நூலக அந்தணர் வே.தில்லைநாயகம்

 


யார் ?

“‘ஊருக்கு ஒரு நூலகம்; ஆளுக்கு ஒரு நூல் - அதுவும் நான்கு பேர் - தாய், தந்தை, மகள், மகன் ஆகிய நான்குபேர் - நடுவீட்டில் நன்றாய் அமர்ந்து நாணம் இல்லாமல் படிக்கக் கூடிய நூல்; அயராது உழைக்கும் நூலகர்; இருந்துவிட்டால் அடைய முடியாதது உண்டா?’ என இலட்சியத்தோடு பாடுபடுவோமானால் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?” என்னும் எய்யத்தோடு (Aim) தமிழ்நாட்டின் பொதுநூலகத்துறைக்கு உள்ளும் புறமும் 1936 மே 20ஆம் நாள் முதல் 2013 மார்ச் 11ஆம் நாள் அயராது உழைத்தார் ஒருவர். நூலகத்துறையின் பன்முக ஆளுமையாகத் திகழ்ந்த அவர் தனது நெடிய வாழ்வில் ஏறத்தாழ 77 ஆண்டுகளை நூல், நூலகம், நூலியல், நூலகவியல் ஆகியவற்றைப்பற்றிய சிந்தனைக்கே செலவிட்டார் வேதி என்றழைக்கப்பட்ட வே.தில்லைநாயகம் (10 சூன் 1925 – 11 மார்ச் 2013) என்பவர்தான் அவர்?

 

நூல் ஆர்வலர்

1933ஆம் ஆண்டில் சாலமன் என்னும் தொடக்கப்பள்ளி ஆசிரியரால் நூல், நூலின் பயன் ஆகியனபற்றி அறிந்தார் வேதி. 1934ஆம் ஆண்டில் சுப்பிரமணியம் என்பவர் ஆறுமுக நாவலர் பதிப்பித்த திருக்குறள் நூலை வேதிக்குப் பரிசளித்தார். வற்றின் விளைவாக நூல்களை நாடிச்சென்று, தேடிப்பிடித்து படிக்கும் பழக்கும் நூல்களைச் சேகரிக்கும் வழக்கமும் தொடங்கின.  வேதி நூல் ஆர்வலர் ஆனார்.

 

நூலக ஆர்வலர்

சென்னை பல்கலைக்கழக முதல் நூலகரும் இந்திய நூலகத்தந்தை என அழைக்கப்படுவருமான எ சீ.இரா. அரங்கநாதன், ஊர்தோறும் பொதுநூலகங்கள் உருவாக நூலகச்சட்டம் தேவையென்று கருதினார். அக்கருத்தை சென்னை மாகாணமெங்கும் பரப்பினார். தன் ஒரு கூறாக, மதுரை கல்லூரி கணிதப் பேராசிரியரும் சென்னை நூலகச் சங்கத்தின் உறுப்பினருமான சிறீகண்டன் என்பவர் 1936ஆம் ஆண்டு மே திங்கள் 20ஆம் நாள் சின்னமனூர் வந்தார்.  ஊராட்சி மன்றக் கட்டிடத்தில் நூலகச் சட்டத்தின் தேவைப்பற்றி எடுத்துரைத்தார். அக்கூட்டத்திற்கு தன் தந்தையோடு சென்று அச்சொற்பொழிவைச் செவிமடுத்தார் வேதி.  நூல் ஆர்வலர் நூலக ஆர்வரலாகவும் மாறினார்.

 

நூலகத்தொண்டர்

1939ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அன்றைய மதுரை மாவட்டக் கழகம் (Madurai District Board) நூல் படிக்கும் பழக்கத்தை மக்களிடம் பரப்பும் நோக்கில் ஞானரதம் என்னும் நகரும் நூலகம் ஒன்றை மூடுந்து (Van) ஒன்றில் தொடங்கியது. அந்நகரும் நூலகம் சின்னமனூருக்கு வரும்பொழுதெல்லாம் - 1939க்கும் 1943க்கும் இடைப்பட்ட காலத்தில் - சின்னமனூர் நூலகப் பொறுப்பாளர்களான தன் ஆசிரியர்கள் அடைக்கலம், முத்துமணி ஆகியோருக்கு நூல் வழங்கும் பணியில் வேதி நூலகத்தொண்டராக உதவிபுரிந்தார்.

 

நூலகவுணர்வாளர்

சின்னமனூரில் தொடக்கக் கல்வியையும் உத்தமபாளையத்தில் உயர்நிலைக் கல்வியையும் பெற்ற வேதி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில்  1944 – 48 ஆம் ஆண்டுகளில் கல்லூரிக்கல்வி பெற்றார். அக்கல்லூரியின் அப்போதைய நூலகர் ஏ. சி. சாலமன்  என்பவர் சீ.இரா. அரங்கநாதன் எழுதிய நூலகவியலின் ஐந்து சட்டங்கள் (Five Laws of Library Science) என்ற நூலை வேதிக்கு வழங்கினார். அதனைப் படித்த வேதி நூலகவுணர்வாளர் ஆனார்.

