விருது வேண்டுமா விருது!

2014 நவம்பர் அம்ருதா இதழில் வெளிவந்த கட்டுரை

சில ஆண்டுகளுக்கு முன்னர், அப்பொழுது நான் பணியாற்றிக்கொண்டு இருந்த நிறுவனத்திற்குக் கடிதம் ஒன்று வந்தது. தமிழ் வளர்ச்சித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற உயர் அலுவலர் ஒருவர் அதில் கையொப்பமிட்டு இருந்தார்.  அச்சிடப்பட்டு இருந்த அக்கடிதம், அந்நிறுவனம் இச்சமூகத்திற்கு ஆற்றி இருக்கும் அளப்பரிய பணிகளைப் பாராட்டி மூன்று திங்களுக்குப் பின்னர் சென்னையில் நடைபெற இருக்கும் விழாவில் விருது வழங்க இருப்பதை பெருமகிழ்வோடு அறிவித்தது. மேலும் அக்கடிதம் கிடைத்ததும் குறிப்பிட்ட தொலைபேசி எண் ஒன்றில் உடனடியாகத் தொடர்புகொண்டு பேசும்படி அது தெரிவித்தது.  ‘நிலமற்ற ஏழையரின் நிலவுரிமைக்காக வடஇந்தியாவில் போரடிக்கொண்டு இருக்கும் காந்திய இயக்கம் ஒன்றின் பயிற்சி நடுவமான அந்நிறுவனத்தின் எந்த அளப்பரிய பணியை இந்த தமிழலுவலர் அறிந்தார்? எப்படி அறிந்தார்?’ என அறியும் ஆவல் உந்த, கொடுக்கப்பட்டு இருந்த தொலைபேசி எண்ணை அழுத்தினேன்.  மறுமுனையில் அந்த தமிழலுவலரின் குரல் ஒலிக்க உரையாடல் தொடங்கியது.

ஐயா, உங்க கையொப்பத்தோட ஒரு கடிதம் எங்க நிறுவனத்திற்கு வந்திருக்குது.”
நீங்க அந்த நிறுவனத்தோட பொறுப்பாளரா?”
ஆமா
உங்க நிறுவனத்துக்கு விருது கொடுக்க முடிவுசெஞ்சிருக்கோம். மூணு மாதம் கழிச்சு சென்னயில நடக்கிற விழாவில இந்த விருத கொடுப்போம். விழா பாரிமுனையில இருக்கிற ஏ.சி. அரங்கத்துள நடக்கும். அதுல ஒரு பெரிய இசை அமைப்பாளரோட இன்னிசைக் கச்சேரி இருக்கு. தமிழ்நாட்டோட பல பகுதியில இருக்கிற உங்கள மாதிரி பெரியவங்க நிறயப் பேரு வருவாங்க. அப்ப நீங்க விருது வாங்கினா உங்களோட புகழும் உங்க நிறுவனத்தோட புகழும் தமிழகம் முழுக்கப் பரவும். இல்லீங்களா?” தமிழலுவலர் விற்பனைப் பிரதிநிதிக்கே உரிய திறனோடுவிருது வலையை வீசத்தொடங்கினார்.

அவரது இலக்கு என்ன என்பதை அறியும் ஆவல் என்னுள் ஊற்றெடுக்க, “இது நீங்க தனியாளா கொடுக்கிற விருதா, இல்லை  எந்த அமைப்பாவது கொடுக்குதா?” என தூண்டிற் புழுவொன்றைத் தூக்கிப்போட்டேன்.

இல்லஇல்ல... பதிவுபெற்ற அமைப்பு ஒண்ணுதான் இந்த விருத தருது. அதுக்கு நான்  தலைவரா இருக்கேன். அன்னைக்கு உங்கள மாதிரி 300 பேருக்கு விருது கொடுக்கப்போறோம்நீங்க மதுர இல்லையா? அப்ப காலைல வைகைல கிளம்பி வந்தா விருது வாங்கிட்டு விழா முடிஞ்சு பாண்டியன்ல ஊருக்குத் திரும்பிரலாம்உங்க வேல கெடக்கூடாது பாருங்க. அதுனாலதான் இப்படி ஏற்பாடு பண்ணியிருக்கோம்.” என்று என அந்தத் தூண்டிற் புழுவைப் பிடித்து எனக்கு திருப்பிப் போட்டார். “அப்படியா!” என்றேன். இந்த மீன் சீக்கிரம் சிக்கிவிடும் என நினைத்தார் போலும். உரையாடலைத் தொடர்ந்தார்.

