பன்னாட்டு மகளிர் நாள் சமையல் போட்டி அறிவிப்பு :-( |
பன்னாட்டு
நிறுமமாக மாறத் துடிக்கும் உள்நாட்டு நிறுமம் ஒன்றின் வரவேற்பு அரங்கு. வெவ்வேறு நோக்கத்திற்காக அந்நிறுமத்திற்கு வந்திருந்த
பலர் அவ்வரங்கில் காத்திருந்தார்கள். காத்திருத்தலின் சலிப்பை மழுங்கச் செய்யும் நோக்கில்
அரங்கச் சுவரில் பொருத்தப்பட்டு இருந்த தொலைக்காட்சியில், திரைப்படப் பாடற் காட்சியொன்று
ஒளிபரப்பாகிக்கொண்டு இருந்தது. காத்திருந்தோரில் பலர் அக்காட்சியில் மூழ்கிப்போய் இருந்தார்கள்.
அதிக நேரம் மூழ்கிக் கிடந்த சிலர், திடீரென மயக்கம் தெளிந்து தம் கைக்கடிகாரத்தில்
நேரத்தைப் பார்த்து, ‘உச்’சுக் கொட்டிவிட்டு மீண்டும் பாடற்காட்சியில் மூழ்கிப் போனார்கள்.
அந்நிறுமத்தில் பணியாற்றும் நண்பரைச் சந்திக்கச்
சென்ற நான் அவர்களில் ஒருவனாக அங்கு அமர்ந்தேன்.
சிறிது நேரத்தில், அந்நிறும விளிம்புநிலைப் பணியாளர் ஒருவர் சாக்லெட்டு கட்டிகள் நிறைந்த
பெரிய தட்டொன்றை எடுத்துக்கொண்டு அந்த அரங்கிற்குள் நுழைந்தார். அங்கிருந்த அனைவருக்கும்
ஆளுக்கொரு சாக்லெட்டு கட்டியை வழங்கத் தொடங்கினார். பல முறை அந்நிறுமனத்திற்குச் சென்றிருக்கும்
எனக்கு அச்செயல் புதியதாக இருந்தது. எனவே என்னிடம்
அவர் தட்டை நீட்டியதும், ‘என்ன செய்தி சாக்லெட்டு கொடுக்கிறீர்கள்?’ என வினவினேன்.
“தெரியவில்லை. எல்லாருக்கும் கொடுக்குமாறு அலுவலகத்தில் சொன்னார்கள்” என்றார் அவர்.
இதனைக் கவனித்த வரவேற்புப் பணியாளர், “இன்றைக்கு மார்ச் 8. மகளிர் நாள். அதனைக் கொண்டாடத்தான்
சாக்லெட்டு” என்றார் புன்னகையோடு. அப்பொழுது என் நண்பர் அங்கு வந்துவிட இருவரும் அருகில்
இருந்த கலந்துரையாடல் அறைக்குள் நுழைந்தோம். அவருடன் பேசிக்கொண்டு இருக்கும்பொழுதும்
அந்நிறுமத்தின் மகளிர் நாள் கொண்டாட்டும் நினைவில் ஊடாடிக்கொண்டே இருந்தது. பேச வேண்டியவைகளைப்
பேசி முடித்த பின்னர் எங்களது உரையாடல் மகளிர் நாள் கொண்டாட்டத்தை நோக்கித் திரும்பியது.
“ஒவ்வோராண்டும் இங்கே மகளிர் நாள் கொண்டாடுவார்களா?”
“இல்லை. மனித
வளத் துறைக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் புதிதாக ஒருவர் தலைமைப் பொறுப்பு ஏற்றார்.
அவர் வேலை இது!”
“பெண்ணுரிமையில்
அக்கறை உள்ளவரோ?”
“அப்படியெல்லாம்
இல்லை. தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள இப்படி ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டு இருப்பார்.
