நலவாழ்வு

கிழக்கு வானம் வெளுத்ததும்
    கீற்று ஒளி பூத்ததும்
வழக்கம் போல எழுந்துநாம்
   வாயை, பல்லைத் துலக்குவோம் 

நாக்கில் படியும் அழுக்கையே
    நன்கு தேய்த்து போக்குவோம்
மூக்கில் சேரும் கழிவையும்
   முழுசாய்ச் சிந்தி நீக்குவோம்       

கண்ணின் ஓரம் சேர்ந்துள்ள
   கசடைத் துடைத்து அகற்றுவோம்
கன்னம் இரண்டும் பளிச்சிட
   கழுவி முகத்தை மினுக்குவோம்    

கையைக் காலைக் கழுவுவோம்
   காதின் அழுக்கை நீக்குவோம்
கைகால் விரலின் நகங்களை
   கவன மாக வெட்டுவோம்        

நாளும் குளிக்கப் பழகுவோம்
   நன்கு முடியை வாருவோம்
தூய ஆடை உடுத்திநம்
   தோற்றம் தன்னைப் போற்றுவோம் 

நஞ்சல்லவா?


                                                          ஆங்கில மூலம்: 
                                                   இராசகோபால் புத்தன்வீடு
                                                                 தலைவர் 
                                                      ஏக்தா பரிசத், புதுதில்லி


                                                        தமிழில்: அரிஅரவேலன்

அமிழ்தத்தின் பெயரால் நஞ்சினைக் குடிக்கிறோம் நாம்!  உண்மையிது. சுவைமிக்க இந்நஞ்சின் விளைவு மிகவும் கொடியது.  இதனை எப்படிக் குடிக்கத் தொடங்கினோம் என்பதனை நம்மில் எவரும் அறியோம்.  இது நமது குமுக அமைப்பிற்கு கணித்தற்கரிய தீங்கினை கொடுக்கிறது.   நம் குருதியோட்டத்தில் இந்நஞ்சு கலந்ததும் நம்முள் எழும் மாற்றங்களுக்கு எல்லையில்லை.  இப்பொழுதே இதன் செல்வாக்கினை நாம் கண்டறியாவிட்டால், நம் பொறுப்பின்மையின் விளைவுகளை எதிர்வரும் தலைமுறையினர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

சாதியமும் பிற மதங்களை மதிக்காமையும் இந்நஞ்சினை நாம் உண்டுவிட்டோம் என்பதற்கான அடையாளங்கள். இந்நஞ்சு இந்தியத் துணைக்கண்டத்தின் நீள அகலங்களில் வெகுவேகமாய் பரவிக்கொண்டிருக்கிறது.  இதன் கொடிய தாக்கத்திற்கு ஒவ்வொருவரும் உள்ளாகிறோம். நாம் இப்போக்கினை நிறுத்தியாக வேண்டும்.  இல்லையெனில் இத்துணைக்கண்டம் துண்டுதுண்டாகும். 

இக்கொடிய நஞ்சின் தாக்கத்திலிருந்து தப்பிக்க விரும்புவோரையும்கூட இந்நஞ்சு தன்னைக் குடிக்கும்படி கட்டாயப்படுத்துகிறது.  தற்பொழுதைய சூழல் இந்நஞ்சின் மீது ஒரு பயபக்தியை உருவாக்கியிருக்கிறது.  சாதியத்தையும் மதவாதத்தையும் அடிப்படையாகக்கொண்ட நம்முடைய அரசியல் எதிர்காலம் இருண்டதாக இருக்கிறது.  நமது தேர்தல் செயல்பாடுகள் அனைத்தும் சாதியத்தையும் சமயத்தையும் அடியாகக்கொண்ட அரசியலாய் இருக்கின்.  இதிலிருந்து ஏன் நாம் நாமாகவே விடுதலை பெறக்கூடாது?

