1784 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் அரண்மனையின் முகப்புத் தோற்றம் |
1702ஆம் ஆண்டில்
நரசப்பய்யன் தலைமையில் நிகழ்ந்த இராணிமங்கம்மாள் படையெடுப்பு, 1709, 1771ஆம் ஆண்டுகளில்
நிகழ்ந்த தஞ்சை மராட்டியப் படையெடுப்புகள், 1772ஆம் ஆண்டில் ஆற்காடு நவாப்பும் ஆங்கிலேயரும்
கூட்டாக மேற்கொண்ட படையெடுப்பு ஆகியவற்றிக்குப் பின்னரும் பெரும் பாதிப்பின்றியே இக்கோட்டை
இருந்தது. எனினும், கிளர்ச்சிக்காரர்களின் மறைவிடமாக தமிழகத்தில் உள்ள கோட்டைகள் மாறிவிடக்கூடாது
என்று அஞ்சிய ஆங்கிலேயர்கள் அவற்றைத் தகர்த்துவிட
1803ஆம் ஆண்டில் முடிவு செய்தனர். அதன்படி, 1803-04ஆம் ஆண்டில் இக்கோட்டை தகர்க்கப்பட்டது;
ஆனால் ஆங்கிலேயருக்கு அடங்கிய கப்பம்கட்டும் பெருங்நிலக்கிழாராக (சமீந்தார்) இருக்க,
முத்துராமலிங்க விசயரகுநாத சேதுபதிக்கு மாற்றாந்தந்தை மகளான மங்கேளேசுவரி நாச்சியார்
ஒப்புக்கொண்டதால் அரண்மனை இடிக்கப்படவில்லை.
இராமலிங்க
விலாசம்:
இராமநாதபுரம் அரண்மனை - ஆங்கிலேயர் வரைந்த ஓவியம் |
முதன்மைச் சாலையிலிருந்து கலைநயம்மிக்க நுழைவாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தால்
திறந்த வெளி முற்றம். அதில் கிழக்கு நோக்கி அமைந்த, உயர்ந்த மேடை. அதன்மீது இரண்டு
முகப்புத் தூண்களை உடைய பெரிய கட்டிடம். இதுதான் கிழவன் சேதுபதி முதல் முத்துராமலிங்க
விசயரகுநாத சேதுபதி வரை சேதுபதிகள் பதின்மர் கொலுவீற்றிருந்து அரசு செலுத்திய அத்தானி மண்டபமான
இராமலிங்க விலாசம்.
இடையில் 03.06.1772 முதல் 07.03.1781 வரை ஆர்க்காடு நவாப்பின் பிரதிநிதியாக
ஆங்கிலத் தளபதி மார்ட்டினும் 8.2.1795 முதல் 21.02.1803 வரை கிழக்கிந்திய கம்பெனியின்
தண்டலர்களான பவுனி, லாண்டன், காலின்சு சாக்சன், லூசிங்டன் ஆகியோரும் இம்மண்டபத்திலிருந்து
தம் பணிகளை ஆற்றினர். இக்காலப்பகுதியில், இம்மண்டபத்தின்
மாடியில் உள்ள அறையில் தண்டலரான சாக்சனை பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான வீரபாண்டிய
கட்டபெம்மன் 1798 செப்டம்பர் 10ஆம் நாள் பேட்டி கண்டார்.
21.01.1803 முதல் இந்தியா விடுதலைபெற்ற நாளான 15.8.1947 வரை ஆங்கிலேயருக்கு
அடங்கிய பெருநிலக்கிழார்களாக (சமீந்தார்கள்) ஒன்பது சேதுபதிகள் இம்மண்டபத்திலிருந்து ஆட்சி செய்தனர். இக்காலப்
பகுதியில், இங்கு நாடகவியல் என்னும் நூலை இயற்றிய பரிதிமாற்கலைஞர் தனது கலாவதி என்னும்
நாடகத்தை 1901ஆம் ஆண்டில் அரங்கேற்றினார். அமெரிக்கா சென்று திரும்பிய விவேகானந்தருக்கு
1897 சனவரி 27ஆம் நாள் வரவேற்பு வழங்கப்பட்டது. பெரும்புலவர்களான மு.இராகவர், இரா.இராகவர்
ஆகியோரைப் போன்ற தமிழறிஞர்களும் புலவர்களும் தம் தமிழ்த் தொண்டை ஆற்றினர்.