 

நூலகவியல் மாணவர்

வேதி கல்லூரிக்கல்வியை முடித்துப் பட்டம் பெற்றதும் சென்னை மாகாணப் பணியாளர் தேர்வாணையத்தின் வழியாக  மதுராந்தகக்தில் பள்ளித் துணை ஆய்வாளர் அலுவலகத்தில் இளநிலை எழுத்தராக 1949 மார்ச்சு 11ஆம் நாள் வேலைக்குச் சேர்ந்தார்.  அங்கிருந்த பொழுது, 1948ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சென்னை மாகாணப் பொதுநூலகச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் நூலக ஆணைக்குழுவில் நூலகராக விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்னும் விளம்பரத்தைக் கண்டார்; விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டது. 1949 சூலை 17ஆம் நாள் எழுத்தர் பணியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார்; புதிய ஆணையில் கூறியிருந்தபடி, 1949 சூலை 18ஆம் நாள் பொதுக்கல்வி இயக்குநரக நூலகராகப் பணியேற்று, சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் நூலவியலில் பட்டயக்கல்வியைப் பெறும் மாணவரானார் வேதி.  1949-50ஆம் கல்வியாண்டின் நிறைவில் அப்பட்டயத்தைப் பெற்றார்.   1961-62ஆம் கல்வியாண்டில், தில்லி பல்கலைக்கழகத்தில் பயின்று நூலகவியல் முதுவர் பட்டம் பெற்றார். ஆனால், தனது நூலகவியிற்கல்வி வகுப்பறையோடு முடிந்துவிட்டதாக அவர் கருதவில்லை. அத்துறையில் நாளும் ஏற்பட்டு வந்த மாற்றங்களை, பூத்த புதிய சிந்தனைகளை தனது இறுதிநாள் வரைத் தொடர்ந்து பயின்று வந்தார்.

 

நூலகர்

வேதி நூலகவியற்பட்டயம் பெற்றுதும் பொதுநூலக இயக்குநரக நூலகர் பணிக்குத் திரும்பினார். அங்கிருந்து அயலிடப்பணியில், சென்னை சிந்தாரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் அப்போதைய அப்பள்ளித் தாளாளர்  தெ.பொ.மீனாட்சிசுந்தரத்தின் வேண்டுகோளின்படி  1950 மே 1ஆம் நாள் முதல் 1951 மார்ச் 31ஆம் நாள் வரை சிறப்பு நூலகராகப் பணியமர்த்தப்பட்டார்.  பல்கலைக் கழகத்திற் பயின்ற நுட்பங்களை பள்ளி நூலகத்தில் செயற்படுத்தி அந்நூலகத்தைச் செம்மைப்படுத்தினார்.  அப்பணி முடிந்ததும் 1951 ஏப்ரல் 1ஆம் நாள் மீண்டும் இயக்குநரகத்திற்குத் திரும்பினார். 

 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அப்பொழுது துணைவேந்தராக இருந்த தி.மு. நாராயணசாமி, அப்பல்கலைக் கழக நூலகத்தின் நூலிருப்பைச் சரிபார்த்து, குறிப்புதவிப்பகுதி மேம்படுத்தி, நூலகத்தைச் செம்மைப்படுத்த விழைந்தார். எனவே, அப்பல்கலைக் கழகத்தின் துணைநூலகராக வேதி 1955 சூலை 7ஆம் நாள் முதல் 1957 சூலை 21 ஆம் நாள் வரை அயலிடப்பணியில் நியமிக்கப்பட்டார். அந்நூலகத்தைச் செம்மைப்படுத்திவிட்டு மீண்டும் பொதுகல்வி இயக்குநரகத்திற்குத் திரும்பினார்.

 

1962 ஆம் ஆண்டில் வேதி நூலகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றதும் பொதுநூலக இயக்குநரகத்திலிருந்து சென்னை கன்னிமாரா (மாநில மைய) பொதுநூலகத்திற்கு மாற்றப்பட்டார்.  1962 திசம்பர் 12ஆம் நாள் முதல் 1972 சூலை 31ஆம் நாள் வரை அங்கு நூலகராப் பணியாற்றினார்.  நூல்தேடி வருகின்ற வாசகர்களுக்கு தொடர்புடைய நூல்களை, செய்திகளைத் திரட்டித்தந்தார்; பிற பணியாளர்களையும் அங்ஙனமே இயங்கச் செய்தார். அப்பணி பற்றி கோவி.மணிசேகரன், இராசம் கிருட்டிணன் ஆகியோரைப் போன்ற புகழ்பூத்த எழுத்தாளர்கள் தமது நினைவுகளைப் பதிவுசெய்திருக்கின்றனர் பின்னாளில்.  அவ்வகையில் வேதி முன்மாதிரியான நூலகராகத் திகழ்ந்தார்.

