கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) |
நன்றி: கரு அழ குணசேகரன் வலைப்பூ |
கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) |
நன்றி: கரு அழ குணசேகரன் வலைப்பூ |
ஒரு காப்பியம்
ஒரேயொருவரின் சிந்தனையில் தோன்றி ஒரேயொரு மொழியில் ஒரேயொரு பண்பாட்டை மட்டும் பேசுவதில்லை. மாறாக, பலரின் சிந்தனையில்
பல்வேறு மொழிகளில் பல்வேறு பண்பாடுகளைப் பேசும் பல்வேறு கதைகூறல்களிற் காணப்படும் பொதுமைக்கூறுகளை
இணைத்து மொழியும்பொழுது ஒரு காப்பியம் தோன்றுகிறது எனலாம். அக்காப்பியப் பனுவலுங்கூட வாய்மொழி மரபில் அதனைப் பாடும் ஒவ்வொருவரின் அன்றைய
மனநிலைக்கேற்ப நீண்டும் சுருங்கியும் வெளிப்படுகின்றது. எழுத்துமரபில் அக்காப்பியப் பனுவலை படியெடுக்கும்பொழுது படியெடுப்பவரின்
சிந்தனைற்கு ஏற்ப நீளவும் குறுகவும் வாய்ப்பிருக்கிறது. மேலும் அக்காப்பியத்தைச் சுவைப்பவன் தனது சுவைக்கும் திறமைக்கும்
ஏற்ப அதில் புதியனவற்றைச் சேர்க்கவும் நீக்கவும் கூடும். இவை போன்றவற்றால் காலவோட்டத்தில் ஒரே கதைக்கு பல்வேறு கதைகூறல்களும்
பனுவல்களும் தோன்றியுள்ளன. அவை ஒவ்வொன்றும் அவை வழக்கப்படும் பகுதியினரின் பண்பாட்டை
எதிரொலிக்கின்றன என்பர் அறிஞர்.
இவ்வாறுதான்
இராமாயணத்திற்கும் பல்வேறு பனுவல்கள் நாட்டார் பாடல், நாட்டார் கதை, தொன்மக்கதை, மீளாய்வுக்கதை, சிறுகாப்பியம், காப்பியம், நிகழ்த்துக்கலை, நுண்கலை எனப் பல்வேறு வடிவங்களில் பல்வேறு நிலப்பரவுகளில்
பல்வேறு மதத்தினரிடையே பல்வேறு மொழிகளில் உருவாகியிருக்கின்றன. அவற்றைத் திரட்டுதலும் ஒப்பாய்வு செய்தலும் நெடுங்காலமாக
நிகழ்ந்துவருகின்றன. அவ்வகையில் காமில் புல்கே (Camille
Bulcke) என்பவர் பல்வேறு இராமாயணங்களை ஆராய்ந்து ‘இராமாயணத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” (Ramkatha: Utpatti
aur Vikas) என்று நூலை 1950ஆம் ஆண்டில் இந்தியில் எழுதினார். அந்நூலை அடிப்படையாகக்கொண்டு கவிஞராகவும் பன்மொழி அறிஞராகவும் மொழியியலாளராகவும்
மொழிபெயர்ப்பாளராகவும் வரலாற்றாய்வாளராகவும் நாட்டார் வழக்காற்றியலாளராகவும் அறியப்பட்ட
அத்திப்பட்டு கிருட்டிணசுவாமி இராமானுசன் (A.K.Ramanujan) பல்வேறு இராமாயணப்
பனுவல்களை ஆராய்ந்து “முந்நூறு இராமாயணங்கள்: ஐந்து எடுத்துக்காட்டுகளும் மொழிப்பெயர்ப்புபற்றிய மூன்று
சிந்தனைகளும் (Three Hundred Rāmāyaṇas : Five Examples and Three Thoughts on Translation) என்னும் கட்டுரையை 1987ஆம் ஆண்டு பிப்ரவரியில் பென்சில்வேனியாவில் உள்ள பிட்சுபெர்கு
பல்கலைக்கழகத்தில் நாகரிகங்களின் ஒப்பீடு என்னும் தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் வெளியிட்டார். அக்கட்டுரை பவுலா
இரிச்மென் (Paula Richman) என்பவர் 1991ஆம் ஆண்டில் தொகுத்து வெளியிட்ட “பல இராமாயணங்கள்: தென்னாசியாவின்
எடுத்துரைத்தல் மரபின் பன்முகத்தன்மை (Many Ramayanas: The Diversity of a Narrative Tradition in South Asia) என்ற தொகுப்பு
நூலிலும் 1999ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட
இராமானுசனின் திரட்டப்பட்ட கட்டுரைகள் (The
Collected Essays of A.K.Ramanujan) என்னும் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது.
