இராமலிங்க விலாசம்

இராமலிங்க விலாசம்
கலைநயம்மிக்க நுழைவாயில்.  உள்ளே நுழைந்தால் திறந்த வெளி முற்றம். அதில் கிழக்கு நோக்கி அமைந்த, உயர்ந்த மேடை. அதன்மீது இரண்டு முகப்புத் தூண்களை உடைய பெரிய கட்டிடம். இதுதான் இராமநாதபுரத்தில் இருக்கும் இராமலிங்க விலாசம்; சேது நாட்டின் மன்னர்களான சேதுபதிகள் கொலுவீற்றிருந்து அரசு செலுத்திய அத்தானி மண்டபம்.  இதன் தரையில் கண்விழித்துப் படுக்கும் ஒருவர் தாம் ஓவியம் நிறைந்த வண்ணப்பெட்டி ஒன்றிற்குள் படுத்திருக்கிறோமே என எண்ணத் தோன்றும் அளவிற்கு சுவர்களிலும் கூரைகளிலும் 18 ஆம் நூற்றாண்டு ஓவியங்களைக் கொண்ட கலைப்பெட்டகம். 

வரலாறு:
சேதுநாட்டை 1678 ஆம் ஆண்டு முதல் 1710 ஆம் ஆண்டு வரை ஆண்ட ஏழாவது சேதுபதியான கிழவன் சேதுபதி என்னும் இரகுநாத சேதுபதி, தன்னுடைய தலைநகரை புகழூரிலிருந்து இராமநாதபுரத்திற்கு மாற்றினார். சிதைந்துகொண்டிருந்த பாண்டியர் கட்டிய மண்கோட்டையை அகற்றிவிட்டு செவ்வக வடிவிலான கற்கோட்டையைக் கட்டினார்.  அதனுள் அரண்மணை, விருந்தினர் மாளிகை, அரசவை உள்ளிட்ட பல கட்டிடங்களைக் கட்டினார். அவற்றுள் ஒன்றுதான் இராமேசுவரம் சிவனின் பெயரால் அமைந்த இந்த இராமலிங்க விலாசம் ஆகும்.  இதில் கிழவன் சேதுபதிக்கு பின்னர் ஒன்பது சேதுபதிகள் தன்னுரிமைபெற்ற அரசர்களாக 1772ஆம் ஆண்டு வரை கொலுவீற்றிருந்தனர். அதன்பின்னர், இம்மாளிகை ஆங்கிலேயரின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்தது.  1803ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டு வரை ஒன்பது சேதுபதிகள் ஆங்கிலேயருக்கு அடங்கிய பெருநிலக்கிழார்களாக  (ஜமீந்தார்கள்) இம்மாளிகையிலிருந்து ஆட்சி செலுத்தினர்.  1947ஆம் ஆண்டு முதல் 1978ஆம் ஆண்டு வரை சேதுபதிகள் குடும்பத்தினரின் சொத்தாக இருந்த இம்மாளிகை, 1978ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை தமிழ்நாட்டரசின் தொல்லியற்றுறையின் பாதுகாப்பில் இருக்கிறது.  அத்துறையின் சார்பில் அருங்காட்சியகம் ஒன்றும் இதனுள் இடம் பெற்றிருக்கிறது.

நுழைவாயில்
அமைப்பு:
இம்மாளிகை கிழக்கு மேற்காக 153 அடி நீளமும் வடக்கு தெற்காக 65 அடி அகலமும் கொண்ட 14 அடி உயரமுள்ள செவ்வக மேடையின் மீது கருங்கல், செங்கல், சுண்ணாம்பு ஆகியவற்றைக் கொண்டு கட்டபட்டு இருக்கிறது. இது மகாமண்டபம், அர்த்த மண்டபம் என்னும் முன்மண்டபம், கருவறை என்னும் அகமண்டபம், அதன் மீது ஓர் அறை, அவ்வறைக்கு முன்னே திறந்தவெளி முற்றம், அறைக்கு மேலே ஓய்வெடுக்கும் இருக்கை என ஒரு கோவிலின் அமைப்பில்  உருவாக்கப்பட்டு இருக்கிறது. 
 
