காற்றின் நிறம் பச்சை உப்பின் நிறம் சிவப்பு

 


மார்க்சியச் செயல்பாட்டாளரான பர்வதவர்த்தினி பெண்ணுரிமைக் களத்திலும் குழந்தைகள் உரிமைக் களத்திலும் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருப்பவர். நாடக நடிகர், ஆய்வாளர், உரையாளர் எனப் பன்முகங்கொண்ட அவரின் இன்னுமிரு முகங்கள் எழுத்தாளர், கவிஞர் ஆகியன. முந்தைய மூன்று முகங்களும் அவரது களச்செயற்பாட்டில் வெளிப்படுபவை. பின்னிரு முகங்களும் அவரது முகநூற்பதிவுகளின் வழியே பலருக்கும் தெரியவந்தவை.  அவர் தனது களப்பணி, செலவு (பயணம்), உரையாடல் ஆகியவற்றில் தான் பெற்ற பட்டறிவுகளை அவ்வவ்பொழுது முகநூலில் தொடர்ந்து பதிகிறார்; அவற்றின் வழியாக மற்றவர்களோடு உரையாடி தன்னையும் பிறரையும் செழுமைப்படுத்துகிறார். அத்தொடர்வினையில் குழந்தைகள் தொடர்பாக முகநூலில் அவரெழுதிய 52 பதிவுகளின் தொகுப்பேகாற்றின் நிறம் பச்சை; உப்பின் நிறம் சிவப்புஎன்னும் நூல். இவற்றுள் சில பதிவுகள் சிறுகதைக்கான களங்கள்!

இலிட்டில்சு (Littles) என்னும் அறக்கட்டளையின் வழியாக மதுரை நாகமலைப் புதுக்கோட்டையிலும் அதனைச் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் வாழும் விளிம்புநிலைக் குழந்தைகளின் குழந்தைமையையும் உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் அவ்வூர்களில் குழந்தைகள் நடுவங்களை அமைத்துள்ளார் இந்நூலாசிரியர். அந்நடுவங்களுக்கு வருகைதரும் குழந்தைகளிடமிருந்தும் தனது வெளியூர்ச் செலவுகளின்பொழுது கண்ட குழந்தைகளிடமிருந்தும் தன் இரு குழந்தைகளிடமிருந்தும் அவர் பெற்ற பட்டறிவையும் கற்றல்களையும் பேச்சுநடையும் எழுத்துநடையும் விரவிவர எழுதப்பட்டுள்ள இப்பதிவுகள் குழந்தைகளின் அறிவார்வம், அறிவுக்கூர்மை, கரவின்மை,  பக்குவம், பாடுகள், வாதைகள் ஆகியன போன்றவற்றைப் பேசுகின்றன. 

குழந்தைகளின் மனநிலையிலிருந்து குழந்தைகளோடு உரையாடுவது ஒரு கலை. அங்ஙனம் உரையாடுவோரையே குழந்தைகள் தம் தோழராக ஏற்றுக்கொண்டு தமது அகவுலகை அச்சமின்றித் திறந்துகாட்டுகின்றனர். இயல்பிலேயே உற்சாகமும் குதூகலமும் துலங்க வளையவருபவரான நூலாசிரியர் வெகுஇயல்பாகத் தனக்கும் குழந்தைகளுக்கும் இடையே எழுந்துநிற்க வாய்ப்புள்ள தடைகளை எல்லாம் ஒரு புன்னகையில், ஒரு வினாவில், ஒரு கையசைவில் சில நொடிகளில் கடந்து அவர்களோடு நெருங்கும் நுட்பந்தெரிந்தவர். அதனால்தான், பேருந்தில் சென்னையிலிருந்து திருச்சி வருவதற்குள் முன்னிருக்கையிலிந்த மூன்று அகவைக் குழந்தைக்கு அவரால் தோழராகிவிட முடிகிறது; குழந்தைகளாலும் அவரோடு தோழர்களாகிவிட முடிகிறது.

