|
பொன்னியின் செல்வன் நாடகத்தின் தொடக்கக்காட்சி |
இந்திய
விடுதலைப் போராட்டம் உச்சத்தைத் நெருங்கிக் கொண்டிருந்த 1940களில் தனித்தமிழ்
இயக்கம்,
இந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழிசை இயக்கம் போன்றவற்றால் தமிழகத்தில் தமிழ்ப்பெருமித உணர்வு ஒரு பக்கமும்
பொருளாதாரச் சமத்துவத்தை இந்தியா மண்ணில் விதைக்கத் துடித்த பொதுவுடைமைச் சிந்தனை
மறுபக்கமும் பெருகெடுத்து ஓடிக்கொண்டு இருந்தன. எனவே, 'விடுதலை பெற்ற இந்தியாவில் தமிழர் பண்பாடிற்கு இடமிருக்காது' என்னும் தமிழ்ப் பெருமித உணர்வாளர்களின் அவநம்பிக்கைக்கும்
அரசியல் விடுதலையோடு பொருளாதார விடுதலையும் வேண்டும் என்னும் பொதுவுடைமையாளர்களின்
போராட்டங்களுக்கும் மாற்றாக விடுதலை பெற்ற பின்னர் ‘இந்தியாப் பொன்னாடு’ என்னும் கற்பனை ஓவியத்தை மக்கள்
மனதில் எழுத வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியினர்.
அப்பணியைத் தமிழகத்தில் முன்னின்று ஆற்றினர் ம. பொ. சிவஞானமும் கல்கி இரா.
கிருட்டிணமூர்த்தியும். இவர்களுள் கிழக்கிந்திய கும்பணியையும் ஆங்கிலேயப்
பேரரசையும் எதிர்த்துக் கலகம் செய்தவர்கள் தொடங்கி போராடாடி மடிந்தவர்கள் வரை
பலரின் வரலாற்றைத் தேடித் தொகுத்து மக்கள் மன்றத்தின் முன்னர் வைத்தார் ம. பொ. சிவஞானம்.
கல்கியோ,
திராவிட இயக்கத்தவர்கள் தமிழ் மறுமலர்ச்சி என்னும் பெயரில்
கிளறிவிட்டிருந்த சேர,
சோழ,
பாண்டியர் காலப் பெருமை மயக்கத்தையும் ஆங்கில மர்மக்
கதைகளைப் பின்பற்றி ஆரணியார், வடுவூரார், ரங்கராஜூ போன்றோர் எழுதிய மர்மக் கதைகளுக்கு இருந்த சந்தை மதிப்பையும்
சரிவிகிதத்தில் கலந்து வரலாற்றுப் புதினம் என்னும் பெயரில் பார்த்திபன் கனவு
(1941),
சிவகாமியின் சபதம் (1944-46), பொன்னியின் செல்வன் (1951-54) என்னும் கதைகளை எழுதித் தள்ளினார். ஆனந்த
விகடனில் இருந்து வெளியேறி 1941ஆம் ஆண்டில் இரா.கிருட்டிணமூர்த்தியும் சதாசிவமும்
புதிதாகக் தொடங்கியிருந்த கல்கி என்னும் இதழைச் சந்தைப்படுத்த அக்கதைகள்
அவர்களுக்குப் பெரிதும் பயன்பட்டன. ஒரு வணிகப் பொருளைப் பற்றி திரும்பத் திரும்ப
புகழ்ந்துரைப்பதன் வழியாக அதன் சந்தை மதிப்பை கூட்டுவது வணிக உத்திகளுள் ஒன்று.
அதே உத்தியைப் பயன்படுத்தி பொன்னியின் செல்வன் நெடுங்கதையை வெற்றிகரமாகச்
சந்தைப்படுத்தினர்,
படுத்துகின்றனர் கல்கி குழுமத்தினர். இந்தச்
சந்தைப்படுத்தலின் மணிவிழாவை மேஜின் லான்டர்ன் நாடகக் குழுவினருடன் எசு.எசு
இன்டர்நேஷனல் லைவ் நிறுவனமும் இணைந்து சென்னை, மதுரை,
கோவை ஆகிய நகரங்களில் கல்கியின் பொன்னியின் செல்வன் என்னும்
நாடகத்தை மேடையேற்றி கொண்டாடி இருக்கிறார்கள்.