கூண்டுக்கிளிகள் கூண்டின்மீது பூசப்பட்ட தங்கமுலாமைக் கண்டு மகிழ்வதுபோலவும் தங்கச்சங்கிலியால் தளைப்படுத்தப்பட்ட கைதி விலங்கின் மதிப்பினைக்கண்டு பெருமிதம் கொள்வதுபோலவும்; அடிமைகள் சிலவேளைகளில் தமது அடிமைத்தனத்தை பெருமிதத்துடன் தூய்த்து மகிழ்தல் போலவும் சாதியத்துவ, மதத்துவ நோயால் தாக்கப்பட்ட நாமும் அதிலிருந்து விடுதலைபெறுவதற்கு மாறாக அந்நிலைகண்டு மகிழ்கிறோம்; பெருமிதம் கொள்கிறோம். நாம் அந்நோயின் செல்வாக்கிலிருந்து நாமாகவே விடுபடவேண்டும்.  இல்லையெனில் நமது குமுதாய அமைப்பு முழுவதும் வீழும். சாதி, சமய சிக்கல்களை எழுப்புவதன் மூலம் வெறுப்பையும் எதிர்ப்பையுமே குமுதாயத்தில் பரப்பிக்கொண்டு இருக்கிறோம் என்பதனையும் இது மாந்தரினச் சுரண்டலையே நிலைபேறாக்கும் என்பதனையும் நாம் உணர வேண்டும். சாதியத்தின் பெயராலும் சமயத்தின் பெயராலும் தேர்தலில் போட்டியிடுவது மரபிற்கு முரணானதல்லவா? நாம் உறவுகளையும் நட்புகளையும் சாதி, சமயத்தின் அடிப்படையில் ஏற்படுத்திக்கொள்வதும் நல்லது கெட்டதை அவைகளே முடிவுசெய்வதும் இயற்கைக்கு மாறானவை அல்லவா?

சில ஆண்டுகளுக்கு முன்னர் சில செய்தித்தாள்களில் நான் கிறித்துவன் என்றும் மதம் மாற்றுவது எனது வேலையென்றும் எழுதப்பட்டிருந்தது.  இதனைக் கண்ணுற்ற எனது நண்பர்கள், நான் கிறித்துவன் என்றதை மறுக்கும்படியும் நான் ஓர் இந்துவே என்று அறிவிக்கும்படியும் அறிவுறுத்தினர்.  அனுமன் தனது நெஞ்சினைப் பிளந்துகாட்டியதைப்போல நானும் என் நெஞ்சினைப் பிளந்துகாட்டி நான் நூறு விழுக்காடும் இந்து என்பதனை மெய்ப்பிக்க வேண்டும் என்றனர்.  ஆனால், அவ்வறிவுரைகளை ஏற்றுக்கொள்ளாது அமைதி காத்தேன்.  நஞ்சிற்கு முறிவு நஞ்சன்று.  நான் கிறித்துவனோ, இந்துவோ அல்லன்.  நான் மனிதன்.  நல்ல மனிதனாக விளங்க விரும்புபவன்.  நான் இந்துவா, கிறித்துவனா, இசுலாமியனா என்பது ஒரு பொருட்டன்று.  நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன்; விரும்புகிறேன்.  என்னைப் பொருத்தவரையில் எல்லா மதங்களும் ஓரிலக்கை நோக்கிச் செல்கின்றன.  அவைகளின் பாதைகள் வேறானாலும் அடையுமிடம் ஒன்றுதான்.  நான் எம்மத்தைச் சார்ந்தவன் என்பது எனக்கு முதன்மையானதன்று; மாறாக நான் எத்தகையவன் என்பதுதான் முதன்மையானதுஎன அந்நண்பர்களிடம் கூறினேன்.

பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வாரியத் தலைவர் திருமிகு பிரமதாய் சர்மா, “இந்நாட்டில், உன்னுடைய வேலைகள் பற்றியோ; இந்நாட்டிற்கு நீ என்ன செய்துகொண்டு இருக்கிறாய் என்பதனைப் பற்றியோ கேட்க மாட்டார்கள்.  மிக எளிதாக உனது சாதியையும் சமயத்தையும் கேட்பார்கள்என ஒருமுறை என்னிடம் குறிப்பிட்டார். 

