சிரிப்பொலி

களிப்பின் ஒலியாய் கானகம் சிரிக்கையில்
ஓடைகள் சுழித்து ஓடிச் சிரிக்கையில்
காற்றும் நம்மோடு களித்துச் சிரிப்பதை
ஏற்றுப் பசுமலை எதிரொலி செய்யும்!

பசும்புல் வெளியது பளிச்செனச் சிரிக்கையில்
தத்துக் கிளிகள் தாவிக் குதிக்கையில்
இனிய தமது எழில்மிகு வாய்களால்
கலகல கலவென காண்போர் சிரிப்பர்

வண்ணப் பறவைகள் வளமாய்ச் சிரிக்கையில்
சிறுமணிப் பயிறும் செந்நிறப் பழங்களும்
விரிந்த பலகையில் விரவிக் கிடக்கையில்
என்னோ டிணைந்து இன்பம் பொங்கக்
கலகல கலவெனப் பாடி மகிழ்ந்து
வாழ்ந்து சிறந்திட வாரீர்! வாரீர்!!

ஆங்கிலக் கரு: வில்லியம் பிளேக்கு
தமிழ் உரு : யரலவழள

மீளும் கருவூலம்



அள்ளித் தரும் நிலம்

வள்ளலார் என அழைக்கப்பட்ட சிதம்பரம் இராமலிங்க அடிகளாரின் சிந்தனைக்குப் பின்னர் தமிழ் மக்கள் தம்முடைய வேர்களைத் தேடும் பணிகளில் பல்வேறு வகைகளில் ஈடுபடத் தொடங்கினர். மொழிப்புலத்தில் மறைமலையடிகள், திரு.வி.., தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், அருளி எனத் தொடரும் ஒரு படையும் மெய்யியற் புலத்தில் . நெடுஞ்செழியன் போன்றோரும் இசையியற் புலத்தில் தமிழிசை மூவர்கள் தொடங்கி வீ.பா.. சுந்தரம், மம்மது எனத் தொடரும் ஒரு பெரும் படையும் நூலகவியற் புலத்தில் வே. தில்லைநாயகனாரும் பொறியியலற் புலத்தில் கொடுமுடி சண்முகம் போன்றோரும் இலக்கண இலக்கியக் கோட்பாட்டுப் புலத்தில் தண்டபாணி சுவாமிகள் தொடங்கி .வே.சு. வி.அய்.சு வழியாக எண்ணற்றோரும் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மொழிந்தவை தவிர வெவ்வேறு துறைகளிலும் விதவிதமான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதுபோலவே வேளாண்மையிலும் பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அத்தகு முயற்சிகளில் ஒன்றுதான் பாமயன் என்னும் மு. பால்சுப்பிரமணியன் எழுதியஅள்ளித் தரும் நிலம்என்னும் நூலும் ஆகும். அந்நூலுக்கு நான் எழுதிய பதிப்புரை கீழே தருகிறேன். படித்த பின்னர் உருபாய் 120 விலையுள்ள அவ்வரிய நூலை வாங்க விரும்பினால்பனுவற்சோலை, 15/பி பயோனியர் குடியிருப்பு, திருமங்கலம் 625 706, மதுரை மாவட்டம்என்னும் முகவரிக்கு பணவிடையை அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.

இதோ அப்பதிப்புரை:

மீளும் கருவூலம்

தம் பண்டங்களுக்குச் சந்தை தேடிய, தேடுகிற பேரரசியத்தின் (Imperialism) அகோரப் பசிக்கு உணவாக அதன் கொள்ளிவாய்க்குள் பன்னெடுங் காலமாக நம் முன்னோர் பட்டறிவில் உருவான நம் மண் சார்ந்த பல்வேறு தொழில் நுட்பச் செல்வங்களை வீசி எறிந்தோம். அவற்றுள் நம் வேளாண்மையும் ஒன்றாக இருந்தது. தொழில் நுட்பத்தின் பெயரால் அவை உமிழ்ந்த நச்சுகளை எல்லாம் வாரியெடுத்து அணைத்துக்கொண்டோம். நாகரிகம் அடைந்து விட்டதாக நம்பத் தொடங்கினோம். புதிதக் கோலம் (Modernity) புனைந்துள்ளோம் என்று புளகிதம் அடைந்தோம். நம் வயல்வெளி எங்கும் விதைகள் என்று நம்பி மரபீனி மாற்றக் கண்ணி வெடிகளை நடத் துடிக்கிறோம், உரங்களுக்கு மாற்றாய் வெடிப் பொருள்களை நிறைக்கிறோம், அதிக விளைச்சல் மாயையில் சிக்கி நோய்களை அறுவடை செய்கிறோம்.