ஆமாங்க ஐயாஉங்க முழுவுருவப் புகைப்படத்த மறக்காம அனுப்பி வைச்சுருங்க. அத விருதுக் கேடயத்துல சிலை மாதிரி நிறுத்தி வைக்கனும். அப்புறம் சென்னயில 300 பேருக்கு விருது. ஏசி அரங்கு. இன்னிசைக் கச்சேரி. இதுக்கெல்லாம் கொஞ்சம் செலவாகும். அதுனால நீங்க உங்க பங்களிப்பா ஒரு மூவாயிரம் ரூபாயும் அந்த புகைப்படத்தோட அனுப்பி வைச்சிங்கன்னா நல்லாயிருக்கும்.”
முதல்ல நிறுவனத்துக்கு விருதுன்னு சொன்னிங்க. இப்ப எனக்கு விருதுன்னு சொல்லிறீங்க
உங்களுக்குன்னா என்னா, உங்க நிறுவனத்துக்குன்னா என்னா. எல்லாம் ஒண்ணுதான.”
எங்க நிறுவனத்த உங்களுக்கு எப்படித் தெரியும்?”
டெலிபோன் டைரக்டரில பாத்தேன்

எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது. உரையாடலைத் துண்டித்தேன்சில திங்களுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் உள்ள பல அலுவலங்களில் அந்த தமிழலுவலரிடம் வாங்கிய விருதுக் கேடயங்கள் காட்சி அளித்தன.

அதன் பின்னர், இதுபோன்றவிருதுகள் பற்றி பலரிடம் உசாவியபொழுது, அவற்றுள் பலவற்றின் பின்னணிக் கதைகள் இதனைப்போலவே இருந்தனஇவ்வாறுவிருது விற்றல்நிகழ்வின் நோக்கங்களாக விருது வழங்கும் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதும் அதன் நிறுவனருக்கு புகழொளி கூட்டுவதாகவுமே இருக்கின்றன. தகுதியற்று இவர்கள் விற்கும் விருதுகளை வாங்குபவர்களில் பெரும்பாலானவர்கள் தகுதியற்றவர்களாகவே இருக்கிறார்கள். சிலவேளைகளில் அதுநாள் வரை கண்டுகொள்ளப்படாத தகுதியுடையோர் சிலரும் இந்த விருதுகளை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்

புகழ்பெறாதவர்கள் புகழ்பெறும் நோக்கத்தோடு புகழில்லாதவர்களுக்கு விற்கும் விருதுகள் ஒருபுறம் என்றால் புகழ்பெற்றவர்கள் புகழ்பெற்ற நிறுவனத்தின் வழியாக புகழ்பெற்றவர்களுக்கு வழங்கும் விருதுகள் மற்றொரு வகை. இந்தபுகழ் விருதுகளின் நோக்கங்கள் வழங்குபவரைப் பொருத்து மாறுபட்டுக்கொண்டே இருக்கின்றன.   தன்னை தானே விளம்பரம் செய்துகொள்ளும் வித்தையைக் கற்ற ஒருவர் கொடுக்கும் விருதின் நோக்கம் தன்னை மேலும் விளம்பரம் செய்துகொள்வதாக இருக்கிறது.   பரம்பரைச் செல்வந்தர்கள் சிலரும் திடீர் செல்வந்தர்கள் பலரும் தகுதியுடைய சிலருக்கு தத்தம் நிறுவனங்களின் வழியோ, தாம் புரவலராக இருக்கும் நிறுவனங்கள் வழியோவிருதுகளை வழங்கி தம் மீது வீசப்படும் அல்லது வீசப்படக் காத்திருக்கும் விமர்சனக் கணைகளை மறைக்க அல்லது மறக்கவைக்க முனைகிறார்கள்முற்போக்குப் பார்வை, அறநோக்கு வாழ்க்கை என தம் படைப்புகளின் வழியே உரத்து முழங்கிய தகுதியுடைய சிலர், இந்த தகுதியற்றவர்களிடம் விருதுகள் பெறும்பொழுது, தம்நிலையில் இருந்து அவலவீரர்களாக வீழ்ந்துவிடுகிறார்கள்.

