நிறவெறி: ஆன்ட்ரூ சாக்சனைப் பின்பற்றும் டொனால்டு டிரம்ப்

ஆன்ட்ரு சாக்சன்
2016 நவம்பர் 8ஆம் நாள் நடைபெற இருக்கும் அமெரிக்க குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் குடியரசுக் கட்சி (Republican Party) சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்வில் முன்னிலையில் இருக்கும் டொனால்டு டிரம்ப் அக்கட்சிக்கே திகிலூட்டுபவராக இருக்கிறார். பீதியூட்டுகிற, பாதுகாப்பைக் குலைக்கும் தொனியிலான அவரது உரைகளைக் கேட்கும் நீங்கள், ‘இதற்கு முன்னர் இதுபோல எப்பொழுதும் நடந்திருக்காது’ என எண்ணியிருக்கக் கூடும்.  ஆனால்,  அது உண்மை அன்று.
            முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் வேட்பாளர் நியமனத்தை நோக்கி டொனால்டு டிரம்ப் செல்கிறார் எனக் கூறப்படுகிறது. ஆனால்,  1829ஆம் ஆண்டு முதல் 1837ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் 7ஆவது குடியரசுத் தலைவராக இருந்தவரும் 20 டாலர் பிரேரணையில் சர்ச்சைக்குரிய முகத்தைக்கொண்டு இருந்தவருமான ஆன்ட்ரு சாக்சனின்  கடந்துசென்ற வாழ்க்கையோடு டிரம்ப்பின் வாழ்க்கை ஒத்திருப்பதாக வரலாற்று எண்ணம்கொண்ட நோக்கர்கள் சிலர் கருதுகின்றனர்.
# 1: போட்டியை நோக்குக
1829ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகையை சாக்சன் வெல்வதற்கு முன்னரே, அமெரிக்க நாட்டின் கட்சிகள் மாறிக்கொண்டிருந்த 1824ஆம் ஆண்டில் அவர் குடியரசுத் தலைவராக முயன்று தோற்றிருந்தார். வடகிழக்குப் பகுதியின் வணிகர்களும் கூட்டாட்சி நிர்வாக ஆதரவாளர்களான கடன் கொடுப்பவர்களும் முக்கியத்துவம் பெற்றிருந்த கூட்டாட்சியினர் (Federalists) கட்சி,  சாதாரண மக்களுக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் எனக் கூறிக்கொண்ட தென்பகுதியைச் சேர்ந்த நிலவுடைமையாளர்களும் விவசாயிகளும் நிறைந்த சனநாயக – குடியரசினர் கட்சி என்னும் இரண்டு கட்சிகளையே அமைப்பு அதுவரை கொண்டிருந்தது.
            1824ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் தேர்தலில் சனநாயக – குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஐவர் போட்டியிட்டனர்; கூட்டாட்சியினர் ஒருவர் கூட போட்டியிடவில்லை.   சாக்சன் அதிகப் புகழையும் வாக்குகளையும் பெற்றிருந்தார்; ஆனால் போட்டியிட்ட ஐவரில் ஒருவர்கூட பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை.  பன்னிரண்டாவது திருத்தத்தைத் தொடர்ந்து, பிரதிநிதிகள் அவை (House of Representatives ) எடுத்த முடிவின் விளைவாக ஜான் குயின்சி ஆடம்ஸ் (John Quincy Adams) குடியரசுத் தலைவர் ஆனார்.
டிரம்பின் போட்டியாளரான ஹில்லரி கிளின்ட்டனுக்கும் ஆடம்ஸுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன.  ஜான் குயின்சி ஆடம்ஸ், முன்னாள் குடியரசுத் தலைவர் ஜான் ஆட்மஸுக்கு மகன் என்றால், ஹில்லரி கிளின்டன் முன்னாள் முதல் பெண்மணி ஆவார்.  இருவரும் ஐவி லீக் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள்;  அமெரிக்க நாட்டின் செனட்டர்களாகவும் மாநிலச் செயலாளர்களாகவும் பணியாற்றியவர்கள்; தாங்கள் வாழும் காலத்தில் நிறுவப்பட்ட அரசியலமைப்பின் பிரதிநிதிகள்.

#2: கருத்தியல் மீது உள்ளுணர்வு
சாக்சன் கரோலினாவில் பிறந்தவர். அவர் தானே முயன்று கற்ற வழக்கறிஞர்; 1812ஆம் ஆண்டில் நிகழ்ந்த போரில் தேசிய கதாநாயகனாக உருவானவர்; பிரதிநிதிகள் அவைக்கு டென்னிசியிலிருந்து முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இத்தகு தகுதிகள் எவையும் டொனால்ட் டிரம்புக்குக் கிடையாது. ஆனால் சாக்சனிடமிருந்த ஒரு முக்கியமான பண்பு டிரம்பிடம் இருக்கிறது; அவர் கருத்தியலை(ideology)விட கருத்தின் (idea) பிரதிநிதியாக இருக்கிறார்.
1824ஆம் ஆண்டில் பிரதிந்திகள் அவையின் தேர்வாக ஆடம்ஸ் இருந்தார். மக்களின் விருப்பத்திற்கு எதிரான உயர்தட்டினரின் நாசவேலைக்குச் சான்றாக, சாக்சனுடைய ஆதரவாளர்கள் ‘ஊழல் பேரத்தால்’ பூசிமெழுகப்பட்டார்கள்.  1828ஆம் ஆண்டில் அதே உயர்தட்டினரை எள்ளிநகையாடி சாக்சன் குடியரசுத் தலைவராக உயர்ந்தார், தற்பொழுது வாசிங்டனுக்கு எதிராக டிரம்பு செல்வதைப் போல.
 “நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளின் பிரதிநிதியாக சாக்சன் இருந்தார்” என்கிறார் வால்டர் ஆர் மீடு (Walter R Mead) என்னும் வரலாற்றாளர்.  கூட்டாட்சி அரசாங்கத்திடம் அதிகாரமும் ஆதிக்கமும் குவிந்திருக்கின்றன; அவற்றைக் கொண்டு சமூகத்தின் நலத்தை மேம்படுத்தவும் காக்காவும் வாய்ப்புள்ள அனைத்தையும் செய்ய வேண்டும் என்னும் கருத்தே அவரது உலகப்பார்வையின் இதயமாக இருந்தது. டிரப்பு, குடியரசுக் கட்சியின் வேட்பாளராக விழைந்த போதிலும் வலிமையான மைய அரசாங்கம் வேண்டுமென வாதிடுகிறார்; பொருளாதாரம் மற்றும் நாட்டின் பாதுக்காப்பில் அதற்குரிய பங்கை வலியுறுத்துகிறார்; சாதாரண மக்களின் பாதுகாவலான தன்னைத்தானே திட்டமிட்டு முன்னிறுத்திக் காட்டுகிறார்.
மேலும், சாச்சனியர்கள்  (Jacksonians) அமெரிக்கா போரை நாடிச் செல்லக்கூடாது; ஆனால், போருக்கு அழைக்கப்பட்டால், “நிபந்தனையற்ற ஒப்படைவையும் முழுமையான வெற்றியையும்” அடைய வேண்டும் என நம்புகின்றனர்.  “ஐ.எஸ்.ஐ.எஸ். அச்சத்தின் மீது வெடிகுண்டை வீசுவேன்” என டிரம்பு கூறும்பொழுது, ஆன்ட்ரு சாக்சன் புகுத்திய பாதுகாப்பின்மை, தேசியவாதம், நாட்டுப்பற்று ஆகியவற்றைக்கொண்டு சொற்சிலம்பம் ஆடுகிறார்.

# 3 சாதாரண மக்களிடம் முறையீடு
டிரம்பும் சாக்சனும் அரசியல் நிறுவனத்திற்கு அப்பால் வாக்காளர்களின் உணர்வுகளிடம் முறையிட்டார்கள்.  ஃபோபர்ஸ் 400 நிறுவனத்தின் உறுப்பினராக இருக்கும் டிரம்பு, வால் ஸ்டீரிட் வங்கியினரை விமர்சிப்பதைப் போலவே ஆன்ட்ரு சாக்சன் பணக்காரராகவும் அதிகாரமுடையாகவும் இருந்தபோதிலும்,  பணக்காரர்களும் அதிகாரவர்க்கத்தினருக்கும் எதிராகச் சென்றார்.  சாக்சனின் இந்த முரண்பாடு, அவருடைய முறையீட்டிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
அமெரிக்காவின் இதயப்பகுதியில் மிகஅதிகமாக உள்ள  டிரம்பின் ஆதரவாளர்கள்,  அரசியற்சரிநிலைப் போக்கு (trend of political correctness) வெகு தொலைவிற்குச் சென்றுவிட்டது என நம்புகிறார்கள்.   கடலோர அறிவாளிகளிடம் இருந்துவந்த அழுத்தம், அவர்களது சொந்த எண்ணங்களைப் புரட்டிப்போட்டது. இதற்கு வலுவூட்டும்விதமாக, அரசியற்சரிநிலையை இழிவுபடுத்தியும் ‘ஐந்தாம் நிழற்குடைச்சாலையின் நடுவில் நின்று, வாக்காளர்களை இழக்காமல் சிலரைச் சுட’ அவரால் முடியும் என்னும் தனக்கு மிகவும் விசுவாசமான தன் ஆதாரவாளர்களின்  பாராட்டிப் பராமரித்தும் டிரம்ப் நடந்துகொள்கிறார்.
               சாக்சனின் வாக்கு வங்கியாக இருந்த, “இதுபோலச் சொல்க” என்னும் சாக்சனின் ஆளுமையையும் சமூக நல்லிணக்க அலட்சியத்தையும் பாராட்டிய உள்நாட்டு வாக்காளர்களை இவர்கள் நினைவூட்டுகிறார்கள்.  “சாக்சன் தன் முதன்மை அரசியல் எதிரியை சுடவும் தன் குடியரசுத் துணைத்தலைவரை தூக்கிலிடவும் விரும்பியபொழுதிலும் பெருமளவு பிரபல ஆதரவினைப் பெற்றிருந்தார்” என சாக்சனைப் பற்றி ஒரு மேற்கோள் உண்டு.
 
#4. நிறுவனத்தின் மீதான குற்றம்
 “இதுபோன்ற கருத்துரைகள் அரசியல் நிறுவனத்தைப் புண்படுத்தும். சாக்சனை தகுதியற்றவர், அவமரியாதைக்குரியவர், ஆத்திரக்காரர், அபயகரமானவர் என்றெல்லாம் அழைத்து அவரை தாமஸ் ஜெபர்சன் எச்சரித்தார்.  பின்னர், அரசியல் தலைவர்கள் “வாய்ப்பேச்சு வீரர்கள்” எனக் கண்டித்த சாக்சன், தனது அமைச்சரவையில் பொதுப்பணியில் அனுபவமற்ற வணிகர்களை இடம்பெறச் செய்தார்.

டொனால்ட் டிரம்பு
இதேபோன்ற உறவே தற்போதைய குடியரசுக்கட்சித் தலைவர்களுக்கும் டொனால்ட் டிரம்புக்கும் இடையே நிலவுகிறது. அவர்கள் இவரை, அபாயகரமானவராகவும் ‘தேர்ந்தெடுக்கப்படக் கூடாதவரா’கவும் காண்கிறார்கள். டிரம்ப் சங்கடம்தரும் குடியரசுத் தலைவராக இருப்பார் என கருத்துக் கணிப்புகளின் பொதுக்கருத்தாக இருந்தபோதிலும் அவர் இன்னும் உறுதிப்பாடு உடையவராகவும் பெருகிவரும் ஆதரவாளர்களைக் கொண்டவராகவும் இருக்கிறார்.

