கட்டமைக்கப்படும் ஆண்மைப்படிமம் |
இந்தியாவில்
ஒவ்வொரு ஐந்து மணித்துளிக்கும் ஒரு பெண் தன் கணவனாலோ, அவன் உறவினர்களாலோ வன்முறைக்கு
உள்ளாகிறாள் என்கிறது ஓர் ஆய்வறிக்கை. உலகளவில் மூன்று பெண்களில் ஒருத்தி தனது வாழ்நாளில் தன் கணவன் அல்லது தனக்குத் தெரிந்தவரால் அடிக்கப்படவோ
பாலுறவுத் தொல்லைக்கு உள்ளாகவோ செய்கிறாள் என்றும் ஒவ்வோர் ஆண்டும் ஆறுகோடி சிறுமியர்
பள்ளியில் அல்லது பள்ளிக்குச் செல்லும் வழியில் பாலுறவுத் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்
என்றும் குழந்தைக்கொலை, புறக்கணிப்பு, கருக்கொலை ஆகியவற்றின் காரணமாக குறைந்தளவு ஆறுகோடிப்
பெண்கள் காணாமற் போகிறார்கள் என்றும் கூறுகிறது மற்றோர் ஆய்வறிக்கை. இங்ஙனம்
பெண்கள் மீது அவர்தம் வீட்டில், பணியிடத்தில், குமுகாயவெளியில் நிகழ்த்தப்படும் வன்முறைகளை
பதினோரு வகையாகப் பகுத்து, அவற்றின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடிக்கொண்டே போகிறது என்கிறது
தேசிய குற்ற பதிவேட்டுச் செய்தியகம் (National Crime Record Bureau).

தண்டனை
x காரணிகள்

இந்தியாவில்
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு இருக்கின்றன. அச்சட்டங்களின்
அடிப்படையில் பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றிற்கு தண்டனை வழங்கப்பட்டு
இருக்கிறது. இருப்பினும் அவ்வன்முறைகளின் எண்ணிக்கை
ஆண்டுதோறும் பெருக்கிக்கொண்டே போகிறது. ஏனெனில் இச்சட்டங்கள், வன்முறை ஈடுபட்டவர்களைத்
தண்டிப்பதைப் பற்றியே பேசுகின்றன. மாறாக பெண்கள் மீதான வன்முறையில் ஆண்கள் ஈடுபடுவதைத்
தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராயவில்லை. அங்ஙனம்
ஆண்கள் வன்முறையில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டுமானால், அவர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கான
காரணிகளை ஆராய்ந்தறிய வேண்டும். அதன்பின் அவற்றின் வேர்களை கெல்லியெறிவதன் வாயிலாகவே
பெண்கள் மீதான வன்முறையைத் தடுக்க முடியும் என்கின்றனர் பெண்ணியலாளர்களும் (Feminists) பெண்ணியச்
சார்பாளர்களும் (Pro-Feminists).

தன்மைகளும்
காரணிகளும்

அவ்வகை ஆய்வில்
ஈடுபட்ட கனடா நாட்டு பெண்ணியச் சார்பாளரான
மைக்கேல் காஃப்மன், ஆண்கள் மேற்கொள்ளும் வன்முறையானது பெண்களுக்கெதிரான வன்முறை (ஆண்
x பெண்), ஆண்களுக்கிடையே நிகழும் வன்முறை (ஆண் x ஆண்) ஓர் ஆண் தனக்குத்தானே இழைத்துக்கொள்ளும்
வன்முறை (ஆண் x தான்) என்னும் முப்பரிமாணத்தன்மையை உடையது என்கிறார். ஆண்களின் வன்முறைக்கு
ஆணாதிக்கம், ஆணுரிமை, குமூக-மத-சட்ட அனுமதி, ஆணதிகாரம், ஆண்மை, உணர்வழுத்தம், மோசமான
பட்டறிவு ஆகிய ஏழும் காரணிகளாக இருக்கின்றன என்று கூறுகிறார்.

வன்முறை
ஆணின் இயல்பா?

அப்படியானால்,
வன்முறையானது இயல்பாகவே ஆணிகளின் மனதில் புதைந்திருக்கிறதா என்னும் வினா எழுகிறது. மாந்தகுலத்தில் ஒருபகுதியினரான பெண்களின் மனதில்
வன்முறை இயல்பாக இல்லை என்றால், மறுபகுதியினரான ஆண்களின் மனதிலும் வன்முறை இயல்பாகவே
இருக்க முடியாது. அதுபோலவே, ஆண்களில் ஒரு பகுதியினரின் மனதில் வன்முறை இயல்பாக இல்லாதபொழுது,
மற்றொரு பகுதி ஆண்களின் மனதில் மட்டும் வன்முறை இயல்பானதாக இருக்க முடியாது. எனவே, ‘ஒருவன் தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்ள
வன்முறை ஓர் உத்தி’ என்னும் கருத்தாக்கம் அவனால் அறியப்பாடாமலேயே அவனின் மனதில் விதைக்கப்படுகிறது.
அவனின் குடும்பம், நட்பு, குமுகாயம், மதம் ஆகியன உள்ளிட்ட அவனோடு நாள்தோறும் ஊடாடும்
ஒவ்வொன்றும் அதனை விதைக்கின்றன.

