தில்லையாடியில் உள்ள வள்ளியம்மை நினைவு மண்டபம் |
கிழக்குக் கடற்கரைச் சாலையில் சீர்காழியில் இருந்து நாகபட்டினத்தை
நோக்கிச் சென்றுகொண்டு இருந்தபொழுது, திருக்கடவூரைத் தாண்டியதும் சாலையின் வலதுபுறத்தில்
இருந்த அந்தத் தோரணவாயில் கண்ணிற்பட்டது. அதிலிருந்த
தில்லையாடி என்னும் பெயர் பசுமை இலக்கியவாணர் பாமயனையும் என்னையும் ஈர்த்தது. “தென்னப்பிரிக்க சத்தியாக்கிரகத்தில் இறந்த வள்ளியம்மையின்
பெயருக்கு முன் இருக்கும் தில்லையாடி இதுதானா?” என வினவினார் பாமயன். இதுதான் என்றார்
எங்களோடு வந்தவரும் அப்பகுதியில் 1969 ஆம் ஆண்டு முதல் நிலவுரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டு
இருக்கும் கிருட்டிணம்மாள் – செகநாதன் இணையரின் பெயரனுமான காந்தி. “ஊருக்குள் போய் பார்க்கலாமா?” என்றேன் நான். எங்களது
மகிழுந்து தோரணவாயிலில் இருந்து தொடங்கும் கிளைச் சாலையில் திரும்பியது. “இப்பா ஏதோ ஒரு சினிமா பாட்டுல தில்லையாடி வள்ளியம்மைன்னு
பாடி பிரச்சனையா இருக்க அந்த தில்லையாடி வள்ளியம்மை ஊரா அண்ணே இது?” என காந்தியை வினவினார்
மகிழுந்து ஓட்டுநர். “ஆமா அந்த ஊருதான்” என காந்தி கூற, நெடுஞ்சாலையில் இருந்து ஏறத்தாழ
மூன்று கிலோ மீட்டர் மேற்கு நோக்கி வந்திருந்தோம். எதிரே தாமரைப்பூத் தூண் ஒன்று நின்றுகொண்டிருந்தது.
அதன் பின்னால் தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபம் என பெயர் எழுதப்பட்ட கட்டிடம் தெரிந்தது.
மகிழுந்தைவிட்டுக் கீழே இறங்கினோம். காந்தி
எங்களை மண்டபத்திற்குள் அழைத்துக்கொண்டு போனார்.
உள்ளே
நுழைந்தால் வாயிலுக்கு அருகில் வள்ளியம்மாளின் மார்பு அளவுச் சிற்பம் ஒரு மேடையின் மீது இருத்தப்பட்டு இருக்கிறது. அதற்குப் பின்னே பெரிய அரங்கம். அதன் மேற்குச் சுவரில் காந்தியின் உருவம் பெரிய
அளவில் வரையப்பட்டு இருக்கிறது. சிலைக்கு அருகில்
நின்று அந்தப் படத்தைப் பார்த்தபொழுது, காந்தி மண்டபம் ஒன்றை வள்ளியம்மாளின் சிலைக்கு
அருகில் நின்று பார்க்கும் உணர்வே எனக்கு ஏற்பட்டது. மண்டபத்தின் வடக்குச் சுவரின்
ஒரு பகுதியில் வள்ளியம்மாளின் வரலாறு கல்வெட்டாகப் பதிக்கப்பட்டு இருக்கிறது. காந்தியின் படம், கல்வெட்டு ஆகியவை நீங்கலாக, நான்கு
சுவர்களின் பிற இடங்களை அப்பகுதியில் இருந்து தென்னப்பிரிக்காவிற்குச் சென்ற மக்கள்
பலரின் பழுப்பேறிய தனிப்படங்களும் குழுப்படங்களும் நிறைந்திருக்கின்றன. அவற்றை பெரும்
அக்கறையோடு தேடிக் கண்டெடுத்து அங்கு காட்சிக்கு வைத்த பெயர் தெரியாத அந்த அரசு அலுவலரைப்
பாராட்டிக்கொண்டே, அப்படங்கள் ஒவ்வொன்றையும் நாங்கள் நால்வரும் பார்த்துக்கொண்டு இருந்தோம்.
