதித்தன. மேலும், சந்தை சார்ந்த சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் சீரற்ற வளர்ச்சிக்கு வாய்ப்புள்ளது. எனினும், சில மாதங்களாக கியூப அரசாங்கம், மீண்டும் ஒருமுறை, உணவு வழங்குதலில் விரிவாக்கப்பட்ட பங்கினை மேற்கொண்டிருக்கிறது.

அமெரிக்க நாட்டின் கொள்கை மாற்றங்கள், கியூபாவின் புரட்சிகர மெய்யியலை மாற்றி விடாத அளவிற்கு இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துவதில் கியூபா அரசாங்கம் கவனமாக இருந்து கொண்டிருகிறது. கடந்த 15 மாதங்களில் அயல் நாட்டு அரசியல் தொடர்புகளும் பிற அணுகுமுறைகளும் மீண்டும் தொடங்கியுள்ள போதிலும், அமெரிக்காவின் ‘ரொக்கக் கொள்முதல்’ கொள்கையால், அமெரிக்காவிலிருந்து கியூபா மேற்கொண்ட உணவுப்பொருள் கொள்முதல் பாதிப்படைந்து – 2008 ஆம் ஆண்டு முதல் 22 விழுக்காட்டிற்கும் கீழே – அடிமட்டத்தில் இருக்கிறது. இதற்கிடையில், பிற நாடுகள் விரிவாக்கப்பட்ட வழிகளில் கடனையும் வணிகத்திற்காக நீடிக்கப்பட்ட விதிமுறைகளையும் வழங்கி வருகின்றன. வேளாண் நுகர்பொருள்கள், பிற பொருள்கள் மீது ரொக்க முன் பணமோ, மூன்றாம் நாட்டின் நிதியோ வழங்கப்பட்ட நிலையைப் பராமரிக்குமாறு அமெரிக்காவின் அந்நியச் சொத்துகள் கட்டுப்பாட்டுக் கருவூலத்திற்குக் கட்டளையாயிருக்கிறது.

பயணவிதிகள் தளர்த்தப்பட்டதால் அதிகளவிலான அமெரிக்கர்களின்ச சுற்றுலா வருகை அதிகரித்திருக்கிறது

கியூபாவிற்கு அமெரிக்க மந்தைகள்

இதற்கிடையில் கியூபாவிற்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாவினரும் புற்றீசலாய் வரும் அமெரிக்கர்களும் கியூபாவின் சுற்றுலா உள் கட்டமைப்பை அதன் வரம்பிற்கு, ஒருவேளை அதற்கு அப்பாலும், தள்ளியிருக்கின்றனர்.
இது வெறும் தொடக்கமே. குறைந்த அளவாக எட்டு அமெரிக்க விமான நிறுவனங்கள் கியூபாவிற்கு வணிக விமானங்களை (சுற்றுலா நிறுவனங்களின் ஒப்பந்த விமானங்களுக்கு மாறாக) இயக்க அனுமதி கோரி விண்ணப்பித்திருக்கின்றன. இவ்வாண்டின் இறுதியில் அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையில் 100க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குவதற்கு கதவைத் திறந்துவிட வாய்ப்பிருக்கிறது.

வெடித்தெழும் கியூபா சுற்றுலாப் போக்குவரத்து ஏற்கனவே துயர நிலையிலிருக்கும் அந்நாட்டின் உணவு அமைப்பின் மீதான நெருக்கடியை அதிகரிக்க இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சுற்றுலா உணவகங்களில் அதிகரிக்கும் உணவுத் தேவையும் கியூபாவில் பெருமளவில் விரிவடைந்து வரும் தனியார் உணவகங்களும் உள்நாட்டில் விலையேற்றத்தை உருவாக்குகின்றன. இதனால், கியூபியர்கள் தம் குடும்பத்தினருக்குத் தேவையான உணவை வழங்குதற்கு அல்லலுறும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

இது, உணவு இறக்குமதியைப் பெருமளவில் சார்ந்திருக்கும் நிலைக்கு கியூபாவைத் தள்ளி, அதன் அரசாங்கத்திற்குச் செலவுடைய சிக்கலை உருவாக்கி உள்ளது. உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான மூலதனத்தைத் தேடும் இக்கட்டான நிலைக்கு வேளாண்மைத்துறை உள்ளாகியிருக்கிறது; ஆனால் மூலதனத்திற்கான உள்நாட்டு வளங்களோ மிக மிகக் குறைவாக உள்ளன. இதனால் அந்நிய முதலீட்டின் தேவைக்கான நெருக்கடி மேலோங்கியிருக்கிறது.

அமெரிக்கத் தூதரகத்தில் ஒபாமாவின் வருகைக்காகக் காத்திருக்கும் கியூபமக்கள்
 
வெளிநாட்டு டாலர்களின் தேவை

உண்மையில் கியூபா பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும் அந்நிய முதலீடு கட்டாயமாகத் தேவைப்படுகிறது.

