கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன்
(நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ)

“இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவையு"ம் கலையில்லை; அவை வெறும் பரப்புரைகள்” என்று இடையறாது சொல்லிவந்த வெங்கட்சாமிநாதன், இடதுசாரி மேடையொன்றில் அரங்கேறிக்கொண்டிருந்த கலைநிகழ்ச்சிகளை வறுத்த நிலக்கடலையை கொரித்தவாறே கவனித்துக்கொண்டு இருந்தார். அங்கு அரங்கேறிய சில நிகழ்வுகள் அவரின் கருத்திற்கு வலுச்சேர்ப்பனவாக இருந்தன. அவர் சலிப்படைந்து, ‘சரி கிளம்பலாம்’ என எண்ணியபொழுது கறுத்த, குள்ளமான, ஒல்லியான 25வயதே மதிக்கத்தக்க, நகரத்துப் பகட்டுகள் எதுவுமில்லாத இளைஞர் ஒருவர் மேடையேறி ஒலிவாங்கியை எடுத்து பாடத்தொடங்கினார். கணீரென்ற அவரது குரலொலியும் பாடலும் இசையும் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமான வெ.சா.வின் செவியைப்பிடித்து இழுத்து நிறுத்தின. கையிலிருந்த நிலக்கடலை தீர்ந்த பின்னரும் அவர் அங்கேயே நின்று அந்த இளைஞரின் இசைக்கடலுக்குள் மூழ்கிப்போனார். அந்த இசைக்குள் பொதிந்துவந்த ஆதிக்க எதிர்ப்பு, ஒடுக்கப்பட்டோர் எழுச்சி ஆகிய பாடுபொருள்கள் வலதுசாரியான வெ.சா.வுக்கு உவப்பானதாக இருந்திருக்காது; ஆனாலும் அவரால் அந்த இளைஞரின் கலகத்தமிழிசையை, ‘இது கலையன்று; வெறும் பரப்புரையே’ எனப் புறந்தள்ள முடியவில்லை.  எனவே, அந்த இளைஞரைப் பற்றியும் அவரது கலைத்திறனைப் பற்றியும் கட்டுரை எழுத வேண்டிய கட்டாயம் வெ.சா.விற்கு ஏற்பட்டது.

இதேபோல இன்னொரு  இடதுசாரி மேடையை தனது கணீரென்ற குரலாலும் உண்மையான நாட்டாரிசையாலும் அந்த இளைஞர் கட்டிப்போட்டதைக் கேட்டும் கண்டும் சுவைத்த எழுத்தாளர் பொன்னீலன், ‘நாக்குச் சிவந்த குயில்’ என்னும் தலைப்பில் அந்த இளைஞரின் சிவந்த சிந்தனையையும் மண்ணின் மணம் கமழும் கலையையும் பாராட்டி எழுதி, அவரை ஊக்குவித்தார். 

இங்ஙனம் வலதுசாரியான வெ.சா.வையும் இடதுசாரியான பொன்னீலனையும் ஈர்த்த அந்த ‘கணீர்’ குரலுக்குச் சொந்தக்காரரான இளைஞர், இளையான்குடிக்கு அருகிலுள்ள மாறந்தை என்னும் சிற்றூரில் பிறந்து தன்னுடைய அறிவாலும் திறனாலும் தகுதியாலும் உயர்ந்து பாண்டிச்சேரி நடுவக பல்கலைக் கழகத்தின் புலத்தலைவராகவும் உலகத் தமிழராய்ச்சி நிறுவன இயக்குநராகவும் திகழ்ந்த, திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராகத் திகழ விழைந்த கரு. அழ. குணசேரனார் ஆவார்.  

