பனைத் தொழில் - ஒரு பார்வை

'கற்பகத் தரு' என அழைக்கப்படும் பனை இந்தோனேசியா, மலேசியா, சீனா, வங்காளம், இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இந்தியாத் துணைக்கண்டத்தில் மேற்கு வங்கம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிகம் காணப்படுகிறது.

கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் (Kadhi and Village Industry Commission) எடுத்த கணக்கெடுக்கின்படி 10.2 கோடி பனை மரங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. இவற்றுள் 50 விழுக்காடு மரங்கள் நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்ந்துள்ளன. சேலம், சென்னை, செங்கற்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் அதிகமான அளவு நிறைந்துள்ளன. பிற மாவட்டங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் குறைவானதே.பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவிலிப் பொருள்களாகும். கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றை பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆசுதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. உள் நாட்டிலே உணவிலிப் பனைப் பொருள்கள் பெரிதும் கோவா, கன்னியாகுமரி, பெல்லாரி ஆகிய இடங்களுக்கு விற்பனைக்கென அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றுள் கோவா முன்னணியில் இருக்கிறது.

விவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக பேரளவு வேலை வாய்ப்பினைக்கொண்டதாக பனைத்தொழில் விளங்குகிறது. 1985 - 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது. இதில் பனைத் தொழிலாளர்கள் வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் ஆகியோர் அடங்குவர். இளம் மரங்கள் நீங்கலாக பனையேறத் தகுந்த எல்லா மரங்களையும் பயன்படுத்தினால் தமிழகத்தில் மட்டும் மேலும் 10 லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பினை இத்தொழில் வழங்கும்.

பனையேறுதல் என்பது பருவகாலத் தொழில். ஏப்ரல் முதல் ஆகசுடு வரை இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலும் ஆகசுடு முதல் மார்ச் வரை கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை சேலம், தருமபுரி மாவட்டங்களிலும் பனையேற்றம் நிகழும். இது ஒரு பருவ காலத் தொழிலாக இருப்பதால் இம்மாவட்டங்களில் வேலை தேடி இடம்பெயருதல் பெருமளவு நிகழ்கிறது.

பனையேற்றம் என்பது மரமேறுதல், பூ பக்குவம் அறிதல், சாறு சேகரித்தல் எனப் பல்வேறு திறன்களை உள்ளடக்கிய தொழில் ஆகும். மரமேற நெஞ்சப் பட்டை, இடை வார், தளை ஆகியன பயன்படுத்தப்படுகின்றன. இத்தொழில் புரியும்போது மரத்தின் சொரசொரப்பான பகுதியில் உடல் உராயும்பொழுது சிராய்ப்பு ஏற்பட்டு உடல் பொலிவிழக்கிறது. மரம் ஏறுதலின் இடரையும் துன்பத்தையும் களைய இயந்திரச் சாதனங்கள் எதுவுமில்லை. ஒரு மரம் சராசரி 36 முதல் 42 மீட்டர் வரை உயரமுடையது. எனவே ஒரு நாளைக்கு இரு முறை 30 முதல் 40 மரங்கள் ஏறுதல் என்பது பெரும் இடர் மிகுந்தது ஆகும்.

80 விழுக்காட்டிற்கும் அதிகமான பனைத் தொழிலாளர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ்தான் வாழ்கிறார்கள். ஒரு பனைத் தொழிலாளர் நாள்தோறும் 10 முதல் 15 மணி நேரம் வரை மேற்கொள்ளும் வேலைக்கு 15 ரூபாய்கள் வரை சம்பாதிக்கிறார். எனவே ஒரு பனைத் தொழிலாளரின் குடும்ப வருமானமானது அவர் எத்தனை பனை மரங்கள் ஏறுகிறார் என்பதனையும் அவர் குடும்பத்தில் எத்தனை உழைப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதனையும் பொருத்தே அமைகிறது. பெரும்பான்மையான பனைத் தொழிலாளர்களுக்கு சொந்த மரங்களில்லை. தமிழகத்தில் உள்ள பனையேறும் குடும்பங்களில் 67.85% குடும்பங்களுக்கு சொந்த மரங்கள் கிடையாது என ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் நீங்கலாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நிலக்கிழார்கள் பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து பதநீர் இறக்கக் குறைந்த கூலிக்கு ஆள்களை நியமித்துக்கொள்கிறார்கள். சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநிலப் பனைவெல்லம், தும்பு ஆகியவற்றைச் சந்தையிடும் கூட்டுறவு இணையத்தின் கூற்றுப்படி இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பிறவகைத் தொழிலாளர்களின் அன்றாடக் கூலி விபரம் வருமாறு:

