(வினைத்திட்பம்
என்னும் நெடுங்கதையை தேனி விசாகன் எழுதியிருக்கிறார். 2014 ஆம் ஆண்டு மார்ச்சு திங்களில்
இக்கதையின் ஈற்றயல் வடிவிற்கு எழுதப்பட்ட மதிப்புரை இது. இதில் கூறப்பட்டுள்ளவற்றுள்
கொள்வன கொண்டு, தள்ளுவன தள்ளி கதையின் இறுதிவரைவு
விரைவில் நூலாக வெளிவர இருக்கிறது.)
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பதினொரு உட்கிடை
கிராமங்களைக்கொண்ட ஊராட்சி மாருகால்பட்டி. சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்த கட்சிக்கான
மருகால்பட்டிக் கிளையின் செயலாளரும் அரசு ஒப்பந்தக்காரருமான புரட்சியார் என்பவர் உள்ளாட்சித்
தேர்தலில் தன் தந்தை அன்னஞ்சித் தேவரை ஊராட்சி மன்றத் தலைவராக ஆக்க மேற்கொள்ளும் முயற்சியைப்
பற்றி தேனி மாவட்ட பிரமலைக் கள்ளரின் பேச்சு வழக்கில் எடுத்துரைக்கும் புனைவே வினைத்திட்பம்
என்னும் நெடுங்கதையாக விரிந்திருக்கிறது. இந்திய
ஒன்றிய அரசின் நாற்காலியில் குவித்திருக்கும் அதிகாரத்தை, இந்திய அரசமைப்பின் பிற உறுப்புகளான மாநில அரசு,
மாவட்ட அரசு, ஊராட்சி ஒன்றிய அரசு, ஊராட்சி அரசு ஆகியவற்றிற்கு கீழிருந்து மேல்நோக்கிய
வடிவில் முக்கோண வடிவில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது காந்தியின் கனவு; அதனை நிறைவேற்றுவதற்கான
வடிவமே கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஊராட்சிமன்றத் தேர்தல் எனக் கூறப்படுகிறது. ஆனால்
அத்தேர்தல் எப்படி கட்சி அரசியலுக்கு உட்பட்டதாகவும் அறுவடையை எதிர்பார்த்து பணத்தை
விதைக்கும் வயலாகவும் இருக்கிறது என்னும் உண்மை மருகால்பட்டி ஊராட்சி மன்றத் தேர்தலின்
ஊடாகப் பேசுகிறது இப்புனைவு.
இந்திய ஒன்றியத் தேர்தல் ஆணையமும் மாநிலத் தேர்தல் ஆணையமும் வேட்பாளர் ஒருவருக்காகச்
செய்யப்படும் தேர்தல் செலவிற்கு உச்ச அளவை நிர்ணயித்து இருந்தாலும் நடைமுறையில் அந்தக்
கட்டுப்பாட்டை யாரும் மதிப்பதில்லை. சிற்றூராட்சித்
தலைவர் பதவியைப் பிடிப்பதற்கு முப்பத்து நான்கு இலட்ச ரூபாய் செலவிடப்படும் வழியையும்
அப்பணம் திரட்டப்படும் முறையையும் விவரிப்பதன் வழியாக, இவ்வளவு தொகையைச் செலவிடுவதற்கான
நோக்கம் என்ன என்னும் விடை தெரிந்த வினாவை யாரும் வெளிப்படையாகக் கேட்கவோ உள்மனதில்
ஆராயவோ விரும்புவதில்லை என்பதை இக்கதை குத்திக்காட்டுகிறது. சாதியும் மதமும் தேர்தலில் வகிக்கும் பங்கினை எல்லோரும்
அறிந்திருந்தாலும் அவற்றைப் பற்றிப் பேசுவதில்லை. அதிலும் சாதியக் கட்டமைப்பை உடைத்து
அதன் கடைக்காலையே பிடுங்கி எறிய வேண்டும் தொடர்ந்து போராடிய பெரியார் ஈ.வெ.இராவை தம்
முன்னோடி எனக் கூறிக்கொள்ளும் அரசியல் கட்சியினர் ஒவ்வொரு தொகுதிக்கும் தம் கட்சிக்கான
வேட்பாளரை அந்தந்தத் தொகுதியில் பெரும்பான்மை சாதியிலிருந்தே தேர்ந்தெடுக்கும் சீரழிவு
நடக்கிறது. அதன்பின்னர் அந்த வேட்பாளரை வெற்றிபெற வைக்க எந்தெந்தச் சாதியிலிருந்து
எவ்வளவு வாக்குகள் வரும்; வரவேண்டும்; வரவைப்பது எப்படி என ஆராய்ந்து அவ்வாக்குகளைப்
பெற ஒருவரது தனிப்பட்ட பலவீனத்தை அறிந்துகொண்டு அதனைச் சுட்டிக்காட்டி மிரட்டுதல் தொடங்கி