ஒருவர் நாட்டிற்கு என்ன செய்துகொண்டு இருக்கிறார் என்பதே இக்குமுகாயத்தில் அவரின் தகுதியையும் பதவியையும் முடிவு செய்யவேண்டும் என்றாலும், அவர் யார் என்பதே ஒருவரை மதிப்பிடும் அளவுகோலாக இருக்கிறது.  ஒருவரின் சமுதாய தகுநிலையை இந்நஞ்சே முடிவு செய்கிறது.  நஞ்சே அமிழ்தமாக இருக்கிற முட்டாள்களின் வானுலகத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.  இது பொய்த்தோற்றம் அல்லவா?  நமது சிந்தனையை மழுங்கடிக்கும் வெறியம் (Alcohol) அல்லவா?  நம் கண்களை மூடியிருக்கும் திரையை நாம் அகற்றியாக வேண்டும்.  பொன்விலங்கோ, இரும்பு விலங்கோ, அது உடைத்தெறியப்பட வேண்டும்.

சில அரசியல் கட்சியினரும் காந்தியவாணர்கள் எனச் சொல்லப்படும் சிலரும் தங்களது அதிகார நலத்தைக் காத்துக்கொள்ள சாதி சமயப்பற்றோடு திரிவது முரண்நகை ஆகும்.  மனிதக்கடவுள் என மதிப்படுபவர்கள் பேய்களைப் போல் செயல்படுவது இறைபழிப்பு அல்லவா?  கிறித்துவ, இந்து, சீக்கிய நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றைச் சார்ந்த ஒருவர் மதகூட்டுறவையும் நல்லெண்ணத்தையும் பரப்பும் வேலையில் பரபரப்போடு அலைவது இரக்கம் தரத்தக்கதாய் இருக்கிறது.  இறைநம்பிக்கையாளர்கள் சிலர் மதவெறியிலும் மதஅடிப்படைவாதத்திலும் திருப்தியடைகிறார்கள்.

காந்தியத்தைப் புறம்தள்ளி பொருள்முதல் கோட்பாட்டை தழுவிக்கொள்வதனால் நம் சமுதாயத்திலிருந்து ஏற்றத்தாழ்வுகள் அழிந்துவிடும் என நான் கருத்துரைக்க மாட்டேன்.  இதற்கு அப்பால், காந்தியவாணர்கள் என்றும் கடவுளின் அடியார்கள் என்றும் சொல்லப்படுவர்களின் அருளுரைகளை கவனிக்கும்படி எல்லாரையும் வேண்டுகிறேன்.  முறிமருந்தில்லாத நஞ்சினை இவர்கள் பரப்புகிறார்கள்.  இத்துணைக்கண்டம் மேலும் பிளவுபடாதிருக்க வேண்டுமானால், பிரிவினைப்போக்கிற்கு மதிப்புயர்வளிக்கும் இந்நஞ்சின் பரவலை நாம் தடுத்தாக வேண்டும்.  வெறுப்பிற்கும் பொறையின்மைக்கும் மாற்றாக அன்பிற்கும் கூட்டுறவிற்கும் நாம் இடம் கொடுத்தாக வேண்டும்.  காந்தியைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் பேசும் நமது செயல்கள் காந்தியமாகவும் கடவுளியமாகவும் இல்லாதிருப்பது அபத்தமல்லவா?  அகவொழுங்கற்ற நமது நடத்தையை எக்கணத்தில் உணர்கிறோமோ, அக்கணத்திலேயே இந்நஞ்சின் நாட்டியம் குன்றிவிடும்.

