சுஜாதாவிற்கு சினமூட்டிய பேட்டி

இன்றைக்கு சுஜாதாவிற்கு நினைவுநாளாம். யாரோ ஒரு நண்பர் என்னையும் சுஜாதாவின் புகழ்பாடும் “எழுத்தாளர் சுஜாதாவின் விசிறிகள் குழு” என்னும் முகநூல் பக்கத்தில் இணைத்துவிட்டு இருக்கிறார். இது சுஜாதாவை நான் சந்தித்த இரண்டு நிகழ்வுகளை நினைவிற்குக் கொண்டுவந்து விட்டது.

நிகழ்வு 1:

1992 ஆம் ஆண்டு. தினமலர் நாளிதழின் திருநெல்வேலி பதிப்பில் செய்தியாளராக நான் பணியாற்றிக்கொண்டு இருந்தேன். (அதன் இதழியற்கொள்கையோடு நாளும் முரண்டுபட்டு சில மாதங்களிலேயே அதனைவிட்டு வெளியே வந்தது வேறு கதை). நெல்லை மனோண்மணியனார் பல்கலைக் கழகத்தின் கணிப்பொறியியல் துறையின் சார்பில் ஆர்த்தி விடுதியில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. அதற்கு ஆர்.எம்.கே.வி.யும் தினமலரும் நன்கொடையாளர்கள். சுஜாதா காலையில் கருத்தரங்கைத் தொடங்கிவைக்கவும் மாலையில் சுழற்சங்கத்தில் உரையாற்றவும் அங்கே வந்தார். அக்கருத்தரங்கத்திற்கான அழைப்பிதழை என்னிடம் கொடுத்த கணிப்பொறித் துறையின் பேராசிரியர் கிருட்டிணன், “கோமல் சுவாமிநாதனை நீங்கள் பேட்டி கண்டு நகர்மலரில் கட்டுரை எழுதியதைப்போல, சுஜாதாவையும் பேட்டி கண்டு எழுதுங்கள்” என்றார். “சரி” என்றேன். அவரே சுஜாதாவிடம் பேசி மதியம் ஒரு மணி என நேரம் பெற்றுத் தந்தார். சரியாக பன்னிரண்டு ஐம்பதிற்கு சுஜாதா தங்கவைக்கப்பட இருந்த அறையின் வாசலுக்குச் சென்றேன். அரண்மனை வாயிற்காவலரைப்போல கணிப்பொறித்துறையின் மாணவர் ஒருவர் யாரையும் அந்த அறைக்கு அருகில் வரவிடாமல் விரட்டிக்கொண்டு இருந்தார். பேராசிரியர் கிருட்டிணனோடு என்னை பலமுறை அவர் பாத்திருப்பதால், ‘சார் இன்னும் பேசி முடிச்சிட்டு வரல சார். நீங்க வருவிங்கன்னு ஃபர்பசர் சார் சொன்னாரு. கொஞ்சம் லாபில உட்காருங்க சார். அவர் வந்ததும் நீங்க சந்திக்க ஏற்பாடு செயிறேன்’ என்றார். நானும், இந்து இதழின் மதுரைப் பதிப்பில் இப்பொழுது பணியாற்றும் புகைப்படக்காரர் ஜேம்சும் (அப்பொழுது தினமலரில் இருந்தார்) அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தோம்.