 

கல்விநூலகங்கள்,  பொதுநூலகங்கள், ஒருதுறைசார் சிறப்புநூலங்கள் என நூலகங்களை மூன்றாகப் பகுப்பர் நூலகவியலாளர்கள். இந்நூலகங்கள் ஒவ்வொன்றும் தமக்கே உரிய வேறுபட்ட தனித்தன்மைகள் கொண்டவை. இந்த மூன்று வகை நூலகங்களிலும் பணியாற்றிப் பட்டறிவுபெற்ற நூலகர் வேதியைத் தவிர வேறு யாரும் இல்லை னலாம்.

 

நூலக ஆட்சியர்

1950 ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை கன்னிமாரா நூலகத்திற்கு நூலகவியலில் அடிப்படைப் பயிற்சியே பெறாத அருங்காட்சியகப் பணியாளர்கள் சிலர் நூலகர்களாக இருந்தனர். அதனால் அந்நூலகம் தேங்கிய குட்டையாக இருந்தது.    வேதி நூலகரானதும் அங்கு விரிக்கப்பட்டிருந்த தரைவிரிப்பை நீங்கியது தொடங்கி புதிய கூடுதல் கட்டிடத்திற்கான கருத்துருகளை உருவாக்கு வரை பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு தேக்கநிலையைப் போக்கி, நூலகத்திற்குப் புத்துயிர் ஊட்டினார். அந்நூலகத்தின் வரலாற்றைகன்னிமாரா பொதுநூலகம் 1890-1985’ என்னும் தலைப்பில் ஆய்வுசெய்த வரலாற்றுப் பேராசிரியர் வர்கீசு, அந்நூலகத்தில் பெருமாற்றங்கள் நிகழ்ந்த காலம் வேதி நூலகராகப் பணியாற்றிய காலமே என்கிறார்.  ஆக, வேதி சிறந்த நூலகராக மட்டுமன்றி, தேர்ந்த நூலக ஆட்சியராகவும் விளங்கினார்.

 

நூற்றொகையாளர்

சென்னை மாகாண நூலகச் சட்டத்தின்படி சென்னை கன்னிமாரா நூலகத்திற்கு பதிவிற்காக வரும் நூல்களைப்பற்றிய செய்திகளை சென்னை மாகாண நூற்றொகையைத் தொகுக்க வேண்டிய பொறுப்பு கன்னிமாரா நூலகருடையது. ஆனால், அதனை அப்பணியைச் செய்யும்படி பொதுக்கல்வி இயக்குநரக நூலகரான வேதி தொகுக்க வேண்டுமென அன்றைய பொதுநூலக இயக்குநர் ஆணையிட்டார். அதன்படி, 1951 ஏப்ரல் 1ஆம் நாள் முதல் 1955 சூன் 30ஆம் நாள் வரை வெளிவந்த நூல்களின் தொகையை ஆண்டுவாரியாக வேதி தொகுத்தார். அவற்றுள் 1951 ஆம் ஆண்டின் நூற்றொகை முழுமையாகவும் 1954ஆம் ஆண்டின் நூற்றொகையில் ஒரு பகுதியும் பின்னாளில் அச்சுவாகனம் ஏறின; மற்றவை கையெழுத்துப்படிகளாக அரசின் சிவப்பு நாடாவால் இறுக்கப்பட்டுவிட்டன.  1955 சூலையில் வேதி அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்குச் சென்றதால் அப்பணியை ஆர்வத்தோடு தொடருவார் யாருமின்றி முடங்கிப்போனது.  ஆனால், நூற்றொகையியலின் நுட்பங்களைக் கற்றார்; நூற்றொகையாளர் ஆனார். 

 

1952ஆம் ஆண்டில் பாரிசு நகரில் நடைபெற்ற யுனசுகோவின் நூற்றொகைக்கான பன்னாட்டு கலந்தாலோசனைக் குழுவானது ஆசிய நூற்றொகையைத் தொகுக்கும் பணியை சீ.இரா.அரங்கநாதனிடம் ஒப்படைத்தது.  அவர் சார்ந்திருந்த இந்திய நூலகச் சங்கம் நூற்றொகைக்கான தமிழ்ப்பகுதியை உருவாக்கும் பொறுப்பை சென்னை நூலகச் சங்கத்தின் துணைச்செயலாளர் சிவராமன் தலைமையில் மூவரைக்கொண்ட குழுவை அமைத்தது. அந்த மூவருள் ஒருவராக வேதி இடம்பெற்றார் அவர் தொகுத்திருந்த 1951ஆம் ஆண்டைய நூற்றொகைப் பணியால்.

 

காலம் உருண்டது. 1962ஆம் ஆண்டில் கன்னிமாரா நூலகத்திற்கு மாற்றப்பட்ட வேதி குழந்தைகள் நூற்றொகையையும் தமிழ் நூற்றொகையையும் தொகுத்து வெளியிட்டார்.  1966ஆம் ஆண்டில் இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் கல்வித்துறையால் அமைக்கப்பட்ட தேசிய நூற்றொகை மீளாய்வுக்குழு தமிழில் வெளிவந்த குழந்தைகள் நூற்றொகையையும் தமிழ் நூற்றொகையையும் அத்துறையின் முன்னோடி முயற்சிகள் எனப் பாராட்டியது. வேதி நூற்றொகையியலின் முன்னோடி ஆனார்.