தொழிலாளர்கள் கூலி ரூ.
நார் வினைஞர்கள் 15
பனையோலையும் நாரும் வெட்டுவோர் 15
நார்ப்பெட்டி முடைவோர் 10
நார் விற்போர் 8
வெல்லம் காய்ச்சும் பெண்கள் 6
நுங்கு விற்போர் 6

கதர் மற்றும் சிற்றூர் தொழில் குழுமத்தின் 1985-86ஆம் ஆண்டுக் கணக்கின்படி ஒரு பனைத் தொழிலாளியின் சராசரி வருமானம் மாதத்திற்கு ரூ.486/- ஆகும்.

வெல்ல உற்பத்தியில் பனைத்தொழிலாளியின் ஒட்டு மொத்தக் குடும்பமுமே பங்கேற்க வேண்டியுள்ளது. பெண்களும் குழந்தைகளும் வெல்ல உற்பத்திக்கான பதநீரைக் கொணர்தல், விறகு சேகரித்தல், பதநீர் காய்ச்சுதல் ஆகியவற்றில் நீண்ட நேரம் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் மட்டும் 46000 பெண்கள் வெல்ல உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். கூடை முடைதல், கயிறு திரித்தல், தூரிகை தயாரித்தல், அறைகலன் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள உடல் உழைப்பாளர்கள், அதிகம் உழைத்து மிகக்குறைந்த ஊதியமே பெருகின்றனர்.

பனைத்தொழில் பருவகாலத் தொழிலாக இருப்பதாலும் இதிலிருந்து கிடைக்கும் வருமானம் படுகுறைவாக இருப்பதாலும் பனைத் தொழிலாளர்கள் வாழ்வின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக்கொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள். மேலும் மருத்துவச் சிகிச்சைக்கு என்றும் வெல்லம் தயாரிக்கத் தேவையான விறகுகள் வாங்கவும் பெருமளவு செலவிட வேண்டியநிலையில் இருக்கிறார்கள். இதன் விளைவாக அவர்கள் வட்டிக் கடைக்காரர்களின் கொடும்பிடிக்குள் சிக்கித் தவிக்கின்றனர்.

பெரும்பான்மையான பனைத் தொழிலாளர்கள் எழுத்தறிவற்றவர்கள். மிகச் சிலரே அடிப்படைக் கல்வி பெற்றவர்கள். பெரும்பான்மையானவர்கள் கந்தல் ஆடை அணிவோரே. போதுமான குடியிருப்பு வசதிகளே இல்லாதவர்கள். காற்றோட்டமும் நலவாழ்வும் இல்லாத குடிசைகளிலும் மிகச் சிறிய கூரை வீடுகளிலும் வாழ்பவர்கள்.

பனஞ்சாறு உடலுக்கு நலம் தரும் நீரகம். இதில் கொழுப்பு, புரதம், கனிமங்கள், உயிர்சத்துகள், இரும்பு, எரியம், சுண்ணாம்பு, கரிநீரகி ஆகியன உள்ளன. இது சத்துள்ளது. எளிதில் செரிக்கக் கூடியது. இது எலும்புருக்கி நோயைக் குணப்படுத்தும் தன்மையுடையது என்றும் ஈரல் நோய்க்கு ஏற்ற மருந்தென்றும் கருதப்படுகிறது. 25% குறையாத பதனீர் நேரடியாகவே நுகரப்படுகிறது. மீதம் உள்ளவை வெல்லம் தயாரிக்கப் பயன்படுகின்றன. உற்பத்தி செய்யப்பட்ட வெல்லத்தின் பெரும்பகுதி உள்ளூரிலேயே விற்கப்படுகிறது. அவசரப் பணத்தேவை, சந்தைவிலையை அறியாமை, சந்தைக்குக் கொண்டு செல்ல நேரமின்மை ஆகியவற்றின் காரணமாக இடைத்தரகர்களின் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.

