குன்றும் நீர்வளமும் பெருகும் நீர்த்தேவையும்

ஆழ்குழாய்க் கிணற்றுக் குழிக்குள் தவறிவிழுந்து மாண்டுபோகும் குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் அண்மைக்காலத்தில் அதிகரித்து இருக்கிறது. இச்சமூகம் குழந்தைகளின் பாதுகாப்பு உரிமையை மதிக்கவில்லை; அந்நிலத்தின் உரிமையாளருக்கும் ஆழ்குழாயைத் தோண்டும் ஒப்பந்ததாரருக்கும் பொறுப்பில்லை; குழிக்குள் விழுந்துவிட்ட குழந்தையை உடனடியாக மீட்கத் தேவையான கருவிகள் தீயணைப்புத் துறையினரிடம் இல்லை ஆகியன போன்றவை இந்நிகழ்விற்கான காரணிகள் என்னும் பட்டியலில் ஓரளவு உண்மை இருக்கிறது; ஆனால் இப்பட்டியலே முழு உண்மை அன்று. அந்த நிலத்தின் உரிமையாளர் ஆழ்குழாய் கிணற்றை அமைக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்னும் வினாவிற்குள்தான் இந்நிகழ்வின் முழுக்காரணமும் மறைந்து இருக்கிறது.



ஒரு தலைமுறைக் காலத்திற்கு முன்னர் பருவ மழை பொய்க்கிற பொழுதில் மட்டுமே தமிழகம் வறட்சியால் வாடியிருக்கிறது; ஆனால் கடந்த முப்பதாண்டுகளில் நீர்ப்பற்றாக்குறை ஆண்டிற்கு ஆண்டு கூடிக்கொண்டே போகிறது. ஒவ்வொரு பத்தாண்டிலும் மழைப்பொழிவு குறைந்துகொண்டே வருகிறது. இதன் விளைவாக நிலத்தடி நீரின் அளவு குறைந்துகொண்டே போகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்னர் 40 அடி ஆழம் உள்ள கிணற்றிலிருந்து கமலையைக்கொண்டு நீரை இறைந்த உழவர், இன்று 300 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய்க் கிணறைத் தோண்டி மின்னேக்கியைப் (Electric pump) பயன்படுத்தி நீரை இறைக்கிறார். எனினும் அவரால் வேளாண்மைக்குத் தேவையான அளவிற்கு நீரைப் பெற முடியவில்லை. எனவே, வேறோர் இடத்தில் ஆழ்க்குழாயைத் தோண்டுகிறார்; அங்கும் போதுமான நிலத்தடி நீர் கிடைப்பதில்லை. அவர் அந்த ஆழ்குழாயை அப்படியே கைவிட்டுவிடுகிறார். அவ்வாறு கைவிடப்பட்ட குழிக்கு அருகில், தன் மூதாதைகள் ஓடி விளையாடிய ஊர்ப்பொது இடங்கள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டதால் தனக்கான விளையாட்டிடத்தை இழந்த, குழந்தை விளையாட வந்து தவறி அக்குழாய்க்குள் விழுந்துவிடுகிறது. அதாவது கடந்த 40ஆண்டுகளில் படிப்படியாக குன்றிவரும் நீர்வளமும் பெருகிவரும் நீர்த்தேவையும் உழவரின் பிழைப்புப்பாட்டிற்கான வளத்தைப்பெறும் உரிமையையும் (Right to access livelihood resources) தட்டிப்பறிக்கப்பட்டதன் விளைவாக அவர்தம் குழந்தைகளின் பாதுகாக்கப்படும் உரிமையையும் (Right to Protection) காவுவாங்குகின்றன.

நீர்வளம் குன்றியது ஏன்?

