நந்தவனத்திலோர் ஆண்டி



நன்றி: ஓவியர் ஜீவா
“இறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் . . .  அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனிமனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது” என 1969ஆம் ஆண்டில் கா. ந. அண்ணாதுரை மறைந்த பொழுது அவருக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்காக இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தமிழகத் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கண்ணதாசன் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற் பேசியவர் ஜெயகாந்தன்.  எனவே தனிமனிதராகிய அவரது மரணத்தின் பொருட்டு அவரைப் பற்றிய அவரது படைப்புகளையும் சிந்தனைகளையும் பற்றிய எதிர்நிலைக் கருத்துகளை, ‘நாகரிகம்’ கருதி நம் மனதிற்குள் புதைத்துக்கொண்டு, அவரது தோளில் புரளும் தலைமுடியையும் முறுக்கிவிடப்பட்ட மீசையையும் சட்டைபோடாமல் வெற்றுடம்புடன் தன்வீட்டு மொட்டைமாடியின் கீற்றுக் கொட்டகைக்குள் தான் கூட்டிய சபையின் நடுவில் அவர் அமர்ந்து ‘சிலுப்பி’யை ஒயிலாய்ப் பிடித்து கஞ்சாப்புகையை உள்ளிழுத்து மெல்ல மெல்ல விடுகின்ற அழகை(?)யும் விதந்தோதி ‘அக்காட்சியைக் கண்டதே தனது பிறப்பின் பேறு’ எனப் பிதற்றுவது ‘இலக்கியத் தரம்’ அற்ற ‘அநாகரிகம்’ என்பதனால் அவரது வாழ்க்கையையும் படைப்புகளையும் சிந்தனைகளையும் அவரது மரணத்தின் பொருட்டு ஒரு பறவைப் பார்வையேனும் பார்த்து, அவற்றிலிருந்து இந்தக் குமுகம் எதனையேனும் கற்றுக்கொண்டு தன்னை உன்னதப்படுத்திக் கொள்ள இயலுமா என ஆராய்வதே அவருக்குச் செலுத்தும் பொருத்தமான நினைவஞ்சலியாக இருக்கும் என நம்பியதன் விளைவே இக்கட்டுரை. 

60'களின் தொடக்கத்தில் ஜெயகாந்தன்
கெடில நதிக்கரையில் அமைந்துள்ள கடலூர் மஞ்சக்குப்பத்தில் 1934-ஏப்ரல் 24ஆம் நாள் த. முருகேசனாகப் பிறந்து, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பயின்று, விழுப்புரத்தில் இருந்த பொதுவுடைமைக் குமியத்தில் (கம்யூன்) வாழ்ந்த தன் மாமாவின் அரவணைப்பில் சில காலம் இருந்து, 1946 ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்து இந்திய பொதுவுடைமைக் கட்சியின் அலுவலகத்தில் நுழைந்து அங்கிருந்த குமியத்தில் வளர்ந்த ஜெயகாந்தனின் முதற் சிறுகதை, கடலூர் காந்தன் என்னும் புனைப்பெயரில் 1950ஆம் ஆண்டில் செளபாக்கியம் இதழில் வெளிவந்தது. அவர் 1952ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்து 1964ஆம் ஆண்டில் அவருடைய கருத்துகளையும் அவருடைய போக்குகளையும் அவருடைய சிந்தனைகளையும் பார்த்த அவர்தம் பொதுவுடைமை நண்பர்கள், அவர் வெளியே இருந்தால், நண்பராகவே இருந்து நல்லுதவி செய்ய முடியும் என்று அவருக்குச் சொன்ன ஆலோசனையின் பேரில் அவர் அந்தக் கட்சியைவிட்டு வெளியேறினார். அந்தப் பதினைந்து ஆண்டு காலத்தில் (1950-1964) எந்தவோர் இலக்கியத்தின், இலக்கியவாணரின் தாக்கமும் இல்லாமல் அப்பொழுது அன்றாடம் காச்சியாக வாழ்ந்த ஜெயகாந்தன் தன்னைச் சுற்றியும் தன்னோடும் வாழ்ந்த அன்றாடம் காச்சிகளின் வாழ்க்கையை, இருக்க கை அகல இடமும் உடுக்க கிழியாத உடையும் உண்ண போதிய உணவும் இல்லாத ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை, அவற்றின் சிடுக்குகளை எந்த வண்ணப்பூச்சுமின்றி தனது படைப்புகளாக வார்த்தெடுத்தார்.