1947ஆம் ஆண்டு முதல் 1978ஆம் ஆண்டுவரை சேதுபதிகள் குடும்பத்தினரின் சொத்தாக
இருந்த இம்மாளிகை, 1978ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை தமிழ்நாட்டரசின் தொல்லியல் துறையின்
பாதுகாப்பில் இருக்கிறது. அத்துறையின் சார்பில்
அருங்காட்சியகம் ஒன்றும் இதனுள் இடம் பெற்றிருக்கிறது.
அமைப்பு
இம்மாளிகை கிழக்கு மேற்காக 153 அடி நீளமும் வடக்கு தெற்காக 65 அடி அகலமும் கொண்ட
12 அடி உயரமுள்ள செவ்வக மேடையின் மீது கருங்கல், செங்கல், சுண்ணாம்பு ஆகியவற்றைக்கொண்டு
14 அடி உயர மண்டபம் கட்டபட்டு இருக்கிறது. இது 1790க்கும் 1793க்கும் இடைப்பட்ட காலத்தில்
கட்டப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது மகாமண்டபம், அர்த்த மண்டபம் என்னும்
முன்மண்டபம், கருவறை என்னும் அகமண்டபம், அதன் மீது ஓர் அறை, அவ்வறைக்கு முன்னே திறந்தவெளி
முற்றம், அறைக்கு மேலே ஓர் இருக்கை என ஒரு கோவிலின் அமைப்பில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
தரையில் இருந்து மண்டபத்திற்குள் செல்ல 16 நீண்ட படிகள். காலவோட்டத்தில் சாலையும்
முற்றமும் மேடாகிவிட்டதால் 7 படிகள் மண்ணில் மூழ்கிவிட, தற்பொழுது 9 படிகளே கண்ணிற்படுகின்றன.
அவற்றின் இரண்டு புறமும் அழகிய கல்யாளிகள் இருக்கின்றன. அவை மண்டபத்தைத் தொடும் இடத்தில் இரண்டு உயரமான வட்டத்
தூண்கள் நிற்கின்றன. இவற்றிற்கு நடுவில் மண்டப
வாயில். தூண்களின் வடக்கிலும் தெற்கிலும் ஒரு பாக இடைவெளியில் மண்டபத்தின் கிழக்குப்புறச்
சுவர்கள். வாயிலைக் கடந்ததும் 24 வட்டத்தூண்களோடு
மகாமண்டபம் அமைந்திருக்கிறது. அவற்றின் மேற்புறத்தை
அரைவட்ட வளைவுகள் இணைக்கின்றன. மதுரை திருமலை
நாயக்கர் அரண்மனையை நினைவூட்டும் இம்மண்டபத்தின் தெற்கு, வடக்கு சுவர்களில் பக்கவாட்டு
வாயில்கள் இருக்கின்றன. தென்மேற்கு மூலையில் சேதுபதிகளின் திருமுழுக்கு மேடை அமைந்திருக்கிறது.
மகாமண்டபத்தின் மேற்கே ஐந்து படிகள் ஏறினால் நான்கடி உயர மேடையில் முன் மண்டபம்
அமைந்திருக்கிறது. அதன் கூரையை 16 கருங்கற் தூண்கள் தங்கி நிற்கின்றன. இம்மண்டத்தின்
தெற்குச் சுவரில் ஒரு காலதர் இருக்கிறது. தென்மேற்கு
மூலையின் உச்சியில் சேதுபதிகள் ஒன்பதின்மரின் சிலைகள் இருக்கின்றன. இவை உடையான் சேதுபதி என்னும் சடைக்கன் சேதுபதி தொடங்கி
முத்துவிசய ரகுநாத சேதுபதி வரையிலான ஒன்பதின்மரின் சிலைகளாக இருக்கலாம் எனக் கருத்தப்படுகிறது.
முன் மண்டபத்திற்கு மேற்கே 12 கற்தூண்களாலான கருவறை என்னும் அக மண்டபம் அமைந்திருக்கிறது.
இதனை தற்பொழுது இராமர்பீடம் என அழைக்கின்றனர்.
