வந்த செய்தியும் வராத செய்தியும்

இந்தியாவின் மீது
இன்னபிற நாடுகள் பின்பற்றிய
தீண்டாமை தீர்ந்துபோனதென
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
பெருமிதம் மிளிரப் பேச
எங்களின் ஆலோசனைகளை எல்லாம்
அரசு ஏற்றுக்கொண்டதால்
இந்தப் பிரேரணையை நாங்கள்
ஆதரிக்கிறோம் என
எதிக்கட்சியின் மூத்த தலைவர்
இதமாய்க் கூற
எதிர்காலத்தில் உந்துகள் கூட
அணுசக்தியில்தான் இங்குமென
பகுத்தறிவுக் கட்சியைச் சேர்ந்தவர்
அரூடம் மொழிய
குரல்வாக்கெடுப்பின் வழியாக
எதிர்க்கட்சிகள் கொடுத்த
எல்லாத் திருத்தங்களோடும்
அணுவிபத்திற்கான இழப்பீட்டுப் பிரேரணை
மக்களவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாய்
அவைத்தலைவர்
செயற்கைப் புன்னகையோடு செப்பினார்
இது
வந்த செய்தி

வராத செய்தி
இராணுவ இசை முழங்க
இந்திய அமைச்சர்கள்
வரிசையில் நின்று
வாழ்த்துப்பாட
அதிகாரிகள்
அடக்கவொடுக்கமாய் நிற்க
அரசு முறைப் பயணமாக
இந்தியாவிற்கு வரவிருக்கிற
அமெரிக்க அதிபரை வரவேற்க
இந்தியாவின் சி.இ.ஓ.
மன்மோகன் சிங்
மலர்ச் செண்டுகளை அல்ல
இந்திய நாடாளுமன்ற
உறுப்பினர்கள்
அண்மையிற் கூட்டப்பட்ட
தங்களின் ஊதியம்
கட்டுபடியாகதே என
"உச்சுக்" கொட்டியதை
குரல் வாக்காய்க் கருதி
உருவாக்கப்பட்ட
எதிர்கால இந்தியர்களின்
மண்டையோட்டுக் கொத்தைக்
கொடுக்க இருக்கிறார்.
இது
வராத செய்தி

Comments

  1. அடிச்சீங்க பாருங்க நெத்தியடி. ஆனா என்ன சொன்னாலும் நம்ம அரசியல்வியாதிங்க நம்ம தலைல மிளகா அரைக்கிறதை நிறுத்த மாட்டாங்க.

    ReplyDelete
  2. உண்மை அரி அண்ணா

    ReplyDelete

Post a Comment