வெற்றுப்பையில்
கொஞ்சங்கொஞ்சமாய்ச்
சேர்ந்த காசுகள்
இவ்வரிவடிவங்களின் வழியே
சிதறுகின்றன
இவை-
ஏதேனுக்குப்
பாதைபோடும்
ஏற்பாடுகள்

எழுக வருக

இன்றில்லை நாளைவரும் இல்லை இல்லை
      என்றேனும் ஒருநாளில் வந்தே தீரும்
என்றிருந்த விழாவிதனில் தலைமை யேற்று
    இருக்கின்ற எமதருமைத் தலைவர் தலைவ
நன்றில்லை நும்பாதை நம்பி வாவா
    நல்லவழி காட்டுகிறேன் நம்வி வாவா
என்றழைத்து வழிநடத்தி எம்மைக் காத்து
    இவ்வாண்டே ஓய்வுபெறும் முதல்வர் முதல்வ

அண்டத்தை சுருக்கியொரு குடுவைக் குள்ளே
    அடக்குகின்ற வித்தையிலை கல்வி நல்ல
பண்டத்தைச் சுவைகெட்டும் போகா வண்ணம்
    பாதுகாத்து வைக்கின்ற கலைதான் கல்வி
என்றிருக்கும் இந்தியத்துக் கல்விக் குப்பை
    இயக்கத்தில் இயன்றவரை நல்ல முத்தை
வென்றெடுக்கும் சபதத்தைக் கொண்டி ருக்கும்
    நன்மனத்துப் போதகரே நற்கல்வி வாணரே

இருள்கவியும் வகுப்பறையில் இருகண் சோர்ந்து
    இடையிடையே கண்மூடி மெல்லத் திரும்பி
சுருள்பாளைத் தென்னையினை தொட்டு மீண்டு
    சொலும்வார்த்தை கேட்பதுவாய் பாவம் செய்து
எதிர்காலம் பற்றியெழில் கனவும் கண்டு
    ஈராண்டு முடித்தின்று வெளியே சென்று
எதிர்காலம் தனைவெல்லும் புத்தி சாலிப்
    புத்தர்களே உங்களுக்கும் வணக்கம் சொன்னேன்

கல்லூரிக் கதவதனைக் கடந்து சென்றால்
    காண்கின்ற உலகத்தில் வாழ்க்கை எல்லாம்
செல்லரித்துப் போனதொரு மரமே ஆகும்
    செல்வங்களே நம்புங்கள் என்று யாரும்
சொல்லிவிடின் நம்பாதீர் நண்பர் நண்ப
   சொல்பவர்கள் கனவுலக மக்கள் ஆவர்
சொல்லுகிறேன் எதிர்காலம் நமது கையில்
   சோர்வின்றி உழைத்தாலோ உண்மை இஃது

என்பதனை நன்கறிந்த அன்பர் அன்ப
    இனிநமது வழித்தடம்தான் எங்கும் செல்லும்
என்பதையும் நன்கறிக இயன்றா லந்த
    இமயத்தின் முடிமீதும் கால்கள் பதிப்போம்
நல்லவராய் இருப்பதனால் மட்டு மிங்கே
    நன்மையெதும் விளைவதில்லை ஆத லாலே
வல்லவராய் வடிவெடுப்போம் தரையில் அந்த
    வானுலகைப் படைத்திடுவோம் எழுக வருக

அதற்காக

ஊனமில்லை எம்முடலில் நாங்கள் என்றும்
     உத்தமராய் இருந்திடுவோம் அண்ணல் காந்தி
காணவைத்த பொம்மைகளாய் உண்மை தன்னைக்
     காத்திருப்போம் வழிமாறோம் காண்பீர் என்றே
ஆனமட்டும் சொல்லிடுவோம் அதன்பின் எங்கள்
     அன்னையரின் முடிவின்பின் ஒளிந்து வாழ்வைப்
பேணமட்டும் கையூட்டுக் கொடுத்து வேலை
    பெற்றிடுவோம் எனும்வழக்கம் வேண்டா வேண்டா

அன்பர்களே தொடுவானம் தூர மில்லை
    அதன்தூரம் நமக்கொன்றும் பார மில்லை
இன்றில்லை என்றாலும் பரவா யில்லை
    எதுமில்லை என்றாலும் கவலை யில்லை
நன்றில்லை என்பதனை மட்டும் நீங்கள்
     நன்னிடுதல் கேடென்பேன் நமது தோற்றம்
வென்றிடத்தான் என்பதையும் விளம்பு கின்றேன்
     வேறில்லை நண்பர்களே வருகிறேன் வணக்கம்

