சே. இராமானுசம் : வேரிலிருந்து கிளைத்த புதுமை


சே. ராமானுஜம்
 
மெக்காலே கல்விக்கு மாற்றாக, இந்தியக் குழந்தைகள் தம் மரபார்ந்த அறிவையும் உள்ளார்ந்த திறனையும் தாமே கண்டறிந்து தமக்கான புதிய திறன்களைப் பெற்றுக்கொள்ள உதவுவதை தனது  நோக்கமாகக்கொண்ட, ‘நைதலிம்’ என்னும் காந்தியக் கல்விக்கோட்பாட்டின் அடிப்படையில் உருவான ஆதாரக்கல்வி முறையில் இயங்கிய காந்திகிராம தொடக்கப்பள்ளியில்  ஆசிரியராக 1950களின் பிற்பகுதியில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்,   நெல்லை மாவட்டத்திலுள்ள நான்குநேரியில் திருமாலியக் குடும்பம் ஒன்றில் 1935ஆம் ஆண்டில் பிறந்து, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்ட பெற்ற சே. இராமானுசம். அப்பொழுது காந்திகிராமத்தில் பணியாற்றிய, நாட்டார் பாடல்களைத் திரட்டித் தொகுத்து பின்னாளில் ஏட்டில் எழுதாக்கவிதைகள் என்னும் நூலை வெளியிட்ட அன்னகாமு, மலையாள நாடக ஆசிரியர் கோ. சங்கரபிள்ளை, கல்கத்தாவில் தாகூரின் சாந்திநிகேதனில் ஓவியக்கல்வியும் தில்லியில் ஆசிய நாடக நிறுவனத்தில் நாடகக்கல்வியும் பெற்ற எசு.பி.சீனிவாசன் ஆகியோரின் நட்பு இராமானுசத்திற்கு கிடைத்தது. விடுமுறை நாள்களிலும் ஒழிந்த நேரங்களிலும் அப்பகுதியிலுள்ள சிற்றூர்களுக்குச் சென்று நாட்டார் பாடல்களைத் திரட்டும் பணியில் அன்னகாமுவிற்கும் நுண்கலைகளைப் பயிற்றுவித்தலில் சங்கரபிள்ளை, சீனிவாசன் ஆகியோருக்கும் இராமானுசம் உதவினார்.  அச்சூழல் அவருக்கு தமிழ்மரபின் அடித்தளங்களை அறியும் ஆவலையும் நாடகத்தில் ஆர்வத்தையும் தூண்டின. 

இதன் விளைவாக 1963ஆம் ஆண்டில் புது தில்லியிலுள்ள தேசிய நாடகப்பள்ளியில் நாடகம் கற்க இராமானுசம் சேர்ந்தார்.  இந்திய நாடகக்கலையை உருவாக்க வேண்டும் என்னும் நோக்கோடு, ஏற்கனவே இயங்கிய ஆசிய நாடக நிறுவனத்தை மூடிவிட்டு, தொடங்கப்பட்ட தேசிய நாடகப் பள்ளியில் 1962ஆம் ஆண்டு முதல் இயக்குநராகப் பணியாற்றிய நாடகக்கலைஞரும் பழந்தடத்தில் நடந்து தோய்ந்துகிடந்த இந்திய நாடகக்கலைக்கு புத்துயிரூட்டியவர்களுள் ஒருவருமான  இப்ராகிம் அல்காசியிடம் இராமானுசம் நாடகம் பயின்றார். அப்பொழுது, தன்வீர்பாரதி என்பவர் எழுதிய கவிதையை ‘அந்தா யுக்’ என்னும் நாடகமாக தேசிய நாடகப்பள்ளி உருவாக்கியது.  குருச்சேத்திரப் போருக்குப் பின்னர் அனைத்து அழிவிற்கும் காரணமானவன் என கண்ணனை குற்றம்சாட்டும் காந்தாரியின் குரலாக ஒலிக்கும் அந்நாடகத்தை அல்காசி இயக்கினார். அதனை தில்லியில் உள்ள ஃபிரோசு சா கோட்லா என்னும் இடிந்த கோட்டையின் முற்றத்தில் நிகழ்த்தியது; அதுவே அப்பள்ளி முதன்முதலில் பொதுவிடத்தில் நிகழ்த்திய நாடகம் எனக் கருதப்படுகிறது. அந்நாடகத்தில் இராமானுசம் படைவீரர்களில் ஒருவராக நடித்தார்.  அதில் தொடங்கிய அவரது நாடகப் பயணம் 2015 திசம்பர் 7ஆம் நாளில் அவர் மறையும் வரை அரை நூற்றாண்டு காலம் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருந்தது.