#5: இனவாதம்
சாக்சனைப் போலவே டிரம்பும் வெள்ளையரிகளிடமே முக்கியமாக முறையிடுகிறார். வெள்ளையர்களின் வளர்ச்சியும் பாதுகாப்பும் அவரது வாகையர்களாகும். மெக்சிகனிலிருந்து ஐக்கிய அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து வருகிறவர்கள் போதைப்பொருள்களை கடத்தி வருகிறார்கள்; குற்றங்களிலும் வல்லுறவிலும்  ஈடுபடுகிறார்கள் என கு குளசு குளான் (Ku Klux Klan) தெரிவித்த கருத்தை அவர் மறுத்தார்.  வீடற்ற இசுபானியர் ஒருவரை அவரது விசிறிகள் அடித்தனர் என்பதை அவர் கேட்டது அவர்களை “உணர்ச்சிகரமானவர்கள்” என அழைத்தார். யூத குடியரசுக் கட்சியினர் சிலரைப் போல தானும் பேச்சுவார்த்தையாளர் என்பதனால் அவர்கள் தன்னைப் புரிந்துகொள்வர்கள் என்றார்.  வெள்ளை மேலாதிக்கவாதியின் பாராட்டை மறுகீச்சிட்டார். இருப்பினும் “நீங்கள் சந்தித்தவர்களிலேயே இவர்தான் மிகக்குறைவாக இனவாதம் பேசுபவர்” என்னும்  பிம்பத்தையும் தக்கவைத்துக்கொள்கிறார்.
            டிரம்பின் தற்காப்புவாதம் புரிந்துகொள்ளக் கூடியதே. ஏனென்றால், அவரது இனவாதம் தனித்தன்மை வாய்ந்தது. அவர் ஆப்பிரிக-அமெரிக்கர்களையும் லத்தினோகளையும் பிற வெள்ளையர் அல்லாதவர்களையும் துல்லியமாகக் குறிப்பிட்டு வெறுக்கவில்லை; சாச்சனைப் போலவே அவர்களது உரிமைகளை மதிக்க மறுக்கிறார்.  வெள்ளைப் பெரும்பான்மையினரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வரை சிறுபான்மையினர் அவர்கள் தம் வாழ்க்கையை வாழ முடியும்.
            வரலாற்றில், சாக்சனைவிட சிறப்பாக இக்கருத்தை வேறு எந்த குடியரசுத் தலைவரும் பிரதிநிதித்துவப்படுத்தியது இல்லை. அவர், வெள்ளையர்களின் குடியிருப்பில் இருந்து வெகுதொலைவில் “இந்தியர்”களைக் குடியேற்ற வகைசெய்த இந்தியர்களை அப்புறப்படுத்தல் சட்டத்தில் கையொப்பமிட்டுவிட்டு, அதனை “அரசாங்கத்தின் இரக்கம் மிகுந்த கொள்கை” என “மகிழ்ச்சி”யோடு அறிவித்தார்.  
     
       இந்த பழங்குடியினர் தம்மளவில் அச்சுறுத்துகிறவர்கள் அல்லர், ஆனால் வெள்ளையரின் வளமைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டவர்கள். எனவேதான், சாக்சன் மிசிசிபி ஆற்றிற்கு மேற்கே பழங்குடியினரை கட்டாயமாக அப்புறப்படுத்த ஆணையிட்டார்.  அப்பொழுது 4000 செரோகியர்களும் (Cherokee) 3500 கிரிக்கியர்களும் (Creeks) மாண்டனர் எனக் கணக்கிடப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் “கண்ணீரின் சுவடுகள்” என அறியப்படுகின்றன.
            சனநாயகக் கட்சியின் தந்தையென சாச்சனை சிலர் மதிப்பர்.  அவர் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பின் பொழுது அத்தகுதி அவருக்கு வாய்த்தது. 1824ஆம் ஆண்டில் தனது ஆதரவாளர்களின் பாதையில் அவர் சென்றார். இதனால் அவர் 1828 ஆம் ஆண்டுத் தேர்தலுக்கும் 1832ஆம் ஆண்டின் மறுதேர்தலுக்கும் செலுத்தப்பட்டார்.   அவர்தம் குடியரசுத் துணைத்தலைவரான மார்டின் வான் புயுரன் (Martin Van Buren, அவருக்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது, சனநாயகக் கட்சியினருக்கு சாதாரணர்களிடமான தங்களது முறையீடே தங்களை அதிகாரத்தில் இருத்தியிருக்கிறது எனத் தெளிவுபடுத்தியது.
            டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா அரசியல் மேம்பாட்டின்  புதிய ஊழியைக் கட்டியம்கூறுபவராக எஞ்சியிருப்பார் என்பதனைக் காணலாம்.  டிரம்ப்  பெரும்பான்மையான முதன்மை வாக்குகளை வெல்வாரேயானால் வேட்பாளர்களை நியமிக்கும் விதிகளை மாற்றுதல்  அல்லது வழக்காறுகளோடு பேச்சுவார்த்தை நடத்துதல் பற்றிய பேச்சுகள் நிலவுகின்றன.  இலக்கை அடைதலின் பாதையில்  அவர் எச்சமாக இருப்பார். டிரம்ப் போட்டியில் நுழைந்த விதிகளின்படி அவர் வென்ற வேட்பாளர் நியமனத்தை அவர் மறுக்கக்கூடும்.  அவ்வாறு நிகழ்ந்தால், குடியரசுக் கட்சியினர் 1824 – 1828 காலகட்ட நிகழ்வுகளை நினைவுபடுத்திக் கொண்டு, 2020 ஆம் ஆண்டில் அவர்கள் எதனை எதிர்ப்பார்க்க வேண்டும் என்பதனை தமக்குள் தாமே வினவிக்கொள்ள வேண்டும்.
<><><><><><><><> 

அமெரிக்காவிலுள்ள எக்சஸ் பல்கலைக்கழக அரசாங்கத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றும் ஹின்னா யானிடெல் ரெனின்ஹர்டுட் 2016 மார்ச் 11ஆம் நாளிட்ட ‘த கான்வர்சேசன்’ இணைய இதழில் எழுதிய “ஆன்ட்ரூ சாக்சன்: டொனால்டு டிரம்பின் குடியரசுத் தலைமைக்கு முன்னோன்” கட்டுரையின் தமிழாக்கம்.நன்றி: மின்னம்பலம்.காம் 2016 மார்ச் 16 புதன்
https://minnambalam.com/k/1458086401

இராமநாதபுரம் அரண்மனை

படிமம்:Ramanathapuram 1784 a.jpg
1784 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் அரண்மனையின் முகப்புத் தோற்றம்
  கிழவன் சேதுபதிக்கு மேற்கிலிருந்து மதுரை நாயக்கர்களும் வடக்கிலிருந்து தஞ்சை மராட்டியர்களும் தெற்கிலிருந்து சாயல்குடி வட்டகைப் பாளையக்காரர்களும் தொல்லைகொடுத்து வந்தனர்.  எனவே அவர் தனது தலைநகரை பாதுகாப்பற்று  இருந்த புகலூரிலிருந்து அதற்கு கிழக்கே எட்டுக்கல் தொலைவில் பாண்டியர் கால மண்கோட்டைக்குள் அமைந்திருக்கும் இராமநாதபுரத்திற்கு மாற்றினார். பின்னர் அந்த மண்கோட்டையை இடித்துவிட்டு 27 அடி உயரமும் 5 அடி அகலமும் 42 கொத்தளங்களும் இரண்டுகல் சுற்றுப்பரப்பளவும்கொண்ட அகழி சூழ்ந்த, கிழக்குத் திசையில் ஒற்றை வாயிலையுடைய, செவ்வக வடிவ கற்கோட்டையையும் அரண்மனையையும் 1690க்கும் 1694க்கும் இடைபட்ட காலத்தில் கட்டினார். இதன் அழகைப் பற்றி 1772 சூன் 3ஆம் நாள் இராமநாதபுரம் அரண்மனையைக் கைப்பற்றிய ஆங்கில தளபதி சோசப் சுமித்தும்  இதன் அமைப்பைப் பற்றி முழுமையாக 1773 ஆம் ஆண்டில் வரிவசூலிப்பதற்காக இங்கு வருகைதந்த ஜெனரல் ஜார்ஜ் பேட்டர்சனும் தம்முடைய ஆவணங்களில் பதிந்துள்ளனர்.

1702ஆம் ஆண்டில் நரசப்பய்யன் தலைமையில் நிகழ்ந்த இராணிமங்கம்மாள் படையெடுப்பு, 1709, 1771ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த தஞ்சை மராட்டியப் படையெடுப்புகள், 1772ஆம் ஆண்டில் ஆற்காடு நவாப்பும் ஆங்கிலேயரும் கூட்டாக மேற்கொண்ட படையெடுப்பு ஆகியவற்றிக்குப் பின்னரும் பெரும் பாதிப்பின்றியே இக்கோட்டை இருந்தது. எனினும், கிளர்ச்சிக்காரர்களின் மறைவிடமாக தமிழகத்தில் உள்ள கோட்டைகள் மாறிவிடக்கூடாது என்று அஞ்சிய  ஆங்கிலேயர்கள் அவற்றைத் தகர்த்துவிட 1803ஆம் ஆண்டில் முடிவு செய்தனர். அதன்படி, 1803-04ஆம் ஆண்டில் இக்கோட்டை தகர்க்கப்பட்டது; ஆனால் ஆங்கிலேயருக்கு அடங்கிய கப்பம்கட்டும் பெருங்நிலக்கிழாராக (சமீந்தார்) இருக்க, முத்துராமலிங்க விசயரகுநாத சேதுபதிக்கு மாற்றாந்தந்தை மகளான மங்கேளேசுவரி நாச்சியார் ஒப்புக்கொண்டதால் அரண்மனை இடிக்கப்படவில்லை.  

படிமம்:Ramnad palace 1784.jpg
இராமநாதபுரம் அரண்மனை - ஆங்கிலேயர் வரைந்த ஓவியம்


இராமலிங்க விலாசம்:
முதன்மைச் சாலையிலிருந்து கலைநயம்மிக்க நுழைவாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தால் திறந்த வெளி முற்றம். அதில் கிழக்கு நோக்கி அமைந்த, உயர்ந்த மேடை. அதன்மீது இரண்டு முகப்புத் தூண்களை உடைய பெரிய கட்டிடம். இதுதான் கிழவன் சேதுபதி முதல் முத்துராமலிங்க விசயரகுநாத சேதுபதி வரை சேதுபதிகள் பதின்மர்  கொலுவீற்றிருந்து அரசு செலுத்திய அத்தானி மண்டபமான இராமலிங்க விலாசம். 

இடையில் 03.06.1772 முதல் 07.03.1781 வரை ஆர்க்காடு நவாப்பின் பிரதிநிதியாக ஆங்கிலத் தளபதி மார்ட்டினும் 8.2.1795 முதல் 21.02.1803 வரை கிழக்கிந்திய கம்பெனியின் தண்டலர்களான பவுனி, லாண்டன், காலின்சு சாக்சன், லூசிங்டன் ஆகியோரும் இம்மண்டபத்திலிருந்து தம் பணிகளை ஆற்றினர்.  இக்காலப்பகுதியில், இம்மண்டபத்தின் மாடியில் உள்ள அறையில் தண்டலரான சாக்சனை பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான வீரபாண்டிய கட்டபெம்மன் 1798 செப்டம்பர் 10ஆம் நாள் பேட்டி கண்டார். 

