கல்மரம்

ளப்பணிக்காக பெரம்பலூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதியில், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர் செகதீசனோடு, சில கிழமைகளுக்கு முன்னர் சுற்றிக்கொண்டு இருந்தேன். ஆதனூரில் இருந்து குளத்தூருக்கு வரும் வழியில் உள்ள நடுவலூரில் “கல்மரம் தேசிய பூங்காவிற்குச் செல்லும் வழி” என்னும் கைகாட்டிப் பலகை கண்ணிற் பட்டது. அருங்காட்சியகங்கள் சிலவற்றிலும் உதகமண்டலத்தில் உள்ள பூங்காவிலும் பொருட்காட்சிகள் பலவற்றில் தொல்லியல் துறையின் அரங்கிலும் கல்மரம் (Petrified wood) சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். அவை அனைத்தும் எங்கோ கண்டெடுத்து அங்கு கொண்டுவரப்பட்டவை ஆகும். உயிரி ஒன்று கல்லாக மாறும் முறையை அறிவியல் புலவர் கொண்டல் சு. மகாதேவன் எழுதிய ‘கல்லாய்ச் சமைந்த உயிரினங்கள்’ என்னும் கட்டுரையிற் படித்ததில் இருந்து, கல்மரம் ஒன்றை அது தோன்றிய இடத்திலேயே காண வேண்டும் என்பது எனது ஆவல். ஆனால் அதற்கான வாய்ப்பு இதுவரை வாய்க்கவே இல்லை. ஒருவேளை அந்தக் கைகாட்டிப் பலகை அந்த ஆவலை நிறைவு செய்யக்கூடும் என எண்ணி, அப்பூங்காவைப் பற்றி செகதீசனிடம் வினவியபொழுது, தான் இதுவரை அம்மரத்தைப் பார்த்தது கிடையாது எனக் கூறினார். அருகில் இருந்த தேநீர்க் கடையில் வினவியபொழுது இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாத்தனூர் ஓடையின் ஓரத்தில் அக்கல்மரம் இருக்கிறது எனத் தெரிந்தது. இருவரையும் கல்மரம் காந்தமாக ஈர்த்தது.

மணிபிரளவ நடையில் பழைய எழுத்துருவில் இருக்கும் தமிழ் தகவற்பலகை

சாத்தனூரை அடைந்தோம். அங்கிருந்த கைகாட்டி மரம் ‘வடதிசையில் போ’ என ஒரு சந்தைக் காட்டியது. சந்து குளக்கரையில் சென்று நின்றது. அங்கே நின்றுகொண்டிருந்த முதியவர் கைகாட்டிய வழியில் குளக்கரையிலேயே சென்றால் பச்சை நிற சிறு கட்டிடமும் அதற்கு எதிரே இளஞ்சிவப்பு வளாகமும் அதனுள் பெரிய கட்டிடமும் தென்பட்டன. பாதை அக்கட்டிடங்களின் வாயிலில் சென்று முடிவடைந்தது. வளாகம் பூட்டப்பட்டு இருந்தது. அதன் உள்ளிருந்த கட்டிடத்தின் நெற்றியில் விருந்தினர் மாளிகை எனவும் அதனையொட்டி சற்று உள்ளொடுங்கி இருந்த கட்டிடத்தின் நெற்றியில் அருங்காட்சியகம் எனவும் எழுதப்பட்டு இருந்தன. எதிரே இருந்த பச்சைக் கட்டிடத்திற்குச் செல்வதற்கு வசதியாக சிமிட்டி ஓடையின் மீது கதவுள்ள பாலம் ஒன்று புதிதாகக் கட்டப்பட்டு இருந்தது. கதவு தாழிடப்படாமல் இருந்தது. கதவைத் திறந்து உள்ளே நுழைந்து பாலத்தின் மறுமுனையிற் கீழே இறங்கினோம். பாதையின் இடது பக்கம் நீண்ட பாறை ஒன்று அங்கங்கே உடைந்த நிலையில் இருந்தது. வலது பக்கம் பாறையின் மேற்பகுதி இருந்தது. பாதைக்கு எதிரே ஆள் உயரத்திற்கு மேலே இருந்த நிலத்தில் அந்த பச்சைக் கட்டிடம் இருந்தது. அதனுள் இருந்து, ‘வாங்க!’ என வரவேற்றவாறே பெரியவர் ஒருவர் வெளியே வந்தார். கட்டிடத்தின் இரு பக்கமும், மூங்கில் புதரின் நிழலில், இந்திய நிலப்பொதிவியல் அளவைத் துறையின் (Geological Survey of India) தகவற்பலகை தமிழிலும் ஆங்கிலத்திலும் இருந்தன. இலாக்கா, புவியியல் சாத்திரம் என 1940 ஆம் ஆண்டுத் தமிழ்நடையில் 1979 ஆம் ஆண்டிற்கு முந்தைய எழுத்துருவோடு தமிழ்ப்பலகை இருக்கிறது. கட்டிடத்தின் வலது பக்கம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவக்கரை என்னும் ஊரில் இருந்து எடுத்துவரப்பட்ட இரண்டு கல்மரத் துண்டுகள் ஒரு சிமிட்டி மேடையில் நட்டு வைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றிற்கு முன்னால், அங்கிருக்கும் கலமரத்தை சேதப்படுத்தவோ, மாதிரிக்காக வெட்டி எடுக்கவோ கூடாது என்னும் எச்சரிக்கைப் பலகைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஊன்றப்பட்டு உள்ளன. தகவற்பலகைகளை நாங்கள் படித்துக்கொண்டு இருக்கும்பொழுது சுப்பிரமணியன் என்னும் அந்த பெரியவர் எங்களை நெருங்கி வந்தார்.


விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் கிடைத்த கல்மரம்

“இந்த கல்மரத்திற்குத்தான் இந்தப் பூங்காவா?” என சிமிட்டி மேடையில் இருந்த கல்மரத்தைக் காட்டி செகதீசன் வினவ, “இது விழுப்புரம் கல்மரம். இங்கே பாருங்கள்; இதுதான் இங்கே கண்டுபிடிக்கப்பட்ட கல்மரம்” என, நாங்கள் சிதைந்த பாறை என முதலில் நினைத்த, பள்ளத்தில் கிடந்த கல்மரத்தைக் காட்டினார். 


சாத்தனூர் கல்மரம்

அது பாதைக்கு இடப்பக்கம் நீண்டு கிடந்தது. பாதைக்கு வலப்பக்கம் அதன் அடிப்பகுதி கிடந்தது. இருவரும் பள்ளத்திற்குள் குதித்து, அந்த கல்மரத்தைச் சுற்றிச் சுற்றிப் பார்க்கதோம். “இது ஒரு ஓட. அதுல கிடந்த இந்த கல்மரத்த 1940ல கிருசுணன்னு ஒருத்தரு கண்டுபிடிச்சுருக்காரு. இத பாதுகாப்பா வக்கிறதுக்காக ஓட இரண்ட பிரிச்சு சுவரெழுப்பி, தண்ணீய அந்தப் பக்கம் திருப்பி விட்டுருக்காங்க. அந்த கிருசுணனோட படம் உள்ள இருக்கு. நீங்க பாக்கலாம்.” என பெரியவர் கரையில் இருந்து இறங்கிவந்து விளக்கினார். “இங்க பாருங்க. கிள இருந்ததுக்கான அடையாளம்” என மூன்று இடங்களைச் சுட்டினார். 


மரத்தில் கிளை இருந்ததற்கான அடையாளம்

அவ்விடங்களில் வெட்டப்பட்ட மரக்கிளையில் இருப்பதைப்போல அடுக்கடுக்கான வட்டங்கள் தெரிந்தன. “இந்த மரம் எப்படிங்கையா கல்லாச்சு?” என செகதீசன் வினவ, “அந்த பலகயில இருக்கதப் படிங்க. அதத்தவிர நா எதுவும் சொல்லக்கூடாது. அதிகாரிகதா சொல்லணும்” என்றார் பெரியவர்.