அ.கி.இராவின் இக்கட்டுரை, தென்னாசிய மொழிகள்
பலவற்றில் பல்வேறு வகையான இராமாயணங்கள் பல்வேறு வடிவங்களில் இருக்கின்றன. ஒரே மொழியில்
பல்வேறு வடிவங்களில் பல்வேறு இராமாயணக் கதைகூறல்கள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக
சமசுகிருதத்தில் மட்டும் 25க்கும் மேற்பட்ட
இராமாயணக் கூறல்கள் கவிதை, காவியம், தொன்மக்கதை என வெவ்வேறு வடிவங்களில் இருக்கின்றன. அவ்வகையில் முந்நூறு இராமாயணங்கள் இருக்கின்றன என்கிறார் காமில் புல்கே என்ற அறிமுகத்தோடு தொடங்குகிறது அக்கட்டுரை. அந்த முந்நூறு இராமாயணக் கதைகூறல்கள் வெவ்வேறு பண்பாட்டில், மொழிகளில் சமயமரபுகளில்
ஒன்றோடு ஒன்று தொடர்புபடுதலையும் அவற்றுள் மொழிபெயர்க்கப்பட்டவை, இடம்மாற்றப்பட்டவை, உருமாற்றப்பட்டவை
ஆகியவற்றைப்பற்றியும் ஆராய்வது அக்கட்டுரையின் நோக்கங்கள் என்று வரையறுக்கிறார் அ.கி.இரா.
முதற்பகுதியில், கம்பராமாயணம்
அதன் முதன்னூலாகக் கருதப்படும் வான்மீகி இராமாயணத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது
என்பதை அவற்றிலுள்ள அகலிகையின் கதைகளை ஒப்பாய்வு செய்வதன் வழியாகத் துலக்கிக்காட்டும்
அ.கி.இரா, இவ்வாறு மூலத்திலிருந்து
வேறுபடும் இராமாணயங்களை, ‘உருமாறிய இராமாணயங்கள்’ என வகைப்படுத்துகிறார்.
இரண்டாவது
பகுதியில், வான்மீகி இராமாயணத்தில்
இராவணனைத் தீயனாகக் காட்டியிருப்பதை மறுத்து எழுதப்பட்ட, சமண இராமாயணம் என அழைக்கப்படும் விமலசூரி எழுதிய பவுமசரியா
எவ்வாறு எதிர்தொன்மமாக விளங்குகிறது என்று எடுத்துரைக்கிறார்.
எழுத்துவடிவிலிருந்து
வாய்மொழி என்னும் மூன்றாவது பகுதியில், தம்புரி தாசய்யர்கள் என்னும் பாணர்கள் பாடும் நாட்டார் இராமாயணம்
இராவணனின் தும்மலில் பிறந்தவள் சீதை என்றும் அவளை இராவணன் சனகனின் தோட்டத்தில் வைத்துவிடுகிறான்
என்றும் கூறுகிறது. இதே கருத்து சமண கதைகளில் ஒரு மரபாகவும் கன்னட, தெலுங்கு நாட்டார் பாடல்களிலும் தென்கிழக்காசியாவின் பல்வேறு
இராமாயணங்களிலும் காணக்கிடக்கிறது என்றும் வான்மீகி இராமாயணத்தில் இல்லாத இதைப்போன்ற
பல கதைகளும் காட்சிகளும் நாட்டார் இலக்கியத்தில் காணப்படுகின்றன என்றும் சுட்டுகிறார்.
தென்கிழக்காசிய
எடுத்துக்காட்டு ஒன்று என்ற நான்காவது பகுதியில் தாய்லாந்து நாட்டின் ராமகீர்த்தியின்
தோற்றம், வளர்ச்சி, மாற்றம், ஆகியவற்றைக் கூறி, சீதையின் பிறப்பு, சீதை இராமனால்
வனத்திற்கு அனுப்பப்படும் காரணம், இராவணன் ஈகியனாகக் கருதப்படுவதற்கான காரணம் ஆகியவை எங்ஙனம்
வான்மீகி இராமாயணத்திலிருந்து வேறுபடுகின்றன என்பதைக் கோட்டிட்டுக் காட்டுகிறார்.