வன்முறை
ஏன்?

இங்ஙனம்
ஒருவனின் மனதில் விதைக்கப்பட்ட வன்முறையை அவன் எதற்காக வெளிப்படுத்துகிறான் என்னும்
அடுத்த வினா எழுகிறது. ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே உள்ள இயற்கையான உயிரியல், உடலியல்
வேறுபாடுகளுக்கு அப்பால் பல்வேறு வேறுபாடுகளை அவர்களுடைய குமுகாய – பண்பாட்டு வாழ்க்கைச்
சூழல் அவர்களின் மனதில் உருவாக்குகிறது. அதனையே பாலின வேறுபாடு என்கிறோம். இவ்வேறுபாடே
ஆண்மை x பெண்மை என்னும் எதிர்நிலைகளை கட்டமைக்கிறது. அந்த எதிர்நிலையும் நிகரானவைகளாகக்
கட்டமைக்கப்படுவதில்லை. மாறாக, ‘ஆண்மை’ உயர்வும்
வலிமையும் உடையதென்றும் ‘பெண்மை’ தாழ்வும் வலிமைக்குறையும் உடையதென்றும் ஏற்றத்தாழ்வாக
கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. எனவே, தாம் உயர்வும்
வலிமையும் உடையவரென நம்பும் ஆண்கள் தம் ஆண்மையை வெளிப்படுத்தவும் நிலைநாட்டவும் பெண்கள்
மீது வன்முறையை ஏவுகிறார்கள். அதனால் வன்முறையானது
ஆண்மையின் வடிவமாக மாற்றப்படுகிறது.

எனவே, பெண்களின்
மீதான வன்முறையை நீக்க வேண்டுமானால் அவ்வன்முறைக்கு ஆணிவேராக இருக்கும் ஆண்மையை ஆணின்
மனதிலிருந்து அகற்ற வேண்டும். இதனையே, “ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்பட்டால் அல்லாது
பெண்விடுதலை இல்லை என்பது உறுதி” என தன்னுடைய பாங்கில் எடுத்துரைத்தார் தோழர் ஈ.வெ.இராமசாமி.

ஆண்மை
பற்றி ஆய்க

பெண்மை பற்றியும்
பெண்ணடிமைத்தனம் பற்றியும் அதனால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அவர்கள் வாழும் குமூகத்திற்கும்
ஏற்படும் இழப்பு, பாதிப்பு ஆகியன பற்றியும் விரிவான அளவில் குமுகாய – பொருளாதார – உளவிய
- பண்பாட்டு – அரசியல் நோக்கில் உலகெங்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன;
அவற்றின் பல முடிவுகள் ஏற்கப்பட்டு செயல்வடிவமும் பெற்றிருக்கின்றன. ஆனால், ‘ஆண்மை’
பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் போதுமான அளவிற்கு ஆய்வுகள் நிகழ்த்தப்படாமல் அஃதோர்
இருண்ட பகுதியாகவே இருக்கிறது. அதன் விளைவாக
ஆண்மையின் வன்முறை முகம் முழுமையாக வெளியே தெரியவில்லை. அதன் தன்னிரக்க முகமோ சிறிய
அளவிற்குக்கூட வெளியே தெரியவில்லை. எடுத்துக்காட்டாக, சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக
பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் மீது அவரோடு பணியாற்றிய
பெண்ணுக்கு பாலுறவுத் தொல்லை கொடுத்தாக குற்றம் சுமத்தப்பட்டது. அவர் அத்தகு குற்றத்தைச்
செய்யக்கூடியவர் அல்லர் என அவர்தம் நண்பர்கள் பலரும் நம்பினர்; ஆனால், தான் குற்றமற்றவன்
என்பதனை உலகிற்கு மெய்ப்பிக்க வேண்டும் என்னும் அவரது மனப்பதற்றம் அவரை மரணத்தை நோக்கி
உந்தித்தள்ளியது. அந்நிகழ்வு அவரது தனிப்பட்ட உளவியற் சிக்கலாகப் பார்க்கப்பட்டதேயன்றி,
அவரது ‘ஆண்மை’யின் தன்னிரக்க விளைவாகப் பார்க்கப்படவில்லை. ஆனால் இத்தகு நிகழ்வையே,
ஆண்மையின் சுமையால் ‘ஓர் ஆண் தனக்குத்தானே இழைத்துக்கொள்ளும் வன்முறை’ எனச் சுட்டினார்
மைக்கேல் காஃப்மன். எனவே, ஆண்மையை அழிக்க வேண்டுமென்றால், அதனைப் பற்றியும் அதன் விளைவுகளைப்
பற்றியும் விரிந்த அளவில் குமுகாய – பொருளாதார – உளவிய - பண்பாட்டு – அரசியல் நோக்கில்
ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்பொழுதுதான்,
‘ஆண்மை’ என்னும் கருத்தாக்கம் எவ்வாறு ஆணிற்கும் பெண்ணிற்கும் பெருஞ்சுமையாகவும் துயரமாகவும்
இருக்கிறது என்பதனைப் புரிந்துகொள்ள முடியும்.

