சிராப்பள்ளி கீழ்க்குடைவரைக் கோயில்

சித்திரைத் திங்கள். நண்பகல். வெயிலில் குளித்துக்கொண்டு இருந்தது திருச்சிராப்பள்ளி. தேர்ந்த ஊர்சுற்றியும் என் தம்பியுமான மணிகண்டனும் நானும் தாயுமானவர் கோயில் அமைந்துள்ள கற்குன்றின் உச்சிக்குச் சென்று, நீரோட்டத்தைத் தொலைத்த காவிரியையும் தன்னியல்பு திரிந்து கற்காடாக மாறிக்கொண்டு இருக்கும் கழனிகளையும் பார்த்துவிட்டு கீழே இறங்கிக்கொண்டு இருந்தோம்.  குன்றின் இடுப்பு மடிப்பைப் போல, மாணிக்க விநாயகர் கோவிலுக்கும் தாயுமானவர் கோயிலுக்கும் இடையே, கிழக்கு மேற்காய் நீண்டு கிடக்கும் தெருவிற்கு வந்தோம். அத்தெருவில் யானை நிற்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் சுவரில், “பல்லவர் கால குகைக்கோவிலுக்குச் செல்லும் வழி” என எழுதியிருப்பதை தம்பியிடம் சுட்டிக் காட்டினேன். “இது பக்கத்தில ஒரு சந்துல இருக்கு. மேல இருக்கிற லலிதாங்குர பல்லவ ஈசுவர கிரகத்தைவிட அழகா இருக்கும். நீ இதுவரைக்கும் அதப் பார்த்த்து இல்லையா? வா போகலாம்” எனக்கூறி அத்தெருவில் மேற்குத் திசையில் சிறிதுதொலைவு சென்று, வடக்கே பிரியும் சந்திற்குள் நுழைந்து கற்குன்றின் அடிவாரத்திற்கு அழைத்துச் சென்றார்.    நான்கடி உயர வளாகச் சுவருக்கு அப்பால் கற்குன்றின் காலடியில் ஆறு தூண் மண்டபத்தைப் போன்ற முகப்போடு அக்குடைவரைக் கோயில் பதுங்கி இருந்தது. வளாகத்திற்குள் நுழைந்ததும் தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறையின் அறிவிப்புப் பலகை அங்குள்ள சிற்பங்களைச் சிதைக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்தவாறு நின்றுகொண்டு இருந்தது.

திருமால் கோவில்
இருவரும் குடைவரையை நெருங்கினோம்.  குடைவரையின் உள்ளே கிழக்கிலும் மேற்கிலும் தனித்தனியே படிக்கட்டுகளைக்கொண்ட  நான்கு நான்கு தூண்களை உடைய மண்டபங்களோடு இரண்டு கருவறைகள் இருந்தன. “மேற்க இருக்கிறது பெருமாள் கோவில்; கிழக்க இருக்கிறது சிவன் கோவில்” என்றார் மணிகண்டன். சிவன் கோவில் மண்டபத்தில் ஒரு பாட்டியும் பெயர்த்தியும் படுத்து உறங்கிக்கொண்டு இருந்தார்கள்.  பெருமாள் கோவில் மண்டபத்தில் இளைஞர்கள் பன்னிருவர் படுத்து களைப்பாறிக்கொண்டு இருந்தார்கள்.  “பெருமாள் கோவில கருவறைக்கு உள்ள திருமாலோட சிற்பம் இருக்கு; சிவன் கோவில் கருவறைக்கு உள்ள இப்ப சிற்பம் இல்ல. அங்க சிவன் சிற்பத்த செதுக்கவே இல்லையா இல்லாட்டி பின்னாடி யாராவது சிதைச்சுட்டாங்களான்னு தெரியல” என தம்பி தானறிந்த தகவல்களைச் சொல்லிக்கொண்டே இருந்தார். களைப்பாறிய இளைஞர்கள் எழுந்து உட்கார்ந்தனர். “மண்டபத்திலே ஏறி கருவறைக்குள்ள பாரு” என தம்பி கூறியதும் உள்மண்டபத்தின் நான் கால்பதித்தேன். இளைஞர்கள் எழுத்துநின்று எங்கள் இருவரையும் மாறிமாறி பார்த்துவிட்டு, சட்டென்று மண்டபத்தைவிட்டு இறங்கி, விரைந்து நடந்து வளாகத்தைவிட்டு வெளியேறி சந்தில் புகுந்து மறைந்தார்கள்.

