கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன்
(நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ)

“இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவையு"ம் கலையில்லை; அவை வெறும் பரப்புரைகள்” என்று இடையறாது சொல்லிவந்த வெங்கட்சாமிநாதன், இடதுசாரி மேடையொன்றில் அரங்கேறிக்கொண்டிருந்த கலைநிகழ்ச்சிகளை வறுத்த நிலக்கடலையை கொரித்தவாறே கவனித்துக்கொண்டு இருந்தார். அங்கு அரங்கேறிய சில நிகழ்வுகள் அவரின் கருத்திற்கு வலுச்சேர்ப்பனவாக இருந்தன. அவர் சலிப்படைந்து, ‘சரி கிளம்பலாம்’ என எண்ணியபொழுது கறுத்த, குள்ளமான, ஒல்லியான 25வயதே மதிக்கத்தக்க, நகரத்துப் பகட்டுகள் எதுவுமில்லாத இளைஞர் ஒருவர் மேடையேறி ஒலிவாங்கியை எடுத்து பாடத்தொடங்கினார். கணீரென்ற அவரது குரலொலியும் பாடலும் இசையும் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமான வெ.சா.வின் செவியைப்பிடித்து இழுத்து நிறுத்தின. கையிலிருந்த நிலக்கடலை தீர்ந்த பின்னரும் அவர் அங்கேயே நின்று அந்த இளைஞரின் இசைக்கடலுக்குள் மூழ்கிப்போனார். அந்த இசைக்குள் பொதிந்துவந்த ஆதிக்க எதிர்ப்பு, ஒடுக்கப்பட்டோர் எழுச்சி ஆகிய பாடுபொருள்கள் வலதுசாரியான வெ.சா.வுக்கு உவப்பானதாக இருந்திருக்காது; ஆனாலும் அவரால் அந்த இளைஞரின் கலகத்தமிழிசையை, ‘இது கலையன்று; வெறும் பரப்புரையே’ எனப் புறந்தள்ள முடியவில்லை.  எனவே, அந்த இளைஞரைப் பற்றியும் அவரது கலைத்திறனைப் பற்றியும் கட்டுரை எழுத வேண்டிய கட்டாயம் வெ.சா.விற்கு ஏற்பட்டது.

இதேபோல இன்னொரு  இடதுசாரி மேடையை தனது கணீரென்ற குரலாலும் உண்மையான நாட்டாரிசையாலும் அந்த இளைஞர் கட்டிப்போட்டதைக் கேட்டும் கண்டும் சுவைத்த எழுத்தாளர் பொன்னீலன், ‘நாக்குச் சிவந்த குயில்’ என்னும் தலைப்பில் அந்த இளைஞரின் சிவந்த சிந்தனையையும் மண்ணின் மணம் கமழும் கலையையும் பாராட்டி எழுதி, அவரை ஊக்குவித்தார். 

இங்ஙனம் வலதுசாரியான வெ.சா.வையும் இடதுசாரியான பொன்னீலனையும் ஈர்த்த அந்த ‘கணீர்’ குரலுக்குச் சொந்தக்காரரான இளைஞர், இளையான்குடிக்கு அருகிலுள்ள மாறந்தை என்னும் சிற்றூரில் பிறந்து தன்னுடைய அறிவாலும் திறனாலும் தகுதியாலும் உயர்ந்து பாண்டிச்சேரி நடுவக பல்கலைக் கழகத்தின் புலத்தலைவராகவும் உலகத் தமிழராய்ச்சி நிறுவன இயக்குநராகவும் திகழ்ந்த, திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராகத் திகழ விழைந்த கரு. அழ. குணசேரனார் ஆவார்.  

அமைச்சராக இருந்த கக்கனுக்கு சம்பந்த வழியில்  நெருங்கிய உறவினராக இருந்தும் தன்னையும் தன்னுழைப்பையும் மட்டுமே நம்பி வாழ்ந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்து, எண்ணற்ற சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு இளையான்குடி கல்லூரியில் புகுமுக வகுப்பில் தேறி, சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை வகுப்பில் சேர்ந்த குணசேகரனுக்கு கவிஞர் மீரா, எழுத்தாளர் நா. தர்மராசன் போன்ற சிவப்புச் சிந்தனையில் ஊறியவர்கள் பேராசிரியர்களாக வாய்த்தார்கள்.   இதன் விளைவாக, இயல்பிலேயே தனக்கு அமைந்த இசைத்திறனால் நாட்டார் பாடல்களை பாடித்திரிந்த தும்பியான குணசேகரனின் நாக்கும் சிந்தனையும் சிவக்கத் தொடங்கின. அங்கு படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே திருச்சியில் உள்ள அகில இந்திய வானொலியில் நாட்டார் பாடல்களைத் தொடர்ந்து பாடும் வாய்ப்புகளைப் பெற்றார். அது அவருக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்தது.

பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்ற குணசேகரன், மதுரை தியாகராசர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழிலக்கியம் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார்.  அதனைத் தொடர்ந்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நாட்டாரிசை பற்றி, முனைவர் ம. நவநீதகிருட்டிணனை வழிகாட்டியாகக்கொண்டு, முனைவர் பட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்டார்.  அதற்காக ஒற்றையடிப்பாதை வழியாக மட்டுமே சென்றடையக்கூடிய சிற்றூர்கள் தொடங்கி மதுரை நகருக்குள்ளிருக்கும் விளிம்புநிலையினரின் குடியிருப்புகள் வரை சுற்றியலைந்து நாட்டார் பாடல்களைச் சேகரித்தார்.   

