பெரும் மதிப்பிற்குரியோர் உணர்வார்களாக!மலைத் தொடரின் அடியில் நடுக்காட்டில் இருக்கிறது இன்று வரை சுற்றுலா இடமாக அறிவிக்கப்படாத அந்த அருவி. நெடுஞ்சாலையில் இருந்து கரடுமுரடான வண்டிப்பாதையில் நான்கு கிலோ மீட்டர்கள் சென்றால் கோடையிலும் அங்கு நீர் கொட்டிக்கொண்டு இருக்கும். சில திங்களுக்கு முன்னர் கல்லூரி மாணவர்கள் சிலர் அந்த அருவில் மிகுந்த உற்சாகத்தோடு குளித்துக்கொண்டு இருந்தார்கள். உற்சாகம் அவர்கள் வெளிப்படுத்திய உச்ச அளவிலான ஓலத்தில் வெளிப்பட்டது. அப்பொழுது அங்கு வந்த மாவட்ட கானக அலுவலரும் அவர் படையினரும் அந்த மாணவர்களை, அனுமதியின்றி காட்டிற்குள் நுழைந்ததற்காகவும் அங்கு மதுவை அருந்தியதற்காகவும், கைது செய்வதாகக் கூறினர்.  அந்த மாணவர்களோ, தாம் மது அருந்தவில்லை என்றும் ஐயம் இருந்தால் அலுவலர் முகத்திற்கு அருகில் தம்மை ஊத அனுமதித்து சோதித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர். அலுவலரோ, கானகக் காவலரின் முகத்தில் ஊதிக் காட்டுமாறு அந்த மாணவர்களைப் பணித்தார். சோதனையின் முடிவில் அவர்களில் யாரும் மது அருந்தி இருக்கவில்லை எனத் தெரியவந்தது. சுற்றுலா இடமாக அறிவிக்கப்படாத அக்காட்டிற்குள் உரிய அனுமதியின்றி அவர்கள் நுழைந்தது குற்றம் எனத் தெரிவித்த அந்த கானக அலுவலர், அதற்குத் தண்டனையாக அம்மாணவர்கள் அங்கு உடைந்து சிதறிக் கிடக்கும் மதுப் புட்டிகளையும் மதுக் கிண்ணங்களையும் பிற நெகிழிப் பொருள்களையும் பொறுக்கி ஓரிடத்தில் குவிக்க வேண்டும் எனப் பணித்தார். மது அருந்தும் பழக்கம் இல்லாத தங்களால் மதுப் புட்டிகளையும் கிண்ணங்களையும் அள்ள முடியாது என்றும் அனுமதியின்றி காட்டிற்குள் நுழைந்ததற்கான தண்டத்தொகை எவ்வளவோ அதனைக் கட்டுவதற்கு தாம் ஆயத்தமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். அலுவலரோ, சமூகத் தொண்டாக நினைத்து இக்குப்பைகளை அள்ளுங்கள் எனக் கட்டாயப்படுத்தினார். வேறு வழியின்றி அம்மாணவர்கள் அவரது ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டு அக்குப்பைகளை அள்ளிக் குவித்தனர்.   

இந்நிகழ்வைப் பற்றிய செய்தி சில திங்களுக்கு முன்னர் நாளிதழ்களில் புகைப்படத்தோடு வெளிவந்ததும் அந்த அலுவலர் மேற்கொண்ட நடவடிக்கையை ஆதரித்தும் எதிர்த்தும் பல கருத்துகள் வெளியிடப்பட்டன.  அவற்றுள் பெரும்பாலான பின்னூட்டங்கள், “தவறு செய்யாத மாணவர்களை குப்பைகளை அள்ள அந்த அலுவலர் பணித்தது தவறு; ஆனால் அருவி, கானகம் ஆகியவற்றின் தூய்மையைக் காப்பதில் அவருக்கு உள்ள ஆர்வம் பாராட்டிற்கு உரியதுஎன்னும் தொனியில் எழுதப்பட்டு இருந்தன.