தனியார் விற்கும் அல்லது வழங்கும் இத்தகு விருதுகளின் கதை இதுவென்றால்,  இந்திய இலக்கிய மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்டஇலக்கியக் கழகம்’ (சாகித்திய அகாதெமி) 1955ஆம் ஆண்டு முதல், இடையில் ஐந்தாண்டுகள் நீங்கலாக, ஒவ்வோராண்டும் விருது வழங்குகிறது. அவ்விருதை வழங்கத் தொடங்கிய நாளில் இருந்தே தொடங்கிய முணுமுணுப்புகள் மெல்ல மெல்ல வளர்ந்து, கவிஞர் தமிழ்நாடன், “சாகித்திய அகாதெமி தமிழ் விருதுகள் சில விவரங்கள் விசாரங்கள்என்னும் சிற்றேடு  ஒன்றினை எழுதும் அளவிற்கு வளர்ந்ததுதகுதியுடையவர்களுக்கு காலம் கடந்து வழங்கப்பட்டது, தகுதியுடையவரின் தகுதியற்ற படைப்பிற்கு வழங்கப்பட்டது, தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்டது என இவ்விருது பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு இருக்கின்றன.   தமிழ்மொழியின் ஞானபீட விருது என்று புகழப்பட்ட தமிழ் பல்கலைக் கழகத்தின் இராசராசன் விருது வெகு சிலருக்கே வழங்கப்பட்டு அரசியல் காரணங்களால் முடக்கப்பட்டுவிட்டது. அவ்விருது வழங்கப்பட்ட பொழுது பல கண்டனங்களும் கருத்தாடல்களும் முகிழ்த்தனதமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளைப் பெறுவதற்கு உரிய தகுதிகளைவிட, அரசியல் தகுதிகள் அதிகம் தேவைப்படுவதாக பேச்சுகள் நிலவுகின்றனஇருப்பினும் படைப்பாளர்களுக்கு விருதுகொடுத்துப் பாராட்டுவதற்குத் தகுதியுடையனவாக இந்த அமைப்புகள் இருக்கின்றன என இலக்கிய உலகம் ஏற்றுக்கொண்டு இருக்கிறதுஎனவேதான், மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இவ்வமைப்புகள் ஓவ்வோராண்டும் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயரை அறிவித்ததும் அத்தேர்வு பற்றி வெளிப்படையான கருத்தாடல்கள் நிகழ்கின்றனபாராட்டுகளும் கண்டனங்களும் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால்விளம்பர விருதுகள் பற்றி இதுபோன்ற கருத்துரைகளோ, கண்டனங்களோ பொதுவெளியில் உரைக்கப்படுவது இல்லைஇதனால் இத்தகு விருதுகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டு இருக்கிறது.  விருது வழங்கியவர்கள் தம்மை தமிழ்க்காவலராகக் கருதிக்கொள்கிறார்கள். தகுதியுடைய தமிழறிஞர்கள் சிலர் இவர்களுக்குத் துணையாக இருப்பதுதான் வேதனையின் உச்சம்தகுதியுடைய படைப்பாளரை ஏற்று, பாராட்டி, புகழந்து, கொண்டாடி ஊக்குவிக்க தகுதியுடையவர்கள் தவறும்வரை இந்த அவலங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும்.  

இவைகளுக்கு அப்பால்கலை - இலக்கிய மேம்பாட்டில் உண்மையான அக்கறையும் படைப்பாளிகளைப் பாராட்டி ஊக்குவிப்பதில் தன்னலமற்ற விருப்பமும் உடைய அமைப்புகள் சில இல்லாமற் போய்விடவில்லைஅந்த அமைப்புகள் நல்லறிஞர்கள் உதவியோடு விருதிற்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து பாராட்டுகின்றன. அதனால் அவ்வமைப்புகள் தம்முடைய நம்பகத்தன்மையைத் தக்கவைத்துக்கொண்டு இருக்கின்றனஅதனால் அவை அறிவிக்கும் விருதுகளுக்கு மதிப்பும் அதனைப் பெறுபவர்களுக்குப் பெருமிதமும் ஏற்படுகின்றன.   இத்தகு அமைப்புகளின் எண்ணிக்கை பெருகுவதும் அவற்றின் தரம் ஆண்டிற்கு ஆண்டு உயர்வதும் இலக்கிய மேம்பாட்டிற்கு வழிவகுக்கும்.  


விருது பெறுவதற்கான தகுதி தனக்கு இருந்தும், தகுதியுடைய அமைப்பு விருதுகொடுக்க முன்வந்தும் அதனைப் பெற்றுக்கொள்ள மறுத்த சான்றோர்கள் சிலரும் தமிழிலக்கிய உலகில் இருந்தனர்இருக்கின்றனர் என்பது பலருக்கு வியப்பாக இருத்தல் கூடும். மணிக்கொடி எழுத்தாளர் குழாத்தைச் சேர்ந்தவரும் எழுத்து இதழின் ஆசிரியருமான சி.சு.செல்லப்பா அத்தகவையர்களில் குறிப்பிடத்தக்கவர்.  தகுதியுடைய நிறுவனங்கள் மட்டுமே அவருக்கு விருதுகொடுக்க முன்வந்தன;  ஆனால் அவரோ அவ்விருதினை மறுத்தார். அம்மறுப்பின் வழியாக அவ்விருதிற்கும் அவ்வமைப்பிற்கும் பெருமை சேர்ந்தது.  அத்தகு சான்றோரும் தகமைசால் அமைப்பும் பெருக்கும் வரைவிருது வேண்டுமா விருதுஎன்னும் வணிக்குரல் இலக்கியத் தெருவில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். அதனை, “எனக்கு ஒன்றும் அவருக்கு ஒன்றும் கொடுஎனக் கேட்டு வாங்குபவர்கள் வலம்வந்துகொண்டுதான் இருப்பார்கள். நாம்தான் அவர்களை இனங்கண்டு ஒதுக்கப் பழக வேண்டும்!


கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...