காலம் செல்லச் செல்ல, இயற்கையின் கோலம் மாற மாற, நிலவெளி எங்கும் நேர்ந்த இழப்புகள், சங்க காலத் தமிழரைப் போல, மாந்தன் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டியதன் தேவையை உணர வைத்துள்ளன. உலகு முழுவதும் வேர்களைத் தேடும் பணிகள் தொடங்கியுள்ளன. இதுநாள் வரை நாகரிகம் அற்றவர்களெனப் புனைந்து உரைக்கப்பட்ட பழங்குடியினரும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களும் தம் நினைவுக் கிடங்குகளில் தேக்கி வைத்திருந்த அறிவுச் செல்வங்களை திரட்டும் வேலைகள் ஆய்வாளர்களால் செயலுருப் பெறுகின்றன. வேளாண்மையின் வேர்களை மீட்கும் வேலையும் வெகுவேகமாய் நடக்கிறது.

இவ்வேர் மீட்புப் பணியின் விளைபொருள்களாய் வெளிவரும் எம்மக்கள் தம் பட்டறிவால் கண்டறிந்து குமுகாய உடமையாய் வைத்திருக்கும் அறிவுச் செல்வங்களுக்கு தன்பெயரில் முற்றுரிமை பெற பேரரசியம் முனைகின்றது. இந்நிலையில் குமுகாய அறிவுத்தொகுதியை குமுகாயத்திற்கு உடமையாக்குவதற்கும் பரவலாக்குவதற்கும் அதனை ஆவணப்படுத்தி பரப்ப வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அப்பணியின் ஒரு கூறாய், நம் மண் சார்ந்த வேளாண்மை முறைகளைத் திரட்டி, அறிவியல் நோக்கில் ஆய்ந்து, கொள்வன கொண்டு, தள்ளுவன தள்ளி, இணைக்கத் தக்கன இணைத்து, களத்தில் ஆய்ந்து, விளைவுகளைக் கண்டறிந்த பின்னர் தேர்ந்த கோட்பாடுகளையும் தொழில் நுட்பங்களையும் தொகுத்து நூலாக்கி தங்கள் கைகளில் தந்திருக்கிறோம். படியுங்கள். பயன்படுத்துங்கள். பரப்புங்கள்.

இந்நூலாக்கப் பணியை அறிஞர் பாமயன் அரும்பாடுபட்டு செய்திருக்கிறார். அவருக்கு நன்றி.

நாக்கு

“அடுத்த தெரு
மலையாளத்துப் பொண்ணுக மூணூம்
சுடிதார் மாட்டி
இடுப்பு வரைக்கும்
நெளிநெளியா கூந்தல
முடியாம விட்டுக்கிட்டு
தாசி போல நகர்வலம் வரதாலதான்
பருவமழ கெட்டுப்போச்சு”
என இருபதாண்டுகளுக்கு முன்னாடி
ஊரில் முணுமுணுத்த அம்மா,
தொடையை இறுக்கும் ஜீன்சு
தொளதொள டி சர்ட்
காற்றில் பறக்கும் நெளிநெளி கூந்தல் என
யமாகாவில் காதலனோடு வந்திறங்கும்
பேத்தியைப் பார்த்துப் பூரித்து
நெட்டி முறித்துக்கொண்டே சொன்னாள்…
“என் கண்ணே பட்டிடும்‌போல…”

எங்ஙனம் டாவோ கோயிலுக்குப் போக வேண்டும்?




வீட்டினைப் பூட்டாதீர்கள்.

வைகறைப் பொழுதினில்
தென்றலில் அலையும் இலையைப் போல
கனமற்றுப் போங்கள்

மிகவும் அழகென்றால்
சாம்பலைப் பூசிக்கொண்டு போங்கள்
மிகவும் அறிவாளியென்றால்
அரைத்தூக்கத்தில் போங்கள்

விரைந்துபோனால்
விரைந்து களைப்பீர்கள்
மெதுவாகப் போங்கள் -
ஏறத்தாழ அசைவில்லாது நிற்பதைப் போல

வடிமற்றிருங்கள்
நீரைப்போல.
அடித்தளத்திலேயே படிந்துவிடுங்கள்,
மேலே எழ
முயலாதீர்கள்

வலம் சுற்றாதீர்கள்
வெறுமைக்கு இடமும் வலமும் இல்லை
முன்னும் பின்னும் இல்லை

பெயரிட்டழைக்காதீர்கள்
அவனின் பெயருக்கு பெயரில்லை.