21.01.1803 முதல் இந்தியா விடுதலைபெற்ற நாளான 15.8.1947 வரை ஆங்கிலேயருக்கு அடங்கிய பெருநிலக்கிழார்களாக (சமீந்தார்கள்) ஒன்பது சேதுபதிகள்  இம்மண்டபத்திலிருந்து ஆட்சி செய்தனர். இக்காலப் பகுதியில், இங்கு நாடகவியல் என்னும் நூலை இயற்றிய பரிதிமாற்கலைஞர் தனது கலாவதி என்னும் நாடகத்தை 1901ஆம் ஆண்டில் அரங்கேற்றினார். அமெரிக்கா சென்று திரும்பிய விவேகானந்தருக்கு 1897 சனவரி 27ஆம் நாள் வரவேற்பு வழங்கப்பட்டது. பெரும்புலவர்களான மு.இராகவர், இரா.இராகவர் ஆகியோரைப் போன்ற தமிழறிஞர்களும் புலவர்களும் தம் தமிழ்த் தொண்டை ஆற்றினர்.  

1947ஆம் ஆண்டு முதல் 1978ஆம் ஆண்டுவரை சேதுபதிகள் குடும்பத்தினரின் சொத்தாக இருந்த இம்மாளிகை, 1978ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை தமிழ்நாட்டரசின் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இருக்கிறது.  அத்துறையின் சார்பில் அருங்காட்சியகம் ஒன்றும் இதனுள் இடம் பெற்றிருக்கிறது.

அமைப்பு
இம்மாளிகை கிழக்கு மேற்காக 153 அடி நீளமும் வடக்கு தெற்காக 65 அடி அகலமும் கொண்ட 12 அடி உயரமுள்ள செவ்வக மேடையின் மீது கருங்கல், செங்கல், சுண்ணாம்பு ஆகியவற்றைக்கொண்டு 14 அடி உயர மண்டபம் கட்டபட்டு இருக்கிறது. இது 1790க்கும் 1793க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது மகாமண்டபம், அர்த்த மண்டபம் என்னும் முன்மண்டபம், கருவறை என்னும் அகமண்டபம், அதன் மீது ஓர் அறை, அவ்வறைக்கு முன்னே திறந்தவெளி முற்றம், அறைக்கு மேலே ஓர் இருக்கை என ஒரு கோவிலின் அமைப்பில்  உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

தரையில் இருந்து மண்டபத்திற்குள் செல்ல 16 நீண்ட படிகள். காலவோட்டத்தில் சாலையும் முற்றமும் மேடாகிவிட்டதால் 7 படிகள் மண்ணில் மூழ்கிவிட, தற்பொழுது 9 படிகளே கண்ணிற்படுகின்றன. அவற்றின் இரண்டு புறமும் அழகிய கல்யாளிகள் இருக்கின்றன.  அவை மண்டபத்தைத் தொடும் இடத்தில் இரண்டு உயரமான வட்டத் தூண்கள் நிற்கின்றன.  இவற்றிற்கு நடுவில் மண்டப வாயில். தூண்களின் வடக்கிலும் தெற்கிலும் ஒரு பாக இடைவெளியில் மண்டபத்தின் கிழக்குப்புறச் சுவர்கள்.  வாயிலைக் கடந்ததும் 24 வட்டத்தூண்களோடு மகாமண்டபம் அமைந்திருக்கிறது.  அவற்றின் மேற்புறத்தை அரைவட்ட வளைவுகள் இணைக்கின்றன.  மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையை நினைவூட்டும் இம்மண்டபத்தின் தெற்கு, வடக்கு சுவர்களில் பக்கவாட்டு வாயில்கள் இருக்கின்றன. தென்மேற்கு மூலையில் சேதுபதிகளின் திருமுழுக்கு மேடை அமைந்திருக்கிறது.   

மகாமண்டபத்தின் மேற்கே ஐந்து படிகள் ஏறினால் நான்கடி உயர மேடையில் முன் மண்டபம் அமைந்திருக்கிறது. அதன் கூரையை 16 கருங்கற் தூண்கள் தங்கி நிற்கின்றன. இம்மண்டத்தின் தெற்குச் சுவரில் ஒரு காலதர் இருக்கிறது.  தென்மேற்கு மூலையின் உச்சியில் சேதுபதிகள் ஒன்பதின்மரின் சிலைகள் இருக்கின்றன.  இவை உடையான் சேதுபதி என்னும் சடைக்கன் சேதுபதி தொடங்கி முத்துவிசய ரகுநாத சேதுபதி வரையிலான ஒன்பதின்மரின் சிலைகளாக இருக்கலாம் எனக் கருத்தப்படுகிறது.

முன் மண்டபத்திற்கு மேற்கே 12 கற்தூண்களாலான கருவறை என்னும் அக மண்டபம் அமைந்திருக்கிறது. இதனை தற்பொழுது இராமர்பீடம் என அழைக்கின்றனர்.  அவ்வறையின் வடகிழக்கில் உள்ள படிகளின் வழியே மேலே ஏறினால் 12 கற்தூண்களை உடைய மாடி அறை இருக்கிறது.  மாடியறைக்கு முன்னர் திறந்த வெளி முற்றம்.  அறைக்கு மேலே உள்ள மாடியில் இருக்கை ஒன்று இருக்கிறது. அங்கிருந்து பார்த்தால் நகரின் முழுத்தோற்றமும் தெரியும்.

ஓவியங்கள்
இராமலிங்க விலாசத்தின் உட்புறச் சுவர்களிலும் கூரைகளிலும் உள்ள ஓவியங்களை, சேது நாட்டை 1713ஆம் ஆண்டு முதல் 1725 ஆம் ஆண்டு வரை ஆண்ட முத்துவிஜய ரகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலத்தில் வரைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது; இவருடைய உருவமே இவ்வோதியங்களில் உள்ள சேதுபதியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவ்வோவியங்கள் மலர்ச்சாறு, இலைச்சாறு, கரி, மஞ்சள் ஆகியவற்றைக்கொண்டு உருவாக்கப்பட்ட இயற்கை வண்ணங்களால் வரையப்பட்டு இருக்கின்றன. இவற்றை சேதுபதியின் அக வாழ்வு ஓவியங்கள், புற வாழ்வு ஓவியங்கள், இறையுணர்வு ஓவியங்கள் எனப் பகுப்பர்.

மகாமண்டபத்தின்  இடதுபுற கிழக்குச் சுவரில் சேதுபதிக்கும் தஞ்சை மராட்டிய மன்னருக்கும் இடையே அறந்தாங்கிக் கோட்டைக்கருகில் நிகழ்ந்த போர்க்காட்சிகள் ஓவியமாக்கப்பட்டு இருக்கின்றன. வலதுபுற கிழக்குச்சுவரில் முத்துவிஜய ரெகுநாத சேதுபதியின் உருவம் வரையப்பட்டு இருக்கிறது.  தென்சுவரின் கிழக்குப் பகுதியில் சேதுபதி தன் மனைவியரோடு கொலுவீற்றிருத்தல், நகருலா, அரண்மனைப் பணியாளர்கள் அன்பளிப்புத் தட்டை ஏந்திச்செல்வது, சேதுபதி மன்னர் தனது மடியில் சிறுமி ஒருத்தியை வைத்துக்கொண்டு ஆங்கிலேயர் ஒருவரிடம் உரையாடும் காட்சியும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றிற்கு அடுத்து சைவ சமயத்தோடு தொடர்புடைய காட்சிகளான திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில், தருகாவனத்தில்  சிவனின் பிச்சாண்டித் தோற்றம், முனிவர்தம் மனைவியர்கள், சிவனின் ஊர்த்தாண்டவம் ஆகியன வரையப்பட்டு உள்ளன.  

மகாமண்டபத்தின் மேற்குச்சுவர், வடக்குச்சுவர், கிழக்குச்சுவரின் வலப்புறம், அர்த்த மண்டபத்தின் கிழக்குச்சுவரின் இடப்புறம், தென்சுவர், மேற்குச்சுவர் ஆகிய பகுதியில் இடவலமாக கண்ணனின் வரலாற்றைக் கூறும் பாகவத ஓவியங்கள் வரையப்பட்டு இருக்கின்றன. மகாமண்டபத்தின் வடக்குச் சுவரில் திருமாலின் பத்துப் பிறப்புகளும் தனித்தனி ஓவியங்களாக வரையப்பட்டு உள்ளன. அவற்றின் கீழே தமிழில் காட்சிவிளக்கம் எழுதப்பட்டு இருக்கிறது. தூண்களுக்கு இடையிலான வில்வளைவுகளிலும் வேட்டையாடுதல், மீன்கள் நிறைந்த குளம், படுத்திருக்கும் புலவரின் கால்களை ஒருவர் வருடிவிடுதல் ஆகிய அமைந்துள்ளன.

அக மண்டபத்தின் மேற்குச்சுவரின் இடப்புறம் தொடங்கி வடக்குச்சுவர், கிழக்குச்சுவர், தெற்குச்சுவர், மேற்குச் சுவரின் வலப்புறம் வரை  இடமிருந்து வலமாக தெலுங்கு இராமயாணத்தின் பாலகாண்டக் காட்சிகள் ஓவியமாக வரையப்பட்டு உள்ளன. அவ்வோவியங்களின் அடியில் தமிழிலும் சில இடங்களில் தெலுங்கிலும் காட்சிவிளக்கம் எழுதப்பட்டு இருக்கிறது.  மேற்கூரையின் வில்வளைவுகளில் சேதுபதியும் அவர் மனைவியும் மன்மதனும் ரதியுமாகக் காட்சியளித்தல் என்பன உள்ளிட்ட அந்தப்புரக் காட்சிகள், தன் குலதெய்வமான இராசராசேசுவரியிடம் இருந்து சேதுபதி செங்கோல் பெறுதல், திருமாலின் அருளைப் பெறுதல், முதியவர் ஒருவர் இராமாயணம் படிக்க சேதுபதி அதனைக் கேட்டல், முத்து விசய ரெகுநாத சேதுபதிக்கு மதுரை மன்னர் முத்துவிசயரங்க சொக்கநாத நாயக்கர் பட்டாடை அணிவித்தல், சேதுபதிக்கு பரிசு வழங்க ஐரேப்பியர்கள் அன்பளிப்புத் தட்டுகளை ஏந்திவருதல், சேதுபதியின் நகருலா, பல்வேறு செல்வங்கள், அயிராவதம், சிந்தாமணி, பத்ரபீடம், கற்பகமரம், காமதேனு,  எண்திசைக் காவலர்களின் உருவங்கள், அரசபிராட்டி மங்கலப்பொருள்களான கண்ணாடி, கிளி ஆகியவற்றைப் பார்த்தல், மன்னர் அரண்மனைப் பெண்களுடன் வில்லைத்தாங்கி பறவை வேட்டைக்குச் செல்லல், பெண்கள் நீண்ட கழிகளுடன் நிற்றல், அரசவையில் பெண்கள் நடனம்மாடுதல் ஆகிய ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. 

மாடி அறைச் சுவர்களில் சேதுபதி மன்னர் இசையைக் கேட்டும் நடனத்தைக் கண்டும் இன்புறுதல், மனைவியரோடு கூடி மகிழ்தல், நீராடுதல், நடனமாடுதல் ஆகிய காட்சிகள் வரையப்பட்டு உள்ளன.   மேலும் கிளி, அன்னம், யானை, குதிரை ஆகிய போல பெண்கள் சிலர் ஒன்றிணைந்து நிற்க, அவர்கள் மீது சேதுபதியும் அவர் மனைவியும் மன்மதனும் ரதியும் போல மலர்கணைகளோடு நிற்கும் காட்சிகளும் பல்வேறு வடிவங்கள்கொண்ட மதுக்குடுவைகளின் நடுவே சேதுபதியும் அவர் மனைவியும் அமர்ந்திருக்கும் காட்சியும் வேட்டைக் காட்சியும் இடம் பெற்றுள்ளன.