இச்செய்தி வெளிவந்த சில திங்களுக்குப் பின்னர் என் நண்பர்கள் சிலர், கானகத்துறையிடம் அனுமதி பெறாமல் அந்த அருவிக்கு இன்பவுலா சென்று திரும்பினர்.  அவர்களிடம் வினவியபொழுது, அந்த நடவடிக்கைக்குப் பின்னர் சில நாள்கள் இன்பலாவினர் யாரும் அங்கு வரவில்லை என்றும் அதன் பின்னர் மதுப் புட்டியோடும் பச்சை இறைச்சியோடும் வரும் பலர் காய்ந்த சுள்ளிகளைப் பொறுக்கி, பாறை இடுக்கில் அடுப்புக்கூட்டி, ஓடை நீரை முகர்ந்து இறைச்சியை வேகவைத்து உண்டு, மது அருந்திய பின்னர் அப்புட்டியை பாறைகள் மீது எறிந்து உடைத்துவிட்டு, அருவியில் குளித்து மகிழ்ந்து, பொருள்களைக் கொண்டுவந்த நெகிழிப்பைகளை அங்கேயே வீசிவிட்டுச் செல்கின்றனர் என அங்கிருக்கும் கோயில் பூசாரி கூறியதாகத் தெரிவித்தனர்.  ஆக அந்த அலுவலரின் கானகத்தைக் காக்கும் ஆர்வம் அந்த ஒரு நாளோடு முடிந்துவிட்டது. 

சேரள மாநிலம் கும்பமுருட்டி அணையின் நுழைவாயிலில் உள்ள எச்சரிக்கை

இந்த நிலைதான் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அருவிகளிலும் காடுகளிலும் நிலவுகிறது.  ஆனால் அண்மையில் இருக்கும் சேரள மாநிலத்தில் கானகத் துறையின் கட்டுப்பாட்டுக்குக் கீழ்வரும் சுற்றுலா இடங்களில் உள்ள கடைகளில் நெகிழிப் பைக்குள் பொதியப்பட்ட தின்பண்டங்களை வாங்கினால், அக்கடைக்காரர் நெகிழிப் பையின் முனையை வெட்டி தின்பண்டத்தை  வேறொரு தாட்பையில் (Paper bag) கொட்டிக் கொடுப்பதை கால் நூற்றாண்டிற்கு முன்னரே கண்டிருக்கிறேன்.  ஆண்டுதோறும் சித்திரை திங்கள் முழுமதிய நாளில், குமுளிக்கு அருகில், கானக நடுவில் அமைந்திருக்கும் மங்களதேவி கோவில் வழிபாட்டிற்குச் செல்பவர்களிடம் இருந்து பறித்த நெகிழிப் பொருள்களை கானகத்தின் நுழைவாயிலில் மலைபோல குவித்து வைத்திருப்பதைக் காணமுடியும். நெகிழிப் பொருள்களை கானகத்திற்குள் கொண்டுசெல்வதைத் தடுப்பதற்காக, பொதுப்பயனுந்தில் (Jeep) செல்லும் அனைவரையும் ஓரிடத்தில் இறக்கி சோதனை செய்வர். அக்காட்சியை,மாற்று நாட்டின் எல்லைப் பகுதிக்குள் நுழைபவர்களைச் சோதிப்பதைப்போல அவர்கள் சோதிக்கிறார்கள்என வெறுப்பைத் தூண்டும் குரலில் தமிழகத் தொலைக்காட்சிகள் சில ஒளிபரப்பினாலும் கானகத்தைக் காப்பதில் அக்கானகத் துறை மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் பாராட்டிற்கு உரியவை.