அப்பொழுது, “தில்லையாடி வள்ளியம்மைன்னு பள்ளிக்கூட பாடப்புத்தகத்துல ஒருவரியில வந்துட்டுப்போன
பெயருக்கு பின்னால ஒரு பெரிய வரலாறு இருக்கும் இதுவரைக்கும் தெரியாதே” என்றார் ஓட்டுநர். “தாத்தாவும் பாட்டியும் அடிக்கடி சொல்லிக் கேட்டு
இருக்கேன். காந்தியோட 24 வயதுல இருந்து 45 வயதுக்குள்ள நடந்த தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்தான்
அவர மகாத்துமாவா மாத்துச்சாம்” என்றார் காந்தி. “உண்மதான். காந்திக்கு மகாத்துமான்னு
தாகூர் பட்டம் கொடுக்கிறதுக்கு முன்னாடியே அவரு தென்னாப்பிரிக்காவில நடத்துன போராட்டத்தக்
கேள்விப்பட்ட ஜி.சுப்பிரமணியன் 1912இல சுதேசமித்திரன் தலையங்கத்துல காந்திய ‘ஒரு மகாத்துமாவோ’ன்னு
பாராட்டி இருக்காரு. 1918இல சென்னைல இருந்த கணேஷ் அன் கோ’ங்கிற பதிப்பகம் “தற்காலத்தின்
கதாநாயகர்கள்” (Heros of the hour) என்கிற புத்தகத்தில ‘மகாத்துமா காந்தி’ன்னு ஒரு
கட்டுரைய வெளியிட்டிருக்கு.” எனக்கூறிய பாமயன், “தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகத்தோட
தொடக்கமே பாலசுந்தரங்கிற தமிழ் ஒப்பந்தத் தொழிலாளியோட உரிமைக்கான வழக்கிலிருந்துதான்
தொடங்குது. நாகப்பன், நாராயணசாமி, வள்ளியம்மை இந்த மூணு பெயரும் அந்தப் போராட்டத்தில
இறந்த தமிழர்கள்.” என்றும் கூறினார். அந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டே படங்களை பார்த்துக்கொண்டு
இருந்த எனது மனதிற்குள் காந்தி எழுதிய “தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரகம்” நூலில்
உள்ள காட்சிகள், எதிரே இருந்த படங்களின் செல்வாக்காமல் பழுப்பு நிறத்தில் ஓடத் தொடங்கியன.
தம் பொருள்களுக்கு சந்தையைத் தேடிக்கிளம்பிய ஆங்கிலேயர்கள் தென்னாப்பிரிக்காவின்
நேட்டால் (NATAL) பகுதியில் கரும்பு பயிடலாம் என அறிந்தார். உள்ளூர் மக்களான சூலூகள் தமது ஆறு மாதம் உழைப்பில்
ஈட்டும் வருவாயில் ஓராண்டு முழுவதும் வாழும்நிலையில் இருந்தார்கள். ஆகவே அவர்கள் ஆங்கிலேயருக்கு
பணிசெய்ய விரும்பவில்லை. எனவே, இந்தியர்களை வேளாண்மையில் ஈடுபடுத்த முடிவு செய்தனர்.
இந்தியாவிலிருந்து ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் நேட்டால் வந்து பணியாற்றுவோர் அதன்பின்னர்
குடியேறவும் நிலமும் வைத்துக்கொள்ளலாம் என இந்திய வைசுராக்குத் தெரிவித்தனர். அதன் விளைவாக தமிழகம், உத்திரப்பிரதேச மாநிலங்களில்
இருந்து சென்ற இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களின் முதலணியினர் 1860 நவம்பர் 16ஆம் நாள்
தென்னாப்பிரிக்காவின் நேட்டால் மாகாண துறைமுகமான டர்பனைச் சென்றடைந்தனர். அவர்களைத்
தொடர்ந்து பல இந்தியக் குடும்பங்கள் அங்கே சென்றனர். ஒப்பந்தக் காலம் முழுவதும் அடிமைகளைப்
போல வாழ்ந்தனர். கரும்பு வயல்களிலும் சர்க்கரை ஆலைகளிலும் கடுமையாக உழைத்தனர். இந்தியாவிலிருந்து
தம்மோடு கொண்டுவந்த விதைகளை கறிகாய்களையும் உள்ளூர் கறிகாய்களை குறைந்த செலவிலும் பயிரிட்டனர்.
