“உழுகிற கைக்கு நிலம் வேண்டும்
உழவர் பிழைக்க நிலம் வேண்டும்”
என்பன போன்ற நிலவுரிமைப் பாடல்களால்
குருக்கத்தி வினோபா ஆசிரமத்தின் வெளியை நிறைந்தவரை, ‘இவரு பேரு அம்மாவாசை; அம்மாசின்னு
கூப்பிடுவாங்க. எங்க போராடங்கள்ல இவருதா ஆசுதான
பாடகர்’ என அறிமுகம் செய்து வைத்தார் சர்வோதயச் செயற்பாட்டாளரான கிருட்டிணம்மாள். அகவை
அறுபது என மதிக்கத்தக்க மெலிந்து, உயர்ந்த, வெயிலில் உழைத்துக் கறுத்த அந்தப் பாடகர்
எங்களைப் பார்த்து புன்னகைத்தார். “உன்னப்பத்திச் சொல்லு அம்மாசி” என்றார் கிருட்டிணம்மாள்.
“எம் பேரு அம்மாசி. உழவுதா நமக்குத் தொழிலு. அலுப்ப மறக்க அவுத்துவிடுற மருந்துதா பாட்டு.
முதல்ல எங்வூரு பண்ணல இருந்தேன். இந்த அம்மா அங்கிருந்து என்ன மீட்டு ஒரு ஏக்கரு நெலம்
தந்தாங்க. குடும்பத்தோட அந்த நெலத்துல உழச்சு, அதோட விலயக் கட்டுனேன். நெலம் எனக்குச்
சொந்தமாச்சு. சொந்த நெலத்துல கடுமய உழச்சு நானா இரண்டு ஏக்கரு நெலம் வாங்குனேன். இப்ப
நல்லா இருக்கேன்” என்றார். அவருக்கு பக்கத்தில்
இருந்த இன்னொருவர், “ஏங் கதயும் கிட்டத்தட்ட அம்மாசி கத மாதிரிதா. அம்மா ஒரு
ஏக்கரு எங்கவீட்டு பொம்பளயாளு பேருல கொடுத்தாங்க. ஒழச்சு கடன அடச்சு, இன்னும் கொஞ்சம்
நெலம் வாங்குனோம். ஆணையும் பொண்ணையும் படிக்க வச்சோம். ஒன்னு வாத்தியாரா ஆயிருச்சு.
இன்னொன்னு ஏதோ ஆபிசுல வேல பாக்குது. ஆனா இரண்டும் இப்பவும் நெலத்துல வேல செய்துக. பேரப்பிள்ளை
டாக்டரு ஆகணுமின்னு இப்பவே சொல்லுது. எப்படியும் அத டாக்டரு ஆக்கிரனும். அதுக்குப்
பொறவும் அது நெலத்தில இறங்கி உழச்சா, இந்த நெலம் அதுக்கு. இல்லாட்டி யாரு நெலத்துல
இறங்கி உழது ஒழக்கிறாங்களோ அவங்களுக்கு. மேழி புடிச்சு உழவுபோடத் தெரியாதவங்களுக்கு
எதுக்கு நெலம்?” என அவர்கள் தமது கடந்த கால வாழ்க்கையை, நிகழ்கால நிலையை, வருங்காலத்
திட்டத்தை சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறி, தம்மை அறிமுகம் செய்துகொண்டனர். கையெழுத்து
மட்டுமே போடத் தெரிந்த அவர்கள் தம்மைப் பற்றிக் கூறிய அந்த அறிமுகத்திற்குள், அவர்கள்
வாழும் பரப்பில் நிகழ்ந்திருக்கிற குமுகாய-பொருளாதார மாற்றமும் அவர்கள் பெற்றிருக்கும்
அரசியற் கல்வியும் புதைந்திருந்தன. நாங்கள்
கிருட்டிணம்மாளை, ‘இது எப்படி நடந்தது?’ என்பதனைப் போலப் பார்த்தோம். கிருட்டிணம்மாள் சொல்லத் தொடங்கினார்.
