சி. சு. செல்லப்பாவின் கவிதைகள் – ஒரு பார்வை

சின்னையில் பிறந்து, வதிலையில் வளர்ந்து, மதுரையில் பயின்று, சென்னையில் சிறந்தவர் சின்னமனூர் சுப்பிரமணியம் செல்லப்பா.  இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியை நடுவாகக்கொண்ட கள்ளர்நாட்டு மக்களின் வாழ்க்கை முறையை, கலையை, பண்பாட்டைக் களனாகக்கொண்டு “கள்ளர்நாட்டுக் கதைகள்” என்னும் பிரிவையும் காந்தியக் கோட்பாடுகளைக் களனாகக்கொண்டு “காந்தியக் கதைகள்” என்னும் பிரிவையும் தமிழில் தொடங்கிவைத்தவர்.  மணிக்கொடி எழுத்தாளரான இவர் காந்திய வழியை தன்னுடைய வாழ்க்கைநெறியாக ஏற்றுக்கொண்டவர்.  மனிதனுக்கும் விலங்கிற்கும் இடையில் நடக்கும் போராட்டத்தை நிலைகளனாகக் கொண்டு புனையப்பட்ட வாடிவாசல், நினைவோடை உத்தியைக்கொண்டு புனையப்பட்ட ஜீவனாம்சம் ஆகிய இரு புதினங்களின் மூலம் தமிழ்ப் புதின இலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்றவர்.  திறனாய்வுக்கென்று தொடங்கிய ‘எழுத்து’ இதழை ‘புதுக்கவிதை’யைக் காக்கும் களமாகப் போற்றி வளர்த்தவர்.  வசனகவிதையில் இருந்து புதுக்கவிதையை வேறுபடுத்திக் காட்டிய வித்தகர்.  “புதுக்குரல்” என்னும் புதுக்கவிதைத் தொகுப்பை இருமுறை பதிப்பித்தவர்.

அழகின்மையால் மணமாகாதிருக்கும் பெண்ணொருத்தியின் மனவோட்டத்தைப் படம்பிடிக்கும் “என்று வருவானோ?” என்னும் சிறுகதையை 1961 ஆம் ஆண்டு திசம்பர் திங்களில் சிதம்பர சுப்பிரமணியன் எழுதினார். அக்கதை ஏற்படுத்திய தாக்கத்தால்,
பாடாத பாட்டாக
மவுனத்துள் கம்முகிறேன்

பேசாத சொல்லாகி

சுவடிக்குள் நொறுங்குகிறேன்

உணராத பொருளாகி

சொல்லுக்குள் புழுங்குகிறேன்

ஆளாத பாண்டமாக

சேந்தியிலே மழுங்குகிறேன்

என்னும் கவிதையை தொடங்கி, தொடர்ந்து சி. சு. செல்லப்பா பல கவிதைகளை  எழுதினார். 

“தற்கால வாழ்க்கைச்சூழல் எனக்கு திருப்தி தரவில்லை.  எனவே என் கவிதைகள் ஏக்கம், வேதனை, தார்மீக கோபம், மனப்புழுக்கம், குமைவு கொண்டதாகவே இருக்கும் …. ஆனால், நான் நம்பிக்கை கொண்டவன் என்று சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்” என்னும் அறிவிப்போடு 21 சிறு கவிதைகளையும் மகாத்மா காந்தியை முன்னுறுத்தி ‘இன்று நீ இருந்தால்…’ என்னும் குறுங்காவியம் ஒன்றையும் பரிபாடலைப் போன்று எழுதப்பட்ட ‘மெரீனா’ என்னும் நெடுங்கவிதையையும் சங்கப்பாடல்களின் உருவம், ஒலி, வரியமைப்பு ஆகியவை சிதைவடையாமல். அவைகளை இன்றைய சொல்வழக்கில் மடைமாற்றம் செய்யும் கவிதைகள் எட்டை ‘புதுமெருகு’ என்னும் தலைப்பிலும் ‘வெளிக்குரல்’ என்னும் தலைப்பில் 27மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் சி. சு. செல்லப்பா படைத்திருக்கிறார்.   இவைகளை ஏல்லாம், “மாற்று இதயம்” என்னும் தொகுப்பு நூலாகவும் “இன்று நீ இருந்தால்…” என்னும் தனிநூலாகவும் தனது எழுத்து பிரசுரத்தின் வழியாக வெளியிட்டார்.