‘நமது நிறுவனத்தில் பெண்கள்’ என்னும் தலைப்பில் கவிதைப் போட்டியையும் கட்டுரைப் போட்டியையும்
இன்றைக்கு அறிவித்திருக்கிறார். அப்போட்டிக்கான முதற்கட்டளையே இங்குள்ள பெண்பணியாளருக்கு
சிக்கல் ஏதேனும் இருந்தால் அதனைப் பற்றி எழுதக் கூடாது என்பதுதான். அவர் வந்த பின்னர்,
நிரந்தரப் பணியில் பெண்கள் யாரும் பணியமர்த்தப்படவில்லை. மாறாக நிரந்தரப் பணியாளர்கள்
சிலர் விலக்கிச் சென்ற இடங்களுக்கு குறைந்த ஊதியத்தில் பெண்கள் ஒப்பந்தப் பணியாளர்களாக
பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்திற்கும் அதிகமாக
வேலை செய்கிறார்கள். பலர் நிறுமப் பொது விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையும் வந்து
வேலை செய்கிறார்கள். அந்த வேலைக்கு அதிக நேர வேலை ஊதியம் எதுவும் கிடையாது. ஆனால் இனிப்புக்
கொடுத்து மகளிர் நாள் மட்டும் கொண்டாடுகிறார்.”
நண்பரின்
கூற்றில் வெளிப்பட்ட கசப்பும் உண்மையும் சில ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் ஏக்தா என்னும் மகளிர் வள நடுவம் ஏற்பாடு செய்திருந்த
மகளிர் நாள் கருத்தரங்கில், ‘நாம் மகளிர் நாளைக் கொண்டாட வேண்டுமா? கடைபிடிக்க வேண்டுமா?”
என குமுகாயச் செயற்பாட்டாளர் லூசி சேவியர் எழுப்பிய வினாவையும் அதனையொட்டி நிகழ்ந்த
கலந்துரையாடலையும் எனது நினைவிற்குக் கொண்டு வந்தன.
உழைக்கும் பெண்களின் உரிமைப் போர் |
தொழிலகத்தில்
தங்களது வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும், போதிய ஊதியம் வழங்க வேண்டும்; தமக்கு வாக்குரிமை
அளிக்க வேண்டும் என்னும் முப்பெரும் கோரிக்கையோடு 15000 ஆயத்த ஆடை உருவாக்கத் தொழிலாளர்களான
பெண்கள் 1908 ஆம் ஆண்டு மார்ச்சு 8ஆம் நாள் அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரத் தெருக்களில்
வீரநடை இட்டதை நினைவுகூரும் வகையில் 1909 ஆம் ஆண்டின் பிப்ரவரித் திங்கள் இறுதி ஞாயிற்றுக்
கிழமையான 28ஆம் நாள் தேசிய மகளிர் நாளாக அமெரிக்க
சோசலிச கட்சியினர் கடைபிடித்ததில் தொடங்கிய மகளிர் நாளானது, ‘குறைந்த ஊதியத்தில் நிறைய
உழைக்கும் அதிகப் பெண்களைப் பணியில் அமர்த்திச் சுரண்டுவோம்’ என்னும் அறிவிக்கப்படாத
முழக்கத்தோடு இயங்கும் நிறுவனங்களின் கொண்டாட்ட நாள்களில் ஒன்றாக மாறிப்போனது ஏன்?
தேசிய நாள்களுக்கும் மதப் பண்டிகைகளுக்கும்
வாழ்த்துத் தெரிவித்து விழாக் கொண்டாடும் இந்நிறுவனங்கள் தொழிலாளர் நாளான மே முதல்
நாளில் தொழிலாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதோ, அந்நாளில் விழாக் கொண்டாடுவதோ இல்லை;
மாறாக தொழிலாளர் நாளிற்குரிய அதே வேரில் முளைத்த மகளிர் நாளை தமது கொண்டாட்ட நாளாக
மாற்றிக் கொண்டது எவ்வாறு?