சோவியத்து நாடு உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் மேம்பாட்டு வாய்பாட்டை பிசிறுதட்டாமல் விடுதலை பெற்ற இந்தியா 1990 ஆம் ஆண்டு வரை பின்பற்றியது. அவ்வகையில் ஏறத்தாழ இந்திய நதிகளின் அனைத்தின் குறுக்கே பேரணைகள் கட்டப்பட்டன. அணைக்கு மேலே மலையின் உச்சியில் இருக்கும் புல்வெளிகள் குளம்பி, தேயிலை ஆகியன போன்ற பணப்பயிர்களுக்காக அழிக்கப்பட்டன. கானகங்கள் மரங்களுக்காக அழிக்கப்பட்டன. அதன் விளைவாக மலையில் இருக்கும் நீர்ப்பிடிப்புப் பகுதியின் அளவு குறைந்தது. இதனால் மழைப்பொழிவின் அளவு தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. குறைந்தளவாக வழிந்தோடும் நீரும் பேரணையில் தேங்கி நின்றுவிட்டது. ஆறுகளில் நீரோட்டம் குன்றியது; அணையில் இருந்து தொடங்கி நதியானது கடலுக்குற் சென்று முடிவடையும் இடம் வரை உள்ள பகுதியின் சூழலமைவு சிதைந்தது. ஆற்றில் வழிந்தோடும் நீரைச் சேமித்து வைப்பதற்காக வெட்டப்பட்ட குளம், குட்டை, ஊருணி, கண்மாய், ஏரி ஆகியன போன்ற நீர்நிலைகள் வறண்டன. பின்னாளில் அந்நீர்நிலைகள் மூடப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டன. அதன் விளைவாக நிலத்தடி நீரின் அளவு படிப்படியாகக் குன்றத் தொடங்கியது. எனவே வேளாண்மையைச் சார்ந்திருந்த மக்கள் வாழ்க்கைப்பாட்டை இழந்து ஊரகப் பகுதியில் இருந்து நகரத்தை நோக்கி நகர்ந்தனர். மறுபுறம் மேம்பாடு என்ற பெயரால் நகரங்கள் வீங்கத் தொடங்கின. அந்நகரங்களுக்குத் தேவையான நீர், கிராமத்து நீர்நிலைகளில் இருந்து சுரண்டப்படுகின்றது. இதனால் எங்கெங்கும் நீர் வளம் குன்றியது.



நீர்த்தேவை பெருகியது ஏன்?

அமெரிக்க ஐக்கிய நாட்டின் பொய்த்துப்போன “பசுமைப்புரட்சி” 1960 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. வேதி உப்புகளும் பூச்சிக்கொல்லிகளும் வயல்வெளிகளில் கொட்டப்பட்டன. இதனால் இயற்கை உரங்களும் உயிரிகளும் மறைந்தன. நிலத்தின் ஈரத்தன்மை உலர்ந்து வறண்டது. வேளாண்மைக்குப் பெருமளவு நீர்த் தேவைப்பட்டது. ஆனால் மறுபக்கம் நீர்நிலைகள் கட்டிடங்களால் நிரப்பப்பட்டன. நீர்த் தேவையும் பற்றாக்குறையும் பேருருக்கொண்டு எழுந்துநின்கின்றன. இந்நிலையில் 1990 ஆம் ஆண்டுகளில் தொடங்கி வைக்கப்பட்ட உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ஆகியவற்றில் நீர் வணிகப் பொருளாக மாறிவிட்டது. இதன்விளைவாக பன்னாட்டுக் கும்பணிகள் நிலத்தடி நீரை பெருமளவில் உறிஞ்சுகின்றன. இதனால் சிறு நிலவுடைமையாளர்கள், பொதுமக்கள் தம்முடைய குறைந்தளவு நீர்த்தேவைக்காக நவீனத் தொழில்நுட்பம் என்னும் பெயரால் அறிமுகம் செய்யப்பட்ட ஆழ்குழாய்க் கிணறுகளை கணக்கு வழக்கு இன்றி அமைத்து பல நூறு அடிகள் வரை போட்டிபோட்டுக்கொண்டு நிலத்தைத் துளைக்கின்றனர். இதனால் நிலத்தடி நீர் நாள்தோறும் கீழ்நோக்கி இறங்கிக்கொண்டே இருக்கிறது. நீரற்ற ஆழ்குழாய்க் கிணறுகள் தமது வாயைத் திறந்து குழந்தைகளைக் காவுவாங்கக் காத்துக்கொண்டு இருக்கின்றன.

என்னதான் தீர்வு?

எனவே, அழிந்துகொண்டிருக்கும் நீர்நிலைகளை மறுசீரமைப்பதும் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும் பொதுநிலங்களை மீட்டெடுப்பதும் இந்த அவலநிலையை மாற்றுவதற்கான முதல் தேவையாக இருக்கின்றன. அழிக்கப்பட்ட கானகங்களை மீண்டும் உருவாக்குவதும் பணப்பயிர் தோட்டங்களின் அளவு விரிவாக்காது இருப்பதும் மலைகள் மீது நிகழும் குடியேற்றங்களை முற்றிலுமாக தடுத்து நிறுத்துவதும் இரண்டாவது தேவையாக இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் முறையாகச் செயற்படுத்த மக்களின் பிழைப்புப்பாட்டு வளங்களான நீர், நிலம், காடு, காற்று ஆகியவற்றின் மீது மக்களின் கட்டுப்பாட்டு உரிமையை உறுதிசெய்வதும் உடனடித் தேவையாக இருக்கிறது. இவற்றை அரசு செய்யும் எனக் காத்திராமல், மக்களே தம்முடையை கூட்டியக்கத்தின் வழியாக அறவழியில் முன்னெடுக்க வேண்டிய நெருக்கடி நேர்ந்திருக்கிறது. அந்நெருக்கடியை எதிர்கொள்வோமா?

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...