உலகப் புத்தக நாள்

இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும்க்கும் தாம் வாழும் சூழலிலிருந்து தமது இயல்பான அறிவைப் பெறுகின்றனர்; தாம் விரும்புகிற, தமக்குத் தேவையான அறிவை பிறரிடமிருந்து பெறுகின்றனர். அவ்வாறு பெறுவதற்குப் புத்தகங்கள் பெரிதும் துணைநிற்கின்றன. இங்ஙனம் அவர்கள் பெற்ற இயல்பறிவும் புத்தக அறிவும் அவர்களை இக்காட்டுகளிலிருந்து காக்கின்றன. எனவேதான், மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்  யாவுள முன்நிற் பவைஎன்கிறது குறள்.  எனவேதான், அறிவைப் பரப்புவதில் ஆற்றல்மிகு காரணியாகவும் அதனைப் பாதுகாப்பதில் திறன்மிகு கருவியாகவும் புத்தகம் வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறதுஎன்று கூறி ஏப்ரல் 23ஆம் நாளைஉலகப் புத்தக நாளும் காப்புரிமை நாளும்” (World Book and Copyright Day) என்று அறிவித்திருக்கிறது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (UNESCO).  1995ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் நாள் முதல் நவம்பர் 16ஆம் நாள் வரை ஃபிரான்சு  (France) நாட்டின் தலைநகரான பாரிசு (Paris) நகரில் நடைபெற்ற இந்த அமைப்பின்  28ஆவது மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.  1616ஆம் ஆண்டின் இதே ஏப்ரல் 23ஆம் நாளில்தான் உலகப்புகழ்பெற்ற படைப்புகளை வழங்கிய இன்கா கார்சிலோசோ டி லா வேகா (Inca Garcilaso de la Vega 12.04.1539–23.04. 1616), மிகுவல் டி செர்லாண்டசு (Miguel de Cervantes 29.04.1547– 2.04.1616) என்கிற இரண்டு ஃசுபானிய (Spanish) எழுத்தாளர்களும் வில்லியம் சேசுபியர் (William Shakespeare 26.04.1564–23.04.1616) என்கிற ஆங்கிலப் பாவலரும் மரணமடைந்தனர் என்பதையும் அந்த அறிக்கை நினைவுகூர்ந்தது.


கார்சிலோசோ டி லா வேகா
வில்லியம் சேசுபியர்
மிகுவல் டி செர்லாண்டசு

புத்தகம் கல்விசார்ந்த அறிவைப் பரப்புவதோடு, உலகம் முழுவதுமுள்ள வெவ்வேறு பாண்பாடுகளைப் பற்றிய விழிப்புணர்வையும் வழங்குகிறது. அதனால் ஒரு புத்தகமானது தன்னைப் படிக்கும் ஒருவரின் நடத்தையில் புரிதல் (Understanding), பொறுத்தல் (Tolerance), உரையாடல் (Dialogue) ஆகியவற்றின் வழியாக தனது செல்வாக்கைச் செலுத்துகிறது.  எனவே, புத்தகம் படித்தலையும் பரப்புதலையும் ஊக்குவிக்கும் நோக்கத்தோடுஉலகப் புத்தக நாள்அறிவிக்கப்பட்டிருக்கிறது.  அந்நாளில் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நாடுகளில் புத்தக அறிமுகக்காட்சியும் புத்தக விற்பனைக்காட்சிகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