சேரள கானகத் துறையின் அறிவிப்புப் பலகை
 சேரள மாநில கானகத் துறையினர், பள்ளி மாணவர்களை கானகப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று மூன்று நாள்கள் தங்க வைத்து சூழலியல் விழிப்புணர்வுப் பயிற்சி அளிக்கிறார்கள் என அறிந்து பத்து ஆண்டுகளுக்கு முன்னர், இடுக்கி மாவட்ட கானகத் துறையிடம் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அப்பயிற்சியை வழங்க வேண்டும் என வேண்டினோம்.  அவ்வேண்டுகோளை ஏற்ற அவர்கள் பேரியாற்றின் கரையில் உள்ள தேக்கடியில் அமைந்திருக்கும் கானகத்துறைக்குச் சொந்தமான பயிற்சி நடுவத்தில் 30 மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளித்தார்கள். சூழலியல் வல்லுநரின் உரை, கலந்துரையாடல், கானக உலா, செயற்றிட்டம் என வடிவமைக்கப்பட்டு இருந்தது அப்பயிற்சி.  அதில் கலந்துகொண்ட மாணவர்கள் தம் ஊருக்குத் திரும்பிய பின்னர் நெகிழிப்பை தவிர்ப்பு, பொது இடத் தூய்மை, நீர் சேமிப்பு ஆகியன பற்றிய பரப்புரையில் தாம் வேலை தேடி வேறு ஊர்களுக்குச் செல்வது வரை ஈடுபட்டார்கள். காட்டிற்குள் சென்று சுள்ளி பொறுக்குவோர், சட்டத்திற்கு உட்பட்டு கானக சிறுவிளைபொருள்களை விற்பனைக்குத் திரட்டுவோர், மலையடிவாரத்தில் கால்நடைகளை மேய்ப்போர் மீது வழக்குப் போடுவதை மட்டுமே செய்யாமல் அம்மாநில கானகத் துறை பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு ஏற்படுத்தி இருக்கும் சூழலியல் விழிப்புணர்வின் விளைவுகளை அங்குள்ள சுற்றுலா இடங்களில் இன்றும் கவனிக்க இயலும். 

சேரள கானகத்துறை வழங்குவதைப் போன்ற விழிப்புணர்வுப் பயிற்சியை மேலும் பல மாணவர்களுக்கு வழங்க இயலுமா என தமிழக கானகத் துறை அலுவலர்களை அணுகியபொழுது அவர்களில் பலருக்கு அதில் ஆர்வமோ அக்கறையோ இல்லை.  மாறாக அவர்களில் பலர், காட்டினை ஒட்டிய ஊர்களில் வாழும் மக்களே அக்காடுகளை அழிப்பதாகவும் அருவிகளிலும் ஓடைகளிலும் மதுப்புட்டி, நெகிழிப்பொருள்கள் போன்றவற்றை வீசுவதாகவும் குற்றம் சாட்டினர்.  முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஓங்கி உயர்ந்த மரங்களால் நிறைந்திருந்த சுருளி அருவி போன்ற இடங்கள், இன்றைக்கு பொட்டல் காடுகளாக மாறியிருப்பதற்கும் அண்மைக் காலம் வரை பெரியகுளம் – தேனி நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் பயணம் செய்பவர்களால் கோடைக்கானல் மலைப்பகுதியில் தீப்பிழப்புகள் ஆங்காங்கே  எரிந்துகொண்டு இருப்பதைக் காண முடிந்ததற்கும் அப்பகுதியில் உள்ள சிற்றூர் மக்கள்தான் காரணிகளா என வினவினால், ‘அமைதி’தான் அவர்களது விடையாக இருக்கிறது. 