அவ்வறையின் வடகிழக்கில் உள்ள படிகளின் வழியே மேலே ஏறினால் 12 கற்தூண்களை உடைய
மாடி அறை இருக்கிறது. மாடியறைக்கு முன்னர்
திறந்த வெளி முற்றம். அறைக்கு மேலே உள்ள மாடியில்
இருக்கை ஒன்று இருக்கிறது. அங்கிருந்து பார்த்தால் நகரின் முழுத்தோற்றமும் தெரியும்.
ஓவியங்கள்
இராமலிங்க விலாசத்தின் உட்புறச் சுவர்களிலும் கூரைகளிலும் உள்ள ஓவியங்களை, சேது
நாட்டை 1713ஆம் ஆண்டு முதல் 1725 ஆம் ஆண்டு வரை ஆண்ட முத்துவிஜய ரகுநாத சேதுபதியின்
ஆட்சிக்காலத்தில் வரைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது; இவருடைய உருவமே இவ்வோதியங்களில்
உள்ள சேதுபதியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவ்வோவியங்கள் மலர்ச்சாறு, இலைச்சாறு,
கரி, மஞ்சள் ஆகியவற்றைக்கொண்டு உருவாக்கப்பட்ட இயற்கை வண்ணங்களால் வரையப்பட்டு இருக்கின்றன.
இவற்றை சேதுபதியின் அக வாழ்வு ஓவியங்கள், புற வாழ்வு ஓவியங்கள், இறையுணர்வு ஓவியங்கள்
எனப் பகுப்பர்.
மகாமண்டபத்தின் இடதுபுற கிழக்குச் சுவரில்
சேதுபதிக்கும் தஞ்சை மராட்டிய மன்னருக்கும் இடையே அறந்தாங்கிக் கோட்டைக்கருகில் நிகழ்ந்த
போர்க்காட்சிகள் ஓவியமாக்கப்பட்டு இருக்கின்றன. வலதுபுற கிழக்குச்சுவரில் முத்துவிஜய
ரெகுநாத சேதுபதியின் உருவம் வரையப்பட்டு இருக்கிறது. தென்சுவரின் கிழக்குப் பகுதியில் சேதுபதி தன் மனைவியரோடு
கொலுவீற்றிருத்தல், நகருலா, அரண்மனைப் பணியாளர்கள் அன்பளிப்புத் தட்டை ஏந்திச்செல்வது,
சேதுபதி மன்னர் தனது மடியில் சிறுமி ஒருத்தியை வைத்துக்கொண்டு ஆங்கிலேயர் ஒருவரிடம்
உரையாடும் காட்சியும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றிற்கு அடுத்து சைவ சமயத்தோடு
தொடர்புடைய காட்சிகளான திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில், தருகாவனத்தில் சிவனின் பிச்சாண்டித் தோற்றம், முனிவர்தம் மனைவியர்கள்,
சிவனின் ஊர்த்தாண்டவம் ஆகியன வரையப்பட்டு உள்ளன.
மகாமண்டபத்தின் மேற்குச்சுவர், வடக்குச்சுவர், கிழக்குச்சுவரின் வலப்புறம்,
அர்த்த மண்டபத்தின் கிழக்குச்சுவரின் இடப்புறம், தென்சுவர், மேற்குச்சுவர் ஆகிய பகுதியில்
இடவலமாக கண்ணனின் வரலாற்றைக் கூறும் பாகவத ஓவியங்கள் வரையப்பட்டு இருக்கின்றன. மகாமண்டபத்தின்
வடக்குச் சுவரில் திருமாலின் பத்துப் பிறப்புகளும் தனித்தனி ஓவியங்களாக வரையப்பட்டு
உள்ளன. அவற்றின் கீழே தமிழில் காட்சிவிளக்கம் எழுதப்பட்டு இருக்கிறது. தூண்களுக்கு
இடையிலான வில்வளைவுகளிலும் வேட்டையாடுதல், மீன்கள் நிறைந்த குளம், படுத்திருக்கும்
புலவரின் கால்களை ஒருவர் வருடிவிடுதல் ஆகிய அமைந்துள்ளன.