தன் நண்பரை தானே தாக்கிவிட்டு, அப்பலியை மற்றவர்கள் மீது சுமத்து வரை; உள்ளூர் திருவிழாவின்பொழுது
தன் அடிப்பொடிகளை மது அருந்தக்கூடாது எனக் கட்டுப்படுத்துவது முதல் பரிவட்டம் பெறுவதை
விட்டுக்கொடுப்பது வரை எதைச் செய்தேனும் பதவியை எட்டிப் பிடிக்க எத்தனித்தல் இன்றைய
தேர்தல் முறையின் அவலமாக இருக்கிறது. அந்த அவலத்தைத்தான் புரட்சியார், அவர் நண்பர்கள்
ரத்னவேல், நண்பர்கள் ராபர்ட்ரவி, மணிமாறன், புரட்சியாரின் தந்தை அன்னஞ்சித்தேவர், அவர்
நண்பர்கள் தரகர் முத்துசாமி, குட்டக்காளை ஆகிய மனிதர்களை மருகால்பட்டியில் உலவவிடுவதன்
வழியாக விசாகன் இவ்‘வினைத்திட்பத்’தில் புனைந்திருக்கிறார். இந்தக் கதை மருகால்பட்டியில்
நடந்தாலும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சிற்றூரும் ஒவ்வொரு மருகால்பட்டியாகவே இருக்கின்றன
என்னும் உண்மையை இப்புனைவைப் படிக்கும்பொழுது உணர முடிகிறது. அந்த உணர்வு,
“சாதாரண கிராமத்தில் வசிக்கும் இவர்கள் என்ன மாதிரியான திட்டங்களை எல்லாம் தீட்டுகிறார்கள்?
தாங்கள் விரும்புவதை அடைவதற்கு எதையும் செய்யும் மனதைரியம் இவர்களுக்கு எந்த அனுபவத்தின்
அடிப்படையில் வருகிறது? கிடைக்கும் சந்தர்ப்பத்தை
எப்படியாவது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்னும் முனைப்பு, வெறி எங்கிருந்து இவர்களுக்கு
வருகிறது? இவர்களுக்கே இப்படியெல்லாம் சிந்திக்கத்
தோன்றுகிறது என்றால் மாநில அளவில், மத்தியில் ஆள்பவர்கள் என்ன மாதிரியான திறமையுடன்
செயலாற்றுவார்கள்?” என இக்கதையின் மாந்தரில் ஒருவரான ராபர்ட்ரவியின் மனதில் எழும் வினாகளை
நம்முடைய மனதிலும் எழுப்புகிறது. அனைவருடைய குரலுக்கும் இடமும் மதிப்பும் அளிக்க வேண்டிய
மக்கள்நாயகமானது பணம்படைத்தவர்களின், ஆள்பலம் மிக்கவர்களின், சூதில் வல்லவர்களின் ஆடுகளமாக
மாறிப்போன சூழல் கையறுநிலை காட்சியா இக்கதையில் வரையப்படுகிறது.
2
ராபர்ட்ரவி தங்கியிருக்கும் விடுதியின் அறையை, “வீடில்லாதவர்களுக்கு ஒரு லட்ச
ரூபாயில் அரசு கட்டித்தரும் இந்திரா நினைவு குடியிருப்பைவிட இரண்டு மடங்கு பெரியதாக
இருந்தது” என்றும் ஒவ்வொரு சிற்றூரிலும் சேரி என்னும் ஒதுக்குப் புரத்தில் வாழ நிர்பந்திக்கப்படும்
தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதாரநிலையை, “ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் சிமிண்ட் தளம்
இருக்கின்றதோ இல்லையோ தெரியாது. ஆனால் தொண்ணூற்று
ஆறில் கலைஞர் ஆட்சிக்கு வந்தபோது உலக வங்கியிடம் கடன்பெற்று தொடங்கப்பட்ட அண்ணா மறுமலர்ச்சித்
திட்டத்தின்கீழ் ஒவ்வாரு வீதியையும் சிமிண்ட் தளம் ஆக்கிரமித்தது. மக்கள் இரவு நேரத்தில்
வீட்டிற்குள் படுக்காமல் வீதியில் போடப்பட்டு இருக்கும் சிமிண்ட் தளத்தையே படுக்கையாகப்
பயன்படுத்திக்கொண்டு இருப்பதற்கான அடையாளமாக ஒவ்வொரு வீட்டின் முன்புறத்தில் நைந்துபோன
பாய்கள் மற்றும் சாக்குகள் சுருட்டி வைக்கப்பட்டு இருந்தன” என ஊராட்சியால் போடப்பட்டு
இருக்கும் சிமிண்டு சாலையை வர்ணிப்பதன் வழியாக இந்நாட்டில் நிலவும் சமூகப் பொருளாதார
முரண்களை எள்ளிநகையாடுகிறார் விசாகன்.
