திருமிகு மு. மாரியப்பனார் எழுதிய சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யுடன்...குமுகாயத்தை இயக்குபவர்கள் மூன்று வகையினர். தம்முடைய ஆசை, விருப்பம், எண்ணம், கருத்து ஆகியவற்றையே மக்களின் ஆசை, விருப்பம், எண்ணம், கருத்து என எடுத்துரைத்து, அவற்றிற்கு ஆதரவாகப் பொதுக்கருத்தை உருவாக்கி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவோர் ஒரு வகையினர். தம்மை அடியொற்றியே குமுதாயம் இயங்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம் ஆகும்.

மக்களின் ஆசை, விருப்பம், எண்ணம், கருத்து ஆகியவற்றின் வன்மை, மென்மைகளை ஆராயாமல் அவற்றை அப்படியே தம்முடைய கருத்தாக ஏற்று, பொதுக்கருத்தை உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களிடம் வலியுறுத்துவோர் இன்னொரு வகையினர். தம்மை அடியொற்றியே தாம் வாழும் குமுகாயம் இயங்குகிறது என்னும் தோற்றத்தை உருவாக்குவதே இவர்களுடைய நோக்கம் ஆகும்.

மக்களின் ஆசை, விருப்பம், எண்ணம், கருத்து ஆகியவற்றை நன்கு அறிந்து அவற்றின் வன்மை, மென்மைகளை தம்முடைய இயல்பறிவு (Wisdom), கல்வியறிவு (Knowledge), பட்டறிவு (Experience) ஆகியவற்றால் ஆய்ந்து, கொள்வன கொண்டு, தள்ளுவன தள்ளிய பின்னர் தேர்வனவற்றோடு தம்முடைய ஆசை, விருப்பம், எண்ணம், கருத்து ஆகியவற்றையும் இணைத்து, பொதுக்கருத்தை உருவாக்கி, அதனை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு புரியவைக்க முயல்கிற, தேவைப்பட்டால் இடித்துரைத்து உணர்த்துகிற இயல்பினர் மற்றொரு வகையினர். குமுகாயம் என்பது மக்களின் தொகுதி; எனவே மக்களின் நோக்கும் குமுகாயத்தின் நோக்கும் வேறுபட்டதாக இருக்கக் கூடாது.

அதேவேளையில் அந்நோக்கம் அக்குமுகாயத்திற்கும் அதில் வாழும் ஒவ்வொருவருக்கும் தீமை பயக்காததாக இருக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம் ஆகும். இந்த வகையைச் சார்ந்தவர்தான், 1906 ஆம் ஆண்டு சூன் திங்கள் 26ஆம் நாள் பிறந்து 1995ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 3ஆம் நாள் மறைந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி. என அழைக்கப்படும் மயிலாப்பூர் பொன்னுசாமி மகனார் சிவஞானம் ஆவார்.

கள்ளிறக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்து, வறுமைவாய்ப்பட்டு, இரண்டாம் வகுப்பிற்கு மேல் பள்ளிக்கல்வியைப் பெறமுடியாமல், குழந்தைத் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கியவர் அவர். தன்னுடைய இயல்பறிவாலும் பட்டறிவாலும் மெல்ல மெல்ல முன்னேறி தமிழக மேலவையின் தலைவராகவும் அமைச்சரின் தகுநிலையை உடைய தமிழ் வளர்ச்சி உயர்மட்டக் குழுவின் தலைவராகவும் உயர்ந்தவர். தன் இளமைக்காலத்தில் தமிழ் முன்னேற்றம், தமிழர் முன்னேற்றம், தமிழ்நாடு முன்னேற்றம் என முழங்கியவர். இந்திய தேசியத்தை மறுத்த திராவிட தேசிய இயக்கங்களின் வளர்ச்சிக்கு வேராக இருந்த தமிழ்ப் பண்பாட்டு மீட்டுருவாக்கத்தை, இந்திய தேசியத்திற்கு உட்பட்ட தமிழ்த் தேசியம் என்னும் வரையறைக்குள் நின்று மேற்கொண்டவர். எனவே திராவிட இயக்கக் கேட்பாடுகளோடு உவப்பற்ற பலரும் இவரால் ஈர்க்கப்பட்டனர். அவ்வாறு தம்முடைய 18ஆம் அகவையில் ம.பொ.சியால் ஈர்க்கப்பட்டு 20ஆம் வயதில் அவரோடு நெருங்கிப் பழகத் தொடங்கி, இன்று வரை அவரின் நேரிய தொண்டராக விளங்கும் மதுரை வழக்குரைஞர் மு. மரியப்பனார், தான் ம.பொ.சி.யுடன் கொண்ட நட்பைப் பற்றி 2006ஆம் ஆண்டில் (ம.பொ.சியின் நூற்றாண்டில்) எழுதிய 104 பக்க நினைவுக் குறிப்புகள், ஐந்தாண்டுகள் கழித்து மதுரை சர்வோதய இலக்கியப் பண்ணையின் வெளியீடாக அறுபது உருபாய் விலையில் கோவை ஓவியர் சீவாவின் உயிரோட்டமுள்ள ஓவியத்துடன் வெளிவந்திருக்கிறது.