அதேவேளையில் நாட்டார் இசைக்கலைஞர்களை ஒருங்கிணைத்து ‘தன்னானே’ என்னும் நாட்டாரிசைக் குழுவை உருவாக்கி நிகழ்ச்சிகளை வழங்கத் தொடங்கினார். அந்நிகழ்ச்சிகளின் வழியாக கோட்டைச்சாமி, அழகிரிசாமி, கொள்ளங்குடி கருப்பாயி, முனியம்மா ஆகியோரைப் போன்ற மெய்யான நாட்டாரிசைக் கலைஞர்கள் வெளிச்சத்திற்கு வந்தார்கள்.

ஒருபுறம் முனைவர் பட்ட ஆய்வு, மறுபுறம் இசைநிகழ்ச்சி என பறந்துகொண்டிருந்த குணசேகரன், கரகாட்டம் போன்ற நாட்டார் கலைகளைப் பற்றி நூல்களும் எழுதத் தொடங்கினார்.  அவற்றுள் ஒருநூலில், அந்நூலாசிரியரின் பெயராக குணசேகரன் தன் பெயரோடு ஒரு பேராசிரியரின் பெயரையும் இணைக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறார். அந்நூலை தனது பொறுப்பிலிருந்த அகரம் அச்சகத்தில் அச்சிட்டுக்கொடுத்த கவிஞர் மீரா, இனிமேல் குணசேகரன் இதுபோன்ற அறிவுச்சுரண்டலுக்கு ஆளாகக் கூடாது என அறிவுறுத்தி இருக்கிறார்.  அவ்வறிவுறுத்தலை குணசேகரன் தனது இறுதிநாள் வரை பின்பற்றத் தவறவில்லை.

இடையில் மதுரையில் கண்ணப்பதம்பிரான் ஒருங்கிணைத்த கூத்துப் பயிலரங்கிலும் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நவீன நாடகத் தந்தையான சே.இராமானுஜம் ஒருங்கிணைத்த நாடகப் பயிற்சிப்பட்டறையிலும் சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள சோழமண்டலத்தில் ஒருங்கிணைப்பட்ட பாதல் சர்க்காரின் மூன்றாம் அரங்கப் பயிலரங்கிலும் குணசேகரன் கலந்துகொண்டு நாடகப் பயிற்சி பெற்றார். இவற்றுள் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பயிலரங்க நிகழ்வை ஆவணப்படுத்தி பேராசிரியர் சே. இராமானுசனாரின் முன்னுரையோடு வெளியிட்டார். இந்நூலே நவீன நாடகப் பயிலரங்கம், நவீன நாடக ஆக்கம் பற்றிய ஆவணப்படுத்தலில் முதல்நூலாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையே குணசேகரனுக்கும் அவர்தம் ஆய்வுவழிகாட்டிக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு, வழிகாட்டி அவருக்கு வழிகாட்ட மறுத்திருக்கிறார். ஆனாலும் பேராசிரியர் அ. மார்க்ஸ் போன்றோரின் உதவியோடு தனது ஆய்வை நிறைவுசெய்து மதுரை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம்பெற்றார் குணசேகரன். பின்னர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் நாட்டார் ஆய்வுத்துறையின் கீழ் நீலமலையில் இயங்கிய தமிழகப் பழங்குடி மக்கள் நடுவத்தில் விரிவுரையாளராக சிலகாலம் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து பாண்டிச்சேரி நடுவக பல்கலைக் கழகத்திலுள்ள சங்கரதாஸ் நிகழ்கலைப் பள்ளியில் நாடகப் பேராசிரியராகப் பணியேற்று, புலத்தலைவராக உயர்ந்திருக்கிறார். இடையில் மூன்றாண்டுகள் அயலிடப்பணியாக உலகத்தமிழராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். 


அவர் தனது அறுபதாண்டுகால வாழ்க்கையில்  பலியாடுகள், சத்தியசோதனை, பவளக்கொடி அல்லது குடும்பவழக்கு ஆகியன போன்ற நாடகங்களை எழுதி, இயக்கி, அரங்கேற்றி உள்ளார்.  வாய்ப்புக்கிடைத்த பொழுது திரைப்படங்கள் சிலவற்றில் நடித்தார். மதுரை நகர்பகுதியில் தான் சேகரித்த மக்கள் பாடல்களைத் தொகுத்து ஆய்ந்து ‘நகர்சார் நாட்டுப்புறப் பாடல்கள்’ என்னும் நூலாகப் பதிப்பித்து நாட்டார் வழக்காற்றியல் புலத்தில் நகர்சார் நாட்டுப்புறவில், சேரிப்புறவியல் என்னும் புதிய அணுகுமுறைகளைத் தொடங்கி வைத்தார். தலித் அரங்கியல் என்னும் அரங்கியற் கோட்பாட்டை உருவாக்கினார். செவ்விலக்கிய நூல்கள் இரண்டிற்கு உரையெழுதினார்.

இங்ஙனம் நாட்டாரிசைப் பாடகர், நாடக இயக்குநர், திரைப்பட நடிகர், நிகழ்த்துக்கலைப் பேராசிரியர், நூலாசிரியர், செவ்விலக்கிய ஆய்வாளர், பொதுவுடைமை இயக்கச் செயல்பாட்டாளர், ஆய்வுக்கோட்பாட்டாளர் என பன்முகத் திறனைகளை வெளிப்படுத்திய குணசேகரனாருக்கு பெயரும் புகழும் பெற்றுத்தந்தவை ‘கலகம்’ கொப்பளிக்கும் அவரது நாட்டார் தமிழிசைப் பாடல்களே.