அக மண்டபத்தின் மேற்குச்சுவரின் இடப்புறம் தொடங்கி வடக்குச்சுவர், கிழக்குச்சுவர்,
தெற்குச்சுவர், மேற்குச் சுவரின் வலப்புறம் வரை
இடமிருந்து வலமாக தெலுங்கு இராமயாணத்தின் பாலகாண்டக் காட்சிகள் ஓவியமாக வரையப்பட்டு
உள்ளன. அவ்வோவியங்களின் அடியில் தமிழிலும் சில இடங்களில் தெலுங்கிலும் காட்சிவிளக்கம்
எழுதப்பட்டு இருக்கிறது. மேற்கூரையின் வில்வளைவுகளில்
சேதுபதியும் அவர் மனைவியும் மன்மதனும் ரதியுமாகக் காட்சியளித்தல் என்பன உள்ளிட்ட அந்தப்புரக்
காட்சிகள், தன் குலதெய்வமான இராசராசேசுவரியிடம் இருந்து சேதுபதி செங்கோல் பெறுதல்,
திருமாலின் அருளைப் பெறுதல், முதியவர் ஒருவர் இராமாயணம் படிக்க சேதுபதி அதனைக் கேட்டல்,
முத்து விசய ரெகுநாத சேதுபதிக்கு மதுரை மன்னர் முத்துவிசயரங்க சொக்கநாத நாயக்கர் பட்டாடை
அணிவித்தல், சேதுபதிக்கு பரிசு வழங்க ஐரேப்பியர்கள் அன்பளிப்புத் தட்டுகளை ஏந்திவருதல்,
சேதுபதியின் நகருலா, பல்வேறு செல்வங்கள், அயிராவதம், சிந்தாமணி, பத்ரபீடம், கற்பகமரம்,
காமதேனு, எண்திசைக் காவலர்களின் உருவங்கள்,
அரசபிராட்டி மங்கலப்பொருள்களான கண்ணாடி, கிளி ஆகியவற்றைப் பார்த்தல், மன்னர் அரண்மனைப்
பெண்களுடன் வில்லைத்தாங்கி பறவை வேட்டைக்குச் செல்லல், பெண்கள் நீண்ட கழிகளுடன் நிற்றல்,
அரசவையில் பெண்கள் நடனம்மாடுதல் ஆகிய ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.
மாடி அறைச் சுவர்களில் சேதுபதி மன்னர் இசையைக் கேட்டும் நடனத்தைக் கண்டும் இன்புறுதல்,
மனைவியரோடு கூடி மகிழ்தல், நீராடுதல், நடனமாடுதல் ஆகிய காட்சிகள் வரையப்பட்டு உள்ளன. மேலும் கிளி, அன்னம், யானை, குதிரை ஆகிய போல பெண்கள்
சிலர் ஒன்றிணைந்து நிற்க, அவர்கள் மீது சேதுபதியும் அவர் மனைவியும் மன்மதனும் ரதியும்
போல மலர்கணைகளோடு நிற்கும் காட்சிகளும் பல்வேறு வடிவங்கள்கொண்ட மதுக்குடுவைகளின் நடுவே
சேதுபதியும் அவர் மனைவியும் அமர்ந்திருக்கும் காட்சியும் வேட்டைக் காட்சியும் இடம்
பெற்றுள்ளன.
மொகலாய ஓவியங்களிலும் நாயக்க ஓவியங்களிலும் காணப்படுவது போன்ற ஆடை, அணிகலன்களும் ஒப்பனைகளும்
இவ்வோவியங்களில் முதன்மை பெற்றுள்ளன. எனவே, இவ்வோவியங்கள் தமிழர்கள் மீது நடந்தப்பட்ட
பண்பாட்டுப் படையெடுப்புகளின் தாக்கத்தை பேசாமல் பேசுகின்ற சாட்சிகளாக இருக்கின்றன.
கவனிக்க!
இச்சாட்சிகளை சிறுகீறல் கூட விழாமல் பாதுகாக்க வேண்டிய தொல்லியல் துறையோ, பராமரிப்பு
என்கிற பெயரால் இவ்வோவியங்கள் சிலவற்றில் துளையிட்டு விட்டங்களைச் செருகியிருக்கிறது;
கூரையில் பூசிய சுண்ணாம்பு வண்ணங்கள் ஓவியங்களிற்பட்டு அவற்றைச் சிதைத்திருக்கின்றன.