கருவறைகுள் உள்ள திருமால் சிற்பம்
நாங்கள் மண்டபத்திற்குள் நுழைந்தோம். கருவறைக்கு இடமும் வலமும் அழகிய இரண்டிரண்டு வாயிற்காப்போர் சிற்பங்கள் இருக்கின்றன. அவற்றிற்கு நடுவே உள்ள வாயிலில், நந்தன் ஆடலரசனை காணக்கூடாது என மறைத்து நின்ற நந்தியைப் போல நாங்கள் உள்ளே இருக்கும் திருமாலின் சிற்பத்தைக் காணவிடாது மறைத்துக்கொண்டு நின்றன தொல்பொருள்துறையினர் பொருந்தி வைத்திருந்த கம்பிவலைக் கதவுகள். ஆனால் அங்கு வந்த யாரோவொரு பார்வையாளர் அந்த கம்பிவலையின் ஒரு பகுதியை பிய்த்து இருக்கிறார். அந்த துளையின் வழியாக உள்ளே பார்த்தால் ஒரே இருட்டு. திருமாலின் உருவம் தெரியவில்லை.  மணிகண்டன் தனது பையில் இருந்து கைவிளக்கை எடுத்து துளைக்குள் நுழைத்து ஒளிபாய்ச்சினார். உள்ளே சங்கு, சக்கரம் ஏந்திய திருமாலின் சிற்பமும்  விண்ணிலிருந்து அவரைப் போற்றும் அடியவர் இருவரின் சிற்பமும் தெரிந்தன. 

பிள்ளையார் சிற்பம்


திருமாலைக் கண்டு வலப்பக்கம் திரும்பினால், குகையின் வடக்குப் புறத்தில், நின்ற நிலையில் விநாயகர் என்னும் பிள்ளையாரின் சிற்பம் கண்ணிற்பட்டது.  “தமிழ்நாட்டில இருக்கிற குடவர கோயில் சிலதுல பிள்ளையார் சிற்பம் இருக்கு. அதுல இது ஒன்னுதான் நிக்கிற நிலயில இருக்கிற பிள்ளையார்ன்னு ஒரு கட்டுரைல படிச்ச நினைவு” என்றார் மணிகண்டன்.   அதன் இடமும் வலமும் விண்ணிலிருந்து இரு அடியார்கள் போற்றுவது போலவும் காலடியில் இருவர் இருப்பது போலவும் செதுக்கப்பட்டு உள்ளது. 


முருகன் சிற்பம்

அச்சிற்பத்திற்கு அடுத்து இருப்பது நான்கு கைகளை உடைய முருகனின் சிற்பம். அதன் இடமும் வலமும் அடியார் இருவர் விண்ணில் தோன்றி போற்றுகின்றனர். முருகனின் காலடியில் குள்ள பூதங்கள் இரண்டு இருக்கின்றன.
நான்முகன் சிற்பம்

முருகன் சிற்பத்திற்கு அடுத்தது பிரம்மன் என்னும் நான்முகனின் சிற்பம். அதன் இடமும் வலமும் காலடியில்  அடியார் இருவர் அமர்ந்திருக்க தலைக்கு மேலே விண்ணவர் இருவர் நான்முகனை வணங்குகின்றனர்.  

பரிதி என்னும் சூரியனின் சிற்பம்அதற்கு அடுத்து முதுகிற்கு பின்னர் ஒளிவட்டத்தை உடைய பரிதி என்னும் சூரியன் சிற்பம் நிற்கிறார். அவரது மேல் வலது கையில் உருத்திராட்ச மாலையும் இடதுகையில் தாமரையும் இருக்கின்றன.  கீழ் இடதுகை இடுப்பில் இருக்க வலதுகை வரத முத்திரை காட்டுகிறது. காலடியில் இருவர் குத்துக்காலிட்டு அமர்ந்து அவரை வணங்குகின்றனர்.  விண்ணவர் இருவர் ககனத்தில் மிதந்தவாறு பரிதியை வாழ்த்துகின்றனர். 
கொற்றவை சிற்பம்