காந்தியடிகளை எண்ணும் பொழுதெல்லாம் ம.பொ.சி.க்கு ஏற்படும் பெருமித உணர்வு ம.பொ.சி. யை எண்ணும் பொழுதெல்லாம் தமக்கு ஏறப்படுவதாக முன்னுரையில் குறிப்பிடும் ஆசிரியர், அப்பெருமிதத்திற்கு அடித்தளமாக அமைந்த நிகழ்வுகளையும் தன்னம்பிக்கை, அறிவுவிளக்கம், சில நற்குணங்கள், தமிழ்மொழிப்பற்று, தமிழின உணர்வு, ஆதனியத் தொடர்பு (ஆன்மீகத் தொடர்பு) என ம.பொ.சியால் தான் அடைந்த ஆளுமை மேம்பாட்டையும் நன்றிப்பெருக்கோடு இந்நூலெங்கும் பதிவு செய்திருக்கிறார்.

விடுதலைப் போராட்டக் காலம் தொடங்கி இன்று வரை வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டங்கள் நடைபெறும் மதுரை மேல மாசி வீதி - வடக்கு மாசி வீதி முக்கில் 1956ஆம் ஆண்டில் "தமிழினமே ஒன்றுபடு", "தமிழினத் தலைவர் ம.பொ.சி. வாழ்க" என தான் கேட்ட முழக்கங்களால் ஈர்க்கப்பட்ட நாள் தொடங்கி 1995ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 3ஆம் நாள் இரவு ம.பொ.சி.யின் மறைவுச் செய்தியை அறிந்து கிடைத்த வண்டியைப் பற்றியேறி, சென்னைக்குச் சென்று அவரது இறுதி நிகழ்வில் கலந்துகொண்டது வரை உள்ள காலப்பகுதியின் நிகழ்வுகள் பல இந்நூலில் 12 இயல்களாக எழுதப்பட்டிருக்கின்றன. எனவே, மலரும் பருவத்திலிருக்கும் இளைஞர் ஒருவர், கொள்கைப் பிடிப்பும் தலைமைப் பண்பும் உடைய தலைவர் ஒருவரின் நிழலில், அத்தலைவரின் ஒவ்வோர் அசைவையும் உற்றுநோக்கி, ஒவ்வொரு செயலைப் பற்றியும் கலந்துரையாடி விளக்கம் பெற்று வளரும் பொழுது தானும் தான் வாழும் குமுகாயத்திற்கு பயனுடையவராக எவ்வாறு பரிமளிக்கிறார் என்பதற்கு இந்நூல் சான்றாக இருக்கிறது.

அன்றாடம் நடைபெறும் அளவளாவல்களிலும் இயல்பான உரையாடல்களிலுமே எண்ணற்ற வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரைக்கும் இயல்புடைய மு. மாரியப்பனார், இந்நூலிலும் ம.பொ.சி.யைப் பற்றிய தன்னுடைய நினைவலைகளோடு இணைத்து, 1927 முதல் 1995ஆம் ஆண்டு வரையிலான தமிழக வரலாற்றை; தமிழ் மண்ணில் இயங்கிய இயக்கங்களின் வரலாற்றை; வாழ்ந்த, வாழ்கின்ற தலைவர்களின், தொண்டர்களின் வரலாற்றை தன்னுடைய கண்ணோட்டத்தில் பதிவு செய்கிறார். எனவே, ம.பொ.சியைப் பற்றிய நூலாசியரின் நினைவலைகள் என்னும் வரையறையைத் தாண்டி, ஏறத்தாழ 68ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றின் பருந்துப் பார்வையாகவும் இந்நூல் இருக்கிறது.

இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு உள்ளேயே தமிழ்ப்பண்பாட்டு இயக்கமாக ம.பொ.சி.யால் தொடங்கப்பட்ட தமிழரசுக் கழகம், 1947ஆம் ஆண்டு முதல் 1956ஆம் ஆண்டு வரை மொழிவழி சோசலிசக் குடியரசுகளும் அவற்றின் கூட்டரசாக இந்திய ஒன்றியமும் உருவாக வேண்டும் என ஒருபக்கம் போராடிக் கொண்டிருந்தது. மறுபக்கம், மொழிவழி மாநிலப் பிரிவினையால் தமிழகத்தின் வடக்கு, தெற்கு, மேற்கு எல்லைகளைக் காக்க அந்தப் பகுதியைச் சார்ந்த மக்கள் தலைவர்களைக் கொண்டு போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தது. அப்போராட்டங்கள் மதுரை மாநகரிலும் எதிரொலித்தன. அந்த எதிரொலிகள் ஈர்க்கப்பட்ட அந்நாளைய கல்லூரி மாணவரான நூலாசிரியர், அவற்றிற்கு காரணராக இருந்த ம. பொ.சியின் பெயரை 1956ஆம் ஆண்டில் முதன்முதலிற் கேட்டிருக்கிறார்; பின்னர் அவருடைய புகழைக் கேட்டு இருக்கிறார்; பின்னர் அவருடைய உரைகளைக் கேட்டு இருக்கிறார்; அதன் பின்னர் அந்த இயக்கத்தின் தொண்டர்களில் ஒருவராக தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். 1956-59ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தன்னிடம் ஏற்பட்ட இந்த நிலைமாற்றத்தையே "தமிழர் தலைவர் ம.பொ.சி" என்னும் தலைப்பில் இந்நூலில் முதல் இயலாகப் பதிவு செய்திருக்கிறார். அந்த இயலைப் படிக்கிற பொழுது, "முன்னை அவனுடை நாமம் கேட்டேன்; மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டேன்; பின்னை அவனுடை ஆரூர் கேட்டேன்; பெயர்த்தும் அவனுக்குப் பிச்சி யானேன்" என்னும் அப்பரின் பாடல் மனதில் மெல்ல இசை கூட்டுகிறது.

நூலாசிரியர் 1959ஆம் ஆண்டில் சென்னை சட்டக் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்து, திருவல்லிக்கேணி வெங்கடேசுவரா மாணவர் விடுதியில் தங்கிய பொழுது, தன்னுடன் படித்துக் கொண்டிருந்த கோவை சு. வெங்கட்ராமன் என்பவரின் உதவியால் ம.பொ.சி.யின் இல்லத்திற்கு முதன்முறையாகச் சென்று தன்னை அறிமுகம் செய்துகொண்டது தொடங்கி, 1961ஆம் ஆண்டில் திருத்தணி தமிழகத்தோடு இணைக்கப்பட்டு, ம.பொ.சி.க்கு அப்பகுதி மக்கள் "தணிகைகொண்டான்" என்னும் பட்டம் வழங்கி மகிழ்ந்தது வரையுள்ள காலப்பகுதியில் தமிழரசுக் கழகத்தினர்களான ம.பொ.சி., சு.வெங்கட்ராமன், க.ரா.கந்தசாமி முதலியவர்களுக்கும் தனக்கும் நட்பு முகிழ்த்த சூழல்களை, "சட்டக்கல்லூரிப் படிப்பும் ம.பொ.சி. தொடர்பும்" என்னும் இரண்டாவது இயலில் விவரிக்கிறார்.