 
நன்றி: ஒளிப்படக்கலைஞர் கவாஸ்கர்
அரசகுலத்தவரும் நிலவுடைமையாளரும் மேட்டுக்குடியினரும் செல்வந்தர்களும் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த தமிழிலக்கியப் படைப்புவெளிக்குள் புதுமைப்பித்தனின் எழுத்துகள் வழியாக உள்நுழைந்து, விந்தனின் எழுத்துகளில் வளர்ந்த விளிம்புநிலை மாந்தர்களான நடைபாதையில் வாழ்வோர், பாலியல் தொழிலாளிகள், இழுவண்டிக்காரர்கள், பிச்சைக்காரர்கள், உடலுழைப்புத் தொழிலாளிகள், உளநோயாளிகள், தொழுநோயாளிகள் ஜெயகாந்தனின் சிறுகதைகளிலும் குறும்புதினங்களிலும் புதினங்களிலும் குருதியும் சதையுமாக வாழ்ந்தார்கள்.  அவர்களது வாழ்க்கையின் இன்பமும் துன்பமும், நெகிழ்வும் நெருக்கடியும், உயர்வும் தாழ்வும், மேன்மையும் கீழ்மையும் அப்படைப்புகளின் பாடுபொருளாக அமைந்தன. அப்படைப்புகள் தம்மைப் படிப்பவர்களின் மனதைப் பிசைந்து, சிந்தையைப் பிறாண்டி, குற்றவுணர்வைத் தூண்டி, தூக்கத்தைக் கெடுத்தன; ‘நம்முடைய ஆசைகளையும் பேராசைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்காக  நாம் நாளும் சந்திக்கிற இந்த எளிய மனிதர்களின் வாழ்க்கையை நம்மை அறியாமலேயே நாம் சுரண்டுகிறமா?’ என அவர்களை அகத்தாய்வு செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தின.   

