Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

20140927

வளர்த்த யாகம்
வழங்கிய தானம்
செய்த பூசை
சேர்த்த செல்வம்
அனைத்தும் உதவா
ஆசையும்ஆணவமும்
அளவினை மீறும்காலை!

ஆகஸ்ட் 6

கிரோசிமா நகரைச் சூழ்ந்த அணுமேகம்

சமூக முகத்தின் பருக்களான
‘நான்’களின் சேர்க்கையால்
பிண்ட மனிதர்களையே பெற்றுப்போடும்
கிரோசிமாவில்
வெடித்த குண்டில் பிறந்த நான் –
இறுமாப்பில்லை
எதிர்வரும் அழிவின் எச்சரிக்கை
இயற்கைக் காம்பஸ் கிழித்த
எட்டாவது வட்டத்தின் வழியே
சூரியப்புள்ளியைச் சுற்றிவருகிற
நெப்டியூன்  கிரகத்தை நிரடிப் பார்க்கும்
அறிவியற் கையின் அழுகிய விரல்
செத்துப் பிறந்த
சோக நினைவின் சின்னம்
பூமியின் சுழற்சியில் பிறந்து மறையும்
நாற்றூசியில்லை
சுவஸ்திக் கொடியால்
கழுகும் கரடியும் சிங்கமும்
நரிகளாய் மாறிய நாளின்
நினைவுச் சின்னம்.
நான்
மஞ்சள் சப்பானியர்களின்
மரணத்தை மட்டுமே குறிக்கும் குறியீடில்லை
கல்பாக்கத்தில் காலூன்றி
கூடங்குளத்தில் குதித்திருக்கும்
கொலைக்களங்களின் முகவரி

(1989 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உரைவீச்சு)

வாழ்ந்து தழை!



புள்ளல்லவே? - நீ
புழுவல்லவே? - பின்
புல்லரைக் கண்டேன் அஞ்சுகிறாய்?
கல்லல்லவே? - நீ
கசடல்லவே? - பின்
கயவரைக் கண்டேன் இஞ்சுகிறாய்?
மண்ணல்லவே? - நீ
மரமல்லவே? - பின்
மடயரை ஏன்நீ கெஞ்சுகிறாய்?
விழலல்லவே? - நீ
வெற்றல்லவே? - பின்
வீணரைக் கண்டேன் துஞ்சுகிறாய்?

கண்ணைத் திற! - கீழ்
விண்ணை அறி! - இரு
கைகளை ஏனினும் கட்டுகிறாய்?
கூட்டை உடை! - சங்கை
ஊதி எழு! - சேவல்
கூவிய பின்னுமேன் தூங்குகிறாய்?
அச்சம் அறு! - தலை
வணங்க மறு! - பழம்
ஆண்டையைக் கண்டேன் மருளுகிறாய்?
அழுகை விடு! - தாழ்
வகத்தை ஒழி! - விதிச்
சகதியில் ஏனினும் பிறழுகிறாய்?

இலக்கை அமை! - அதை
எட்ட முனை! - அதில்
இடைவரும் தடைகளைத் தாண்டவிழை!
தொடர்ந்து முயல்! - தோன்றும்
துயரம் களை! - உன்றன்
தோள்வலி நன்கு துலங்கஉழை!
விளையும் பயன்! - பகிர்வில்
வேண்டும் சமன்! - அதை
வென்றிடத் தோழமை மறுத்தல்பிழை!
ஒப்பை அழை! - மனம்
ஒன்றி உழை! - இந்த
உலகம் பொதுவென வாழ்ந்துதழை!