அமைச்சராக இருந்த கக்கனுக்கு சம்பந்த வழியில்  நெருங்கிய உறவினராக இருந்தும் தன்னையும் தன்னுழைப்பையும் மட்டுமே நம்பி வாழ்ந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்து, எண்ணற்ற சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு இளையான்குடி கல்லூரியில் புகுமுக வகுப்பில் தேறி, சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை வகுப்பில் சேர்ந்த குணசேகரனுக்கு கவிஞர் மீரா, எழுத்தாளர் நா. தர்மராசன் போன்ற சிவப்புச் சிந்தனையில் ஊறியவர்கள் பேராசிரியர்களாக வாய்த்தார்கள்.   இதன் விளைவாக, இயல்பிலேயே தனக்கு அமைந்த இசைத்திறனால் நாட்டார் பாடல்களை பாடித்திரிந்த தும்பியான குணசேகரனின் நாக்கும் சிந்தனையும் சிவக்கத் தொடங்கின. அங்கு படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே திருச்சியில் உள்ள அகில இந்திய வானொலியில் நாட்டார் பாடல்களைத் தொடர்ந்து பாடும் வாய்ப்புகளைப் பெற்றார். அது அவருக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்தது.

பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்ற குணசேகரன், மதுரை தியாகராசர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழிலக்கியம் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார்.  அதனைத் தொடர்ந்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நாட்டாரிசை பற்றி, முனைவர் ம. நவநீதகிருட்டிணனை வழிகாட்டியாகக்கொண்டு, முனைவர் பட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்டார்.  அதற்காக ஒற்றையடிப்பாதை வழியாக மட்டுமே சென்றடையக்கூடிய சிற்றூர்கள் தொடங்கி மதுரை நகருக்குள்ளிருக்கும் விளிம்புநிலையினரின் குடியிருப்புகள் வரை சுற்றியலைந்து நாட்டார் பாடல்களைச் சேகரித்தார்.   

அதேவேளையில் நாட்டார் இசைக்கலைஞர்களை ஒருங்கிணைத்து ‘தன்னானே’ என்னும் நாட்டாரிசைக் குழுவை உருவாக்கி நிகழ்ச்சிகளை வழங்கத் தொடங்கினார். அந்நிகழ்ச்சிகளின் வழியாக கோட்டைச்சாமி, அழகிரிசாமி, கொள்ளங்குடி கருப்பாயி, முனியம்மா ஆகியோரைப் போன்ற மெய்யான நாட்டாரிசைக் கலைஞர்கள் வெளிச்சத்திற்கு வந்தார்கள்.

ஒருபுறம் முனைவர் பட்ட ஆய்வு, மறுபுறம் இசைநிகழ்ச்சி என பறந்துகொண்டிருந்த குணசேகரன், கரகாட்டம் போன்ற நாட்டார் கலைகளைப் பற்றி நூல்களும் எழுதத் தொடங்கினார்.  அவற்றுள் ஒருநூலில், அந்நூலாசிரியரின் பெயராக குணசேகரன் தன் பெயரோடு ஒரு பேராசிரியரின் பெயரையும் இணைக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறார். அந்நூலை தனது பொறுப்பிலிருந்த அகரம் அச்சகத்தில் அச்சிட்டுக்கொடுத்த கவிஞர் மீரா, இனிமேல் குணசேகரன் இதுபோன்ற அறிவுச்சுரண்டலுக்கு ஆளாகக் கூடாது என அறிவுறுத்தி இருக்கிறார்.  அவ்வறிவுறுத்தலை குணசேகரன் தனது இறுதிநாள் வரை பின்பற்றத் தவறவில்லை.