மொகலாய ஓவியங்களிலும் நாயக்க ஓவியங்களிலும்  காணப்படுவது போன்ற ஆடை, அணிகலன்களும் ஒப்பனைகளும் இவ்வோவியங்களில் முதன்மை பெற்றுள்ளன. எனவே, இவ்வோவியங்கள் தமிழர்கள் மீது நடந்தப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளின் தாக்கத்தை பேசாமல் பேசுகின்ற சாட்சிகளாக இருக்கின்றன.

கவனிக்க!
இச்சாட்சிகளை சிறுகீறல் கூட விழாமல் பாதுகாக்க வேண்டிய தொல்லியல் துறையோ, பராமரிப்பு என்கிற பெயரால் இவ்வோவியங்கள் சிலவற்றில் துளையிட்டு விட்டங்களைச் செருகியிருக்கிறது; கூரையில் பூசிய சுண்ணாம்பு வண்ணங்கள் ஓவியங்களிற்பட்டு அவற்றைச் சிதைத்திருக்கின்றன.  இவை முழுமையாக சிதைவதற்கு முன்னர் அவற்றைப் படியெடுத்து நூலாகவும் காணொளியாகவும் ஆவணப்படுத்த வேண்டும்.  பின்னர் அவற்றை மீட்டுருவாக்கம் செய்தல் வேண்டும்.   கலையையும் தமிழையும் வளர்த்த இம்மண்டபத்தில், போதிய ஊழியர்கள் இல்லாததால், தூசும் குப்பையும் மண்டிக் கிடக்கின்றன. வரலாற்றையும் கலையையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடு இங்கு வருவோருக்கு அவற்றை விளக்கமாக அன்று, சுருக்கமாக எடுத்துரைப்பதற்குக்கூட ஆள்கள் இல்லை.  ‘வரலாறு, கடந்த காலத்தின் பதிவு மற்றுமன்று; வருங்காலத்திற்கான வழிகாட்டியும் கூட’ என்பதனை உணர்ந்து உரிய நடவடிக்கைகளை தொல்லியல் துறை மேற்கொள்ள வேண்டும்.

இந்த இராமலிங்க விலாசத்திற்கு வடக்கே கிழவன் சேதுபதி காலத்தில் நீச்சல் குளமொன்று இருந்திருக்கிறது. பின்னர் அது மூடப்பட்டு, பாசுகர சேதுபதி காலத்தில் சிறிய விலங்குக் காட்சிசாலை இருந்திருக்கிறது. பின்னர் அது அகற்றப்பட்டு, பூப்பந்தாட்டத் திடலாக பயன்பட்டு இருக்கிறது. தற்பொழுது அவ்விடம் குடியிருப்பாக மாறியிருக்கிறது.

இராசராசேசுவரி அம்மன் கோவில்
இராமலிங்க விலாசத்திற்கு தெற்கே, இந்த அரண்மனையின் நடுநாயகமாக சேதுபதிகள் அன்றாடம் வணங்கிய இராசராசேசுவரி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. 1659ஆம் ஆண்டில் மதுரையின் மீது படையெடுத்துவந்த மைசூர் படைகளை திருமலை நாயக்கரின் வேண்டுகோளுக்கு இணங்க ரெகுநாத சேதுபதி  திண்டுக்கல்லுக்கு அருகிலுள்ள அம்மையநாயக்கனூருக்கு அருகில் எதிர்கொண்டு தாக்கி, அவர்களை கோவை வரை துரத்திச் சென்று விரட்டியடித்தார். அதனைப் பாராட்டும்விதமாக, பல பொருள்களையும் திருச்சுழியல், பள்ளிமடம், திருப்புவனம் ஆகிய பகுதிகளையும் தனியரசுரிமையையும் இராசராசேசுவரி அம்மனுக்கு மதுரையில் நவராத்திரி விழாவெடுப்பதைப் போலவே சேதுநாட்டில் புரட்டாசி திங்களில் பத்து நாள்கள் நவராத்திரி விழாவெடுக்கும் உரிமையையும் ரெகுநாத சேதுபதிக்கு திருமலை நாயக்கர் வழங்கினார். அங்ஙனம் விழாவெடுப்பதற்கு வாய்ப்பாக இராசராசேசுவரி அம்மனின் பொற்சிலை ஒன்றினையும் வழங்கினார். அச்சிலையை இராமநாதபுரம் கோட்டையின் நடுப்புள்ளியில் ரெகுநாத சேதுபதி நிறுவி, கோயிலமைத்தார். அந்த அம்மனையே தன்னுடைய குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு நாள்தோறும் காலையில் அதனை வணங்கிவந்தார். அவ்வழக்கை அவருக்கு பின்னர்வந்த அனைத்து சேதுபதிகளும் பின்பற்றினர். இவ்விழா 1865ஆம் ஆண்டில் பெருங்நிலக்கிழார் துரைராசா என்ற முத்துராமலிங்க சேதுபதியால் கலைவிழாவாக மாற்றப்பட்டது. இவ்விழாவில் தமிழ்ப் புலவர்களும் வடமொழி வித்துவான்களும் இசைக் கலைஞர்களும் நாட்டியக்காரர்களும் சிறப்பிக்கப்பட்டனர். இன்றும் அத்திருவிழா ஆண்டுதோறும் கொண்டாட்டப்பட்டு வருகிறது.

நுழைவாயில்
இராசராசேசுவரி அம்மன் கோவிலுக்கு தெற்கே, அரண்மனைத் திடலுக்கு மேற்கே அரண்மனையின் நுழைவாயில் அமைந்திருக்கிறது. செவ்வக வடிவில் நீண்டுயர்ந்த இந்நுழைவாயிலே 1784ஆம் ஆண்டில் மெக்கன்சி சேகரித்த ஓவியத்திலும் 1868ஆம் ஆண்டில் எட்மண்டு டேவிடு இலையன் (Edmand David Lyon) எடுத்த ஒளிப்படத்திலும் இடம்பெற்று இருக்கிறது.  அந்த நுழைவாயிலை மறைத்து தற்பொழுது கடைகளும் வணிக வளாகங்களும் பெருகிவிட்டன. நுழைவாயிற் கட்டிடடத்திலுள்ள அறைகளில்  அரசு அலுவலங்கள் இயங்குகின்றன.

நுழைவாயிலைக் கடந்ததும் ஒரு பெரிய முற்றம். எதிரே யானைக் கொட்டாரம். வலது பக்கம் மற்றொரு நுழைவுவாயில். இடதுபக்கம் மணிவாயில்.  இவ்வாளகம், இராமலிங்க விலாசம், இராசசேசுவரி அம்மன் கோவில் ஆகிய பகுதிகளே அனைவரும் புழங்கும் பொதுவெளியாக இருக்கின்றன. அரண்மனையின் பிறபகுதிகள் அனைத்தும் சேதுபதி குடும்பத்தின் தனிவெளியாக இருக்கின்றன. 

அந்தப்புரமும் பிறவும்
இராமலிங்க விலாசத்திற்கும் இராசசேசுவரி அம்மன் கோவிலுக்கும் இடையிலுள்ள பாதையைக் கடந்தால் ஆயுதக்கிடங்கு என்னும் செவ்வக வடிவக் கட்டிடம் இருக்கிறது. இதற்கு தெற்கேதான் மணிவாயில் அமைந்திருக்கிறது. ஆயுதக்கிடங்கிற்கு மேற்கே, கல்யாண மண்டபமும் அதற்கு எதிரே சரசுவதி மகாலும் அமைந்திருக்கின்றன. கல்யாண மண்டபத்திற்கு மேற்கே மூன்று முற்றங்களையும் அவற்றையொட்டி கட்டடங்களையும் உடைய அந்தப்புரம், அரண்மனையின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இது ஏறத்தாழ அரண்மனையின் பரப்பளவில் பாதியளவிற்கு விரிந்திருக்கிறது.

சங்கர விலாசம்
அரண்மனையின் வடமேற்கு மூலையில் சங்கர விலாசம் அமைந்திருக்கிறது. 1772ஆம் ஆண்டில் நவாப்பின் பிரதிநிதியாக இராமநாதபுரத்திற்கு நியமிக்கப்பட்ட மார்ட்டின் இந்த மாளிகையில்தான் தங்கியிருந்தார். அதனால் இதனை ‘கர்னல் மாளிகை’ என மக்கள் அழைக்கின்றனர்.  இந்த மாளிகையை பாசுகர சேதுபதி தனது ஓய்வு மாளிகையாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

நிரவி மாளிகை
இராமலிங்க விலாசத்திற்கு எதிரே தெற்கு வடக்காக நிரவி மாளிகை என்னும் விருந்தினர் மாளிகை அமைந்திருக்கிறது.  அதில் தற்பொழுது கல்வி நிலையங்களும் வணிக வாளகமும் இயங்கிவருகின்றன.அண்மையில் கலைவரலாற்றுக் கண்ணோட்டத்தில் தென்னகத்திலுள்ள பிற அரண்மனைகளோடு இந்த அரண்மனையை  ஒப்பிட்டு ஆய்வுசெய்த செனிபர் கவோசு, இவ்வரண்மனையே முழுமையான கட்டமைப்போடு இருப்பதாகக் கூறியிருக்கிறார். எனினும் அரண்மனையைச் சுற்றி உருவாகிவரும் கடைகளாலும் அரண்மனைக் கட்டிடங்களில் குடியேறும் அரசு அலுவலங்களுக்காக செய்யப்படும் மாற்றங்களாலும் அதன் தொன்மைச் சுவடுகள் மெல்லமெல்ல மறைந்து வருகின்றன. 


2016 த இந்து - தமிழ் - பொங்கல் மலரில் வெளிவந்த கட்டுரை 


சே. இராமானுசம் : வேரிலிருந்து கிளைத்த புதுமை


சே. ராமானுஜம்
 
மெக்காலே கல்விக்கு மாற்றாக, இந்தியக் குழந்தைகள் தம் மரபார்ந்த அறிவையும் உள்ளார்ந்த திறனையும் தாமே கண்டறிந்து தமக்கான புதிய திறன்களைப் பெற்றுக்கொள்ள உதவுவதை தனது  நோக்கமாகக்கொண்ட, ‘நைதலிம்’ என்னும் காந்தியக் கல்விக்கோட்பாட்டின் அடிப்படையில் உருவான ஆதாரக்கல்வி முறையில் இயங்கிய காந்திகிராம தொடக்கப்பள்ளியில்  ஆசிரியராக 1950களின் பிற்பகுதியில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்,   நெல்லை மாவட்டத்திலுள்ள நான்குநேரியில் திருமாலியக் குடும்பம் ஒன்றில் 1935ஆம் ஆண்டில் பிறந்து, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்ட பெற்ற சே. இராமானுசம். அப்பொழுது காந்திகிராமத்தில் பணியாற்றிய, நாட்டார் பாடல்களைத் திரட்டித் தொகுத்து பின்னாளில் ஏட்டில் எழுதாக்கவிதைகள் என்னும் நூலை வெளியிட்ட அன்னகாமு, மலையாள நாடக ஆசிரியர் கோ. சங்கரபிள்ளை, கல்கத்தாவில் தாகூரின் சாந்திநிகேதனில் ஓவியக்கல்வியும் தில்லியில் ஆசிய நாடக நிறுவனத்தில் நாடகக்கல்வியும் பெற்ற எசு.பி.சீனிவாசன் ஆகியோரின் நட்பு இராமானுசத்திற்கு கிடைத்தது. விடுமுறை நாள்களிலும் ஒழிந்த நேரங்களிலும் அப்பகுதியிலுள்ள சிற்றூர்களுக்குச் சென்று நாட்டார் பாடல்களைத் திரட்டும் பணியில் அன்னகாமுவிற்கும் நுண்கலைகளைப் பயிற்றுவித்தலில் சங்கரபிள்ளை, சீனிவாசன் ஆகியோருக்கும் இராமானுசம் உதவினார்.  அச்சூழல் அவருக்கு தமிழ்மரபின் அடித்தளங்களை அறியும் ஆவலையும் நாடகத்தில் ஆர்வத்தையும் தூண்டின. 