தமிழகம், ஆந்திரம், கருநாடகம், சேரளம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியிருந்த சென்னை மாகாணம், மொழிவழி பிரிக்கப்பட்டு தமிழகமாக 1956ஆம் ஆண்டில் மலர்ந்த பின்னரும் சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டு வந்தது. எனவே தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட வேண்டும் எனக் கோரி 1961ஆம் ஆண்டில் தமிழரசுக் கழகம் நடத்திய போராட்டத்தில் ஒரு பகுதியாக, திருவல்லிக்கேணி வெங்கடேசுவரா மாணவர் விடுதியின் வாயிலிருந்து நடிகமேதை ஔவை தி.க.சண்முகம் தலைமையில் போராடக் கிளம்பியவர்களை வழியனுப்பி வைத்த நிகழ்வு தொடங்கி, தமிழரசுக் கழகம் தோன்றியதற்கான காரணத்தை விவரிக்கும் பகுதி "தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்" என்னும் மூன்றாவது இயலாக இந்நூலிற் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்திய விடுதலைக்கு எதிராக இருந்த நீதிக்கட்சியால் தொடங்கி வைக்கப்பட்டு திராவிடர் கழகத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்னும் நிலைப்பாடு எவ்வாறு இந்திய தேசிய காங்கிரசின் தமிழகக் கிளையில் தன்னுடைய செல்வாக்கைச் செலுத்தியது என்பது தொடங்கி, அச்செல்வாக்கை எதிர்த்த ம.பொ.சி.யை அன்றைய தமிழக காங்கிரசின் தலைவராக இருந்த கு.காமராசர் அக்கட்சியிலிருந்து வெளியேற்றிய காரணத்தை விளக்கி, 1962ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 21ஆம் நாள் வேலூரில் நடைபெற்ற தமிழரசுக் கழக மாநாட்டில் முதன்முறையாக தான் உரையாற்றிய நிகழ்வு வரையிலான தன்னுடைய நினைவலைகளையும் திராவிட இயக்கங்கள் பற்றிய தன்னுடைய மதிப்பீட்டையும் "திராவிட இயக்கமும் விளைவும்" என்னும் தலைப்பில் இந்நூலின் நான்காவது இயலாக நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

22.12.1962ஆம் நாள் சென்னையில் தன்னை வழக்குரைஞராகப் பதிவுசெய்து கொண்டது தொடங்கி, 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக, சுதந்திரா, முசுலீம்லீக், பொதுவுடைமைக்கட்சி, தமிழரசுக் கழகம் முதலியன இணைந்து, கூட்டணி அமைத்து, காங்கிரசுக் கட்சியைத் தோற்கடித்தது வரையிலான காலப்பகுதியின் நினைவலைகளை, "எனது வழக்கறிஞர் தொழில்" என்னும் ஐந்தாவது இயலாக நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். இக்காலப்பகுதியில் தமிழரசுக் கழகம் நடத்திய பயிற்று மொழி மாநாடுகள், தமிழ்நாட்டின்ம அன்றைய முதலமைச்சரான மீ.பக்தவச்சலனாரின் தமிழ்மொழிக்கு எதிரான போக்கு, அதனைக் கண்டித்து தமிழரசுக் கழகம் நடத்திய கறுப்புக்கொடி காட்டும் போராட்டங்கள், அவ்வாறு மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் நூலாசிரியர் கைது செய்யப்பட்ட நிகழ்வு என பல அரிய வரலாற்றுத் தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எனினும் அக்காலத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம், அப்போராட்டத்தின்பொழுது தமிழரசுக் கழகம் உள்ளிட்ட இயக்கங்கள் மேற்கொண்ட நிலைப்பாடு, 1947ஆம் ஆண்டிலிருந்தே திமுக நிறுவுநரான கா.ந.அண்ணாதுரையுடன் ம.பொ.சி நடத்தி வந்த அரசியற் கலந்துரையாடல்கள், அவற்றின் விளைவாக 1967ஆம் ஆண்டில் திமுகவோடு தமிழரசுக் கழகம் கூட்டணி அமைக்க முடிவெடுத்த சூழல் ஆகியவற்றையும் அந்த முடிவினை அக்கழகத்தின் முன்னணித் தலைவர்கள் எவ்வாறு நோக்கினார்கள், அவர்களை ம.பொ.சி. தன்னுடைய தலைமைப் பண்பால் எவ்வாறு ஏற்கச் செய்தார் என்பதனையும் பதிவு செய்திருந்தால், 1967ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட அந்த முரண்பாட்டுக் கூட்டணியின் பின்னணியை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள ஏதுவாக இருந்திருக்கும்.

