எழுக வருக

இன்றில்லை நாளைவரும் இல்லை இல்லை
      என்றேனும் ஒருநாளில் வந்தே தீரும்
என்றிருந்த விழாவிதனில் தலைமை யேற்று
    இருக்கின்ற எமதருமைத் தலைவர் தலைவ
நன்றில்லை நும்பாதை நம்பி வாவா
    நல்லவழி காட்டுகிறேன் நம்வி வாவா
என்றழைத்து வழிநடத்தி எம்மைக் காத்து
    இவ்வாண்டே ஓய்வுபெறும் முதல்வர் முதல்வ

அண்டத்தை சுருக்கியொரு குடுவைக் குள்ளே
    அடக்குகின்ற வித்தையிலை கல்வி நல்ல
பண்டத்தைச் சுவைகெட்டும் போகா வண்ணம்
    பாதுகாத்து வைக்கின்ற கலைதான் கல்வி
என்றிருக்கும் இந்தியத்துக் கல்விக் குப்பை
    இயக்கத்தில் இயன்றவரை நல்ல முத்தை
வென்றெடுக்கும் சபதத்தைக் கொண்டி ருக்கும்
    நன்மனத்துப் போதகரே நற்கல்வி வாணரே

இருள்கவியும் வகுப்பறையில் இருகண் சோர்ந்து
    இடையிடையே கண்மூடி மெல்லத் திரும்பி
சுருள்பாளைத் தென்னையினை தொட்டு மீண்டு
    சொலும்வார்த்தை கேட்பதுவாய் பாவம் செய்து
எதிர்காலம் பற்றியெழில் கனவும் கண்டு
    ஈராண்டு முடித்தின்று வெளியே சென்று
எதிர்காலம் தனைவெல்லும் புத்தி சாலிப்
    புத்தர்களே உங்களுக்கும் வணக்கம் சொன்னேன்

கல்லூரிக் கதவதனைக் கடந்து சென்றால்
    காண்கின்ற உலகத்தில் வாழ்க்கை எல்லாம்
செல்லரித்துப் போனதொரு மரமே ஆகும்
    செல்வங்களே நம்புங்கள் என்று யாரும்
சொல்லிவிடின் நம்பாதீர் நண்பர் நண்ப
   சொல்பவர்கள் கனவுலக மக்கள் ஆவர்
சொல்லுகிறேன் எதிர்காலம் நமது கையில்
   சோர்வின்றி உழைத்தாலோ உண்மை இஃது

என்பதனை நன்கறிந்த அன்பர் அன்ப
    இனிநமது வழித்தடம்தான் எங்கும் செல்லும்
என்பதையும் நன்கறிக இயன்றா லந்த
    இமயத்தின் முடிமீதும் கால்கள் பதிப்போம்
நல்லவராய் இருப்பதனால் மட்டு மிங்கே
    நன்மையெதும் விளைவதில்லை ஆத லாலே
வல்லவராய் வடிவெடுப்போம் தரையில் அந்த
    வானுலகைப் படைத்திடுவோம் எழுக வருக

அதற்காக

ஊனமில்லை எம்முடலில் நாங்கள் என்றும்
     உத்தமராய் இருந்திடுவோம் அண்ணல் காந்தி
காணவைத்த பொம்மைகளாய் உண்மை தன்னைக்
     காத்திருப்போம் வழிமாறோம் காண்பீர் என்றே
ஆனமட்டும் சொல்லிடுவோம் அதன்பின் எங்கள்
     அன்னையரின் முடிவின்பின் ஒளிந்து வாழ்வைப்
பேணமட்டும் கையூட்டுக் கொடுத்து வேலை
    பெற்றிடுவோம் எனும்வழக்கம் வேண்டா வேண்டா

அன்பர்களே தொடுவானம் தூர மில்லை
    அதன்தூரம் நமக்கொன்றும் பார மில்லை
இன்றில்லை என்றாலும் பரவா யில்லை
    எதுமில்லை என்றாலும் கவலை யில்லை
நன்றில்லை என்பதனை மட்டும் நீங்கள்
     நன்னிடுதல் கேடென்பேன் நமது தோற்றம்
வென்றிடத்தான் என்பதையும் விளம்பு கின்றேன்
     வேறில்லை நண்பர்களே வருகிறேன் வணக்கம்

(3.4.1989ஆம் நாளில் உத்தமபாளையம் ஹா.க.ரா.ஹெ. கல்லூரியில் வணிகவியல் முதுவர் பட்ட நிறைவு விழாவில் பாடியது)

Comments