எப்பக்கம் வந்து புகுந்திடும் இந்தி?


2002ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் நாள் முதல் அக்டோபர் 2ஆம் நாள் வரை பீகார் மாநிலத்தின் தென்பகுதியில் ஒரு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டதுஒற்றுமைப் பேரவை என தமிழில் பொருள்படும் ஏக்தா பரிசத்து என்னும் காந்திய அமைப்பு நிலவுரிமைக்கான பரப்புரை இயக்கமாக அப்பயணத்தை நடத்தியது.  இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெவ்வேறு மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அப்பரப்புரைப் பயணத்தில் கலந்துகொண்டோம்.  பயணப் பாதையில் இருந்த ஒவ்வொரு ஊரிலும் கூட்டங்கள் நடைபெற்றன.  அவற்றில் வெவ்வேறு மாநிலத்தைச் சார்ந்தவர்கள் அந்தந்த மாநிலத்தின் சார்பில் நிலவுரிமையை வலியுறுத்தி உரையாற்றினோம்இந்தியில் ஒரு சொல் கூட தெரியாத நான், அக்கூட்டங்களில் ஆங்கிலத்தில் உரையாற்றினேன். பீகார் மாநிலத்தின் வடக்குப் பகுதியைச் சார்ந்த ஒருவர் என்னுடைய உரைகளை இந்தியில் மொழிபெயர்ப்பார்ஒவ்வொரு கூட்டம் முடிந்ததும், “ஹரே பய்யா! ஹிந்தி சிக்ஷா பய்யா ஹிந்தி சிக்ஷா. ஹிந்தி ஹமரா மாத்ரு பாஷாஎன என்னிடம் கூறத் தொடங்கிவிடுவார். “இந்தி உனக்கும் எனக்கும் தாய்மொழி இல்லைஎன நான் கூற, இருவருக்கும் சண்டை அடுத்த ஊர்வரை தொடரும்இதேபோல ஓர் ஊரில் நான் பேசி, அவர் மொழிபெயர்த்து முடிந்ததும் மேடையில் இருந்து இறங்கி ஒரு தேனீர் கடைக்குச் சென்று தேனீர் குடித்துக்கொண்டிருந்தோம். கூட்டத்தில் இருந்து ஒருவர் எங்களை நோக்கி வந்தார். தான் அந்தக் கிராமத்துக்காரர் என அறிமுகம் செய்துகொண்டு, என்னை பற்றி கேட்டார். நண்பரின் உதவியோடு அவருக்கு விடையளித்தான். அப்புறம் அவர் மூச்சுவிடாமல் மூன்று நிமிடங்கள் ஏதோ பேசினார். இடையிடையே அவர் பயன்படுத்திய, “மேரா”, “ஜமீன்”, “ஹைபோன்ற சொல்களைக்கொண்டு அவர் இந்தியில் ஏதோ ஒரு முக்கியமான செய்தியைக் கூறுகிறார் எனத் தெரிந்ததுநண்பரைப் பார்த்தேன். அவர் கண்களைச் சுருக்கி, அக்கிராமக்காரரின் வாயையே கூர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தார்.  அக்கிராமத்துக்காரர் மூன்று நிமிடங்கள் கழித்து, தனது பேச்சை சிறிது நிறுத்தி இடுப்புப்பட்டையில் இருந்து கைப்பை ஒன்றை எடுக்க முனைந்தார்அந்த இடைவேளையில் என் நண்பரிடம், “இவர் என்ன கூறுகிறார்?” என வினவினேன். அவரோ, “எனக்கு அவரின் மொழியே புரியவில்லைஎன்றார். “அவர் இந்தியில்தானே பேசினார். ஏன் உங்களுக்கு புரியவில்லை?” என்றதும், “அவர் இவ்வட்டாரத்தின் மொழியான மகதியில் பேசுகிறார் என நினைக்கிறேன். அது இந்தி இல்லைஎன்றார்.  “ஒரே மாநிலத்திற்குள் அதே மாநிலத்தைச் சேர்ந்த இருவருக்கு ஒரே மொழி தாய்மொழியாக இல்லாத பொழுது, தென்னாட்டில் பிறந்த எனக்கு இந்தி எப்படி தாய்மொழியாகும்? அதனை நான் ஏன் படிக்க வேண்டும்?” என வினவினேன். அப்புறம்தான் அவர் வேறொரு உண்மையைச் சொன்னார். இந்தி அவருக்கும் தாய்மொழி இல்லையாம்; பள்ளிச் சான்றிதழில் இந்தி தாய்மொழி என எழுதப்பட்டுவிட்டதாம். அதனால்தான் அவர் இந்தியை தனது தாய்மொழி எனக் கூறிக்கொண்டு இருக்கிறாராம். அதற்கு அடுத்த சிலநாள்கள் இருவருக்கும் நடந்த விவாதத்தின் முடிவில் போசுபூரிதான் தன் தாய்மொழி; இந்தி அன்று எனக் கூறத் தொடங்கிவிட்டார் அந்த நண்பர்.