 

ஆண்டுதோறும் வெளிவந்த நூற்றொகைக்கு அப்பால் 1969ஆம் ஆண்டில் காந்தி நூற்றாண்டில் காந்தியானா’, 1977ஆம் ஆண்டில் சரத்சந்திரரின் நூற்றாண்டின் பொழுது சரத்சந்திரயானா’,  நேருயானாஎன்னும் சிறப்பு நூற்றொகைகளையும் உருவாக்கினார்.

 

மேலும் திருக்குறள், தொல்காப்பியம் பற்றிய நூற்றொகைகளைத் தொகுக்க க..திருநாவுகரசுக்கு உதவினார். நெ.து.சுந்தரவடிவேலு, . சஞ்சீவி ஆகியோரைப் போன்றோரின் நூற்றொகைகளை பிறர் தொகுக்க துணைநின்றார்.

 

நூற்பகுக்குநர்

வெளிவரும் நூல்களின் உள்ளடக்கத்திலுள்ள ஆளுமை, பொருண்மை, ஆற்றல், இடம், காலம் ஆகியவற்றை அறிந்து பகுப்பெண் வழங்குவது நூலகவியலின் அடிப்படை தொழில்நுட்பகங்களில் தலையாயது ஆகும்.  பதின்ம  பகுப்புமுறை, கோலன் பகுப்புமுறை ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணற்ற நூல்களைப் பகுத்து, அவற்றின் அடிப்படையில் நூற்றொகைகளைத் தொகுத்தும் தொகுப்பித்தும் வெளியிட்டு நூற்பகுக்குநர் ஆனார்.   

 

நூலகப்பாவலர்

உத்தமபாளையம் பள்ளியில் சங்குப்புலவரிடமும் அமெரிக்கன் கல்லூரியில் கார்மேகனாரிடமும் தமிழ் பயின்ற வேதி நூல், நூலகம், நூலகர் ஆகியவற்றைக் கருப்பொருள்களாகக் கொண்டு பாடல்கள் பல புனைந்தார். அவ்வகையில் அவர் எழுதிய முதற்பாடல்அறிவகம்என்னும் தலைப்பில் 1952 திசம்பர் ஆனந்தபோதினி இதழில் வெளிவந்தது. பிற பாடல்கள் குயில், முல்லைச்சரம், தமிழ்ப்பணி, நூலக மலர்கள் எனப் பலவற்றில் வெளிவந்தன. அவற்றுள் பல 1981ஆம் ஆண்டில் மதுரை உலகத்தமிழ் மாநாட்டுப் பொருட்காட்சியில் அமைந்திருந்த நூலக அரங்கில் இசைப்பாடல்களாக ஒலித்தன; சில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டன.  வேதி நூலகப்பாவலராக அறியப்பட்டார்.

 

நூலக இலக்கியர்

மாணவப்பருவத்திலேயே எழுத்தார்வம் கொண்டிருந்த வேதி பல்வேறு பொருள்களில் கட்டுரைகளும் கதைகளும் எழுதினார். அவற்றுள் நூலகவியல் சார்ந்து எழுதியவையே பெருந்தொகையாகும்.  1952ஆம் ஆண்டில் ஆனந்தபோதினியில் வெளிவந்தநூலகம் தேவைஎன்ற முதற்கட்டுரை தொடங்கி இறுதிநாள் வரை பலநூறு கட்டுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் இத்துறை சார்ந்து எழுதினார். அவற்றுள் பல பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. சீ. இரா. அரங்கநாதன் எழுதிய கட்டுரைகள், நூல்கள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தார்.  1960ஆம் ஆண்டில் ‘நூலகப்பணிஎன்னும் உரையாடல் வடிவிலான நூலை எழுதினார். அதனைத் தொடர்ந்து சீ.இரா. அரங்கநாதன் எழுதிய நூலகவியலின் ஐந்து சட்டங்கள் என்னும் நூலை  அடியொற்றிநூலகவுணர்வுஎன்னும் தொடரை கண. முத்தையாவை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த அமைச்சன் இதழில் எழுதினார். பின்னர் அது 1971ஆம் ஆண்டில் நூலாக வெளிவந்தது. இவை தவிர நூலியல், நூலகவியல் பற்றி எழுதிய நூலக இலக்கியங்கள் பல நூலாக்கம் பெறக் காத்திருக்கின்றன.