இடையில் மதுரையில் கண்ணப்பதம்பிரான் ஒருங்கிணைத்த கூத்துப் பயிலரங்கிலும் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நவீன நாடகத் தந்தையான சே.இராமானுஜம் ஒருங்கிணைத்த நாடகப் பயிற்சிப்பட்டறையிலும் சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள சோழமண்டலத்தில் ஒருங்கிணைப்பட்ட பாதல் சர்க்காரின் மூன்றாம் அரங்கப் பயிலரங்கிலும் குணசேகரன் கலந்துகொண்டு நாடகப் பயிற்சி பெற்றார். இவற்றுள் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பயிலரங்க நிகழ்வை ஆவணப்படுத்தி பேராசிரியர் சே. இராமானுசனாரின் முன்னுரையோடு வெளியிட்டார். இந்நூலே நவீன நாடகப் பயிலரங்கம், நவீன நாடக ஆக்கம் பற்றிய ஆவணப்படுத்தலில் முதல்நூலாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையே குணசேகரனுக்கும் அவர்தம் ஆய்வுவழிகாட்டிக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு, வழிகாட்டி அவருக்கு வழிகாட்ட மறுத்திருக்கிறார். ஆனாலும் பேராசிரியர் அ. மார்க்ஸ் போன்றோரின் உதவியோடு தனது ஆய்வை நிறைவுசெய்து மதுரை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம்பெற்றார் குணசேகரன். பின்னர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் நாட்டார் ஆய்வுத்துறையின் கீழ் நீலமலையில் இயங்கிய தமிழகப் பழங்குடி மக்கள் நடுவத்தில் விரிவுரையாளராக சிலகாலம் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து பாண்டிச்சேரி நடுவக பல்கலைக் கழகத்திலுள்ள சங்கரதாஸ் நிகழ்கலைப் பள்ளியில் நாடகப் பேராசிரியராகப் பணியேற்று, புலத்தலைவராக உயர்ந்திருக்கிறார். இடையில் மூன்றாண்டுகள் அயலிடப்பணியாக உலகத்தமிழராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். 


அவர் தனது அறுபதாண்டுகால வாழ்க்கையில்  பலியாடுகள், சத்தியசோதனை, பவளக்கொடி அல்லது குடும்பவழக்கு ஆகியன போன்ற நாடகங்களை எழுதி, இயக்கி, அரங்கேற்றி உள்ளார்.  வாய்ப்புக்கிடைத்த பொழுது திரைப்படங்கள் சிலவற்றில் நடித்தார். மதுரை நகர்பகுதியில் தான் சேகரித்த மக்கள் பாடல்களைத் தொகுத்து ஆய்ந்து ‘நகர்சார் நாட்டுப்புறப் பாடல்கள்’ என்னும் நூலாகப் பதிப்பித்து நாட்டார் வழக்காற்றியல் புலத்தில் நகர்சார் நாட்டுப்புறவில், சேரிப்புறவியல் என்னும் புதிய அணுகுமுறைகளைத் தொடங்கி வைத்தார். தலித் அரங்கியல் என்னும் அரங்கியற் கோட்பாட்டை உருவாக்கினார். செவ்விலக்கிய நூல்கள் இரண்டிற்கு உரையெழுதினார்.

இங்ஙனம் நாட்டாரிசைப் பாடகர், நாடக இயக்குநர், திரைப்பட நடிகர், நிகழ்த்துக்கலைப் பேராசிரியர், நூலாசிரியர், செவ்விலக்கிய ஆய்வாளர், பொதுவுடைமை இயக்கச் செயல்பாட்டாளர், ஆய்வுக்கோட்பாட்டாளர் என பன்முகத் திறனைகளை வெளிப்படுத்திய குணசேகரனாருக்கு பெயரும் புகழும் பெற்றுத்தந்தவை ‘கலகம்’ கொப்பளிக்கும் அவரது நாட்டார் தமிழிசைப் பாடல்களே.

ஏனென்றால், கொதிக்கும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் எலும்பைக்குத்தும் குளிரிலும் வீசிக்கீழே தள்ளும் காற்றிலும் தம் வாழ்க்கைப்பாட்டிற்காக நாளும் உழைக்கும் மக்கள் தம் சுமைகளை மறக்கவும் சோர்வை நீக்கவும் பாடும் பாடல்களை அவர்களது விடுதலைக்கான படைக்கருவியாக மாற்ற வேண்டும் என்னும் தீராத தாகத்தோடு  குணசேகரன் இயங்கிக்கொண்டிருந்தார்.  கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக வெவ்வேறு அறிஞர்களால் தொகுக்கப்பட்ட நாட்டார் பாடல்களில் செவ்விலக்கிய நயங்களையும் செவ்விசையின் கூறுகளையும் கற்றுத்துறைபோகிய பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் தேடிக்கொண்டு இருந்தபொழுது, குணசேகரன் அப்பாடல்களை மண்ணின் மனத்தோடு அம்மக்களுக்கே திருப்பிக் கொடுத்தார். அத்தமிழிசையை கலகத்தின் மொழியாக மாற்றினார்.