இந்த நிகழ்வு சில உண்மைகளை நமக்கு தெளிவுபடுத்துகிறது. அவை:
  •      இந்தியாவின் பொதுமொழி இந்தி அன்று
  •   இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளத பல வடநாட்டவர்கள், இந்தியே தம்   தாய்மொழி   என நம்பவைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
  •    ஒரே மாநிலத்தில் வெவ்வேறு பரவுகளில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. எனவே இந்தி பேசும் மாநிலங்களை மொழி அடிப்படையில் இன்னும் பல மாநிலங்களாகப் பிரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
  •  இந்தியை பேசும் மாநிலங்களில் வாழ்கிறவர்கள் கூட அம்மாநிலங்களிலேயே மொழிச்சிக்கலுக்கு ஆளாகிறார்கள்.
அப்படியானால் இந்தியாவின் பொதுமொழி இந்தி என்னும் நம்பிக்கை எப்படி ஏற்பட்டது?

இந்திய விடுதலைப் போரில் மோ..காந்தி தலைமையேற்ற பின்னர், இந்திய தேசிய காங்கிரசை கனவான்களின் கையிலிருந்து பிடுங்கி பொதுமக்களின் கையில் கொடுத்தார். இந்தியர்கள் பின்பற்றி வந்த ஆங்கிலேய அடையாளங்களை எல்லாம் களைய முனைந்தார். இந்தியா விடுதலை பெற்ற பின்னர் அது தனக்கான அடையாளங்களோடு இருக்க வேண்டும் எனவும் அது ஆங்கிலேயர்களின் அடையாளங்களைச் சுமந்துகொண்டு இருப்பது அடிமைத்தனம் எனவும் கருதினார். எனவே, ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியாவிற்கென்று இந்திய மொழியொன்றை பொதுமொழியாக்க விழைந்தார்; அதேவேளையில் அம்மொழி இந்துமுசுலீம் ஒன்றுமையை வலியுறுத்துவதாக இருக்க வேண்டும் எனக் கருதினார். எனவே இந்தியும் உருதும் கலந்து இந்துசுதானி மொழியை 1925ஆம் ஆண்டில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் அக்கட்சியின் அலுவல்மொழி ஆக்கினார். ஆனால் காங்கிரசுக் கட்சியில் இருந்த இராசேந்திர பிரசாத்து போன்ற சமசுகிருத ஆதரவாளர்கள் தேவநாகரி வரிவடிவத்தைக் கொண்ட சமசுகிருத ஆதிக்கம் நிறைந்த இந்தியை பொதுமொழியாக்க முனைந்தனர்; அதுவே இந்திய நாட்டின்  தேசியமொழி என பேசியும் எழுதியும் வந்தனர்.
 
இந்திய விடுதலைக்குப் பின்னர் அம்மொழி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழி என ஆக்க முனைந்தனர். அது பற்றிய விவாதம் 1949 ஆகத்து 22, 23, 24 ஆகிய நாள்களில் இந்திய அரசமைப்பு அவையில் நடைபெற்றது. நெடிய விவாதத்திற்கு பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில்இந்தியை ஆட்சிமொழி ஆக்க வேண்டும்என 74 உறுப்பினர்களும்இந்தி கூடாது; ஆங்கிலமே ஆட்சிமொழியாகத் தொடர வேண்டும்’  என 74 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இரு பிரிவினரும் சமமான வாக்குகள் பெற்றதால் மீண்டும் அப்பொருள் பற்றி 1949 செப்டம்பர் 12, 13, 14 ஆம் நாள்களில் விவாதம் நடைந்தது. இம்முறை 300 உறுப்பினர்கள் அவையில் கூடி விவாதித்தனர்.  14ஆம் நாள் மாலை வாக்கெடுப்பிற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டு இருந்த பொழுது, இந்தியை ஆதரிப்பவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி, அவை அரை மணி நேரம் தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய பொழுது, இருபிரிவினருக்கும் ஏற்பட்ட சமரத்தின் அடிப்படையில் இந்திஇந்தியாவின் ஆட்சிமொழி என்றும்ஆங்கிலம்அடுத்த 15 ஆண்டுகளுக்கு இணை ஆட்சிமொழியாகத் தொடரும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இவ்வாறு இந்தியக் குடிகளில் பெரும்பான்மையினரின் மொழியாக இல்லாத ஒரு மொழி, பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு மாறாக ஆட்சி மொழி ஆக்கப்பட்டது; தேசிய மொழி ஆக்கப்படவில்லை. ஆனால் இந்தி வெறியர்களால் அம்மொழி இந்தியாவின் தேசிய மொழி என திரும்பத் திரும்ப கூறப்படுகிறது. இப்பரப்புரையை தமிழர்கள் உள்ளிட்ட பலரும் நம்பத் தொடங்கிவிட்டனர்அதன் விளைவாகவே, குசராத்து மாநிலத்தைச் சேர்ந்த சுரேசுபாய் என்பவர், இந்தியாவில் விற்கப்படும் பொருள்களின் உறையின் மீதுள்ள தகவல்களை இந்தியாவின் தேசிய மொழியான இந்தியிலேயே அச்சிட வேண்டும் என்னும் பொதுநல வழக்கொன்றை குசராத்து உயர்நீதிமன்றத்தில் 2009 ஆம் ஆண்டில் தொடுத்தார். அவ்வழக்கை விசாரித்த குசராத்து உயர்நிதீமன்ற தலைமை நீதிபதி எசு. சே. முகோபாத்தியாயவும் நீதியரசர் ஆனந்த் தேவும் இணைந்து 2010 சனவரி 13ஆம் நாள் வழங்கிய தீர்ப்பில், “இந்தியாவின் தேசிய மொழி இந்தி என இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் நம்பவைக்கப்பட்டு இருக்கின்றனர். ஆனால் இந்திதான் இந்தியாவின் தேசியமொழி என அறிவித்து எந்த ஆணையும் வெளியிடப்படவில்லை; எந்த ஆவணமும் உருவாக்கப்படவில்லைஎனக் குறிப்பிட்டு அவ்வழக்கைத் தள்ளுபடி செய்தனர்இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள எட்டாவது அட்டவணை  22 மொழிகளை வெறுமையாக பட்டியலிட்டு இருக்கிறதே தவிர, தேசிய மொழிகள் எனக் கூறவில்லை

