"அட
யாருங்க இப்ப
சாதி பார்க்கிறா?"
"ஆமா!
யாரு இப்ப
சாதி பார்க்கிறா!!"
சங்கட மடத்துக்கு
அக்னி கோத்திரம்
சைவ மடத்துக்கு
பிள்ளைவாள் மாத்திரம்
பேரூருக்கு
வெள்ளாளக் கவுண்டர்
கோவிலூருக்கு
நாட்டுக்கோட்டைச் செட்டி
சாமித்தோப்புக்கு
நாடார் அய்யா
"அட
யாருங்க இப்ப
சாதி பார்க்கிறா?"
"ஆமா!
யாரு இப்ப
சாதி பார்க்கிறா!!"
பார்ப்பனருக்கு
பாரதியார்
வாணியருக்கு
மகாத்துமா காந்தி
வேளாளருக்கு
வ.உ.சிதம்பரம்
கவுண்டருக்கு
பொன்னர் சங்கர்
தேவருக்கு
பசும்பொன் முத்து
சேர்வைக்கு
மருதிருவர்
கள்ளருக்கு
பாப்பாபட்டி மூக்கையா
முதலியாருக்கு
திருப்பூர் குமரன்
கோனாருக்கு
அழகுமுத்து
நாடாருக்கு
காமராசர்
"அட
யாருங்க இப்ப
சாதி பார்க்கிறா?"
"ஆமா!
யாரு இப்ப
சாதி பார்க்கிறா!!"
"எஸ்சி தவிர
எவரும் சம்மதம்"
மணமக்கள் தேடி
இந்துவில் விளம்பரம்
"கலப்புத் திருமணமா?
கழுத்துக்கு மேல தலையிருக்காது!"
மாநாட்டொன்றில்
மிரட்டற் பேச்சு
"அந்தத் தொகுதியில
இந்த ஆள நிறுத்து
இவங்க ஆளுக
அங்க அதிகம்"
தேர்தற்களத்தில்
வேட்பாளர் தேர்வு
"அட
யாருங்க இப்ப
சாதி பார்க்கிறா?"
"ஆமா!
யாரு இப்ப
சாதி பார்க்கிறா!!"
கருவறைக் கல்லுக்குப்
பூசை பண்ண
பூணூல் பார்ப்பான்
தெருக்கூட்ட
சாக்கடை வார
பீயள்ள
அருந்ததிக் குடும்பம்
"அட
யாருங்க இப்ப
சாதி பார்க்கிறா?"
"ஆமா!
யாரு இப்ப
சாதி பார்க்கிறா!!"
பொறுத்துப்
பொறுத்துப் பார்த்த
குப்பாயி வெடிச்சா....
"காதல் கல்யாணம் கலவி
கல்வி பூசை பதவி
துறவு உறவு நட்பு
வேலை பகை கட்சி
சுடுகாடு இடுகாடு கருமாதி
எல்லாத்துலயும் சாதி பாக்கிறது
நீங்கதாண்டா
களவாணிப் பயலுகளா!!"
காக்கைச் சிறகினிலே - ஆகசுடு 2012 - பக்கம் 25
மு.வ.வைப் பற்றிய மூவா நினைவுகள்
கற்றதைக் கூறும் சாதாரண
ஆசிரியர் (கிளிப்பிள்ளையர்?),
விரித்துக் கூறும் விரிவுரையாளர், விளக்கிக்
கூறும் புலமையாளர்,
சமூக உணர்வூட்டும் நல்லாசிரியர் என ஆசிரியர்களை நான்கு வகையினராகப் பிரிக்கிறார்
நூலாசிரியர் முனைவர் ம.ரா.போ.குருசாமியார்.
இவர்களுள் தலையாயவரான நல்லாசிரியர் என்பவர் பாடப் பகுதிகளை மாணவர்களுக்குக்
கற்பிப்பதற்கு அப்பால்,
மாணவர்தம் புரவலராக,
உற்றுழி உதவும் நண்பராக, வழிவகுத்து நடத்தும்
தந்தையாக, தாயாக விளங்குவார் என வரையறுக்கிறார். இந்த வரையறைக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்தான்
நூற்றாண்டு காணும் தன் பேராசிரியர் முனைவர் மு. வரதரானார் என்கிறார் தொண்ணூறாண்டு
காணும் மாணவரான முனைவர் ம.ரா.போ.குருசாமியார்.