மனத்துக்கண் மாசிலரான அக்குழந்தைத் தோழர்கள் நூலாசிரியருக்கு விதவிதமாய் வாழ்க்கைப்பாடம் கற்பிக்கிறார்கள். ஒரு குழந்தை, வீட்டுப்பாடத்தை எழுதாமல் நடித்துக்காட்டுகிறார். இன்னொருவரோ அவருக்குக் கற்றுக்கொடுக்க முனைந்த தன்னார்வாளரைத் தளரவைத்து தனது வீட்டுப்பாடங்களை தன் தம்பியை எழுதப் பணித்துவிட்டு படுத்துக்கொள்கிறார். வேறொருவரோ தன்னை ஒரு செடியாக உருவாகித்து அவர் ப்ப்பூ என ஊதும்பொழுது வாயிலிருந்து வெளிவரும் காற்றும் பச்சைநிறம் எனக் கற்பனைச்சிறகை விரிக்கிறார்.  பிறிதொரு குழந்தையோ பாடம் எல்லாவற்றையும் படபடவென ஒப்பித்துவிட்டு, எழுதிக்காட்ட மறுக்கிறார்.  சாக்லெட்டு வண்ணத்தாளோடு மரத்தில் முளைக்குமா, குளத்திலிருக்கும் பொழுது ஓடி ஒளியும் மீன் கண்ணாடித் தொட்டிக்குள்ளிருக்கும்பொழுது தான் மீன் என்பதையே மறந்துவிடுகிறதா, ஆண்டுதோறும் வெயில்காலத்தில் ஏன் மீனாட்சிக்குத் திருமணம் செய்கிறார்கள் என வாய்ப்புக் கிடைக்குமிடங்களில் எல்லாம் ஆய்வுசெய்கிறார் இன்னொரு குழந்தை.

வளரிளம் பருவத்தைக்கூட எட்டாத அக்குழந்தைத்தோழர்கள் நுண்ணுணர்வு கொண்ட நனிநாகரிகளாகவும் இருக்கின்றனர். ஒருவர், நூலாசிரியரின் வீட்டு வாசலில் வந்துநிற்கும் நாய்க்கு ஒரு பெயரைச்சூட்டிவிட்டு அப்பெயர் அந்த நாய்க்குப் பிடித்திருக்கிறதா எனக் கேட்டுச் சொல்லும்படி வேண்டுகிறார். மற்றொருவரோ, தந்தையை இழந்த நன்றாகப்படிக்கும் தன் நண்பரை நடுவத்திற்கு அழைத்துவந்து அறிமுகம் செய்துவிட்டு அந்நண்பர் அப்பால் சென்றதும் அவரது திறனையும் துயரையும் அன்பாய் மொழிகிறார். 

உண்டுறைவிடப்பள்ளியில் படிக்கும் குழந்தையின் ஏக்கம், மலைப்பள்ளியில் படிக்கும் ஆதிவாசிக் குழந்தை பள்ளிக் காலங்கடந்து செல்லும்பொழுது அப்பள்ளி ஆசிரியர்கள் அவரைத் திட்டாததன் காரணம், விடுதியைத் திறக்காமலேயே 12ஆம் வகுப்பிற்குச் சிறப்பு வகுப்புத் தொடங்கும் பள்ளியால் உண்ணவும் உறங்கவும் இடமின்றி மாணவர் தவித்தல் என அரசு அமைப்புகளின் மறுபக்கத்தை குழந்தைகள் சிலர் பகிர்கின்றனர்.