(3.4.1989ஆம் நாளில் உத்தமபாளையம் ஹா.க.ரா.ஹெ. கல்லூரியில் வணிகவியல் முதுவர் பட்ட நிறைவு விழாவில் பாடியது)

கோலம்




இமைப்பு வினாடித் துகள்களின் இணைப்பில்
ஆதியும் அந்தமும் அற்றுப் பிறந்த
கற்பனைக் கோடு கணிதச் சிக்கலை
அவிழ்க்க உதவும் நூற்பா களுக்குக்
கட்டுப் படாத கனவுக் குழப்பம்
சுருங்கி நீளும் விடுதலைப் படைப்பு
தானே தெளியும் ஏரண முரண்மை
மனங்களை மலர்த்தி மகிழச் செய்ய
வட்ட வடிவினில் சுருண்டு கிடக்கும்
எண்ணக் குறியீடு இயற்கை யிலிவலை
படைத்த வரையே பற்றும் தீப்பொறி

நதி




நீர்மெத்தை மேரவிழ்த்த நீள்கூந்தல் மண்வானக்
கார்மேகம் நீலக் கடலடையும் நீர்ச்சாலை
வாய்க்கால்கை நீட்டி வயல்பற்றும் பேருயிரி
காயாய் இருக்கும் கடல்

தமிழ்த்தாய் வணக்கம்

வானக மீன்களும் வளம்வரு கோள்களும்
       வளர்புவி மீதினில் வளம்தரு மரங்களும்
                வருவதன் முன்னர் வந்தவர் வாய்மொழியே

கானகம் அழித்தெழில் கமழ்ந்திடும் நகர்பல
      கண்டு மகிழ்ந்தவர் கடல்பல கடந்திவ்
                வுலகைக் கணக்கிடும் கப்பலர் கவின்மொழியே

மானம் துறந்துயிர் வாழ மறுத்திடும்
      மனதுடைப் பெரியவர் மதிப்புறு நாவினில்
               மாநடனம் புரிகிற மதுரை மணிமொழியே

ஞானம் பற்பல நவில்ந்திடும் சான்றோர்
      நடக்கும் வழிதனில் நடந்திடும் எங்கள்
               நாவினில் அமர்ந்து நடம்புரி தமிழ்மொழியே

தமிழ்த்தாய் வணக்கம்

வெண்பட்டுப் போன்றவளே!
      வித்தைபல கற்றவளே!
              விடிவெள்ளி பெற்றமகளே!

பண்சொட்டும் வீணையே!
      பைந்தமிழே! பயிர்க்கூட்டப்
            பச்சையமே! பாமொழியே!

தண்கொட்டும் தளிர்நிலவே!
     தாமரையே! சிலம்பணிந்த
          தாய்ப்பெண்ணே! நீலநிற

விண்முட்டும் மாளிகையாய்
    விளங்குகின்ற பெரியோர்கள்
         விளையாடும் கவியுலகில்…

உத்திரத்தில் உளிகொண்டு
     ஒளிக்கலைஞன் செதுக்கிவைத்த
            ஒற்றைப்பூ வடிவமுள்ள

சித்திரத்தைப் போன்றவன்நான்
     சிறுபிள்ளை என்றலும்
             சிறப்பாக் கவிநெய்ய

நித்திரையில் கிடந்தாலும்
     நெஞ்சமெல்லாம் சர்க்கரையை
            நிறைக்கின்ற பெண்மணியே!

சித்திரையின் முழுநிலவே!
     சிங்கார மொழியே!உனை
            சிரந்தாழ்த்தி வணங்குகிறேன்!

தென்மதுரை யென்னுமெங்கள்
     தென்னவரின் பூமிதனில்
            தேனாகப் பாயும்நதியே!

தென்றலெனும் தேரேறி
     திசையெங்கும் பூமாரித்
            தெளிக்கின்ற தீந்தமிழே!

முன்னவர்கள் பாதைவழி
     முன்னோடி வந்திங்கே
            முத்தாரக் கவிவடிக்கும்

சின்னவன்நான் உன்முகத்து
     சித்திரத்தில் ஓரங்கம்
           சிரங்கோதி வாழ்த்துதாயே!

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...