"இக்கும்.. எங்கே இருக்கீங்க?"
"சென்னையில"
"எத்தனை நாளைக்கு?"
"மூன்று நாள்கள்"
"இக்கும்.. இந்தத் தடவயாவது வீட்டுக்கு
வாங்க"
"எப்ப வர?"
"நாளைக்கு.."
"சரி. காலையில 8.30க்கு கூப்பிடுறேன்.."
"வேண்டா.. கிளம்பிவாங்க.. இக்கும்.."
"சரி"
நாளைக்கு மறக்காமல் அவரைப் பார்த்துவிட
வேண்டும் என நினைத்துக்கொண்டே கைபேசி இணைப்பைத் துண்டித்தேன்.
0
மறுநாள் 13.3.2012. போரூர் நாற்சந்தி. மதியம் 2:30 மணி.
அவருடைய வண்டியிலிருந்து கீழே இறங்கினேன்.
"அரி. நீங்க தி.நகருக்குத்தானே போகணும். இந்த
சிக்னலக் கடந்து, அந்தப் பக்கம்
போயி நின்னா அடிக்கடி பஸ் வரும்.... இருங்க வண்டிய நிறுத்திட்டு வந்து உங்கள பஸ்
ஏத்திவிட்டுட்டு..."
"அய்யோ வேண்டா.. நான் வளசரவாக்கத்தல ஒரு நண்பரப்
பாக்கணும். சாலையக் கடந்து, வண்டி பிடிச்சுப் போயிக்கிறேன்."
"சரி. பார்த்துப் போங்க.. மதுரைக்கு வரும்பொழுது
சந்திப்போம்" என அன்போடு கூறிவிட்டு புன்னகை மாறாத முகத்தோடு, தன்னுடைய விசையுந்தை கிளப்பிக்கொண்டு போனார்
அவர்.
அவர்.... கிருஷ்ணா டாவின்ஸி.
0
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் லிசா, ஸந்தியா ஸொரூபன், யாத்ரா ஆகியோரோடு இணைந்து பாலம் என்னும்
உருட்டச்சு இதழில் மாதத்திற்கு ஒரு புதிய பெயரில் எழுதிக்கொண்டிருந்த என்னை
கிருஷ்ணா டாவின்ஸி என்னும் பெயரின் முரண்தொடை முதலில் ஈர்த்தது. அதனால்
குமுதத்திலும் மாலைமதியிலும் வெளிவந்த இவர்களின் எழுத்துகளை அவ்வப்பொழுது
படித்தேன். அந்த எழுத்துகளில் சுஜாதாவின்
சாயல்கள் ஆங்காங்கே தென்பட்டன. எனினும் அவற்றுள் சில குமுதத்தின் மரபிற்கு
மாறானவையாக இருந்தன.
"அய்யோ.. கொல்லாற்களே" என கருணாநிதியின்
கதறல் சன்தொலைக்காட்சியில் ஒலித்த சில வாரங்களில், அந்தக் காட்சியைத் தொடக்கமாகக் கொண்டு
குமுதத்தில் ஒரு தொடர்கதை. எழுதியவர் கிருஷ்ணா. தலைப்பு நான்காவது எஸ்டேட்.
வழக்கத்திற்கு மாறாக குமுத்தைத் தேடிப்பிடித்து வாரம் தவறாது படித்தேன். இதழியல்
உலகத்தை அடிப்படையாக வைத்து நா.பா.வும் இ.பா.வும் ஆளுக்கொரு பெருங்கதை
எழுதியிருந்தாலும், இக்கதை
அவ்வுலகத்தின் மற்றொரு முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டியது. அதன் பின்னர் கிருஷ்ணா
டாவின்ஸி எழுதியவைகள் கையிற் கிடைத்தபொழுது தவறாது படித்துக்கொண்டிருந்தேன்.