இதனை அவருக்கும் தனக்கும் இடையே நிலவிய 30 ஆண்டுகால உறவை
நினைவுகூர்ந்து எழுதிய 19 கட்டுரைகளின் வழியாக நிறுவுகிறார். அத்தோடு நல்லாசிரியர், நற்பண்பாளர், கடமை
நோன்பிநர், நெகிழ்மனநிலையிநர் என மு.வ.வின் ஆளுமையையும் எடுத்துரைக்கிறார்.
நல்லாசிரியர்:
“கல்வி நிலையத்தின் சுவர்களுக்கு அப்பால் விரிந்து கிடக்கின்ற உலகத்தைப்
பற்றியும் மாணவர் தெரிந்து,
புரிந்துகொள்கிற வகையில் கற்பிப்பதே ஆசிரியரின் கடமையாகும்” என்கிறது
முனைவர் இராதாகிருட்டிணன் தலைமையிலான பல்கலைக்கழகக் கல்வி பற்றிய குழுவின்
அறிக்கை. அக்கூற்றிற்கு ஏற்ப,
தான் நடத்திய வகுப்புகளிலும் எழுதிய நூல்களிலும் ஆற்றிய
சொற்பொழிவுகளிலும் நல்லாசிரியராகத் திகழ்ந்திருக்கிறார் பேராசிரியர் மு.வ. தன் மாணக்கர்கள் நன்கு கற்க வேண்டும்; தடையின்றிக்
கற்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார். அதற்காக
அம்மாணக்கர்தம் குடும்பத்தாரோடு பேசியும் பொருளுதவி புரிந்தும் தன்வீட்டில் உணவும்
உறைவிடமும் வழங்கியும் புரவலராய் இருந்திருக்கிறார்.
தேர்வில் புதுமையாய்
விடையளித்த மாணவருக்கு இரட்டை மதிப்பெண்கள் வழங்கி அச்சிந்தனையை ஊக்குவித்ததோடு
"உலகோடு ஒன்றி வாழ்" என எச்சரிக்கை மணியும் அடித்திருக்கிறார். அந்த
புதுமையான விடையை கால் நூற்றாண்டு காலம் கடந்த பின்னரும் நினைவுகூர்ந்து ஒரு
விழாவில் அந்த மாணவரைப் பாராட்டியிருக்கிறார். மாணவர்தம் உரிமைகளை
பல்கலைக்கழகத்திலும் இயக்குநரகத்திலும் போராடிப் பெற்றுக்கொடுத்து உற்றுழி உதவும்
நண்பராய் இருந்திருக்கிறார்.
வெற்றி பெற்ற
மாணவர்களுக்குப் பாராட்டுவிழா நடத்தி இருந்திருக்கிறார். அவர்கள் வேலைவாய்ப்புப்
பெற உதவி, வீடுகட்டிக் கொள்ள வலியுறுத்தி வழிவகுத்து நடத்தும் தந்தையாய், தாயாய்
இருந்திருக்கிறார். அதன்பின்னர் அவர்கள் தம் உள்ளத்தை, அறிவை, உடலை, பொருளை
மேம்படுத்திக் கொள்வது எப்படி என அவ்வப்பொழுது அறிவுறுத்தி முன்னேற்றத்தின்
வழிகாட்டியாக மு.வ. இருந்திருக்கிறார்.
தான் எழுதிய கட்டுரைகளை, நூல்களை
மாணவர்களிடம் படிக்கச் செய்து,
அவர்களுடைய கருத்துகளைக் கேட்டிருக்கிறார். அவர்கள் கூறிய திறனாய்வுகளை கூர்ந்து
கவனித்திருக்கிறார். அவற்றுள் கொள்வன கொண்டிருக்கிறார். தான் படித்த புதினங்கள், நூல்கள், பார்த்த
திரைப்படங்கள் பற்றி மாணவர்களுடன் ஆய்வுரையாடல் நிகழ்த்தியிருக்கிறார். அப்பொழுது
தோன்றிய கருத்துகளை அடிப்படையாகக்கொண்டு செந்தாமரை, கள்ளோ? காவியமோ? போன்ற
புதினங்களைப் படைத்திருக்கிறார்.
