குன்றிவிட்டதா குழந்தை இலக்கியம்?நன்றி: http://www.azernews.az

“என் பிள்ளையிடம் பேசி அவனைக் கொஞ்சம் மாற்ற முடியுமா?” என இறுகிய முகத்தோடு அவர் வேண்டினார்.
“ஏன்? அவன் செய்கிறான்?” என வினவினார் அந்த உளவியல் ஆற்றுப்படுத்துநர்.
“எல்லாவற்றிற்கும் அடம்பிடிக்கிறான்?”
“நேற்று எதற்கு அடம்பிடித்தான்?”
“நேற்று மட்டுமில்லை, எப்பொழுதும் தொலைக்காட்சியின் தொலையியக்கியை அவனே வைத்துக்கொள்கிறான். ஒன்று மாற்றி ஒன்று என குழந்தைகளுக்கான படங்களையே பார்த்துக்கொண்டு இருக்கிறான். மற்றவர்களை அதனைத் தொடக்கூட அனுமதிப்பதில்லை”
“அவன் குழந்தைகளுக்கான படங்களைப் பார்ப்பதில் உங்களுக்கு என்ன சிக்கல்?”
“அதில் வரும் ஏதேனும் ஒரு கதைமாந்தராக தன்னை நினைத்துக்கொண்டு, அதேபோல பேசுகிறான்; சண்டை போடுகிறான்; மற்றவர்களை அடிக்கிறான்.”
“அதில் உங்களுக்கு என்ன சிக்கல்?”
“இப்படியே போனால், அவன் தொலைக்காட்சிக்கு அடிமையாகி படிக்காமல் போய்விடுவானோ என அச்சமாக இருக்கிறது; முரடனாக வளர்கிறானோ என கவலையாக இருக்கிறது.”

இந்த அச்சமும் கவலையும் இன்றைக்கு பெரும்பாலான இந்தியப் பெற்றோர்களுக்கு ஏற்பட்டு இருக்கின்றன;  குறிப்பாக, தம் குழந்தை எல்லாவற்றிலும் முதலாவதாக வரவேண்டும், அக்குழந்தை மீது தாம் இப்பொழுது இடும் முதலீடு பின்னாளில் பெரும்பயனை தமக்குத் தரவேண்டும் எனக் கருதும் நடுத்தர பொருளாதாரக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு மிக அதிகமாக ஏற்பட்டு இருக்கின்றன.  அவற்றை அதிகப்படுத்தும் வகையில், அறிவியற்றொழில்நுட்பக் கொடையால் தகவற்றொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள பெரும்மாற்றத்தைப் பயன்படுத்தி, குழந்தைகளுக்கான அசைவுரு படத் தொடர்கள் (Animation) 24 மணிநேரமும் வெவ்வேறு தொலைக்காட்சி வழங்கல்களில் காணொலிபரப்பப்படுகின்றன. கூட்டுடலுழைப்பின் தேவையைப் பெருமளவு கோரும் வேளாண்மைத் தொழிலில் இருந்து பெரும்பாலான நடுத்தர பொருளாதாரக் குடும்பங்கள் வணிகத்திற்கும் வெள்ளுடை வேலைகளுக்கும் நகர்ந்துவிட்டதால், கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து தனிக் குடும்பங்கள் பெருகிவிட்டன. இதனால் குழந்தைகளுக்குக் கதைசொல்லும் முதியவர்களின் இருப்பு வீடுகளில் குன்றிவிட்டது. மக்கள்தொகைப் பெருக்கக் கட்டுப்பாடு, பேருருக்கொண்டு எழுந்து பொருளாதாரச் சுமை ஆகியவற்றால் ஒற்றைக் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இதன் விளைவாக கதைபேசவும் கூடிவிளையாடவும் தோழர்கள் அற்ற குழந்தைகள் பலர் தொலைக்காட்சியின் அசைவுரு படத் தொடர்களுக்கு அடிமையாகி கிடக்கிறார்கள். 