இவை முழுமையாக சிதைவதற்கு முன்னர் அவற்றைப்
படியெடுத்து நூலாகவும் காணொளியாகவும் ஆவணப்படுத்த வேண்டும். பின்னர் அவற்றை மீட்டுருவாக்கம் செய்தல் வேண்டும். கலையையும் தமிழையும் வளர்த்த இம்மண்டபத்தில், போதிய
ஊழியர்கள் இல்லாததால், தூசும் குப்பையும் மண்டிக் கிடக்கின்றன. வரலாற்றையும் கலையையும்
அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடு இங்கு வருவோருக்கு அவற்றை விளக்கமாக அன்று, சுருக்கமாக
எடுத்துரைப்பதற்குக்கூட ஆள்கள் இல்லை. ‘வரலாறு,
கடந்த காலத்தின் பதிவு மற்றுமன்று; வருங்காலத்திற்கான வழிகாட்டியும் கூட’ என்பதனை உணர்ந்து
உரிய நடவடிக்கைகளை தொல்லியல் துறை மேற்கொள்ள வேண்டும்.
இந்த இராமலிங்க விலாசத்திற்கு வடக்கே கிழவன் சேதுபதி காலத்தில் நீச்சல் குளமொன்று
இருந்திருக்கிறது. பின்னர் அது மூடப்பட்டு, பாசுகர சேதுபதி காலத்தில் சிறிய விலங்குக்
காட்சிசாலை இருந்திருக்கிறது. பின்னர் அது அகற்றப்பட்டு, பூப்பந்தாட்டத் திடலாக பயன்பட்டு
இருக்கிறது. தற்பொழுது அவ்விடம் குடியிருப்பாக மாறியிருக்கிறது.
இராசராசேசுவரி
அம்மன் கோவில்
இராமலிங்க விலாசத்திற்கு தெற்கே, இந்த அரண்மனையின் நடுநாயகமாக சேதுபதிகள் அன்றாடம்
வணங்கிய இராசராசேசுவரி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. 1659ஆம் ஆண்டில் மதுரையின்
மீது படையெடுத்துவந்த மைசூர் படைகளை திருமலை நாயக்கரின் வேண்டுகோளுக்கு இணங்க ரெகுநாத
சேதுபதி திண்டுக்கல்லுக்கு அருகிலுள்ள அம்மையநாயக்கனூருக்கு
அருகில் எதிர்கொண்டு தாக்கி, அவர்களை கோவை வரை துரத்திச் சென்று விரட்டியடித்தார்.
அதனைப் பாராட்டும்விதமாக, பல பொருள்களையும் திருச்சுழியல், பள்ளிமடம், திருப்புவனம்
ஆகிய பகுதிகளையும் தனியரசுரிமையையும் இராசராசேசுவரி அம்மனுக்கு மதுரையில் நவராத்திரி
விழாவெடுப்பதைப் போலவே சேதுநாட்டில் புரட்டாசி திங்களில் பத்து நாள்கள் நவராத்திரி
விழாவெடுக்கும் உரிமையையும் ரெகுநாத சேதுபதிக்கு திருமலை நாயக்கர் வழங்கினார். அங்ஙனம்
விழாவெடுப்பதற்கு வாய்ப்பாக இராசராசேசுவரி அம்மனின் பொற்சிலை ஒன்றினையும் வழங்கினார்.
அச்சிலையை இராமநாதபுரம் கோட்டையின் நடுப்புள்ளியில் ரெகுநாத சேதுபதி நிறுவி, கோயிலமைத்தார்.
அந்த அம்மனையே தன்னுடைய குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு நாள்தோறும் காலையில் அதனை வணங்கிவந்தார்.
அவ்வழக்கை அவருக்கு பின்னர்வந்த அனைத்து சேதுபதிகளும் பின்பற்றினர். இவ்விழா 1865ஆம்
ஆண்டில் பெருங்நிலக்கிழார் துரைராசா என்ற முத்துராமலிங்க சேதுபதியால் கலைவிழாவாக மாற்றப்பட்டது.
இவ்விழாவில் தமிழ்ப் புலவர்களும் வடமொழி வித்துவான்களும் இசைக் கலைஞர்களும் நாட்டியக்காரர்களும்
சிறப்பிக்கப்பட்டனர். இன்றும் அத்திருவிழா ஆண்டுதோறும் கொண்டாட்டப்பட்டு வருகிறது.