0
2009. வளரிளம் பருவத்தினருக்கு வாழ்க்கைத் திறன்களை
காணொளி மூலம் கற்றுத்தரும் தளிர்த் திறன் திட்டத்திற்கான பாடத் திட்டங்களை
வகுத்துக் கொண்டிருந்தேன். வகுத்த பாடங்களை காணொளிக் காட்சிக்கு ஏற்றவாறு
மாற்றிக்கொண்டிருந்தேன். ஆனால், அவை காட்சி ஊடகத்திற்கு
வாகாக அமையவில்லை என அப்பாடங்களை காட்சிப்படுத்தும் பொறுப்பை ஏற்றிருந்த இராசு
கருதினார். எனவே தனது வர்ணம் படத்தின்
கதையை காட்சி ஊடகத்திற்கு ஏற்ப மாற்றிக்கொடுத்த ஒருவரை அறிமுகம் செய்து
வைப்பதாகவும் அவர் இவற்றை எளிதில் மாற்றிக் கொடுத்துவிடுவார் எனவும்
கூறினார். இரண்டொரு நாள்கள் கழித்து,
"அரி. நான் சொன்னவரு. மதுரைக்கு நாளக்கி மறுநா காலையில நெல்லையில
வருவாரு. அவரோட நம்பர எழுதிக்கிங்க. மதுரையில எங்கே எப்ப வரணும்கிறத அவருகிட்ட
பேசிக்கிங்க..."
"சரி. எண்ணச் சொல்லுங்க.."
சொன்னார். குறித்துகொண்டேன்.
"அவரோட பேரு..."
"கிருஷ்ணா டாவின்ஸி"
"யாரு?... குமுதம் பொறுப்பாசிரியரா..."
"ஆமா. ஆனா இப்ப அவரு அங்கயில்ல..."
இராசு இணைப்பைத் துண்டித்தார்.
நான் அலுவலகத்திற்குத் தகவற் சொன்னேன்.
கிருஷ்ணாவை வரவேற்பதற்கும் அவர் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
நாளை மறுநாள் வந்தது. சரவண செல்வக்குமார்
தங்ககத்திற்குச் சென்று கிருஷ்ணாவை அழைத்து வந்தார். சராசரி உயரம், மெல்ல பூசினாற் போன்ற உடலமைப்பு, கழிந்துகொண்டிருந்த தலைமுடி, குறுந்தாடி, முகத்திற்கு ஒளிகூட்டும் புன்னகை இவற்றோடு அவர்
அலுவலகத்திற்குள் நுழைந்தார்.
"அரி"
"கிருஷ்ணா டாவின்ஸி"
கைகளைக் குலுக்கிக்கொண்டு அலுவல் அறைக்குள்
நுழைந்தோம். திட்டத்தைப் பற்றிக் கேட்டு
தெளிவாகப் புரிந்து கொண்டார். காணொளி
ஒன்றை முழுமையாகப் பார்த்தார். முகத்திலிருந்த புன்னகை மாறாமல் இடையிடையே
பேசினார். ஒவ்வொரு சொற்றோடரின் இறுதியிலும் "இக்கும்..." என தன்னுடைய
புன்னகையை ஓசையால் வெளிப்படுத்தினார்.
பகலுணவு உண்ண அருகிலிருந்த கடைக்குப் போனோம். இலக்கியம், இதழியல் என பேச்சுப் பற்றிப் படர்ந்தது.
மீண்டும் அலுவல். மற்றொரு காணொளிப்
பாடத்தை திரையிட்டேன். அதனை இடையிடையே நிறுத்தி, அதில் கூறப்பட்டுள்ள செய்தியில்
காட்சிப்படுத்துவதற்குத் தேவையான சொல்களை எவ்வாறு இணைப்பது என்பதனை விளக்கினார்.
"மும்பை என எழுதாதீர்கள். முன்னிரவு நேரத்தில் மும்பை பரபரப்பாக
இயங்கிக்கொண்டிருந்தது என எழுதுங்கள்.
விளக்கொளியில் ஒளிரும் பரபரப்பாக இயங்கும் மும்பையின் படத்தை இராசு இந்த இடத்தில்
காட்டிவிடுவார்." என சில எளிய எடுத்துக்காட்டுகளோடு கூறினார். பல நாள் பழகிய
நண்பரைப் போல ஒரே நாளில் நெருங்கி வந்தார். பின்னர் இருவரும் இணைந்து விடாமுயற்சி,
தடைகளைத் தகர்த்தல் ஆகிய
இரண்டு தலைப்புகளில் இரண்டு காணொளிப் பாடங்கள் எழுதுவது என முடிவு செய்தோம்.