அதேவேளையில் அம்மாணவர்கள்
தவறு செய்தபொழுது கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு, உண்மையான கோபத்தோடு
கண்டிக்கும் காவலராகவும் இருந்திருக்கிறார். இவற்றையெல்லாம் நினைவுகூர்ந்து
எடுத்துக்கூறுவதன் வழியாக,
நல்லாசிரியர் ஒருவரின் பணி, தன் வகுப்பறைக்குள் வரும்
மாணவருக்கு அவர்தம் பாடநூலில் உள்ளதைக் கற்பிப்பதோடு முடிவடைவதில்லை; மாறாக
அவர்களை நல்ல மாந்தர்களாக மாற்றுவதுவரை தொடர்கிறது என்பதனை இன்றைய ஆசிரியர்களுக்கு
நினைவூட்டி, அவர்கள் நல்லாசிரியராகத் திகழும் வழியைக் கூறாதுகூறுகிறார் நூலாசிரியர்.
நற்பண்பாளர்:
மு.வ. பேராசிரியராக, பல்கலைக்
கழக துறைத் தலைவராக,
துணைவேந்தராக உயர்ந்த பொழுதும் அடக்கமே உருவாக இருந்திருக்கிறார்; துணைவேந்தரான
தன்னை, தொடர்வண்டி நிலையத்திற்கு வந்து ஆசிரியர்களும் மாணவர்களும் வரவேற்க
இருக்கிறார்கள் என்பதை அறிந்ததும் ஆரவாரத்தை விலக்கி, யாருக்கும்
அறிவிக்காமற் பல்கலைக் கழகத்திற்குச் சென்று,
பொறுப்பை ஏற்றிருக்கிறார். தனக்கு மணிவிழா எடுக்க வேண்டா என
மறுத்திருக்கிறார். அமெரிக்கப் பல்கலைக் கழகம் வழங்கிய முதுமுனைவர் பட்டத்தை தன்
குடும்பத்தாரிடம்கூடக் காட்டாது தன்னுடைய படுக்கைக்குக் கீழே போட்டு வைத்திருந்து
இருக்கிறார். இவ்வாறு அடக்கம் அமரருள்
உய்க்கும் என்பதற்கு இலக்கணமாக மு.வ. வாழ்ந்ததை நினைவுகூர்வதன் வழியாக, தம்
வாழ்வைச் செம்மையாக அமைத்துக்கொள்ள சான்றோர் (Rolemodel) இல்லாது
தவிக்கும் இன்றைய தலைமுறைக்கு "இதோ! உங்கள் சான்றோர்!!" என முனைவர்
பேராசிரியர் மு.வரதராசனாரை அவர்தம் மாணாக்கர் முனைவர் ம.ரா.போ.குருசாமியார்
முன்னிறுத்துகிறார்.
கடமைநோன்பிநர்:
சென்னைப் பல்கலைக்
கழகத்திற்கு 21 ஆண்டுகள் தொடர்ந்து துணைவேந்தராக இருந்தவரும் உலகப் புகழ்பெற்ற மருத்துவருமான
ஆற்காடு இலக்குவமணசுவாமியாரின் வழிகாட்டுதலால்தான் திருப்பத்தூர் உயர்நிலைப்
பள்ளியில் தமிழாசிரியராக இருந்த வித்துவான் மு.வரதராசன், சென்னைப்
பல்கலைக் கழக தமிழ்த்துறையின் தலைவர்,
பேராசிரியர்,
முனைவர் மு.வ.வாக உயர்ந்து இருந்திருக்கிறார். அந்த வழிகாட்டி இயற்கை எய்திய நாளில், மு.வ.விற்கு
மதுரையில் இருந்து கடமையாற்ற வேண்டிய கட்டாயம். தன்னுடைய கடமையைத் தடையின்றி
நிறைவேற்றுவதா?
வழிகாட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்தி செய்நன்றி காத்தலா? என்னும்
இக்கட்டான நிலையில்,
'முதலிற் கடமை;
பின்னர் செய்நன்றி காத்தல்' என கடமை நோன்பிநராக
வாழ்ந்திருக்கிறார் மு.வ. இந்நோன்பு
இன்றைய தலைமுறையும் நோற்க வேண்டிய ஒன்றாகும்.
நெகிழ்மனநிலையிநர்:
"நல்லவராக மட்டுமன்று வல்லவராகவும் இருக்க வேண்டும்", "உணர்ச்சிக்கன்று;
அறிவிற்கே முதன்மை தர வேண்டும்" முதலிய அறிவிற்கு
முதன்மைதரும் கருத்துகளைத் தன்னுடைய படைப்புகள் நெடுக வாய்ப்புக் கிடைக்கும்
பொழுதெல்லாம் எடுத்துரைப்பார் மு.வ.