வகைமாதிரிகளில்
வேறுபாடு என்னும் நான்காவது பகுதியில் இராமாயணங்களின் முடிவு முடிசூட்டல் என்னும் இன்பியலாகவும்
இராமனும் சீதையும் மரணமடைதல் என்னும் துன்பவியலாகவும் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதையும்
கம்ப இராமாயணத்தின் தொடக்கம் பிற இராமாயணங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும்
இராமாயண மாந்தர்கள் ஒவ்வொரு கதைகூறலிலும் எவ்வாறு வேறுபாடுகிறார்கள் என்பதையும் விளக்கிய
பின், “ஒரு குறிப்பிட்ட
பெயர்களையுடைய வெவ்வேறு மனிதர்கள் எவ்வாறு அந்தப் பெயரினால் மட்டுமே ஒரு குழுவாக அமைவார்களோ
அதுபோன்றே ‘இராமாயணம்’ என்ற பெயரினால்
மட்டுமே மேற்கண்ட இராம காதைகள் பொதுவாக இருக்கின்றன” என்று கூறுகிறார்.
மொழிபெயர்ப்புகள்பற்றிய
சிந்தனை என்னும் ஐந்தாவது பகுதியில் ஒரு பனுவலை மொழிபெயர்க்கும்பொழுது தருமொழியின்
பனுவலுக்கும் பெறுமொழியின் பனுவலுக்கும் இடையே உருவ ஒற்றுமை, உட்பொருள் வேறுபாடு, குறியீட்டு வேறுபாடு
ஆகியன உருவாகும் என்ற பியர்சியன் கோட்பாட்டோடு இராமாயணப் பனுவல்களைப் பொருத்திக்காட்டி, இராமாயணப்பனுவல்
பற்றிய நாட்டார் தொன்மக் கதையொன்றை மேற்கோளாகச் சுட்டி எந்தப் பனுவலும் உண்மையான பனுவல்
இல்லை. எந்த எடுத்துரைப்பும்
வெறும் எடுத்துரைப்பு மட்டும் இல்லை. எடுத்துரைப்பு வடிவில் மட்டுந்தான் இராமகாதைக்கு முடிவுண்டே
தவிர, உண்மையில் முழுமையான
முடிவு என்பதே இராமகாதைக்குக் கிடையாது என்று நிறுவுகிறார்.
இராமகாதையைக்
கேட்கும்பொழுது என்ன நிகழும் என்னும் முடிவுப்பகுதி, அக்கதையைக் கேட்கும் ஒருவர் அக்கதைக்குள் தானும் ஒரு கதைமாந்தராக
மாறிவிடுவார் எனக்கூறும் நாட்டார்கதையொன்றை எடுத்துரைத்து இராமாயணம் அதைக் கேட்கும், படிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும்
ஒரு பனுவலாக உருமாறுகிறது என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார்.
ஆனால், எல்லாவற்றையும்
ஒற்றையடையாளத்திற்குள் அடக்க முனைவோர் பல்வேறு பனுவல்களை ஏற்பதில்லை; மாறாக அவற்றைச்
சிதைக்கவும் அவற்றின் பரவலைத் தடுக்கவும் அழிக்கவும் முனைகின்றனர். அவ்வகையில்தான் இந்தியாவில் 1980க்குப் பின்னர் ராசுடிரிய சுயம்சேவக் சங் (ஆர்.எசு.எசு) அமைப்பினருக்கும்
அதன் கிளையமைப்புகளான சங்பரிவார்களுக்கும் இராமனும் இராமாயணமும் அரசியலாதாயக் கருவிகளாக
மாற்றப்பட்ட பின்னர் இராமாயணத்தின் பல்வேறு பனுவல்கள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, தாய்லாந்து நாட்டின்
இராமகீர்த்தி, இராமாயணத்தில்
தசரன் நிகழ்த்திய குழந்தைப்பேற்று வேள்வியில் கிடைத்த அரிசியுருண்டையிலிருந்து உதிர்ந்த
அரிசிகள் சிலவற்றைக் காகமொன்று இராவணன் மனைவிடம் தர அவள் சீதையை ஈன்றெடுக்கிறாள் என்ற
குறிப்பை அ.கி.இரா. இக்கட்டுரையின்
நான்காவது பகுதியில் எடுத்துரைக்கிறார். இக்குறிப்பை முன்வைத்து இக்கட்டுரையை தில்லி பல்கலைக்கழகத்தில்
இளங்கலைப் பட்டத்திற்குப் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் படிப்பதற்குரியவை என பரிந்துரைக்கப்பட்ட
எழுத்துரைகளின் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்று 2008 பிப்ரவரி 25ஆம் நாள் ஏ.பி.வி.பி உறுப்பினரும் தில்லி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்
