சனிக்கோள் மிகப்பெரிய டைட்டான். பள்ளங்கள் நிறைந்த போஃபே ஆகியன தொடங்கி வெந்நீர் ஊற்றுகளையுடைய இன்செலடசில் வரை 60க்கும் மேற்பட்ட நிலவுகளின் இல்லம் ஆகும். குறிப்பாக இன்செலடசில், நுண்ணியிரிகளை வளர்ப்பதற்குப் பொருத்தமானது என முன்மொழியப்பட்டுக்கொண்டு இருக்கிறது. அதனுள்ளே இருக்கும் வெப்பப் பெருங்கடலுக்கு நன்றி. சில பில்லியன் ஆண்டுகளேயான பூமியில் நுண்ணறிவு உயிரிகள் பரிணமிக்க முடியுமானால், 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான நமது சூரியக் குடும்பத்தில் எங்கேனும் குறைந்த அளவாக மிக எளிய உயிரிகள் ஏதேனும் ஏன் இருக்க முடியவில்லை?
ஆனால், தற்போதைய வானியற்பியல் ஆய்விதழில் (Astrophysical Journal) வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வு, மிக அண்மையில் 100 மில்லியன் ஆண்டுகளுக்குமுன்னர், பூமியில் டைனோசர்கள் உலவிக்கொண்டிருந்தபோதுதான், சனிக்கோளின் பெரும்பான்மையான நிலவுகள் தோன்றின எனக் கூறுகிறது. இது, நிலவுகளின் வயதுபற்றிய பொதுவான நமது புரிதலுக்கு வெல்விளி இடவும் புதிய பல வினாக்களை எழுப்பவும் செய்கிறது. இதை எப்படி நம்மால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்? இவ்வளவு குறுகிய காலத்துக்குள் அங்கே உயிரினங்கள் பரிணமித்துக் கொண்டிருக்கின்றனவா?
சனிக்கோளில் புரட்சி
நமது சூரியக் குடும்பத்திலுள்ள பெருங்கோள்களின் பெரிய நிலவுகள் அனைத்தும் ஏறத்தாழ ஒவ்வொரு கோளையையும் சுற்றியுள்ள வளிமேகம், தூசு ஆகியவற்றிலிருந்து பிறந்து வளர்ந்தன என நெடுங்காலமாக எண்ணப்பட்டு வந்தது. எனவே, அவற்றின் வயதும் அவை சுற்றிச்சுழலும் கோளின் வயதும், 4.5 பில்லியன் ஆண்டுகள் (சூரியக் குடும்பத்தின் வயது- ஒன்றாக இருக்கவேண்டும் என்று கருதப்பட்டது. எனினும், அந்தக் கோள்களால்- வெளிவட்டப்பாதையிலுள்ள நுண்கோள்கள், வால் விண்மீன்கள் உள்வட்டப்பாதையில் மோதல்களால் உருவான பெருந்துண்டுக் கூலங்கள் போன்றவற்றைப்போல-பின்னாளில் ஈர்க்கப்பட்ட சிறிய நிலவுகளையும் கொண்டிருக்கின்றன.
ஆனால், தற்போதைய புதிய ஆய்வு, சனிக்கோளின் முதன்மை நிலவுகளிலும் பல இளமையானவை என ஊகித்துரைக்கிறது. சனிக்கோளினுடைய முதன்மை நிலவுகளின் ஓத உறவுகளை உற்றுநோக்கிய ஆய்வாளர்கள் இதைக் கண்டுபிடித்திருக்கின்றனர். தெதைசு, டையோன், ரியா போன்ற இடைநிலையளவுள்ள நிலவுகள் மில்லியன்கணக்கான ஆண்டுகள் இருந்திருந்தால், தற்போதுள்ளதைவிட மிக அதிகமான அளவில் ஒவ்வொன்றும் மற்றொன்றின் வட்டப்பாதையில் தம் செல்வாக்கைப் பெற்றிருக்க வேண்டும் எனக் கண்டறிந்தனர்.