கும்பமுருட்டி அணைக்கு மது, நெகிழி ஆகியவற்றை சுற்றுலாவினர் கொண்டு செல்லாமல் தடுக்க அருவிக்கான பாதையில் காத்திருக்கும் சேரள கானகத் துறை ஊழியர்கள்.
 தமிழகத்தில் உள்ள எல்லா சுற்றுலா இடங்களும் குப்பைமேடுகளாகவே காட்சி அளிக்கின்றன. அதிலும் கானகத்தை ஒட்டிய அமைந்துள்ள சுற்றுலா இடங்கள் ஆபத்தான குப்பை மேடுகளாக மாறி வருகின்றன. அவற்றால் அங்கிருக்கும் உணவுச் சங்கிலி சிதைந்து, உணவு வலை அறுந்து, பல்லுயிர் பெருக்கம் அழிவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே கானகத்தைக் காக்க வெற்று ஆதிக்கக் கூச்சலை ஒதுக்கி வைத்துவிட்டு, விழிப்புணர்வையும் பொறுப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்த வேண்டிய பெரும்பணி நம்முன் இருக்கிறது. அவற்றை குழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக் காலத்திலேயே தேர்வு, மதிப்பெண் என அச்சுறுத்தாமல் கற்றுக் கொடுக்க வேண்டி இருக்கிறது. அதற்கான முயற்சிகளில் ஒன்றாகத்தான் சூழலியல் கல்வி என்னும் பாடம் பள்ளிக் கல்வித் துறையால் அறிமுகம் செய்யப்பட்டு, கிழமைக்கு ஒரு பாடவேளை அதற்கென ஒதுக்கப்பட்டது. ஆனால் சூழலியலில் அடிப்படையே அறியாத ஆசிரியர்கள் அதனைக் கற்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் விளைவு, அப்பாடவேளையில் கணித விடையையோ அறிவியல் விடையையோ ஆங்கிலக் கட்டுரையையோ மாணவர்கள் மனப்பாடம் செய்துகொண்டு இருக்கிறார்கள். சூழலியல் கல்வி நூலோ அட்டை கூட புரட்டப்படாமல் பத்திரமாக இருக்கிறது.  பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் முறையாக சூழலியலைக் கற்பிக்கவும் இடையறாது விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேண்டிய வேலையைச் செய்யாமல், ஏதோ ஒரு நாள், இன்பவுலா வந்த மாணவர்களைப் பிடித்து, குப்பைகளை அள்ளச் சொல்லிவிட்டு நாளிழதலுக்கு ஒளிப்படத்தோடு செய்திகொடுப்பதால் என்ன பயன் விளையப் போகிறது?

மாறாக, ஆழிப்பேரலைக்குப் பின்னர் தீயணைப்புத் துறையினர் பள்ளிக் கல்வித் துறையோடு இணைந்து கடலூர், நாகபட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் ஒவ்வொன்றிலும் செம்மையாகத் திட்டமிட்டு, குறிப்பிட்ட கால இடைவெளியில் மாணவர்களுக்கு  பேரிடர் மேலாண்மைப் பயிற்சிகளை பல அமர்வுகளாக வழங்கியதைப் போல கானகத் துறையானது பள்ளிக் கல்வித் துறையோடு இணைந்து தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் தக்க வல்லுநர்களைக்கொண்டு சூழலியல் கல்வியையும் கானக, சுற்றுலா இட நன்னட்டத்தைகளையும் (Tourist spot etiquette) கானக உலா ஏர்பாடுகளையும் செம்மையாகத் திட்டமிட்டுக் கற்பித்தால் சில ஆண்டுகளுக்குப் பின்னர் உரிய பயனைத் தர வாய்ப்பு இருக்கிறது. 

மேலும் சுற்றுலா இடம், கானகத்தை ஒட்டிய அருவி ஆகிய இடங்களில் முறையாகச் சோதனை செய்து நெகிழிப் பொருள்கள், எளிதில் தீப்பிடிக்கும் பொருள்கள், மதுப்புட்டிகள் போன்றவற்றைக் கொண்டு செல்வதைத் தடுக்க வேண்டுமே அன்றி, வெறும் சடங்கிற்காக ஏதோ ஒரு நாள் அவ்விடங்களுக்கு அன்றைக்கு  வந்திருப்பவர்களை மிரட்டுவதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்பதனை பெரும்மதிப்பிற்குரிய நம் அரசு அலுவலர்கள் உணர்வார்களாக! 

அம்ருதா 2015 சனவரி இதழில் வெளிவந்த கட்டுரை

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...