திருமெய்யம் 
திருமெய்யம் கோட்டை
பெரும்கற் குன்று. அதன் உச்சியில் பீரங்கிமேடை. அதனை நடுப்புள்ளியாகக்கொண்டு அமைக்கப்பட்ட வட்டவடிவிலான ஏழுசுற்று கற்கோட்டை. அதற்குள் மூன்று குடைவரைக் கோயில்கள். அவற்றைச் சார்ந்து ஒரு சிற்றூர். இதுதான் புதுக்கோட்டையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், செட்டிநாட்டின் விளிம்பில், அமைந்திருக்கும் திருமெய்யம்.  


குடைவரைகள்
குன்றின் மீதுள்ள குடைவரை

கற்குன்றின் உச்சிக்குச் செல்லும் வழியில் நீண்டபாறையொன்றின் விலாவைக் குடைந்து லிங்கத்தோடு கூடிய கருவறை ஒன்று குடைவரையாக அமைக்கப்பட்டு இருக்கிறது.  ஆனால் அக்கருவறையைச் சென்றடைய பாதை வடிக்கப்படவில்லை. அக்கோயிலுக்கு அந்நாளில் என்ன பெயர் இடப்பட்டது எனவும் தெரியவில்லை.  

கற்குன்றின் தென்புறச்சரிவின் மேற்குப் பகுதியில்  சிவனுக்கும் கிழக்குப் பகுதியில் பள்ளிகொண்ட பெருமாளுக்கும் தனித்தனியே குடைவரைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. சிவனுக்கு மெய்யமலையான் என்றும் பள்ளிகொண்ட பெருமாளுக்கு மெய்யான் என்றும் அந்நாளில் பெயரிடப்பட்டு இருக்கின்றன.  சமசுகிருதமயமாக்கக் காலத்தில் மெய்யமலையானை சத்தியகிரிசுவரர் என்றும் மெய்யானை சத்தியமூர்த்தி என்றும் திருமெய்யத்தை சத்யஷேத்திரம் என்றும் திரித்து இருக்கிறார்கள். இவற்றுள் திரிக்கப்பட்ட ஊர்ப்பெயர் வழக்கொழிந்துவிட்டது; இறைப்பெயர்கள் நிலைத்துவிட்டன. 


இலிங்கேசுவரர்
மெய்யமலையான் குடைவரையின் முகப்பு தெற்கு நோக்கி உள்ளது. தரையிலிருந்து மூன்றடி உயரத்தில் பாறையைக் குடைந்து மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது. மேடையின் முகப்பில் இரு தூண்களும் இரு அரைத்தூண்களும் நிற்கின்றன.  இரு தூண்களின் தலையும் காலும் சதுரமாக இருக்கின்றன. உடற்பகுதி எட்டுப்பட்டையாக இருக்கிறது. அவற்றில் தாமரை இதழ்கள் செதுக்கப்பட்டு உள்ளன.  தூண்களை இணைக்கும் உத்திரங்களில் பூவேலைப்பாடுகள் காணப்படுகின்றன. கல்மேடையின் வடக்குப்புறத்தில் தாமரை இதழ் சிற்பங்களோடு அரைத்தூண்கள் நான்கு இருக்கின்றன. இவற்றிற்கு இடையே, மேடையின் நடுப்புள்ளியில் மேற்கு நோக்கி நந்தி அமர்ந்திருக்கிறது. நந்திக்குப் பின்னே, மேற்கு நோக்கி, லிங்கத்தூணில் இடுப்புக்கு மேலே இலிங்கேசுவரர் என்னும் சிவ உருவம் செதுக்கப்பட்டு உள்ளது.  அதன் வலதுகை வரம்தரு முத்திரை காட்ட இடதுகை இடுப்பில் ஊன்றி இருக்கிறது. வயிற்றில் இடைவாரும் தலையில் மகுடமும் இருக்கின்றன. லிங்கத்தூணின் இருபக்கமும் தீநாக்குகள் செதுக்கப்பட்டு உள்ளன.  கல்மேடையின் மேற்கே கருவறை குடையப்பட்டு உள்ளது. 
வயிற்காப்போர்
அதன் இருபுறங்களிலும் வாயிற்காப்போர் சிற்பங்கள் மிக அழகாக அமைக்கப்பட்டு உள்ளன.  வலப்புறம் உள்ளவரின் தலையில் கொம்பும் கரந்த மகுடமும் இருக்கின்றன.  இடக்கை கதையின் மீது இருக்க, அதன்மீது வலக்கை ஊன்றப்பட்டு இருக்கிறது. இடப்புறம் உள்ளவரின் தலையில் தலைப்பாகை இருக்கிறது. இடக்கையை இடுப்பில் ஊன்றி இருக்க, வலக்கையை மேலேயுயர்த்தி வழிபடுவது போல இருக்கிறது. இருவரும் கடகம், கேயூரம், முப்புரிநூல் ஆகியனவற்றை அணிந்திருக்கின்றனர்.  கருவறைக்கு உள்ளே ‘மெய்யமலையான்’ என்னும் சிவலிங்கம் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டு இருக்கிறது.  கருவறையின் தெற்கே வெளிப்பகுதியில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