 
நன்றி: ஓவியர் ஜமால்
1965ஆம் ஆண்டிற்கு சற்று முன்னோ பின்னோ, ‘பிடிசோறு’ என்னும் ஜெயகாந்தனின் மூன்றாவது சிறுகதைத் தொகுதியில் உள்ள சிறுகதைப் படித்த அந்நாளைய ஆனந்த விகடனின் துணையாசிரியரான இதயம் பேசுகிறது மணியன் ஆனந்த விகடனில் தொடர்ந்து சிறுகதைகள் எழுத ஜெயகாந்தனை அழைத்தார்.    அவ்வழைப்பைத் தொடர்ந்து அவர் எழுதிய பல சிறுகதைகள் அவ்விதழில் முத்திரைக் கதைகளாக வெளிவந்தன.  மெல்ல மெல்ல, கொள்கை சார்ந்த சிற்றிதழ்களில் இருந்து வணிகம் சார்ந்த இதழ்களை நோக்கி அவரது படைப்புகள் நகர்ந்தன. அப்படைப்புகளில் விளிம்புநிலை மாந்தர்களுக்கு இடம் கிடைக்கவில்லை; அல்லது மிகக் குறைவாகவே இடம் கிடைத்தன. மாறாக, அந்த இதழ்களின் வாடிக்கையாளர்களாக இருந்த நடுத்தட்டு மக்கள், ஜெயகாந்தனது படைப்புலக மாந்தர்களாக மாறினர். அன்றாடம் காய்ச்சியாக இருந்து அன்றாடம் காய்ச்சிகளைப் பற்றி எழுதிய ஜெயகாந்தன், நடுத்தட்டு மாந்தராக மாறி நடுத்தட்டு மாந்தர்களைப் பற்றி எழுதத் தொடங்கினார்.  குமுகாயப் பொறுப்புடைய ஓர் எழுத்தாளர் தான் வாழும் குமுகாயத்தின் ஒரு கூறான நடுத்தட்டு மாந்தர்களின் வாழ்க்கையை, அவர்களின் அன்றாட வாழ்வுச் சிக்கல்களையும் அதன் காரணிகளையும் அச்சிக்கல்களை அவிழ்ப்பதற்கான வழிமுறைகளையும் ஆராய்ந்து தானறிந்த முடிவுகளை தனது படைப்புகளின் வழியாக வெளியிடுவதில் எந்தத் தவறும் இல்லைதான். ஆனால், ஜெயகாந்தன் இக்காலகட்டப் படைப்புகளில் அந்தப் பணியை ஆற்றவில்லை; மாறாக நடுத்தட்டு மக்களின் தனிமனித வாழ்க்கைநெறிப் பிறழ்வுகளை, உள்ளப் பிறழ்வுகளை, பாலுறவுச் சிக்கல்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார். இவற்றைப் பற்றி விமர்சனங்கள் எழுந்தபொழுது, “எனக்குத் தெரிந்த வாழ்க்கைகளை வைத்து மட்டுமே நான் எழுத முடியும். அந்த வாழ்க்கையின் மீது எனக்கிருக்கும் பிடிப்பு – பரிவின் காரணமாகவே நான் எழுதுகிறேன்’ என 1966ஆம் ஆண்டில் சுயதரிசனம் நூலின் முன்னுரையில் வாதிட்டார்.  ஆக 1965ஆம் ஆண்டிற்கு முன்னர் அவர் அறிந்திருந்த, பிடிப்பும் பரிவும் கொண்டிருந்த வாழ்க்கைகள் அதற்குப் பின்னர் அவர் அறியாத பிடிப்பும் பரிவும் கொள்ளாத, கொள்ள முடியாத வாழ்க்கைகளாக மாறிவிட்டன.

 
நன்றி: டெகல்கா இணைய இதழ்
அவரது இந்த நிலைமாற்றத்தால் அவருக்குள் ஏற்பட்ட குணமாற்றம் அவரது படைப்புகளின் வழியாக பொங்கித் வழியத் தொடங்கின. முன்னர் தான் நாளும் சந்தித்த மாந்தர்களை தனது படைப்புகளில் உலவவிட்ட ஜெயகாந்தன், இக்கால கட்டத்திலோ, தால்த்தாய் எழுதிய அன்னகரீனாவின் தாக்கத்தில் ‘பாரிஸூக்கு போ’ புதினத்தின் மாந்தர்களான சாரங்கன் – லலிதா – மகாலிங்கம் ஆகியோருக்கு இடையிலான உறவையும் இசையமைப்பாளர் எம்.பி. சீனிவாசனின் கருத்துகளைகொண்டு சாரங்கன் என்னும் கதைமந்தனையும் துர்கனேவ் எழுதிய புதினம் ஒன்றின் கதைத்தலைவி எழுதும் கடிதத்தின் தாக்கத்தில் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ கதைத்தலைவி எழுதும் கடிதத்தையும் டென்னஸி வில்லியம்ஸின் தாக்கத்தில் ‘ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன’ என்னும் குறும்புதினத்தின் கட்டமைப்பையும் படைப்பவராக மாறிப்போனார்.  ஆனால், ‘அவற்றின் தாக்கத்தால்தான் இவற்றைப் படைத்தேன்’ என அவரே நேர்மையாக எடுத்துரைத்தார்; வேறு பல எழுத்தாளர்களைப் போல அவற்றை மறைக்கவோ, மறுக்கவோ இல்லை.  