சிறிது நேரத்தில் நெல்லையின் புகழ்பெற்ற துணிக்கடையின் இளைய முதலாளி தன் மனைவியோடு வந்து எங்கள் இருக்கைக்கு அருகில் அமர்ந்தார்; எங்களிடம் அவர் மனைவியை அறிமுகம் செய்துவிட்டு, ‘இவங்க கிளப்புல இருந்து இன்ஹவுஸ் பத்திரிக்கை வருது; அதுக்கு சுஜாதா சார பேட்டி எடுக்க வந்திருக்கோம்.’ எனக் கூறியிட்டு, ‘என்ன இன்டர்வியூ பண்ண ரெடியாயிட்டையா?” என்று தன் மனைவியிடம் கேட்டார். அவர், “என்ன கேட்கிறதுன்னே தெரியல! என்ன கேட்கலாம்? என தன் கணவனைத் திருப்பிக்கேட்க, “எதையாவது கேளு” என கணவன் பதிலளித்துக்கொண்டு இருக்கும்பொழுதே, ‘உங்களுக்கு திருநெல்வேலி அல்வா ரெம்ப பிடிக்குமான்னு கேளுங்க” அவரை ஜேம்ஸ் நாடகத்தனமான ஏற்ற இறக்கத்தோடு அந்த அம்மையாரைக் கிண்டல் அடித்தார். அதற்குள் சுஜாதா கருத்தரங்கம் முடிந்து வந்து, தனக்கான அறைக்குள் நுழைந்தார். மணி ஒன்றரை ஆகி இருந்தது. வாயில் காப்போனாக இருந்த மாணவர் நாங்கள் இருந்த இடத்திற்கு ஓடிவந்து, துணிக்கடைக்காரரிடம், “சார். மேடம் போய் பேட்டி எடுக்கலாம் சார்” என்றார். ‘ஏங்க என்ன கேள்வி கேட்க” என பென்சிலை முன்பல்லால் கடித்தவாறே மனைவி கேட்க, இருவரும் எழுந்துபோனார்கள். “தம்பி! ஒரு மணிக்கு உங்களுக்கு பேட்டி தர்றதா சுஜாதா சொல்லிட்டாரு. சரியா வந்திருங்கன்னு கிருட்டிணன் சொன்னாரு. இப்ப மணி ஒன்றரை ஆகுது. நீங்க பாட்டுக்கு அவங்கள பேட்டி எடுக்கப் போகச்சொல்றீங்க?” எனச் சினந்தேன். “இவங்க வந்ததும் நீங்கதான் சார்” என்று ஓடிப்போய் வாயிலில் நின்றுகொண்டார். நெல்லையப்பர் சன்னதி வாசலில் உற்சவரின் வருகைக்காகக் காத்திருக்கும் பக்தர்களைப் போல சுஜாதாவின் விசிறிகள் பலர் அவரைப் பார்க்க அங்கே காத்திருந்தார்கள்.

மணி இரண்டு ஆனது. பேட்டி காணப்போன துணிக்கடைக்காரரும் அவர் மனைவியும் வெளியே வரவில்லை. ஜேம்ஸை அழைத்துக்கொண்டு எழுந்து அறையின் வாசலுக்குப் போனான். வாயிற்காப்பாளர் மாறியிருந்தார். அறையின் கதவைத் தட்டினேன்; கதவு திறந்தது; திறந்தவர் முந்தைய வாயிற்காப்பாள மாணவர். “மணி இரண்டு” என்றேன். “இந்தா முடிஞ்சிருச்சு சார்” என்று கூறிவிட்டு அவர் கதவை மூடிக்கொண்டார். 15 நிமிடங்கள் ஆனது. இன்னும் அவர்கள் வெளியே வரவில்லை. மீண்டும் கதவைத்தட்டினேன். உள்ளே இருந்த வாயிற்காப்பாளர் கதவைத் திறந்தார். “எனக்கு வேறு வேலை இருக்கிறது; நான் கிளம்புகிறேன்; கிருட்டிணனிடம் சொல்லிவிடுங்கள்” எனக் குரலை உயர்த்திக் கூறினேன். “யாரு? என்ன?” என உள்ளே இருந்து ஒரு குரல் கேட்டது; அது கிருட்டிணனின் குரல் அன்று. “அவருக்கு ஒரு மணிக்கு நேரம் சொல்லி இருந்தோம்; அதான் கோபபடுறாரு” என்றார் வா.கா. “தினமலர்காரருக்குள்ள ஒரு மணிக்குச் சொன்னோம்” என்றது அந்தக் குரல். “அவருதான்” என்றார் இவர். “இந்த இவங்கள முடிச்சிருவோம்” என்றார் அவர். “கொஞ்சம் பொறுத்துங்க சார்” என என்னிடம் கூறினார் வா.கா.