அதன்படியே தன்னுடைய அறிவுத்திறத்தால் உயர்ந்தவர் அவர். இருப்பினும் அவரும்
உணர்விற்கு ஆட்பட்டு நெகிழ்மனநிலையிநராக இருந்திருக்கிறார். தன்னுடைய வீட்டிற்கு வந்த திரு.வி.க. உண்டு
வீசிய மாதுளைவிதையில் இருந்து முளைத்த மாதுளம் செடியை வெட்டிவிடும்படி பலர்
கூறியபொழுதும் மறுத்திருக்கிறார். தனக்கு
அடையாளம் நல்கிய பச்சையப்பன் கல்லூரியை,
பலநாள்கள் தாயின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு அவரது
காலடியைச் சுற்றிவரும் குழந்தையாக,
பலநாள்கள் சுற்றியிருக்கிறார். இறுதிநாளில் மருத்துவமனைக்கு எடுத்துச்
செல்லப்படும்பொழுது அக்கட்டிடத்தைப் பார்த்து, கையெடுத்து
வணங்கியிருக்கிறார். இந்த நெகிழ்மனநிலையை நூலாசிரியர், "பக்தியும் பாசமும் இருக்கும் இடத்திற் பகுத்தறிவு செயலற்றுப் போகும்"
என்னும் குறிப்போடு பதிவு செய்கிறார்.
இதன்வழியாக,
'எப்பொழுதும் எதனையும் அறிவுக்கண் கொண்டு மட்டும் நோக்காமல், சற்று
உணர்வுக்கண் கொண்டும் நோக்குங்கள்'
என வாசகர்களுக்கு நூலாசிரியர் உணர்த்துவதாகக் கருதலாம்.
குறையொன்று உளது...
கணினியின் வருகைக்குப்
பின்னர் தமிழ்நூல்களின் வடிவழகு கூடியிருக்கிறது. ஆனால், பனுவல்களில்
இலக்கணப் பிழைகளும் எழுத்துப் பிழைகளும் மலிந்துவிட்டன. அதற்கு அச்சகங்களில்
மொழியறிந்த பிழைதிருத்துவோர் இல்லாமையும் ஒளியச்சுச் செய்வோரின் மொழியறிவு
இன்மையும் காரணங்களாக இருக்கின்றன.
இல்லையென்றால்,
தமிழிலக்கணத்தில் ஊறிய பேராசிரியரின் இந்நூலிலும்
"ஆசு+சிரியன்" (பக்.9),
"அப்படியேயா" (பக்.14), "இரவுநேர
விலக்கு" (பக்.34),
"உரிமையை வீறி மீறியது" (பக்.37), "ஒரு அறிக்கை" (பக்.44),
"படித்த முடித்த" (பக். 53), "ரா.பி.சேனுப்பிள்ளை"
(பக்.67),
"«டி" (பக்.72),
"ஒரு அதிர்ச்சி" (பக்.82), "நீஙக்ள்"
(பக்.82),
"அழீத்து" (பக்.92)
முதலிய பிழைகள் இடம் பெற்றிருக்குமா? நூல்களைப்
எப்பிழையும் இன்றி அச்சிட்டு வழங்கிய தமிழ்த்தென்றல் திரு.வி.க.வின் சாது
அச்சுக்கூடத்தைப் போல அச்சிடும் இன்னோர் அச்சுக் கூடம் இனியேனும் தோன்றுமா?
நிறைவாய், மாணவர்
ஒருவர் தன் ஆசிரியரைப் பற்றி எழுதிய நினைவலைகளாக மட்டும் இந்நூல் திகழவில்லை; இன்றைய
ஆசிரியர்கள் தம்மை நல்லாசிரியர்களாக உயர்த்திக்கொள்ளவும் மாணவர்கள் தம்மை
நன்மாணாக்கராக வளர்ந்து உயரவும் உதவும் வழிகாட்டியாகவும் இந்நூல் திகழ்கிறது.
மூவா நினைவுகள்; முனைவர் ம.ரா.போ.குருசாமி; பக்கங்கள் 96; விலை 40
உருபாய்;
விஜயா பதிப்பகம், 20 ராஜ
வீதி, கோயம்புத்தூர் 1.;
முதற் பதிப்பு அக்டோபர் 2011
அடையாளம் தேடும் அடையாளங்கள்
அடையாளம் அற்று இருக்கும்
அடையாளம்அடையாளத்தால் மறைக்கப்படுகிறது
அடையாளத்தோடு இருக்கும்
அடையாளமும்
அடையாளத்தால் மறைக்கப்படுகிறது
ஆயினும்
அடையாளம் அற்றஅடையாளமும்
அடையாளம் உள்ள அடையாளமும்
தத்தம்
அடையாளங்களைத் தேடி அடைகின்றன
அவ்வடையாளங்கள்
தம்
அடையாளங்கள்தானா
என்னும் ஐயம் எழுகையில்
அவ்வடையாளங்களைத் துறந்து
அடையாளத்தைத் தேடி அலைகின்றன
பகுத்தறிவு சூடி
யாரால் எங்கே எப்பொழுது என்ன
எப்படி யாருக்கு ஏன்என வினவிப்
பகுத்து விளைவை அறிந்து வாழ
ஊக்கும் வகையில் வகுத்த பாவே
பகுத்தறிவு சூடி என்னும்இந் நூலே
01 அறிவியலுணர்வு கொள்
02 ஆருடம் பொய்
03 இழிதொழில் ஏது?
