பா. ச. க.வும் காங்கிரசும் பதறுவது ஏன்?

பெரியவர்கள் சிலர், தாங்கள் வலிமையானவர்கள் எனக் காட்டவதற்காகக் கட்டிய காகித மாளிகையை அவ்வழியாக ஓடிவந்த சிறுவர்கள் ஒரே தட்டில் தடதடவெனச் சரியச் செய்வதைப் போல பாரதிய சனதா கட்சியினர் கடந்த சில ஆண்டுகளாக ஊதிப் பெருக்கச் செய்துகொண்டிருந்த “மோடி அலை” என்னும் காகித மாளிகையை தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியினர் தம்மை அறியாமலேயே தட்டிச் சரித்துவிட்டனர்.2013 திசம்பரில் மத்தியபிரதேசம், சட்டீசுகர், இராசசுதான், மிசோசரம், தில்லி ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. இவற்றுள் பா.ச.க. தான் ஏற்கனவே ஆண்டுகொண்டிருந்த மத்தியபிரதேசம், சட்டீசுகர் ஆகிய மாநிலங்களைத் தக்க வைத்துக்கொண்டது. கடந்த சில தேர்தல்களில் பா.ச.க., காங்கிரசு என இரண்டு கட்சிகளிடமும் மாறி மாறி ஆட்சியை ஒப்படைத்த இராசசுதான் மக்கள் இம்முறை ஆட்சியை காங்கிரசிடமிருந்து பறித்து பா.ச.க.விடம் கொடுத்துவிட்டனர். மிசோரத்தில் பா.ச.க.விற்கு வேர்களே இல்லாததால் அம்மாநிலத்தை ஏற்கனவே ஆண்டுகொண்டு இருந்த காங்கிரசு தக்க வைத்துக்கொண்டது.காங்கிரசும் பா.ச.க.வும் தமது வலிமையை நாட்டிற்குக் காட்டுவதற்கான களமாக தில்லி சட்டமன்றத் தேர்தலை நம்பின. அத்தேர்தலில் காங்கிரசு, பா.ச.கட்சி ஆகியவற்றோடு கடந்த 2012 அக்டோபர் 2ஆம் நாள் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிட்டது. ஆம் ஆத்மி கட்சியால் பா.ச.க.வின் வாக்குகள் பிரிந்து தாம் வென்றுவிடலாம் என காங்கிரசும், காங்கிரசின் மீது படிந்திருக்கும் ஊழல் கறையால் அதன் வாக்குகளை ஆம் ஆத்மி பிரித்து தாம் ஆட்சி அமைக்க வழிவகுக்கும் என பா.ச.க.வும் தேர்தலின் பொழுது நினைத்திருக்கக் கூடும். ஆனால் தேர்தல் முடிவோ வேறுவிதமாக அமைந்துவிட்டது. தில்லி சட்டமன்றத்திற்கு உரிய 70 தொகுதிகளில் பா.ச.க. 32 தொகுதிகளையும் ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதிகளையும் காங்கிரசு 8 தொகுதிகளையும் ஐக்கிய சனதாதளம் 1 தொகுதியையும் தனிவேட்பாளர் 1 தொகுதியையும் கைப்பற்றி உள்ளன. ஊதிப் பெரிதாக்கப்பட்ட மோடி அலை தில்லியில் பா.ச.க.வை கரை சேர்க்கவில்லை. பலரும் எதிர்பார்த்ததைப் போல காங்கிரசு ஆட்சியை இழந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது இடத்தைக் கைப்பற்றி எதிர்க்கட்சித் தகுதியைப் பெற்றது.ஆட்சியமைக்க குறைந்தது 36 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்னும் நிலையில் அதிக தொகுதியை வென்ற பா.ச.க. விற்கு ஆட்சி அமைக்க மேலும் 4 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. குதிரைபேரம் நடத்தி ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பும் அக்கட்சிக்கு இல்லை. மாறாக ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவை வேண்டிப் பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பா.ச.க.விற்கு இருந்தது. ஆனால், “மக்கள் எங்களை எதிர்க்கட்சியாகத்தான் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். ஆகவே நாங்கள் ஆட்சி அமைக்க மாட்டோம்; அது எங்களது நோக்கமன்று” என ஆம் ஆத்மி கட்சியினர் அப்பொழுது கூறிவந்தனர். எனவே, தாம் ஆட்சி அமைக்க மறுத்தால் அங்கு குடியரசுத் தலைவரின் ஆட்சி அமுலபடுத்தப்பட்டு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலோடு இச்சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும். அதுவரை மோடி அலை என்னும் மாயவலையைத் தொடர்ந்து பின்னி, நாடாளுமன்றத்தையும் தில்லி சட்டமன்றத்தையும் ஒரே நேரத்தில் பிடித்துவிடலாம் என பா.ச.க. கருதியது. எனவே ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்தும் ஆட்சி அமைக்க மறுத்தது. பா.ச.க. எதிர்பார்த்தபடியே தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை செயலாக்கம் செய்யும் நடைமுறைகள் தொடங்கின.இதற்கிடையில் அரசியல் நோக்கர்கள், ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரசின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க வேண்டும். இதன் மூலம் மறுதேர்தல் என்னும் செலவைத் தவிர்க்கலாம் எனக் கருத்துக் கூறத் தொடங்கினர். வீசுவதாகக் கூறப்படும் மோடி அலையை துடைத்து எறிய விரும்பிய காங்கிரசு, ஆம் ஆத்மி கட்சிக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாகக் கூறியது. இச்சூழ்நிலை மாற்றம் ஆம் ஆத்மி கட்சியினர் மனதில் மாற்றத்தை மெல்ல மெல்ல உருவாக்கியது. தாம் ஆட்சி அமைக்க உதவும் கட்சி, தாம் விதிக்கும் 18 கட்டளைக்கு உட்பட வேண்டும் எனக் கூறி அவற்றை காங்கிரசு, பா.ச.க. ஆகியவற்றிற்கு அனுப்பி வைத்தது. பா.ச.க. அக்கட்டளைகளை ஏற்க மறுத்தது. காங்கிரசு அவற்றுள் 16 கட்டளைகள் நிர்வாகம் தொடர்பானவை; அவற்றை ஆட்சி அமைக்கும் கட்சி தானே நிறைவேற்றிக்கொள்ளலாம் எனவும் 2 கட்டளைகள் மட்டுமே சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டியவை; அவற்றிற்கு தம் ஆதரவு உண்டு எனவும் தெரிவித்தது. ஆம் ஆத்மி கட்சியினர், ஆட்சிக்காக தம் எதிரியோடும் கைகோர்த்துக்கொண்டவர்கள் என்னும் முத்திரை தம் மீது விழுந்துவிடக் கூடாது என்பதற்காக மக்களிடம் கருத்துக் கேட்டல் என்னும் முறையை அறிமுகம் செய்து தில்லி வாக்காளர்களிடம் கருத்துக் கேட்டனர். சில நாள்களுக்குப் பின்னர் காங்கிரசு கட்சியின் ஆதரவோடு ஆட்சி அமைக்க தமக்கு மக்கள் ஆணையிட்டுவிட்டார்கள் எனக் கூறி அமைச்சர்களின் பட்டியலை அறிவித்து அரவிந்த் கெசுரிவால் தலைமையில் ஆட்சி அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.பா.ச.க. தான் எதிர்பாராத இந்தத் திருப்பத்தைக் கண்டு திகைத்துப்போய் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி கவனமாகக் கட்டமைக்கப்பட்ட “மோடி அலை”, ஆம் ஆத்மியால் துடைத்து எறியப்பட்டதாலும் அந்நிலை அடுத்த சில மாதங்களில் தொடங்க இருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளையும் பாதிக்குமோ என்னும் அச்சத்தாலும் பதறித் துடிக்கிறது. அண்ணா கசாரே உண்ணாவிரத்தை அடுத்து நடந்த நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஒன்றில் அரவிந்த் கேசிரிவாலின் தூண்டுதலில் அண்ணா கசாரே காங்கிரசை எதிர்த்து பரப்புரை ஆற்றியதை நட்போடு வரவேற்ற பா.ச.க. இப்பொழுது அதே அரவிந்த் கெசிரிவாலை நம்பிக்கைத் துரோகியாகப் பார்க்கிறது. ஆம் ஆத்மிக் கட்சியினர் தில்லி மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டார்கள் எனப் பிதற்றத் தொடங்கி இருக்கிறது. அதன் பதற்றம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. இது நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் எதிரொலிக்க இருக்கிறது.