கடந்த முறை நடைபெற்ற கியூபாவின் பன்னாட்டு வணிகக் கண்காட்சியில், கியூபா வெளிநாட்டு வணிக அமைச்சர் ரொட்ரிகோ மல்மியர்கா, மொத்தமாக 8.2.பில்லியன் டாலர்கள் தேவைப்படும் 326 திட்டங்களைக் கொண்ட வணிக வாய்ப்புப் பட்டியலொன்றை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் அறிவித்தார். இப்பட்டியலில் இருந்தவை முந்தைய ஆண்டில் வெளியிடப்பட்ட பட்டியலில் இருந்த 40 திட்டங்களின் தேவைக்கும் மேற்பட்டவை ஆகும். முந்தைய திட்டங்கள் அனைத்தும் இப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தன; ஏனெனில், வெளிநாட்டு முதலீட்டுப் பங்காளிகளுடனான பேச்சுவார்த்தை முடிவடையும் நிலையில் இருப்பதே எனக் கூறப்பட்டது.

உண்மையில், கியூபாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை (2013ஆம் ஆண்டில் 2.7 % இருந்ததை) 5 விழுக்காட்டிற்கு உயர்த்தும் இலக்கை அடைய ஒவ்வோராண்டும் 2பில்லியன் டாலர் அந்நிய முதலீடு கியூபாவிற்குத் தேவையாக இருக்கிறது என்று மல்மியர்கா ஏற்றுக்கொண்டார். பன்னாட்டுத் தரம் என பலராலும் கருதப்படும் நிலையை கியூபா இன்னும் எட்டவில்லை என்றாலும், அதன் அந்நிய முதலீட்டு ஒழுங்காற்று விதிகள் படிப்படியாக உருவாகி வருகின்றன.

1990களிலிருந்து கியூபா தொடர்பான சட்டச் சிக்கல்களில் ஈடுபட்டு வருபவரான அரசு வழக்குரைஞர் ஜிம் உவய்செனட், கியூபாவை ’எல்லைப்புறச் சந்தை’ (frontier market) என வர்ணித்திருக்கிறார்:
வரையறையின்படி, நீங்கள் எல்லைப்புறத்தில் இருக்கிறீர்கள். . . நியூயார்க்கிலோ மியாமியிலோ உள்ளது போன்ற முதலீடு செய்யும் விதிகளையும் பாதுகாப்பையும் நீங்கள் விரும்பினால், நீங்கள் நியூயார்க்கிலோ மியாமியிலோதான் முதலீடு செய்ய வேண்டும்.
மாறாக, எக்கர்மேன் சட்ட நிறுவனத்தின் பங்காளிகளில் ஒருவரும் அதன் பன்னாட்டுச் செயல்பாடும் குழுவின் தலைவரும் கியூப-அமெரிக்க வழக்கறிஞருமான பெட்ரொ ஃபையர் பின்வரும் மாற்றங்களைக் காண்கிறார்:
வாடிக்கையாளர்கள், கியூபாவைப் பற்றிய தம்முடைய பார்வையை இப்பொழுது மாற்றி இருக்கிறார்கள். முன்னர் அவர்கள் ஏதேனும் செய்ய விரும்பினால், அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என வருந்தினார்கள். தற்பொழுது அவர்கள், பின்தங்கியிருப்பதாக வருந்துகிறார்கள்.

கோரிக்கைகளும் எதிர்வாதங்களும்

வழக்கறிஞரின் பேச்சு, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளைத் திரும்பப் பெறும் சிக்கல் என்னும் மற்றொரு கருத்தை எழுப்பியிருக்கிறது;
முட்கள் நிறைந்த இந்தச் சிக்கலைப் பற்றிக் கவனத்துடன் விவாதிப்பதற்கு இங்குள்ள இடம் போதாது. எனினும், அமெரிக்காவின் நீதித்துறை 1.9பில்லியன் டாலருக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 5900க்கும் மேற்பட்ட பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளைத் திரும்பப் பெறுவதற்கு சான்றளித்திருக்கிறது என்பதனைக் கவனத்திற் கொள்ள வேண்டியது முக்கியம் ஆகும். பறிமுதலில் தங்களது சொத்துகளை இழந்து அமெரிக்காவின் குடிமக்களாகிவிட்ட கியூபியர்கள் தம் சொத்துகளுக்காக அமெரிக்க நீதிமன்றங்களில் (அதன் சட்டத்தன்மை எதிர்க்கப்பட்டிருந்தபோதிலும்) வழக்குத் தொடுக்க 1996ஆம் ஆண்டின் ஹெலம்ஸ் – பார்டன் சட்டத்தின் பிரிவுகள் அனுமதிக்கின்றன.

ஹெலம்ஸ் – பார்டன் சட்டத்தை, ’வழக்குரைஞர்களுக்கு முழு வேலை வாய்ப்பு அளிக்கும் சட்டம்’ என சில வழக்குரைஞர்கள் குறிப்பிடுவதைப் போல ஒருவேளை அது ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மாறாக, தடையாணையின் விளைவாக கியூபாவிற்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய அமெரிக்கா 1 ட்ரில்லியன் டாலரை கியூபாவிற்கு வழங்க வேண்டுமெனச் சுட்டிக் காட்டியிருக்கிறது.