மேலும், இன்செலடசினல் தனக்கு அருகிலுள்ளவற்றுடன் கொண்டுள்ள ஓத ஊடாடுகையின் வழியாகப்பெறும் விசையின் விகிதம் (அதன் சுழல்வட்டப்பாதையின் மாற்றங்களிலிருந்து கணக்கிடப்படுகிறது; புகைத்திரள்கள் உமிழும் விசையிலிருந்து அளவிடப்படுகிறது), இந்தச் சூழல் நெடுங்காலமாக இவ்வாறு இருந்திருக்க இயலாது என ஊகித்துரைக்கிறது. எனவே, சனிக்கோளினுடைய இப்பகுதி நிலவுக் குடும்பத்தின் வயது அதிகளவாக 100 மில்லியன் ஆண்டுகளுக்கு அப்பால் இருக்காது என ஆய்வாளர்கள் முடிவு செய்கின்றனர்.
அவர்களின் முடிவு சரியாக இருந்தால்-அவர்களது மாதிரிகளின்மீது அறிவியலறிஞர்கள் பலருக்கு ஐயம் இருந்தபோதிலும்–அது குறிப்பிடத்தக்க முடிவாகும். அதன் பொருள், சனிக்கோளுக்கு இதற்கு முந்தைய தலைமுறை நிலவுகள் கட்டாயம் இருந்திருக்க வேண்டும்; அவை, கடுமையான மோதல்களால் அழிந்து அவற்றின் சிதைவுகளிலிருந்து மிமாசு, இன்செலடசினல், தெதைசு, டையோன், ரியா ஆகிய தற்போதைய நிலவுகள் தோன்றியிருக்க வேண்டும். வியாழன், யுரேனசு, நெப்டியூன் ஆகிய கோள்களைச் சுற்றியுள்ள வளையங்களைவிட சனிக்கோளைச் சுற்றியுள்ள வளையங்கள் அதிகம் கண்ணைக் கவருவதாக இருப்பதற்காக காரணத்தை விளக்கவும் இது உதவுகிறது. ஏனென்றால், ஒப்பீட்டளவில் அண்மையில் நிகழந்த பேரழிவு வழங்கிய பனிக்கட்டிச் சிதைவுகளிலிருந்து அவை உருவாகியிருக்க வேண்டும். டைட்டானும் அதற்கு வெளியே அண்மையிலுள்ள பிறவும் மேற்சொன்ன நிலவுக்கும் பில்லியன் ஆண்டுகள் முந்தியவையாக இருக்கக்கூடும் என்பதனால் அவை, அந்தப் பேரழிவு நிகழ்விலிருந்து தப்பிப் பிழைத்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.
நாம் இந்தக் கருதுகோளை சோதிப்போமா? தற்போது, ஆய்வக மாதிரிகள் எதுவும் இல்லாதநிலையில், தொலைவிலுள்ள நிலவுகளின் வயதை நிர்ணயிப்பதற்கான சுதந்திரமான வழியெதனையும் அறிவியல் கொண்டிருக்கவில்லை. எனவே, அவற்றின் மேற்பரப்புகளின்மீது விளைந்துள்ள பள்ளங்களின் அடர்த்தியை மட்டுமே நாம் மதிப்பிட முடியும். நிலவுகளின் மேற்பரப்பின்மீது சிதைவுகள் தொடர்ந்து தாக்கிக்கொண்டிருந்த கால நீட்சியின் உச்ச அளவே பள்ளத்தின் உச்ச அளவான அடர்த்தி ஆகும். இம்முறையில் ஒவ்வொரு கோளினுடைய நிலவுகளின் மேற்பரப்போடு தொடர்புடைய வயதை மதிப்பிடும் வாய்ப்பை உருவாக்குகிறது.
சனிக்கோளில், இன்செலடசினல் சில பள்ளங்களைக் கொண்டிருக்கிறது. ஏனெனில், இது ஓதவிசை முறிவுகளாலும், பனிக்கட்டி வெடிப்புகளாலும் மீள்பரப்பாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. மிமாசிலும் ரியாவிலும் (வலுவான ஓத வெப்பம் இல்லாததால்) பள்ளங்கள் மிக அடர்த்தியாக இருக்கின்றன. ஆனால், இன்செலடசினலின் மீள்பரப்பாக்கத்தின் விளைவாக அந்த நிலவு எங்ஙனம் உருவானது என்பதை அதன் பள்ளங்களால் கூற இயலவில்லை. ஒவ்வொரு நிலவிலும் அதிகளவு பள்ளங்கள் அடர்ந்த மேற்பரப்பு, அதன் வயது குறைந்த அளவே எனக் காட்டுகிறது. ஆனால், அத்தாக்கம் ஏற்பட்ட விகிதத்தின் அளவு நமக்குத் தெரியாது என்பதே இதிலுள்ள சிக்கல். எனவே, இவற்றின் வயதை எண்களால் அளவிட்டுக் கூற முடியாது.