தமிழரசுக் கழகத்தின் மதுரை நகரத் தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடங்கி, 1.2.1966ஆம் நாள் தொடங்கப்பட்ட மதுரைப் பல்கலைக் கழகத்தில் ம.பொ.சி. என்னும் முன்னோடியும் அவரது அடியொற்றியான நூலாசிரியரும் ஆட்சி மன்ற உறுப்பினர்களாக அமர்ந்து அங்கே தமிழை அலுவல்மொழியாக ஆக்கியதையும் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கறுப்புடை அணியும் ஆங்கிலேயே மரபினை தாமும் துறந்து, தமிழக முதல்வரும் பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினருமான கா.ந. அண்ணாதுரையையும் அவ்வுடையைச் துறக்கச் செய்த நிகழ்வை சுவைபட எடுத்துரைத்து, "காந்தியடிகள் காலத்திற்கு முற்பட்ட விடுதலைப் புரட்சி" என்னும் தலைப்பில் மதுரைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தர் முனைவர் மு.வரதராசனார் தலைமையில் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் ம.பொ.சி. நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவு பற்றிய நினைவலையோடு "மதுரைப் பல்கலைக் கழகம்" என்னும் ஆறாவது இயல் நிறைவடைகிறது. இவ்வியலில், மதுரைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிற்கு ம.பொ.சியும் நூலாசிரியரும் வெள்ளுடையில் செல்லும் படத்தையும் இணைத்திருந்தால், இந்நூலின் ஆவணத்தன்மை மேம்பட்டிருக்கும். (அப்படம் சர்வோதயம் இதழில் முன்னர் ஒருமுறை வெளியிடப்பட்டது).

திராவிடநாடு வேண்டும் கோரிக்கைக்கு மாற்றாக தமிழரசுக் கழகத்தால் முன்வைக்கப்பட்ட, "மாநிலத் தன்னாட்சி" என்னும் கோரிக்கை, "மாநிலத்தில் தன்னாட்சி; மத்தியிற் கூட்டாட்சி" என்னும் முழக்கம் ஆகியவற்றின் சுருக்கமான வரலாற்றோடு தொடங்கும் "மாநில சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி" என்னும் ஏழாவது இயல், ம.பொ.சி. தமிழக மேலவையின் துணைத்தலைவராகப் பொறுப்பேற்று தமிழை அதன் அலுவல் மொழியாக மாற்றியதைக் குறிப்பிட்டு, இந்திராகாந்தி இந்தியாவில் அவசரநிலையை அறிவித்த காலகட்டம் வரையுள்ள நிகழ்வுகளின் பதிவாகத் திகழ்கிறது.

"ஜே,பி.யுடன் தொடர்பு" என்னும் எட்டாவது இயலில், சோசலிசத் தலைவரான மக்கள் தலைவர் செயப்பிரகாசு நாராயணனோடு தமிழக சர்வோதய மண்டலின் செயலாளராக இருந்த க.மு.நடராசனார் வழியாக தனக்கு ஏற்பட்ட தொடர்பையும் 1973ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற நிலச் சீர்திருத்தப் போராட்டத்தில், செ.பி.யின் சட்ட ஆலோசகராக தான் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பையும் குறிப்பிடும் நூலாசிரியர் அவசரநிலைக் காலத்தில் ம.பொ.சி.யின் கருத்தோடு தான் முரண்பட்டு, செ.பி.யோடு இணைந்து அவசரநிலையை எதிர்த்துப் போராடியதைக் குறிப்பிடுகிறார். ம.பொ.சி.யோடு தனக்கிருந்த நீண்ட கால நட்பில், தான் அவரோடு முரண்டுபட்டு நின்ற இடம் இதுவொன்றே எனக் குறிப்பிடுகிறார். அதாவது தன்னம்பிக்கையுடையவர்களான தலைவரும் தொண்டரும் தம்நிலை தாழாது, பகை பாராட்டாது, தம்முடைய கருத்து வேறுபாட்டை பகிர்ந்து கொள்ள இயன்ற முதிர்ச்சியும் பக்குவமும் இன்றைய அரசியல் அரங்கில் காணக்கிடைக்காத நிகழ்வு ஆகும். எனவே, நூலாசிரியர் அந்தச் சூழலை இன்னும் சற்று விளக்கமாகப் பதிவு செய்தால், அது வருங்காலத் தலைமுறையினர் தம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள பேருதவியாக இருக்கும். அவசரகாலத்திற்குப் பின்னர் நடைபெற்ற அரசியல் மாற்றம், ம.பொ.சி. தமிழக மேலவையின் தலைவராதல் முதலியவற்றைப் பதிவுசெய்துவிட்டு, 1986ஆம் ஆண்டில் ம.பொ.சி. தன் ஒரே மகனான திருநாவுக்கரசை இழந்து, கையறுநிலை அடைந்தோடு எட்டாவது இயல் நிறைவடைகிறது.