அவர் தனது மேடைகளில் நாட்டார் பாடல்களை நேரம்கொல்லிகளாகவும் களிப்பூட்டிகளாகவும் எப்பொழுதும் பயன்படுத்தியதில்லை; மாறாக அங்ஙனம் அவற்றைப் பயன்படுத்திய போலிநாட்டார் கலைஞர்களை தொடர்ந்து விமர்சித்துக்கொண்டே இருந்தார்.  அதனால் இழப்புகள் பலவற்றிற்கும் ஆளானார்.
நன்றி: கரு அழ குணசேகரன் வலைப்பூ


ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் என்றாலே அவை தன்னிரக்கத்தைப் பேசுபவை என்னும் கருத்தாக்கத்தை அவர் தனது பாடல்களால் உடைத்தார். ‘ஆக்காட்டி ஆக்காட்டி’ என்னும் தன்னிரக்க நாட்டாரிசைப் பாடலின் இறுதியில் “இந்த வலையென்ன பெருங்கனமா” எனத்தொடங்கும் பாடல் கண்ணியை இணைத்து அப்பாடலில் நம்பிக்கையைப் பீறிட வைத்தார்.  கொளப்பாடியில் ஆண்டையின் கிணற்றிற்குக் குளிக்கச் சென்ற குழந்தைகள் கிணற்று நீரில் செலுத்தப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி மாண்டபொழுது கவிஞர் இன்குலாப் இயற்றிய ‘மனுசங்கடா’ பாடலுக்கு இசையைத்து, தனது கணீர்க்குரலால் பாடி, தமிழகத்தின் மூலைமுடுக்கெங்கும் ஒடுக்கப்படுபவர்களின் உள்ளக்குமுறலாக ஒலிக்கவிட்டார்.  ‘என்னடி தேவி சக்கம்மா” என்னும் கோமாளிப்பாடலின் வழியாக உலகின் போக்கை விமர்சித்தார். 

இங்ஙனம் கலகத் தமிழிசைக் கலைஞராக இந்திய பொதுவுடைக் கட்சி மேடைகளிலும் அதன் ஆதரவாளர்களின் மேடைகளிலும் தோன்றிய குணசேகரனார் 1990ஆம் ஆண்டுகளின் அறிவர் அம்பேத்காரின் நூற்றாண்டிற்குப் பின்னர் வீறுகொண்டு எழுத்த தலித் அரசியலுக்கு தனது இசையையும் நாடகத்தையும் வேராகவும் விழுதாகவும் மாற்றினார்.  அதேவேளையில் சுயவிமர்சனம் என்னும் அகத்தாய்வை மேற்கொள்ளும் கலைப்படைப்புகளையும் உருவாக்கினார். விளிப்புநிலையினருக்குள் விளிம்புநிலையினராக இருக்கும் பெண்களின் நிலையை தனது பவளக்கொடி நாடகத்திலும் ஒடுத்தலுக்கு உள்ளாகும் ஆண்களும்கூட பெண்களை ஒடுக்குவதை பலியாடுகள் என்னும் நாடகத்தில் எடுத்துரைத்தார். 



            ஆக, ‘கலகம் செய்தல் கலையின் கடனே’ என்பதே, கலையின் எல்லா முனைகளிலும் கலகத்தைக் கூர்தீட்டிக்கொண்டே இருந்த, கலகத் தமிழிசைக் கலைஞரான குணசேகரனாரின் கலைக்கோட்பாடாக இருந்திருக்கிறது. இக்கலைக்கோட்பாடே தமிழிசைக்கும் தமிழ்கலைக்கும் அவர் கொடுத்த கொடையாக இருந்து என்றென்றும் அவர் புகழ் பேசும். 

அம்ருதா  2016 பிப்ரவரி இதழில் வெளிவந்த கட்டுரை

அம்ருதாவில் இக்கட்டுரையைப் படித்துவிட்டு, கரு.அழ.குண. பேராசிரியரான நா. தர்மராசன் எழுதிய கடிதம்

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...