வீட்டினைப் பூட்டாதீர்கள்.
வைகறைப் பொழுதினில்
தென்றலில் அலையும் இலையைப் போல
கனமற்றுப் போங்கள்
மிகவும் அழகென்றால்
சாம்பலைப் பூசிக்கொண்டு போங்கள்
மிகவும் அறிவாளியென்றால்
அரைத்தூக்கத்தில் போங்கள்
விரைந்துபோனால்
விரைந்து களைப்பீர்கள்
மெதுவாகப் போங்கள் -
ஏறத்தாழ அசைவில்லாது நிற்பதைப் போல
வடிமற்றிருங்கள்
நீரைப்போல.
அடித்தளத்திலேயே படிந்துவிடுங்கள்,
மேலே எழ
முயலாதீர்கள்
வலம் சுற்றாதீர்கள்
வெறுமைக்கு இடமும் வலமும் இல்லை
முன்னும் பின்னும் இல்லை
பெயரிட்டழைக்காதீர்கள்
அவனின் பெயருக்கு பெயரில்லை.
காணிக்கைகள் வேண்டாம்.
வெறுங்கிண்ணத்தை ஏந்துங்கள்,
நிறைகிண்ணத்தை ஏந்துவதை விட எளிதானது.
ஆசைகள் கொண்டோருக்கான
இடமில்லை இது.
பேசவிரும்பினால்
அமைதியோடு பேசுங்கள்
பாறைகள் மரங்களோடும்
மரங்கள் மலர்களோடும் பேசுவது போல
அமைதியே
எல்லாவற்றிலும் இனிய ஒலி
எதுவுமின்மையே
எல்லாவற்றிலும் அழகிய வண்ணம்
கால்பங்காய்ச் சுருங்கிப்போன
பாலத்துத் தூணின் கீழே
குளிரினில் ஆற்றைக் கடப்பவரைப்போல
உங்கள் வருகையையும்
உங்கள் செல்கையையும்
பிறர் அறியாதிருக்கட்டும்
உருகும் பனித்துளியைப்போல
குறுகிய கணமே உங்களிடமிருக்கிறது
நிகழ்த்துதல்கள் வேண்டாம்
நீங்கள் இன்னும் வடிவம் பெறவேண்டும்
கோபம் வேண்டாம்
தூசிகூட உங்களின் கட்டுப்பாட்டில் இல்லை
வருத்தம் வேண்டாம்
அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை
பாதையை மாற்ற புகழ் அழைத்தால்,
ஒரு காலடிச்சுவட்டைக்கூட
விட்டுவைக்காதீர்கள்.
கைகளை பயன்படுத்தவே வேண்டாம்
அவைகள்
எப்பொழுதும்
வன்முறையையே சிந்திக்கின்றன
அற்புதத்தை துறங்கள்
அற்புதத்திற்கு வேறு போக்கிடமில்லை
ஆற்றிலிருக்கும் மீன்களை
ஆற்றிலேயே இருக்கவிடுங்கள்
கொம்புக்கனிகளை
கொம்புகளிலேயே இருக்கவிடுங்கள்
மிகவும் கடிமானதே உடையும்
பற்களுக்கிடையில் இருக்கும் நாக்கைப்போல
மெல்லியது வளையும்
வாழ்வதற்காக
எதனையும் செய்யாதவர்களால்
எல்லாவற்றையும் செய்யமுடியும்
வாசலைக் கடந்து போங்கள்
உருவாக்கப்படாத சிலை
உங்களுக்காக காத்திருக்கிறது.
மலையாள மொழியில் கே. சச்சிதானந்தன் எழுதிய இக்கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் கவிஞர் டி.கே. தாமஸ். தமிழில்: யரலவழள)