அமெரிக்காவின் தடையாணை நீக்கப்பட்டாலும்கூட நீண்டதும் குழம்பம் நிறைந்ததுமான சட்டச் சாலை ஒன்றைக் காண வேண்டியிருக்கும் என்றே கூறலாம். ஹெலம்ஸ் – பார்டன் சட்ட ஆக்கம் தடையாணையைச் சட்டத்தில் நெறிமுறைப்படுத்தி இருப்பதால், அதனை மேம்படுத்த அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத்தலைவரின் அனுமதியைக் கோருகிறது.
வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன?

இதுவரை, கியூபாவுடனான உறவு, அமெரிக்கக் குடியரசுத்தலைவர் போட்டியில் பெரிய சிக்கலாக இருந்ததில்லை.
தற்பொழுது, கியூப-அமெரிக்கரான மார்க்கோ ரூபியா போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டதால், மனித உரிமையில் அக்கறையுள்ள மற்றொரு கியூப-அமெரிக்கரான டெட்குருஸ் என்னும் வேட்பாளர் எல்லாவகையான தளர்த்தல்களையும் கடுமையாக எதிர்க்கிறார். அரசியல் உறவுகளை இயல்பு நிலைப்படுத்தலை ’சோகத்தவறு’ என அவர் வர்ணித்திருக்கிறார்.
கியூபாவின் நிலையைப் பற்றி ஜான் காசியா எதுவும் பேசவில்லை; ஆனால் அவர் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தபொழுதே தடைகளை எளிமைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்கையில் அதற்கு எதிராக வாக்களித்திருக்கிறார்.

குடியரசுக் கட்சியின் பிற வேட்பாளர்களிலிருந்து வேறுபட்டு, டொனால்டு ட்ரம்ப் கியூபாவுடான அரசியல் உறவுகளை ஆதரிக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம், “கியூபாவுடன் நல்லுறவு என்னும் கருத்தியல் அருமையானது; ஆனால் நாம் இன்னும் சிறப்பான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்” என அவர் கூறினார்.

பெரினி சான்ட்ரஸ், கியூபா மீதான தடையாணையை நீக்க அழைப்பு விடுத்திருந்த ஹிலாரி கிளிண்டனைப் போல, கியூபாவுடனான உறவை இயல்பு நிலைப்படுத்தலை ஆதரிக்கிறார். அவர், தான் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தடையாணையை நாடாளுமன்றம் நீக்கி விட்டாலும் குடியரசுத் தலைவருக்குள்ள செயலாக்க அதிகாரத்தைப் பயன்படுத்தி வணிக, பயணத் தடைகளை மேலும் தளர்த்துவேன் என்கிறார்.

வளர்ச்சிக்கு அடித்தளமிடுதல்

அமெரிக்கா தான் விதித்த தடைகளைத் தளர்த்தியது, பிற நாடுகளுடனான வணிகம் ஆகியன போன்ற சந்தை அணுகுமுறை சீர்திருத்தங்களின் விளைவாக, வலிமையான பொருளாதார விரிவாக்கத்திற்கான நல்ல நிலையை கியூபா இன்று அடைந்திருக்கிறது.

கியூபா அரசாங்கம், தனது அரசியல் கட்டுப்பாட்டைப் பராமரிப்பதில் அக்கறை காட்டப் போகிறதா அல்லது இந்த வாய்ப்பைப் பயன்படுத்தும் கொள்கைகளின் தேவையை ஆதரிக்கவோ தடை செய்யவோ போகிறதா என்பதே இப்பொழுது எழுகின்ற வினா.

கியூபா அரசாங்கம் அதனுடைய பொருளாதாரத்தையும் உருவாகும் அமெரிக்காவுடனான உறவுகளையும் போலவே மெதுவாக நகர வலிமையான உறுதி பூண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
அமெரிக்கா தனது கொள்கைகளை விட்டுக் கொடுக்கும் விகிதத்திற்கு ஏற்பவே கியூபாவில் எங்ஙனம் மாற்றங்கள் உருவாகும் என்பதனை கியூபா அரசாங்கம் முடிவெடுத்து நகரும்.


ஏறத்தாழ 90ஆண்டுகளுக்குப் பின்னர் "ஏர்ஃபோர்சு ஒன்" விமானம் கியூபாவில் தரையிறங்குகிறது

கட்டுரையாளர் குறிப்பு - வில்லியம் ஏ. மெசினா,வேளாண்மைப் பொருளியலாளர், உணவு வேளாண்மை அறிவியல் நிறுவனம்,ஃபளோரிடா பல்கலைக்கழகம்,- பிரைன் சென்ட்ரியூ,இயக்குநர், இலத்தீன் அமெரிக்க வணிகச் சூழலியல் திட்டம்,
ஃபளோரிடா பல்கலைக்கழகம்.
நன்றி: த கான்வர்சேஷன்.காம் https://theconversation.com/as-obama-makes-historic-visit-is-cuba-ready-for-change-56399

மின்னம்பலம் மின்னிதழுக்காக மொழிபெயர்த்தது.
http://sin2.enmail.com/k/2016/03/27/1459036824

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...