சுவாமி சச்சிதானந்தாவின் அழைப்பை ஏற்று, அவர் அமெரிக்காவில் அமைத்திருந்த தாமரைக் கோவிலின் குடமுழுக்கு விழாவிற்கு ம.பொ.சி., எழுத்தாளர்களான சாவி, பகீரதன். நூலாசிரியர் ஆகிய நால்வரும் அமெரிக்க சென்றதைப் பற்றியும் அதற்கு அன்றைய முதல்வர் ம.கோ.இராமச்சந்திரன் (MGR). செய்த உதவிகளையும் பற்றிய பதிவே, "அமெரிக்கா செல்ல ஆயத்தம்" என்னும் ஒன்பதாவது இயலாகும்.

1986ஆம் ஆண்டில் ம.பொ.சி. தலைவராக இருந்த தமிழக மேலவைக் கலைக்கப்பட்டு, அவர் தமிழ் வளர்ச்சி உயர்மட்டக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட தகவல்களையும் நூலாசிரியரின் தலைமகள் காயத்திரி தேவியின் திருமணம் ம.பொ.சி.யின் தலைமையில் நடைபெற்ற தகவலையும் கொண்டதே, "மேலவைக் கலைப்பு" என்னும் பத்தாவது இயலாகும்.

திராவிட இயக்கங்களின் பார்ப்பனிய எதிர்ப்பைப் பற்றிய ம.பொ.சி.யின் கண்ணோட்டத்தின் பதிவே "தமிழ் உணர்வும் திராவிட உணர்வும்" என்னும் பதினொன்றாவது இயலாகும்.
1972ஆம் ஆண்டில் சென்னை சங்கர சமிதியில் ஆதிசங்கரின் அத்வைதக் கோட்பாட்டைப் பற்றி ம.பொ.சி.ஆற்றிய உரையின் ஆழத்தை எடுத்துரைத்து, அவரது ஆன்மீக நாட்டத்தை விளக்கி, அவரது மறைவோடு நூலாசிரியர் தன்னுடைய ஆதனியத் தொடர்பு அறுந்ததாக குறிப்பிடுவதோடு, நூலின் இறுதி இயலான, "ஐயாவின் ஆன்மீன ஞானம்" என்னும் பகுதி நிறைவடைகிறது.

இந்த 104 பக்க நூலின் தொடக்கத்தில் உள்ள இயல்களில் காணப்படும் வரலாற்றுப் பின்புலம், கடைசி மூன்று இயல்களில் மிகவும் குறைவாக இருக்கிறது. இயல்பான உரையாடலின் பொழுதுகூட, வழக்குரைஞருக்கே உரிய நுட்பத்தோடு வரலாற்றுப் பின்புலத்தை வரைந்து காட்டும் நூலாசிரியர் கடைசி மூன்று இயல்களில் அவ்வாறு எடுத்துரைக்காதது, அவருடைய எழுத்துகளைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. ம.பொ.சி.யின் மணிவிழாவிற்கு அவர் அச்சகத் தொழிலாளியாக வேலைபார்த்த தமிழ்நாடு இதழின் ஆசிரியர் வரதராசுலு நாயுடு வருகை தந்தது; ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெறும்பொழுது மதுரைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக தமிழறிஞர் ஒருவரே இருக்க வேண்டும் என ம.பொ.சி. விரும்பி, அப்பதவிக்கு முனைவர் வ.சுப.மாணிக்கத்தை நியமிக்க அன்றைய முதல்வர் ம.கோ.இரா.விடம் அவர் வலியுறுத்தி, அவ்வண்ணமே நடைபெற்றது; சாசுதிரி-பண்டாராநாயகா ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையில் வாழ்ந்த இந்தியத் தமிழர்களான தோட்டத் தொழிலாளர்கள் இந்தியாவிற்கு அனுப்பப்படுவது தவறு என சட்டத்தின் அடிப்படையில் தமிழரசுக் கழக மாநாட்டில் உரையாற்றும்படி நூலாசிரியருக்கு ம.பொ.சி. ஆணையிட்டு அதன்படி நூலாசிரியர் உரையாற்றியது என நூலாசிரியர் பதிவு செய்ய வேண்டிய தகவல்கள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன எனக் கருதுகிறேன். அவற்றை எல்லாம் நூலாசிரியர் அடுத்த பதிப்பிற் சேர்ப்பார் என நம்புகிறேன்.

(சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யுடன்..., மு.மாரியப்பன், சர்வோதய இலக்கியப் பண்ணை, 32/1 மேல வெளிவீதி, மதுரை 625 001. முதற்பதிப்பு: திசம்பர் 2011, பக்கம் 104, விலை 60/-)

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...