தமிழ்த்தாய் வணக்கம்

வெண்பட்டுப் போன்றவளே!
      வித்தைபல கற்றவளே!
              விடிவெள்ளி பெற்றமகளே!

பண்சொட்டும் வீணையே!
      பைந்தமிழே! பயிர்க்கூட்டப்
            பச்சையமே! பாமொழியே!

தண்கொட்டும் தளிர்நிலவே!
     தாமரையே! சிலம்பணிந்த
          தாய்ப்பெண்ணே! நீலநிற

விண்முட்டும் மாளிகையாய்
    விளங்குகின்ற பெரியோர்கள்
         விளையாடும் கவியுலகில்…

உத்திரத்தில் உளிகொண்டு
     ஒளிக்கலைஞன் செதுக்கிவைத்த
            ஒற்றைப்பூ வடிவமுள்ள

சித்திரத்தைப் போன்றவன்நான்
     சிறுபிள்ளை என்றலும்
             சிறப்பாக் கவிநெய்ய

நித்திரையில் கிடந்தாலும்
     நெஞ்சமெல்லாம் சர்க்கரையை
            நிறைக்கின்ற பெண்மணியே!

சித்திரையின் முழுநிலவே!
     சிங்கார மொழியே!உனை
            சிரந்தாழ்த்தி வணங்குகிறேன்!

தென்மதுரை யென்னுமெங்கள்
     தென்னவரின் பூமிதனில்
            தேனாகப் பாயும்நதியே!

தென்றலெனும் தேரேறி
     திசையெங்கும் பூமாரித்
            தெளிக்கின்ற தீந்தமிழே!

முன்னவர்கள் பாதைவழி
     முன்னோடி வந்திங்கே
            முத்தாரக் கவிவடிக்கும்

சின்னவன்நான் உன்முகத்து
     சித்திரத்தில் ஓரங்கம்
           சிரங்கோதி வாழ்த்துதாயே!

Comments