கதவு மீண்டும் மூடப்பட்டது. “கொஞ்சம் பொறுங்க அரி. பார்க்கலாம்” என்றார் ஜேம்ஸ். ஐந்து நிமிடத்தில் கதவு திறந்தது. அவர்கள் இருவரும் வெளியே வந்தார்கள். “நிறைய கேள்வி கேட்டீங்க போல” என அந்தப் பெண்மணியை வம்புக்கு இழுத்தார் ஜேம்ஸ். “இல்ல சார். மூணு கேள்விதான்” என்றார் அப்பெண். “அதுக்கே இவ்வளவு நேரமா?’ என கிண்டலடித்தார் ஜேம்ஸ். அதற்குள் வா.கா. வேறொரு நிருபரை அறைக்குள் அழைக்க, “தினமலர்காரரைக் கூப்பிடுப்பா” என்றது உள்ளிருந்த குரல். வா.கா. “வாங்க சார்” என்றார். நானும் ஜேம்ஸும் உள்ளே நுழைந்தோம்.

கதவின் மறைவில் இருந்த நீண்ட சோபாவின் ஒரு முனையில் சுஜாதா உட்கார்ந்திருந்தார். அவருக்கு அடுத்து இருந்த நாற்காலியில் நெல்லை பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் அமர்ந்திருந்தார். சுஜாதாவிற்கு நேர் எதிரே ஒரு நாற்காலி வெறுமையாக இருந்தது. அதற்கு பின்னால், எனக்கு முன்னே அறைக்குள் நுழைந்த நிருபர் நின்றுகொண்டிருந்தார். நான் சுஜாதா அமர்ந்திருந்த சேபாவின் மறுமுனையில் அமர்ந்தேன். எதிரே இருந்த நாற்காலியில் ஜேம்ஸ் அமர்ந்து கேமிராவை எடுத்து சுஜாதாவைச் சுட்டுத்தள்ளத் தொடங்கிவிட்டார். அவருக்கு பின்னர் நின்றுகொண்டிருந்த நிருபரிடம் “உங்களுக்கு என்ன வேண்டும்?’என்றார் சுஜாதா. (இந்தக் குரல்தான் வா.கா. தாண்டி வெளியே இருந்த எனக்குக் கேட்ட குரல்)
“பேட்டி”
“எந்தப் பத்திரிக்கை?”
“ஜூனியர் விகடன்”
“அதுலதான் தலைமைச் செயலகம் தொடர் எழுதுறனே. அப்புறம் என்ன பேட்டி. போயிட்டு வாங்க”
அந்த நிருபர் வெளியேறிவிட்டார்.

சுஜாதா என் பக்கம் திரும்பினார்.
“நீங்க தினமலரா?”
“நான் அரி. தினமலரில் வேலை பார்க்கிறேன்”
“எதிர்பார்த்ததவிட கொஞ்சம் நேரமாயிருச்சு”
“கணினிகள் காலத்தை மிகத்துல்லியமாக பின்பற்றக் கூடியவைன்னு நீங்க எழுதுனத படிச்சு; கணிப்பொறியாளர்களும் அப்படி இருப்பாங்கன்னு நினைச்சது என்னோட தப்புதான்”

அருகில் இருந்த பேராசிரியர் வெடிச்சிரிப்பு சிரிக்க, சுஜாதா திரும்பி அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு “பேட்டியைத் தொடங்கலாமா?” எனக் கேட்க, “உங்கள் எழுத்துகள் இலக்கியமா?” என முதல் கேள்வியைக் கேட்டேன். அதற்கு பத்துநிமிடம் சுற்றிவளைத்து பதில் சொன்னார். “இதை ஒருவரியில் சொல்லுங்கள்” என்றேன்.
“சிலது இலக்கியம்; சிலது இலக்கியமில்லை”
“படிகள் போன்ற சிறுபத்திரிக்கையில் நீங்கள் எழுதுபவைகள் இலக்கியம் என்றும் வணிக இதழ்களில் எழுதுபவைகள் இலக்கியமற்றவை எனக் கொள்ளலாமா?”
“நீங்கள் படிகள் படித்திருக்கிறீர்களா?"