ஏனென்றால், கொதிக்கும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் எலும்பைக்குத்தும் குளிரிலும் வீசிக்கீழே தள்ளும் காற்றிலும் தம் வாழ்க்கைப்பாட்டிற்காக நாளும் உழைக்கும் மக்கள் தம் சுமைகளை மறக்கவும் சோர்வை நீக்கவும் பாடும் பாடல்களை அவர்களது விடுதலைக்கான படைக்கருவியாக மாற்ற வேண்டும் என்னும் தீராத தாகத்தோடு  குணசேகரன் இயங்கிக்கொண்டிருந்தார்.  கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக வெவ்வேறு அறிஞர்களால் தொகுக்கப்பட்ட நாட்டார் பாடல்களில் செவ்விலக்கிய நயங்களையும் செவ்விசையின் கூறுகளையும் கற்றுத்துறைபோகிய பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் தேடிக்கொண்டு இருந்தபொழுது, குணசேகரன் அப்பாடல்களை மண்ணின் மனத்தோடு அம்மக்களுக்கே திருப்பிக் கொடுத்தார். அத்தமிழிசையை கலகத்தின் மொழியாக மாற்றினார்.

அவர் தனது மேடைகளில் நாட்டார் பாடல்களை நேரம்கொல்லிகளாகவும் களிப்பூட்டிகளாகவும் எப்பொழுதும் பயன்படுத்தியதில்லை; மாறாக அங்ஙனம் அவற்றைப் பயன்படுத்திய போலிநாட்டார் கலைஞர்களை தொடர்ந்து விமர்சித்துக்கொண்டே இருந்தார்.  அதனால் இழப்புகள் பலவற்றிற்கும் ஆளானார்.
நன்றி: கரு அழ குணசேகரன் வலைப்பூ


ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் என்றாலே அவை தன்னிரக்கத்தைப் பேசுபவை என்னும் கருத்தாக்கத்தை அவர் தனது பாடல்களால் உடைத்தார். ‘ஆக்காட்டி ஆக்காட்டி’ என்னும் தன்னிரக்க நாட்டாரிசைப் பாடலின் இறுதியில் “இந்த வலையென்ன பெருங்கனமா” எனத்தொடங்கும் பாடல் கண்ணியை இணைத்து அப்பாடலில் நம்பிக்கையைப் பீறிட வைத்தார்.  கொளப்பாடியில் ஆண்டையின் கிணற்றிற்குக் குளிக்கச் சென்ற குழந்தைகள் கிணற்று நீரில் செலுத்தப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி மாண்டபொழுது கவிஞர் இன்குலாப் இயற்றிய ‘மனுசங்கடா’ பாடலுக்கு இசையைத்து, தனது கணீர்க்குரலால் பாடி, தமிழகத்தின் மூலைமுடுக்கெங்கும் ஒடுக்கப்படுபவர்களின் உள்ளக்குமுறலாக ஒலிக்கவிட்டார்.  ‘என்னடி தேவி சக்கம்மா” என்னும் கோமாளிப்பாடலின் வழியாக உலகின் போக்கை விமர்சித்தார். 

இங்ஙனம் கலகத் தமிழிசைக் கலைஞராக இந்திய பொதுவுடைக் கட்சி மேடைகளிலும் அதன் ஆதரவாளர்களின் மேடைகளிலும் தோன்றிய குணசேகரனார் 1990ஆம் ஆண்டுகளின் அறிவர் அம்பேத்காரின் நூற்றாண்டிற்குப் பின்னர் வீறுகொண்டு எழுத்த தலித் அரசியலுக்கு தனது இசையையும் நாடகத்தையும் வேராகவும் விழுதாகவும் மாற்றினார்.  அதேவேளையில் சுயவிமர்சனம் என்னும் அகத்தாய்வை மேற்கொள்ளும் கலைப்படைப்புகளையும் உருவாக்கினார். விளிப்புநிலையினருக்குள் விளிம்புநிலையினராக இருக்கும் பெண்களின் நிலையை தனது பவளக்கொடி நாடகத்திலும் ஒடுத்தலுக்கு உள்ளாகும் ஆண்களும்கூட பெண்களை ஒடுக்குவதை பலியாடுகள் என்னும் நாடகத்தில் எடுத்துரைத்தார். 



            ஆக, ‘கலகம் செய்தல் கலையின் கடனே’ என்பதே, கலையின் எல்லா முனைகளிலும் கலகத்தைக் கூர்தீட்டிக்கொண்டே இருந்த, கலகத் தமிழிசைக் கலைஞரான குணசேகரனாரின் கலைக்கோட்பாடாக இருந்திருக்கிறது. இக்கலைக்கோட்பாடே தமிழிசைக்கும் தமிழ்கலைக்கும் அவர் கொடுத்த கொடையாக இருந்து என்றென்றும் அவர் புகழ் பேசும். 

அம்ருதா  2016 பிப்ரவரி இதழில் வெளிவந்த கட்டுரை

அம்ருதாவில் இக்கட்டுரையைப் படித்துவிட்டு, கரு.அழ.குண. பேராசிரியரான நா. தர்மராசன் எழுதிய கடிதம்

பல்வேறு இராமாயணங்களும் பரிவார் இராமாயணமும்

 


                                                                   