பொருளாதார ஏற்றத்தாழ்வும் சுகாதார சீர்கேடும் சாதிய ஆதிக்கமும் சூழ்ந்திருக்கும்
சிற்றூரின் நிலையை மாற்றுவதற்காகத் தாம் பிறப்பெடுத்து இருப்பதாகத் தேர்தலுக்குத் தேர்தல்
கூச்சலிடும் அரசியல்வாதிகள், அதன் பின்னர் அவற்றை மறந்துவிடுவதும் அந்த நிலை அப்படியே
தொடர்வதில்தான் தம்முடைய நலன்கள் புதைந்திருக்கிறது என்பதனை அவர்கள் உணர்ந்திருப்பதையும்
“சுகாதாரக்கேடுகள் குறித்து இரண்டு பெரிய கட்சியினரும் அடிக்கடி பேசுவார்கள், ஆனால்
செயலில்காட்ட மறந்துவிடுவார்கள்” என்பது உள்ளிட்ட கூற்றுகளில் விசாகன் பல்வேறு அரசியல்கட்சிகள்
பற்றிய தன்னுடைய கருத்துகளைப் பதிகிறார்.
“திராவிட இனவெறி, கிருஸ்துவ மதமாற்றத்திற்கு உதவிசெய்யும் விசயம்” என்றும் “எப்பேற்பட்ட
சூழ்நிலை வந்தாலும் இறுதியில் நம்மை காபந்துசெய்ய இடதுசாரிகள் வருவார்கள் என்பதில்
ஐயம் வேண்டாம்” என மதமாற்றி ஒருவரின் கூற்றாக விசாகன் முன்வைக்கும் கருத்துகள் விவாதத்திற்கு
உரியவை. மதமாற்றங்களால் இந்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாகக் குறைகிறது எனவே மதமாற்றத்தை
அனுமதிக்கக் கூடாது; அவ்வாறு அனுமதிப்பது போலி மதச்சார்பின்மை என்பது வலதுசாரிகளின்
வாதம். அடிப்படை மாற்றத்தாலன்றி மதமாற்றங்களால் சமத்துவம் வந்துவிடாது; ஆனால் மதம்
மாறுவதற்கு ஒருவருக்கு உள்ள உரிமையை மறுக்கக் கூடாது என்பது இடதுசாரிகளின் வாதம். இவ்வாதத்தில்
உள்ள நேர்மையை மறுத்து அவர்களையும் போலி மதச்சார்பின்மையினராகக் காட்டுவது இந்துத்துவ
அறிவாளிகளின் அண்மைக்கால அணுகுமுறை. அந்த அணுகுமுறையை அப்படியே தான் ஏற்றுக்கொண்டதைப்
போன்ற தொனியில் “கம்யூனிஸ்ட்கள் நம்மைக் காப்பாற்றுவார்கள்” என மதமாற்றி ஒருவரின் கூற்றை
எந்த விமர்சனமும் இல்லாமல், இச்செய்திகளை எல்லாம் நன்கு அறிந்த இடதுசாரியான, விசாகன்
பதிவு செய்வது சற்று நெருடலாக இருக்கிறது.
அதேவேளையில் மதமாற்றங்களை ஆதரித்தும் எதிர்த்தும் அரசியல் கட்சிகள் எவ்வாறு
தம்முடைய இடத்தை அரசியல் அரங்கில் தக்கவைத்துக்கொள்ள முனைகின்றன என்பதனைத் தெளிவாக
அவர் பதிவுசெய்திருக்கிறார்.
3
தலித்துகள் அரசியல் தெளிவற்றவர்கள்; பணம் கொடுத்தவர்களுக்கோ தம் முதலாளியால்
கைகாட்டுபவர்களுக்கோதான் அவர்கள் வாக்களிப்பார்கள். தமது நலனைக் கோரிப்பெறுவதற்கான வாய்ப்பாகக்கூட தேர்தலில்
தம் வாக்கு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டார்கள் என்னும் நம்பிக்கை சமுதாயத்தின் எல்லோருடைய
பொதுபுத்தியிலும் விதைக்கப்பட்டு இருக்கிறது.
அந்தப் பொதுபுத்தி உண்மைதானா என்னும் வினாவை இக்கதை எழுப்புகிறது; ஆனால் விடையைக்
கூற மறுக்கிறது.