தற்பொழுது சாத்தனூருக்கு கிழக்கே 100 கி.மீ. தொலைவில் உள்ள கடல் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சாத்தனூருக்கு மேற்கே 8 முதல் 10 கி.மீ. தொலைவு வரைவு பரவி இருந்திருக்கிறது. பூக்காத நிலத்தாவரமான கூம்பீனி (Conifers) வகையைச் சேர்ந்த இம்மரம் 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய திருச்சிராப்பள்ளி பாறையினப் பகுதியில் அமைந்திருக்கிறது. வெண்சுதைப்பாறை ஊழியில் (Cretaceous) ஆற்று நீரால் அடித்து வரப்பட்டு கடலில் அமிழ்ந்து மணல், களிமண் ஆகியவற்றால் மூடப்பட்டு, காலப்போக்கில் கல்லுருவமாக மாறிவிட்டது. இதேபோன்ற கல்மரப்படிவம் இம்மாவட்டத்தில் உள்ள வரகூர், ஆணைப்பாடி, அலுந்தளிப்பூர், சாரதாமங்கலம் ஆகிய ஊர்களிலும் இருக்கின்றன. இவற்றை 1940 ஆம் ஆண்டில் முனைவர் மகாராசபுரம் சீத்தாராமன் கிருட்டிணன் அவற்றைப் பற்றிய தகவலை வெளியிட்டார் என்னும் தகவல் அப்பலகையில் எழுதப்பட்டு இருக்கிறது.


முனைவர் மகாராசபுரம் சீத்தாராமன் கிருட்டிணன்

அதனைப் படித்துமுடித்ததும், “இந்த அருங்காட்சியம் எப்பொழுது திறந்திருக்கும்?” என அப்பெரியவரை வினவினேன். “அத இன்னும் தொடங்கல. அங்க வைக்க கொஞ்சம் பொருள் வந்திருக்கு. உள்ளே வாங்க காட்டுறேன்” என பச்சைநிறக் கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்றார். அது 10க்கு 10 அளவுள்ள அறை. அதில் இடுப்பு உயர கட்டிலில் கல்லுயிரிகள் சிலவும் கல்மரம் சிலவும் அடுக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றைச் சுட்டிக்காட்டி, ‘இந்த மரத்துண்டு எல்லாம் இந்த கல்மரத்துல இருந்து உடைஞ்சது. மத்ததெல்லாம் வெவ்வேற இடத்தில இருந்து கொண்டுவந்தது” எனக் கூறிவிட்டு, அறையின் வடமேற்கு மூலையில் மாலை போடப்பட்டு இருந்த ஒளிப்படத்தைக் காட்டி இவருதான் இதக் கண்டுபிடிச்ச கிருசுணே” என்றார். ‘இவரப்பத்தி வேற ஏதாவது தெரியுமா?’ என்றேன். ‘எனக்குத் தெரியாது; எங்க அதிகாரிகளுக்குத் தெரிஞ்சிருக்கும். அவங்க யாரும் இங்க இப்ப இல்ல உங்களுக்குச் சொல்லுறதுக்கு” என்றார்.

அறையைவிட்டு வெளியே வந்தோம். “இங்க யாராவது பார்க்க வருவாங்களா?” என செகதீசன் வினவ, “பள்ளிக்கூடத்துப் பிள்ளைக கூட்டமா வருங்க; உங்கள மாதிரி கைகாட்டி மரத்தப் பாத்திட்டு யாராவது வருவாங்க. நாங்க மூணுபேரு மாத்தி, மாத்தி 24 மணிநேரமும் இருப்போம்; அந்தக் கதவு தெறந்தேதான் இருக்கும்” என்றார் பெரியவர்.

அவரிடம் விடைபெற்று இருவரும் திரும்பும் பொழுது, “அதெப்படி மணலும் களிமண்ணும் மூடினா மரம் கல்லாகும்?” என வினவினார் செகதீசன். இதற்கு விடையை கொண்டல் சு. மகாதேவன் தன்னுடைய கட்டுரையில் இப்படி விளக்கி உள்ளார்:

"சில சமயங்களில் விலங்கு அல்லது மரத்தின் உடல் மண்ணில் புதைந்துவிடுகின்றது. அதைச் சூழ்ந்துள்ள மண் பகுதி இறுகிக் கெட்டிப்பட்டுவிடுகின்றது. அதே சமயத்தில் மண்ணில் புதைந்த உடல் அழுகிச் சிதைந்துபோய் அது இருந்த இடத்தில் அதன் உருவத்தைப் போன்றதொரு அச்சுக்கூடு (Mould) உண்டாகிவிடுகிறது. பின்னர் இயற்கை இந்த அச்சினைத் தாதுப்பொருளால் (Minerals) நிரப்புகிறது. அப்படி நிரம்பிய பொருள் நாளாக நாளாகக் கெட்டிப்பட்டுக் கல்லாக மாறிவிடுகிறது. பின்னர் அதைச் சூழ்ந்துள்ள பாறைகள் கரையும்போது உள்ளே உருவாகியிருந்த வார்ப்புப் படிவம் (Mould Fossil ) வெளித்தோன்றிக் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது! முற்றிலும் வேறுபட்ட தாதுப்பொருளால் அது ஆகியிருந்தாலும் அது உண்டாவதற்குக் காரணமாக இருந்த அந்த உயிர்ப்பொருள் போன்றே அது தோற்றம் அளித்துக்கொண்டிருக்கும்! எனவே மரங்களும் விலங்குகளும் கல்லாக “மாறு”கின்றன என்று சொல்வதைவிட, அவை உண்டாக்கிய அச்சுக்களில் இயற்கை கல்லுருவங்களை ‘வார்க்கின்றது’ என்று சொல்வதே பொருத்தமாகும்!"

இந்த கல்மரத்தை தேடியடைந்த ம.சீ. கிருட்டிணன் (1898 ஆகத்து 24 – 1970 ஏப்ரல் 24) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மகாராசபுரத்தில் பிறந்தவர். இங்கிலாந்தில் பயின்று முதுகலைப் பட்டமும் தனது 26ஆம் அகவையில் முனைவர் பட்டமும் பெற்றவர். இந்திய நிலப்பொதிவியல் அளவைத் துறைக்கு தலைமை வகித்த முதல் இந்தியர். இவர் எழுதிய இந்திய பர்மா நிலப்பொதிவியல் (Geology of India and Burma) என்னும் நூல் அத்துறையின் முதன்மைநூலாகக் கருதப்படுகிறது. நிலப்பொதிவியல் துறைக்கு இவர் அளித்த பங்களிப்பைப் பாராட்டி பத்மபூசன் விருது 1970 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் இந்தத் தகவல் எவையும் முழுமையாக அப்பூங்காவில் இல்லை; செகதீசனைப் போன்ற அம்மாவட்டத்தினர் பலருக்கும் தெரியவில்லை. நாம் வாழும் பகுதியின் வரலாற்றை, நம் முன்னோரின் வாழ்க்கையை, நம்மைச் சுற்றி இருக்கும் சிறப்புகளை அறியாமல் உலகின் ஏதோ ஒரு பகுதியின் வரலாற்றை, அமைப்பை, சிறப்பை, வாழ்க்கையை அறிவதில் என்ன பயன் இருக்கிறது? எனவே, சாத்தனூர் கல்மர தேசிய பூங்காவிற்கு வருகை தருவோருக்கு மரமும் பிற உயிரிகளும் கல்லாக மாறும் முறையையும் மா.சீ. கி.யின் வரலாற்றையும் தெளிவாக எடுத்துரைக்க தகுதி வாய்ந்த ஒருவரை அங்கு பணிக்கு அமர்த்தவும் அருங்காட்சியகத்தை முழுமைப்படுத்தி திறக்கவும் உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறையேனும் அவ்வூர் மக்களை உள்ளீர்த்து கல்மரப் பெருவிழாவைக் கொண்டாடி அவர்கள் ஊரைப் பற்றியும் அங்குள்ள தொல்படிவத்தைப் பற்றியும் பெருமிதம்கொள்ளச் செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் அனைவரையும் ஒரு முறையேனும் அங்கு அழைத்துவந்து காட்டி, பண்டை நாளில் இந்நிலத்தில் இருந்த தாவரங்களையும் வாழ்ந்த விலங்கினங்களையும் பற்றி எடுத்துரைத்து இயற்கை நேயமும் அறிவியல் உணர்வும் கொள்ளச் செய்தல் வேண்டும். இல்லையெனில் காலவோட்டத்தில் நமக்குச் சொந்தமான ஒரு வரலாற்றுப் பெட்டகத்தை நாம் அறிந்தே இழந்து விடுவோம்.


பின்குறிப்பு:

இக்கட்டுரை அம்ருதா இதழின் ஏப்ரல் 2014 மலரில் வெளியிடப்பட்டு உள்ளது

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...