இச்சூழலைப் பயன்படுத்தி ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றைப் பண்பாடு என்னும் கருத்தாக்கத்தை குழந்தைகளின் மனதில் அவர்களும் அவர்தம் பெற்றோர்களும் அறியாத வகையில் விதைப்பதற்கு ஏற்ற அசைவுரு படத்தொடர்கள் உருவாக்கப்படுகின்றன; கதைமாந்தர்கள் தோற்றுவிக்கப்படுகிறார்கள்.  தமக்கான சிறந்த முன்மாதிரிகளை தம் இல்லங்களில் இழந்துவிட்ட குழந்தைகள் அப்படத் தொடர்களில் வரும் கதைமாந்தர்களையே தம் முன்மாதிரிகளாகக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.  அதன்விளைவாக அத்தொலைக்காட்சிக் கதைமாந்தர்களின் உருவங்களைக் கொண்ட வண்ணம்தீட்டும் புத்தகங்கள் சந்தையில் பெருகிக் கிடக்கின்றன. அவற்றின் நுகர்வோராக மாறிவிட்ட குழந்தைகள் முரடர்களாக மட்டுமன்று, கருத்தியல் அடிமைகளாகவும் அவர்களை அறியாமலேயே உருவாகி வருகிறார்கள்.

இச்சூழலை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது தமிழ் குழந்தை இலக்கியச் சூழல்.  1901ஆம் ஆண்டில் கவிமணி தேசிகவிநாயகனாரால் தொடங்கி வைக்கப்பட்ட குழந்தைப் பாடல்கள் என்னும் இலக்கியத்துறையானது இயற்கை, உயிரினங்கள் ஆகியவற்றைப் பற்றிப் பாடும் வாய்பாட்டிற்குள் முடங்கிவிட்டது. நூல்களும் செய்தித்தாள்களும் (பொது நூலகங்களுக்கு) வழங்கல் சட்டம், 1954  (The Delivery of Books and Newspapers (Public Libraries) Act, 1954) என்னும் சட்டத்தின் கீழ் சென்னை கன்னிமாரா நூலகத்திற்கு வழங்கப்படும் நூல்களில், குழந்தை இலக்கிய நூல்களைப் பற்றிய அடைவை ‘தமிழ்நாட்டுக் குழந்தை நூற்றொகை’ என ஆண்டுதோறும் வெளியிடும் அளவிற்கு இயற்றப்பட்ட குழந்தைகளுக்கான நூல்கள், 1980ஆம் ஆண்டிற்குப் பின்னர் பெருக்கெடுக்கவில்லை. வெளிவரும் நூல்களிற் பல குழந்தைகளின் அகவுலகத்தை அறிந்து, அதற்கேற்ப எழுதப்பட்டவையாக இல்லை. அதன்விளைவாக அந்நூல்கள் குழந்தைகளை ஆர்வத்தோடு படிக்கத் தூண்டுபவைகளாக இல்லை; அவை அறிவுரைகளும் தகவல்களும் நிரம்பியவைகளாகவே இருக்கின்றன. 

தமிழ்நாட்டுக் குழந்தை நூற்றொகைகள் 1964 / 1966
குழந்தைகளுக்கான இதழ்களின் எண்ணிக்கையோ கைவிரல்களின் எண்ணிக்கை அளவிற்கு குறைந்துவிட்டது.  1950 முதல் 1980 வரை ‘குழந்தை எழுத்தாளர் சங்கம்’ என ஒன்றை உருவாக்கவும் அதன் சார்பில் ‘குழந்தை எழுத்தாளர் யார்? எவர்?’ என படைப்பாளர் அடைவு வெளியிடும் அளவிற்கு பெருகியிருந்த குழந்தை இலக்கியப் படைப்பாளிகளின் எண்ணிக்கை பெருமளவு மெலிந்துவிட்டது.  இருக்கும் படைப்பாளிகளில் பலரும் பழைய பாடல்களையும் நூல்களையும் பார்த்துப் ‘போலச் செய்பவர்’களாக இருக்கிறார்களே ஒழிய புதியன புனைபவர்களாக, குழந்தைகளின் அகவுலகத்தை அறிந்து அவருள் அரும்பிக்கொண்டிருக்கும் ஆற்றல் மலர்களுக்கு எழிலூட்டும் படைப்புகளை இயற்றுபவர்களாக இல்லை.