"சாண்டியல்யன்
எழுதும் சரித்திர நாவல்களில் சரித்திரமும் கிடையாது, நாவலும் கிடையாது" என்பார் எழில்முதல்வன். இக்கூற்று அப்படியே கல்கியின்
கதைகளுக்கும் பொருந்தும். “சமகால வாழ்வையும் சரித்திரத்தையும் வரலாற்று
உணர்வோடும் பண்பாட்டுக் கவலையோடும் இணைத்துக் காட்டுகிற அருஞ்செயலே மெய்யான
வரலாற்று நாவல்” என்னும் சிற்பி பாலசுப்பிரமணியத்தின்
கூற்றுக்கு இலக்கணமாக தனது படைப்பை உருவாக்குவது அன்று கல்கியின் நோக்கம்; மாறாக, “அவர் கவனமெல்லாம்
வாசகர்களைச் சுவைப்படுத்துவதற்கான தந்திரங்களின் மீதுதான்” என்னும் எம். வேதசகாயகுமாரின் கூற்றை மெய்பிப்பதே கல்கியின்
நோக்கம் ஆகும். எனவேதான் அவருடைய "வரலாற்று நாவல்"களில் வரலாறு, புதினம், வாழ்க்கை என
எதுவுமே இல்லை;
வெற்றுக் கற்பனைகளே விஞ்சி நிற்கின்றன. அவர், மா.
இராசமாணிக்கனார் எழுதிய பல்லவர் வரலாறு. தி. வை. சதாசிவபண்டாரத்தார் எழுதிய
பிற்காலச் சோழர் வரலாறு ஆகிய நூல்களில் உள்ள சில வரலாற்றுக் குறிப்புகளை அங்கங்கே
தொட்டுக்கொண்டு உண்மையான வரலாற்று மாந்தர்களை கற்பனை மாந்தர்கள் சிலரோடு சேர்த்து
தனது கற்பனைக் கதைகளில் உலவவிட்டு அவற்றை வரலாற்றுப் புதினங்கள் என கயிறுதிரித்து
இருக்கிறார். ஆகவேதான் அவருடைய கதைகளில் வரலாறும் இல்லை; வாழ்க்கையும் இல்லை.
வரலாற்றுப்
பேராசிரியர் என தன் புகழ்பாடிகளால் பாராட்டப்பட்ட கல்கி, எந்த வரலாற்று ஆய்வையும் மேற்கொண்டு அதன் முடிவுகளை
கதைகளாகப் படைக்கவில்லை. எடுத்துக்காட்டாக சாளுக்கியரும் இராட்டிரகூடருமே வல்லவர்
என தமிழகக் கல்வெட்டுக்களில் குறிக்கப்படுவதால், வல்லவரையன் கீழைச் சாளுக்கிய வேந்தன் ஆவான் என்னும் பண்டாரத்தாரின் குறிப்பின்
அருகே "இது தவறு. வெறும் யூகம். வல்லவரையன் என்பவன் வல்லம் ஊரைச் சார்த்த
வாணர் இளவரசனாக இருக்கக் கூடும்" என்று கல்கி தனது ஊகத்தை தன் கைப்பட
ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். ஆனால் பண்டாரத்தாரின் ஊகத்தை மறுத்து தனது ஊகத்தை
நிலைநாட்ட எந்த ஆவணங்களையும் அவர் காட்டவே இல்லை. மாறாக, தனது எழுத்துவன்மையால் தனது கற்பனையை சாதாரண வாசகர்கள்
வரலாறு என நம்பும்படி மயக்கி இருக்கிறார்.
|
ஆதித்த கரிகாலன் (மதுரை நிகழ்வில்) |
பிற்காலச்
சோழர்களில் ஒருவனான சுந்தரச் சோழன் என்னும் இரண்டாம் பராந்தக சோழனுக்கு மூத்த
மகனும் பட்டத்து இளவரசனுமான ஆதித்த கரிகாலன் 969ஆம் ஆண்டில்
கொலைசெய்யப்பட்டான். அவனை யாது காரணத்தாலோ
சோமன்,
ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், பரமேசுவரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன், மலையனுரானான ரேவதாசக் கிரமவித்தன் என்னும் நான்கு
பார்ப்பனச் சகோதரர்கள் கொன்றனர் என்கிறது உடையார்குடிக் கல்வெட்டு. மூத்தவன் கால்வழிக்கே அரசுரிமை என்னும்
மரபின்படி சோழப் பேரரசனாகும் உரிமை உடைய கண்டராதித்த சோழன் மகன் உத்தமச் சோழனுக்கு
வேண்டியவர்கள் இக்கொலையைச் செய்திருக்கலாம் என்பது கே. ஏ, நீலகண்ட சாசுதிரியாரின் கருத்து. கொன்றவர்களுள்
பாண்டிநாட்டு அரசியல் அதிகாரியாகிய பஞ்சவன் பிரமாதிராஜனும் ஒருவனாயிருத்தலால்
பாண்டிய நாட்டு பகைவர் தூண்டுதலே இக்கொலை நிகழ்ச்சிக்குக் காரணமாதல் கூடும் என்பது
தி.வை. சதாசிவ பண்டாரத்தாரின் கருத்து. கல்கி இவ்விரு கருத்துகளையும் கலந்து, தனது கற்பனையைப் பிசைந்து, மர்மக்கதை உத்திகளைத் தெளித்து, மூன்றரை ஆண்டுகள் இழுத்துத் தேய்த்து, உண்மையான குற்றவாளிகள் யாரென வாசகர்களே ஊகித்து அறிவார்களாக
எனக் கூறி தனது பொன்னியின் செல்வன் கதையை முடித்திருக்கிறார். அதனை இவர்கள்
நாடகமாக மாற்றி இருக்கிறார்கள்.