ஆழ்ந்த் உள்ளடக்கமானது செறிவான உருவத்துடன் கலைத்தன்மை சிதையாமல் உணர்த்தப்படுவதே சிறந்த கவிதை என்றால், சி. சு. செல்லப்பாவின் கவிதைகளை சிறந்த கவிதைகள் எனக் கூறமுடியாது.  ஏனெனில், அவர் தனது கவிதைகளி உள்ளடக்கத்திற்குத் தந்த இடத்தை அதன் உருவாக்கத்திற்கும் உணர்த்தும் முறைக்கும் அவர் தரவில்லை. 

உருவம்:
தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்னும் வாய்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட அகவல், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகியனவற்றின் உருவங்களை வசன, புதுக்கவிதைகள் விலக்கி வைத்திருக்கின்றன. ஆனால் நாம் பேசும்பொழுது வெளிவரும் பேச்சுக்காற்றின் தட்பவெப்பத்திற்கு ஏற்ப வசன, புதுக்கவிதைகள் ஏற்ற இறக்கமான அடியமைப்புக்கொண்டதாக இருக்க வேண்டும் என்கிறது ஓல்சன் கோட்பாடு.   இக்கோட்பாட்டை, அசபாக் கோட்பாடு என்பார் எழில்முதல்வன்.

இசை அலறும்

எரிமலை வாய்

சொல் நொறுங்கும்

கல் ரோலர்

ஜவ்வு எரிக்கும்

கொல்லுலைக் கோல்

என ஒலிபெருக்கியைப் பற்றிய கவிதையிலும் வேறு சிலவற்றிலும் அசபா அடிகளை கவனமாகப் பின்பற்றும் சி. சு.செ.

ஃபாய் ஃபாய் குளிரப்பேசி

பசப்பி விளிம்பில் இமயப் பாய்சுருட்ட வந்தோன்;

சுயாட்சிக்குத் தந்த ஆதரவு மறந்து

நடுக்கடலில் நின்று ஊளையிடும்

நம்பெயர் பாதிகொண்ட உதிரித்தீவோன்

முக்கூட்டாய் சேர்ந்து பகைத்தொழில் வளர்க்க

புறப்பட்ட கதையே இன்றைய நிஜமாச்சு

என்பது முதலான பல கவிதைகளில் பின்பற்றாது விடுகிறார். இதனால் இவரது கவிதைக்குக் கிடைத்திருக்க வேண்டிய உருவச்செப்பம் சிதைந்துவிடுகிறது.

உணர்த்தும் முறை:


எல்லா ஊரு கோயிலிலும்

எண்ண யூத்தி விளக்கெரியும்

எங்க ஊரு கோயிலில

பச்சத் தண்ணி நின்னெரியும்

என்பது தனது ஊரின் பெருமையைப் பாடிக்கொண்டே நடக்கும் ஒரு பென்ணின் நாட்டுப்புறப் பாட்டு.  இப்பாடலின் இறுதியடியில் உறைந்திருக்கும் கற்பனை, மற்ற மூன்றடிகளுக்கும் பொருள் அடர்த்தியைச் சேர்த்து கவிதையைப் பெற்றெடுக்கிறது.  அவ்வடியே கற்போர் நெஞ்சைக் கவ்விப் பிடிக்கிறது. 

இத்தகு தாக்கத்தை சி. சு. செ.வின் கவிதைகளில் காண முடியவில்லை.  ஏனெனில் அவரது படைப்புகளில் ஒரு சிறந்த கவிதைக்குரிய உணர்வோட்டம் இல்லை.  எனவேதான்,

மேல்வண்டி இறங்கு ரவியின் பொன்ஒளி

கீழ்வானடி ஏற்றும் ஒளிச்சாயை

நீலஉடல் புடவை கரைக்கட்டில்

சாயச் சிவப்பு கலந்ததுபோல்

அடிவானம் ஆரஞ்சு விளும்பு கட்டும்

நீலக்கடல் கரும்பச்சைத் தோற்றம் கொள்ளும்

எழும் அலைநுரைகள் ஊதாநிறம் பூரிக்கும்

விழும் மஞ்சள் வெய்யில் மெரினா முழுதும்

மணல் இன்னும் பழுப்புக் கருக்கும்

முகங்கள் அத்தனையும் ஸ்நோபூச்சாய் வெளுக்கும்

வான அடியில்

தொலை எழுசிறு அலை பலப்பல இழைந்து

சுழிபடு பெருஅலை எனஉரு உயர்ந்து

நுரையொடு மணல்கரை அடைய முனைந்து

உதறிய வெண்மணிப் பொடியெனத் தெறிக்கும்

என்பன போன்ற சிற்சில அடிகளைத் தவிர, பெரும்பான்மைக் கவிதைகள்,

சாம்ராஜ்ய பேராசைத் தனிமனித மன்னன்

கெய்ஸர் பெல்ஜியத்தை வீழ்த்தியது பழங்கதை;

சர்வாதிகார வெறித் தனிமனிதத் தலைவன்

ஹிட்லர் போலந்தை வீழ்த்தியது பழங்கதை

என்று உரைநடைத்தன்மை கொண்டதாகவே இருக்கின்றன.