காக்கைச் சிறகினிலே - சனவரி 2013 - பக்.32-33

அடையாளம் தேடும் அடையாளங்கள்


அடையாளம் அற்று இருக்கும்
அடையாளம்
அடையாளத்தால்  மறைக்கப்படுகிறது
அடையாளத்தோடு இருக்கும்
அடையாளமும்
அடையாளத்தால் மறைக்கப்படுகிறது
ஆயினும்
அடையாளம் அற்றஅடையாளமும்
அடையாளம் உள்ள அடையாளமும்
தத்தம்
அடையாளங்களைத் தேடி அடைகின்றன
அவ்வடையாளங்கள்
தம்
அடையாளங்கள்தானா
என்னும் ஐயம் எழுகையில்
அவ்வடையாளங்களைத் துறந்து
அடையாளத்தைத் தேடி அலைகின்றன

பகுத்தறிவு சூடி

யாரால் எங்கே எப்பொழுது என்ன
எப்படி யாருக்கு ஏன்என வினவிப்
பகுத்து விளைவை அறிந்து வாழ
ஊக்கும் வகையில் வகுத்த பாவே
பகுத்தறிவு சூடி என்னும்இந் நூலே

01 அறிவியலுணர்வு கொள்
02 ஆருடம் பொய்
03 இழிதொழில் ஏது?
04 ஈட்டுக அறிவு
05 உன்னை அறி
06 ஊர்நலம் பேண்
07 எளிமையே மேல்
08 ஏனெனக் கேள்
09 ஒழுக்கம் உயர்வு
10 ஓம்புக மானுடம்
11 கடவுள் இல்லை
12 காலம் கருது
13 கிலியைக் கொல்
14 கீழ்மை அறு
15 குலம்பல எதற்கு
16 கூடி வாழ்
17 கெடுமதி விடு
18 கேண்மை போற்று
19 கொடுமை எதிர்
20 கோலம் புதுக்கு
21 சடங்குகள் அகற்று
22 சாத்திரம் களவு
23 சிறப்புடன் வாழ்
24 சீர்மை தேவை
25 சுடர்முகம் தூக்கு
26 சூழல் நோக்கு
27 செந்தமிழ் பயில்
28 சேவை செய்
29 சொல்வழி நில்
30 சோர்வு நீக்கு
31 தமிழைப் புதுக்கு
32 தாய்மொழிவழி பயில்
33 திருத்துக பிழையை
34 தீண்டாமை மடமை
35 துருவிப்துருவிப் பார்
36 தூய்மையாய் இரு
37 தெளிவுடன் வாழ்
38 தேனீபோல் உழை
39 தொலைநோக்கு தேவை
40 தோழமை கொள்
41 நல்லவராய் நட
42 நானிலம் சுற்று
43 நிமிர்ந்து நில்
44 நீக்குவன நீக்கு
45 நுணுகி நோக்கு
46 நூல்பல கல்
47 நெறிவழி செல்
48 நேர்மையே கற்பு
49 நொவ்வுடல் தேற்று
50 நோயற்று வாழ்
51 பகுத்தறிந்து ஏற்றிடு
52 பாகுபாட்டை ஒழி
53 பிறரை மதி
54 பீடை ஏது
55 புலமை பெறு
56 பூமியைப் பொதுசெய்
57 பெண்டீர் பெரியோர்
58 பேருளம் கொள்
59 பொலிவுடன் விளங்கு
60 போர்வெறி விலக்கு
61 வல்லவராய் வாழ்
62 வாய்மை போற்று
63 விதி பொய்
64 வீண்கதை தவிர்
65 வுழைப்புப் பொது
66 வெறுப்பு வேண்டா
67 வேற்றுமை விலக்கு
68 மடமையைக் கொல்
69 மானம் பெரிது
70 மிகுபொருள் கேடு
71 மீன்போல் இயங்கு
72 முயற்சியே வெற்றி
73 மூடநம்பிக்கையை விலக்கு
74 மெய்யினைத் தேடு
75 மேன்மை நடத்தையில்
76 மொழிபல அறி
78 மோழைமை ஒழி


நூலக அந்தணர் வே.தில்லைநாயகம்

  யார் ? “‘ ஊருக்கு ஒரு நூலகம் ; ஆளுக்கு ஒரு நூல் - அதுவும் நான்கு பேர் - தாய் , தந்தை , மகள் , மகன் ஆகிய நான்குபேர் - நடுவீட்டில் நன்றாய...