இந்த கேள்விக்கு கரந்தை தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பொழில் இதழ் தொடங்கி அப்பொழுதுதான் வரத்தொடங்கி இருந்த புதிய பார்வை வரை ஒரு பட்டியலைக் கூறி இவற்றை எல்லாம் படித்திருக்கிறேன்; படிக்கிறேன் என்றேன். அப்புறம் அவர் பதில் சொல்லும் தொனியே மாறிவிட்டது. மிகவும் கவனமாக எனது வினாகளை எதிர்கொண்டார்; அதைவிடக் கவனமாகப் பதில் கூறினார். கறுப்பு, சிவப்பு. வெளுப்பு புதினத்தைப் பற்றிக் கேட்டபொழுது, ஒரு நாட்டுப்புறப் பாடலைக் கூறி, “இந்தப் பாட்டைப் பற்றி நான் எழுதினால்கூட நான் அந்த சாதியைக் குறைகூறுவதாகக் குற்றம் சுமத்துவார்கள்” என்றார். அடுத்து இரண்டு கேள்விகள் முடிந்ததும், ஜேம்ஸைப் பார்த்து, “உங்கள் நண்பர் நிறைய ஹோம் ஒர்க் செய்துகொண்டு வந்திருக்கிறார். நான் எழுதி, நானே மறந்தபோனவைப் பற்றிக் கேட்கிறார். இப்படித்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்காக ஆர். கே. நாராயணை பேட்டிகேட்க மிகுந்த ஆயத்தோடு நான் போனேன். பல கேள்விகளுக்குப் பின்னர் நாரதரைப் பற்றி அவர் எழுதியதைப் பற்றிக்கேட்டேன். ‘கொஞ்சம் பொறு’ எனக் கூறிவிட்டு தன் சட்டைப்பையில் இருந்து காதுகேட்கும் மெசினை எடுத்து காதில் மாட்டிக்கொண்டு ‘இப்பச் சொல்லு’ என்றார்.” என தன் அனுபவத்தைக் கூற நாங்கள் மூவரும் சிரிந்தோம்.

சிரிப்பு முடிந்ததும், “அடுத்த கேள்வி” என்றார் என்னைப் பார்த்து. அடுத்து நான் கேட்ட இரண்டு கேள்விகளும் அவருக்கு கடும் சினத்தை மூட்டின. பொறிந்து தள்ளிவிட்டார். நான் பொறுமையாக, “உங்கள் வாசகன் உங்களைச் சந்தித்தால் கேட்க விரும்பும் கேள்விகளை அவன் சார்பில் நான் கேட்கிறேன். அந்த வாசகன் நானாகவும் இருக்கக் கூடும். ஏன் கேபப்படுகிறீர்கள். உங்கள் பதிலைக் கூறுங்கள்” என்றேன். “எழுதிக்கொள்ளுங்கள்” எனக்கூறி தனது பதிலைச் சொன்னார். எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவதைப்போல, ‘அதான் இவரு கண்டுபிடிச்சிட்டாருல்ல” என்றார் ஜேம்ஸ். சுஜாதா அவரை எரித்துவிடுவதைப் போல பார்த்தார்.