|
அருண்மொழியும் பூங்குழலியும் |
கல்கியின்
நெடுங்கதை தற்கால வாழ்வோடு தொடர்பு அற்று இருப்பதைப் போலவே, இந்த நாடகமும் தற்காலத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் தவிக்கிறது.
வள்ளி திருமணம் போன்ற தொன்மக் கதைகளை நாடகங்களாக மேடையேறும்பொழுது, அவற்றை நடத்திச் செல்லும் கட்டியக்காரர்களின் எள்ளல்களால்
தற்காலத் தொடர்பு ஏற்படும் அல்லது நாடகத்தின் உரையாடல்கள் தற்கால அரசியல், சமூக நிகழ்வுகளைத் தொட்டுக்காட்டி பார்வையாளர்கள் மனதில்
"சுருக்"கென குத்தும். எம். ஆர். இராதாவின் நாடகங்களை எத்துணை முறை
பார்த்தாலும் அவை பார்வையாளருக்கு ஒவ்வொரு முறையும் புதிதாக இருந்ததற்குக் காரணம்
இந்தத் தற்காலத் தொடர்புபடுத்தல்தான்.
இத்தொடர்புபடுத்தலை இந்த நாடகப் பனுவலில் காணவே இயலவில்லை. அதிகாரத்தில் இருக்கும்
வயது முதிர்ந்த தந்தை,
எப்பொழுதும் அவரது நிழலிலேயே வளர்ந்து பலரது அன்பைப் பெற்று
தற்பொழுது போர்க்களத்தில் நிற்கும் இளைய மகன், தந்தையிடமிருந்து விலகிச் சென்று வேறோர் ஊரில் வெகுநாளாக வாழ்ந்தாலும் தன்
அப்பாவிற்குப் பின்னர் தானே அதிகாரத்திற்கு வரவேண்டும் என விழையும் மகன், எந்தப் பதவியில் இல்லாவிட்டாலும் அரசாங்க அலுவலர்களுக்கு
ஆணையிடும் மகள் என அழகாக வாய்த்திருக்கிறது கதைக்களம். ஆனால் வேலைப் போல் பாயும்
கூர்மையான உரையாடல்களால் பார்வையாளர்களின் மனதில் இணைப்பனுவலை எழுதி இருக்க
வேண்டிய இந்நாடகம்,
அருண்மொழி அரங்கத்தில் தனது முகத்தைக் காட்டும்பொழுது
கைதட்டல் பெறவேண்டும் என ஏங்கித் தவித்து சோர்ந்துவிடுகிறது.
|
வந்தியத்தேவனும் ரவிதாசனும் |
இந்தச்
சோர்விற்கு,
கல்கியின் கதையை நாடகமாக உருவாக்கியவர்கள், கதையைத் தாண்டிச் சிந்திக்கவோ அதன் தற்காலத் தேவையைத் தேடவோ
இல்லை என்பதே காரணம். எனவேதான், வரலாற்றிலும்
கல்கியின் கதையிலும் இல்லாத குழப்பத்தை இவர்களாகவே கற்பனை செய்கிறார்கள். முதற்
பராந்தக சோழனுக்கு இரண்டாவது மகனும் சோழப் பேரரசனுமான கண்டராதித்த சோழன் 957ஆம்
ஆண்டில் மரணமடைகிறான். அப்பொழுது அவர் மகன் உத்தமச் சோழன் சிறுகுழந்தை. எனவே, கண்டராதித்த சோழனுக்கு
தம்பியான அரிஞ்சய சோழன் பதவியேற்கிறான். அவனும் சில திங்கள்களிலேயே
மாண்டுவிட, அரிஞ்சய சோழனுக்கு மகனான சுந்தரச்
சோழனுக்கு மகுடம் சூட்டப்படுகிறது என்பது வரலாறு. ஆனால் இவர்களோ, "960களில் சோழப் பேரரசு ஒரு குழப்பமான சூழ்நிலையை
சந்தித்தது. சிவபக்தரான கண்டராதித்த சோழர்
நாடாளும் விருப்பமின்றி தன் தம்பி அரிஞ்சய தேவரின் மகன் சுந்தர சோழனை அரியணை
அமர்த்துகின்றார்." என்று விளம்பரம் செய்திருக்கிறார்கள்.