மெய்யான் குடைவரை

மெய்யமலையான் குடைவரைக்குக் கிழக்கே மெய்யான் குடைவரை இருக்கிறது.  இதில் கருவறையோ தூண்களையுடைய மண்டபமோ கிடையாது.  பாறையில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டு இருக்கிறது.  நஞ்சைக் கக்கும் தீநாவினையுடைய ஆதிசேடனின் மேல் பள்ளிக்கொண்டு இருக்கும் பெருமாள் தனது வலதுகையை தலைக்கு மேலே உயர்த்தித் தொங்கவிட்டு, இடது கையால் அலைமகளை அணைத்தவாறு கிடக்கிறார்.  அவரது தலைக்கு அருகில் சித்திரபுத்திரன், காலன், கருடன் ஆகியோரும் காலடியில் பூமகளும் மதுவும் கைடபரும் இருக்கின்றனர்.  உந்தித்தாமரையில் நான்முகன் இருக்கிறார். பின்சுவரில் விண்ணவரும் முனிவரும் இருக்கின்றனர்.

கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இவ்விரு குடைவரைக் கோயில்களை ஒட்டி பின்னாளில் சோழர்கள் கற்றளிகளை அமைத்து இரு கோயில்களாக உருவாக்கி இருக்கிறார்கள். இவற்றுள் பரப்பளவில் பெரியதான மெய்யான் கோவிலில் தனிக்கருவறை உருவாக்கப்பட்டு திருமெய்யர் என்னும் திருமால் மூலவராகத் துதிக்கப்படுகிறார்.   

இவ்விரு கோயில்களிலும் முதலாம் இராசராச சோழன், முதலாம் இராசேந்திர சோழன், இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், சடாவர்மன் வீரபாண்டியத்தேவன், விசயநகர மன்னன் கிருட்டிணதேவராயன் ஆகியோரின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. 

குறவன் குறத்தி சிலைகள்

மெய்யான் கோவிலில் உள்ள மண்டபங்களில் கலைநயம்மிக்க சிற்பங்கள் பல காணப்படுகின்றன.  குறிப்பாக, முகப்பு மண்டபத்தில் உள்ள குறவன், குறத்தி சிலைகளைப் பார்க்கும்பொழுது திருக்குற்றலாக் குறவஞ்சியின் குறவனும் குறத்தியும் அங்கே சிற்பமாய் நிற்கும் உணர்வு ஏற்படுகிறது; மனதில் அவ்விருவரின் உரையாடல் இசையோடு ஒலிக்கிறது!

கோட்டை

1858ஆம் ஆண்டில் திருமெய்யம் - ஊரும் கோட்டையும்
இராமநாதபுரத்தைத் தலைநகராகக்கொண்ட சேதுநாட்டின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ள திருமெய்யம் கற்குன்றின் மீது, அந்நாட்டை கி.பி.1673 ஆம் ஆண்டு முதல் 1708 ஆம் ஆண்டு வரை ஆண்ட, கிழவன் சேதுபதி இந்த எல்லைக் காவற்கோட்டையைக் கட்டினார். பின்னர் இக்கோட்டை புதுக்கோட்டை நாட்டின் ஆட்சிக்குள் வந்தது. விடுதலைக்குப் பின்னர் இந்தியத் தொல்லியற்றுறையின் ஆளுகையில் இருக்கிறது. 