எழுதினோம். காட்சி ஊடகத்திற்கு ஏற்ப எழுதும் உத்தி எனக்குப் பிடிபட்டது.
"அவ்வளவுதான். இனி நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்." என விட்டுவிட்டார்.
அதன் பின்னர் அவ்வப்பொழுது தொலைபேசியில்
அளவளாவல். திட்டத்தின் வளர்ச்சியைப் பற்றி
அக்கறையோடு கேட்பார். தன் நண்பர்கள் யாரையேனும் களத்திற்கு அனுப்பி, விளைவை அறிந்து கட்டுரை எழுதச் சொல்வதாகக்
கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் ஓராண்டு வரை அப்படி யாரும் வரவில்லை.
ஓராண்டு கழித்து, 12.11.2010ஆம் நாள் கிருஷ்ணா டாவின்ஸி, தளவாய் சுந்தரத்தை அழைத்துக்கொண்டு மதுரைக்கு
வந்தார். உடம்பு கடந்த முறை பார்த்ததைவிட பாதியாகக் குறைந்திருந்தது. "என்ன
கிருஷ்ணா?" என்றேன்.
"ஜிம்மிற்கு போயி உடம்பக் கொறச்சிருக்கேன்.
44வயது
ஆயிருச்சுல" என்றார். பின்னர் ஒரு பள்ளிக்குச் சென்றோம். மாணவர்களோடும்
ஆசிரியர்களோடும் கிருஷ்ணா உரையாடினார்.
தளவாய் எல்லாவற்றையும் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.
தலைமையாசிரியர் கிருஷ்ணாவிடம் பெயர்க் காரணம் கேட்க, அவர் விளக்கினார். அடுத்த சில வாரங்களில் தளவாய் சுந்தரம் குமுதத்திலும் அகிலன்
சித்தார்த் என்னும் பெயரில் சூரியக் கதிரில் கிருஷ்ணா டாவின்ஸியும் தளிர்த் திறன்
திட்டத்தைப் பற்றி ஆளுக்கொரு கட்டுரைகள் எழுதினார்கள். அந்த வருகையின் பொழுது
நாங்கள் மூவரும் இலக்கியம், இதழியல், சூழலியல், திரைப்படம் என வளவளவென்று பேசிக்
கொண்டிருந்தோம். அவர்கள் இருவரும்
தொடர்வண்டியெறியதும் நான் முகநூலில், "ஒத்த இயல்பும் சிந்தனையும் உடையவர்களோடு ஒருநாள்
முழுக்கப் பேசினாலும் சலிப்பதில்லை; மாறாக உற்சாகம் தன்னுடைய ஊற்றுக்கண்களைத் திறந்து கொள்கிறது" என
எழுதினேன். படித்துவிட்டு, "எனக்கும்
அப்படித்தான் இருந்தது" என தொலைபேசியில் அழைத்துக் கூறினார்.
அதன் பின்னர் அடிக்கடி தொலைபேசியின் வழியாக
உரையாடல்கள். அந்த உரையாடல்கள் பல
வேளைகளில் ஒரு மணி நேரமாவது நீடித்தன. இலக்கியம், இதழியல், சூழலியல், திரைப்படம், அரசியல், இசை, உளவியல் என அவை விரிந்தன. நான்
சென்னைக்கு வரும் பொழுதெல்லாம் தொலைபேசியில் அழைப்பேன். வீட்டிற்கு
அழைப்பார். வருகிறேன் என்பேன்; ஆனால் போவதற்கு நேரம் வாய்க்காது. அதனால்தான் 12.3.2012 இல் அழைத்த பொழுது, இந்த முறையாவது வாருங்கள் என்றார்.