இந்திய விடுதலைக்குப் பின்னர் பொதுவுடைமையாளர்கள்
தெலுங்கானாவில் நிலவுரிமைப் போராட்டம் நடத்தினார்கள். அது ஆயுதப் போராட்டமாக இருந்ததால்
அவர்கள் பல அடக்குமுறைக்கு உள்ளானார்கள். அரச வன்முறையாலும் எதிர்வன்முறையாலும் மக்கள்
அமைதி இழந்தார். அதனால் வினோபா அங்கிருந்த
நிலப்பகிர்வுச் சிக்கலை இன்னாசெய்யாமை வழியில் தீர்க்க நினைத்தார். பூமிதானம் என்னும்
நிலக்கொடை இயக்கத்தைத் தொடங்கினார். நிலம் உள்ளவர்களிடம் பேசி, அவர்களின் மனதை மாற்றி,
அவர்களிடம் இருக்கும் நிலங்களைப் பெற்று நிலமற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பது அவ்வியக்கத்தின்
நோக்கம். இந்தியாவெங்கும் வினோபா சென்று பெருமளவு நிலத்தைப் பெற்றார்; நிலமற்றவர்களுக்கு
பகிர்ந்தளித்தார். அந்த இயக்கத்தை தமிழ்நாட்டில்
கிருட்டிணம்மாள் கணவர் செகந்நாதன் ஒருங்கிணைத்தார். நிலக்கொடையானது, ஊர்க்கொடை, வட்டாராக்கொடை
என மிகுந்த எழுச்சியோடு விரிந்துகொண்டே போனது. ஆனால், பெற்ற நிலங்களை அந்த நிலமற்றவர்கள்
தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சிகள் நடைபெறவில்லை. அவை நடைபெற வேண்டும் என சே.சி.குமரப்பாவைப்
போன்றவர்கள் கூறினார்கள். வினோபாவோ அது மற்றவர்களின்
வேலை எனக் கூறிவிட்டு, நிலக்கொடை இயக்கத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு இருந்தார்.
கிருட்டிணம்மாளும் செகந்நாதனும் வினோபாவோடு
இணைந்து பணியாற்றிக்கொண்டு இருந்தனர்; அதே வேளையில் குமரப்பாவின் கூற்றில் இருந்த நடைமுறை
உண்மையையும் அவர்கள் உணர்ந்திருந்தனர்.
ஜே. சி. குமரப்பா |
இச்செய்தியை திசம்பர் 26ஆம் நாள் வானொலியின்
வழியாக காந்திகிராமம் ஊழியரகத்தில் தங்கியிருந்த
கிருட்டிணம்மாள் அறிந்தார். வெளியூர் சென்று அன்றைக்குத் திரும்புவதாக இருந்த செகந்நாதன்
வந்ததும் ஏதேனும் செய்ய வேண்டும் என எண்ணிக்கொண்டு இருந்தார். அவ்வேளையில் குன்றக்குடி
அடிகளார் தொலைபேசியில் அழைத்து, மறுநாள் கீழவெண்மணிக்கு தான் செல்ல இருப்பதாகவும் விருப்பினால்
கிருட்டிணம்மாளும் செகந்நாதனும் தன்னோடு வரலாம் எனவும் தெரிவித்தார். அவ்வாறே மறுநாள்
அம்மூவரும் கீழ்வெண்மணி நோக்கிச் சென்றனர். வழியில், ‘இந்த கம்யூனிடுக பலாத்கார வழிய
பின்பத்தி இப்படி 44 உயிரு போக காரணமாயிட்டாங்களே” என செகந்நாதன் பொருமிக்கொண்டே இருந்திருக்கிறார்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கிருட்டிணம்மாள், ‘அங்க மக்கள மாடுமாதிரி ஆண்ட நடத்துரா.
அத அந்த கம்யூனிசடுதான தடுத்து நிறுத்தி அந்த மக்களொட மக்களா கிடக்கிறா. எந்த காங்கிரசுக்காரே
அதப்பண்ணுனா? சும்மா கம்யூனிடுகள கொற சொல்லிக்கிட்டு’ என வெடித்திருக்கிறார். அடிகளார்
இருவரையும் சமாதானம் செய்திருக்கிறார். மூவரும் கீழவெண்மணியை அடைகிறார்கள். எரிந்து
சாம்பலாய்ப் போன ராமையாவின் குடிசையின் முன்னர் கனத்த மனத்தோடு நிற்கிறார்கள்.