1995ஆம் ஆண்டில் பீசிங்கு நகரில் நடைபெற்ற உலகப் பெண்கள் மாநாடு - 4 |
1995ஆம் ஆண்டு
சீனா நாட்டின் தலைநகரான பீசிங்கு நகரில் நான்காவது உலகப் பெண்கள் மாநாடு நடைபெற்றது. 1980ஆம் ஆண்டிற்கு பிந்திய ஆண்டுகளில் இந்தியாவின்
பல பகுதிகளிலும் பெருமளவில் உருவான அல்லரசு அமைப்புகளைச் (Non-Government Organizations)
சார்ந்த குமுகாயச் செயற்பாட்டாளர்களும் குமுகாயப் பணியாளர்களும் பெருமளவில் இம்மாநாட்டில்
கலந்துகொண்டனர். அவர்கள் அங்கு ‘உலகளாவிச் சிந்தித்து’ (Think Globally) தாம் கண்டு,
கேட்டு அறிந்தவைகளை ‘உள்ளூர் அளவில் செயற்படுத்தும்’ (Act Locally) நோக்கில் 1996ஆம் ஆண்டு முதல்
ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் பெருமளவில், மகளிர் நாளைக் கடைபிடிக்கத் தொடங்கினர். பெண்விடுதலையில் உண்மையான நம்பிக்கையும் அக்கறையும்
உடைய அல்லரசு அமைப்புகள் சில குமுகாயத்தின் பல்வேறு வாழ்க்கைச் சூழலில் உள்ளவர்களை
அழைத்து மகளிர் நாளில் பெண்விடுதலைக் கருத்தரங்குகளையும் நிகழ்ச்சிகளையும் நடத்தினர்.
அவை, கடந்த காலத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களையும் அவற்றின் விளைவுகளையும் நினைவுகூர்ந்து,
பெண்களின் கண்டறியப்படாத ஆற்றல்களைக் கண்டறியும் முயற்சியை தற்காலத்தில் மேற்கொள்ளத்
தேவையான திட்டங்களை வகுத்து, எதிர்காலத்தில் பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய வாய்ப்புகளையும்
எதிர்கொள்ள வேண்டிய வெல்விளிகளையும் அடையாளம் காணும் முயற்சிகளாக இருந்தன.
கவனிப்போம் - கற்போம் - முன்னெடுப்போம் |
இதே காலகட்டத்தில்
உலகமயமாக்கம், தனியார்மயமாக்கம், தாராளமயமாக்கம் என்னும் பொருளாதாரச் சீர்குலைவு நடவடிக்கைகளை
இந்தியா மேற்கொள்ளத் தொடங்கியது. ஊரகம் மெலிந்து நகரம் வீங்கத் தொடங்கியது. இவற்றின்
விளைவாக மேற்கத்திய, அமெரிக்க நாடுகளிற் பின்பற்றப்படும் அன்னையர் நாள், தந்தையர் நாள்,
நண்பர்கள் நாள் போன்ற உள்ளீடற்ற கொண்டாட்ட நாள்கள் புதிதாக நகரத்தில் குடியேறிய ஊரக
இளைஞர்களுக்கு அறிமுகம் ஆகின. அவர்கள் தம் உண்மை முகமான ஊரக முகத்தை மறைத்து, நகர்
முகத்தை அணிந்துகொள்ள இந்த உள்ளீடற்ற நாள்களைக்
கொண்டாடத் தொடங்கினார்கள். ஐந்தாண்டுகளுக்கும் உட்பட்ட காலத்திற்குள் இக்கொண்டாட்ட
அலை இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களை வந்தடைந்தது. அந்த அலையின் சூழலுக்குள் மகளிர் நாள் மாட்டிக்
கொண்டது.