ஒரு காப்பியம் ஒரேயொருவரின் சிந்தனையில் தோன்றி ஒரேயொரு மொழியில் ஒரேயொரு பண்பாட்டை மட்டும் பேசுவதில்லை. மாறாக, பலரின் சிந்தனையில் பல்வேறு மொழிகளில் பல்வேறு பண்பாடுகளைப் பேசும் பல்வேறு கதைகூறல்களிற் காணப்படும் பொதுமைக்கூறுகளை இணைத்து மொழியும்பொழுது ஒரு காப்பியம் தோன்றுகிறது எனலாம்.  அக்காப்பியப் பனுவலுங்கூட வாய்மொழி மரபில் அதனைப் பாடும் ஒவ்வொருவரின் அன்றைய மனநிலைக்கேற்ப நீண்டும் சுருங்கியும் வெளிப்படுகின்றது. எழுத்துமரபில் அக்காப்பியப் பனுவலை படியெடுக்கும்பொழுது படியெடுப்பவரின் சிந்தனைற்கு ஏற்ப நீளவும் குறுகவும் வாய்ப்பிருக்கிறது. மேலும் அக்காப்பியத்தைச் சுவைப்பவன் தனது சுவைக்கும் திறமைக்கும் ஏற்ப அதில் புதியனவற்றைச் சேர்க்கவும் நீக்கவும் கூடும். இவை போன்றவற்றால் காலவோட்டத்தில் ஒரே கதைக்கு பல்வேறு கதைகூறல்களும் பனுவல்களும் தோன்றியுள்ளன. அவை ஒவ்வொன்றும் அவை வழக்கப்படும் பகுதியினரின் பண்பாட்டை எதிரொலிக்கின்றன என்பர் அறிஞர். 

 

இவ்வாறுதான் இராமாயணத்திற்கும் பல்வேறு பனுவல்கள் நாட்டார் பாடல், நாட்டார் கதை, தொன்மக்கதை, மீளாய்வுக்கதை, சிறுகாப்பியம், காப்பியம், நிகழ்த்துக்கலை, நுண்கலை எனப் பல்வேறு வடிவங்களில் பல்வேறு நிலப்பரவுகளில் பல்வேறு மதத்தினரிடையே பல்வேறு மொழிகளில் உருவாகியிருக்கின்றன.  அவற்றைத் திரட்டுதலும் ஒப்பாய்வு செய்தலும் நெடுங்காலமாக நிகழ்ந்துவருகின்றன. அவ்வகையில் காமில் புல்கே (Camille Bulcke) என்பவர் பல்வேறு இராமாயணங்களை ஆராய்ந்துஇராமாயணத்தின் தோற்றமும் வளர்ச்சியும்(RamkathaUtpatti aur Vikas) என்று நூலை 1950ஆம் ஆண்டில் இந்தியில் எழுதினார். அந்நூலை அடிப்படையாகக்கொண்டு கவிஞராகவும் பன்மொழி அறிஞராகவும் மொழியியலாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் வரலாற்றாய்வாளராகவும் நாட்டார் வழக்காற்றியலாளராகவும் அறியப்பட்ட அத்திப்பட்டு கிருட்டிணசுவாமி இராமானுசன் (A.K.Ramanujan)  பல்வேறு இராமாயணப் பனுவல்களை ஆராய்ந்து முந்நூறு இராமாயணங்கள்: ஐந்து எடுத்துக்காட்டுகளும் மொழிப்பெயர்ப்புபற்றிய மூன்று சிந்தனைகளும் (Three Hundred Rāmāyaṇas : Five Examples and Three Thoughts on Translation) என்னும் கட்டுரையை 1987ஆம் ஆண்டு பிப்ரவரியில் பென்சில்வேனியாவில் உள்ள பிட்சுபெர்கு பல்கலைக்கழகத்தில் நாகரிகங்களின் ஒப்பீடு என்னும் தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் வெளியிட்டார். அக்கட்டுரை பவுலா இரிச்மென் (Paula Richman) என்பவர் 1991ஆம் ஆண்டில் தொகுத்து வெளியிட்ட பல இராமாயணங்கள்: தென்னாசியாவின் எடுத்துரைத்தல்  மரபின் பன்முகத்தன்மை (Many Ramayanas: The Diversity of a Narrative Tradition in South Asia) என்ற தொகுப்பு நூலிலும் 1999ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இராமானுசனின் திரட்டப்பட்ட கட்டுரைகள் (The Collected Essays of A.K.Ramanujan) என்னும் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது.

 

அ. கி. இராமானுசன்

.கி.இராவின் இக்கட்டுரை, தென்னாசிய மொழிகள் பலவற்றில் பல்வேறு வகையான இராமாயணங்கள் பல்வேறு வடிவங்களில் இருக்கின்றன. ஒரே மொழியில் பல்வேறு வடிவங்களில் பல்வேறு இராமாயணக் கதைகூறல்கள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக சமசுகிருதத்தில் மட்டும் 25க்கும் மேற்பட்ட இராமாயணக் கூறல்கள் கவிதை, காவியம், தொன்மக்கதை என வெவ்வேறு வடிவங்களில் இருக்கின்றன. அவ்வகையில்   முந்நூறு இராமாயணங்கள் இருக்கின்றன என்கிறார் காமில் புல்கே   என்ற அறிமுகத்தோடு தொடங்குகிறது அக்கட்டுரை.  அந்த முந்நூறு இராமாயணக் கதைகூறல்கள் வெவ்வேறு பண்பாட்டில், மொழிகளில் சமயமரபுகளில் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுதலையும் அவற்றுள் மொழிபெயர்க்கப்பட்டவை, இடம்மாற்றப்பட்டவை, உருமாற்றப்பட்டவை ஆகியவற்றைப்பற்றியும் ஆராய்வது அக்கட்டுரையின் நோக்கங்கள் என்று வரையறுக்கிறார் அ.கி.இரா.

 

முதற்பகுதியில், கம்பராமாயணம் அதன் முதன்னூலாகக் கருதப்படும் வான்மீகி இராமாயணத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை அவற்றிலுள்ள அகலிகையின் கதைகளை ஒப்பாய்வு செய்வதன் வழியாகத் துலக்கிக்காட்டும் அ.கி.இரா, இவ்வாறு மூலத்திலிருந்து வேறுபடும் இராமாணயங்களை, ‘உருமாறிய இராமாணயங்கள்என வகைப்படுத்துகிறார்.