பெரும் விளைவுகள்
ஆய்வாளர்களின் கூற்று சரியாக இருந்தால், சனிக்கோளில் மிக அண்மையில் பேரழிவு நிலவழிவு (மீளுருவாதலும்) என்னும் பேரழிவு நிகழ்ந்திருக்க வேண்டும். இதன்விளைவாக, பிற மீபெரும் கோள்களான வியாழன் யூரேனசு ஆகியவற்றின் பெரிய நிலவுகள் உண்மையில் அந்தக் கோள்களின் அளவுக்கு வயதானவையா என்னும் வினா தோன்றுகிறது. நம்முடைய நிலவின் தோற்றம் 4 பில்லியன் ஆண்டுகளுக்குமுன்னர் ஏற்பட்ட ஒருவகையான பெரும் தாக்கத்தால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது ஓரளவு உறுதி.
இன்செலடசினலின் வயது உண்மையில் 100மில்லியன் ஆண்டுகளே என்றால், இவைபோன்ற இடங்களில் நுண்ணுயிரிகளைக் காணமுடியும் எனக் கூறிக்கொண்டிருக்கும் விண்ணுயிரியலாளர்களுக்கு இதுவோர் அடியாக இருக்கக்கூடும். இதன் பனிக்கட்டிப் படுகைகளுக்கு அடியில் வெப்பக்கடல் இருப்பதைப்போல, இது உயிரினங்கள் வசிக்கத்தக்கதாக இருக்க வேண்டும். ஆனால், இன்செலடசு மிக இளையதாக இருப்பதால், அங்கு உயிரினங்கள் தோன்றுவதற்குப் போதுமான காலம் தேவையாக இருந்திருக்குமோ?
இதை இன்னும் ஆய்வது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். பூமியில் 4.1 மில்லியன் ஆண்டுகளுக்குமுன்னர்–அது மிகமிக இளமையாக இருந்தபோது-சிலவகையான உயிரினங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கான குறிப்புகளை அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்செலடசுவின் வயதை கிரிட்டேசியசு ஊழி என நிர்ணயித்தால், ஏற்கனவே அதன் உயிரிகளை கண்டறிந்திருக்க வேண்டும். அதன்பின்னர், இன்னும் அதிகளவில் அகிலம் முழுக்க உயிரினங்களை உருவாக்கியிருக்க வேண்டும்.
நல்வாய்ப்பாக, இதற்கான விடையை அறிய நாம் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை. கடந்த ஆண்டில், இன்செலடசுவில் இருக்கும் பெருங்கடலுக்கும் அதன் முதன்மையான பாறைகளுக்கும் இடையில் ஏற்பட்ட வேதியியல் எதிர்வினைகளின் விளைவாக அங்குள்ள நுண்ணியிரிகளுக்கு போதுமான ஆற்றல் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த எதிர்வினைகளிலிருந்து வெளிப்பட்ட ஹைட்ரஜன் மூலக்கூறுகளை அந்தக் கோளின் புகைத்திரைகளுக்குள் கண்டறியமுடியும் என்றும் ஆய்வகச் சோதனைகள் ஊகித்துரைக்கின்றன. அந்நிலவின் பயணத்தை 2015, அக்டோபர் மாதத்தில் காசினி (Cassini) ஆய்ந்து பார்த்து அறிந்தவற்றுள் சிலவே இவை. முடிவுகள் விரைவில் வெளிவரக்கூடும்.
தமிழில் அரிஅரவேலன்
கட்டுரையாளர் குறிப்பு-தாவீது இரத்தோரி-கோள் புவியியல் பேராசிரியர், திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
https://theconversation.com/saturns-moons-may-be-younger-than-the-dinosaurs-so-could-life-really-exist-there-56860
https://minnambalam.com/k/2016/04/08/1460073602