அன்றைய மதுரை மாவட்டம் அய்யன்கோட்டையில்
உழவுத்தொழிலாளர் வீட்டில் பிறந்து, வறுமையில் வளர்ந்து, கசுதூரிபாய் நினைவு நிதியின்
உதவியால் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற கிருட்டிணம்மாளின் மனம்
கொதிக்கிறது. ‘இந்த மக்களை இனி கூலிவுயர்வு கேட்பவர்களாக அன்று; நிலவுடமையாளர்களாக
மாற்ற வேண்டும்’ என முடிவு செய்கிறார். அங்கிருந்து ஊருக்குத் திரும்பும்பொழுது செகந்நாதனிடமும்
அடிகளாரிடமும் தனது எண்ணத்தைக் கூறுகிறார்.
அவர்களோடு கலந்துரையாடி சில திட்டங்களை வகுத்துக்கொண்டு சில நாள் கழித்து மீண்டும்
கீழவெண்மணி பகுதிக்கு க.மு.நடராசன், பொன்னையா ஆகியோரைப் போன்ற சர்வோதய ஊழியர்களோடு
திரும்புகிறார்.
அருள்திரு கெய்தான் - விநேபா - செகந்நாதன் |
வெளியூர் சென்று வாழத் தொடங்கிவிட்ட
நிலவுடமையாளர்களைச் சந்தித்து, அவர்களிடம் இருந்த நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி,
உழவுத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கத் தொடங்குகிறார். அதற்காக பல்வேறு இடங்களில் இருந்து
நிதி திரட்டுகிறார். ‘இந்த அணுகுமுறை நிலக்கொடை மெய்யியலுக்கு மாறானது; நிலவுடமையாளர்களிடம்
இருந்து நிலங்களைத் தானாமாகப் பெற்றுத்தான் அம்மக்களுக்கு வழங்க வேண்டும்; அதுதான்
காந்தியம்’ என சர்வோதய இயக்கத்தில் இருந்த சில மெய்யிய வாய்பாட்டாளர்கள் கிருட்டிணம்மாளின்
முயற்சியை விமர்சிக்கின்றனர். ‘அப்படியானால் நான் காந்தியவாதி இல்லை என அறிவித்துவிடுங்கள்’
எனக் கூறிவிட்டு கிருட்டிணம்மாள் தன்னுடைய முயற்சியைத் தொடர்கிறார். பொதுவுடைமையாளர்களோ,
தயிர் திரண்டு வருகிற நேரத்தில் தாழியை உடைப்பதைப் போல வர்க்கமுரண் கூர்மைப்பட்டு வரும்
நேரத்தில் இவர் அதனை மழுங்கடிக்கிறார் என விமர்சிக்கின்றனர்; அதேவேளையில் நிலவுடைமையாளர்களால்
கிருட்டிணம்மாளுக்கு இன்னலும் அச்சுறுத்தலும் வரும்பொழுதெல்லாம் அவரை பொதுவுடைமையாளர்கள்
காக்கிறார்கள்.
திராவிட கழகத்தாரால் தன்மான உணர்வும்
பொதுவுடைமையாளர்களால் தன்னம்பிக்கையும் இயக்கவுணர்வும் போர்க்குணமும் பெற்ற உழவுத்
தொழிலாளர்கள், தம் காலில் நிற்க கிருட்டிணம்மாள் வழங்கிய நிலம் பெருந்துணையாக மாறுகிறது. இம்மூன்று இயக்கங்களும் ஒன்றை ஒன்று விமர்சித்துக்கொண்டும்
தேவைப்படும் பொழுது ஒன்றிற்கு ஒன்று உதவிக்கொண்டும் அம்மக்களின் விடுதலைக்காய் தொடர்ந்து
இயங்கின; இன்றும் இயங்குகின்றன.