கல்யாழி
தரையில் இருந்து மண்டபத்திற்குள் செல்ல 16 நீண்ட படிகள். காலவோட்டத்தில் சாலையும் முற்றமும் மேடாகிவிட்டதால் 7 படிகள் மண்ணில் மூழ்கிவிட, தற்பொழுது 9 படிகளே கண்ணிற்படுகின்றன. அவற்றின் இரண்டு புறமும் அழகிய கல்யாளிகள் இருக்கின்றன.  அவை மண்டபத்தைத் தொடும் இடத்தில் இரண்டு உயரமான வட்டத் தூண்கள் நிற்கின்றன.  இவற்றிற்கு நடுவில் மண்டபவாயில். தூண்களின் வடக்கிலும் தெற்கிலும் ஒரு பாக இடைவெளியில் மண்டபத்தின் கிழக்குப்புறச் சுவர்கள்.  வாயிலைக் கடந்ததும் மகாமண்டபம் அமைந்திருக்கிறது.  

மகாமண்டபம்
அதில் வரிசை ஒன்றிற்கு எட்டுத்தூண்கள் வீதம் நான்கு வரிசையில் நாற்பத்தெட்டு வட்டத் தூண்கள். அவற்றின் மேற்புறத்தை அரைவட்ட வளைவுகள் இணைக்கின்றன.  மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையை நினைவூட்டும் இம்மண்டபத்தின் தெற்கு, வடக்கு சுவர்களில் பக்கவாட்டு வாயில்கள் இருக்கின்றன. தென்மேற்கு மூலையில் சேதுபதிகளின் திருமுழுக்கு மேடை அமைந்திருக்கிறது.  இம்மண்டபத்தில்தான் நாடகவியல் என்னும் நூலை இயற்றிய பரிதிமாற்கலைஞர் தனது கலாவதி, மானவிசயம் உள்ளிட்ட நாடகங்களை அரங்கேற்றினார்.  பெரும்புலவர்களான மு. இராகவர், இரா. இராகவர் போன்றோர் தம் தமிழ்த் தொண்டை ஆற்றினர்.  

சேதுபதியர் சிலைகள்
மகாமண்டபத்தின் மேற்கே ஐந்து படிகள் ஏறினால் முன் மண்டபம் அமைந்திருக்கிறது. அதன் கூரையை இருபது கருங்கற் தூண்கள் தங்கி நிற்கின்றன. இம்மண்டபத்தின் தெற்குச் சுவரில் ஒரு காலதர் இருக்கிறது.  அதன் மேலே தெற்கு, மேற்கு சுவர்களின் உச்சியில் சேதுபதிகள் ஒன்பதின்மரின் சிலைகள் இருக்கின்றன.  இவை உடையான் சேதுபதி என்னும் சடைக்கன் சேதுபதி (1601-1623) தொடங்கி முத்துவிசய ரகுநாத சேதுபதி (1713-1725) வரையிலான ஒன்பதின்மரின் சிலைகளாக இருக்கலாம் எனக் கருத்தப்படுகிறது.
 
அகமண்டபம்
முன் மண்டபத்திற்கு மேற்கே 12 கற்தூண்களாலான அக மண்டபம் அமைந்திருக்கிறது. இதனை தற்பொழுது இராமர் பீடம் என அழைக்கின்றனர்.  அவ்வறையின் வடகிழக்கில் உள்ள படிகளின் வழியே மேலே ஏறினால் 12 கற்தூண்களை உடைய மாடி அறை இருக்கிறது.  இவ்வறையில்தான் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அன்றைய கிழக்கிந்திய கும்பணியின் நெல்லை மாவட்டத் தண்டல்காரரான சாக்சன் என்பவரை 1798 செப்டம்பர் 10 ஆம் நாள் பேட்டி கண்டார்.  “வானம் பொழியுது; பூமி விளையுது; உனக்கு ஏன் கட்ட வேண்டும் கப்பம்” என கட்டபொம்மன் கூத்தில் முழக்கப்படும் உரிமைக்குரல் இவ்வறையில்தான் எழுப்பப்பட்டு இருக்கிறது!