தமிழ்நாட்டரசின் கல்வித்துறை நடத்திய போட்டியில் முதற்பரிசை வென்ற நூல்

“குழந்தைகள் நாட்டின் வளரும் செல்வங்கள். அவர்கள் உடலால் மட்டும் வளர்பவர்களா? இல்லை; அறிவு ஆற்றலிலும் வளர்பவர்கள். ஆகவே வெறும் பாட நூல்களோடு நில்லாது, பல நூல்களையும் படிக்க வேண்டும். அதற்காகக் குழந்தை இலக்கியத்தைப் பெருக்க வேண்டும்” என்னும் நோக்கத்தோடு குழந்தை இலக்கியப் போட்டி நடத்தி அதில் முதற்பரிசு வெற்றி பெற்ற “பூச்சி வாழ்க்கை” என்னும் குழந்தைகளுக்கான அறிவியல் நூலை படங்களோடு அழகுற அச்சிட்டு 1950களில் வெளியிட்ட தமிழ்நாட்டரசின் கல்வித் துறையோ, தற்பொழுது மதிப்பெண் வேட்டைக்காரர்களாக மாணவர்களை மாற்றிக்கொண்டு இருக்கிறது.  

“குழந்தைகள் இலக்கியத்தை மேம்படுத்தல்” என்பதை தன்னுடைய ஐம்பெரும் நோக்கங்களில் ஒன்றாகக்கொண்ட, இந்திய ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான இந்திய தேசிய நூல் அறக்கட்டளையைப் (National Book Trust, India) போன்ற ஓரமைப்பு இதுவரை தமிழ்நாட்டரசால் உருவாக்கப்படவில்லை.  தி. சு. அவினாசிலிங்கனாரால் உருவாக்கப்பட்ட தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட குழந்தைகள் கலைக்களஞ்சியம் நெ.து.சுந்தரவடிவேலு பொதுக்கல்வித் துறை நெறியாளராக இருந்தபொழுது வெளியிட்ட ஓரிரு நூல்களைத் தவிர  குழந்தை இலக்கிய நூல்கள் எதனையும் தமிழ்நாட்டரசு வெளியிட்டதாகத் தெரியவில்லை.

தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட மழலைத் தளிர்கள் என்னும் நூல்
 இந்திய ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் மைசூர் நகரில் இயங்கும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவம் வழங்கிய நிதியுதவியால் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் “மழலையர் பாடல் இயற்றும் செயலரங்கு” ஒன்றினை 1994 செப்டம்பர் திங்களில் ஒருங்கிணைத்து, அதில் இயற்றப்பட்ட 408 பாடல்களை 53 பிழைத்திருத்தங்களோடு “மழலைத் தளிர்கள்” என்னும் நூலை வெளியிட்டது. இந்த நூலைத் தவிர வேறு எந்த குழந்தை இலக்கிய நூலையும் தமிழ்நாட்டில் உள்ள வேறு எந்தப் பல்கலைக்கழகமும் வெளியிட்டதாகத் தெரிவியவில்லை.

நேரு குழந்தைகள் புத்தகாலய வரிசை நூல்களில் சில
 இந்திய தேசிய நூல் அறக்கட்டளை வெளியிடும் “நேரு குழந்தைகள் புத்தகாலயம்” வரிசை நூல்களிலோ பெரும்பாலானவை மொழிபெயர்ப்பு நூல்களாகவே இருக்கின்றன.   இராசம் கிருட்டிணன், வல்லிக்கண்ணன், தங்கமணி, அழ. வள்ளியப்பா, கி. ராஜநாராயணன்  ஆகியோரைப் போன்ற சிலர் எழுதிய மிகச் சில நூல்களே தமிழில் நேரடியாக எழுதப்பட்ட நூல்களாக இருக்கின்றன. இதனால் அதைக் கதைமாந்தர்களின் பெயரும் நிகழிடமும் பண்பாடும் தமிழகக் குழந்தைகளின் மனதிற்கு பெருமளவு நெருக்கமாக இல்லை.

குழந்தை இலக்கியத்திற்கு முதலிடம் வழங்கி நூல்களை வெளியிடும் பதிப்பகங்கள் தமிழ்நாட்டில் மிகக் குறைவாகவே இருக்கின்றன. ஆனால் அவை பெரிதும் முயன்று வெளியிடும் நூல்களை, தம்மளவில் குழந்தை இலக்கியப் படைப்பாளராக இருந்த வே. தில்லைநாயகம் பொதுநூலக இயக்குநராக இருந்த காலத்தில் வாங்கப்பட்ட அளவிற்கு, தமிழ்நாட்டரசு பொதுநூலகத் துறை பெருமளவிற்கு வாங்குவதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டு அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் எதிலும் பள்ளி நூலகர் என்னும் பணியிடமே இல்லை. அதனால் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி நூலகங்கள் நூல்களை அடைந்துவைக்கும் பண்டகசாலைகளாகவே இருக்கின்றன. தொடக்கப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் நூலகங்களே இல்லை. சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களைத் தவிர பிற ஊர்களில் உள்ள பொதுநூலகங்களில் குழந்தைகள் நூலகப் பிரிவு இல்லை. இதனால் மாணவர்களிடையே குழந்தை இலக்கிய நூல்களைப் படிக்கும் பழக்கம் குன்றியிருக்கிறது; அப்பழக்கத்தைத் தூண்டிப் பெருக்கும் விருப்பமும் ஆர்வமும் அவர்தம் ஆசிரியர்களிடம் துளிர்விடவே இல்லை. 