 

நூலக வரலாற்றாசிரியர்

ஈரோப்பியர்களின் வருகைக்குப் பின்னரே இந்தியாவில் நூலகங்கள் தோன்றின என்னும் கருதுகோளை மறுத்து ஆய்வுமேற்கொண்ட வேதி, பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் நூல்நூலகச் சிந்தனைகள் இருந்திருக்கின்றன என்பதனை அறிந்தார். அந்த ஆய்வுமுடிவுகளை இந்திய நூலக வரலாறுஎன்ற தலைப்பில் 1963-64ஆம் ஆண்டுகளில் குத்தூசி இதழில் தொடராக எழுதினார்.  பின்னர் அதனை ஆங்கிலத்தில்  நூலகவியல்: தமிழ்மரபு” (The Library Science: The Tradition of Tamils) என்ற கட்டுரையை சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறையின் ஆய்விதழில் வெளியிட்டார்.  தொடர்ந்து செய்திகளைத் திரட்டி, 1978ஆம் ஆண்டுஇந்திய நூலக இயக்கம்என்ற நூலை ஆக்கினார். அந்நூலை 1981ஆம் ஆண்டில்நூலகக்கதைஎன்ற நூலாகச் சுருக்கினார். அதனை மேலும் சுருக்கி, “இந்திய நூலக வரலாறுஎன்னும் சுவடியாக 1981ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டின்பொழுது பொதுநூலகத்துறை வெளியிட்டது.  இவ்வரலாறே இந்திய வரலாற்றை பஃறுளி ஆற்றிலிருந்து தொடங்கும் முதல் வரலாற்று நூல் என்றார் வரலாற்றறிஞர் க.த.திருநாவுக்கரசு. அவ்வகையில் இந்திய வரலாற்று வரைவியலில் புதிய தடத்தை அமைத்தார் வேதி.

மேலும், நூலகவியல் சார்ந்த எட்டு முன்னோடிகளின் வாழ்க்கை வரலாற்றை 1980ஆம் ஆண்டில் நூலக முன்னோடிகள்என்ற நூலகவும் சீ.ரா. அரங்கநாதனின் வாழ்க்கை வரலாற்றை 1994ஆம் ஆண்டில் நாமறிந்த அரங்கநாதன் வாழ்மைஎன்னும் நூலாகவும் தன்னுடைய வாழ்க்கைக்குறிப்புகளை 1995ஆம் ஆண்டில் நூலகவித்தகர் எழுபதுஎன்னும் நூலாகவும் எழுதினார்.

 

நூலகவியல் ஆய்வாளர்

1960களில் சீ.இரா. அரங்கநாதன் தனது கோலன் பகுப்புமுறையை அடிப்படையாகக்கொண்டு பல அறிவுத்துறைகளில் ஆழ்பகுப்புகளை (Depth Classification) உருவாக்கினார். அவ்வரிசையில் தமிழிலுள்ள செய்யுள் வடிவங்களுக்கான ஆழ்பகுப்பை சீ.இரா.அரங்கநாதனும் வேதியும் இணைந்துதமிழ்க்கவிதைகளின் கிளைவடிவங்களும் அவற்றின் பகுப்பும்” (Sub-forms of Tamil Poetry And Their Classification) என்னும் ஆய்வுக்கட்டுரையை 1964ஆம் ஆண்டில் எழுதினார். அதில் தமிழ்க்கவிதையில் 800 கிளைவடிவங்கள் இருப்பதாகப் பட்டியலிட்டனர். வேதி அந்த ஆய்வை மேலும் தொடர்ந்து உலகதமிழாராய்ச்சி நிறுவனத்தின் கருத்தரங்களில் தமிழ்க்கவிதையில் 1000க்கும் மேற்பட்ட கிளைவடிவங்கள் இருக்கின்றன என்று பகுத்துக்காட்டினார்.

 

அவற்றைத் தொடர்ந்து, திருக்குறளுக்கு ஆழ்பகுப்பம் ஒன்றை உருவாக்கினார் வேதி. அதில் திருக்குறளுக்குள் பொதிந்துகிடக்கும் அறிவுத்துறைகளைப் பகுத்துக்காட்டினார். அப்பகுப்பின் தொடக்கமாகதிருக்குறளில் அறிவுஎன்னும் ஆய்வுக்கட்டுரையை நூலகப்பகுப்பியலை அடிப்படையாகக்கொண்டு எழுதினார்.

 

தொல்காப்பியம், நன்னூல் ஆகிய தமிழிலக்கண நூல்களில் நூலியல் (Book Science) அமைந்திருக்கும் பாங்கைச் சுட்டிக்காட்டினார். தொல்காப்பியத்திலுள்ள நூலியற்கொள்கையை தற்பொழுது மேற்குலகம் பேசும் பன்னாட்டு நூல் தர எண் (ISBN) என்னும் கருத்தியலோடு ஒப்பிட்டு, தொல்காப்பிய நூலியற்கொள்கையின் நுட்பத்தை கோவையில்  நடைபெற்ற உலகச் செந்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வெளிப்படுத்தினார். இத்தகு தனித்தன்மை கொண்ட முயற்சிகளால் நூலகவியலை தமிழாய்விற்கான கருவியாக மாற்றி நூலகவியல் ஆய்வாளராக ஒளிர்ந்தார்.