மறுநாள் போரூர் நாற்சந்தியில் இறங்கி
நின்றுகொண்டு கிருஷ்ணாவை அழைத்தேன். "இ.பி. ஸ்டாப்புக்கு அடுத்த ரோட்டுல
திரும்பி கொஞ்சம் வந்தது, ரைட், லெப்ட், ரைட் திரும்பிட்டு கூப்பிடுங்க. பாத
சொல்றேன்" என்றார். இதில் அவர் கூறிய முதல் ரைட்டை நான் கவனிக்கவில்லை.
நடந்தேன். இ.பி. பேருந்து நிறுத்தம். அதற்கு அடுத்து இடதுபுறமாக ஒரு சாலை.
நடந்தேன். ஓரிடத்தில் வயர்லெஸ் ரோடு என எழுதியிருந்தது. வெயிலில் வேடிக்கை
பார்த்துக்கொண்டே நடந்தேன். சற்று தொலைவில் சாலை இரண்டாகப் பிரிந்தது. நான்
இடதுபுறம் திரும்பி, பத்து எட்டுகள்
வைத்திருப்பேன், கைபேசி
முணங்கியது. கிருஷ்ணா கூப்பிட்டார்.
"எங்க இருக்கீங்க.."
"வயர்லெஸ் ரோட்டுல வந்து, இடது பக்கமாக திரும்பி.. இருங்க தெருப் பெயர
பாத்துச் சொல்றேன்"
"உங்கள ரைட்டுல திரும்பச் சொன்னேன். நீங்க லெட்ல
திரும்பி இருக்கீங்க. திரும்ப ரைட்ல வந்து, அப்புறம் லெப்ட்ல திரும்பி, மறுபடியும் ரைட்ல திரும்பி மார்ஸின் ஃபிரி
கடக்கிட்ட வந்து கூப்பிடுங்க..."
"சரி, கிருஷ்ணா..."
நடந்தேன். உரிய இடம் வந்ததும் நின்றேன்.
கைபேசியில் அழைத்தேன்.
"வந்திட்டீங்களா...? அந்தக் கடய ஒட்டி வர்ர பாதயில வந்து ரைட்ல
திரும்பி, மறுபடி லெப்ட்ல திரும்பி
கடசில இருக்கிற வீட்டுக்கு வாங்க. வாசல்ல நிக்கிறேன்."
சென்றேன். கடைசி முனையில் திரும்பியதும் கடைசி
வீட்டின் மாடியிலிருந்து கண்ணாடி அணிந்த ஒருவர் கையைக் காட்டினார். அருகில்
சென்றேன். குறுந்தாடியோடு கிருஷ்ணா. "நடந்தா வர்ரைங்க? வண்டிய எடுத்துக்கிட்டு வந்திருப்பேனே. நீங்க
உங்க நண்பர்கூட வண்டில வர்ரைங்கன்னு நினைச்சேன்."
"நாற்சந்தி வரைக்கும் ஆட்டோவில வந்தேன்.
அதுக்குப் பிறகு எனக்கு பாத தெரியாமா அவரப் போட்டு அலயவிட வேண்டாம்ன்னு இறங்கி
நடந்து வர்றேன்."
"சரி. உள்ளே நுழைஞ்சு, மேல வாங்க" என்றார். மாடியேறினேன்.
கிருஷ்ணா டாவின்சி தனது வீட்டில் - நோய்யிலிருந்து மெல்ல மீண்டுகொண்டிருந்த நேரம் - நான் இறுதியாகப் பார்க்கும்பொழுது இப்படித்தான் இருந்தார் |
வெளிர்நீல காற்சட்டையும் வெளிர்சிவப்பு
டிசர்ட்டும் அணிந்து எழும்பும் தோலுமாக இருந்தார்.
"என்ன கிருஷ்ணா. பாதிய போயிட்டீக்க."
"ஆமா.. உடம்புக்கு முடியல.." என உதட்டைச்
சுழித்துக்கொண்டு கையைப் பற்றினார். அந்தப்பிடியில் பழைய பலம் இல்லை.
"என்னாச்சுப
"இரண்டு மாசமா அப்பப்ப காய்ச்ச வந்து போச்சு.
