ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த அழைப்புநேற்று காலை 8.30 மணிக்கு அலுவலகத்திற்கு பேருந்திற்குள் நின்றுகொண்டிருந்தேன். அப்பொழுது கைபேசி "பீப்" என ஒலித்தது. வலது கையிலிருந்த பையை இடதுகைக்கு மாற்றிக்கொண்டு, சட்டைப்பையில் இருந்து கைபேசியை எடுத்துப்பார்த்தேன். +61 எனத் தொடங்கும் எண் திரையில் மின்னியது. வெளிநாட்டு அழைப்பு எனத் தெரிந்தது. பேருந்தின் குலுக்கலில் யார்மீதும் மோதிவிடவோ, விழுந்துவிடவோ வகையில் நின்றுகொண்டு அழைப்பை ஏற்று கைபேசியைக் காதிற்குக் கொண்டுபோனேன்.

"வணக்கம்! அரி" “வணக்கம்! நீங்கள் அரிஅரிவேலன் தானே?” “ஆமாம்” “சில நிமிடங்கள் பேசலாமா?” “ம்ம்ம்…” அப்பொழுது பேருந்திற்குள் அலறிக்கொண்டிருந்த குத்துப்பாட்டின் ஒலியையும் மீறி ஓட்டுநர் ஒலிப்பானை அழுத்த, எதிர்முனையில் இருப்பவர் என்ன சொன்னார் என்பதே காதில் விழவில்லை. "பேருந்தில் இருக்கிறேன். பத்து நிமிடம் கழித்து கூப்பிடுகிறீர்களா?" என்றேன். "சரி ஐயா, அழைக்கிறேன்" என்றார் எதிர்முனையில் இருந்தவர்.

பத்து நிமிடம் கழித்து கைபேசி அழைத்தது. நான் அலுவலகத்தின் வாசலில் இருந்தேன். எடுத்து பார்த்தால் அதே எண்.

“வணக்கம். அரி பேசுகிறேன்.” “வணக்கம். நான் செல்வராஜ். ஆஸ்திரேலியா வானொலியில் இருந்து பேசுகிறேன். இது இந்திய நாட்டில் அகில இந்திய வானொலியைப் போல ஆஸ்திரேலிய வானொலி. இதன் தமிழ்ப் பிரிவில் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் நான். இந்த வானொலியில் தமிழகத்தின் அரசியல் நிலையைப் பற்றிய கருத்தை தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் பார்வையாளர்களிடம் பேட்டிகண்டு ஒலிபரப்புவோம். ஞாநி, சிகாமணி போன்றவர்கள் அவ்வாறு கருத்துக் கூறியிருக்கிறார்கள். இம்முறை நீங்கள் கருத்துக் கூற முடியுமா?”

'பார்ரா, உன்னோட புகழ் ஆஸ்திரேலியா வரைக்கும் பரவி இருக்கிறது' என்று கிண்டல் செய்தது மனம் ஒரு பக்கம். மறுபக்கம் 'வேறு யாரே என நினைத்துக்கொண்டு நம்மிடம் பேசுகிறார்' என எண்ணியவாறே, “என்னைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்? எனது எண் எப்படி உங்களுக்குக் கிடைத்தது?” என வினவினேன்.

“நண்பர் கொடுத்தார். அவர் உங்களுடைய எழுத்துகளைப் படித்திருக்கிறார். அதனால்தான் அழைத்தேன்” “அப்படியா?” “ஆமாம். முகநூலில் படித்திருப்பார்போல” “சரி. இப்பொழுது உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ “இன்றைய தமிழக அரசியல் சூழலைப் பற்றி இரண்டு அல்லது மூன்று கேள்விகளை நான் கேட்கிறேன். நீங்கள் அதற்கு பதில் சொல்லுங்கள். அதிலிருந்து சில துணைக்கேள்விகளைக் கேட்கிறேன். அதற்கும் பதில் சொல்லுங்கள். அவற்றை நான் பதிவுசெய்துகொள்கிறேன்.” “நான் இப்பொழுது அலுவலகத்தில் இருக்கிறேன். அதனால் உடனடியாகப் பதிவு செய்ய இயலாதே!” “இப்பொழுது கேள்விகளை முடிவுசெய்துகொள்வோம். உங்களது அலுவலக நேரம் முடிந்ததும் பதிவுசெய்துகொள்வோம்” “சரி. உங்களின் வினாகளைக் கூறுங்கள்”

அவர் மூன்று வினாகளைக் கூறினார். மூன்று மணிநேரம் கழித்து அழைத்து எனது துலங்கள்களை பதிவு செய்துகொள்வதாகக் கூறினார். இணைப்பைத் துண்டித்துவிட்டு அலுவலக வேலையில் மூழ்கிவிட்டேன்.

சரியாக பிற்பகல் ஒரு மணி. கைபேசி தும்மியது. “நண்பரே! பதிவுசெய்துகொள்ளலாமா?” “பதிவு செய்துகொள்ளலாம்”

அவர் வினாகளையும் துணை வினாகளையும் வினவினார். நான் எனது கருத்துகளைக் கூறினேன். ஏழு மணிகளுக்குள் அச்செவ்வி முடிந்தது. அது ஒலிபரப்பானதும் அதன் இணைய உரலியை அனுப்பவாதக் கூறினார். கூறியதைப் போலவே அனுப்பி வைத்திருக்கிறார். அதனைத்தான் இங்கே பகிர்ந்திருக்கிறேன்; கேட்டு உங்களின் கருத்துகளைக் கூறுங்கள்.

அந்த நண்பர் ஆஸ்திரேலியாவில் இருந்து பேசியதும் மொழிக்கலப்பின்றி தமிழைப் பேசியதும் “ழ”கரத்தை பிழையின்றி ஒலித்ததும் அவர் ஈழத்தமிழராக இருப்பாரே என எண்ண வைத்தது. வினவினேன். “இல்லை. ஈழத்திற்கு அருகில் இருக்கிற இந்திய நாட்டின் கன்னியாகுமரிப் பகுதியில் உள்ள மீனவ கிராமத்தைச் சேர்ந்தவன்’ என்றார். கடல்கடந்து சென்று அயலகத்தில் தமிழ்ப் பணியாற்றுகிற, தாயகத் தமிழகத்தின் அரசியலை நன்கு அறிந்து வைத்திருக்கிற அந்நண்பர் திருமிகு செல்வராஜ் வாழ்க!

அவரிடம், என்னை யாரென்றே தெரியாமல் அரசியல் கருத்துக்குரைக்கும் இதழாளர் என அறிமுகம் செய்த அந்த நண்பரைத் தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். அவருக்கு “நன்றி” கூற வேண்டும் 

http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/307650/t/Would-Jeyalalitha-be-next-PM-of-India/in/language

Comments