அதிகமாய் விளையாடிக் கொஞ்சமாய்ப் படிக்கும் அந்நடுவக் குழந்தைகள்  பொறுப்புடையவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தமது சிறுவாட்டுப் பணத்தையும் திரட்டிய நன்கொடையையும் இணைத்து புயலால் பாதிக்கப்பட்ட செருதூருக்குத் துயர்துடைக்கும் நிதியாக அளிக்கிறார்கள். வழக்கறிஞராக விரும்பும் குழந்தை ஒருவர், ‘மனந்தான் பேய்என மற்ற குழந்தைகளோடு வாதிட்டு அறிவுபுகட்டிக்கொண்டிருக்கிறார். பேருந்தில் குழந்தை தன் தோழர்களிடம் தாம் பெரியவரானதும் தண்ணியடிக்கவும் கூடாது, அம்மா பிள்ளகளையும் அடிக்கக் கூடாது, சாராயக்கடை நடத்துகிறவர்களைத்தான் அடித்துவிரட்ட வேண்டும் என்கிறார். தவறு செய்த குழந்தைகளிடமே அவர்களது தவறைச் சரிசெய்யும் பொறுப்பைக் கொடுக்கும்பொழுது அவர்கள் மிகச்சரியாய் அவற்றைக் கையாள்கிறார்கள். பெற்றோர் வாங்கிய கடனிற்காகக் கந்துவட்டிக்கொடுக்கும் ஆசிரியரின் வசவுகளைத் தாங்கிக்கொள்ளுகிறார் ஒரு குழந்தை. தன் குழந்தைக்குப் பெயர் வைக்கும் உரிமை தனக்கே உள்ளது என நூலாசிரியருக்கு அறிவுறுத்துகிறார் அவர் மகன்.

சில குழந்தைகளின் துயரம் நூலாசிரியரின் துயரமாக மாறி அத்துயரைத் துடைக்க ஏதேனும் செய்ய வேண்டுமென அவரைத் தூண்டிக்கொண்டே இருக்கின்றன. மாணவனைப் பனைமட்டையைச் சீவிக்கொண்டு வரச்செய்து அம்மட்டையாலேயே அவனை அடித்து ஓடவைத்த பள்ளியைப்பற்றிக் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் ஒன்றில்

அறிந்தபொழுது நூலாசிரியரின் மனத்தில் வெகுளி பூக்கிறது. மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளி வளர்ந்து பொறுப்புள்ள இளைஞராய்த் தனக்கு முன்னர் வந்து நிற்கும்பொழுது  மகிழ்கிறார். குடிக்கு மருந்துக் கண்டுபிடிக்கத் துடிக்கும் குழந்தை தன் தாயையும் தம்பியையும் குடிகாரத் தந்தை மூட்டிய தீயில் இழந்தவள் என்பதை அறிந்து நொறுங்குகிறார். உப்பளங்களில் வேலைசெய்யும் வளரிளம் பெண்குழந்தைகள் அவர்களது பணியிடத்தில் கழிப்பறை இல்லாத்தால் படும் துயரை இவர் அறிந்த பின்னர் இவரது வீட்டிலிருக்கும் உப்பின் நிறம் சிவப்பாக இவருக்குத் தெரிகிறது. ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் குழந்தை வழியில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி கருகிச் செத்ததைக் கண்டதால் கனத்த மனத்தோடு நூலாசிரியர் கூறுகிறார், “இனியும் விழிக்காட்டி, திரும்ப  முதல்லேருந்து தொடங்க வேண்டியிருக்கும்”.

இங்ஙனம் குழந்தைகளின் விதவிதமான எண்ணங்களை, கற்பனைகளை, கதைகளை, துயரங்களைப் பேசும் இந்நூலை நீங்களும் படித்துப்பாருங்களேன்!!

எழுத்தாளர்: பர்வதவர்த்தினி; பதிப்பு: முதற்பதிப்பு; ஆண்டு: 2019 செப்டம்பர்; பக்கம்: 102+4; விலை: ரூ 100/-; பதிப்பகம்:  காலம் வெளியீடு, 25 மருதுபாண்டியர் 4ஆவது தெரு, கருமாரியம்மன் கோவில் எதிர்வீதி, சரவணா மருத்துவமனை அருகில், மதுரை 625 002.

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...