அப்படி அவருக்குச் சினமூட்டிய அந்த இரண்டு கேள்விகள் இவைதான்:
1. உங்களின் சொர்க்கத்தீவு நாவல் ஜார்ஜ் ஆர்வலின் 1984 என்னும் நாவலின் தழுவலா?
2. தூண்டில் கதைகளை நீங்கள் ஜெப்ரி ஆர்ச்சரின் ஃகயர் புல் ஆஃப் ஆரோஸ் கதைகளின் தாக்கத்தில் எழுதினீர்களா?

அதற்குப் பின்னர் சில கேள்விகளுக்கு விடையளித்தார். நாங்கள் விடைபெற்றுக் கிளம்பும் பொழுது தனது முகவரி அட்டையைக் கொடுத்து அதில் உள்ள முகவரிக்கு பேட்டி வெளியாகும் இதழை அனுப்பும்படி கூறினார். நாங்களும் ஒப்புக்கொண்டு அலுவலகம் மீண்டோம்.

மறுநாள் காலை, தினமலர் அதிபர்களில் ஒருவரான இரா. சத்தியமூர்த்தி தொலைபேசியில் அழைத்து, “சுஜாதாவ நேத்து நீதான் பேட்டி எடுத்தியாப்பா. அதுல அவரு சாதியப் பத்தி சொன்னத போட வேண்டான்னு சொன்னாரு. அப்புறம் கொஞ்சம் பாத்து எழுதச் சொன்னாருப்பா. எதுவும் காண்ட்ரவர்சி ஆயிரமா பாத்துக்க. நேத்து ரோட்டரி கிளப் மீட்டிங்கில அவரப் பார்த்தேன்” எனக்கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

“விலாப்புறங்களில் இரண்டு வெள்ளிச் சிறகுகளோடு ஒரு தேவதை வானத்தில் இருந்து இறங்கிவந்துள்ளதைப் போன்றும் அதற்கு அருகில் சென்றால், ‘இந்த பிடி சாபம்’ என அது சபித்துவிடும் என்பதைப்போல பாவனை செய்தவர்களைக் கடந்துசென்று சுஜாதாவைச் சந்தித்தேன்” எனத் தொடங்கி பேட்டிக் கட்டுரையை எழுதி முடித்தேன். “எனது எழுத்துகள் இலக்கியம் இல்லை” என உதவி ஆசிரியர் கபிலன் அதற்குத் தலைப்புக் கொடுத்தார். நகர்மலரின் நடுப்பக்கத்தில் பேட்டிக் கட்டுரை வெளியானது. அதன் ஒரு படியை சுஜாதாவின் பெங்களூர் முகவரிக்கு அனுப்பி வைத்தேன்.

கட்டுரை வெளியான பின்னர் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற பொழுது வா.கா.வாக நின்றுகொண்டிருந்த மாணவர், “என்ன சார் இப்படி எழுதிட்டீங்க?” என்றார். துணைவேந்தராக இருந்த வசந்திதேவி, “உங்க பேட்டி நல்லா இருந்துச்சுன்னு பொறியியல் கல்லூரி பேராசிரியர் சொன்னார். ஆனா காரமா வெளிவந்திருக்கே” என்றார். நான் எல்லா கேள்விகளுக்கும் புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்துவிட்டு வந்தேன்.

இந்நிகழ்வு நடந்த சில நாள்களிலேயே தினமலருக்கும் எனக்கும் முரண்பாடு முற்றி நான் வெளியேறினேன். நான் அனுப்பி வைத்திருந்த பேட்டிக் கட்டுரையைப் படித்த சுஜாதா கணையாழியின் அடுத்த மாத இதழின் கடைசிப் பக்கத்தில் பொங்கித் தீர்த்துவிட்டார்; அக்கட்டுரையை தினத்தந்தியின் சர்க்குலேஷனைப் பிடிக்க பார்ப்பனப் பத்திரிக்கைகள் செய்யும் சதி என்று திட்டித் தீர்த்திருந்தார்.