|
நாடக விளம்பரம் |
வரலாற்றையே தவறாகப்
படித்துவிட்டு உருவாக்கப்பட்ட ஒரு நாடகம், சமகால வாழ்வையும் வரலாற்றையும் வரலாற்று உணர்வோடும் பண்பாட்டுக் கவலையோடும்
இணைத்துக் காட்ட வேண்டும் என எதிர்பார்ப்பது நம்முடைய தவறுதான். மணியன்
வரைந்த ஓவியத்தைக் கூர்ந்துபார்த்து, பாம்பின் வாலைப்போல இரண்டு பக்கமும் குஞ்சம்விழும் தலைப்பாகையை உருவாக்கி ரவிதாசனுக்கு
அணிவித்த இந்நாடக ஒப்பனைக்காரர்கள்,
ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் பார்ப்பன குடியில் பிறந்தவர்கள்
என உடையார்குடிக் கல்வெட்டு தெளிவாய்க் குறிப்பிட்டிருந்தும் நாடகத்தில் அவர்களை முப்புரி
நூல் அணியாத கறுத்த மேனியராய் காட்டியதன் பின்னர் உள்ள அரசியல்தான் என்ன?
|
பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர், நந்தினி |
ஏறத்தாழ
ஐம்பது கலைஞர்களின் உழைப்பு, ஏராளமான
பொருட்செலவு,
அழகான அரங்க அமைப்பு, மணியன் வரைந்த ஓவியங்கள் உயிர்பெற்று வந்ததைப் போன்ற உடையலங்காரம், உருத்தாத ஒப்பனை, பெரிய பழுவேட்டரையாகவே உலாவிய மு. இராமசுவாமியின் நடிப்பு, நடுக்கடலில் புயலிற் சிக்கி ஆடும் கப்பலை படிமமாய்க்
காட்டிய நடிகர்களின் உடல்மொழி, ஆதித்த
கரிகாலனையும் அருள்மொழியையும் கொல்ல பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் தொடர்ந்து
பின்பற்றினார்கள் என்பதனைக் காட்ட காட்சிகள்தோறும் அரங்கின் ஏதாவதொரு மூலையில்
தோன்றும் அவர்களின் தலை,
பூங்குழலியின் காதலர்களான கொல்லிவாய் பிசாசுகள், நான்கு அல்லது ஐந்து முழுநேர நடிகர்களுக்கு ஈடுகொடுத்து
மற்றவர்களையும் நடிக்க வைக்க இயக்குநர் மேற்கொண்ட முனைப்பு என நாடகத்தை நிகழ்த்துவதற்காக மேஜிக் லாடர்ன்
மேற்கொண்டிருக்கும் முயற்சியும் உழைப்பும் பாராட்டிற்கு உரியவைதான். ஆனால் அந்த
உழைப்பின் நோக்கமும் விளைபயனும் யாவை?
|
புயலில் சிக்கிய கப்பற் படிமம் |
"கோவணம்
ஒன்றே
குடும்பச்
சொத்தாயினும்
எங்கள்
தாத்தாவுக்கொரு
யானை
இருந்ததென்று
கொட்டாவி
விட்டுக்
குதூகலிக்க
இலக்கியங்கள்
சிலருக்குப்
பழந்தமிழ்ச்
சாராயம்" என சிற்பி பாலசுப்பிரமணியம் வகுத்த இலக்கணத்திற்கு இலக்கியம் ஆவதுதான்
இந்த முயற்சியின் விளைபயனோ!
|
ஈழநாட்டுத் தெருவில் வந்தியத் தேவனும் அருண்மொழியும் |
|
இக்கட்டுரை 2014 ஆகத்து திங்கள் அம்ருதா இதழில் வெளியிடப்பட்டது. |