மகளிர் நாள் சமையல் - கோலம் - மருதாணி இடும் போட்டிகள் |
இதன் விளைவாக
போதிய ஓய்வு, நிகர் ஊதியம், வாக்குரிமை, கல்வி, வேலைவாய்ப்புரிமை, சொத்துரிமை, முடிவெடுக்கும்
அதிகாரம் என முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்த மகளிர் நாள் நிகழ்வுகள் வணிக நிறுவங்கள்
நடத்தும் கோலப் போட்டி, அழகுப் போட்டி, சமையல் போட்டி என சுருங்கத் தொடங்கின. குமூக
-பண்பாட்டு – அரசியல் சிந்தனையற்றுப் பிறந்த அல்லரசு அமைப்புகள் பல தம் பணிக்களத்தில்
உள்ள பெண்களைத் திரட்டி சீருடை அணியச் செய்து ஊர்வலம் நடத்தி தம் வலிமையைக் காட்டி
தம்மை விளம்பரப்படுத்திக்கொள்ளும் நிகழ்வாக மகளிர் நாளை மாற்றிவிட்டன. இந்நாளின் வரலாறும்
இதனைக் கைபிடிக்க வேண்டிய இன்றைய தேவையைப் பற்றிய புரிதலும் பெரும்பாலானோரின் நினைவில்
இருந்து அகற்றப்பட்டுவிட்டன.
வீரியம்மிக்க
ஏதேனும் ஒன்றை நீர்த்துப் போகச் செய்வதற்குரிய எளிய வழி அதனைக் கொண்டாட்டமாக மாற்றுவது
ஆகும். கூட்டமாகச் சேர்ந்து ஒன்றைக் கொண்டாடும்பொழுது ஏற்படும் கிளர்ச்சியிலும் மயக்கத்திலும்
அக்கொண்டாட்டத்தின் காரணி யாருடைய கவனத்தையும் அவ்வளவு எளிதாக ஈர்ப்பதில்லை. இவ்வகையில்தான்
மகளிர் நாள் கொண்டாட்டமாக மாற்றப்பட்டு ஆண்டுக்கொரு முறை நிகழ்த்தப்படும் சடங்காக சுருங்கி
நீர்க்கத் தொடங்கி இருக்கிறது.
அதனால் மார்ச்சு
7ஆம் முதலே கைபேசிகளில் குறுஞ்செய்திகளாகவும் குமூக வலையங்களில் (Social Networks)
நிலைத்தகவல்களாகவும் மகளிர் நாள் வாழ்த்துகள் குவிகின்றன. பணியிடத்தில் போலிப் புன்னகையோடு
இனிப்புகளைப் பரிமாறிக்கொள்ளும் சடங்குகள் நிகழ்கின்றன. ‘ஆண்களுக்கு இப்படியொரு நாள் இல்லையா?’ என்னும்
புலம்பல்கள் ஆண் பணியாளர்களிடம் எழுகின்றன.
காட்சி ஊடகங்கள் தம் பெண்பார்வையாளர்களை ஏதேனும் ஒரு நகரத்தின் திருமண மண்டபத்தில்
திரளச் செய்து வெற்று ஆரவாரங்களில் அவர்களை ஈடுபடுத்தி ஒளிபரப்புகின்றன. சிற்றூர்கள்
சிலவற்றில் மாலை நேரத்தில் உள்ளூர் பேச்சுவணிகர்களைக் கொண்டு, ‘குடும்பப் பாரத்தைப்
பெரிதும் சுமப்பது தாயா? தாரமா?’ என பட்டிமன்றங்கள் நடைபெறுகின்றன. இப்படி எங்கெங்கும்
மகளிர் நாள் கொண்டாடிக் கொண்டாடிக் கொல்லப்படுகிறது.