ஒப்பந்தக் காலம் முடிந்ததும் அவர்கள் ‘விடுவிக்கப்பட்ட இந்தியர்’களாக மாறி வணிகத்தில்
ஈடுபட்டனர். நிலமும் வீடும் வாங்கினர். அம்மக்களைப்
போலவே புதுச்சேரி முனுசாமி முதலியாரும் அவர் மனைவி தில்லையாடி சானகியம்மாளும் ஒப்பந்தத்
தொழிலாளர்களாக தென்னாப்பிரிக்காவிற்குச் சென்று
உழைத்து விடுவிக்கப்பட்ட இந்தியர்களாக காய்கனிக் கடை நடத்தினர். அவர்களுக்கு வள்ளியம்மை
1898 ஆம் ஆண்டில் பிறந்தார். உரிய வயதில் அங்குள்ள அரசுப் பள்ளியில் சேர்ந்து படித்தார்.
விடுவிக்கப்பட்ட இந்தியர்களின் முன்னேற்றத்தைக் கண்ட இந்திய
வணிகர்கள் பலரும் அங்கே வணிகம் செய்யச் சென்றனர். அப்படிச் சென்ற வணிகர் ஒருவரது நிறுவனத்தின்
வழக்குரைஞராகத்தான் 1893 ஏப்ரலில் காந்தி தென்னாப்பிரிக்காவிற்குச் சென்றார்.
2008ஆம் ஆண்டில் இந்திய அஞ்சல் துறை வள்ளியம்மாள் நினைவாக வெளியிட்ட அஞ்சல்தலை |
இப்படி நிறைய இந்தியர்கள் வந்து தமது வணிகத்திற்குப் போட்டியாக மாறுவதைத் தவிர்க்க விரும்பிய ஆங்கிலேயர்கள்
ஒப்பந்தக் காலம் முடிந்ததும் இந்தியர்கள் தம் தாயகம் திரும்பிவிட வேண்டும். திரும்ப
விரும்பாதவர்கள் ஒவ்வோராண்டும் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். திரும்பிச்
செல்லவோ, ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கவோ விரும்பாத 16 வயதுக்கு மேற்பட்ட ஆண் 13 வயதுக்கு
மேற்பட்ட பெண் ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் 25 பவுண்டு வரி செலுத்த வேண்டும் என 1893 ஆம்
ஆண்டில் இந்திய வைசுராய் எலிசின்னுக்குத் தெரிவித்தனர். அவரோ அதனை மூன்று பவுண்டாகக் குறைக்கலாம் என்றார். அத்தொகை ஒப்பந்தத் தொழிலாளர் ஒருவரின் ஆறு மாதஊதியம்
ஆகும். இதனை எதிர்த்து அம்மக்கள் போராட்டத்
தொடங்கினர். அதனை அடுத்து 1894 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட வாக்குரிமைத் திருத்த பிரேரணை,
இந்திய வணிகர்களின் வாக்குரிமையைப் பறிப்பதாக இருந்தது. அதனை எதிர்க்க 1984 ஆகத்து
22ஆம் நாள் நேட்டால் காங்கிரசு என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் நேட்டால்
மாகாண வாழ் இந்தியர்கள் டிரான்சுவால் மாகாணத்திற்குள் நுழைவதற்கு புதிதாக உருவாக்கப்பட்ட
ஆசிய விவகாரத் துறையிடம் அனுமதிபெற வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது. இதனால் தென்னாப்பிக்கா
இந்தியர்கள் இடம்பெயர்வதே சிக்கலாக மாறியது.