கி.பி. 1799 ஆம் ஆண்டில் ஆங்கிலேயருக்கு எதிரான போரின்பொழுது பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைவிட்டு வெளியேறிய கட்டபொம்மனும் ஊமைத்துரையும் புதுக்கோட்டை நாட்டில் கைதுசெய்யப்பட்டு, இக்கோட்டையில் சிறைவைக்கப்பட்டுத்தான் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர் எனக் கூறப்படுகிறது.  பின்னர் பாளையங்கோட்டைச் சிறையில் இருந்து தப்பிய ஊமைத்துரை இக்கோட்டையைக் கைப்பற்றி ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டதாகவும் கூறப்படுவதால் இது ஊமையன் கோட்டை எனவும் அழைக்கப்படுகிறது. 

பீரங்கிமேடை

தற்பொழுது  ஏழு சுற்றுகளைக்கொண்ட கோட்டையில் இடிந்து விழுந்தவை போக தற்பொழுது நான்கு சுற்றுகளே இருக்கின்றன. அகழி அங்கங்கே தூர்ந்துபோய்க் கிடக்கிறது.  கற்குன்றின் வடமேற்கில் தொல்பொருள் துறை அமைத்துள்ள வாயிலின் வழியாக குன்றின் மீது ஏறினால் நுழைவாயில் வருகிறது.  அதன் வலது பக்கத்தில் தலைப்பாகைப் பாறையும் அதனிடுக்கில் வெடிமருந்துக் கிடங்கும் இருக்கின்றன. கிடங்கின் பின்புறம் நீண்டு கிடக்கும் பாறையில் லிங்கக்குடைவரை இருக்கிறது. நுழைவாயிலின் இடதுபுறம், பாதையை ஒட்டி, மனிதத்தலைப் பாறை இருக்கிறது.  அதனைக் கடந்து மேலேறிச் சென்றால், மற்றொரு நுழைவாயில் இருக்கிறது. அதனைக் கடந்தால் வட்ட வடிவக் கோட்டை இருக்கிறது. அதன் நடுப்புள்ளியாக பீரங்கி மேடை இருக்கிறது. அதன்மீது கிழக்கு நோக்கி ஆங்கிலேயர் கால பீரங்கி ஒன்று இருக்கிறது. பீரங்கிமேடைக்கு தெற்கு, வடமேற்கு, தென்கிழக்கு பகுதிகளில் இயற்கைச் சுனைகள் இருக்கின்றன. முறையான கவனிப்பு இன்மையால் அழுக்குக் குட்டைகளாக அவை தெரிகின்றன.  கோட்டையின் தெற்கு, கிழக்கு, வடக்கு நுழைவாயில்களில் ஆறு பீரங்கிகள் காணப்படுகின்றன.  ஒரு காலத்தில் போர்வீரர்களின் வாள்வீச்சு ஓசையால் நிறைந்த இக்கோட்டையை இப்பொழுது காதலர்கள் தம் முத்தவோசையால் நிரப்புகிறார்கள்.

பாறைத் தொல்லோவியம்
பாறைத் தொல்லோவியங்கள் செந்நிறத்தில் மலைக்கோட்டையின் நுழைவாயிலைக் கடந்ததும் வலப்பக்கம் உள்ள தலைப்பாகைப் பறை, இடப்பக்கம் உள்ள மனித்தலைப் பாறை, மெய்யான் கோயிலுக்கும் மெய்மலையான் கோவிலுக்கும் இடையிலுள்ள குகையின் மேற்பகுதி ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.  இவை கி.மு. 5000ஆம் ஆண்டிற்கு முற்பட்டவையாக இருக்குமென 2013ஆம் ஆண்டில் இவற்றை கண்டாய்ந்த முனைவர் அருள் முருகன் கூறுகிறார்.  
தொல்லோவியங்கள் நிறைந்த மனிதத்தலைப் பாறை
 