இந்திய தேசிய அளவிலான தனது பணிகளை முடித்துக்கொண்டு
செகந்நாதன் கீழத்தஞ்சைக்குத் திரும்பி வலிவலத்தில் நிலைகொள்கிறார். அங்கே இருதய கமலநாதர்
என வடமொழியாக்கம் செய்யப்பட்ட மனத்துணைநாதர் கோயிலின் நிலங்கள் அனைத்தும் வலிவலம் தேசிகரின்
ஆளுகைக்குள் இருக்கின்றன. பொதுவுடையாளர்கள் கடுமையாகப் போராடி அவற்றுள் ஒரு பகுதியை
மீட்டு உழவுத் தொழிலாளர்களுக்குப் பிரித்து கொடுத்திருக்கிறார்கள். செகந்நாதனும் கிருட்டிணம்மாளும்
மீத நிலங்களை மீட்க தம் இன்னாசெய்யாமைப் போராட்டத்தைத் தொடங்குகிறார்கள். போராட்டம்
பல நாள்கள் நீடிக்கிறது. சர்வோதயத் தலைவர் செயப்பிரகாசு நாராயணன் வலிவலம் வந்து நிலைமை அறிகிறார். பின்னர் சென்னை
திரும்பி அன்றைய முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கிறார். கோயில் நிலம் தேசிகரிடமிருந்து
மீட்கப்பட்டு உழவுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
கிருட்டிணம்மாளும் உழவுத்தொழிலாளர்களும் |
இதற்கிடையில் தாம் வாங்கிக்கொடுத்த நிலங்களில்
சில, அவை ஆண்களின் பெயரில் இருந்ததால் அவர்கள் குடிபோதையில் இருந்தபொழுது, கைமாறிவிட்டதை
கிருட்டிணம்மாள் அறிகிறார். இனி நிலங்களை ஆண்களுக்கு வழங்குவதில்லை; பெண்களுக்குத்தான்
வழங்க வேண்டும் என முடிவெடுக்கிறார். தாட்கோவின்
வழியாக வங்கியில் கடன்பெற்று நிலம் வாங்கி பெண்களுக்கு வழங்குகிறார். அவர்கள் முறையாகக்
கடனை அடைக்க அடைக்க, மேலும் மேலும் கடன் வாங்கி மேலும் மேலும் பெண்களுக்கு வழங்குகிறார்.
இப்பணி தொடர்ந்து வளர்ந்து தற்பொழுது ஏறத்தாழ 15000 உழவுத்தொழிலாளர்களான பெண்கள் இன்றைய
திருவாரூர், நாகபட்டினம் மாவட்டத்தில் நிலவுடைமையாளர்களாக மாறி இருக்கிறார்கள். அவர்களின்
குழந்தைகள் முதல் தலைமையாகக் கல்லூரிக்குச் சென்று பட்டம் பெற்று வெள்ளுடை வேலைக்குச்
சென்றிருக்கிறார்கள்; சிறுதொழில் முனைவோராக மலர்ந்திருக்கிறார்கள். பேரப் பிள்ளைகளில்
சிலர் வழக்கறிஞர்களாக, பொறியாளர்களாக, மருத்துவர்களாக குமுக-பொருளாதார நிலையில் அடுத்த
படிநிலையை எட்டி இருக்கிறார்கள்.
நிலமும் கல்வியும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட
மக்களின் விடுதலைக்கான கருவிகளான எவ்வாறு இருக்கின்ற என்பதனை அறிய கிருட்டிணம்மாளின்
நெடும் போராட்டமும் அம்மாவாசை போன்றவர்களின் வாழ்க்கையும் சில எடுத்துக்காட்டுகளே. நாளும் ஒடுக்கப்படும் இந்த எளிய மக்களின் இந்த விடுதலைக்
கருவிகளைத்தான், பலரும் பல காலம் போராட்டிப் பெற்ற அவர்தம் வாழ்க்கையைத்தான், அவர்களைக்
கேட்காமலேயே பறித்து அதானிகளுக்கும் அம்பானிக்களுக்கும் ஒரே ஓர் அவசரச் சட்டத்தின்
வழியாக அள்ளிக்கொடுக்க துடித்துக்கொண்டு இருக்கிறது இன்றைய காவி அரசு.