சிரிப்பொலி

களிப்பின் ஒலியாய் கானகம் சிரிக்கையில்
ஓடைகள் சுழித்து ஓடிச் சிரிக்கையில்
காற்றும் நம்மோடு களித்துச் சிரிப்பதை
ஏற்றுப் பசுமலை எதிரொலி செய்யும்!

பசும்புல் வெளியது பளிச்செனச் சிரிக்கையில்
தத்துக் கிளிகள் தாவிக் குதிக்கையில்
இனிய தமது எழில்மிகு வாய்களால்
கலகல கலவென காண்போர் சிரிப்பர்

வண்ணப் பறவைகள் வளமாய்ச் சிரிக்கையில்
சிறுமணிப் பயிறும் செந்நிறப் பழங்களும்
விரிந்த பலகையில் விரவிக் கிடக்கையில்
என்னோ டிணைந்து இன்பம் பொங்கக்
கலகல கலவெனப் பாடி மகிழ்ந்து
வாழ்ந்து சிறந்திட வாரீர்! வாரீர்!!

ஆங்கிலக் கரு: வில்லியம் பிளேக்கு
தமிழ் உரு : யரலவழள

Comments

  1. சிரிப்பு - சிறப்பு !! தமிழ் உரு அருமை.! ஒவ்வொரு வரிகளின் முடிவும் அடுத்த வரியின் தொடக்கமும் நீங்கள் சொல்வது போல்...... சுழித்து சிரிக்கும் ஆற்றைப் போல அழகான ஓட்டத்தைப் பெற்றிருக்கிறது.... உருமாற்றம் அருமை .. தமிழ் அதை விட ...!!

    ReplyDelete

Post a Comment