காணிக்கைகள் வேண்டாம்.
வெறுங்கிண்ணத்தை ஏந்துங்கள்,
நிறைகிண்ணத்தை ஏந்துவதை விட எளிதானது.
ஆசைகள் கொண்டோருக்கான
இடமில்லை இது.
பேசவிரும்பினால்
அமைதியோடு பேசுங்கள்
பாறைகள் மரங்களோடும்
மரங்கள் மலர்களோடும் பேசுவது போல
அமைதியே
எல்லாவற்றிலும் இனிய ஒலி
எதுவுமின்மையே
எல்லாவற்றிலும் அழகிய வண்ணம்

கால்பங்காய்ச் சுருங்கிப்போன
பாலத்துத் தூணின் கீழே
குளிரினில் ஆற்றைக் கடப்பவரைப்போல
உங்கள் வருகையையும்
உங்கள் செல்கையையும்
பிறர் அறியாதிருக்கட்டும்

உருகும் பனித்துளியைப்போல
குறுகிய கணமே உங்களிடமிருக்கிறது

நிகழ்த்துதல்கள் வேண்டாம்
நீங்கள் இன்னும் வடிவம் பெறவேண்டும்
கோபம் வேண்டாம்
தூசிகூட உங்களின் கட்டுப்பாட்டில் இல்லை
வருத்தம் வேண்டாம்
அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை

பாதையை மாற்ற புகழ் அழைத்தால்,
ஒரு காலடிச்சுவட்டைக்கூட
விட்டுவைக்காதீர்கள்.

கைகளை பயன்படுத்தவே வேண்டாம்
அவைகள்
எப்பொழுதும்
வன்முறையையே சிந்திக்கின்றன

அற்புதத்தை துறங்கள்
அற்புதத்திற்கு வேறு போக்கிடமில்லை

ஆற்றிலிருக்கும் மீன்களை
ஆற்றிலேயே இருக்கவிடுங்கள்
கொம்புக்கனிகளை
கொம்புகளிலேயே இருக்கவிடுங்கள்

மிகவும் கடிமானதே உடையும்
பற்களுக்கிடையில் இருக்கும் நாக்கைப்போல
மெல்லியது வளையும்
வாழ்வதற்காக

எதனையும் செய்யாதவர்களால்
எல்லாவற்றையும் செய்யமுடியும்

வாசலைக் கடந்து போங்கள்
உருவாக்கப்படாத சிலை
உங்களுக்காக காத்திருக்கிறது.

மலையாள மொழியில் கே. சச்சிதானந்தன் எழுதிய இக்கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் கவிஞர் டி.கே. தாமஸ். தமிழில்: யரலவழள)

பெயர்

எனதென்பது எனதில்லை
என்றன் பெற்றோடுடையது
என்றன் நண்பருடையது
என்னுடையதெல்லாம்
என்பிள்ளைகள் முகமாய்

அவரவர் உடையதை
அவரவர் சுமக்க
ஆவதில்லை இங்கு

யாராருடையதையோ தூக்கியெறிந்து
என்னுடையதை மட்டும் ஏற்கலாமென்றால்
இறுதி வரைக்கும்
யாருடையதோ
என்னுடையதாய்

விசிறி விசிறி விரட்டினாலும்
காதுக்கருகில்
மீண்டும் மீண்டும்
ரீங்காரமிடும் கொசுவைப்போல
பழையதே வந்து நிற்கிறது
நானாய்
எனதாய்

உதறிய பின்னும் விலக மறுக்கும்
இத்திணிப்பை என்ன செய்யலாம்?

தொடர்பில்லையென்று தண்டோரப்போட்டால்
விலகுமென்றனர் சிலர்
இதுதான் நானெனத்
தாளிகை விளம்பரம் தாவென்றனர் பலர்
இரண்டும் செய்தேன்
எதுவும் பயனில்லை

என்ன செய்தால் தகுமென எண்ணிக்கிடக்கையில்
நீ
நீயாகு முன்னர்
நான்
நானாக விடு
எல்லாம் சரியாகுமென்றனர்
மகளும் மகனும்

நூலக அந்தணர் வே.தில்லைநாயகம்

  யார் ? “‘ ஊருக்கு ஒரு நூலகம் ; ஆளுக்கு ஒரு நூல் - அதுவும் நான்கு பேர் - தாய் , தந்தை , மகள் , மகன் ஆகிய நான்குபேர் - நடுவீட்டில் நன்றாய...