காந்திகிராமத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்பித்து பட்டறிவுபெற்றிருந்த இராமானுசம், குழந்தைகளுக்கான நாடகத்தை சிறப்புப்பாடமாகப் பயின்று 1967ஆம் ஆண்டில் நாடகவியலில் பட்டயம் பெற்றார். அவரை சென்னையில் இருந்த புகழ்பெற்ற நாடகக்குழுவொன்று தம்மோடு பணிசெய்ய அழைத்தது.  ஆனால், இராமானுசமோ காந்திகிராம ஊரக நிறுவனம் என்னும் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நுண்கலை விரிவுரையாளராகப் பணியேற்றார். அதே ஆண்டில், சேரளத்தில் கொல்லம் மாவட்டம் சாசுதம்கொட்டாவில் 1967ஆம் ஆண்டில் சங்கரபிள்ளை ஒருங்கிணைத்த நாடகக்களரியில் பயிற்றுநராகக் கலந்துகொண்டார்.  அது அவருக்கும் மலையாள நாடக உலகிற்குமான தொடர்பினை தொடங்கிவைத்தது. 

தொடக்க காலத்தில் அன்னகாமுவிற்காக நாட்டார் பாடல்களைத் தேடித்தொகுக்கும் பணியில் ஈடுபட்டபொழுது கிடைத்த பட்டறிவும் நாட்டார் கலைகள் பற்றிய அறிமுகமும் இராமானுசத்தை தமிழ்மண்ணிற்கான நாடக மரபைத் தேடிக்கண்டடைய ஊக்குவித்தன. எனவே, காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பயின்ற ஊரக மாணவர்களிடமிருந்தும் அப்பகுதி மக்களிடமிருந்தும் அம்மண்ணின் வழக்காறுகள் பலவற்றை உள்ளீர்த்துக்கொண்டார்.

அதன் விளைவாக, 1977ஆம் ஆண்டில் காந்திகிராமத்தில் நாடகப்பட்டறை ஒன்றை எசு.பி. சீனிவாசன், என். இராதாகிருட்டிணன், வேலுசாமி ஆகியோரின் உறுதுணையோடு ஒருங்கிணைத்தார்.  அதில் கோ. சங்கரபிள்ளையும் பி.வி. காரத்தும் பயிற்றுநனர்களாக வினையாற்றினர். பின்னாளில் திறம்பட்ட நாடகர்களாக ஒளிர்ந்த, ஒளிர்கிற மு. இராமசுவாமி, செயந்தன், பறம்பை செல்வன், ஞாநி, லிங்கன், சியாமளன், கிருட்டிணமூர்த்தி, சாசகான்கனி ஆகியோரை உள்ளடக்கிய இளைஞர்கள் பலர் இதில் பயிலுநர்களாகப் பங்கேற்றனர். ந. முத்துசுவாமியின் ‘நாற்காலிக்காரர்’ நாடகத்தை இராமனுசம் இயக்கினார். அதனைத் தொடர்ந்து தேசிய நாடகப் பள்ளியின் உதவியோடு எழுபதுநாள் நாடகப்பட்டறை ஒன்றை 1978ஆம் ஆண்டில் காந்திகிராமத்தில் ஒருங்கிணைத்தார்.  இதில் கரு. அழ. குணசேகரன், கண்ணப்ப சம்பந்தன், நவநீதகிருட்டிணன், அசுவகோசு ஆகியோரை உள்ளடக்கிய பலர் பயிலுநர்களாகப் பங்கேற்றனர்.  இப்பயிலரங்கில் சி. சுப்பிரமணிய பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தை அடியொற்றி சே. இராமானுசம் இயற்றிய, ‘பிணந்தின்னும்  சாத்திரங்கள்’ என்னும் நாடகம் காரத்தின் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது;  இதுவே தமிழின் முதல் நவீனநாடகமாகக் கருதப்படுகிறது. இவ்விரு நாடகப்பட்டறைகளிலும் உருவான கலைஞர்களும் அவர்தம் மாணவர்களும் தொடர்ந்து இயங்கி தமிழில் நவீன நாடக இயக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.  சுருங்கச் சொன்னால், தமிழ்க் கவிதையுலகில் குயில், பொன்னி ஆகிய இரு இதழ்களும் ‘பாரதிதாசன் பரம்பரை’யை உருவாக்கியதைப் போல இவ்விரு நாடகப் பட்டறைகளும் தமிழ் நாடகவுலகில் ‘இராமானுசம் பரம்பரை’யை உருவாக்கின எனலாம்.