 

 

 

 

நூலகவியற்பயிற்றுநர்

நூலகம் சிறப்பாகச் செயற்பட வேண்டுமானால், நூலகவியல் பயின்றவரே நூலகராக இருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டரசின் பொதுநூலகத்துறையில் நூலகர்களாக இருந்த பெரும்பான்மையோர் நூலகவியல் பயின்றவர்கள் அல்லர். பள்ளி இறுதி வகுப்பே தேறிய அவர்களுக்கு தமிழ்வழியில் நூலகவியலைக் கற்பிக்க பல்கலைக்கழகமோ, கல்லூரியோ, பள்ளியோ இல்லை. எனவே, சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் 1966 மார்ச் மாதத்தில், தமிழ்வழியில் நூலகவியலைக் கற்றுக்கொடுக்க, நூலகப்பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார் வேதி.  இப்பள்ளியில் 1996ஆம் ஆண்டு வரை 46அணிகளாக 1380 நூலகர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது.   இம்முயற்சிக்கு, வேதி 1957-58 ஆம் கல்வியாண்டில் மதுரை தியாகராசர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பெற்றா கற்பித்தல் இளவர் (BT) பட்டம் பெரிதும் துணைபுரிந்தது.

 

நூலகவுணர்வுப் பரப்புரையாளர்

ஒன்றைப்பற்றிப் பலரும் அறிய வேண்டுமானால் அதனைப்பற்றித் தொடர்ந்து பரப்புரை நிகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும்; அதனைப்பற்றி நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டும்; இல்லையென்றால் அது காலவோட்டத்தில் நினைவுத்தளத்திலிருந்து  மெல்ல மெல்ல மறைந்துவிடும் என்பது பரப்புரையியலின் அடிப்படை விதி. அவ்வகையில் நூலகவுணர்வு பற்றி வேதி தொடர்ந்து எழுத்து, பேச்சு, கண்காட்சி, கருத்தரங்கம், விழா என்று பரப்புரைகளை மேற்கொண்டார். 

 

1951 திசம்பர் 21, 22ஆம் நாள்களில் சென்னை நூலகச் சங்கத்தின சார்பில் நடைபெற்ற தமிழ்நாட்டு நூலக மாநாட்டில்நூலகங்களின் நூற்றொகைகளின் தேவைஎன்ற தலைப்பில் ஆற்றிய உரையிலிருந்து தொடங்கியது இப்பரப்புரைப் பணி. அதன்பின்னர் இந்திய நூலகச் சங்கம், தமிழ்நாடு நூலகர் சங்கம், சென்னை நூலகச் சங்கம் போன்ற சங்கங்களின் விழாகளிலும் தொடர்ந்தது. கன்னிமாரா நூலகராகவும் பொதுநூலக இயக்குநராகவும் பணியாற்றிய இருபது ஆண்டுகளில் நூலக வார விழா, நூலறிமுக விழா ஆகியவற்றை ஒருங்கிணைத்தார். இந்திய தேசிய புத்தக அறக்கட்டளை, தென்னிந்திய புத்தக் அறக்கட்டளை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் சங்கம், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஒருங்கிணைத்த கருத்தரங்குகளிலும் நூல், நூலகம், நூலவியல் பற்றித் தொடர்ந்து உரையாற்றினார். தொலைக்காட்சி, வானொலி போன்ற காட்சி ஊடகங்களிலும் இதழ்கள், மலர்கள் ஆகியவற்றிலும் கட்டுரைகள் எழுதினார். தனது முகவரி அட்டையிலும் முடங்கல் தாளின் விளிம்புகளிலும் நூல், நூலகம் பற்றிய அறிமுகங்களை அச்சிட்டுப் பரப்பினார். பிறருக்கு எழுதும் கடிதங்களோடு நூல், நூலகம் தொடர்பான அண்மைச் செய்திகளை படியெடுத்து இணைத்து அனுப்பும் பழக்கத்தை தனது வாழ்வின் இறுதிப் பத்தாண்டுகளில் பின்பற்றினார்.  இங்ஙனம் 62ஆன்டுகள் நூலகவுணர்வுப்பரப்புரையாளராக இடையறாது இயங்கிக்கொண்டே இருந்தார்.

 

நூலக இயக்குநர்

பொதுநூலகச் சட்டத்தின் வழியாக உருவாக்கப்பட்ட பொதுநூலகக் துறை, நூலகப் பயிற்சி பெற்ற ஒருவரை நூலக இயக்குநராகக்கொண்ட துறையாக  இயங்க வேண்டும் என்று ம.பொ.சி. உள்ளிட்ட பலரும் அரசை வலியுறுத்தினர். அதன் விளைவாக 1972 சூலை 31ஆம் நாள் தமிழ்நாடு பொதுநூலகத் துறை உருவாக்கப்பட்டது. அதன் முதல்தொழில்புரி இயக்குநராக வேதி 1972 சூலை 31ஆள் நாள் முதல் 1982 ஆகத்து 31ஆம் நாள் வரை பணியாற்றி ஓய்வுபெற்றார். அப்பத்தாண்டு காலம் நூலகத்துறையின் பொற்காலமாக எழுத்தாளர்களால், பதிப்பாளர்களால், இதழாளர்களால், வாசகர்களால், சிந்தனையாளர்களால், நூலகவியலாளர்களால் கருத்தப்பட்டது; கருதப்படுகிறது.  