 

இரண்டாவது பகுதியில், வான்மீகி இராமாயணத்தில் இராவணனைத் தீயனாகக் காட்டியிருப்பதை மறுத்து எழுதப்பட்ட, சமண இராமாயணம் என அழைக்கப்படும் விமலசூரி எழுதிய பவுமசரியா எவ்வாறு எதிர்தொன்மமாக விளங்குகிறது என்று எடுத்துரைக்கிறார்.

 

எழுத்துவடிவிலிருந்து வாய்மொழி என்னும் மூன்றாவது பகுதியில், தம்புரி தாசய்யர்கள் என்னும் பாணர்கள் பாடும் நாட்டார் இராமாயணம் இராவணனின் தும்மலில் பிறந்தவள் சீதை என்றும் அவளை இராவணன் சனகனின் தோட்டத்தில் வைத்துவிடுகிறான் என்றும் கூறுகிறது. இதே கருத்து சமண கதைகளில் ஒரு மரபாகவும் கன்னட, தெலுங்கு நாட்டார் பாடல்களிலும் தென்கிழக்காசியாவின் பல்வேறு இராமாயணங்களிலும் காணக்கிடக்கிறது என்றும் வான்மீகி இராமாயணத்தில் இல்லாத இதைப்போன்ற பல கதைகளும் காட்சிகளும் நாட்டார் இலக்கியத்தில் காணப்படுகின்றன என்றும் சுட்டுகிறார்.

 

தென்கிழக்காசிய எடுத்துக்காட்டு ஒன்று என்ற நான்காவது பகுதியில் தாய்லாந்து நாட்டின் ராமகீர்த்தியின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம், ஆகியவற்றைக் கூறி, சீதையின் பிறப்பு, சீதை இராமனால் வனத்திற்கு அனுப்பப்படும் காரணம், இராவணன் ஈகியனாகக் கருதப்படுவதற்கான காரணம் ஆகியவை எங்ஙனம் வான்மீகி இராமாயணத்திலிருந்து வேறுபடுகின்றன என்பதைக் கோட்டிட்டுக் காட்டுகிறார்.

 

வகைமாதிரிகளில் வேறுபாடு என்னும் நான்காவது பகுதியில் இராமாயணங்களின் முடிவு முடிசூட்டல் என்னும் இன்பியலாகவும் இராமனும் சீதையும் மரணமடைதல் என்னும் துன்பவியலாகவும் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதையும் கம்ப இராமாயணத்தின் தொடக்கம் பிற இராமாயணங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் இராமாயண மாந்தர்கள் ஒவ்வொரு கதைகூறலிலும் எவ்வாறு வேறுபாடுகிறார்கள் என்பதையும் விளக்கிய பின், “ஒரு குறிப்பிட்ட பெயர்களையுடைய வெவ்வேறு மனிதர்கள் எவ்வாறு அந்தப் பெயரினால் மட்டுமே ஒரு குழுவாக அமைவார்களோ அதுபோன்றேஇராமாயணம்என்ற பெயரினால் மட்டுமே மேற்கண்ட இராம காதைகள் பொதுவாக இருக்கின்றனஎன்று கூறுகிறார்.

 

மொழிபெயர்ப்புகள்பற்றிய சிந்தனை என்னும் ஐந்தாவது பகுதியில் ஒரு பனுவலை மொழிபெயர்க்கும்பொழுது தருமொழியின் பனுவலுக்கும் பெறுமொழியின் பனுவலுக்கும் இடையே உருவ ஒற்றுமை, உட்பொருள் வேறுபாடு, குறியீட்டு வேறுபாடு ஆகியன உருவாகும் என்ற பியர்சியன் கோட்பாட்டோடு இராமாயணப் பனுவல்களைப் பொருத்திக்காட்டி, இராமாயணப்பனுவல் பற்றிய நாட்டார் தொன்மக் கதையொன்றை மேற்கோளாகச் சுட்டி எந்தப் பனுவலும் உண்மையான பனுவல் இல்லை. எந்த எடுத்துரைப்பும் வெறும் எடுத்துரைப்பு மட்டும் இல்லை. எடுத்துரைப்பு வடிவில் மட்டுந்தான் இராமகாதைக்கு முடிவுண்டே தவிர, உண்மையில் முழுமையான முடிவு என்பதே இராமகாதைக்குக் கிடையாது என்று நிறுவுகிறார்.

 

இராமகாதையைக் கேட்கும்பொழுது என்ன நிகழும் என்னும் முடிவுப்பகுதி, அக்கதையைக் கேட்கும் ஒருவர் அக்கதைக்குள் தானும் ஒரு கதைமாந்தராக மாறிவிடுவார் எனக்கூறும் நாட்டார்கதையொன்றை எடுத்துரைத்து இராமாயணம் அதைக் கேட்கும், படிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பனுவலாக உருமாறுகிறது என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார். 

 