வைரஸ் காய்ச்சல்னு நினைச்சோம். தொடர்ந்து வரவும் எலிக்காய்ச்லா இருக்குமோன்னு
டாக்டர் நினைக்கிறாரு. டெஸ்ட் பண்ணியிருக்கோம்.."
பேசிக்கொண்டே வரவேற்பறைக்குள் நுழைந்து
அமர்ந்தோம். பக்கத்து இருக்கையில் அவருடைய மடிக்கணிணி திறந்து இருந்தது.
"ஆனந்த விகடனுக்கு கதை கேட்டிருக்கிறார்கள். எழுதிக்கொண்டிருக்கிறேன். பத்து பக்கத்திற்கு மேலே போகுது....இக்கும்.." என
புன்னகையோடு கூறிக்கொண்டே கிருஷ்ணா அடுப்படிக்குச் சென்று குளிர்ந்த நீரும் மோரும்
கொண்டு வந்தார். குடித்துவிட்டு இரண்டரை மணிநேரம் பேசிக்கொண்டு இருந்தோம். அந்தப்
பேச்சில் கிட்டத்தட்ட அவருடைய தன்வரலாற்றையே கூறிவிட்டார் எனலாம். அப்பா கதை
எழுதுவதைப் பார்த்து தானும் கதையெழுதத் தொடங்கியது; தொடர்வண்டித் துறையில் பயணச்சீட்டு சோதனையாளராக
இருத்தது; முழு நேர
எழுத்தாளனாக வேண்டுமென குமுதத்திற்கு வந்தது; சுஜாதாவோடு பணியாற்றியது; திரைப்படத்திற்கு போனது; தன்னுடைய படைப்புகள் பலவற்றின் படிகள் தன்னிடம்
இப்பொழுது இல்லாதது என நிறையப் பேசினார். இடையே இரண்டு முறை ஜெயராணி அழைத்தார்.
உரையாடிவிட்டு மீண்டும் என்னோடு உரையாடலைத் தொடர்ந்தார். சுவரில் தொங்கிக்கொண்டிருந்த
ஆங்கிலத் திரைப்பட சுவரொட்டிகளாலான படங்களைப் பார்த்துக்கொண்டே
பேசிக்கொண்டிருந்தேன். அதனைக் கவனித்த அவர், அந்தப் படங்கள் தன்னிடம் வந்த கதையைக்
கூறினார்.
அதிலொன்றில் சார்லி சாப்ளின் "த கிட்" படத்தின் சுவரொட்டி.
அதில் சார்லிசாப்ளினும் குழந்தையொன்றும் சோகமாக இருப்பர். அந்தப் படத்தைக் காட்டி,
"இவங்க இரண்டு பேரும் ஏன் சோகமாக இருக்காங்கன்னு பாப்பா
கேட்கிறா.. அவளுக்கு புரியிற மாதிரி பதில் சொல்ல முடியல.." எனக் கூறிவிட்டு
குழந்தை வளர்ப்பின் நுட்பங்களைப் பற்றி சிறிது பேசினார். பின்னர் சோபாசக்தியின்
நூல்கள் சிலவற்றை அண்மையில் வங்கிவந்து படித்ததாகக் கூறி, வீட்டிற்குள் சென்று சோபாசக்தியின் "பயந்த
புலி" நூலை எடுத்துவந்து கொடுத்து, "நா படிச்சிட்டே; நீங்க படிங்க" என்றார். மீண்டும் பேச்சு
தொடர்ந்தது. நேரம் ஓடியது.
"சரி. கிளம்புகிறேன் கிருஷ்ணா.. உடம்பைப்
பார்த்துக்கிங்க" எனக் கூறி எழுந்தேன்.
"இருங்க வர்றேன்" எனக் கூறி உள்ளே
சென்றார்.
ஒரு கையில் சாவிக்கொத்தோடும் மறுகையில் மோர்க்
குவளையோடும் திரும்பி வந்தார். வாங்கிக் குடித்தேன்.
"வாங்க போகலாம்" எனக் கிளம்பினார்.
"கிருஷ்ணா நீங்க இருங்க. நான் போயிக்கிறேன்."