 

பொதுநூலக இயக்குநராகப் பொறுப்பேற்றதும்நூலகச் சீரமைப்புக் குழுஒன்றை அமைக்க அரசை வலியுறுத்தினார் வேதி. 1973ஆம் ஆண்டில் சுப்பராயன் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட அக்குழுவின் செயலாளராக இருந்து  பொதுநூலகத்துறையில் மேற்கொள்ள நடவடிக்கைகளை 400 பக்க அறிக்கையாக உருவாக்கினார். ஆனால், அரசு அந்த அறிக்கையை வழக்கம்போல கிடப்பிற்போட்டது. வேதியோ அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்த  ஒவ்வொரு பரிந்துரையையும் பத்தாண்டுகளில் தனித்தனி கருத்துருகளாக அரசுக்கு அனுப்பி நிறைவேற்றினார்.

 

வேதி இயக்குநராவதற்கு முன்னர் பின்பற்றப்பட்ட மாவட்ட ஆணைக்குழுகளே நூல்களை வாங்கும் முறையை மாற்றி, இயக்குநரகம் நூல்களை வாங்கி பதிப்பாளர்களுக்கு ஒரே தவணையில் பணத்தைக் கொடுக்கும் முறையைக் கொணர்ந்தார். ஒவ்வொரு நூலிலும் 600 படிகளை - பதிப்பாளரின் நடைமுறை முதலின் சுழற்சியை உறுதிசெய்யும் வகையில் - வாங்கினார். இதனால் பல்வேறு பதிப்பகங்கள் நூல்களை வெளியிட்டன; பதிப்பகங்களுக்கு அப்பால் எழுத்தாளர்கள் தாமே நூல்களை வெளியிட்டு நூலகத்திற்கு விற்று நேரடியாகப் பயனடைந்தனர்.  புகழ்பெற்ற எழுத்தாளரின் நூல் தொடங்கி புதிதாக எழுதத் தொடங்கிய கல்லூரி மாணவரின் நூல் வரை தகுதியின் அடிப்படையில் வாங்கப்பட்டன. 

 

இவருடைய பணிக்காலத்தில்தான் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான உள்ளாட்சி அமைப்புகள் நூலகவரியை முறையாக நூலகத்துறைக்குச் செலுத்தின. தேங்கி நின்ற ஊர்களுக்கு இவரே நேரிற்சென்று அவற்றைப் பெற்றார். கல்கத்தாவிலுள்ள இராசராம் மோகன்ராய் நூலக நிதியத்திலிருந்து ஆண்டுதோறும் கணிசமான தொகையைப் பெற்று பொதுநூலகத் துறையை துடிப்போடு இயங்கச் செய்தார்.  அதன் விளைவாக அவருக்கு முன்னரும் பின்னரும் ஆற்றமுடியாத பணிகளை ஆற்றியவர் என இப்பொழுதும் புகழப்படுகிறார்.

 

நூலகப் பேராளர்

தமிழ்நாட்டரசின் சார்பிலும் இந்திய ஒன்றிய அரசின் சார்பிலும் திட்டக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நூலக்குழுகளில் நூலகப் பேராளராக வேதி பங்கேற்றார்; தனது பட்டறிவைப் பகிர்ந்தார்.  பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டக்குழுகளில் பங்கேற்றார்.

 

நூலகச்சட்ட வல்லுநர்

1950ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சென்னை மாகாண நூலகச் சட்டத்தை காலத்திற்கேற்ப மாற்றியமைக்க வேண்டுமென 1957ஆம் ஆண்டிலிருந்து 1972ஆம் ஆண்டில் தான் மறையும் வரை சீ.இரா.அரங்கநாதன் வலியுறுத்திக்கொண்டே இருந்தார். ஆனால், அரசு செவிமடுக்கவே இல்லை. 1972 முதல் வேதி அதன் தேவையைத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்தார். அதன் விளைவாக, 1998ஆம் ஆண்டில் வேதி தலைமையில் நூலகச் சட்டத்தில் செய்யவேண்டிய சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்கக் குழுவொன்று அமைக்கப்பட்டது. தேவையான பரிந்துரைகளை வேதி வழங்கினார். அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன, ஆனால் நத்தையைவிட மெதுவாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

 

சென்னை மாகாண நூலகச்சட்டத்தைத் திறனாய்வு செய்துசீ. இரா. அரங்கநாதனும் சென்னை பொதுநூலகச் சட்டமும்: விதிகள், விமர்சங்கள், கடிதங்கள், சீர்திருத்தங்கள்என்ற தலைப்பில் புதுதில்லியிலுள்ள சீ.இரா..வாசகர் வட்டத்தில் வேதி ஆற்றிய ஆங்கில உரையை அந்த அமைப்பு நூலாக வெளியிட்டிருக்கிறது. அதில் நூலகச் சட்டத்தில் வேதிக்கு இருந்த் ஆழ்ந்த புலமை வெளிப்பட்டிருப்பதைக் காணலாம்.

