இந்தியா அரசியல் விடுதலைப் பெற்ற பின்னர், இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள அனைத்துப் பண்பாடுகளின் வேர்களையும் வெட்டிவிட்டு சமசுகிருதப் பண்பாடே இந்தியாவின் ஒன்றைப் பண்பாடு என்னும் தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட பல்வேறு கலை, இலக்கிய, பண்பாட்டு அமைப்புகளில் ஒன்றே சாகித்ய அகாதெமி என இந்தி மொழியில் அழைக்கப்படும் இலக்கியக் கழகம்.
இக்கழகம் ஆண்டுதோறும் இந்தியத் துணைக்கண்டத்திற்குள் புழகக்கத்தில் உள்ள, அக்கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, மொழிகளில் வெளிவரும் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கிவருகிறது. அவ்விருதினைப் பெற்றவர்கள் அவ்வவ் மொழியின் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளாகக் கருதப்பட்டு வருகிறார்கள். இவ்வகையிலேயே தமிழ்மொழியிலும் கருதப்படுகிறார்கள். எனவே இவ்விருதினைப் பெறுவதற்கு ஆண்டுதோறும் எழுத்தாளர்களிடையே ஏராளமான போட்டிகளும் ஆள்பிடிக்கும் வேலைகளும் நடைபெறுவதாக ஒரு கருத்து நிலவுகிறது. அக்கருத்தின் சிறு கீற்றினை நீல. பத்மநாபனின் தேரோடும் வீதி புதினத்திலும் காணலாம். எனவேதான் இவ்விருது அறிவிக்கப்படும்பொழுது, பெரும்பாலான ஆண்டுகளில், அது தகுதியானவருக்கு வழங்கப்படவில்லை என்னும் கருத்துகள் பலராலும் முன் வைக்கப்பட்டே வந்துள்ளன. இக்கருத்தினையொட்டி கவிஞர் தமிழ்நாடன் ஒரு சிறு நூலே வெளியிட்டார்.
ஆனால் இதுபோன்ற எந்தவொரு மாற்றுக் கருத்தும் அக்கழகம் 1989ஆம் ஆண்டிலிருந்து வழங்கிவரும் மொழிபெயர்பிற்கான விருதைப் பெறுபவர்களைப் பற்றியோ விருதிற்குரிய படைப்பைப் பற்றியோ எழுவதில்லை என்பது மகிழ்வளிக்கிறது. ஏனெனில் 1989ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டுவரைக்குமான விருதுப் பட்டியலை http://www.iconofindia.com/sahitya-akademi/awa520.htmநோக்குகிறபொழுது இதுவரை இவ்விருது தகுதியுடையோருக்கும் தகுதிவாய்ந்த படைப்பிற்குமே வழங்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. ஆனால் செகநாதராசா, சித்தலிங்கையா, குறிஞ்சிவேலன், தமிழ்நாடன், சிற்பி பாலசுப்பிரமணியன், ருத்ர துளசிதாசு, நீல பத்மநாபன், பாவண்ணன் போன்ற புகழ் பூத்த, பலரும் அறிந்த கவிஞர்களும் எழுத்தாளர்களும் இவ்விருதினைப் பெற்றிருந்தபொழுதும் அவ்விருது அதிகமாக யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை என்பது கவலைதருகிறது. ஏன் இவ்விருதைப் பற்றி அதிகம் கவலைகொள்ளவில்லை? என்னும் வினா ஆய்வு ஒன்றிற்கான முடிச்சினைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
பொதுவாக, மொழிபெயர்ப்பு என்றவுடன் இரண்டு எண்ணங்கள் படிக்குநர் உள்ளத்தில் எழுகின்றன. மொழிபெயர்ப்பு என்பது புதிய படைப்பு அல்ல, மாறாக மற்றொருவரின் படைப்பை மற்றொரு மொழியில் எழுதும் படிபெயடுக்கும் வேலை. இதில் படைப்பாக்கம் பங்கேற்கவில்லை என்பதும் மொழிபெயர்ப்பு நூல்கள் படிப்பதற்கு எளிதானவை அல்ல என்பதும் அவ்விரண்டு எண்ணங்களாக எனக்குப் படுகின்றன. அஃது உண்மையா?