பரிதிக்கு அடுத்தது கொற்றவையின் சிற்பம். மேல் வலதுகையில் சங்கும் இடதுகையில் ஆழியும் இருக்க கீழிருகைகளும் இடுப்பில் ஊன்றப்பட்டு உள்ளன. கொற்றவையின்   இடது காலடியில் ஒருவர் அமர்ந்து மலர்கொண்டு அவரை வணங்குகிறார். வலது காலடியில் அமர்ந்திருக்கும் ஒருவர் தனது இடதுகையால் தனது தலைமுடியைப் பற்றி தூக்கி, தனது வலதுகையில் உள்ள வாளால் தனது தலையை தானே அரிந்து பலியிட முனையும் “நவகண்ட”ச் சிற்பம் அமைந்துள்ளது.  கொற்றவையின் தலைக்கு மேலே வலது மூலையில் விண்ணவர் ஒருவர் அவளை வணங்குகிறார்.  அதற்கு அடுத்து வடகிழக்கு மூலையில் ஒருவர் இடுப்பில் இரு கைகளை வைத்து நடன நிலையில் நிற்கிறார். அவரை அடுத்து  சிவன் கோவிலின் மண்டபம் இருக்கிறது.


சிவன் கோயில்


சிவன் கோயில் வாயிற்காப்பாளர்
நாங்கள் ஒவ்வொரு சிற்பமாக பார்த்து, கதைத்துக்கொண்டே சிவன் கோவிலுக்கு வருவதற்குள் அங்குள்ள மண்டபத்தில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்த பாட்டியும் பெயர்த்தியும் விழித்தெழுந்து அமர்ந்து இருந்தார்கள். நாங்கள் மண்டபத்திற்கு வந்ததும் பெயர்த்தி எழுந்து சென்றுவிட்டார். பாட்டி மண்டபத்தில் அமர்ந்தவாறே எங்களைக் கவனித்துக்கொண்டு இருந்தார். நாங்கள் மண்டபத்திற்குள் நுழைந்தோம். அங்கு கருவறையின் இடமும் வலமும் ஒரு கையை இடுப்பில் ஊன்றி மறுகையை உயர்த்தி அடியார் இருவர் அழகிய சிலைகளாக நிற்கின்றனர்.  கருவறை கம்பிவலைக் கதவால் இழுத்து மூடப்பட்டு இருக்கிறது.  இந்த வலையை யாரும் பிய்க்காததால் உள்ளே என்ன இருக்கிறது எனப் பார்க்க முடியவில்லை.  இடப்பக்கம் இருந்த அடியார் சிலைக்கு அப்பால் வாயிற்காப்போனின் சிலை இருக்கிறது. அதனைப் பார்த்துவிட்டு வெளியே வந்து முகப்பில் உள்ள நான்கு தூண்களையும் முகப்பு மாடத்தையும் கவனிக்கத் தொடங்கினோம். 