 

நூலகக்கொடையாளர்

1934ஆம் ஆண்டு திருக்குறள் நூல் ஒன்றொடு தொடங்கிய வேதியின் நூல் சேகரிக்குமநூலவீட்டு நூலகத்தை அமைக்கும்பணி 2013ஆம் ஆண்டில் அவர் மறையும் வரை தொடர்ந்தது.  தான் சேகரித்தவற்றில் தான் படித்த, இனிமேல் தனக்குப் பயன்படாது எனக் கருதிய நூல்களை அவ்வப்பொழுது பிறருக்கும் நூலகங்களுக்கும் கொடையாகக் கொடுத்துவிடும் பழக்கத்தை வேதி தொடக்கம் முதலே கைக்கொண்டிருந்தார். அவ்வகையில் 1950களின் இறுதியில் சுருளிப்பட்டியில் அமைந்திருந்த நாராயணசாமி பாரதியின் ஆசிரம நூலகம் தொடங்கி பல்வேறு நூலகங்களுக்கு நூல்கள் வழங்கினார். 1995ஆம் ஆண்டிற்குப் பின்னர், தனது நூலகத்திலிருந்த பெருந்தொகையான நூல்களை மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக நூலகம், மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகம், தஞ்சை தமிழ்  பல்கலைக்கழக நூலகம், திருச்சி பிசப்பு கீபர் கல்லூரி நூலகம், மதுரை காரல்மார்க்சு நூலகம், கம்பம் ஏலவிவசாயிகள் மேல்நிலைப்பள்ளி நூலகம், பொதுநூலகத்துறையின் கிளைநூலகங்கள் ஆகியன உள்ளிட்ட பல்வேறு நூலகங்களுக்கு நூல்களைக் கொடையாகக் கொடுத்தார். இவை தவிர பல்வேறு தனியார் நூலகங்களுக்கு நிதிக்கொடையும் நல்கி நூலகக்கொடையாளராக உயர்ந்தார்.

 

நூலகச் செயற்பாட்டாளர்

அரசிற்கும் மக்களுக்கும் அவர்தம் பொறுப்பை உணர்த்தி, அதனை நிறைவேற்றச் செய்வதே செயற்பாடு (Activism) எனப்படுகிறது.  அவ்வகையில் நூலகம் தொடர்பாக அரசிற்கும் மக்களுக்கும் உள்ள பொறுப்புகளை வேதி தொடர்ந்து நினைவூட்டும் நூலகச் செயற்பாட்டாளராகத் திகழ்ந்தார்.  பொதுநூலகத்துறை பற்றிய விமர்சனங்கள் செய்தித்தாள்களில் வெளிவந்த பலவேளைகளில் அவற்றைச் சரிசெய்வதற்கான தனது ஆலோசனைகளை அரசுச் செயலருக்கும் இயக்குநருக்கும் தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.   இந்தியா முழுமைக்கும் ஒரே நூலகச்சட்டம் இயற்றப்பட வேண்டுமென நூலகர்களுக்கும் ஒன்றிய அரசிற்கும் தொடர்ந்து தெரிவித்துக்கொண்டே இருந்தார்.  குடியரசுத்தலைவர்களுக்கு அச்சட்டத்தின் தேவையை வலியுறுத்தி இடையறாது கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தார்.

 

பன்னாட்டு நூலக ஆராய்ச்சி நிறுவன விழைவர்

வேதி அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் கம்பத்தில் பன்னாட்டு நூலக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை உருவாக்க விழைந்தார்; அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் நிறுவனத் தொடக்கம், வளர்ச்சி, மேலாண்மை ஆகிய பணிகள் அவரின் நேரத்தை உண்டுவிடும்; அதனால் அவர் எழுத நினைத்துள்ளனவற்றை எழுத இயலாமற் போய்விடும் என நலம்நாடிகள் எடுத்துரைத்தனர். அதனையேற்று அம்முயற்சியைக் கைவிட்டார்.

 

நூலக அந்தணர்

அந்தண ரென்போ ரறவோர்மற் றேவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக  லான்என்கிறது குறள்.  அவ்வகையில் நூலை, நூலகத்தை மற்ற உயிர்களாய்க் கருதி, அவற்றிற்கு தண்மை வழங்கலைத் தனது இயல்பாய்கொண்டு ஒழுகி வே.தில்லைநாயகன்  நூலக அந்தணர் ஆனார். 

 

 

 

நூலக அந்தணர் வே.தில்லைநாயகம்

  யார் ? “‘ ஊருக்கு ஒரு நூலகம் ; ஆளுக்கு ஒரு நூல் - அதுவும் நான்கு பேர் - தாய் , தந்தை , மகள் , மகன் ஆகிய நான்குபேர் - நடுவீட்டில் நன்றாய...