 
இவ்வாறு, 1960ஆம் ஆண்டுகளிலிருந்து மெல்ல மெல்ல அவரது குரல் மாறத் தொடங்கியது. பதின்மூன்று வயதிலேயே பொதுவுடைமை குமுமியத்தில் தன் மாமாவோடு சேர்ந்து வாழக் கிடைத்த வாய்ப்பால் பொதுவுடைமையாளர்கள் பலரோடு பழகும் வாய்ப்பையும் அவர்கள் தமக்குள் நடத்திய அறிவாடல்களையும் கேட்கும் வாய்ப்பை ஜெயகாந்தன் பெற்றார்.  இந்திய விடுதலைவுணர்வு பெருநெருப்பாய் எங்கெங்கும் பரவியிருந்த வேளையில், ‘இந்திய தேசத்திலிருந்து தென்னிந்தியாவைப் பிரித்து, பிரிட்டிசாரின் நேரடிப் பார்வையில் திராவிட நாடாக அது இயங்க வேண்டும்; இல்லையென்றால் பார்ப்பனியம் ஆட்சியே ஏற்படும்’ என ஈ.வெ.இராமசாமி பெரியார் பேசிக்கொண்டு இருந்தார். மேலும், ‘இந்திய இதிகாசங்களான இராமாயணமும் மகாபாரமும் சைவத் தமிழ்க் காப்பியமான பெரியபுராணமும் மூடநம்பிகையை வளர்க்கவும் பாதுகாக்கவும் செய்கின்றன. எனவே அவற்றை எரிக்க வேண்டும்’ எனக் கூறி இயக்கம் நடத்திக்கொண்டு இருந்தார்.  அக்கருத்துகளை பரப்புரை செய்யும் படைப்புகள் பலவற்றை சுயமரியாதை இயக்க, திராவிடர் கழக எழுத்தாளர்களும் புலவர்களும் உருவாக்கினர்.  அப்படைப்புகளை தி. க. சிவசங்கரன் போன்ற பொதுவுடைமை இயக்கத் திறனாய்வாளர்கள் நச்சிலக்கியம் எனக்கூறி விமர்சித்தனர்.  ப. ஜீவானந்தம் போன்றவர்கள் கம்பராமயாணத்தில் பொதுவுடைமைக் கூறுகளைத் தேடியெடுத்து மேடைகளில் முழங்கத் தொடங்கினர். எஸ். இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் கம்பனை மில்டனோடு ஒப்பிட்டு எழுதினர். ப. ஜீவானந்தம், தொ.மு.சி.ரகுநாதன் போன்றவர்கள் சுப்பிரமணிய பாரதியாரை உலக கவி எனவும் அவர் குறிப்பிடும் ஆரிய நாடே தாம் காண விரும்பும் பொதுவுடைமை உலகம் எனவும் பேசியும் எழுதியும் வந்தார்கள். தனது இளமைக் காலத்தில் இக்கருத்துச் சூழலில் வளர்ந்த, சிந்திக்கப் பழகிய ஜெயகாந்தனின் ஆழ்மனதில் திராவிட இயக்கம் ஒரு நச்சியக்கம் எனவும் திராவிட இயக்கப் படைப்புகள் நச்சுப்படைப்புகள் எனவும் திராவிட இயக்கக் கொள்கைகள் நச்சுக்கொள்கைகள் எனவும் பதிந்துவிட்டன.  எனவே,  அக்கால கட்டத்தில் வீறோடு இருந்த திராவிடக் கழகத்தின் கடவுள் மறுப்புக் கொள்கை அவருக்கு வறட்டு கொள்கையாகவும் பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கை அவருக்கு இனவெறுப்புக் கொள்கையாகவும் விரைந்து வளர்ந்த அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தமிழடையாள மீட்டுருவாக்கம் அவருக்கு பழமை போற்றலாகவும் தென்பட்டன.  அடுக்குத் தொடர்களாலான ஒப்பனை மிகுந்த அவர்களது மேடைப் பேச்சுகள் அவருக்கு எரிச்சல் மூட்டின. எனவே, அந்த இயக்கங்களின் எதிர்ப்பாளராக தன்னை அறிவித்துக் கொண்ட ஜெயகாந்தன், அவற்றின் கொள்கைகளை திறனாய்ந்து தனது மாற்றுக் கருத்துகளை எடுத்துரைத்து அவர்களை நல்வழிப்படுத்த(?) முயலவில்லை.  மாறாக,  அவர்களது விமர்சனத்திற்கு உள்ளான பார்ப்பனியத்தின் ஊதுகுழலாக மாறிப்போனார்.  வேதாந்த பார்ப்பனியத்தின் புதிய தூதராக தன்னைத் தானே நியமித்துக்கொண்டார்; வறட்டு வேதாந்தத்தை தனது படைப்புகளில் பரப்புரை செய்யத் தொடங்கினார்.   