மாடியறைக்கு முன்னர் திறந்த வெளி முற்றம்.  அறைக்கு மேலே உள்ள மாடியில் இருக்கை ஒன்று இருக்கிறது. இதில் சேதுபதியும் அவர் சுற்றத்தினரும் மாலை வேளைகளில் அமர்ந்து ஓய்வெடுப்பராம்.

ஓவியங்கள்:
இராமலிங்க விலாசத்தின் உட்புறச் சுவர்களிலும் கூரைகளிலும் உள்ள ஓவியங்களை, சேது நாட்டை 1713ஆம் ஆண்டு முதல் 1725 ஆம் ஆண்டு வரை ஆண்ட முத்துவிஜய ரகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலத்தில் வரைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.  ஓவியங்களில் சேதுபதியாக இவருடைய உருவமே பதியப்பட்டு இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  இங்குள்ள ஓவியங்களை சேதுபதியின் அக வாழ்வு ஓவியங்கள், புற வாழ்வு ஓவியங்கள், இறையுணர்வு ஓவியங்கள் எனப் பகுப்பர்.

சேதுபதிக்கும் தஞ்சை மராட்டியருக்கும் நடைபெற்ற போர்
மகாமண்டபத்தின் கிழக்குச் சுவரில் சேதுபதிக்கும் தஞ்சை மராட்டிய மன்னருக்கும் இடையே நடந்த போர்க்காட்சிகள் ஓவியமாக்கப்பட்டு இருக்கின்றன.  தென்சுவரில் சேதுபதி தன் மனைவியரேடு கொலுவீற்றிருத்தல், அவரின் நகருலா, அவர் வெளிநாட்டினரைச் சந்தித்த நிகழ்வு ஆகியன காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. வடக்குச் சுவரில் திருமாலின் பத்துப் பிறப்புகளும் தனித்தனி ஓவியங்களாக வரையப்பட்டு உள்ளன. 

முன் மண்டபத்தின் சுவர்களில் கிருட்டிணனின் பிறப்பு, ஆயர்பாடியில் அவர் நிகழ்த்திய வீரச் செயல்கள், அவருக்கு மகுடம் சூட்டல் ஆகிய காட்சிகள் வரையப்பட்டு உள்ளன.  மேலும் தமிழ்நாட்டிலுள்ள சைவ, வைணவ இடங்களின் தோற்றங்களும் ஓவியமாக இடம்பெற்றுள்ளன.
 
சிதைந்த நிலையில் இராமயாணக் காட்சிகள்
அக மண்டபத்தில் இராமயாணத்தை வால்மீகி எழுதக் காரணமான கிரெளஞ்சவதம் தொடங்கி, இராமன் சீதையை மணமுடித்தல் வரையுள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன.  அவ்வோவியங்களின் அடியில் தமிழிலும் சில இடங்களில் தெலுங்கிலும் காட்சிவிளக்கம் எழுதப்பட்டு இருக்கிறது.  மேற்கூரையின் வில்வளைவுகளில் சேதுபதியும் அவர் மனைவியும் மன்மதனும் ரதியுமாகக் காட்சியளித்தல் என்பன உள்ளிட்ட அந்தப்புரக் காட்சிகள், தன் குலதெய்வமான இராசராசேசுவரியிடம் இருந்து சேதுபதி செங்கோல் பெறுதல், திருமாலின் அருளைப் பெறுதல், முதியவர் ஒருவர் இராமாயணம் படிக்க சேதுபதி அதனைக் கேட்டல், முத்து விசய ரெகுநாத சேதுபதிக்கு மதுரை மன்னர் முத்துவிசயரங்க சொக்கநாத நாயக்கர் பட்டாடை அணிவித்தல், ஐரோப்பியர் ஒருவரிடம் சேதுபதி பரிசு பெறுதல், சேதுபதியின் நகருலா, பல்வேறு செல்வங்கள், அயிராவதம், சிந்தாமணி, பத்ரபீடம், கற்பகமரம், காமதேனு,  எண்திசைக் காவலர்களின் உருவங்கள் ஆகியன பதியப்பட்டு உள்ளன. 