கை அல்லது காதுநீண்ட முயலைப் போன்ற ஓவியம்


கோயிற் குகையில் உள்ள ஓவியங்கள் கைகளைப் போன்றும் காதுநீண்ட முயல்களைப் போன்றும் இருக்கின்றன. தலைப்பாகைப் பறையின் மேற்குப்புறத்தின் அடிப்பகுதியில் உள்ள ஓவியங்கள் வெயிலும் மழையும் பனியும்பட்டு நிறம் மங்கிக் காணப்படுகின்றன.  மனித்தலைப் பாறையில் உள்ள ஓவியங்கள், வெயில்படும் வாய்ப்பு குறைவாக இருப்பதால், தெளிவாக இருக்கின்றன; ஆனால் தூசிபடிந்து, எளிதிற் காண இயலாதனவாக இருக்கின்றன. பாறையை நீரால் கழுவினால் அவை புலப்படுகின்றன.   


அவற்றுள் ஆணும் பெண்ணும் படுத்திருப்பது போன்ற ஓவியத்தை “மெய்யுறு புணர்ச்சி” ஓவியம் என்றும் ஆணும் பெண்ணும் கைகோர்த்து ஆட, இருவர் இசைக்கருவியை இசைத்துக்கொண்டே ஆட, தலையில் குஞ்சம் கட்டிய ஒருவரும் மற்றவரும் மத்தளம் போன்ற இசைக்கருவியை இசைப்பது போலுள்ள ஓவியம் தொல்காப்பியத்தில் கூறப்படும் “உண்டாட்டு” என்னும் வகையினதாக இருக்கலாம் என்றும் விலங்கின் மீது மனிதன் அமர்ந்திருப்பதைப் போன்ற ஓவியம் இடப்பெயர்வைச் சுட்டுவதாக இருக்கலாம்  என்றும் மற்றொரு ஓவியம் சண்டையையோ வேட்டையாடுதலையோ காட்சிப்படுத்தலாம் என்றும் அருள்முருகன் குறிப்பிடுகிறார். வேட்டையாடப்பட்ட விலங்கை பகிர்ந்துண்ணுவதைப் போன்ற மற்றோர் ஓவியம் ராகுல் சாங்கிருத்தியாயன் எழுதிய வால்காவிலிருந்து கங்கை வரை என்னும் நூலின் முதற்கதையான ‘நிஷா’வை ஒத்திருக்கிறது என ஒப்பாய்வு ஒன்றிற்கான வாசலை திறந்து வைக்கும் அவர், இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் தாய்வழிச் சமூக அடையாளங்களாக இருக்கலாம் என்கிறார்.  

தமிழ்ச் சமூக வரலாற்றின் தொல் அடையாளமாகவும் சிந்துநதிக்கரை நாகரிகத்தை திராவிட நாகரிகம் என நிறுவுவதற்கு சான்றாகவும் திகழத்தக்கதுமான இவ்வரிய ஓவியங்களின் அருமையை அறியாத மக்கள், அவற்றின் மீது பலவற்றைக் கிறுக்கி வைத்திருக்கிறார்கள்.  கோட்டைக்கு வரும் மக்கள் கடந்துபோகும் இடத்திலேயே இவ்வோவியங்கள் இருந்தாலும் அவற்றின் மீது தூசி படிந்து எளிதில் காண இயலாதவைகளாக இருகின்றன. எனவே தொல்லியல் துறை அவ்வோவியங்களின் மீது நெய்க்காப்பிட்டு, காத்து, எளிதிற் காண ஆவன செய்ய வேன்டும்.  வரலாற்று ஆய்வுகளை அவற்றிலிருந்து கிளைத்து எழுச் செய்ய வேண்டும். செய்யுமா தொல்லியற்றுறை?
2014 05 20

இக்கட்டுரை அம்ருதா இதழில் 2014 சூன் இதழில் கண்டதும் கேட்டதும் என்னும் தொடரில் மூன்றாவது கட்டுரையாக 36, 37, 38, 39 ஆம் பக்கங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

 

 

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...