ஆனால், எல்லாவற்றையும் ஒற்றையடையாளத்திற்குள் அடக்க முனைவோர் பல்வேறு பனுவல்களை ஏற்பதில்லை; மாறாக அவற்றைச் சிதைக்கவும் அவற்றின் பரவலைத் தடுக்கவும் அழிக்கவும் முனைகின்றனர்.  அவ்வகையில்தான் இந்தியாவில் 1980க்குப் பின்னர் ராசுடிரிய சுயம்சேவக் சங் (ஆர்.எசு.எசு) அமைப்பினருக்கும் அதன் கிளையமைப்புகளான சங்பரிவார்களுக்கும் இராமனும் இராமாயணமும் அரசியலாதாயக் கருவிகளாக மாற்றப்பட்ட பின்னர் இராமாயணத்தின் பல்வேறு பனுவல்கள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, தாய்லாந்து நாட்டின் இராமகீர்த்தி, இராமாயணத்தில் தசரன் நிகழ்த்திய குழந்தைப்பேற்று வேள்வியில் கிடைத்த அரிசியுருண்டையிலிருந்து உதிர்ந்த அரிசிகள் சிலவற்றைக் காகமொன்று இராவணன் மனைவிடம் தர அவள் சீதையை ஈன்றெடுக்கிறாள் என்ற குறிப்பை அ.கி.இரா. இக்கட்டுரையின் நான்காவது பகுதியில் எடுத்துரைக்கிறார். இக்குறிப்பை முன்வைத்து இக்கட்டுரையை தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்திற்குப் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் படிப்பதற்குரியவை என பரிந்துரைக்கப்பட்ட எழுத்துரைகளின் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்று 2008 பிப்ரவரி 25ஆம் நாள் ஏ.பி.வி.பி உறுப்பினரும் தில்லி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் துணைத்தலைவருமான விகாசு தாகியா தலைமையில் வரலாற்றுத் துறைக்குச் சென்று அத்துறைத்தலைவர் சாஃப்ரியை கடுமையாகத் தாக்கி, வகுப்பறைகளின் சன்னல் கண்ணாடிகளை உடைத்து வன்முறையில் ஈடுபட்டனர். அந்நாளைய வன்முறை நிகழ்வைப்பற்றிக் கருத்துரைத்த அந்தப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் திலிப் மேனன், “.பி.வி.பி.யினர் வால்மீகி இராமாணமும் துளசிதாசர் இராமாயணமும் மட்டுமே இந்துயிசத்திற்கு ஏற்புடையது மற்றவை அனைத்தும் இந்து உணர்விற்கு எதிரானவை என்கின்றனர்என்று கூறினார். அவரின் கூற்றை வலுப்படுத்தும் வகையில் ஏ.பி.வி.பி. உறுப்பிரான மணில் மயங்க் மிஸ்ரா என்பவர், “இக்கட்டுரை நாங்கள் குழந்தையாக இருந்தபொழுது எங்களுக்குக் கற்பிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் எதிராக இருக்கிறது.” என்றார். ஆக, வான்மீகி இராமாயணம் மட்டுமே பரிவாருக்கு உகந்ததாக ஒரே இராமாயணப் பனுவலாகபரிவார் இராமாயணமாக - இருக்கிறது. மற்ற இராமாயணப் பனுவல்கள் இலக்கிய நயத்திலும் பக்திச்சுவையிலும் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் அவற்றை அவர்கள் ஏற்க ஆயத்தமாக இல்லை.   அவர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்று 2011 அக்டோபரில் அப்பட்டியலில் இருந்து இக்கட்டுரையை நீக்கினர்.

 

இந்நிலையில்தான், .கி.இராவின் இக்கட்டுரையை இதழாளர் ந. வினோத்குமார் தமிழில் மொழிபெயர்த்துமுந்நூறு இராமாயணங்கள்என்னும் நூலாக 2021 திசம்பரில் வெளியிட்டிருக்கிறார். அந்நூலுக்கான முன்னுரையில் இராமாயணம் எவ்வாறு ஆர்.எசு.எசுக்கு அரசியல் ஆயுதமாக இருக்கிறது என்பதை விவரிக்கிறார். குறிப்பாக கேரளாவில் எழுத்தச்சன் எழுதிய அத்யாத்ம இராமாயணம் வாசித்தல் என்னும் பண்பாட்டு நடவடிக்கையை சங் பரிவார் தனது அரசியலுக்கு ஏற்ப நிறுவனமயப்படுத்த முயன்றபொழுது, அதனை இடதுசாரி அறிஞர்கள் தங்களது சமசுகிருத சங்கத்தின் வழியாக எதிர்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதை விளக்குகிறார். ‘ஒருவர் கடந்த காலப் படைப்பு ஒன்றை மொழிபெயர்க்கும்பொழுது, அது நிகழ்காலப் படைப்பாகிறது. அதன் மூலம் கடந்தகால அரசியல் நிகழ்காலத்திற்குக் கடத்தப்படுகிறது. …. இவ்வாறு ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு தலைமுறைக்கும் ஏற்றவாறு மொழிபெயர்க்கப்படுவது அந்தந்தக் காலகட்டத்துக்கான அரசியலுக்கு மிகவும் அவசியமானதுஎன்று அ.கி.ரா கூற்றின்படி அயோத்தியை முன்னிறுத்தி அரசியல் நிகழும் இந்தக் காலகட்டத்தில் இந்த மொழியாக்கமே ஓர் அரசியற்செயற்பாடே என்று தெரிவிக்கும் மொழிபெயர்ப்பாளர், ஓர் ஆய்வுக்கட்டுரைக்கு இணையாக இந்நூலின் முன்னுரையை எழுதியிருக்கிறார். 

 

எனவே, பரிவார் இராமாயண அரசியலைப் புரிந்துகொள்ளவும் இராமாயணத்தின் பல்வேறு பனுவல்களை அறிந்துகொள்ளவும் உதவும் இந்நூலைப் படிப்பதும் ஓர் அரசியற் செயற்பாடே.

 

முந்நூறு இராமாயணங்கள்

.கே. ராமானுஜன்

தமிழில்: . வினோத்குமார்

மு.பதிப்பு: 2021 திசம்பர்; பக்.86; விலை. ரூ.100;

வெளியீடு: மலர் புக்ஸ், பரிசல் புத்தக நிலையம், 235  ப்பிபிளாக், எம்.எம்.டி.. காலனி, அரும்பாக்கம், சென்னை 106.