இதன் விளைவாக, பொருளாதார (வர்க்க) வேறுபாடுகளை ஒழிக்க வேண்டும் என்று பாடுபடும் பொதுவுடைமை பேராளிகளின் காலடியில் வளர்ந்த ஜெயகாந்தன்  சாதிய (வர்ண) வேறுபாடுகளை ஒழிக்க வேண்டும் என்று பாடுபடும் திராவிட இயக்கப் போராளிகளை நச்சுகள் எனத் திட்டி, அவர்களது சிந்தனையை எதிர்ப்பதாக எண்ணிக்கொண்டு, ‘வர்ண வேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்’  என மனம்பேதலித்தவரைப் போல பேசுகிற நிலைக்கு ஆளானார்.  

நன்றி அம்ருதா
திராவிட இயக்கத்தின் களப்பணிகளை அறிந்து, அவற்றின் விளைவுகளை ஆய்ந்து விமர்சனம் செய்வதற்கு மாறாக, திராவிட இயக்கங்களின் செயல்பாடுகளை ‘படித்த மேல்வர்க்கத்து முதலியார்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையில் நடந்த  சண்டை’ எனப் புறந் தள்ளினார்.  தனக்கென ஒரு சிறப்புப் பட்டம் சூட்டிக் கொள்வதற்கு தான் விரும்பினால் ‘ஜெயகாந்தன் பிள்ளை’ என வைத்துக்கொள்வேன் எனக் கூறினார்.  கல்பனா இதழுக்காக மு. கருணாநிதியைப் பேட்டி எடுத்தபொழுது, கருணாநிதி தம் தந்தை பெயரை முத்துவேலர் என சாதிய அடையாளமற்றுக் கூறியபொழுது, இடைமறித்து, ‘முத்துவேல் பிள்ளை’ எனக் கூறுங்கள் என்றார். பரந்துபட்ட உலகத்தன்மை எப்படி ஒவ்வொரு கிராமத்திலும் குடிகொண்டிருக்கிறது என்பதனை எடுத்துரைக்கும் நோக்கத்தோடு தன்னால் படைக்கப்பட்டவன்தான் ‘ஒரு வீடு ஒரு உலகம் ஒரு மனிதன்’ புதினத்தின் கதைத்தலைவனான ஹென்றி எனவும்  போரில் வீடிழிந்து பிழைப்பிழந்து பர்மாவிலிருந்து ஓடி வந்த சபாபதி பிள்ளையாலும் அவர்தம் நண்பருக்கு மனைவியாலும் வழியில் கண்டெடுக்கப்பட்ட அக்குழந்தைக்கு, அவனால் தன் தகப்பன் என நினைக்கப்பட்ட சபாபதிப் பிள்ளை அவன் தகப்பன் இல்லை; தாய் என நினைக்கப்பட்டவள் அவன் தாய் அல்லள்; அவர்கள் இருவரும் கணவன், மனைவியும் அல்லர்; அவன் பெற்றோர் எந்த நாட்டவர் எந்த இனத்தவர் என்பது யாருக்கும் தெரியாது; அன்பும் அபிமானமும் ஒன்றுபட்ட சூழ்நிலையில் வாழ்ந்த, அந்நியத்தன்மை அற்ற ஞாலமாந்தன் (யுனிவர்சல் மேன்) எனவும் கூறிவிட்டு, அவனை ‘ஹென்றி பிள்ளை’  என மாற்றினார்.  