இதன் விளைவாக 1963ஆம் ஆண்டில் புது தில்லியிலுள்ள தேசிய நாடகப்பள்ளியில் நாடகம் கற்க இராமானுசம் சேர்ந்தார்.  இந்திய நாடகக்கலையை உருவாக்க வேண்டும் என்னும் நோக்கோடு, ஏற்கனவே இயங்கிய ஆசிய நாடக நிறுவனத்தை மூடிவிட்டு, தொடங்கப்பட்ட தேசிய நாடகப் பள்ளியில் 1962ஆம் ஆண்டு முதல் இயக்குநராகப் பணியாற்றிய நாடகக்கலைஞரும் பழந்தடத்தில் நடந்து தோய்ந்துகிடந்த இந்திய நாடகக்கலைக்கு புத்துயிரூட்டியவர்களுள் ஒருவருமான  இப்ராகிம் அல்காசியிடம் இராமானுசம் நாடகம் பயின்றார். அப்பொழுது, தன்வீர்பாரதி என்பவர் எழுதிய கவிதையை ‘அந்தா யுக்’ என்னும் நாடகமாக தேசிய நாடகப்பள்ளி உருவாக்கியது.  குருச்சேத்திரப் போருக்குப் பின்னர் அனைத்து அழிவிற்கும் காரணமானவன் என கண்ணனை குற்றம்சாட்டும் காந்தாரியின் குரலாக ஒலிக்கும் அந்நாடகத்தை அல்காசி இயக்கினார். அதனை தில்லியில் உள்ள ஃபிரோசு சா கோட்லா என்னும் இடிந்த கோட்டையின் முற்றத்தில் நிகழ்த்தியது; அதுவே அப்பள்ளி முதன்முதலில் பொதுவிடத்தில் நிகழ்த்திய நாடகம் எனக் கருதப்படுகிறது. அந்நாடகத்தில் இராமானுசம் படைவீரர்களில் ஒருவராக நடித்தார்.  அதில் தொடங்கிய அவரது நாடகப் பயணம் 2015 திசம்பர் 7ஆம் நாளில் அவர் மறையும் வரை அரை நூற்றாண்டு காலம் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருந்தது.

காந்திகிராமத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்பித்து பட்டறிவுபெற்றிருந்த இராமானுசம், குழந்தைகளுக்கான நாடகத்தை சிறப்புப்பாடமாகப் பயின்று 1967ஆம் ஆண்டில் நாடகவியலில் பட்டயம் பெற்றார். அவரை சென்னையில் இருந்த புகழ்பெற்ற நாடகக்குழுவொன்று தம்மோடு பணிசெய்ய அழைத்தது.  ஆனால், இராமானுசமோ காந்திகிராம ஊரக நிறுவனம் என்னும் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நுண்கலை விரிவுரையாளராகப் பணியேற்றார். அதே ஆண்டில், சேரளத்தில் கொல்லம் மாவட்டம் சாசுதம்கொட்டாவில் 1967ஆம் ஆண்டில் சங்கரபிள்ளை ஒருங்கிணைத்த நாடகக்களரியில் பயிற்றுநராகக் கலந்துகொண்டார்.  அது அவருக்கும் மலையாள நாடக உலகிற்குமான தொடர்பினை தொடங்கிவைத்தது. 

தொடக்க காலத்தில் அன்னகாமுவிற்காக நாட்டார் பாடல்களைத் தேடித்தொகுக்கும் பணியில் ஈடுபட்டபொழுது கிடைத்த பட்டறிவும் நாட்டார் கலைகள் பற்றிய அறிமுகமும் இராமானுசத்தை தமிழ்மண்ணிற்கான நாடக மரபைத் தேடிக்கண்டடைய ஊக்குவித்தன. எனவே, காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பயின்ற ஊரக மாணவர்களிடமிருந்தும் அப்பகுதி மக்களிடமிருந்தும் அம்மண்ணின் வழக்காறுகள் பலவற்றை உள்ளீர்த்துக்கொண்டார்.

அதன் விளைவாக, 1977ஆம் ஆண்டில் காந்திகிராமத்தில் நாடகப்பட்டறை ஒன்றை எசு.பி. சீனிவாசன், என். இராதாகிருட்டிணன், வேலுசாமி ஆகியோரின் உறுதுணையோடு ஒருங்கிணைத்தார்.  அதில் கோ. சங்கரபிள்ளையும் பி.வி. காரத்தும் பயிற்றுநனர்களாக வினையாற்றினர். பின்னாளில் திறம்பட்ட நாடகர்களாக ஒளிர்ந்த, ஒளிர்கிற மு. இராமசுவாமி, செயந்தன், பறம்பை செல்வன், ஞாநி, லிங்கன், சியாமளன், கிருட்டிணமூர்த்தி, சாசகான்கனி ஆகியோரை உள்ளடக்கிய இளைஞர்கள் பலர் இதில் பயிலுநர்களாகப் பங்கேற்றனர். ந. முத்துசுவாமியின் ‘நாற்காலிக்காரர்’ நாடகத்தை இராமனுசம் இயக்கினார். அதனைத் தொடர்ந்து தேசிய நாடகப் பள்ளியின் உதவியோடு எழுபதுநாள் நாடகப்பட்டறை ஒன்றை 1978ஆம் ஆண்டில் காந்திகிராமத்தில் ஒருங்கிணைத்தார்.  இதில் கரு. அழ. குணசேகரன், கண்ணப்ப சம்பந்தன், நவநீதகிருட்டிணன், அசுவகோசு ஆகியோரை உள்ளடக்கிய பலர் பயிலுநர்களாகப் பங்கேற்றனர்.  இப்பயிலரங்கில் சி. சுப்பிரமணிய பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தை அடியொற்றி சே. இராமானுசம் இயற்றிய, ‘பிணந்தின்னும்  சாத்திரங்கள்’ என்னும் நாடகம் காரத்தின் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது;  இதுவே தமிழின் முதல் நவீனநாடகமாகக் கருதப்படுகிறது. இவ்விரு நாடகப்பட்டறைகளிலும் உருவான கலைஞர்களும் அவர்தம் மாணவர்களும் தொடர்ந்து இயங்கி தமிழில் நவீன நாடக இயக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.  சுருங்கச் சொன்னால், தமிழ்க் கவிதையுலகில் குயில், பொன்னி ஆகிய இரு இதழ்களும் ‘பாரதிதாசன் பரம்பரை’யை உருவாக்கியதைப் போல இவ்விரு நாடகப் பட்டறைகளும் தமிழ் நாடகவுலகில் ‘இராமானுசம் பரம்பரை’யை உருவாக்கின எனலாம்.

1977ஆம் ஆண்டில் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் நாடகப் பள்ளி, திருச்சூரில் பேராசிரியர் கோ. சங்கரபிள்ளையை இயக்குநராகக்கொண்டு தொடங்கப்பட்டது.  இராமானுசம் அப்பள்ளியின் உதவி இயக்குநாரக 1978ஆம் ஆண்டு தொடங்கி 1985ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். அக்காலகட்டத்தில் சங்கரபிள்ளை உள்ளிட்ட மலையாள நாடகாசிரியர்கள் பலரின் நாடகங்களையும் தமிழ் நாடங்கள் பலவற்றையும் மொழிபெயர்ப்பு நாடகங்கள் சிலவற்றையும் இயக்கினார்.  அவற்றுள் பெரும்பான்மையானவை குழந்தைகள் நாடகமாக இருந்தன.  வாய்ப்புக் கிடைக்கும்பொழுது பிற நாடகங்களையும் இயக்கினார். இருந்தபோதிலும் தமிழ்மண்ணிற்கான நாடக மரபைத் தேடிக்கண்டடையும் அவரது அவா அந்நாடகங்களில் நிறைவுறவில்லை; எனினும் அதனை நோக்கிய அவருடைய தேட்டத்திற்கு அங்கு கிடைத்த பட்டறிவு பேருதவி செய்தது.

1985ஆம் ஆண்டில் தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகத் துறை தொடங்கப்பட்டபொழுது, இராமனுசத்தை அதன் தலைவராக, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அன்றைய துணைவேந்தர் வ.ஐ.சுப்பிரமணியன் நியமித்தார்.   இராமானுசம் அப்பணியை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டு புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டார். 

அதில் ஒன்றாக, 1987ஆம் ஆண்டில் அப்பல்கலைக்கழகம் ஒருங்கிணைத்த கல்லூரி ஆசிரியர்களுக்கான இரண்டாவது பயிலரங்கின் படைப்பாக திராய் நாட்டு மகளிர் என்னும் கிரேக்க நாடகத்தை உருவாக்க விழைந்தார். ஆனால், அந்நாடகத்தின் மொழிபெயர்ப்புப் பனுவல் கிடைப்பதற்கு முன்னரே, உடன்பணியாளர் ஒருவர் மரணமடைந்தபொழுது அவருக்கு அஞ்சலி செலுத்த அந்த மரணவீட்டிற்குச் சென்றிருந்த இராமனுசம் அங்கு கேட்ட ஒப்பாரி ஓசையை அடிநாதமாகக்கொண்டு, திராய் நாட்டு மகளிர் நாடகத்தின் தாக்கத்தால் (தழுவல் அன்று) வெறியாட்டம் என்னும் நாடகத்தை இயற்றினார்.  சிங்கள இனவெறியால் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் ஈழத்துப் பெண்களின் புலம்பலாக உருவானது அந்நாடகம்.  “நாடகப் படைப்பாக்கம் என்பது நடிகர்கள் புலப்படுத்தும் கூறுகளை மேடைத்தளத்திற்குள் காலவரையரை சந்த ஆக்கத்தால் சலனங்களாக. படிமங்களாக, சைகைகளாக, செயல்களாக, உள்ளோட்டம் பெற்று ஆடையணி, ஒளி, ஒலி, இசை ஆகிய புறப்புலப்பாடுகளைப் பின்பலமாகக்கொண்டு உயிரோட்டமாக வடித்துத்தரப்படும் நிகழ்த்துதலின் முருகியல் கோலங்களாகும்” எனக்கருதிய இராமனுசம், தமிழ்ப்பெண் அன்றாடம் அணியும் ஆடை, ஒப்பாரி ஒலி, செந்நிற ஒளி, தப்பாட்ட இசை ஆகிய புறப்பாடுகளைப் பின்பலமாகக்கொண்டு அகவலோசை சந்தத்தில் அமைந்த பனுவல், சுடுகாட்டுப் படிமம், ஒயிலசைவுச் சைகை, மாரடிப்புச் செயல்கள் ஆகியவற்றால் உள்ளோட்டம் பெற்ற நாடகப் படைப்பாக்கத்தை உருவாக்கினார்; அதன் வழியாக  தமிழ்மண்ணிற்கான நாடக மரபைத் தேடிக்கண்டடைந்தார்.  

