செம்மையாய்ச் செயல்படப் பழகுக!

1
வேலை யாதென விளங்கிக் கொள்வதும்;
வேண்டும் பொருள்களைத் திரட்டிக் கொள்வதும்;
நுண்ணிய வற்றையும் நுட்பமாய் நோக்கலும்;
அனைத்துக் கூறிலும் அக்கறை செலுத்தலும்;
நடக்கும் வேலை சரியாய் முறையாய்
நடக்கிற தாவென உறுதிப் படுத்தலும்;
அட்ட வணைப்படி அனைத்து செயல்களும்
ஆற்றப் படுதலும்; வினையது முடிந்ததும்
வினைபுரி இடத்தை தூய்மை செய்தலும்;
முடிந்த செயல்களை மீண்டும் நோக்கி
வேண்டும் மாற்றம் செய்தலும்
செம்மையாய் வேலையைச் செய்திட உதவுமே.
2
பொறுமை காத்தல்; விடாது முயலுதல்;
கடமையே கண்ணென கவனமாய் உழைத்தல்
ஆகிய பண்பினால் அடையலாம் செம்மையே!
3
சோம்பல்; மறதி; கவன மின்மை
ஆகிய மூன்றும் அடியறக் களைந்து
விடா முயற்சி; கடமை உணர்வு
பொறுமை ஆகிய மூன்றும் கொண்டால்
ஆற்றும் பணியில் அமைந்திடும் செம்மையே!
4
தணிக்கைப் பட்டியல்; கால அட்டவணை;
ஒப்பிட்டு ஆய்தல்; மீளவும் ஆய்தல்;
திட்டம் திருத்தல் ஆகிய வற்றால்
புரிந்திடும் பணியில் புலப்படும் செம்மையே!

Comments

 1. வலையுலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

  கருத்துக்கள் அனைத்தும் முத்துக்கள் ...

  ReplyDelete
 2. அழகான பியோசனமான விடயத்தை கவிதையில் அழகாக சொல்லிவிடீர்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அரியின் 'அபராஜிதா'--நன்று அறி ! நன்றி அரி !

  ReplyDelete
 4. நன்றாக உள்ளது . முதல் பாராவின் வரிகள்(அட்ட வணைப்படி அனைத்து செயல்களும்
  ஆற்றப் படுதலும்....) என் அம்மாவை நியாபக படுத்துகின்றன

  ReplyDelete

Post a Comment