முன்னாள் துணைத்தலைவருமான விகாசு தாகியா தலைமையில் வரலாற்றுத் துறைக்குச் சென்று அத்துறைத்தலைவர்
சாஃப்ரியை கடுமையாகத் தாக்கி, வகுப்பறைகளின் சன்னல் கண்ணாடிகளை உடைத்து வன்முறையில் ஈடுபட்டனர். அந்நாளைய வன்முறை
நிகழ்வைப்பற்றிக் கருத்துரைத்த அந்தப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர்
திலிப் மேனன், “ஏ.பி.வி.பி.யினர் வால்மீகி
இராமாணமும் துளசிதாசர் இராமாயணமும் மட்டுமே இந்துயிசத்திற்கு ஏற்புடையது மற்றவை அனைத்தும்
இந்து உணர்விற்கு எதிரானவை என்கின்றனர்” என்று கூறினார். அவரின் கூற்றை வலுப்படுத்தும் வகையில் ஏ.பி.வி.பி. உறுப்பிரான மணில்
மயங்க் மிஸ்ரா என்பவர், “இக்கட்டுரை நாங்கள் குழந்தையாக இருந்தபொழுது எங்களுக்குக்
கற்பிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் எதிராக இருக்கிறது.” என்றார். ஆக, வான்மீகி இராமாயணம் மட்டுமே பரிவாருக்கு உகந்ததாக ஒரே இராமாயணப்
பனுவலாக – பரிவார் இராமாயணமாக - இருக்கிறது. மற்ற இராமாயணப்
பனுவல்கள் இலக்கிய நயத்திலும் பக்திச்சுவையிலும் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் அவற்றை
அவர்கள் ஏற்க ஆயத்தமாக இல்லை. அவர்கள் உச்ச
நீதிமன்றம் வரை சென்று 2011 அக்டோபரில் அப்பட்டியலில் இருந்து இக்கட்டுரையை நீக்கினர்.
இந்நிலையில்தான், அ.கி.இராவின் இக்கட்டுரையை
இதழாளர் ந. வினோத்குமார்
தமிழில் மொழிபெயர்த்து “முந்நூறு இராமாயணங்கள்” என்னும் நூலாக 2021
திசம்பரில் வெளியிட்டிருக்கிறார். அந்நூலுக்கான
முன்னுரையில் இராமாயணம் எவ்வாறு ஆர்.எசு.எசுக்கு அரசியல் ஆயுதமாக இருக்கிறது என்பதை விவரிக்கிறார். குறிப்பாக கேரளாவில்
எழுத்தச்சன் எழுதிய அத்யாத்ம இராமாயணம் வாசித்தல் என்னும் பண்பாட்டு நடவடிக்கையை சங்
பரிவார் தனது அரசியலுக்கு ஏற்ப நிறுவனமயப்படுத்த முயன்றபொழுது, அதனை இடதுசாரி
அறிஞர்கள் தங்களது சமசுகிருத சங்கத்தின் வழியாக எதிர்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தியதை விளக்குகிறார். ‘ஒருவர் கடந்த காலப் படைப்பு ஒன்றை மொழிபெயர்க்கும்பொழுது, அது நிகழ்காலப்
படைப்பாகிறது. அதன் மூலம் கடந்தகால
அரசியல் நிகழ்காலத்திற்குக் கடத்தப்படுகிறது. …. இவ்வாறு ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு தலைமுறைக்கும் ஏற்றவாறு
மொழிபெயர்க்கப்படுவது அந்தந்தக் காலகட்டத்துக்கான அரசியலுக்கு மிகவும் அவசியமானது” என்று அ.கி.ரா கூற்றின்படி
அயோத்தியை முன்னிறுத்தி அரசியல் நிகழும் இந்தக் காலகட்டத்தில் இந்த மொழியாக்கமே ஓர்
அரசியற்செயற்பாடே என்று தெரிவிக்கும் மொழிபெயர்ப்பாளர், ஓர் ஆய்வுக்கட்டுரைக்கு இணையாக இந்நூலின் முன்னுரையை எழுதியிருக்கிறார்.
எனவே, பரிவார் இராமாயண
அரசியலைப் புரிந்துகொள்ளவும் இராமாயணத்தின் பல்வேறு பனுவல்களை அறிந்துகொள்ளவும் உதவும்
இந்நூலைப் படிப்பதும் ஓர் அரசியற் செயற்பாடே.
முந்நூறு இராமாயணங்கள்
ஏ.கே. ராமானுஜன்
தமிழில்: ந. வினோத்குமார்
மு.பதிப்பு: 2021 திசம்பர்; பக்.86; விலை. ரூ.100;
வெளியீடு: மலர் புக்ஸ், பரிசல் புத்தக நிலையம், 235 ‘ப்பி’ பிளாக், எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், சென்னை 106.
கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...