யானை, குதிரை ஆகிய போல பெண்கள் சிலர் ஒன்றிணைந்து நிற்க, அவர்கள் மீது சேதுபதியும் அவர் மனைவியும் மன்மதனும் ரதியும் போல மலர்கணைகளோடு நிற்கும் காட்சி
மாடி அறைச் சுவர்களில் சேதுபதி மன்னர் இசையைக் கேட்டும் நடனத்தைக் கண்டும் இன்புறுதல், மனைவியரோடு கூடி மகிழ்தல், நீராடுதல், நடனம் ஆடுதல் ஆகிய காட்சிகள் வரையப்பட்டு உள்ளன.   மேலும் கிளி, அன்னம், யானை, குதிரை ஆகிய போல பெண்கள் சிலர் ஒன்றிணைந்து நிற்க, அவர்கள் மீது சேதுபதியும் அவர் மனைவியும் மன்மதனும் ரதியும் போல மலர்கணைகளோடு நிற்கும் காட்சிகளும் பல்வேறு வடிவங்கள் கொண்ட மதுக்குடுவைகளின் நடுவே சேதுபதியும் அவர் மனைவியும் அமர்ந்திருக்கும் காட்சியும் வேட்டைக் காட்சியும் இடம் பெற்றுள்ளன.

மொகலாய ஓவியங்களிலும் நாயக்க ஓவியங்களிலும்  காணப்படுவது போன்ற ஆடை, அணிகலன்களும் ஒப்பனைகளும் இவ்வோவியங்களில் முதன்மை பெற்றுள்ளன. எனவே, இவ்வோவியங்கள் தமிழர்கள் மீது நடந்தப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளின் தாக்கத்தை பேசாமல் பேசுகின்ற சாட்சிகளாக இருக்கின்றன.


கூரையில் பூசிய சுண்ணாம்பு வண்ணங்கள் ஓவியங்களிற் பட்டு அவற்றைச் சிதைத்திருக்கின்றன

இச்சாட்சிகளை சிறுகீறல் கூட விழாமல் பாதுகாக்க வேண்டிய தொல்லியற்றுறையோ, பராமரிப்பு என்கிற பெயரால் இவ்வோவியங்கள் சிலவற்றில் துளையிட்டு விட்டங்களைச் செருகியிருக்கிறது; கூரையில் பூசிய சுண்ணாம்பு வண்ணங்கள் ஓவியங்களிற் பட்டு அவற்றைச் சிதைத்திருக்கின்றன.  இவை முழுமையாக சிதைவதற்கு முன்னர் அவற்றைப் படியெடுத்து நூலாகவும் காணொளியாகவும் ஆவணப்படுத்த வேண்டும்.  பின்னர் அவற்றை மீட்டுருவாக்கம் செய்தல் வேண்டும்.   கலையையும் தமிழையும் வளர்த்த இம்மண்டபத்தில், போதிய ஊழியர்கள் இல்லாததால், தூசும் குப்பையும் மண்டிக் கிடக்கின்றன. வரலாற்றையும் கலையையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடு இங்கு வருவோருக்கு அவற்றை விளக்கமாக அன்று, சுருக்கமாக எடுத்துரைப்பதற்குக்கூட ஆள்கள் இல்லை.  ‘வரலாறு, கடந்த காலத்தின் பதிவு மற்றுமன்று; வருங்காலத்திற்கான வழிகாட்டியும் கூட’ என்பதனை உணர்ந்து உரிய நடவடிக்கைகளை தொல்லியற்றுறை மேற்கொள்ள வேண்டும். இவையே கலை, பண்பாட்டு, வரலாற்று ஆய்வாளர்களின் ஆர்வலர்களின் விருப்பமாகவும் வேண்டுகோளாகவும் இருக்கின்றன.

1 comment:

  1. வணக்கம் உறவுகளை, வானம்பொழிகிறது பூமிவிளைகிறது உனக்கு ஏன் வரி என உண்மையில் சொன்னது சாதாரண மக்கள் மதுரை மாவட்டம் மேலூர் தாலூக வெள்ளலூர் நாட்டுமக்கள் தான்

    ReplyDelete

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...