எனவே, குமூகப்
பாதுகாப்பு எதுவுமற்று உடலில் உயிர் ஒட்டிக்கொண்டு இருக்கும் வரை உழைத்துக் கொண்டிருக்கும்
ஒருங்கிணைப்படாத பெண் தொழிலாளர்களின் துயரப் பெருமூச்சும் பயின்று பல்கலைக் கழகப் பட்டம்
பெற்று தேவைக்கு அதிகமாகப் பொருளீட்டிய போதிலும் முடிவெடுக்கும் அதிகாரமும் தம் சொத்தின்
மீது ஆளுகை செலுத்த அனுமதிக்கப்படாத கற்ற பெண்களின் மனக்கண்ணீரும் கட்டாயக் காதலுக்கு
இணங்க மறுத்ததால் அமிலம் ஊற்றிச் சிதைக்கப்பட்ட பெண்களின் அலறலும் வீட்டிலும் வெளியிலும்
பணியிடத்திலும் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்களின் மனக்குமுறலும் சாதியை மீறியோ
மறுத்தோ மணந்ததால் காதலனைச் சாகக்கொடுத்த இளம்பெண்களின் மரண ஓலமும் இக்கொண்டாட்டங்களின்
இரைச்சலில் யாருடைய காதிலும் விழாமல் கரைந்து போகின்றன.
எனினும் கற்குன்றின்
புடவிற்குள் கசிந்துகொண்டிருக்கும் சுனையைப் போல பெண்விடுதலையில் உண்மையான அக்கறையுடைய
சில அமைப்புகள் தற்பொழுதும் மகளிர் நாளை பொருள் பொதிந்த நாளாக கைபிடிக்கின்றன. அவை
அந்நாளில் பெண்ணுரிமைப் போராட்டத்தின் கடந்த காலத்தை ஆராய்ந்து, நிகழ் காலத்தை மதிப்பிட்டு,
எதிர் காலத்தின் திசைவழியை உருவாக்க முயல்கின்றன; உழைக்கும் பெண்களை ஒருங்கிணைத்து
அரசியற் கல்வி வழங்குகின்றன; பெண்ணடிமைத்தனத்தால் பெண்களுக்கு இணையாக ஆண்களும் அல்லற்பட
வேண்டியிருக்கிறது என்பதனை ஆண்களுக்கு எடுத்துரைக்கின்றன. ஆணும் பெண்ணும் அனைத்து அடிமைத்தளைகளில் இருந்தும்
விடுதலைபெற்ற மாந்தர்களாக வாழத்தக்க உலகத்தை இருபாலினரும் இணைந்து உருவாக்க வேண்டும்
என விழைகின்றன. இத்தகு அமைப்புகளும் முயற்சிகளும் பெருக வேண்டும்; களியாட்ட நாளாக சிதைய
இருந்த ‘காதலர் நாளை’ சில அமைப்புகள் ‘சாதியொழிப்பு நாளாக’ மீட்டெடுக்க முனைவதைப் போல,
‘கொண்டாடிக் கொல்லப்படும்’ மகளிர் நாளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒத்த சிந்தனையும்
உண்மையான அக்கறையும் உடையோர் இணைய வேண்டும். அந்த இணைப்பின் தொடக்கப் புள்ளியாக இந்த
மகளிர் நாள் அமைய வேண்டும் என்பதே எம் அவா!
அம்ருதா - மார்ச்சு 2015 இதழில் வெளிவந்த கட்டுரை
கொண்டாடிக் கொல்லப்படும் நாள் என்ற தலைப்பைப் பார்த்தவுடனேயே தாங்கள் சொல்ல வருவதைப் புரிந்துகொண்டேன். தற்போது வியாபார உத்தியே முன்னிலை வகிக்கிறது. மற்ற முக்கிய காரணிகள் பெரும்பாலும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. நல்ல அலசல்.
ReplyDeleteதஙகளின் பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா!
Deleteகொண்டாடிக் கொல்லப்படும் நாள் என்ற தலைப்பைப் பார்த்தவுடனேயே தாங்கள் சொல்ல வருவதைப் புரிந்துகொண்டேன். தற்போது வியாபார உத்தியே முன்னிலை வகிக்கிறது. மற்ற முக்கிய காரணிகள் பெரும்பாலும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. நல்ல அலசல்.
ReplyDelete