 

காற்றின் நிறம் பச்சை உப்பின் நிறம் சிவப்பு

 


மார்க்சியச் செயல்பாட்டாளரான பர்வதவர்த்தினி பெண்ணுரிமைக் களத்திலும் குழந்தைகள் உரிமைக் களத்திலும் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருப்பவர். நாடக நடிகர், ஆய்வாளர், உரையாளர் எனப் பன்முகங்கொண்ட அவரின் இன்னுமிரு முகங்கள் எழுத்தாளர், கவிஞர் ஆகியன. முந்தைய மூன்று முகங்களும் அவரது களச்செயற்பாட்டில் வெளிப்படுபவை. பின்னிரு முகங்களும் அவரது முகநூற்பதிவுகளின் வழியே பலருக்கும் தெரியவந்தவை.  அவர் தனது களப்பணி, செலவு (பயணம்), உரையாடல் ஆகியவற்றில் தான் பெற்ற பட்டறிவுகளை அவ்வவ்பொழுது முகநூலில் தொடர்ந்து பதிகிறார்; அவற்றின் வழியாக மற்றவர்களோடு உரையாடி தன்னையும் பிறரையும் செழுமைப்படுத்துகிறார். அத்தொடர்வினையில் குழந்தைகள் தொடர்பாக முகநூலில் அவரெழுதிய 52 பதிவுகளின் தொகுப்பேகாற்றின் நிறம் பச்சை; உப்பின் நிறம் சிவப்புஎன்னும் நூல். இவற்றுள் சில பதிவுகள் சிறுகதைக்கான களங்கள்!

இலிட்டில்சு (Littles) என்னும் அறக்கட்டளையின் வழியாக மதுரை நாகமலைப் புதுக்கோட்டையிலும் அதனைச் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் வாழும் விளிம்புநிலைக் குழந்தைகளின் குழந்தைமையையும் உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் அவ்வூர்களில் குழந்தைகள் நடுவங்களை அமைத்துள்ளார் இந்நூலாசிரியர். அந்நடுவங்களுக்கு வருகைதரும் குழந்தைகளிடமிருந்தும் தனது வெளியூர்ச் செலவுகளின்பொழுது கண்ட குழந்தைகளிடமிருந்தும் தன் இரு குழந்தைகளிடமிருந்தும் அவர் பெற்ற பட்டறிவையும் கற்றல்களையும் பேச்சுநடையும் எழுத்துநடையும் விரவிவர எழுதப்பட்டுள்ள இப்பதிவுகள் குழந்தைகளின் அறிவார்வம், அறிவுக்கூர்மை, கரவின்மை,  பக்குவம், பாடுகள், வாதைகள் ஆகியன போன்றவற்றைப் பேசுகின்றன. 

குழந்தைகளின் மனநிலையிலிருந்து குழந்தைகளோடு உரையாடுவது ஒரு கலை. அங்ஙனம் உரையாடுவோரையே குழந்தைகள் தம் தோழராக ஏற்றுக்கொண்டு தமது அகவுலகை அச்சமின்றித் திறந்துகாட்டுகின்றனர். இயல்பிலேயே உற்சாகமும் குதூகலமும் துலங்க வளையவருபவரான நூலாசிரியர் வெகுஇயல்பாகத் தனக்கும் குழந்தைகளுக்கும் இடையே எழுந்துநிற்க வாய்ப்புள்ள தடைகளை எல்லாம் ஒரு புன்னகையில், ஒரு வினாவில், ஒரு கையசைவில் சில நொடிகளில் கடந்து அவர்களோடு நெருங்கும் நுட்பந்தெரிந்தவர். அதனால்தான், பேருந்தில் சென்னையிலிருந்து திருச்சி வருவதற்குள் முன்னிருக்கையிலிந்த மூன்று அகவைக் குழந்தைக்கு அவரால் தோழராகிவிட முடிகிறது; குழந்தைகளாலும் அவரோடு தோழர்களாகிவிட முடிகிறது.

மனத்துக்கண் மாசிலரான அக்குழந்தைத் தோழர்கள் நூலாசிரியருக்கு விதவிதமாய் வாழ்க்கைப்பாடம் கற்பிக்கிறார்கள். ஒரு குழந்தை, வீட்டுப்பாடத்தை எழுதாமல் நடித்துக்காட்டுகிறார். இன்னொருவரோ அவருக்குக் கற்றுக்கொடுக்க முனைந்த தன்னார்வாளரைத் தளரவைத்து தனது வீட்டுப்பாடங்களை தன் தம்பியை எழுதப் பணித்துவிட்டு படுத்துக்கொள்கிறார். வேறொருவரோ தன்னை ஒரு செடியாக உருவாகித்து அவர் ப்ப்பூ என ஊதும்பொழுது வாயிலிருந்து வெளிவரும் காற்றும் பச்சைநிறம் எனக் கற்பனைச்சிறகை விரிக்கிறார்.  பிறிதொரு குழந்தையோ பாடம் எல்லாவற்றையும் படபடவென ஒப்பித்துவிட்டு, எழுதிக்காட்ட மறுக்கிறார்.  சாக்லெட்டு வண்ணத்தாளோடு மரத்தில் முளைக்குமா, குளத்திலிருக்கும் பொழுது ஓடி ஒளியும் மீன் கண்ணாடித் தொட்டிக்குள்ளிருக்கும்பொழுது தான் மீன் என்பதையே மறந்துவிடுகிறதா, ஆண்டுதோறும் வெயில்காலத்தில் ஏன் மீனாட்சிக்குத் திருமணம் செய்கிறார்கள் என வாய்ப்புக் கிடைக்குமிடங்களில் எல்லாம் ஆய்வுசெய்கிறார் இன்னொரு குழந்தை.