1906 ஆகத்து 22ஆம் நாள் வெளியிடப்பட்ட
அவசரச் சட்டம் இந்தியர்கள் ஒவ்வொருவரும் ஆசிய
விவகாரத் துறையிடம் தமது பெயரையும் கைரேகையையும் பதிவுசெய்து அனுமதி அட்டையைப் பெற
வேண்டும் எனக் கூறியது. அதனை இந்தியர்கள் கறுப்புச்சட்டம் என அழைத்தனர். அதனை எதிர்த்து
அறப்போர் நடத்துவது என 1906 செப்டம்பர் 11ஆம் நாள் முடிவெடுக்கப்பட்டது. இந்தியர்கள் டிரான்சுவல் மாகாணத்திற்குள் நுழைவதைத்
தடுக்க 1907ஆம் ஆண்டில் டிரான்சுவல் குடியேற்றநுழைவுத் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
இதனை எதிர்த்து டிரான்சுவல் மாகாணத்திற்குள் நுழையும் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் நாகப்பன், நாராயணசாமி என்னும்
இரு தமிழர்கள் மாண்டனர். இச்சட்டங்களுக்கு எல்லாம் உச்சமாக 1913 மார்ச்
14ஆம் நாள் கேப்டவுன் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி செரேல் என்பவர் வழக்கொன்றிற்கு வழங்கிய
தீர்ப்பில் திருமணப் பதிவாளரின் பதியப்பட்ட கிறித்துவத் திருமணங்கள் தவிர பிற திருமணங்கள்
தென்னாப்பிரிகாவில் சட்டப்படியான தி
ருமணங்களாகக் கருதப்பட மாட்டா எனத் தீர்ப்பளித்தார்.
இதனால் இந்து, இசுலாமிய, பார்சிய முறைப்படி நடந்த திருமணங்கள் அனைத்தும் செல்லாதவை
ஆகிவிட்டன. திருமணமான இந்தியப் பெண்கள் மனைவி என்னும் தகுதியை இழந்து காமக்கிழத்தியர்
என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். எனவே அதுவரை
அறப்போரில் ஈடுபடுத்தப்படாமல் இருந்த பெண்களை அறப்போரில் ஈடுபடுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
சோகன்சுபெர்க் நகரில் இருந்த டால்சுடாய் பண்ணையில் வாழ்ந்த
11 பெண்கள் வீரம்மாள் என்பவர் தலைமையில் அனுமதிபெறாமல் டிரான்சுவால் பகுதியில் இருந்து
நேட்டால் பகுதியில் உள்ள நியூகேசில் நிலக்கரிச் சுரங்கத்திற்குச் சென்று அங்குள்ள தொழிலாளர்களை
வேலை நிறுத்தத்தில் ஈடுபட அழைப்பது என முடிவு செய்யப்பட்டது. சட்டத்தைமீறி டிரான்சுவால்
எல்லையைக் கடந்த பெண்களை அரசு கைது செய்யவில்லை. எனவே நேட்டால் பகுதியின் பீனிக்சு
பண்ணையில் வாழ்ந்த 16 பெண்கள் டிரான்சுவால் எல்லைக்குள் நுழையக் கிளம்பினர். அவர்கள்
1913 செப்டம்பர் 23ஆம் நாள் கைது செய்யப்பட்டனர். அதனையடுத்து சோகன்சுபெர்க் நகரில்
இருந்து அடுத்த பெண்கள்அணி நியூகேசிலை நோக்கிக் கிளம்பியது. இந்த அணியில்தான் வள்ளியம்மையும்
அவர்தாய் ஜானகியம்மாளும் கிளம்பினர். அவர்கள்
அனைவரும் 1913 அக்டோபர் 23ஆம் நாள் கைது செய்யப்பட்டனர். மூன்று மாத கடுங்காவல் தண்டனை