04 ஈட்டுக அறிவு
05 உன்னை அறி
06 ஊர்நலம் பேண்
07 எளிமையே மேல்
08 ஏனெனக் கேள்
09 ஒழுக்கம் உயர்வு
10 ஓம்புக மானுடம்
11 கடவுள் இல்லை
12 காலம் கருது
13 கிலியைக் கொல்
14 கீழ்மை அறு
15 குலம்பல எதற்கு
16 கூடி வாழ்
17 கெடுமதி விடு
18 கேண்மை போற்று
19 கொடுமை எதிர்
20 கோலம் புதுக்கு
21 சடங்குகள் அகற்று
22 சாத்திரம் களவு
23 சிறப்புடன் வாழ்
24 சீர்மை தேவை
25 சுடர்முகம் தூக்கு
26 சூழல் நோக்கு
27 செந்தமிழ் பயில்
28 சேவை செய்
29 சொல்வழி நில்
30 சோர்வு நீக்கு
31 தமிழைப் புதுக்கு
32 தாய்மொழிவழி பயில்
33 திருத்துக பிழையை
34 தீண்டாமை மடமை
35 துருவிப்துருவிப் பார்
36 தூய்மையாய் இரு
37 தெளிவுடன் வாழ்
38 தேனீபோல் உழை
39 தொலைநோக்கு தேவை
40 தோழமை கொள்
41 நல்லவராய் நட
42 நானிலம் சுற்று
43 நிமிர்ந்து நில்
44 நீக்குவன நீக்கு
45 நுணுகி நோக்கு
46 நூல்பல கல்
47 நெறிவழி செல்
48 நேர்மையே கற்பு
49 நொவ்வுடல் தேற்று
50 நோயற்று வாழ்
51 பகுத்தறிந்து ஏற்றிடு
52 பாகுபாட்டை ஒழி
53 பிறரை மதி
54 பீடை ஏது
55 புலமை பெறு
56 பூமியைப் பொதுசெய்
57 பெண்டீர் பெரியோர்
58 பேருளம் கொள்
59 பொலிவுடன் விளங்கு
60 போர்வெறி விலக்கு
61 வல்லவராய் வாழ்
62 வாய்மை போற்று
63 விதி பொய்
64 வீண்கதை தவிர்
65 வுழைப்புப் பொது
66 வெறுப்பு வேண்டா
67 வேற்றுமை விலக்கு
68 மடமையைக் கொல்
69 மானம் பெரிது
70 மிகுபொருள் கேடு
71 மீன்போல் இயங்கு
72 முயற்சியே வெற்றி
73 மூடநம்பிக்கையை விலக்கு
74 மெய்யினைத் தேடு
75 மேன்மை நடத்தையில்
76 மொழிபல அறி
78 மோழைமை ஒழி
Subscribe to:
Posts (Atom)
கலகத் தமிழிசைக் கலைஞர்
கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...
-
இன்றைக்கு சுஜாதாவிற்கு நினைவுநாளாம். யாரோ ஒரு நண்பர் என்னையும் சுஜாதாவின் புகழ்பாடும் “ எழுத்தாளர் சுஜாதாவின் விசிறிகள் குழு ” என்னும் முக...
-
சின்னையில் பிறந்து, வதிலையில் வளர்ந்து, மதுரையில் பயின்று, சென்னையில் சிறந்தவர் சின்னமனூர் சுப்பிரமணியம் செல்லப்பா. இவர் மதுரை ...
-
தேனி வரசக்தி விநாயகர் கோவிலில் ஒவ்வோராண்டும் நவராத்திரி கலை இலக்கிய விழாவாகக் கொண்டாடப்படும். இவ்விழாவிற்கு கவிஞர் கண்ணதாசன் ஒருமுறை வந்திர...