நமது குமுகாயத்தையே ஆட்டிப்படைக்கும் அளவிற்கு வன்முறை வளர்ந்திருக்கிறது.  நாம் நக்சலியர்களுக்கு அஞ்சுகிறோம், அவர்களின் வன்முறையை காவல்துறை அல்லது பட்டாளத்தின் ஆகப்பெரிய வன்முறையால்தான் கட்டுப்படுத்த முடியும் என்று தவறாக கட்டமைக்கப்பட்ட கருத்தினை ஆழமாக நம்புகிறோம்.  வன்முறையற்ற அமைதிப் பேச்சுகளைத் துவங்குவதன் வழியே வன்முறையை கட்டுப்படுத்த முடியும்.  சமுதாயத்தில் அமைதி மேலோங்கியிருக்க வேண்டும் என விழைகிறோம், ஆனால் விழைவு மட்டுமே எவ்விளைவையும் ஏற்படுத்திவிடாது. விழைவுகள் குதிரைகளானால் பிச்சைக்காரர்கள் அதன்மேல் ஏறிச்செல்வர் என்பது சொலவடை.  வன்முறையை நிறுத்த, அனைவரும் அறியத்தக்க சில செயல்களையேனும் நாம் செய்தல்வேண்டும்.  அங்ஙனம் செயல்படுவதற்கு முன்னர் வன்முறை என்பது என்ன, அதன் வடிவங்கள் எவையெவை என்பதனை அறிதல் வேண்டும்.  அடுத்த வீட்டில் ஒருவர் பட்டினியால் சாகக்கிடப்பதும் அது நம்மை பாதிக்காதிருப்பதும் அவரை பட்டினியால் சாகவிடுவதும் வன்முறைதான்.  பிறரைச் சுரண்டி செல்வங்களைக் குவிப்பதும் வன்முறைதான்.  சில மாந்தரை கொத்தடிமைகளாக வைத்திருப்பதும் வன்முறைதான்.  ஏழை ஒருவரை அச்சுறுத்தி அடக்கி ஆள்வதும் வன்முறைதான்.  இத்தகு வன்முறைக்கு பங்களிக்க அனுமதித்தால், நாம் எத்தகு நியாயத்தையும் செய்யவில்லை என்பதே உண்மை.  நியாயம் என்பது வன்முறையின் பயன்பாட்டை தொடரவிடாது தடுப்பதில்தான் இருக்கிறது. 

மேம்பாட்டிற்காக நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஏழை ஒருவர் விலை கொடுக்கிறார் என்பதே உண்மை.  எடுத்துக்காட்டாக, வேளாண்மை மேம்பாட்டிற்காக கானக அழிப்பு நிகழும்பொழுதும் சாலைகள் இடப்படும்பொழுதும் தொழிற்கூடங்கள் அமைப்படும்பொழுதும் பழங்குடியினர் விலைகொடுக்க வேண்டியிருக்கிறது.  அவர்கள் இத்தகு மேம்பாட்டினை எதிர்க்காமல், இதற்கு சாட்சிகளாக சாலையோரத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.  நலக்கேடாக, உண்மையான மேம்பாடு எது என்பதை இதுவரை நாம் அறியவில்லை.  1984 ஆம் ஆண்டு போபால் நகரில் ஒரே இரவில் ஈராயிரம் மக்கள் இறந்தபொழுதுதான் மேம்பாட்டிற்கு இருண்ட பக்கமும் இருக்கிறது என்பதனை உணர்ந்தோம்.  ந்த இருண்டபக்கம் நம்மை சுடுகாட்டிற்கே இட்டுச் செல்லும் என்பதனை அறிந்தோம். 

உண்மையான பொருளில் நாம் மதநம்பிக்கை உடையவர்களானால், நாம் ஏழைகளை வணங்க வேண்டும்.  நமது மேம்பாடு அவர்களது தியாகத்தை வேண்டி நிற்கிறது.  ஏழை மக்கள் எழுந்து நின்று தமது பிறப்புரிமைக்காக, மேம்பாடு எனச் சொல்லப்படுபவைக்கு எதிராக, ஓங்கிக் குரல் கொடுப்பதில்லை.  அங்ஙனம் குரல் கொடுத்தால், நாம் எழுந்து நின்று அவர்கள் குரல் கொடுப்பதே குற்றம் என்பதுபோல ஆவேசமாக அவர்களை எதிர்க்கிறோம்.  ஏன் நாம் அவர்களை எதிர்க்கிறோம்?  அவர்களுக்கு தமது நேர்மையான கோரிக்கைகளை நம் முன் எடுத்து வைப்பதற்கு உரிமையில்லையா?  பணக்காரர்கள் கையிலும் வலிமையுள்ளவர்கள் கையிலும் ஏழைகளை வாடவிடுதல் எங்ஙனம் நாட்டுப்பற்றாகும்?