இங்ஙனம்  உலகப் புத்தக நாளை ஐகஅபஅமைப்பு (UESCO) அறிவிப்பதற்கு முன்னரே ஃசுபெயின் நாட்டில், ஏப்ரல் 23ஆம் நாள் புத்தக நாளாக 1926ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது. பாலசுதீனியா போர்வீரான சார்சு (George) கிறித்துவத்தைப் பின்பற்றியதால் கி.பி.303 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் நாள் கொல்லப்பட்டார். எனவே, அவரை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அந்நாளை தூய சார்சு நாளாக (Saint George Day) கிறித்துவர்கள் பலர் கடைபிடிப்பர்.  அந்நாளில் அன்பர்களும் காதலர்களும் உடன்பணியாற்றுபவர்களும் தமது அன்பின் அடையாளமாக இரோசா மலர்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர்.  அதனைக் கண்ட, ஃசுபெயின்  நாட்டிலுள்ள பார்சிலோனா நகரைச் சேர்ந்த வணிகர் ஒருவர், “‘இரோசா அன்பின் அடையாளம்; புத்தகம் அறிவின் அடையாளம்’; எனவே பெண்கள் இரோசா மலர்களையும் ஆண்கள் புத்தகங்களையும் பரிசளியுங்கள்என்று 1923ஆம் ஆண்டில் வேண்டினார். அன்பும் அறிவும் இணைக்கப்பட்டதால் அக்கருத்து பலரையும் கவர்ந்தது; புத்தகங்கள் ஒவ்வோராண்டும் பரிமாறப்பட்டன. அதன் விளைவாக 1926ஆம் ஆண்டு முதல் ஃசுபெயின் நாட்டில் அந்நாள், இரோசா நாள் என்றும் புத்தக நாள் என்றும் அழைக்கப்பட்டது.  இங்ஙனம் ஒரு வணிகரின் சிந்தனையில் தோன்றிய புத்தக நாள், இன்று உலகு தழுவிய நாளாக விரிந்திருந்திருக்கிறது.
ஆனால், ஏப்ரல் 23ஆம் நாளை இங்கிலாந்தும் அயர்லாந்தும் புத்தக நாளாகக் கடைபிடிக்கப்பதில்லை. அந்நாள், தூய சார்சு நாளாகவும் ஈசுடர் விடுமுறைக் காலத்தில் அமைந்திருப்பதுமே அதற்குக் காரணம். மாறாக, 1998ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதத்தின் முதல் வியாழக்கிழமை அங்கு புத்தக நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.  1998 மார்ச்சு 5ஆம் நாள் இலண்டன் நகரிலுள்ள குலோப்பு அரங்கில் (Globe Theatre) இங்கிலாந்துஅயர்லாந்தின் புத்தக நாளை அந்நாட்டின் அந்நாளைய தலைமையமைச்சர் தோனிபிளேயர் அறிவித்தார். அப்பொழுது இங்கிலாந்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பவுண்டும் அயர்லாந்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் 1.50 ஈரோவும் வழங்கப்பட்டன. அவர்கள் அப்பணத்தைக்கொண்டு தாம் விருப்பும் புத்தகங்களைக் கடையில் வாங்கிக்கொள்ள ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. எனினும் உலகமே கடைபிடிக்கும் புத்தக நாளைப் புறக்கணிக்க விரும்பாதஇரீடிங் ஏசென்சி’ (Reading Agency) என்னும் இங்கிலாந்திலுள்ள அல்லரசு அமைப்பு ஒவ்வோராண்டும் ஏப்ரல் 23ஆம் நாளின் இரவைபுத்தக இரவுஎனக் கடைபிடிக்கிறது. புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாதவரிடையே அப்பழக்கத்தை உருவாக்குவதே அந்த அமைப்பின் நோக்கம். எனவே, அந்நாளில் இங்கிலாந்து முழுக்க வெவ்வேறு நிறுவனங்களின் வழியாக சிறைச்சாலைகள், நூலகங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், காப்பகங்கள், புகலிடங்கள் என வெவ்வேறு இடங்களில் புத்தகங்கள் அவ்வமைப்பால் வழங்கப்படுகின்றன. மேலும் ஆர்வம்மிக்கவர்கள் தங்களது சொந்தப் புத்தகங்களை தாங்கள் வாழும் பகுதியிலுள்ள பலருக்கும் வழங்குகிறார்கள்.  

இங்ஙனம் உலகப் புத்தக நாள் உலகெங்கும் வாழும் புத்தக ஆர்வலர்களால் பெருவிருப்போடு கடைபிடிப்பதைக் கண்ட ஐகஅபஅமைப்பு, உலகப் புத்தகத் தலைநகர் என்னும் கருத்தை 2001ஆம் ஆண்டில் உருவாக்கியது. அதன்படி ஒவ்வோராண்டும் ஒரு நகரம் உலகப் புத்தகத் தலைநகராக அறிவிக்கப்படுகிறது. அந்நாளில் அந்த ஓராண்டு முழுவதும் புத்தகம் தொடர்பான நிகழ்வுகள் நடைபெறுகின்றனஅவ்வகையில் இதுவரை  மாட்ரிடு (2001), அலெக்சாண்ட்ரியா (2002), புதுடெல்லி (2003), அன்வர்சு (2004), மாண்ட்ரீல் (2005), உடூரின் (2006), போகோடா (2007), ஆம்சுடெர்டாம் (2008), பெய்ரூட்டு (2009), பியூசோசு ஏர்சு (2011), ஈரவன் (2012), பாங்காக்கு (2013), போர்ட் அர்கோர்ட்டு (2014), இன்சியான் (2015), இராக்லாக்கு (2016), கந்யாக்ரீ (2017),  ஏதென்ஸ் (2018), சார்சா (2019) ஆகிய நகரங்களில் பன்னாட்டு பதிப்பாளர்கள் சங்கம் (International Publishers Association), பன்னாட்டு நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டமைப்பு (International Federation of Library Associations and Institutions), பன்னாட்டு புத்தக விற்பனையாளர் கூட்டமைப்பு (International Booksellers Federation) ஆகியவற்றோடு இணைந்து உலகப் புத்தகத் தலைநகர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 2020 ஆம் ஆண்டிற்கான தலைநகர் கோலாலம்பூர் ஆகும். திபிலிசி (சார்சியா) 2021ஆம் ஆண்டிற்கான புத்தகத் தலைநகராக அறிவிக்கப்பட்டிருக்கிறது; 2022ஆம் ஆண்டில் புத்தகத் தலைநகராக விளங்க விரும்புவோரிடமிருந்து இப்பொழுது வேட்புகள் பெறப்படுகின்றன.
எனவே, உலகெங்கும் போற்றப்படும் புத்தகங்கள் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கின்றன; எதிர்காலத்திற்கு வழிகாட்டுகின்றன.  தலைமுறை தலைமுறையாக அறிவோட்டத்தை நிகழ்த்துகின்றன. வெவ்வேறு பண்பாடுகளுக்கிடையே புரிதலை உருவாக்குகின்றன. எனவே,  படிங்கள் . . . எப்பொழுதும் நீங்கள் தனிமையை உணரமாட்டீர்கள்!


கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...