விடுதலையின் கதை!

தொடங்கிய இடத்திற்கே
திரும்பியிருக்கிறோம்
அவர்கள்
மீண்டும்
வணிகம் செய்ய வந்திருக்கிறார்கள்
இவர்கள்
மீண்டும்
கடன் வாங்கிக் கொண்டுக்கிறார்கள்
நம்மில் பலர்
அவர்களுக்கு
ஆள்பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள்
அவர்கள் மேற்பார்வையில்
இவர்கள் நம்மை ஆள்கிறார்கள்
ஆளும் உரிமையையும்
விரைவில் இவர்களிடமிருந்து
அவர்கள் வாங்கிவிடுவார்கள்
அப்புறம் என்ன?
அப்பாவி மக்கள்
அடி தாங்க மாட்டாமல்
வெடித்தெழுவார்கள்
இவர்களில் சிலர்
அவர்களுக்காக
அப்பாவிகளை வதைப்பார்கள்
இன்னும் சிலர்
நெஞ்சு பொறுக்குதில்லையே
எனப் பாடல் புனைவார்கள்
இன்னும் சிலர்
அடிவாங்கிகள்
வெல்லப் போகிறார்கள் என்றதும்
அடிவாங்கிகளுக்கு
பஞ்சு மிட்டாய்க் கனவுகளை விற்பார்கள்
பாற்கடல் கடைந்து அமிழ்தம் வருகையில்
நஞ்சை
அடிவாங்கிகளுக்குக் கொடுத்துவிட்டு
அமிழ்தத்தை
அவர்கள் குடிப்பார்கள்
அன்றைக்கும்
என்னைப் போல் ஓராள்
விடுதலையின் கதையை எழுதுவார்
உங்களைப் போல் சிலர்
அதனைப் படித்துவிட்டு
“நல்லாயிருக்கு!”
“பிடிச்சிருக்கு!”
“மோசம்”
“வேற வேலையில்லை”
என அவரவர்க்குத் தோன்றியதைக் கூறிவிட்டு
அவரவர் வேலையைப் பார்ப்பார்கள்
நம்மைப் போலவே
யாராவது ஒருவர் சொல்வார்
“நம்மாலா என்ன பண்ணமுடியும்?”
இன்னொடுவர் சொல்வார்
“மாற்றம் மட்டுமே மாறாதது
எனவே இதுவும் மாறும்”
அடுத்தொருவர் சொல்வர்
“இதுவும் கடந்து போகும்
எங்கள் குருவின் காலைக் கழுவி
நீரைக் குடியுங்கள்”
எல்லாவற்றையும்
கேட்டு, பார்த்து மகிழ்வார்கள் பலர்
தொலைக்காட்சியின் முன்பு
ஆனால்
சிலர்…
மிகச் சிலர்…
கனவுகள் மிதக்காத கண்களோடு வந்து
காலத்தின் குரல்வளைப் பிடித்து நெரிப்பார்கள்
அப்பொழுதுதான்
விடுதலை விடுதலை பெறும்

No comments:

Post a Comment

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...