1977ஆம் ஆண்டில் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் நாடகப் பள்ளி, திருச்சூரில் பேராசிரியர் கோ. சங்கரபிள்ளையை இயக்குநராகக்கொண்டு தொடங்கப்பட்டது.  இராமானுசம் அப்பள்ளியின் உதவி இயக்குநாரக 1978ஆம் ஆண்டு தொடங்கி 1985ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். அக்காலகட்டத்தில் சங்கரபிள்ளை உள்ளிட்ட மலையாள நாடகாசிரியர்கள் பலரின் நாடகங்களையும் தமிழ் நாடங்கள் பலவற்றையும் மொழிபெயர்ப்பு நாடகங்கள் சிலவற்றையும் இயக்கினார்.  அவற்றுள் பெரும்பான்மையானவை குழந்தைகள் நாடகமாக இருந்தன.  வாய்ப்புக் கிடைக்கும்பொழுது பிற நாடகங்களையும் இயக்கினார். இருந்தபோதிலும் தமிழ்மண்ணிற்கான நாடக மரபைத் தேடிக்கண்டடையும் அவரது அவா அந்நாடகங்களில் நிறைவுறவில்லை; எனினும் அதனை நோக்கிய அவருடைய தேட்டத்திற்கு அங்கு கிடைத்த பட்டறிவு பேருதவி செய்தது.

1985ஆம் ஆண்டில் தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகத் துறை தொடங்கப்பட்டபொழுது, இராமனுசத்தை அதன் தலைவராக, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அன்றைய துணைவேந்தர் வ.ஐ.சுப்பிரமணியன் நியமித்தார்.   இராமானுசம் அப்பணியை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டு புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டார். 

அதில் ஒன்றாக, 1987ஆம் ஆண்டில் அப்பல்கலைக்கழகம் ஒருங்கிணைத்த கல்லூரி ஆசிரியர்களுக்கான இரண்டாவது பயிலரங்கின் படைப்பாக திராய் நாட்டு மகளிர் என்னும் கிரேக்க நாடகத்தை உருவாக்க விழைந்தார். ஆனால், அந்நாடகத்தின் மொழிபெயர்ப்புப் பனுவல் கிடைப்பதற்கு முன்னரே, உடன்பணியாளர் ஒருவர் மரணமடைந்தபொழுது அவருக்கு அஞ்சலி செலுத்த அந்த மரணவீட்டிற்குச் சென்றிருந்த இராமனுசம் அங்கு கேட்ட ஒப்பாரி ஓசையை அடிநாதமாகக்கொண்டு, திராய் நாட்டு மகளிர் நாடகத்தின் தாக்கத்தால் (தழுவல் அன்று) வெறியாட்டம் என்னும் நாடகத்தை இயற்றினார்.  சிங்கள இனவெறியால் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் ஈழத்துப் பெண்களின் புலம்பலாக உருவானது அந்நாடகம்.  “நாடகப் படைப்பாக்கம் என்பது நடிகர்கள் புலப்படுத்தும் கூறுகளை மேடைத்தளத்திற்குள் காலவரையரை சந்த ஆக்கத்தால் சலனங்களாக. படிமங்களாக, சைகைகளாக, செயல்களாக, உள்ளோட்டம் பெற்று ஆடையணி, ஒளி, ஒலி, இசை ஆகிய புறப்புலப்பாடுகளைப் பின்பலமாகக்கொண்டு உயிரோட்டமாக வடித்துத்தரப்படும் நிகழ்த்துதலின் முருகியல் கோலங்களாகும்” எனக்கருதிய இராமனுசம், தமிழ்ப்பெண் அன்றாடம் அணியும் ஆடை, ஒப்பாரி ஒலி, செந்நிற ஒளி, தப்பாட்ட இசை ஆகிய புறப்பாடுகளைப் பின்பலமாகக்கொண்டு அகவலோசை சந்தத்தில் அமைந்த பனுவல், சுடுகாட்டுப் படிமம், ஒயிலசைவுச் சைகை, மாரடிப்புச் செயல்கள் ஆகியவற்றால் உள்ளோட்டம் பெற்ற நாடகப் படைப்பாக்கத்தை உருவாக்கினார்; அதன் வழியாக  தமிழ்மண்ணிற்கான நாடக மரபைத் தேடிக்கண்டடைந்தார்.  