இப்போக்கு நமது சிந்தனையில் எங்கோ தவறு இருக்கிறது என்பதையே  காட்டுகிறது. உண்மையான நாட்டுப்பற்றாளர் யார், அதற்கு எதிரானவர் யார் என்பதனை நாம் முடிவுசெய்ய முடியவில்லை.  சில கற்பித ஆதாயத்திற்காக பேரளவு இழப்பிற்கு நாம் ஆயத்தமாய் இருப்பது பொருத்தமாகவாக இருக்கிறது?  நமது நலத்தினை பாதுகாக்க முனையும்பொழுது அடுத்தவீட்டில் இருப்பவர் நலனை எண்ணிப்பார்ப்பதும் நாட்டுப்பற்றுதான்.  எல்லையற்ற, ஆனால் மிக விரிந்த உருவெளியை உள்ளடக்கிய நாட்டு நலன் என்பது ஒரு தனியாளின் நலனைவிட மிக உயரத்திலேயே எப்பொழுதும் இருக்கிறது.    உண்மையான நாட்டுப்பற்று என்பது ஒருவர் தன் சாதி, சமயத்திற்கு அப்பால் தன்னாட்டு மக்கள் மீதும் தன்னாட்டின் மீதும் கொண்டிருக்கும் எல்லையற்ற அன்பே ஆகும்.  நாம் இவ்வுண்மையை உணர்ந்து புரிந்துகொள்ள வேண்டும்.  அப்பொழுதுதான் உண்மையான நாட்டுப்பற்று எது என்பதனை அறிய முடியும். 

அகம் காட்டும் முகம்

 
                                                               எங்கள் வீட்டுக் கண்ணாடி
                                                                        எதிரே உள்ள எதனையும்
                                                              எந்த மாற்றம் இன்றியே
                                                                       எடுத்துக் காட்டல் போலவே

                                                             என்றன் அழகு முகத்திலே
                                                                      என்றன் உள்ளம் உணர்கின்ற
                                                             எல்லா உணர்வும் தெரியுமே
                                                                       இதனை அறிவேன் நானுமே

வாழ்ந்து தழை!



புள்ளல்லவே? - நீ
புழுவல்லவே? - பின்
புல்லரைக் கண்டேன் அஞ்சுகிறாய்?
கல்லல்லவே? - நீ
கசடல்லவே? - பின்
கயவரைக் கண்டேன் இஞ்சுகிறாய்?
மண்ணல்லவே? - நீ
மரமல்லவே? - பின்
மடயரை ஏன்நீ கெஞ்சுகிறாய்?
விழலல்லவே? - நீ
வெற்றல்லவே? - பின்
வீணரைக் கண்டேன் துஞ்சுகிறாய்?

கண்ணைத் திற! - கீழ்
விண்ணை அறி! - இரு
கைகளை ஏனினும் கட்டுகிறாய்?
கூட்டை உடை! - சங்கை
ஊதி எழு! - சேவல்
கூவிய பின்னுமேன் தூங்குகிறாய்?
அச்சம் அறு! - தலை
வணங்க மறு! - பழம்
ஆண்டையைக் கண்டேன் மருளுகிறாய்?
அழுகை விடு! - தாழ்
வகத்தை ஒழி! - விதிச்
சகதியில் ஏனினும் பிறழுகிறாய்?

இலக்கை அமை! - அதை
எட்ட முனை! - அதில்
இடைவரும் தடைகளைத் தாண்டவிழை!
தொடர்ந்து முயல்! - தோன்றும்
துயரம் களை! - உன்றன்
தோள்வலி நன்கு துலங்கஉழை!
விளையும் பயன்! - பகிர்வில்
வேண்டும் சமன்! - அதை
வென்றிடத் தோழமை மறுத்தல்பிழை!
ஒப்பை அழை! - மனம்
ஒன்றி உழை! - இந்த
உலகம் பொதுவென வாழ்ந்துதழை!

காக்கைச் சிறகினிலே - சனவரி 2013 - பக்.32-33

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...