நுழைவாயில்
இராசராசேசுவரி அம்மன் கோவிலுக்கு தெற்கே, அரண்மனைத் திடலுக்கு மேற்கே அரண்மனையின்
நுழைவாயில் அமைந்திருக்கிறது. செவ்வக வடிவில் நீண்டுயர்ந்த இந்நுழைவாயிலே 1784ஆம் ஆண்டில்
மெக்கன்சி சேகரித்த ஓவியத்திலும் 1868ஆம் ஆண்டில் எட்மண்டு டேவிடு இலையன் (Edmand David Lyon) எடுத்த ஒளிப்படத்திலும் இடம்பெற்று இருக்கிறது. அந்த நுழைவாயிலை மறைத்து தற்பொழுது கடைகளும் வணிக
வளாகங்களும் பெருகிவிட்டன. நுழைவாயிற் கட்டிடடத்திலுள்ள அறைகளில் அரசு அலுவலங்கள் இயங்குகின்றன.
நுழைவாயிலைக் கடந்ததும் ஒரு பெரிய முற்றம். எதிரே யானைக் கொட்டாரம். வலது பக்கம்
மற்றொரு நுழைவுவாயில். இடதுபக்கம் மணிவாயில். இவ்வாளகம், இராமலிங்க விலாசம், இராசசேசுவரி அம்மன்
கோவில் ஆகிய பகுதிகளே அனைவரும் புழங்கும் பொதுவெளியாக இருக்கின்றன. அரண்மனையின் பிறபகுதிகள்
அனைத்தும் சேதுபதி குடும்பத்தின் தனிவெளியாக இருக்கின்றன.
அந்தப்புரமும் பிறவும்
இராமலிங்க விலாசத்திற்கும் இராசசேசுவரி அம்மன் கோவிலுக்கும் இடையிலுள்ள பாதையைக்
கடந்தால் ஆயுதக்கிடங்கு என்னும் செவ்வக வடிவக் கட்டிடம் இருக்கிறது. இதற்கு தெற்கேதான்
மணிவாயில் அமைந்திருக்கிறது. ஆயுதக்கிடங்கிற்கு மேற்கே, கல்யாண மண்டபமும் அதற்கு எதிரே
சரசுவதி மகாலும் அமைந்திருக்கின்றன. கல்யாண மண்டபத்திற்கு மேற்கே மூன்று முற்றங்களையும்
அவற்றையொட்டி கட்டடங்களையும் உடைய அந்தப்புரம், அரண்மனையின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது.
இது ஏறத்தாழ அரண்மனையின் பரப்பளவில் பாதியளவிற்கு விரிந்திருக்கிறது.
சங்கர விலாசம்
அரண்மனையின் வடமேற்கு மூலையில் சங்கர விலாசம் அமைந்திருக்கிறது. 1772ஆம் ஆண்டில்
நவாப்பின் பிரதிநிதியாக இராமநாதபுரத்திற்கு நியமிக்கப்பட்ட மார்ட்டின் இந்த மாளிகையில்தான்
தங்கியிருந்தார். அதனால் இதனை ‘கர்னல் மாளிகை’ என மக்கள் அழைக்கின்றனர். இந்த மாளிகையை பாசுகர சேதுபதி தனது ஓய்வு மாளிகையாகப்
பயன்படுத்தியிருக்கிறார்.
நிரவி மாளிகை
இராமலிங்க விலாசத்திற்கு எதிரே தெற்கு வடக்காக நிரவி மாளிகை என்னும் விருந்தினர்
மாளிகை அமைந்திருக்கிறது. அதில் தற்பொழுது
கல்வி நிலையங்களும் வணிக வாளகமும் இயங்கிவருகின்றன.
அண்மையில் கலைவரலாற்றுக் கண்ணோட்டத்தில் தென்னகத்திலுள்ள பிற அரண்மனைகளோடு இந்த
அரண்மனையை ஒப்பிட்டு ஆய்வுசெய்த செனிபர் கவோசு,
இவ்வரண்மனையே முழுமையான கட்டமைப்போடு இருப்பதாகக் கூறியிருக்கிறார். எனினும் அரண்மனையைச்
சுற்றி உருவாகிவரும் கடைகளாலும் அரண்மனைக் கட்டிடங்களில் குடியேறும் அரசு அலுவலங்களுக்காக
செய்யப்படும் மாற்றங்களாலும் அதன் தொன்மைச் சுவடுகள் மெல்லமெல்ல மறைந்து வருகின்றன.
2016 த இந்து - தமிழ் - பொங்கல் மலரில் வெளிவந்த கட்டுரை
No comments:
Post a Comment