ஆக ஜெயகாந்தன் விரும்பிய உலகத்தில் வாழும் வாய்ப்புபெறும் எவரும், அவர் ஞாலமாந்தரே ஆனாலும், சாதியற்று இருக்க முடியாது என்றார். அவ்வாறு அவர் கூறியதற்கு, அவரிடமிருந்த திராவிட இயக்க ஒவ்வாமையைத் தாண்டி, மாந்தர்களை நான்கு வர்ணங்களாகப் பிரிக்கிற, வர்ணங்களுக்கு அப்பால் வாழ்பவர்களை மாந்தர்களாகக் கூடக் கருதாத ‘இந்து இசம்’ அவரது பார்வையில் “ஒரு மதமன்று; ஒரு பண்பாடு; ஒரு வாழ்க்கை முறை” என இருந்ததும் காரணமாக இருக்கலாம்.  எனவேதான், அரசியல் செல்வாக்கோடு இருந்த இந்து மடத் தலைவர் ஒருவரை, ஒரு கொலை வழக்கில் உசாவலுக்காக காவல் துறையினர் கைது செய்தபொழுது வெகுநாளாக திறக்காதிருந்த தனது பேனாவைத் திறந்து குறும்புதினம் (?) ஒன்றை எழுதி, ‘ஒரு நம்பிக்கை – ஒரு ஆழமான நம்பிக்கை – வீழ்த்தப்படும்போது தன்னால் சந்தோஷப்பட முடியாது’ என்றார்.  இங்ஙனம் சாதி, மத வளையத்திற்குள் ஜெயகாந்தன் மீண்டும் மீண்டும் சென்று நின்றதற்கு அவருடைய திராவிட இயக்க ஒவ்வாமை நோய் மட்டும்தான் காரணமா அல்லது அவரின் ஆழ்மனத்திற்குள் கெல்லியெடுக்கப்படாமல் புதைந்துகிடந்த இடைநிலைச் சாதியச் சிந்தனையின் எச்சமும் காரணமா என்பதை உளப்பகுப்பாய்வு செய்து அறிய வேண்டும்.  ஒருவேளை அவ்வாய்வின் முடிவு, இன்றைய நிலையில் மேலெழுந்து வருகிற சாதி சார்ந்த கூக்குரல்களில் இன்றைய எழுத்தாளர்களின், சிந்தனையாளர்களின் வகிபாகத்தை அளவிட்டு அறிய உதவக்கூடும்.

நிறைவாக, ஜெயகாந்தனின் மறைவையொட்டி அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் பொருட்டு, அவரது படைப்புகளின் வழியே அவரது சிந்தனைப்போக்கை நோக்குகையில்,  இந்திய விடுதலைக்கும் பொருளாதாரச் சமத்துவதற்கும் சலியாது போரிட்ட அந்நாளைய பொதுவுடைமைப் போராளிகளின் கண்பார்வையில் வளர்ந்து தான் பெற்ற ஞானத்தோண்டியை, திராவிட இயக்க ஒவ்வாமை நோய்க்கு ஆட்பட்டு தன் வாழ்நாள் முழுக்க கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்த நந்தவனத்து ஆண்டியாகவே அவர் தோற்றம் தருகிறார்.

 (அம்ருதா இதழில் - மே 2015 - வெளிவந்த கட்டுரை)

23 comments:

  1. ஜெயகாந்தனுக்கு ஒரு நல்ல புகழஞ்சலி. தங்களின் எழுத்து நடையில் படிப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. good portrait on jayakanthan.yes he is a man of full contradictions.But He is a good writer I think..