உள்ளடக்கம்:


செறிவான உருவமும் சிறந்த உணர்த்துமுறையும் உள்ள கவிதை உயர்ந்த உள்ளடக்கம் கொண்டதாக இல்லாவிடில், அதனால் இச்சமூகத்திற்கு எப்பயனுமில்லை.  அதனால்தான் இடைக்காலப் பாடல்கள் பல படிப்பாரற்றுக் கிடக்கின்றன.  ஆனால் சி.சு.செ.வின் கவிதைகளோ செறிவான உருவமும் சிறந்த உணர்த்தும் முறையும் கொண்டவையாக இல்லாவிடினும் நல்ல உள்ளடக்கங்களைக் கொண்டவைகளாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக,

சுப்பா சாஸ்திரிகள்

அகத்தில் பிறந்து

குப்பா சாஸ்திரிகள்

அகத்தில் வளர்ந்து

லவணம் என்றால்

தெரியாதா எனக்கு

நன்றாக இருக்கு!வ்- என

பரிமாறினாள் இலையில்

மகிஷத்தின் சாணத்தை!

என்னும் “சர்வஞானி” என்னும் கவிதையில்  வறட்டுப் பெருமை பேசும் போலி அறிஞர்களின் உயர்வுமனப்பான்மையை எள்ளி நகையாடுகிறார். 

பசிக்கு அழுது, வலிக்கு முனங்கி, காதலுக்கு ஏங்கி, பொருளுக்கு தவித்து, உணர்ச்சிக்குத் துடித்து இப்பொழுது மரத்துப்போன தனது இதயத்திற்கு மாற்று இதயம் வேண்டி கவிதையைத் தொடங்கிம் சி. சு. செ. அப்படிக் கிடைக்கும் இதயம் அரசியல்வாதி, மதவாதி, விஞ்ஞானி, குழந்தை, வாலிபன், நடுவயது, கிழடுகள் ஆகியோரின் இதயம் வேண்டாமென்று அதற்கானக் காரணங்களை அடுக்கி கவிதையின் முதற்பாகத்தை முடிக்கிறார். 

ஓ டாக்டர்! சமீபத்தில் இதயம் மாற்றினீர்களே!

வெற்றிகரமான ஆபிரேஷனாமே, சொல்கிறார்களே,

ரத்தத்தில் பாசிடிவ் நெகடிவ் கண்டுபிடிப்பீர்களே

மூல இதயத்துக்கும்

மாற்று இதயத்துக்கும்

என்ன வித்யாசம் அறிந்தீர்கள் நீங்கள்?

என்னும் வினாவோடு இரண்டாம் பாகத்தைத் தொடங்கி, அடுக்கடுக்கான வினாகளால் மனித இயல்பை விமர்சனம் செய்துவிட்டு,

ஓ டாக்டர்! மன்னிக்கவும்

மாற்று இதயம் வேண்டாம் எனக்கு

எவன் உணர்ச்சியும் தேவையில்லை எனக்கு

என் இதயம் பாடம் கற்றிருக்கு

அதுதன் வழியே போய் ஒடுங்கட்டும்

ஓ டாக்டர்! உங்களுக்குத் தொந்திரவு தந்தேனோ

மன்னிக்கவும்!

என்னும் பின்குறிப்போடு இதயம் மாறினாலும் மனமும் குணமும் மாறாத மனித இயல்பை, அதன் அவலத்தைச் சாடி முடிக்கிறார்.

ஆக, சி. சு. செ.வின் கவிதைகள் உருவம், உணர்த்தும்முறை ஆகிய இரண்டு கூறுகளில் ஊனப்பட்டு இருப்பினும் இன்றைய வாழ்க்கையின் மீது எழும் விமர்சனப்பாங்கான உள்ளடக்கத்தால் சிறப்புறுகின்றன. 

23.4.1990

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. உள்ளடக்கமும் உப்புச் சப்பு இல்லாதது தோழர்

    ReplyDelete

Post a Comment

Popular Posts