மாற்று அணி மலருமா?

அவன் ஓர் அடிமை. இளவரசியைக் காதலித்தான். அவளும் காதலித்தாள். செய்தியை அரசன் அறிந்தான். வட்டரங்கின் நடுவில் அடிமை நிறுத்தப்பட்டான். அரசன் தன் இருக்கையில் அமர்ந்து இருந்தான். அரங்கின் அடுக்கு இருக்கையில் மக்கள் அமர்ந்து இருந்தார்கள். முழுவதும் மூடப்பட்ட இரண்டு பெரிய கூண்டுகள் வட்டரங்கிற்குள் கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. அவற்றுள் ஒன்றினுள் அவன் காதலியும் மற்றொன்றில் பலநாள்களாகப் பட்டினிகிடக்கும் சிங்கமும் இருப்பதாகக் கூறப்பட்டது. அந்தக் கூண்டுகளில் ஒன்றை அடிமை திறக்க வேண்டும் என்றும் திறக்கப்படும் பெட்டிக்குள் காதலி இருந்தால், அவளை அவன் மணந்துகொள்ளலாம் என்றும் சிங்கம் இருந்தால் அதற்கு அவன் இரையாக வேண்டும் என்றும் அரசன் அறிவித்தான். அடிமை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அப்பெட்டிகளில் ஒன்றைத் திறந்தான். நல்லவேளையாக அதற்குள் சிங்கம் இல்லை; ஆனால் உள்ளே இருந்த கொடிய நஞ்சினையுடைய கருநாகம் ஒன்று அந்த அடிமைக் கொத்துவதற்காக சீறிக்கொண்டு வந்தது. உயிர்பிழைக்க வேண்டும் என்னும் தவித்த அடிமை மற்றொரு பெட்டியைத் திறந்தான். உள்ளே இருந்த சிங்கம் வெளியே வந்து அவனைத் துரத்தத் தொடங்கியது.

இந்தக் கதையில் வரும் அடிமையின் நிலையில்தான் இன்றைய இந்திய வாக்காளர்கள் இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு மே திங்களில் நடைபெற உள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் யாருக்கு வாக்களித்து இந்திய நாட்டைக் காப்பது என்னும் குழப்பம் அவர்கள் சிந்தனையை ஆக்கிரமித்து இருக்கிறது.


ஒருபக்கம் ஊழல் சாக்கடையில் ஊறி சொரணையே அற்றுப்போன, இந்திய தேசிய காங்கிரசின் தலைமையிலான, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி; மறுபக்கம் இந்தியாவின் இனப்படுகொலை நாயகனான நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்து இருக்கும் இராசுடிரிய சுயம் சேவக்கு (ஆர்.எசு.எசு.) அமைப்பின் அரசியல் அமைப்பான பாரதிய சனதா கட்சியின் தலைமையிலான வலதுசாரிகளின் கூட்டணி. எனவே இந்திய வாக்காளர்கள், தம்மை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆள வேண்டியவர்கள் ஊழல்வாணர்களா, மதவெறியர்களான காவிபயங்கரவாணர்களா என்பதனை முடிவுசெய்ய வேண்டிய இக்கட்டில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

உலகப் புகழ்பெற்ற ஊழல்களையும் அவை தொடர்பான கோப்புகள் களவு போவதையும் கண்டு மனம்நொந்து இருக்கும் சிலரோ, “நரேந்திர மோடி திறமையான ஆட்சியாளர்; கதிரொளி மின்னாற்றலால் அம்மாநிலத்தின் மின்சாரத் தேவையை நிறைவுசெய்த செயல்வீரர்; இந்தியாவிலேயே மதுவிலக்கை கடைபிடிக்கும் ஒரே மாநிலத்தின் முதல்வர்; வளர்ச்சியின் நாயகன்; எனவே அவர்தான் அடுத்த பிரதமராக வர வேண்டும்” எனக் கதைக்கிறார்கள். இவர்கள் நரேந்திர மோடியைப் பற்றி அவரது பொதுமக்கள் தொடர்பு நிறுமம் (Public Relation Company) கட்டமைக்கும் பிம்பத்தைப் பார்த்து மயங்கி இருப்பவர்கள்; கடந்த ஆண்டில் அவர் நடித்த உண்ணாநோன்பு நாடகத்தால் கிறுகிறுத்துப்போய் அவரது, குருதிக்கறை படிந்த, கைகளைப் பற்றிக் குலுக்கத் துடிப்பவர்கள். இந்த மயக்கமடைந்தவர்கள் அணியில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரான வைத்தியநாதபுரம் இராமையர் மகன் கிருட்டிணய்யர் என்னும் வி. ஆர். கிருட்டிணய்யர் செப்டம்பர் 25ஆம் நாள் சேர்ந்திருப்பதுதான் நகைமுரணாக இருக்கிறது. அவர், “பிரதமர் தேர்தலில் மோடியை ஆதரிப்பதற்கான தேசியத் தேர்தலறிக்கையில் இணைக்கப்பட வேண்டிய எனது ஏழு கருத்துகள்” என்னும் பின்வரும் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்:



1. நான் மதுவிலக்கையும் கதிரொளி மின்னாற்றல் திட்டங்களையும் ஆதரிக்கிறேன்.

2. நான் சமுதாயவுடைமையை (Socialism) உறுதிப்பாட்டால் ஆதரிக்கிறேன். சமுதாயவுடைமைப் பொருளாதாரத்தை மோடி ஆதரிக்கவில்லை என்றால், அவரை நான் எதிர்ப்பேன்.

3. நான் மதச்சார்பின்மையை ஆதரிக்கிறேன். அவர் இசுலாமியருக்கு எதிரானவராகவும் இந்திய ஒருமைப்பாடு, மதஒற்றுமை ஆகியவற்றிற்கு எதிரானவராகவும் இருந்தால் நான் அவரை ஆதரிக்க மாட்டேன்.

4. நான் நீதி, சமுதாயம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றை ஆதரிக்கிறேன். நமது சட்ட மெய்யியலானது சமுதாயவுடைமையானதாக இருக்க வேண்டும். நாம் பின்பற்றிக்கொண்டு இருக்கும் சட்ட மெய்யியலானது பிரிட்டிசினுடைய சட்டமெய்யியலில் இருந்து நிலைமாற்றம் செய்யப்பட்டது ஆகும்.

5. நான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உறுதியளிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தின் சமுதாய அமைப்பை ஆதரிக்கிறேன். முழுமையாகவும் செயற்றிறத்தோடும் போர்க்குணத்தோடும் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையை மோடி ஏற்க வேண்டும் என நாம் விரும்புகிறோம்.

6. நான் இலவச சட்ட உதவியையும் நீதியையும் ஆதரிக்கிறேன். ஏழைகளுக்கான இலவசமாக சட்ட உதவிக்குரிய முழுமையான கொள்கை இருந்தால் மட்டுமே உண்மையான மக்கள்நாயகம் அமைய முடியும்.

7. இந்த தேசத்தின் மோசமான எதிரி ஊழலே ஆகும். அது இன்றைக்கு எங்கெங்கும் காணப்படுகிறது. எனவே ஊழல் ஒழிப்பிற்கான போர்க்குணமுள்ள பரப்புரை இயக்கமே மோடியின் செயற்றிறம் உடைய கொள்கையாக இருக்க வேண்டும். ஊழலின் சுவடே இல்லாமல் சமுதாயத்தைத் தூய்மைப்படுத்துவதே எந்தவோர் அரசாங்கத்தின் மிகவும் செயற்றிறமுடைய கொள்கையாக இருக்க வேண்டும்.

இந்த அறிக்கையை வெளியிட்ட கிருட்டிணய்யர், 2002 ஆம் ஆண்டில் குசராத்தில் இனப்படுகொலைகளை நடத்தி இந்தியாவின் இட்லராக மோடி மாறிய வரலாற்றை அறியாதவர் அல்லர். ஆனால், பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை நேர்மையாளர் வேடமிட்ட மன்மோகன்சிங்கின் ஊழல் முகம் வெளிப்பட்டதால் ஏற்பட்ட வெறுப்பு கிருட்டிணய்யரை 180 பாகை எதிர்திசையில் கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறது. எப்பொழுதும் மதில் மேல் பூனையாக இருக்கும் “நடுநிலையாளர்கள்” பலரும் இப்பொழுது இவரது மனநிலையில்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு மனிதநேயத்திற்கு எதிரான மதபயங்கரவாதத்தைவிட ஊழல் மிகவும் மோசமாகத் தெரிகிறது. எனவே இவர்கள் தம் கையில் இருப்பது நஞ்சு என்று தெரிந்தே அதனைக் குடிக்க ஆயத்தமாகிவிட்டார்கள்.