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்திற்கு நன்றி!
      அவர் நல்ல எழுத்தாளர் என்பதை நான் மறுக்கவில்லை; ஆனால் அவரது எழுத்துப் பயணம் எப்படி இருந்தது என்பதுதான் வினா.

      Delete
  3. மிகச் சரியான பதிவு தோழர். அவரது தாக்கம் பல நல்ல எழுத்தாளர்களை உருவாக்கியதைப் பற்றி மட்டும் சேர்த்து விட்டால் அவரைப் பற்றி வந்துள்ள விமர்சனங்களில் முதல் வரிசையில் நிற்கும் இது. அவரது மரியாதையை கொஞ்சமும் குலைக்காத வகையில் இருக்கிறது

    ReplyDelete
  4. திட்டுரை சிறப்பு. நேர்மையாக எழுதப்பட்டுள்ளது.

    ReplyDelete
  5. Sir,it is one of the greatest writing which posterity should possess.I will be gratefull if any one can help me to get a copy of this magazine.In 1962 I was in PWD of Tamilnadu and used to read a lot from filth to spiritual matters.Transformation of ideas and thinking can take place at any stage of life.Even at the age of 70 the entire life could have been just a preparation of you for the role you were destined to play from the next day onwards.Eventhough I had left PWD and took a different path the sub concious was always in Tamilnadu and her "Mannum Manidharhalum"(Tamil).I too read a lot about Jayakanthan.The last line of your writing that he "unfortunetly broke the GNANATHONDI is a punch of your views and I totaly agree with you.

    ReplyDelete
  6. Excellent writing.I totally agree with you sir.I was in PWD of Tamilnadu in 1961-63 and I used to read a lot from filth to spritual matters and think about the authors.No doubt that almost amongst all Jayakanthan treaded a new path.His practical and blunt exposure of life was withuot any polishing.Rishimoolam and Oru nadigai nadaham parkkiral are examples.But life is a continuous process of transformation and even at the age of 70 the entire life could hane been just a preparation for the role you were destined to play from the next day.In that way Jayakanthan changed his style from what he followed in the begining.In overall comment I fully agree that the Nandavanathu Andi,GNANATHTHONDIYAI,broke evenchualy.your writings are just thought provoking.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்திற்கு நன்றி!
      அம்ருதாவின் முகவரியை தனி மடலில் அனுப்பி இருக்கிறேன்

      Delete
  7. மின்னஞ்சலில் வந்த பின்னூட்டம்:

    Dear Ariaravelan,

    It's a different perspective on JK. I commented on the web and not sure if the comment gone through.




    JK was against Eelam Tamil issue and received benefits from Karunanidhi a Dravidian leader JK opposed in his entire life. He is such a selfish and as you said caste chauvinist.




    No need to praise him just because he passed away. Keep up a good work .

    Raymond Selvaraj
    Executive Producer

    SBS Radio-Tamil

    ReplyDelete
  8. மின்னஞ்சலில் வந்த பின்னூட்டம்
    மிகவும் நடுநிலையில் இருந்து எழுதப்பட்டுள்ள ஒரு கட்டுரை, பகிர்வுக்கு மிக்க நன்றி
    ..... தேமொழி

    ReplyDelete
  9. மின்னஞ்சலில் வந்த பின்னூட்டம்

    அன்புடையீர் வணக்கம் ,
    "நந்தனத்தில் ஓர் ஆண்டி" மிகவும் அருமையான கட்டுரை. ஜெயகாந்தனை நானும் நேசித்தவன் ... சுவாசித்தவன். ஜெயகாந்தனை நீங்கள் பார்க்கும் பார்வை மிகவும் அற்புதம். நல்ல ஒரு விமர்சனம் என எண்ணுகின்றேன். இப்படியான விமர்சனங்களே சிந்தனைக்கு நல்ல ஊட்டச்சத்து என நினைக்கின்றேன். தொடரட்டும் உங்கள் தமிழ்ப் பணிகள்.
    வாழ்கவளமுடன்
    அன்புடன்
    எம். ஜெயராமசர்மா
    ( மெல்பேண் ... ஆஸ்த்திரேலியா )

    ReplyDelete
  10. மின்னஞ்சலில் வந்த பின்னூட்டம்:

    மிகச்சிறப்பு பாராட்டுக்கள் !