இந்நிலையால்தான், ஓடி ஆடித் திரியவும் உவப்போடு குழந்தை இலக்கிய நூல்களைப் படித்து மகிழவும் வேண்டிய குழந்தைகள் தொலைக்காட்சியில் காணொலிபரப்பப்படும் அசைவுருபடத் தொடருக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள்; தொலையியக்கியைக் கைப்பற்றி தம் ஆதிக்கத்தை நிலைநிறுத்த அடம்பிடிப்பவர்களாக மாறுகிறார்கள்.  இந்நிலை மென்மேலும் தொடருமானால், பொறுப்புடைய இளைஞர்களாக (Responsible Youth), குழந்தைகள் உருவாகத் தேவையானவை என உலக நலவாழ்வு அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ள தன்னையறிதல், ஒத்துணர்தல், தகவற்றொடர்பு, பிறருடன் பழகும் திறன், படைப்பாக்கச் சிந்தனை, ஆய்வுச் சிந்தனை, முடிவெடுத்தல், சிக்கலைத் தீர்த்தல், உணர்வுகளுக்கு ஈடுகொடுத்தல், மனவழுத்தத்திற்கு ஈடுகொடுத்தல் என்னும் வாழ்க்கைத் திறன்கள் எவையும் இல்லாதவர்களாக அக்குழந்தைகள் எதிர்காலத்தில் மாறிவிட வாய்ப்பு இருக்கிறது. 

எனவே, தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்காக தமிழ்ப் படைப்பாளிகளால் தமிழகச் சூழலில் குழந்தை இலக்கியம் பெருக வேண்டிய தேவை இப்பொழுது அதிகரித்து இருக்கிறது.  அத்தகு நூல்களை ஆக்குவற்கான ஆற்றலுடைய படைப்பாளர்கள் சிலரும் நம்மிடையே வாழ்கிறார்கள். அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA), தேசிய இடைநிலைக் கல்வி இயக்கம் (RMSA), கல்வி ஆராய்ச்சிக்கும் பயிற்சிக்குமான தேசிய அவை (NCERT), தமிழ்நாட்டரசின் பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, கல்வி ஆராய்ச்சிக்கும் பயிற்சிக்குமான மாநில அவை (SCERT), கல்வியியல் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், இந்திய தேசிய நூல் அறக்கட்டளை (NBTI), இந்திய மொழிகள்  நடுவண் நிறுவம் (CIIL) ஆகியனவற்றைப்  போன்ற நிறுவனங்கள் குழந்தை இலக்கிய படைப்பாளர் பயிலரங்களை ஒருங்கிணைப்பதன் வாயிலாக இளம் படைப்பாளர்களை குழந்தை இலக்கியப் பணியில் ஈடுபடுத்தவும் பல்வேறு துறைகளில் புத்தம்புது குழந்தை இலக்கியங்களை உருவாக்கவும் இயலும்.  தமிழ்நாட்டரசின் பள்ளிக்கல்வி அமைச்சகம் ஒவ்வொரு நிதி ஆண்டிலும் தனது கணிப்பீட்டில் (Budget) குழந்தை இலக்கிய மேம்பாட்டிற்கென கணிசமான தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

இவையும் இவைபோன்ற பலவும் செய்தால், குழந்தைகள் தங்களது சிறுசேமிப்புப் பணத்தைக் கொண்டு வாங்கக்கூடிய அளவிற்கு குறைந்த விலையில், சிறந்த குழந்தை இலக்கியங்கள் நிறைந்த அளவிற்கு தமிழிற் பூத்து, தமிழையும் தமிழரையும் மேம்படுத்தும்!


அம்ருதா இதழின் 2015 சூன் மடலில் வெளிவந்த கட்டுரை

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...