கற்பிக்க!

மேலும்,
தொடக்கநிலைக் கல்வியிலிருந்து பல்கலைக் கழகக் கல்வி வரை பாலின நிகர்நிலை ஒரு பாடமாகவோ,
வாழ்க்கைத் திறன் கல்வியின் ஒரு கூறாகவோ கற்பிக்கப்பட வேண்டும். அத்தோடு அனைத்துப்
பாடங்களும் அந்த கண்ணோட்டத்தோடு உருவாகப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, கணிதப் பாடத்தில்
நேரமும் வேலையும் என்னும் பகுதியைக் கற்பிக்கும்பொழுது பெண்கள் மெதுவாகவும் ஆண்கள் விரைவாகவும் வேலை செய்பவர்கள்
என்னும் கருத்துத்தொனிக்க கணக்கை உருவாக்கக் கூடாது.

உரையாடுக!

வளரிளம்
பருவத்திலும் முன்னிளமைக் காலத்திலும் இருக்கும் ஆண்களோடு பாலினமும் ஆண்மையும் பற்றிய
உரையாடலை நிகழ்த்த வேண்டும். அதன் வழியாக அவர்களுடைய மனதில் நிகர்நிலை நிறைந்த உலகு
பற்றிய நற்சிந்தனையை விதைக்க வேண்டும்.

உதவுக!

ஆண்மையை ஆண்களின்
மனதிலிருந்து அவர்களுடைய ஒத்துழைப்பும் புரிதலும் இல்லாமல் அகற்றிவிட முடியாது. எனவே ஆண்களை எதிரிகளாக நிறுத்தாமல், மதிப்போடும்
ஒத்துணர்வோடும் அணுக வேண்டும். அதன்வழியாக
அவர்களுடைய செயல்களையும் அவர்களைப் போன்ற பிறருடைய செயல்களையும் அவர்களே சீர்தூக்கிப்
பார்த்து அவர்கள் தம்மைத் தாமே திருத்திக்கொள்ளும் வாய்ப்பை உருவாக்க முடியும். இல்லையென்றால்,
அவர்களுடைய பாதுகாப்பின்மை உணர்வும் தன்னிரக்கமும் மேலும் இறுகி வன்முறையை அதிகரிக்கச்
செய்துவிடும். அத்தோடு, ஆண்மையின் சிக்கலை அவர்கள் புரிந்துகொள்வதற்கு பாலின நிகர்நிலையில்
நம்பிக்கையுள்ள ஆண்களும் பெண்களும் அவர்களுக்கு உதவ வேண்டும்.

ஈடுபடுத்துக!

தம் தந்தை வன்முறையில்
ஈடுபடுவதைக் காணும் ஆண்குழந்தைகள் தாம் வளர்ந்த பின்னர் தம் தந்தையைவிட பத்துமடங்கு
அதிகமாக தம் மனைவியின் மீது வன்முறையைச் செலுத்துகின்றனர் என்கிறது ஓர் ஆய்வு. எனவே
வன்முறையற்ற வழியில் தம் குழந்தைகளை வளர்ப்பதிலும் பேணுவதிலும் ஆண்கள் முழுமையாக ஈடுபட
வேண்டும்; அவர்களை ஈடுபடுத்த வேண்டும். வீட்டுவேலைகளில்
பெண்களுக்கு இணையாக ஆண்களும் ஈடுபட வேண்டும்.

குழந்தைகளின்
மனதில் பாலினப் பாகுபாட்டை உருவாக்குகிற, ஆண்மையைக் கட்டமைக்கிற பொருள்களையும் விளையாட்டுகளையும்
அவர்களுக்கு அறிமுகம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்; ஒருவேளை அவற்றை அவர்கள் அறிந்திருந்தால்,
அவை பற்றி பக்குவமாக எடுத்துரைக்க வேண்டும்.
வீட்டுவேலைகளை குழந்தைகளுக்கு பாலினப் பாகுபாடின்றி பகிர்ந்தளிக்க வேண்டும்.

புரிந்துகொள்க!

பெண்ணியலாளர்கள்,
ஆண்மையையும் அதன் சிக்கலையும் ஆண், பெண், சிறுவர் ஆகியோரிடையே நிலவும் அதிகார உறவையும்
ஆண்மை, பெண்மைக் கட்டமைப்பையும் புரிந்துகொள்ள முனையும் அதேவேளையில் ஆண்மையை மறுத்தல்,
எதிர்த்தல், மாற்றுகளைக் கட்டமைத்தல் ஆகியவற்றிலும் ஈடுபட வேண்டும்.

இவற்றையும்
இவைபோன்ற பிறவற்றையும் நீடித்து நிலைத்துச் செய்தால் மட்டுமே மோதல்களைத் தீர்ப்பதற்கும்
வேறுபாடுகளைக் களைவதற்கும் வன்முறையே வழி என்னும் போக்கினை ஒழிக்க இயலும்!