தூண்


தூணின் அடிப்பகுதி சதுரமாக இருக்கிறது. நடுப்பகுதியில் எட்டுப்பட்டைகள் இருக்கின்றன.  அதற்கு மேலே பூவும் அதன் மீது கவசமும் இருக்கின்றன.  கோவிலின் முகப்பில் உள்ள உத்திரத்தில் பூதகணங்கள் இருக்கின்றன. நடுப்பகுதியில் உள்ள எட்டுப்பட்டைகளில் பூச்சரங்கள் தொங்குவதுபோன்றும் அவற்றிற்கு மேலே பூங்கொடிகள் படர்ந்திருப்பது போன்றும் சிற்பங்கள் நுட்பமானகவும் நுணுக்கமாகவும் செதுக்கப்பட்டு உள்ளன.  தூணில் கைவினை
அவற்றைப் பார்த்துக்கொண்டே, “மணி, இங்க கவனிச்சியா. சைவக் கடவுள் சிவன், வைணவக் கடவுள் திருமால், காணாபத்தியக் கடவுள் பிள்ளையார், கெளமாரக் கடவுள் முருகன், செளரக் கடவுள் பரிதி, சாக்தக் கடவுள் கொற்றவை இந்த ஆறுபேரோட நான்முகன் சிற்பமும் இருக்கு.” என்றேன். “ஆமா. கவனிச்சேன். இந்தக் கோயில 8ஆம் நூற்றாண்டோட முற்பகுதியில பல்லவர்கள் குடைஞ்சிருக்கனும்னு மா. இரா. கலைக்கோவன் சொல்லாரு.  அப்ப, மகேந்திரபல்லவன் திருநாவுக்கரசால சைவனாக மாற்றப்பட்ட பிறகு இத உருவாக்கி இருக்கலாம். ஆனா சிலர் இத பாண்டியர்கள் உருவாக்குனதுன்னு சொல்லாறங்க. தொல்பொருள் துற என்ன சொல்லுதுன்னு கேட்கலாம்னா அவங்க  யாரையும் இங்க காணாம்” என மணிகண்டன் கூற, அதுவரை எங்களை கவனித்துக்கொண்டு இருந்த பாட்டி, “நீங்க அந்த போர்ட நட்ட ஆபிசுல இருந்து வரலையா? நீங்க அந்த ஆளுக போலிருக்கு. இங்க படுத்திருந்த சத்தம் போடுவிங்கன்னுதான் அங்க படுத்திருந்த பிள்ளைக எல்லாம் எந்திருச்சு போனாங்க. ஏம் பேத்தியும் எந்திருச்சுப் போனா. நானும் தூக்கத்தக் கெடுத்திட்டு உக்காந்திருக்கே. போங்கப்பா போங்க” என அங்காலாய்த்துக்கொண்டே மீண்டும் மண்டபத்தில் வசதியாகப் படுத்து கண்களை மூடி தூங்கத் தொடங்கினார். இருவரும் வாய்விட்டுச் சிரித்துவிட்டு எங்கள் உரையாடலைத் தொடர்ந்தோம்.

முகப்பு உத்திரத்தில் உள்ள பூதகணங்கள்
 “இந்த ஆறு மதங்களும் அன்றைக்கு ஒன்றுக்கு ஒன்று முரணாக இருந்திருக்கு.  ஆனா அது எல்லாத்தையும் ஒன்னுசேர்த்து இங்க கோவில் உருவாக்கி இருக்காங்க. ஒருவேள இது இந்த ஆறையும் உள்ளடக்கிய ஸ்மார்த்த மத கோயில இருக்குமோ?” என்றார் மணி. “இல்லை. ஸ்மார்த்தம் ஆதிசங்கரர் காலத்துல உருவான கருத்தாக்கம்ன்னு படிச்ச நினைவு. ஒருவேளை, அன்றைய தமிழகத்தில இருந்த சமணத்தையும் பெளத்தையும் ஒழிக்க, முரண்பட்ட இந்த ஆறுமதங்களையும் ஒன்று சேர்ந்து அமைச்ச கூட்டணிக்கான நினைவுச்சின்னமா இருக்குமோ இது?’ என நானும் “அப்ப நான்முகன்தான் ஒருவேள அந்த கூட்டணிய அமைச்சு இருப்பாரோ?” என மணிகண்டனும் விளையாட்டாய் பேசிக்கொண்டே அங்கிருந்து கிளம்பினோம். ஆனால், அன்று முரண்பட்டு நின்ற சிவ, வைணவ மதங்களின் கடவுள்களான சிவனையும் திருமாலையும் முதன்மைத் தெய்வங்களாவும் பிள்ளையார், முருகன், நான்முகன், பரிதி, கொற்றவை ஆகிய ஐவரையும் துணைத்தெய்வங்களாகவும் நிறுத்தி சிராப்பள்ளிக் கற்குன்றின் தென்மேற்கு அடிவாரத்தில் இக்குடவரைக் கோவிலை அமைக்க  வேண்டிய தேவை, சமணனாக இருந்து சைவனாக மாறிய மகேந்திர பல்லவனுக்கு ஏன் எழுந்தது என்னும் வினா இன்னும் என்னைக் குடைந்துகொண்டே இருக்கிறது.

2014 04 20

இக்கட்டுரை அம்ருதா இதழில் 2014 மே இதழில் கண்டதும் கேட்டதும் என்னும் தொடரில் இரண்டாவது கட்டுரையாக 8, 9, 10 ஆம் பக்கங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது.கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...