ஆனாலும் சில வெறியர்கள் இந்தியா முழுவதற்கும் ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே மதம் என இலக்கமைத்துக்கொண்டு பல்லாண்டுகளாக இயங்கி வருகின்றனர். அவர்கள் காந்தியின் முகமூடியையும் கோட்சேயின் முகமூடியையும் நேரத்திற்கு ஏற்ப மாற்றி மாற்றி அணிந்துகொண்டு இயங்குகின்றனர்அம்முயற்சியின் உச்சமாக, 1965 ஆம் ஆண்டு சனவரி 25ஆம் நாளோடு ஆங்கிலத்தின் இணை ஆட்சிமொழி என்னும் தகுதியை இழக்கச் செய்ய அவர்கள் முயன்றனர். அதனை உணர்ந்த "தமிழரிமா" என அழைப்படும் பேராசிரியர் சி. இலக்குவனார் இந்தி வல்லாதிக்கத்திற்கு எதிராக முதற்குரலை மதுரையில் ஒலித்தார்அவர் மாணவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஆட்சிமொழிப் பிரிவுகளை தீயிட்டுக் கொளுத்தினர். இந்தித் திணிப்பிற்கு எதிரான போர் எங்கெங்கும் எதிரொலித்ததுஅன்றைய பிரதமர் லால்பகதூர் சாசுதிரி, இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சிமொழியாகத் தொடரும் என அவருக்கு முந்தைய பிரதமரான சவகர்லால் நேரு கொடுத்த உறுதிமொழியைப் புதுப்பித்துக் கொடுத்தார். அதன் பின்னர் ஆட்சியாளர்கள் மாறும் ஒவ்வொரு முறையும் அவர்கள் இந்தியைத் திணிக்கு முயல்வதும் தமிழகத்தில் அதற்கு எதிர்ப்புக் கிளம்பியதும் இந்த உறுதிமொழியைப் புதுப்பித்துக் கொடுப்பதும் நேரு, சாசுதிரி, இந்திரா, இராசீவ் என தொடர்ந்து நிகழ்ந்து வந்திருக்கிறதுஇப்பொழுது மோடி தலைமையிலான அரசு தமக்கு முந்தையவர்களின் மரபைப் புதுப்பித்து, ‘மத்திய அரசின் அனைத்து அமைச்சங்கள், துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றின் சார்பில் அலுவல் சார்ந்த சமூக ஊடகங்களை கையாளும் அதிகாரிகள் இந்தி அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தை பயன்படுத்தலாம். எனினும் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்என மே 27ஆம் நாள் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறதுஇதனை எதிர்த்து கண்டனங்கள் எழுந்ததும் சற்று பின்வாங்கி இருக்கிறதுஇது மீண்டும் பாய்வதற்கான பின்வாங்கல்தானே ஒழிய, மனமாற்றம் அன்றுஎனவே, நீறுபூத்திருக்கும் இந்தித்திணிப்புத் தீயை எப்பொழுதும் கனன்றுகொண்டு  இருக்குமாறு பார்த்துக்கொள்வது தமிழர்தம் கடமை ஆகும்.   

No comments:

Post a Comment

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...