மதபயங்கரவாதத்தின் ஆபத்தை நன்கு அறிந்த சிலரோ, மன்மோகன் நிதியமைச்சராக இருந்த நாள்களில் அவர் தன்னை நேர்மையாளராகக் காட்டிக்கொள்வதற்காக ஆடிய “பதவி விலகல்” நாடகங்களை நினைவுகூர்ந்து, “அவர் நல்லவர்தான்; அவர் சார்ந்திருக்கும் கட்சியோடு கூட்டுச் சேர்ந்தவர்கள்தான் மோசமானவர்கள்” எனக்கூறி, “அடுத்தமுறை இந்திய தேசிய காங்கிரசு தனிப்பெரும்பான்மை பெற்றோ, ‘நல்லவர்’களோடு கூட்டுச் சேர்ந்தோ ஆட்சியைப் பிடிக்க வேண்டும். பா.ச.க. என்னும் நாசிசக் கட்சி (Nazism) எக்காரணத்தைக்கொண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது” என விரும்புகிறார்கள்.


இவர்களுக்கு ஊழலைவிட மதபயங்கரவாதம் ஆபத்தானதாகத் தெரிகிறது. எனவே மதச்சார்பின்மையின் மீதும் சமுதாயவுடைமையின் மீதும் நம்பிக்கை வந்திருந்த சவகர்லால் நேருவின் கொள்ளுப்பேரனோ, கொள்ளுப்பேத்தியோ பிரதமர் பதவிக்கு வந்து இந்த நாட்டை ஈடேற்றம் செய்ய மாட்டார்களா என்னும் ஏக்கம் இவர்கள் பேச்சிலும் முகத்திலும் தெரிகிறது. ஆனால் பா.ச.க.வின் நாசிசத்திற்கு எல்லா வகையிலும் ஈடுகொடுக்கும் வல்லமை இத்தாலிய மகளின் தலைமையில் இருக்கும் இந்திய தேசிய காங்கிரசு என்னும் ஃபாசிசக் கட்சிக்கு (Fascism) உண்டு என்பதையும் ஃபாசிசத்தின் தாய்வீடு இத்தாலி என்பதையும் இவர்கள் மறக்கத் துடிக்கிறார்கள்.

மதச்சார்பின்மையற்ற, ஊழலுக்கு எதிரான கட்சிகள் எனப் பொதுவாகக் கருதப்படும் இடதுசாரிக் கட்சிகளோ ஆட்சியைக் கைப்பற்றும் அளவிற்குப் பலம் பொருந்திய மாற்று அணியாக உருவாகவில்லை.

இந்த இக்கட்டான சூழலில், மதப்பயங்காரவாதத்தின் கொடூரமுகத்தையும் ஊழலின் கோரமுகத்தையும் அறிந்து, அவற்றைத் தவிர்க்க விழையும் பொறுப்புடைய மக்களின் நிலைமையோ, கண்கள் இரண்டையும் இழந்த கறுப்புப்பூனையை அம்மாவாசை நாளில் இருட்டு அறைக்குள் விளக்கை ஏற்றாமல் பிடிக்க முனைபவரின் நிலைமையைப் போல சிக்கலானதாக இருக்கிறது.

எனவே வரும்காலத்தில் இந்திய நாடு பயணிக்க வேண்டிய பாதை அமெரிக்கச் சார்புப் பாதையோ இந்துத்துவப் பாதையோ அல்ல; சமுதாயவுடைமை மக்கள்நாயகப் பாதையே என்னும் முடிவைத் தெளிவுபடுத்த வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக 2014 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் அமைய இருக்கிறது. எனவே, இடதுசாரிகளும் தம் உரிமைகளை வென்றெடுக்கப் போராடுகிற விளிம்புநிலை மக்களின் கட்சிகளும் இணைந்த மாற்று அணி ஒன்று மலர வேண்டிய கட்டாயம் தோன்றி இருக்கிறது. ஒருவேளை இந்த அணி ஆட்சியை அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மையைப் பெறமுடியாது போகலாம். ஆனால், ஆட்சியை அமைக்கும் அணியினர் இவ்வணியினரின் ஆதரவைப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தையேனும் உருவாக்க முடியும்; உருவாக்க வேண்டும். அந்நோக்கில் மாற்று அணி ஒன்று மலருமா?...... பொறுத்திருந்து பார்க்கலாம்.

No comments:

Post a Comment

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...