ஆசிரியர்

வளரிளம் பருவத்தினருக்கு வாழ்க்கைத் திறன்களைக் கற்றுத்தரும் தளிர்த் திறன் திட்டத்தில் ஆசிரியரை மதித்துப் பழகுக என்பது ஒரு பாடம். அதில் ஆசிரியரை மாணவர்கள் ஏன் மதிக்க வேண்டும் எனக் கூறும் பனுவலில் மாணவர்கள் மதிக்கத்தக்க ஆசிரியராக எப்படித் திகழ்வது என்பதனை உட்பனுவலாக அமைத்து எழுதினேன். அப்பனுவலுக்காக பின்வரும் பாடலையும் இயற்றினேன். இதில் ஓர் இலட்சிய ஆசிரியரின் தகுதிகளைப் பட்டியலிட்டு இருக்கிறேன். அத்தகு ஆசிரியர்களாக தமிழக ஆசிரியர்கள் திகழ வாழ்த்துகள்:


பாறையை உடைத்து
சிலைகளைச் செதுக்கும் சிற்பியைப் போல
பாடங்கள் நடத்திப்
பாதைகள் காட்டி பண்படச் செய்பவர்
யார்? அவர் யார்? (2)

உள்ளம் சோர்ந்து
ஒடுங்கி விடாமல் ஊக்கம் நல்கி
உலகம் போற்றும்
உயர்வை நோக்கி உயர்த்தி விடுபவர்
யார்? அவர் யார்? (2)

நன்னெறி புகட்டி
நல்வழி காட்டி நன்மொழி பேசி
பண்பினைப் பழக்கி
பலரும் வியக்க பக்குவம் செய்பவர்
யார் அவர் யார்? (2)

அறத்தின் வடிவாய்
அகத்தைச் செதுக்கி அறிவை ஊட்டி
ஆற்றல் கூட்டி
அகிலம் புகழ ஆளுமை வளர்ப்பவர்
யார்? அவர் யார்? (2)

மாணவர்க் குள்ளே
மறைந்து கிடக்கும் திறன்களை எல்லாம்
திறம்பட வளர்த்து
திசைகள் எட்டும் தெரியச் செய்பவர்
யார்? அவர் யார்? (2) (பாறையை உடைத்து)

அவர்தான் எங்கள் ஆசிரியர்
அவர்தான் எங்கள் ஆசிரியர்
அவர்தான் எங்கள் ஆசிரியர்
அவர்தான் எங்கள் ஆசிரியர்
அவர்தான் எங்கள் ஆசிரியர்
அவர்தான் எங்கள் ஆசிரியர்

Comments