    -ப.கண்ணன்சேகர்.

    ReplyDelete
  11. யார் வாழ்வின் வரலாற்றினை எழுதுகின்றனரோ, அவரின் அனுமதி பெற்று எழுதும் இக்காலகட்டத்தில்; பல உண்மைகளை தந்து அறிந்தவர்கள் நினைவு கூறவும், அறியாதார் அறியவும் வைத்த இவ்வாய்வுக் கட்டுரை அருமை! மக்கள் தன் வாழ்வில் பல கால கட்டங்களில் எங்ஙனம் மாற நேரிடும் என்ற பாடம் இக்கட்டுரையில் காண்கிறேன். படைப்பினைப் போல் படைப்பளியும் சிறப்பாயிருப்பின் அவர்தம் கருத்துக்கள் இன்னும் மேலோங்கி மக்கள் மனத்தில் காலூன்ற வழியென்றெண்ணும் இச்சிறுவனின் பஃறொடை வெண்பா சமர்ப்பனம்:

    "படைப்புகள் ஓங்கிப் படைப்பின், அவற்றின்
    படைப்பாளி ஓங்கிப் பிழைத்தலும் நன்றே!
    படைக்கும் இவரும் பாரினில் இறையே;
    ஒழுக்கம் இலாதார் உரைத்திடும் நல்ல
    ஒழுக்கம் எனாது ஒழுகா திருக்க
    ஒழுகாப் பழித்தல் இயல்பு!"

    மாற்றங்கள் என்பது இயற்கை எனினும், மாற்றம் ஏற்றம் தரவேண்டும் என்பது என் தாழ்மையான எண்ணம் மற்றும் விண்ணப்பம்:
    "மாற்றம் அடைதல் மறுக்காது ஏற்றுபின்
    மாற்றம் அதனை மார்போ டணைமினே;
    ஏற்றம் தருமெனின் ஏற்றல் நன்று
    தூற்றா திருக்கும் உலகு!"

    மிகவும் அருமையான கட்டுரை அரி! நும் கலைப்பணி பல கண்களையும், மனங்களையும் திறக்கட்டும்!

    ReplyDelete
  12. மின்னஞ்சலில் வந்த பின்னூட்டம்:

    Date: Mon, 11 May 2015 12:03:57 +0530
    Dear Ari,
    I read your article about Jeyaganthan just now. It was very interesting and informative. It looks like you have done a good amount of research prior to writing this article. I liked Jeyaganthan because he had leftist background. But I never knew that he had caste-ist leanings too.

    Regards,
    Dr. Arunrajaselvan
    Deputy Director
    South India Term Abroad
    Madurai

    ReplyDelete
  13. “இறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் . . . அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனிமனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது” பொருத்தமான தொடக்கம். படைப்பாளியின் வாழ்க்கைப் பின்னணியையும் அவர் கடந்து வந்த பாதையையும் அறிந்து கொள்ள அவரது படைப்பைக் காட்டிலும் ஆகச் சிறந்த கருவி வேறொன்றும் இல்லை என்பதை இக்கட்டுரை உணர்த்தியது. "ஹென்றி" கதைமாந்தரின் கட்டமைப்பை இந்தக் கட்டுரையின் பின்னணியில் மறுவாசிப்பு செய்ய வேண்டும் எனத் தோன்றுகிறது. குறிப்பாக வாசிப்பு எனும் பண்பாட்டு நடவடிக்கையில் இன்னும் நீண்டதூரம் பயணிக்கவேண்டிய பொறுப்பையும் உணரமுடிகிறது.

    ReplyDelete

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...