            ஆயினும் அதே பாணியில் அவர் தேங்கி நின்றுவிடவில்லை; மாறாக அண்டோரா, (1992), மெளனக்குறம் (1994), செம்பவளகாளி (1995) என தான் இயக்கிய ஒவ்வொரு நாடகத்திலும் வெவ்வேறு இணைவுகளை  உருவாக்கி, தமிழ்மண்ணிற்கான நாடக மரபின் பன்முகத்தன்மையை வெளிக்கொணர்ந்தார். இதனால் இவருடைய படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவத்தைக்கொண்டு இருந்தன. அதனைக் கண்ணுற்ற சிலர், இராமானுசம் எந்தவொரு குறிப்பிட்ட சிந்தனைப்பள்ளியையும் சாராதவராகவும் தனக்கென ஒரு நாடகப்பாணியை உருவாக்காதவராகவும் இருக்கின்றார் எனக் கூறினர். அதற்கு விடையாக, “எனது சிந்தனையானது எந்தவொரு வகைமாதிரிக்குள்ளும் அல்லது வடிவத்திற்குள்ளும் சிறைப்படவில்லை. புத்தாக்க முறை அல்லது வடிவு என்பதே நாடகத்தில் எனது அணுகுமுறையை வேறுபடுத்திக்காட்டும் கூறாகும்” என இராமனுசம் எடுத்துரைத்தார்.  இவரது இந்த அணுகுமுறை நவீனம் பற்றிய அவரது கருத்தாக்கத்தை எடுத்துரைப்பதாக அமைகிறது.  அதாவது எந்தவொரு வடிவமும் ஒருமுறை நிகழ்த்தப்பட்டுவிட்ட பின்னர், அது தனது நவீனத்தன்மையை (புதுமையை) இழந்துவிடுவதாக அவர் கருதினாரோ என எண்ணத்தோன்றுகிறது.

இராமனுசம் தனக்கென ஒரு பாணி அல்லது முருகியல் முத்திரை தன்னால் உருவாக்கப்படவில்லை; அங்ஙனம் உருவாக்க விரும்பவுமில்லையெனக் கூறினாலும் அவருடைய நாடகங்களின் அடிச்சரடாக தமிழ்மக்கள் தம் உணர்வுகளை வெளிப்படுத்தும்பொழுதும் சடங்குளை நிகழ்த்தும்பொழுதும் வினைகளை ஆற்றும்பொழுதும் மேலெழும் ஒலிகளை தனது நாடகங்களின் புறப்பாடுகளில் ஒன்றாகப் பயன்படுத்தி இருப்பதை கவனிக்க இயலுகிறது.

அதேபோல மண்ணின் மக்களுக்கு மிகவும் நெருக்கமான நீலம், சிவப்பு, மஞ்சள் ஆகிய முதன்மை வண்ணங்களையும் இவற்றின் இணைவில் உருவாகும் பச்சை, ஆரஞ்சு முதலிய ஈரிணை வண்ணங்களையுமே தனது நாடகங்களில் அதிகம் பயன்படுத்தி இருக்கிறார். இவ்விருகூறுகளும் தந்த பின்வலிமையால் நிகழ்வெளியில் இயங்கும் நடிகர்களின் நடிப்பால் உள்ளோட்டம் பெற்று பார்வையாளர்களின் விழிகளின் வழியே அவருள் நுழைந்து உணர்வலைகளை எழுப்பி நிகழ்த்தப்படும் நாடகத்திற்கு உயிரோட்டத்தை நல்குகின்றனவோ என கருதவேண்டியிருக்கிறது.

            இவ்வாறு தமிழ்மண்ணின் மரபான ஒலி, வண்ணம், உடல்மொழி ஆகியவற்றின் வேரிலிருந்து தனது ஒவ்வொரு நாடகத்திலும் புதுமைகளைக் கிளைக்கச் செய்த இராமனுசம் இன்று நம்மிடமில்லை; ஆனால், அவர் உருவாக்கிய நாடகப் பரம்பரையினர் தமிழகத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் ஓரிடத்தில் தேங்கிவிடாமல் தமிழ்நாடகத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்த்திக்கொண்டு போவதும் அம்முயற்சிகளுக்கு தமிழ்மக்களும் தமிழக அரசும் துணையாகவும் ஊக்கம்தருபவர்களாகவும் இருப்பதே அவருக்குச் செய்யும் அஞ்சலி ஆகும். 

 
அம்ருதா 2016 சனவரி இதழில் இக்கட்டுரை

ஆண்மை என்னும் வன்முறை

 


கட்டமைக்கப்படும் ஆண்மைப்படிமம்

இந்தியாவில் ஒவ்வொரு ஐந்து மணித்துளிக்கும் ஒரு பெண் தன் கணவனாலோ, அவன் உறவினர்களாலோ வன்முறைக்கு உள்ளாகிறாள் என்கிறது ஓர் ஆய்வறிக்கை. உலகளவில் மூன்று பெண்களில் ஒருத்தி தனது வாழ்நாளில்  தன் கணவன் அல்லது தனக்குத் தெரிந்தவரால் அடிக்கப்படவோ பாலுறவுத் தொல்லைக்கு உள்ளாகவோ செய்கிறாள் என்றும் ஒவ்வோர் ஆண்டும் ஆறுகோடி சிறுமியர் பள்ளியில் அல்லது பள்ளிக்குச் செல்லும் வழியில் பாலுறவுத் தாக்குதலுக்கு ஆளாகின்றனர் என்றும் குழந்தைக்கொலை, புறக்கணிப்பு, கருக்கொலை ஆகியவற்றின் காரணமாக குறைந்தளவு ஆறுகோடிப் பெண்கள் காணாமற் போகிறார்கள் என்றும் கூறுகிறது மற்றோர் ஆய்வறிக்கை.   இங்ஙனம் பெண்கள் மீது அவர்தம் வீட்டில், பணியிடத்தில், குமுகாயவெளியில் நிகழ்த்தப்படும் வன்முறைகளை பதினோரு வகையாகப் பகுத்து, அவற்றின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடிக்கொண்டே போகிறது என்கிறது தேசிய குற்ற பதிவேட்டுச் செய்தியகம் (National Crime Record Bureau). 
<br>
<br>
தண்டனை x காரணிகள்
<br>
இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு இருக்கின்றன. அச்சட்டங்களின் அடிப்படையில் பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றிற்கு தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது.  இருப்பினும் அவ்வன்முறைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் பெருக்கிக்கொண்டே போகிறது. ஏனெனில் இச்சட்டங்கள், வன்முறை ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதைப் பற்றியே பேசுகின்றன. மாறாக பெண்கள் மீதான வன்முறையில் ஆண்கள் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராயவில்லை.  அங்ஙனம் ஆண்கள் வன்முறையில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டுமானால், அவர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கான காரணிகளை ஆராய்ந்தறிய வேண்டும். அதன்பின் அவற்றின் வேர்களை கெல்லியெறிவதன் வாயிலாகவே பெண்கள் மீதான வன்முறையைத் தடுக்க முடியும் என்கின்றனர் பெண்ணியலாளர்களும் (Feminists) பெண்ணியச் சார்பாளர்களும் (Pro-Feminists).
<br>
<br>
தன்மைகளும் காரணிகளும்
<br>
 
அவ்வகை ஆய்வில் ஈடுபட்ட கனடா நாட்டு பெண்ணியச்  சார்பாளரான மைக்கேல் காஃப்மன், ஆண்கள் மேற்கொள்ளும் வன்முறையானது பெண்களுக்கெதிரான வன்முறை (ஆண் x பெண்), ஆண்களுக்கிடையே நிகழும் வன்முறை (ஆண் x ஆண்) ஓர் ஆண் தனக்குத்தானே இழைத்துக்கொள்ளும் வன்முறை (ஆண் x தான்) என்னும் முப்பரிமாணத்தன்மையை உடையது என்கிறார். ஆண்களின் வன்முறைக்கு ஆணாதிக்கம், ஆணுரிமை, குமூக-மத-சட்ட அனுமதி, ஆணதிகாரம், ஆண்மை, உணர்வழுத்தம், மோசமான பட்டறிவு ஆகிய ஏழும் காரணிகளாக இருக்கின்றன என்று கூறுகிறார்.      
<br>
<br>
வன்முறை ஆணின் இயல்பா?
<br>   
அப்படியானால், வன்முறையானது இயல்பாகவே ஆணிகளின் மனதில் புதைந்திருக்கிறதா என்னும் வினா எழுகிறது.  மாந்தகுலத்தில் ஒருபகுதியினரான பெண்களின் மனதில் வன்முறை இயல்பாக இல்லை என்றால், மறுபகுதியினரான ஆண்களின் மனதிலும் வன்முறை இயல்பாகவே இருக்க முடியாது. அதுபோலவே, ஆண்களில் ஒரு பகுதியினரின் மனதில் வன்முறை இயல்பாக இல்லாதபொழுது, மற்றொரு பகுதி ஆண்களின் மனதில் மட்டும் வன்முறை இயல்பானதாக இருக்க முடியாது.  எனவே, ‘ஒருவன் தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்ள வன்முறை ஓர் உத்தி’ என்னும் கருத்தாக்கம் அவனால் அறியப்பாடாமலேயே அவனின் மனதில் விதைக்கப்படுகிறது. அவனின் குடும்பம், நட்பு, குமுகாயம், மதம் ஆகியன உள்ளிட்ட அவனோடு நாள்தோறும் ஊடாடும் ஒவ்வொன்றும் அதனை விதைக்கின்றன.
<br>
<br>
வன்முறை ஏன்?
<br>
இங்ஙனம் ஒருவனின் மனதில் விதைக்கப்பட்ட வன்முறையை அவன் எதற்காக வெளிப்படுத்துகிறான் என்னும் அடுத்த வினா எழுகிறது. ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே உள்ள இயற்கையான உயிரியல், உடலியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பல்வேறு வேறுபாடுகளை அவர்களுடைய குமுகாய – பண்பாட்டு வாழ்க்கைச் சூழல் அவர்களின் மனதில் உருவாக்குகிறது. அதனையே பாலின வேறுபாடு என்கிறோம். இவ்வேறுபாடே ஆண்மை x பெண்மை என்னும் எதிர்நிலைகளை கட்டமைக்கிறது. அந்த எதிர்நிலையும் நிகரானவைகளாகக் கட்டமைக்கப்படுவதில்லை. மாறாக,  ‘ஆண்மை’ உயர்வும் வலிமையும் உடையதென்றும் ‘பெண்மை’ தாழ்வும் வலிமைக்குறையும் உடையதென்றும் ஏற்றத்தாழ்வாக கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.  எனவே, தாம் உயர்வும் வலிமையும் உடையவரென நம்பும் ஆண்கள் தம் ஆண்மையை வெளிப்படுத்தவும் நிலைநாட்டவும் பெண்கள் மீது வன்முறையை ஏவுகிறார்கள்.  அதனால் வன்முறையானது ஆண்மையின் வடிவமாக மாற்றப்படுகிறது.   
<br>
<br>
 