அதேவேளையில் பூனை மடியில் கட்டிக்கொண்டு திருடப் போனதைப் போல, மோடி அலையை துடைக்க ஆம் ஆத்மிக் கட்சியினரை ஆதரிக்கிறமோ என்னும் அச்சம் காங்கிரசிற்கு இருக்கிறது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் நடைபெற்ற ஊழல்களைத் தோண்டி எடுப்போம்; உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என ஆம் ஆத்மி கட்சியினர் பேசத் தொடங்கி இருப்பது காங்கிரசு கட்சியினர் பலரின் வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கி இருக்கிறது. எனவேதான் காங்கிரசு கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான சனார்த்தனன் திவேதி, ஆம் ஆத்மி கட்சியினர் பலி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என சில நாள்களுக்கு முன்னர் கூறி இருக்கிறார். ஆம் ஆத்மி கட்சியினர் அவ்வாறு ஈடுபட்டால் சரண்சிங், சந்திரசேகர் போன்ற பெரும்புள்ளிகளையே, பஞ்ச தந்திரங்களில் ஒன்றான அடுத்துக்கெடுத்தலைப் பயன்படுத்திக், கவிழ்த்த தங்களால் அரசியல் அனுபவம் அற்ற அரவிந்த் கெசிரிவாலையும் கவிழ்த்துவிட முடியும் என காங்கிரசு நம்பிக்கொண்டு இருக்கிறது.

எனவே பா.ச.கட்சியை பதற வைத்திருக்கிற, காங்கிரசு கட்சிக்கு உதறலைக் கொடுத்திருக்கிற ஆம் ஆட்சியின் ஆட்சிக் காலம் ஒரே ஒரு நாளாகவும் இருக்கலாம் ஐந்தாண்டுகளாகவும் இருக்கலாம்; அது அவர்கள் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கையைப் பொறுத்து இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!

Comments