நிகழ்வு 2:

நான் அத்தோடு என்னுடைய இதழியல் வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டுவிட்டு சமூகச் செயற்பாட்டாளனாக தமிழகத்தின் வெவ்வேறு கிராமங்களில் சுற்றிக்கொண்டு இருந்தேன். 2002 ஆம் ஆண்டில் ஒரு நாள் நிலவுரிமை இயக்கச் செயற்பாட்டின் வேலையொன்றிற்காக சென்னை தலைமைச் செயலகத்திற்குச் சென்றுவிட்டு கடற்கரைச் சாலையின் நடைமேடையில் மெல்ல நடந்து வந்துகொண்டிருந்தேன். காமராசர் சிலைக்கு அருகில் வந்தபொழுது, அங்கு வந்து நின்ற மகிழ்வுந்து ஒன்றிலிருந்து கூன்விழுந்த ரெனாயிட்ஸ் பேனாவைப் போல ஒல்லியாய், உயரமாய், வெள்ளையாய் ஒருவர் இறங்கினார். எங்கோ பார்த்த உருவமாய் இருக்க, சற்று நின்றேன். அவர் கையைப் பின்னால் கட்டியவாறு நடைமேடையில் ஏறி நடந்து வந்தார். எனக்கு சில அடிகள் முன்னே வந்ததும் அவர் சுஜாதா என அடையாளம் கண்டுகொண்டேன். பத்தாண்டுகளில் மிகவும் தளர்ந்து போயிருந்தார். அருகில் வந்ததும். “வணக்கம்” என்றேன். நின்று முகத்தைப் பார்த்தார். “நீங்கள் எழுதுவது இலக்கியமா?” என்றேன் புன்னகையோடு. எதுவும் பேசாது சில நொடிகள் பார்த்தார். “இந்தக் கேள்வியை பத்தாண்டுகளுக்கு முன்னர் நெல்லையில் உங்களை நான் கேட்டேன்” என்றேன். கேள்வி நினைவுகூர்ந்தவராக, “தினமலரா?” என்றார். “இப்பொழுது தினமலர் இல்லை; நிலவுரிமை” என்றேன். “அப்படியொரு பத்திரிக்கையா?” எனக் கேட்டுக்கொண்டே நடந்துகொண்டே பேசலாம் என்பதைப்போல சைகைகாட்டினார். சேர்ந்து நடந்தோம். சாலையில் இருந்து கடற்கரைக்குப் போவதற்கான பாதையில் இருந்த பெஞ்ச் ஒன்றில் அமர்ந்தோம். சட்டைப்பையில் இருந்து சாக்லெட் கட்டியை எடுத்து இரண்டாய்ப் பிய்த்து ஒன்றை என்னிடம் கொடுத்துவிட்டு மற்றொன்றை சுவைத்துக்கொண்டே, “இப்ப நான் செய்யிறது எது சரியில்ல” என்றார். நான் சிரித்தேன்.

“சொல்லுங்க”
“திருக்குறளுக்கு எழுதிய உரை”
“நீங்கெல்லாம் மாறவே மாட்டிங்களா?”
“நீங்க மாறிட்டா; நாங்களும் மாறிருவோம்”
அதுவரை என் கண்கள் மீதிருந்த அவர் பார்வை, “ம்” என்னும் ஒலியோடு மறுபக்கம் திரும்பியது. அதற்குள் வேறு ஒருவர் அவரைப் பார்த்து புன்னகைத்தவாறு அந்த இருக்கையை நோக்கி வந்தார். “வருகிறேன்” எனக் கூறிவிட்டு நான் எழுந்தேன். அவர் மீண்டும் “ம்” என்றார்.
நான் கிளம்பி வந்துவிட்டேன்.
%%%

(இந்தக் கட்டுரை சர்வோதயம் மலர்கிறது என்னும் இதழின் 2014 ஏப்ரல் மலரில் பக்கம் 30 -33 இல் மறுவெளியீடு செய்யப்பட்டு இருக்கிறது.)

1 comment:

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...