எனவே, பெண்களின் மீதான வன்முறையை நீக்க வேண்டுமானால் அவ்வன்முறைக்கு ஆணிவேராக இருக்கும் ஆண்மையை ஆணின் மனதிலிருந்து அகற்ற வேண்டும். இதனையே, “ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்பட்டால் அல்லாது பெண்விடுதலை இல்லை என்பது உறுதி” என தன்னுடைய பாங்கில் எடுத்துரைத்தார் தோழர் ஈ.வெ.இராமசாமி.
<br>
<br>
ஆண்மை பற்றி ஆய்க
<br>
பெண்மை பற்றியும் பெண்ணடிமைத்தனம் பற்றியும் அதனால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அவர்கள் வாழும் குமூகத்திற்கும் ஏற்படும் இழப்பு, பாதிப்பு ஆகியன பற்றியும் விரிவான அளவில் குமுகாய – பொருளாதார – உளவிய - பண்பாட்டு – அரசியல் நோக்கில் உலகெங்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன; அவற்றின் பல முடிவுகள் ஏற்கப்பட்டு செயல்வடிவமும் பெற்றிருக்கின்றன. ஆனால், ‘ஆண்மை’ பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் போதுமான அளவிற்கு ஆய்வுகள் நிகழ்த்தப்படாமல் அஃதோர் இருண்ட பகுதியாகவே இருக்கிறது.  அதன் விளைவாக ஆண்மையின் வன்முறை முகம் முழுமையாக வெளியே தெரியவில்லை. அதன் தன்னிரக்க முகமோ சிறிய அளவிற்குக்கூட வெளியே தெரியவில்லை. எடுத்துக்காட்டாக, சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் மீது அவரோடு பணியாற்றிய பெண்ணுக்கு பாலுறவுத் தொல்லை கொடுத்தாக குற்றம் சுமத்தப்பட்டது. அவர் அத்தகு குற்றத்தைச் செய்யக்கூடியவர் அல்லர் என அவர்தம் நண்பர்கள் பலரும் நம்பினர்; ஆனால், தான் குற்றமற்றவன் என்பதனை உலகிற்கு மெய்ப்பிக்க வேண்டும் என்னும் அவரது மனப்பதற்றம் அவரை மரணத்தை நோக்கி உந்தித்தள்ளியது. அந்நிகழ்வு அவரது தனிப்பட்ட உளவியற் சிக்கலாகப் பார்க்கப்பட்டதேயன்றி, அவரது ‘ஆண்மை’யின் தன்னிரக்க விளைவாகப் பார்க்கப்படவில்லை. ஆனால் இத்தகு நிகழ்வையே, ஆண்மையின் சுமையால் ‘ஓர் ஆண் தனக்குத்தானே இழைத்துக்கொள்ளும் வன்முறை’ எனச் சுட்டினார் மைக்கேல் காஃப்மன். எனவே, ஆண்மையை அழிக்க வேண்டுமென்றால், அதனைப் பற்றியும் அதன் விளைவுகளைப் பற்றியும் விரிந்த அளவில் குமுகாய – பொருளாதார – உளவிய - பண்பாட்டு – அரசியல் நோக்கில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  அப்பொழுதுதான், ‘ஆண்மை’ என்னும் கருத்தாக்கம் எவ்வாறு ஆணிற்கும் பெண்ணிற்கும் பெருஞ்சுமையாகவும் துயரமாகவும் இருக்கிறது என்பதனைப் புரிந்துகொள்ள முடியும்.
<br>
<br>
 
கற்பிக்க!
<br>
மேலும், தொடக்கநிலைக் கல்வியிலிருந்து பல்கலைக் கழகக் கல்வி வரை பாலின நிகர்நிலை ஒரு பாடமாகவோ, வாழ்க்கைத் திறன் கல்வியின் ஒரு கூறாகவோ கற்பிக்கப்பட வேண்டும். அத்தோடு அனைத்துப் பாடங்களும் அந்த கண்ணோட்டத்தோடு உருவாகப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, கணிதப் பாடத்தில் நேரமும் வேலையும் என்னும் பகுதியைக் கற்பிக்கும்பொழுது பெண்கள்  மெதுவாகவும் ஆண்கள் விரைவாகவும் வேலை செய்பவர்கள் என்னும் கருத்துத்தொனிக்க கணக்கை உருவாக்கக் கூடாது.  
<br>
<br>
உரையாடுக!
<br>
வளரிளம் பருவத்திலும் முன்னிளமைக் காலத்திலும் இருக்கும் ஆண்களோடு பாலினமும் ஆண்மையும் பற்றிய உரையாடலை நிகழ்த்த வேண்டும். அதன் வழியாக அவர்களுடைய மனதில் நிகர்நிலை நிறைந்த உலகு பற்றிய நற்சிந்தனையை விதைக்க வேண்டும்.
<br>
<br>
உதவுக!
<br>
ஆண்மையை ஆண்களின் மனதிலிருந்து அவர்களுடைய ஒத்துழைப்பும் புரிதலும் இல்லாமல் அகற்றிவிட முடியாது.  எனவே ஆண்களை எதிரிகளாக நிறுத்தாமல், மதிப்போடும் ஒத்துணர்வோடும் அணுக வேண்டும்.  அதன்வழியாக அவர்களுடைய செயல்களையும் அவர்களைப் போன்ற பிறருடைய செயல்களையும் அவர்களே சீர்தூக்கிப் பார்த்து அவர்கள் தம்மைத் தாமே திருத்திக்கொள்ளும் வாய்ப்பை உருவாக்க முடியும். இல்லையென்றால், அவர்களுடைய பாதுகாப்பின்மை உணர்வும் தன்னிரக்கமும் மேலும் இறுகி வன்முறையை அதிகரிக்கச் செய்துவிடும். அத்தோடு, ஆண்மையின் சிக்கலை அவர்கள் புரிந்துகொள்வதற்கு பாலின நிகர்நிலையில் நம்பிக்கையுள்ள ஆண்களும் பெண்களும் அவர்களுக்கு உதவ வேண்டும். 
<br>
<br>
ஈடுபடுத்துக!
<br>
தம் தந்தை வன்முறையில் ஈடுபடுவதைக் காணும் ஆண்குழந்தைகள் தாம் வளர்ந்த பின்னர் தம் தந்தையைவிட பத்துமடங்கு அதிகமாக தம் மனைவியின் மீது வன்முறையைச் செலுத்துகின்றனர் என்கிறது ஓர் ஆய்வு. எனவே வன்முறையற்ற வழியில் தம் குழந்தைகளை வளர்ப்பதிலும் பேணுவதிலும் ஆண்கள் முழுமையாக ஈடுபட வேண்டும்; அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.  வீட்டுவேலைகளில் பெண்களுக்கு இணையாக ஆண்களும் ஈடுபட வேண்டும்.
<br>
<br>
குழந்தைகளின் மனதில் பாலினப் பாகுபாட்டை உருவாக்குகிற, ஆண்மையைக் கட்டமைக்கிற பொருள்களையும் விளையாட்டுகளையும் அவர்களுக்கு அறிமுகம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்; ஒருவேளை அவற்றை அவர்கள் அறிந்திருந்தால், அவை பற்றி பக்குவமாக எடுத்துரைக்க வேண்டும்.  வீட்டுவேலைகளை குழந்தைகளுக்கு பாலினப் பாகுபாடின்றி பகிர்ந்தளிக்க வேண்டும்.  
<br>
<br>
புரிந்துகொள்க!
<br>
பெண்ணியலாளர்கள், ஆண்மையையும் அதன் சிக்கலையும் ஆண், பெண், சிறுவர் ஆகியோரிடையே நிலவும் அதிகார உறவையும் ஆண்மை, பெண்மைக் கட்டமைப்பையும் புரிந்துகொள்ள முனையும் அதேவேளையில் ஆண்மையை மறுத்தல், எதிர்த்தல், மாற்றுகளைக் கட்டமைத்தல் ஆகியவற்றிலும் ஈடுபட வேண்டும்.  
<br>
<br>
இவற்றையும் இவைபோன்ற பிறவற்றையும் நீடித்து நிலைத்துச் செய்தால் மட்டுமே மோதல்களைத் தீர்ப்பதற்கும் வேறுபாடுகளைக் களைவதற்கும் வன்முறையே வழி என்னும் போக்கினை ஒழிக்க இயலும்!
<br>
<br>
<br>
<br>
அம்ருதா இதழின் 2015 திசம்பர் மடலில் வெளிவந்த கட்டுரை

ஆதலினால் சாதியினைத் துறப்பீர் உலகத்தீரே!சாதி என்னும் சொல், ‘பிரிவு’ என்னும் பொருளில் ‘நீர்வாழ் சாதியுள் அறுபிறப்புரிய’ என்றும் ‘நீர்வாழ் சாதியுள் நத்தும் நாகே’ என்றும் தொல்காப்பியத்தின் மரபியலில் ஆளப்பட்டு இருக்கிறது. அதற்குப் பின்னர் அச்சொல், குலத்தூய்மையை காக்கும்/சுட்டும் சொல்லாகவே பன்னெடுங் காலமாகக் கருத்தப்பட்டு வந்திருக்கிறது. எனவேதான் இருவேறு குலப்பிரிவிற் பிறந்த இருவருக்கு இடையே நிகழ்ந்த/நிகழும் திருமணமானது குலத்தூய்மையற்ற திருமணம் என்னும் பொருளில் ‘கலப்புத் திருமணம்’ எனச் சுட்டப்படுகிறது.  பிறப்பு, அகமணம், உணவுப் பழக்கம், தொழில், படிநிலை அமைப்பு, அதிகாரம் ஆகிய ஆறு கூறுகளின் மீது சாதி கட்டமைக்கப்பட்டு இருக்கிறது என்கின்றனர் மாந்தரியலாளர்கள்.  இறுகிய இந்தக் கட்டமைப்பானது இன ஆதிக்கம், போரில் வென்றவரின் ஆதிக்கம், மத ஆளுகை, தொழிற்பிரிவு, குலத்தேய்வு, படிமலர்ச்சி என்பனவற்றுள் ஏதேனுமொரு கோட்பாட்டின் அடிப்படையில் அல்லது அவற்றுள் சிலவற்றின் இணைவில் தோன்றியிருக்கலாம் எனக் கருத்தப்படுகிறது.  


சாதிய அமைப்பு
இவ்வாறு தோன்றுவிக்கப்பட்ட பல்வேறு சாதிகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அவற்றின் உச்சத்தில் பார்ப்பன சாதியை இருத்தி சாதிய அடுக்குமுறை வகுக்கப்பட்டு இருக்கிறது. இந்த அடுக்குமுறையில் உள்ள சாதிகள் ஒன்றொடு ஒன்று கலந்துவிடுவதைத் தடுக்கும் நோக்கில் தீண்டாமை என்னும் கொடுங்கருத்து திணிக்கப்பட்டு இருக்கிறது. அந்த அமைப்பு முறை குலைந்துவிடாமல் நீடித்துநிலைபெற, சாத்திரங்கள் வகுக்கப்பட்டு இருக்கின்றன.   இச்சிந்தனை மரபிற்கு வைதிகம் என்று பெயர்.  இவ்வைதிகம் அரசு ஆதரவு, மதச் செல்வாக்கு, நிறுவனக் கட்டமைப்பு, செல்வப் பெருக்கு உள்ளிட பல்வேறு காரணிகளால் தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. இதனால் இதன் உட்கிடையான சாதியமும் நிலைபேறடைந்தது. 
<
 
எனினும் சாதியத்தையும் அதனைக் காக்கும் வைதிகத்தையும் தகர்க்கும் முயற்சிகள் அவை முளைவிட்ட காலந்தொட்ட நிகழ்ந்து வருகின்றன. கிறித்து பிறப்பதற்கு முன்னரே பெளத்தமும் சமணமும் இம்முயற்சியில் ஈடுபட்டன. அவற்றிற்கு முன்னும் பின்னுமாக தோன்றிய, கடவுளை மறுத்த அல்லது கடவுளைப் பற்றிப் பேசாத, பல்வேறு சிந்தனை மரபுகள் வைதிகத்தின் இருப்பை வினவிற்கு உட்படுத்தின.  இங்ஙனம் எழும் வைதிக எதிர்ப்பு நெருப்பை அணைப்பதற்காக இடையிடையே இராமானுசரைப் போன்ற மதச் சீர்திருத்தக்காரர்கள் தோன்றி மறைந்தார்கள்.  ‘சாதி சமயச் சழக்கை விட்டேன் அருட்சோதியைக் கண்டேனடி அக்கச்சி சோதியைக் கண்டேனடி’ எனப் பாடி சாதியை மறுத்து ஆதனியப் புரட்சியில் ஈடுபட்ட வள்ளலார் என்னும் மருதூர் இராமலிங்கரைப் போன்றவர்கள் பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டு மறைந்தார்கள். இவ்வாறான எதிர்ப்பு, சீர்திருத்தம், மறுப்பு என்னும் பல்வேறு தடைகளைத் தாண்டி, சாதி இன்று வரை உயிர்ப்போடு இருக்கிறது. இது எங்ஙனம் நிகழ்கிறது?