வளரிளம் பருவத்தைக்கூட எட்டாத அக்குழந்தைத்தோழர்கள் நுண்ணுணர்வு கொண்ட நனிநாகரிகளாகவும் இருக்கின்றனர். ஒருவர், நூலாசிரியரின் வீட்டு வாசலில் வந்துநிற்கும் நாய்க்கு ஒரு பெயரைச்சூட்டிவிட்டு அப்பெயர் அந்த நாய்க்குப் பிடித்திருக்கிறதா எனக் கேட்டுச் சொல்லும்படி வேண்டுகிறார். மற்றொருவரோ, தந்தையை இழந்த நன்றாகப்படிக்கும் தன் நண்பரை நடுவத்திற்கு அழைத்துவந்து அறிமுகம் செய்துவிட்டு அந்நண்பர் அப்பால் சென்றதும் அவரது திறனையும் துயரையும் அன்பாய் மொழிகிறார். 

உண்டுறைவிடப்பள்ளியில் படிக்கும் குழந்தையின் ஏக்கம், மலைப்பள்ளியில் படிக்கும் ஆதிவாசிக் குழந்தை பள்ளிக் காலங்கடந்து செல்லும்பொழுது அப்பள்ளி ஆசிரியர்கள் அவரைத் திட்டாததன் காரணம், விடுதியைத் திறக்காமலேயே 12ஆம் வகுப்பிற்குச் சிறப்பு வகுப்புத் தொடங்கும் பள்ளியால் உண்ணவும் உறங்கவும் இடமின்றி மாணவர் தவித்தல் என அரசு அமைப்புகளின் மறுபக்கத்தை குழந்தைகள் சிலர் பகிர்கின்றனர்.

அதிகமாய் விளையாடிக் கொஞ்சமாய்ப் படிக்கும் அந்நடுவக் குழந்தைகள்  பொறுப்புடையவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தமது சிறுவாட்டுப் பணத்தையும் திரட்டிய நன்கொடையையும் இணைத்து புயலால் பாதிக்கப்பட்ட செருதூருக்குத் துயர்துடைக்கும் நிதியாக அளிக்கிறார்கள். வழக்கறிஞராக விரும்பும் குழந்தை ஒருவர், ‘மனந்தான் பேய்என மற்ற குழந்தைகளோடு வாதிட்டு அறிவுபுகட்டிக்கொண்டிருக்கிறார். பேருந்தில் குழந்தை தன் தோழர்களிடம் தாம் பெரியவரானதும் தண்ணியடிக்கவும் கூடாது, அம்மா பிள்ளகளையும் அடிக்கக் கூடாது, சாராயக்கடை நடத்துகிறவர்களைத்தான் அடித்துவிரட்ட வேண்டும் என்கிறார். தவறு செய்த குழந்தைகளிடமே அவர்களது தவறைச் சரிசெய்யும் பொறுப்பைக் கொடுக்கும்பொழுது அவர்கள் மிகச்சரியாய் அவற்றைக் கையாள்கிறார்கள். பெற்றோர் வாங்கிய கடனிற்காகக் கந்துவட்டிக்கொடுக்கும் ஆசிரியரின் வசவுகளைத் தாங்கிக்கொள்ளுகிறார் ஒரு குழந்தை. தன் குழந்தைக்குப் பெயர் வைக்கும் உரிமை தனக்கே உள்ளது என நூலாசிரியருக்கு அறிவுறுத்துகிறார் அவர் மகன்.

சில குழந்தைகளின் துயரம் நூலாசிரியரின் துயரமாக மாறி அத்துயரைத் துடைக்க ஏதேனும் செய்ய வேண்டுமென அவரைத் தூண்டிக்கொண்டே இருக்கின்றன. மாணவனைப் பனைமட்டையைச் சீவிக்கொண்டு வரச்செய்து அம்மட்டையாலேயே அவனை அடித்து ஓடவைத்த பள்ளியைப்பற்றிக் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் ஒன்றில்

அறிந்தபொழுது நூலாசிரியரின் மனத்தில் வெகுளி பூக்கிறது. மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளி வளர்ந்து பொறுப்புள்ள இளைஞராய்த் தனக்கு முன்னர் வந்து நிற்கும்பொழுது  மகிழ்கிறார். குடிக்கு மருந்துக் கண்டுபிடிக்கத் துடிக்கும் குழந்தை தன் தாயையும் தம்பியையும் குடிகாரத் தந்தை மூட்டிய தீயில் இழந்தவள் என்பதை அறிந்து நொறுங்குகிறார். உப்பளங்களில் வேலைசெய்யும் வளரிளம் பெண்குழந்தைகள் அவர்களது பணியிடத்தில் கழிப்பறை இல்லாத்தால் படும் துயரை இவர் அறிந்த பின்னர் இவரது வீட்டிலிருக்கும் உப்பின் நிறம் சிவப்பாக இவருக்குத் தெரிகிறது. ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் குழந்தை வழியில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி கருகிச் செத்ததைக் கண்டதால் கனத்த மனத்தோடு நூலாசிரியர் கூறுகிறார், “இனியும் விழிக்காட்டி, திரும்ப  முதல்லேருந்து தொடங்க வேண்டியிருக்கும்”.

இங்ஙனம் குழந்தைகளின் விதவிதமான எண்ணங்களை, கற்பனைகளை, கதைகளை, துயரங்களைப் பேசும் இந்நூலை நீங்களும் படித்துப்பாருங்களேன்!!

எழுத்தாளர்: பர்வதவர்த்தினி; பதிப்பு: முதற்பதிப்பு; ஆண்டு: 2019 செப்டம்பர்; பக்கம்: 102+4; விலை: ரூ 100/-; பதிப்பகம்:  காலம் வெளியீடு, 25 மருதுபாண்டியர் 4ஆவது தெரு, கருமாரியம்மன் கோவில் எதிர்வீதி, சரவணா மருத்துவமனை அருகில், மதுரை 625 002.

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...