விதிக்கப்பட்டு மாரிட்சுபெர்க் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். வள்ளியம்மை கடுமையான
காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். எனவே அவரைத்
தண்டனை முடிவதற்கு முன்னரே விடுதலை செய்தனர். வள்ளியம்மையை ஒரு போர்வையில் கிடத்தி,
தொட்டிலில் தூக்கி சிறைக்கு வெளியே கொண்டுவந்தனர். அவரை சந்தித்த காந்தி, “நெட்டையான உருவமுடைய அப்பெண்
உடலி மெலிந்து படுக்கையில் கிடந்தாள்” என்கிறார். அந்நிலையிலும் வள்ளியம்மை மீண்டும்
சிறைக்குச் செல்லும் மனவுறுதியோடு இருந்தார். வெளியே வந்த சிலநாள்கள் கழிந்து 1914
பிப்ரவரி 22ஆம் நாள் மரணமடைந்தார். அவரது உடலை
சோகன்சுபர்க் நகர பிராம்பவுன்டின் இடுகாட்டில் புதைத்து கல்லறை எழுப்பினர். அதன்மீது
“சாத்துவீக எதிர்ப்பாளராக மாரிட்ஸ்பர்க் சிறைக்குச் சென்று அங்கு நோயுற்று 1914ஆம்
ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் நாள் காலமான எங்களது சகோதரியின் அன்பான நினைவுக்கு” எழுதி
வைத்தனர்.
காந்தி 1915ஆம் ஆண்டில் தில்லையாடிக்கு வந்ததன் நினைவுவாக எழுப்பப்பட்டுள்ள தூணின் முன்னர் பாமயனும் காந்தியும் |
நாங்கள் அங்கிருந்த படங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தபொழுது,
உள்ளூர் இளைஞர் ஒருவர் கையில் புத்தகம் ஒன்றோடு அங்கு வந்தார். அவரிடம் வாசலில் இருக்கும்
நினைவுத்தூண் எதற்காக நிறுவப்பட்டது என வினவினேன். “காந்தி 1915 மே 1ஆம் நாள் தில்லையாடிக்கு வந்தார்.
தென்னாப்பிரிக்கா அறப்போரில் கலந்திக்கிட்டவங்க சிலரு இங்க இருந்தாங்க. அவர்கள இந்த
இடத்திலதான் சந்திச்சாரு. அதுனால அவர் நினைவாக இத்தூண ஊன்றியிருக்காங்க” என்றார்.
“வள்ளியம்மை உறவினர்கள் யாரும் இங்கே இருக்காங்களா?” என வினவினேன். “வள்ளியம்ம வாரிசுகளுக்கு
அரசு உதவித்தொகை கொடுக்கப் போகுன்னு கொஞ்ச நாளுக்கு முன்னாடி யாரோ வந்ததியக் கிளப்பிவிட்டாங்க.
உடனே இரண்டு சாதிக்காரங்க, அவரு எங்க சாதி, உங்க சாதி இல்லன்னு சண்டபோட ஆரம்பிச்சிட்டாங்க”
என்றார். இதைக் கேட்டதும் 1914 சூலை 15ஆம் நாள் சோகன்சுபர்க் நகரில் உள்ள பிராம்பவுன்டின்
கல்லறையில் நாகப்பனுக்கும் வள்ளியம்மைக்கும் நடுகல் ஊன்றும் நிகழ்வில் பங்கேற்ற காந்தி,
“தமிழர்கள் பொறாமை உணர்ச்சியையும் சாதி வேற்றுமை பாராட்டுவதையும் கைவிட வேண்டும்.”
என தமிழர்களுக்கு அறிவுரை கூறியது மின்னலாய் நினைவில் தோன்றி மறைந்தது. அவர் கூறிய
அறிவுரையின் நூற்றாண்டு இது. ஆனால் அந்த அறிவுரைக்கு இன்னும் தேவை இருப்பதுதான் தமிழ்ச்
சமூகத்தின் கொடுமை.
அம்ருதா இதழின் 2014 செப்டம்பர் மடலில் இக்கட்டுரை வெளிவந்துள்ளது. |
No comments:
Post a Comment