"இல்ல அரி. இப்ப நான் அம்மா வீட்டிற்கு போகணும்.
வழியில உங்கள விட்டேர்னே. வாங்க"
வீட்டுக்கதவைப் பூட்டிவிட்டு இருவரும்
படியிறங்கினோம். கிருஷ்ணா தனது விசையுந்தைக் கிளம்பினார். நான் வளாகக் கதவைத்
திறந்தேன். அவர் வண்டியை சாலைக்கு இறக்கினார். கதவை மூடிவிட்டு வந்து வண்டியின்
பின்னிருக்கையில் ஏறிக்கொண்டேன். வண்டியை ஓட்டிக்கொண்டே, "மதுரையில் தலித் கலைவிழா நடக்குமில்ல. அதுல
இந்தத்தடவ எனக்கு பாராட்டு தெரிவிக்கிறதா இருக்காங்க. அப்ப வர்றேன். சந்திப்போம்." எனக் கூறினார். அதற்குள்
நான் முதலில் பாதையைத் தவறவிட்ட இடம் வந்தது. "இங்கதான வழிமாறுனிங்க...
இங்கதா அம்மாவீடு இருக்கு. நா
உங்கள மெயின்ரோட்ல விட்டிட்டு வந்திர்ரே" எனக் கூறி குறுகிய பாதைகளில்
வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து, நெடுஞ்சாலையில்
ஏறி, நாற்சந்தியில்
நிறுத்தினார். இறங்கி விடை பெற்றேன்.
0
அதற்கு அடுத்து மூன்று முறை மதுரையிலிருந்து
தொலைபேசியில் அழைத்தேன். நன்றாக இருப்பதாகக் கூறினார். நானும் எங்களது
திட்டத்திற்கான செய்திமடலை உருவாக்கும் பணியில் மூழ்கிப்போனேன்.
4.4.2012. மாலை 6.30 மணி இருக்கும். அலுவலகக் கூட்டம் ஒன்றை
முடித்துவிட்டு எனது அறைக்குள் நுழைந்தேன். வீட்டிற்குக் கிளம்புவதற்குள்
முகநூலைப் பார்த்துவிடலாம் என அதனைத் திறந்தேன். முதல் நிலைச்செய்தியில் அருள்
எழிலனின் முகம் தெரிந்தது. கீழே கிருஷ்ணா டாவின்ஸியின் மறைவுப் பற்றிய செய்தி
இருந்தது. அதனை இரண்டு முறை படித்தேன். நம்பமுடியவில்லை. கைபேசியை எடுத்து தளவாய் சுந்தரத்தை அழைத்தேன்.
அவர் மற்றொருவரோடு பேசிக்கொண்டிருப்பதாக பதிவுக்குரல் கூறியது. இரண்டாவது அழைப்பை தளவாய் ஏற்றார்.
"அரி.."
"தளவாய்.. பேஸ்புக்கில அருள் எழிலன்
கிருஷ்ணாவைப் பத்தி ஒரு செய்தி போட்டிருக்காரு.."
"அது என்ன செய்தின்னு தெரியாது.. ஆனா
உண்மைதான்.. சாயுங்காலம் 5.30... உண்மைதான்.."
"நம்ப முடியல.."
அதற்கு மேல் வேறு எதுவும் பேச இயலவில்லை.
மூன்று மணித்துளிகள் இரண்டு முனைகளும் அமைதியாக இருந்தன. நான் இணைப்பைத்
துண்டித்தேன். மறுநாள் தொடங்கி இன்று வரை நண்பர்கள் பலர் முகநூலில் கிருஷ்ணாவைப்
பற்றிய தங்களுடைய நினைவுகளை சிறிதும் பெரிதுமாகப் பதிந்துகொண்டே இருக்கிறார்கள்.
அவரை அவருடைய எழுத்தின் மூலமாக அறிந்தவர்கள் பலர் அவற்றை நினைவுகூர்கிறார்கள்.
படிக்கப் படிக்க வேதனைதான் மிஞ்சுகிறது...
குறுகிய காலத்தில் நெருங்கிய நட்பு இழையறுந்து
தொங்குகிறது!