<
 

குலத்தூய்மைக்கு வாயிலாகக் கருதப்படும் சாதியானது உணவு, திருமணம், தொழில் ஆகிய மூக்கூறுகளிலும் உயிர்ப்போடிருக்கிறது; வாய்ப்புக் கிடைக்கும்பொழுது வெளிப்படுகிறது என்கின்றனர் குமுகாயவியலாளர்கள்.  எனவேதான் அனைவரும் பொதுவிடத்திற் கூடி உண்ணுதல், சாதி கடந்த திருமணங்கள், குலத்தொழில் முறையை மாற்றி பட்டம்/பயிற்சித் தொழில் முறை என்பன சாதியொழிப்பிற்கான முயற்சிகளாக முன்னெடுக்கப்பட்டன.  ஆனால் நடைமுறையில் அம்முயற்சிகள் பெரும் எதிர்ப்பிற்கு உள்ளாகின்றன அல்லது நீர்த்துப்போன சடங்குகளாக கொண்டாடப்படுகின்றன.

 
 

எடுத்துக்காட்டாக, உணவை ஆக்குவதிலும் அதனைச் சேர்ந்து உண்பதிலும் இருக்கும் சாதியப் பாகுபாட்டை உடைக்கும் முயற்சியாக ‘சமபந்தி போஜனம்’ என்னும் பொதுவிடத்தில் அனைவரும் கூடி உண்ணும் நிகழ்வுகள் நடத்தப்பட்டன; நடத்தப்படுகின்றன. ஆனால், சாதியக் காப்பாளர்கள் அதனை ஒரு கொண்டாட்டமாக மாற்றி, சாதியப் படிநிலையில் கீழடுக்கில் இருத்தப்பட்டவர்களால் ஆக்கப்பட்ட உணவை உண்பதைத் தவிர்த்து, மேலடுக்கிலோ இடையடுக்கிலோ இருப்பவர்களால் ஆக்கப்பட்ட உணவை அனைவரும் பகிர்ந்துண்ண வழங்கி அதன் நோக்கத்தை சிதறடிக்கிறார்கள்.  இந்துத்துவர்களால் புரட்சித்துறவி என்ன பட்டம்சூட்டப்படும் விவேகானந்தரோ, எல்லா சாதியினரும் புலாலுண்பதை கைவிட்டு, பூணூலணிந்து, காயத்திரி மந்திரம் கூறினால் பார்ப்பனராகிவிடலாம் என்கிறார். இதனை சி. சுப்பிரமணிய பாரதி தனது “ஜாதிக்குழப்பம்” என்னும் கட்டுரையில் வழிமொழிகிறார்.  இதனைத்தான் இன்றைய இந்துத்துவ அமைப்புகளும் காவி அரசும் வெவ்வேறு வடிவங்களிற் கூறுகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் அனைவரையும் சமமாகக் கருதும் புரட்சிகரமான திட்டமாக இது தோன்றம் தரும். ஆனால் இதன் உட்கிடை, புலாலுண்பவர்கள் சாதியப் படிநிலை அமைப்பில் கீழானவர்களே என்பதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி அவர்களின் உணவு இறையாண்மையை (Food Sovereignty) தகர்ப்பதே ஆகும்.
 
மெக்காலே கல்விமுறையால் தொழில்வழி சாதியம் தகர்ந்துவிட்டதைப் போன்ற தோற்றம் உருவாகி இருக்கிறது. அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. ஆனால் கோயிற்கருவறைக்குள் நுழைந்து ஆற்றும் பூசைத் தொழிலும் கழிவறைகளையும் கழிவோடைகளையும் தூய்மை செய்யும் தொழிலும்  இன்றைக்கும் சாதியின் அடிப்படையில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. பூசைத்தொழிலை குறிப்பிட்ட கல்வித்தகுதி பெற்ற எந்தச் சாதியினரும் மேற்கொள்ளலாம் என சட்டம் இருக்கிறது; அதன்படி பயிற்சிபெற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவருக்குக் கூட பூசகர் பணி இன்று வரை வழங்கப்படவில்லை; அதற்கு அவர்கள் பிறந்த சாதி தடையாக இருக்கிறது! 
 
1929ஆம் ஆண்டில் செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில், “மக்கள் தங்கள் பெயரோடு சாதி அல்லது வகுப்பைக் காட்டுவதற்காகச் சேர்க்கப்படும் பட்டங்களை விட்டுவிட வேண்டும்” என்பது உள்ளிட்ட சாதி மறுப்பு முடிவுகளை எடுத்து அவற்றைத் தமிழகமெங்கும் பரப்புரை செய்ததன் விளைவாக சாதியக் கட்டமைப்பில் பல்வேறு உடைப்புகள் உண்டாயின.  குறிப்பாக சாதி மறுப்புத் திருமணங்களும் சாதி கடந்த திருமணங்களும் நிகழ்ந்தன. அவற்றுள் பெரும்பான்மையான திருமணங்கள், சாதிய அமைப்பில் இடைநிலையில் உள்ளவர்களுக்கு இடையேயும்  மேல்நிலையில் உள்ளவர்களுக்கும் இடைநிலையில் உள்ளவர்களுக்கும் இடையிலும் நடைபெற்றன. அங்ஙனம் மணமுடித்தோரில் பெரும்பாலோர் அந்தந்த சாதியினரால் விலக்கி வைக்கப்பட்டனர்; வெறுத்து ஒதுக்கப்பட்டனர். ஆனால் அண்மைக் காலத்தில் முதல் அல்லது இரண்டாம் தலைமுறையாகக் கல்வி பெற்று, பொருளாதாரத்தில் இடைநிலையை எட்டிப்பிடிக்கிற சாதிப் படிநிலையில் கீழ்த்தட்டில் இருப்பவர்கள் சாதியை மறுத்தோ, சாதியைக் கடந்தோ திருமணம் செய்கிறபொழுது சாதியக் கலவரங்கள் வெடிக்கின்றன; சாதியமைப்பில் கீழ்த்தட்டில் இருப்பவர்கள் கொலை செய்யப்படுகின்றனர்; அவர்களின் தலைகள் துண்டிக்கப்படுகின்றன.  இங்ஙனம் சாதி சாகாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?
 
உண்மையில் ‘சாதி’ ஓர் இயற்பொருளன்று; ஒரு மனப்பாங்கு. இந்த மனப்பாங்கு இந்தியத் துணைக்கண்டத்தில் பிறந்த ஒவ்வொருவரின் ஆழ்மனதிற்குள்ளும் பதியனிடப்பட்டு இருக்கிறது.  இது தலைமுறை தலைமுறையாக மரபு, பண்பாடு, பெருமிதம், குல அடையாளம், வழிபாடு என்னும் பல்வேறு மேற்பூச்சுகளோடு கடத்தி வரப்பட்டு இருக்கிறது. இதனால்தான் இந்திய துணைக்கண்டத்திற்குள் நுழைந்த கிறித்துவம், இசுலாம் உள்ளிட்ட எல்லா மதங்களையும் சாதி ஆரத் தழுவிக்கொள்கிறது.    சாதி எதிர்ப்பாளர்கள், சாதி மறுப்பாளர்கள் மனங்களிலும்கூட அவற்றின் எச்சம் இருந்துகொண்டே இருக்கிறது. இக்கட்டான சில சூழல்களில் அது தன்னுடைய தலையைத் தூக்கி எழுகிறது; அதனை உடனே கண்டுணர்ந்து நசுக்கும் பொழுது அடங்கியொடுங்கி அடுத்த வாய்ப்பிற்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது.  இது இன்றைய காலகட்டத்தில், ‘சாதி அடையாளம், சாதி உணர்வு, சாதி வெறி’ என்னும் மூன்று வகைப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. ‘எனக்கென ஒரு சாதி அடையாளம் இருக்கிறது அதன் கட்டுதிட்டங்களுக்கு ஏற்ப நான் வாழ்வேன். அதனை இயன்ற வரை காக்க முயல்வேன். எனது கையை மீறிப்போகிற பொழுது செயலற்று இருந்துவிடுவேன்’ என்பது சாதி அடையாளம் என்னும் முதல் வகை.  ‘சாதி எனது அடையாளம்; அது எனக்கு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. எனவே அதனைப் பாதுகாப்பது எனது கடமை’ என்பது சாதி உணர்வு என்னும் இரண்டாம் வகை. சாதி அடையாளம், பெருமிதம் என்னும் உணர்வை முன்னிரு வகையினரின் மனதில் தொடர்ந்து ஊதிப்பெருக்கி அதன் வழியாக தன்னுடைய செல்வாக்கை, புகழை, ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள முனைதல் என்பது சாதிவெறி என்னும் மூன்றாம் வகை. கூர்ந்து நோக்கினால் இம்மூன்று வகையான மனநிலைக்கும் அடித்தளமாக அவர்தம் தாழ்வுமனப்பான்மை அமைந்திருக்கிறது.  இத்தாழ்வுமனப்பான்மையானது மூன்றாம் வகையினரிடம் உயர்வுமனப்பான்மையாக வெளிப்படுகிறது. 
 
எனவே, சாதி ஒழிய வேண்டுமென விரும்புகிற ஒவ்வொருவரும் அவ்வொழிப்பு வேலையை முதலில் தம்முடைய மனத்திற்குள் இருந்தே தொடங்க வேண்டியிருக்கிறது.  இரண்டாவதாக, புதுமைப்பித்தன் வேலா.இராமமூர்த்தி, பெரியாரியர்கள், பொதுவுடைமையாளர்கள் ஆகியோரைப் போன்று தன்சாதி விமர்சனத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.  இவ்வாறு இப்பாதையில் தொடர்ந்து பயணிக்கிற பொழுதே நாம் நம்முடைய சாதியினைத் துறந்து மாந்தர்களாக வாழ முடியும்; ஞால மாந்தர்களாக மலர முடியும். சுருங்கச் சொன்னால்,
“சாதியினால் மானிடர்க்குக் கலக முண்டாம்
            கலகத்தால் மானுடர்க்குக் கவலை பெருகும்
சாதியினால் மானிடர்க்குச் சாவு முண்டாம்
            சதிகளுண்டாம் தற்கொலைமுதற் கொலைக ளுண்டாம்
ஆதலினால் சாதியினைத் துறப்பீர் உலகத்தீரே
            அத்தொன்றே நீங்களுய்ய வழியாம்
சாதியினால் சகலரு மொழியக் கூடும்
            சாதியினைக் கொன்றால்தான் மனிதம் வாழும்!”

 
அம்ருதா இதழின் 2015 செப்டம்பர் மடலில் வெளிவந்த கட்டுரை.

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...