மருகால்பட்டியில் உள்ள குடியானவர்கள் சமமாகப் பிரிந்ததால், தலித்துகள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்களே
வெற்றிபெற முடியும் என்றநிலை உருவாகி இருக்கிறது. இது தெளிவாக இருதரப்பினருக்கும் தெரிகிறது.
தலித்துகள் வழமையாக ஆளும்கட்சிகுத்தான் வாக்களிப்பார்கள் என இரு கட்சியினரும் அறிவர்.
எனவேதான் எதிர்க்கட்சியைச் சேர்ந்த புரட்சியார், தலித் மக்களுக்கு நெருக்கமாக இருக்கும்
ராபர்ட்ரவியைத் தாக்கிவிட்டு அப்பலியை ஆளும்கட்சியினர் மீது போட்டு, அம்மக்களை அக்கட்சிக்கு
எதிராகத் திருப்ப முனைகிறார். இந்நிகழ்வுகள் அனைத்தும் தலித்துகள் அரசியல் தெளிவற்றவர்கள்
என்னும் பொதுப்புத்தியை அடிப்படையாகக்கொண்ட செயல்கள். தேர்தல் நாளன்று தலித்துகள் தேர்தல்
சாவடிக்கு வந்து அமைதியாக வாக்களிக்கிறார்கள். அவர்கள் எக்கட்சிக்கு வாக்களித்திருந்தாலும்
அரசியல் தெளிவற்றவர்கள் ஆவார்கள். மாறாக அவர்கள் தம் வாக்கை செல்லாத வாக்குகளாக பதிந்திருந்தால்
இருதரப்பினருக்கும் தம்முடைய எதிர்ப்பைத் தெரிவித்தவர்கள் ஆவார்கள். ஆனால் அவர்கள்
எவ்வாறு வாக்களித்தார்கள் என்பதனைப் பற்றிய எந்தத் துப்பும் இக்கதையில் கோடிட்டுக்கூட
காட்டப்படவில்லை என்பது குறையாகவே படுகிறது. ஒருவேளை ஒரு புனைவை உண்மை என நம்ப வைப்பதற்காக
தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., ம.தி.மு.க என இன்று தமிழகத்தில் இயங்கிக்கொண்டு இருக்கும்
கட்சிகளின் பெயர்களை அப்படியே பயன்படுத்தி இருப்பதும் மோதல் தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும்
எனக் காட்டியிருப்பதும் கதையின் ஓட்டத்தை மருங்காபட்டியில் வென்றவர்கள் தி.மு.க.வா?
அ.தி.மு.க.வா? அல்லது இவர்கள் இருவரும் தத்தம் பகடைக்காய் என நினைத்த தலித்துகளா? என்பதனை
விசாகன் எழுதிக்காட்ட இயலாமற் போய்விட்டதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
4
கதை நெடுக பழைய, புதிய திரைப்பாடல்கள் சூழலுக்குப் பொருத்தமாகவும் பெரிய விவரணையைத்
தவிர்த்து சில வரிகளில் தன்னுடைய கருத்தை கதைமாந்தர்கள் வெளிப்படுத்த ஏதுவாகவும் பயன்படுத்தப்பட்டு
இருப்பது சிறப்பாக இருக்கிறது. அதேவேளையில்,
இக்கதையின் போக்கிற்கும் நோக்கிற்கும் எவ்வகையிலும் தேவையற்ற வகையில் மந்தையம்மன் கோவில்
திருவிழாவில் நடைபெறும் கரகாட்டப் பேச்சுகளையும் மணிமாறனுக்கு உள்ள பட்டப்பெயரும் அதற்கான
பெயர்க்காரண விளக்கமும் துரியோதனன் ஏன் தன்னால் கேணயனாகப் பார்க்கப்படுகிறான் என்பதற்கு
அன்னஞ்சித்தேவர் கூறும் காரணமும் வட்டார வழக்கில் எழுதப்படும் நடப்பியல் கதைகளில் கொச்சையான
சொல்களும் கதைகளும் இருக்க வேண்டும் என்னும் பொருளற்ற வழக்கத்தைப் பின்பற்றி கூறப்பட்டு
இருக்கின்றன. அவற்றைத் தவிர்த்திருக்கலாம்.
5
இந்நாட்டில் நடைபெறும் தேர்தல் திருவிழாவில் மக்கள்நாயகம் என்னும் தலைமைக் கதைமாந்தர்
அரசியல்வாணர்களால் எவ்வாறு காவு வாங்கப்படுகிறார் என்பதனை தனது முதற்கதையிலேயே விசாகன்
சிறப்பாகச் செதுக்கியிருக்கிறார். வரும் நாள்களில்
இன்னும் சிறப்பான அரசியல் கதைகளை அவர் வழங்க வாழ்த்துகள்!