இலக்கிய மொழிபெயர்ப்பு என்பது உண்மையில் மொழிபெயர்ப்பு அல்ல, மாறாக மொழியாக்கம் என்னும் மறுபடைப்பாகும். எனவே முதல் மொழியிலும் வரு மொழியிலும் புலமை பெற்ற ஒருவரே ஒரு மொழியாக்கத்தை செவ்வனே படைத்திட இயலும். அவ்வாறு மறுபடைப்பு செய்யும் பொழுது முதல்மொழி படைப்பாளளின் எண்ணங்களும் அவர்தம் படைப்பின் வளமையும் சற்றும் குன்றாது அதேவேளையில் வருமொழியின் வளமையும் மரபும் சிதையாது ஆக்குதல் வேண்டும். எனவே மொழியாக்கம் ஒரு படைப்பாக்கமே.
இரு மொழியிலும் புலமை பெறாதவர்களின் மொழிபெயர்ப்பு முயற்சிகளும் மணிப்பிரளவமாக தமிழ் வழங்கப்பட்டு வந்த காலத்தில் ஆக்கப்பட்ட சமயநூல் மொழிபெயர்ப்புகளுக்கு தெய்வீகத்தன்மை ஏற்றி அச்சொற்களையே அந்நடையையே என்றும் பயன்படுத்தவேண்டும் என்னும் போக்கும் புதுத்துறையில் நுழையும்பொழுது உருவாக்கப்படும் புதிய கலைச் சொற்களை பெய்து எழுதுவதால் ஏற்படும் கடுநடையும் பொதுவாக மொழியாக்கம் கடினமாக இருக்கும் என்னும் எண்ணத்தை ஏற்படுத்திவிட்டன. உண்மையோ அதற்கு மாறாக இருக்கிறது. தற்காலத்தில் பேராசிரியர் தருமராசன் போன்ற இரு மொழிவல்லுநர்கள் பலர் மொழியாக்கத் தளத்தில் இடையறாது இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்தம் படைப்புகளும் ஒரு மொழியில் முதன்முதலாக எழுதப்பட்டவைகளைப் போல தடையற்ற மொழிநடையைக்கொண்டு இலங்குகின்றன.
எனினும் மொழிபெயர்ப்பிற்கென்றே ஒரு காலாண்டு இதழும் மலையாள படைப்பிலக்கியத்தை மொழிபெயர்த்து வெளியிடும் ஒரு திங்களிதழும் மொழிபெயர்ப்பாளர்களுக்கென சங்கமும் குறிப்பிடத்தக்க அளவில் ஆண்டுதோறும் மொழிபெயர்ப்பு நூல்களும் வெளிவந்துகொண்டிருக்கும் ஒரு மொழியில் மொழிபெயர்ப்பிற்கென்று துணைக்கண்ட அளவில் வழங்கப்படும் ஒரு விருதையும் விருதுபெறும் படைப்பையும் படைப்பாளியையும் கண்டுகொள்ளாமலும் கவலைப்படாமலும் இருப்பது வேதனை தருகிறது.
இத்தகு சூழலில்தான் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக விளங்கும் காந்திகிரம ஊரகப் பயிற்றத்திலுள்ள தமிழ்துறையில் பேருரையாளராக பணியாற்றும் பா. ஆனந்தகுமார் இவ்வாண்டிற்கான மொழிபெயர்ப்பிற்குரிய இலக்கியக் கழக விருதினை தான் மலையாள மொழியிலிருந்து பெயர்த்துப் படைத்த மலையாற்றூர் இராதகிருட்டிணனின் "இயந்திரம்" என்னும் புதினத்திற்காகப் பெற்றிருக்கிறார். இப்படைப்பாளர் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் ஆய்வுமாணவராக இருந்த நாள்களிலேயே மலையாள கவிஞர் குஞ்ஞுண்ணியின் கவிதைகளை மொழிபெயர்த்து தான் நடத்தி வந்த சிற்றிதழில் வெளியிட்டவர். பின்னர் அக்கவிதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு குஞ்ஞுண்ணியின் கவிதைகள் என்னும் நூலாக இரண்டு பதிப்புகளைக் கண்டது. இதனைப் போன்றே பல படைப்புகளை தமிழுக்குத் தந்திருக்கிற அவ்வறிஞரைப் பாராட்டுவோம். அவரது படைப்புகள் அனைத்தையும், குறிப்பாக விருது பெற்ற இயந்திரம் புதினத்தையும் படித்து திறனாய்வு செய்து மொழியாக்க இலக்கத்திற்கு வளம் சேர்க்க முனைவோமாக.