உணவிலிப் பனைப்பொருள்களை உற்பத்தி செய்தல், சந்தையிடல் ஆகியவற்றிலும் கூடச் சிக்கல்கள் உள்ளன. போதிய முதலீடின்மை, தொழிலாளர் எண்ணிக்கைக் குறைவு ஆகியன பெரும் சிக்கல்கள் எனக் கூறப்படுகின்றன. மிகக் குறைந்த வருமானத்தையே நல்கும்நிலையில் பனைத்தொழில் இருப்பதால் தொழிலாளர்களை பெருமளவில் ஈர்க்க முடியாமல் இத்தொழில் மெல்ல மெல்ல நலிந்து கொண்டிருக்கிறது.

எவ்வாறாயினும் பனைத்தொழில் பெருமளவு வேலைவாய்ப்பும்; உணவு மற்றும் உணவிலிப் பனைப் பொருள்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தேவை இருத்தல் வெள்ளிடை மலை. பனங்கற்கண்டு போன்ற மதிப்புடை உணவுப் பொருள்களை உற்பத்தி செய்தல் மூலம் முன்னைய சிக்கல்களை வினைவலிமையோடு எதிர்கொள்ள முடியும் என்பதை மார்த்தாண்டத்திலுள்ள பனைத் தொழிலாளர் மேம்பாட்டுச் சங்கம் கண்டது. பதநீரைக் கொண்டு வெல்லம் காய்ச்சுவதைக் காட்டிலும் பனங்கற்கண்டு தயாரித்தல் இலாபமுடையது என்று கண்டறியப்பட்டது. இவ்வுற்பத்தியால் பனைத்தொழிலாளர் வாழ்வும் தொழிற்றுறையின் வளர்ச்சியும் மேம்படுவது ஐயத்திற்கு இடமின்றி நிரூபனமானது. ஆகவே பிற பகுதிகளிலும் இவ்வுற்பத்தியை மேற்கொள்ளலாம். இம்மாற்றத்தால், பனைத் தொழிலாளர் குடும்பம் பொருளாதார பலன் பெறுவதோடு நில்லாமல், அவர்கள் மீது சுமத்தப்பட்ட சமூக இழுக்கும் காவல் துறையினரின் கெடுபிடியும் மெல்ல மெல்ல வீழ்ந்து காலவோட்டத்தில் இல்லாது ஒழியும் நிலை ஏற்படும்.

உணவிலிப் பனைப்பொருள்களை உற்பத்தி செய்யும் அலகுகளை தோற்றுவிக்கும் பணியில் கூட்டுறவுத்துறையும் தன்னார்வத் தொண்டகங்களும் தனியார்களும் ஈடுபட்டுள்ளனர். வடிவமைத்தல் பயிற்சி, உற்பத்திப் பொருள்களை பரவலாக்கல், சரியான முதலீடு, சந்தையிடல் வசதிகள் ஆகியன உணவிலிப் பொருள்களின் உற்பத்தியையும் சந்தையிடலையும் அதிகப்படுத்தியுள்ளன. ஒரு சந்தையிடல் இணையம் இப்பொருள்களின் தேவை, அளிப்பு ஆகியன தொடர்பான சிக்கல்களை மிகவும் சிறப்பாகச் சமாளிக்க முடியும்.
தமிழகம் முழுவதும் உள்ள பனைத் தொழிலாளர்களுக்கு பனைத் தொழில் கொண்டுள்ள வளவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு தந்து அவர்கள் வாழ்க்கையை சீர்படுத்தும் செயல்களில் இறங்க ஊக்கம் தருவது தேவையான செயலாகும். இதில் பனைத் தொழிலாளர் மேம்பாட்டுச் சங்கம் முன்னோடியாகத் திகழ்கிறது. இதன் கனிகள் மும்மாதிரியாகத் திகழ்கின்றன, இம்முன்மாதிரிகளை அவ்வவ்விடச் சூழலுக்கு ஏற்ப பின்தொடர்தல் வேண்டும். பனைத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஓர் அமைப்பின் கீழ் அவர்கள் திரளவும் ஊக்குவிக்கும் வகையில் கல்வி வழங்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் தங்களுக்குத் தேவையான சமூக நீதியை வேண்டிப் போராட முடியும். அதே வேளையில் அதிக வேலைவாய்ப்பையும் பொருளாதார நிலையுயர்வையும் கொணரும் திறன்களை பனைத் தொழிலாளர்கள் கற்றுக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
ஆங்கில மூலம்: ஞான. சுரபிமணி
தமிழில் : அரிஅரவேலன்

Comments