            ஆயினும் அதே பாணியில் அவர் தேங்கி நின்றுவிடவில்லை; மாறாக அண்டோரா, (1992), மெளனக்குறம் (1994), செம்பவளகாளி (1995) என தான் இயக்கிய ஒவ்வொரு நாடகத்திலும் வெவ்வேறு இணைவுகளை  உருவாக்கி, தமிழ்மண்ணிற்கான நாடக மரபின் பன்முகத்தன்மையை வெளிக்கொணர்ந்தார். இதனால் இவருடைய படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவத்தைக்கொண்டு இருந்தன. அதனைக் கண்ணுற்ற சிலர், இராமானுசம் எந்தவொரு குறிப்பிட்ட சிந்தனைப்பள்ளியையும் சாராதவராகவும் தனக்கென ஒரு நாடகப்பாணியை உருவாக்காதவராகவும் இருக்கின்றார் எனக் கூறினர். அதற்கு விடையாக, “எனது சிந்தனையானது எந்தவொரு வகைமாதிரிக்குள்ளும் அல்லது வடிவத்திற்குள்ளும் சிறைப்படவில்லை. புத்தாக்க முறை அல்லது வடிவு என்பதே நாடகத்தில் எனது அணுகுமுறையை வேறுபடுத்திக்காட்டும் கூறாகும்” என இராமனுசம் எடுத்துரைத்தார்.  இவரது இந்த அணுகுமுறை நவீனம் பற்றிய அவரது கருத்தாக்கத்தை எடுத்துரைப்பதாக அமைகிறது.  அதாவது எந்தவொரு வடிவமும் ஒருமுறை நிகழ்த்தப்பட்டுவிட்ட பின்னர், அது தனது நவீனத்தன்மையை (புதுமையை) இழந்துவிடுவதாக அவர் கருதினாரோ என எண்ணத்தோன்றுகிறது.

இராமனுசம் தனக்கென ஒரு பாணி அல்லது முருகியல் முத்திரை தன்னால் உருவாக்கப்படவில்லை; அங்ஙனம் உருவாக்க விரும்பவுமில்லையெனக் கூறினாலும் அவருடைய நாடகங்களின் அடிச்சரடாக தமிழ்மக்கள் தம் உணர்வுகளை வெளிப்படுத்தும்பொழுதும் சடங்குளை நிகழ்த்தும்பொழுதும் வினைகளை ஆற்றும்பொழுதும் மேலெழும் ஒலிகளை தனது நாடகங்களின் புறப்பாடுகளில் ஒன்றாகப் பயன்படுத்தி இருப்பதை கவனிக்க இயலுகிறது.

அதேபோல மண்ணின் மக்களுக்கு மிகவும் நெருக்கமான நீலம், சிவப்பு, மஞ்சள் ஆகிய முதன்மை வண்ணங்களையும் இவற்றின் இணைவில் உருவாகும் பச்சை, ஆரஞ்சு முதலிய ஈரிணை வண்ணங்களையுமே தனது நாடகங்களில் அதிகம் பயன்படுத்தி இருக்கிறார். இவ்விருகூறுகளும் தந்த பின்வலிமையால் நிகழ்வெளியில் இயங்கும் நடிகர்களின் நடிப்பால் உள்ளோட்டம் பெற்று பார்வையாளர்களின் விழிகளின் வழியே அவருள் நுழைந்து உணர்வலைகளை எழுப்பி நிகழ்த்தப்படும் நாடகத்திற்கு உயிரோட்டத்தை நல்குகின்றனவோ என கருதவேண்டியிருக்கிறது.

            இவ்வாறு தமிழ்மண்ணின் மரபான ஒலி, வண்ணம், உடல்மொழி ஆகியவற்றின் வேரிலிருந்து தனது ஒவ்வொரு நாடகத்திலும் புதுமைகளைக் கிளைக்கச் செய்த இராமனுசம் இன்று நம்மிடமில்லை; ஆனால், அவர் உருவாக்கிய நாடகப் பரம்பரையினர் தமிழகத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் ஓரிடத்தில் தேங்கிவிடாமல் தமிழ்நாடகத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்த்திக்கொண்டு போவதும் அம்முயற்சிகளுக்கு தமிழ்மக்களும் தமிழக அரசும் துணையாகவும் ஊக்கம்தருபவர்களாகவும் இருப்பதே அவருக்குச் செய்யும் அஞ்சலி ஆகும். 

 
அம்ருதா 2016 சனவரி இதழில் இக்கட்டுரை

No comments:

Post a Comment

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...